அவன் நினைவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 3, 2024
பார்வையிட்டோர்: 1,309 
 
 

 (1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இனி எங்கே தலை தூக்கப் போகிறான் என்று அந்தகா ரம் இறுமாந்திருந்த வேளையில்……… 

விடிவெள்ளி நல்லாள் மருத்துவம் பார்த்திட – கீழ்த் திசைப் பெண்ணாளின் கருவெடித்துப் புறப்பட்டான் இளஞ் சூரியன். 

வெண்சங்கின் நிறமெடுத்து உருவாக்கப் பெற்ற நெடி துயர்ந்தக் கடற்சிங்கச்சிலை வீற்றிருக்கும் சிங்கைத் திருநதி யின் முகத்துவாரம்… 

பொன் நிறக் கம்பளம் விரித்தது போல் மின்னிக்கொண் டிருந்த கடற்பரப்பு நாட்டின் அரசியல் அமைதியையும் நிலைப்பாட்டையும் விளம்பிக் கொண்டிருந்தது. 

கடலன்னையின் தாலாட்டில் மெய்மறந்து மிதக்கும் பன்னாட்டுக் கலங்களின் அணிவகுப்பு நாட்டின் வளத் தினைப் பறைசாற்றிக் கொண்டிருந்தன….. 

‘கடல்கொண்டு விட்டதடா எம் நிலத்தை’ என்று வர லாற்று ஏடுகள் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கையில், ஆழ்கடலில் அணைகட்டி, மேடுவெட்டி மண்கொட்டி கடலைத்தூர்த்து உருவாக்கப்பெற்ற புதிய நிலப்பரப்பு, நாடு பிடிக்கும் நப்பாசையோ-நல்வாழ்வு வாழ்ந்து கொண் டிருக்கும் மக்களின் தலையில் குண்டுமாரி பொழிந்து ஆக்கிர மிப்பு நடவடிக்கையில் இறங்கும் மண்ணாசை வெறியோ எமக்கில்லை’ என்று மக்களாட்சித் தத்துவத்தின் இலக்கணத் தைப் படித்துக் காட்டிக் கொண்டிருந்தது. 

சிங்கப்பூரை ஆண்ட கடைசி அந்நிய ஏகாதிபத்தியத் தின் முடியரசியான எலிசபெத்தின் பெயரைக் கொண்ட கடற்கரைப் பூங்காவில்… 

சப்பானியரின் ஆட்சியை எதிர்த்துப் போராடி மாண் டவர்களில் ஒருவனான மறவன் – லிம் போ செங்-கிற்காக சீனக் கோபுர வடிவில் எழுப்பப்பெற்ற நினைவுச் சின்னத் தின் அருகில் நின்று கொண்டு, ஆங்கிலேய ஏகாதிபத்தியத் தைத்துடைத்தொழிக்க வங்கப்புலிசந்திரபோசு போர்முழக்க மிட்ட நகரமண்டபத் திடலையே கண் கொட்டாமல் பார்த் துக் கொண்டிருந்தார் அருணாசலம். 

கதிரவனின் கதிர்பட்டுத்துயில் நீங்கும் சில சூரியக்குஞ்சு களைப் போலல்லாமல், அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் கண்விழித்து, காலைக் கடன்களை முடித்துக் கொண்டு இரண்டு கிலோ மீட்டர் தூரத்தை நடையால் அளந்து உடற்பயிற்சி செய்திட கடற்கரைக்கு வருவது அருணாசலத் துக்கு வாடிக்கை. 

ஓய்வு பெற்ற அரசாங்க இலாகா அதிகாரி அவர். அறுபதை நெருங்கிக் கொண்டிருக்கும் காலகட்டத்திலும் கட்டமைப்பான உடலுக்குச் சொந்தக்காரராகலே இருந்தார். 

காலமறிந்து தேவையுணர்ந்து செயலாற்றிடும் மனைவி கடமை உணர்ந்து காரியமாற்றும் மைந்தன். 

மனைவிளங்க வந்துதித்த மருமகள். வசதியான வீடு. வாழ்நாளுக்குப் போதுமான சம்பாத்தியம். வருவாய் மிகுந்த இரண்டு நிறுவனங்களின் பங்குதாரர். 

அகவையைப் பின் தங்கிடச் செய்திடும் கவர்ச்சி மிகுந்த அவர் முகத்தோற்றம், காலைக் கதிரின் பொன்னொளிர் மேவி, ஏனோ கவலையின் கீறல்களால் சோபை இழந்து காணப்பட்டது. அனைத்து வளமும் நலமும் ஒருங்கே அமையப் பெற்ற அவருக்கென்ன கவலை? 

அருணாசலம் ஆசையோடு வாங்கிவந்த பஞ்சவர்ணக் கிளி பேச மறுத்துவிட்டது. பேசு பேசு என்று பேசிய அந்தக் கிளி – அஞ்சுகம்.” மாமா! மாமா!” என்ற சொற் களைத் தவிர வேறு எந்தச் சொல்லையும் உதிர்க்க இசைய வில்லை. காரணத்தை அவரால் புரிந்து கொள்ளவும் முடிய வில்லை. பேசுங்கிளி வாயடைத்திருப்பது நல்ல சகுணமல்ல என்று அக்கம் பக்கத்தார் வேறு பயமுறுத்தி விட்டார்கள். குழம்பிப் போயிருந்தார் அருணாசலம். 

ஆள் உயரக் கொம்புகளில் காய்த்துக் குலுங்கும் பயிற் றங்காய்ப் பாத்திகள். பச்சை, ஊதா, வெள்ளை வண்ணங் களில் காய்த்துத் தொங்கும் கத்திரிக் காய்கள் செடிகளை மண் ணோக்கி இழுத்துக் கொண்டிருந்தன. ஆங்காங்கே அவரைப் பந்தல்கள்; அவற்றைச் சுற்றிலும் மிளகாய்ச் செடிகள். கோடையிலும் வசந்தத்திலும் காய்த்துக் கனியும் ஒட்டு மாமரங்கள்; வேலி ஓரங்களைக் காவல்காத்து நிற்கும் குட்டைச் செவ்விளநீர் மரங்கள். 

அல்லிக் கொடியும் பன் றித் தாமரையும் நிரம்பிய ஆறுக்கு நான்கு மீட்டர் பரப்பளவிலான சிறிய குளம்- பக்கத்து மேட்டின் ஊற்றுக் கண்ணிலிருந்து ஒழுகி வரும் தண்ணீரைச் சிந்தாமல் சிதறாமல் குளத்தை வந்தடைய அமைக்கப்பெற்ற வாய்க்கால், கெண்டைகளும், விறால் களும், மயிரைகளும், இறால்களும் கூடி வாழும் சமதர்மப் பூங்காவாக விளங்கிற்று. 

பத்து மாடிகளைக் கொண்டு எழுப்பப்பெற்றக் கோழிக் கூடு; கீழ்த்தளத்தில் வாத்துகளும் மற்றெல்லா தளங்களில் கோழிகளும் குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தன. கோழிக்கூடுப் பக்கத்தில் பட்டாளத்து வீரர்களைப் போல் அணி வகுத்து நின்றன மரவள்ளிச் செடிகள். 

துத்தநாகத் தகடுகளைக் கூரையாகக் கொண்ட பலகை வீடு. மூன்று அறைகளும், குடிநீர்க் குழாயும், மின்வசதியும் தன்னகத்தே பெற்றிருந்தது. கூடையில் கோழிமுட்டைகளைச் சேகரித்துக் கொண்டிருக்கிறாரே, அதோ, அந்த அருளப்பன், அவர் தான் இத்தனைக்கும் சொந்தக்காரர். 

“அக்கா! மாமா! அக்கா, மாமா!”” 

அஞ்சுகத்தின் குரல் கேட்டு, அடுக்களையில் வேலை யாக இருந்த அன்னம்மாள் கூடத்தை வந்தடைந்தாள். அங்கே…. 

கம்பிக் கூண்டில் அடைபட்டுக் கிடந்த அஞ்சுசுத்துக்குப் பப்பாளிப் பழக்கீற்றை ஊட்டிக் கொண்டிருந்தான் அரவிந்தன். அன்னம்மாளின் அத்தை மகன் இருபத்தாறு அகவை நிரம்பிய கட்டிளங்காளை. 

“இன்னும் கொஞ்சம் சாப்பிடேன்…” கொஞ்சலும் கெஞ்சலும் அரவிந்தனின் குரலில் இழையோடிற்று. 

“வேண்டாம்! வேண்டாம்!” என்று கரகரத்தக் குரலில் கத்திக்கொண்டே கூண்டை வலம் வந்தது அஞ்சுகம். 

“இன்னும் கொஞ்சம்” கம்பிகளுக்கு இடையில் பப்பாளிப்பழக் கீற்றை நுழைத்துக் கொண்டே வேண்டினான் அரவிந்தன். 

“முடியாது! முடியாது!” என்று ஓலமிட்ட அஞ்சுகம் கூடத்தை அடைந்த அன்னம்மாளைக் கண்டவுடன், “மாமா…! அக்கா! அக்கா! ! ‘ என்று குரல் கொடுத்தது. 

அன்னம்மாலை ஏறிட்டான் அரவிந்தன். 

இன்று காணும் உருவமல்ல அது. கடந்த பத்தொன்பது ஆண்டுகளாகப் பார்த்துப் பழகிப்போன உருவம்தான் என் றாலும், நாளுக்கு நாள், பொழுதுக்குப் பொழுது அன்னம் மாளின் உடலமைப்பில் அழகும் பொலிவும்- கவர்ச்சியும் திரட்சியும் போட்டி போட்டுக் கொண்டு அரங்கேறுவதைக் கவனிக்கத் தவறியதில்லை அரவிந்தன். அந்த அரங்கேற்ற நாயகியின் மாயத்தோற்றத்தை அவன் புரிந்திருந்த போதி லும், திடுமெனப் பார்த்தவுடன் தடுமாறிவிட்டான். 

ஒரு கணம்தான். ஒரே ஒரு கணம்! சுதாரித்துக் கொண்டான் அரவிந்தன். ஒப்பனைப் பொருட்களின் திரைக்குப் பின்னால் மறைந்து கொண்டு இயற்கையிலேயே அழகியான அன்னம்மாள் காளையரின் இரும்புக் கண் களுக்குக் காந்தமானாள். ஆடை அணிகளில் “எல்லோரா’’ குகைச் சித்திரங்கள் அவளிடம் பிச்சையெடுக்க வேண்டும். 

கோலமயில் இருக்கிறதே, அது என்னதான் கரண கொடூரமாகத் துள்ளிக் குதித்தாலும், எப்படி எல்லாம் தன் நடையை மாற்றிட முயன்று ‘தத்தக்கா புத்தக்கா’ என்று கோணல் நடை பயின்றாலும்-ஒரு நாளும் அது- வான்கோழி ஆகிட முடியாது. எப்பேர்ப்பட்ட சாயத்தைத் தீட்டி – பூசினாலும் எந்த வகை ஆடை அணிகலன் ஆபாசம் சொட்டச் சொட்ட உடுத்தினாலும் தமிழினம் தமிழினம் தான்! மயிரளவு கூட மேலைநாட்டவர்கள் ஆகிவிட முடியாது. அரவிந்தன் இதை நன்கு அறிவான். அன்னம் மாள் தனக்கு மனைவியான பிறகு படிப்படியாக அவளுடைய மயக்கத்தைத் தெளிய வைக்க முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தான். 

“மாமா இல்லையா, அன்னம்?” கைக்குட்டையால் கைகளைத் துடைத்துக் கொண்டே கேட்டான். 

“அப்பா கொல்லைக்குப் போயிருக்காங்க…” நிலம் பார்த்துப் பேசினாள். அன்னம்மாளின் குரலில் குழைவு இல்லை; முன்பிருந்த கனிவு இல்லை என்பதை அரவிந்தன் நொடிப்பொழுதில் புரிந்து கொண்டான். கடந்த திங்களில் அவளிடம் காணப்பெற்ற குழைவும் கனிவும் எங்கே போயின? ஒட்டி நின்று உறவாடியவள் ஒரு திங்கள் இடை வெளிக்குள் உறவை வெட்டிப் பிரித்திட முயலுவது போல் நடந்திடக் காரணம் என்ன? அவன் திகைத்துப் போனான். 

கடல் ஆழம் கண்ட பெரியோரும் பெண்கள் மன ஆழம் காண முடியாது என்பது அரவிந்தன் வரையில் மெய்தானா? அன்னம்மாள் அவனுக்குப் புரியாத புதிரானாள். 

“யாரம்மா அது…?” என்று கேட்டுக்கொண்டே அங்கு வந்து சேர்ந்தார் அருளப்பன். 

பதில் எதுவும் சொல்லாமல் அன்னம்மாள் அகன்றாள். நனைந்து போன சுருட்டின் அடிப் பாகத்தைக் கடித்துத் துப்பிக் கொண்டே அரவிந்தனை நோக்கினார் அருளப்பன்.

“வாப்பா, அரவிந்தா… வீட்டுல அம்மா சௌக்கியமா?” 

“உடம்புக்குத் தேவலாம், மாமா. கொஞ்சம் பலகீனம்’ அவ்வளவுதான் மாமா. உங்களுக்குக் கழுத்துவலி தேவலையா?” கரிசணையோடு கேட்டான். 

“கழுத்துவலி கழுதை வந்துக்கிட்டும் போயிக்கிட்டும் தான் கெடக்கு ”அணைந்துபோன சுருட்டைப்பற்றவைத்து ஒரு ‘தம்’ இழுத்தவாறே,” இன்னும் நீ லீவுலதான் இருக்கியா?” சேகரித்த முட்டைகளை எண்ணிக் கொண்டே கேட்டார் அருளப்பன். 

“லீவு முடிஞ்சு ரெண்டுநாள் ஆகுது மாமா. இப்ப நான் வேலைக்குப் போயிக்கிட்டிருக்கேன்…” 

“அதே இடத்துல தானா? இல்லே வேறே…’ அருளப்பன் இழுத்தார். 

“அதே இடத்து’ல அதே வேலை தான் மாமா!” அரவிந்தன் அழுத்தினான். 

“கேசு முடிஞ்சுடுச்சா?” அருளப்பன். 

“நடத்துக்கிட்டு வருது” அரவிந்தன். 

“முடிவா எவ்வளவு தேறுமாம்?” 

“உயிர் இழந்தவங்க குடும்பங்களுக்குக் கணிசமான தொகை சிடைக்கும். என் மாதிரி, காயங்களோட உயிர் தப் பிச்சவங்களுக்கு அவ்வளவா எதிர்பார்க்க முடியாது மாமா” 

“என்னப்பா, அப்படிச்சொல்லிட்டெ! ஆயிரக்கணக்கில பொதுசனங்க அள்ளி அள்ளித்தர்ரதா பேப்பர்’ல பார்த் தேனே…! இங்க பாரு, எப்படி வழவழப்பா இருந்த உன் கையிங்க, இப்ப எவ்வளவு விகாரமா இருக்கு, பாரு. இதுக்கே அம்பதாயிரம் தேறுமே. அப்பறம் உன் முகம்…? எவ்வளவு லெட்சணமா இருந்துச்சு… இப்ப, கருப்பும் செலப் புமா… உலக ‘மேப்’ மாதிரி அசிங்கமாயிடுச்சே” அங்க லாய்துக் கொண்டார் அருளப்பன். 

“ஃசுபைரோஃசு” என்ற கிரேக்க எண்ணெய்க் கப்பல், பழுது பார்க்கும் பொருட்டு சிங்கப்பூர் வந்திருந்தது. பாது காப்புக் கவனக் குறைவால் அந்தக் கப்பல் வெடி விபத்துக் குள்ளானது. உலகக் கப்பல் பட்டறைகளிலேயே நிகழ்ந்த படுபயங்கரமான அந்த விபத்தில் எழுபத்தாறு தொழி லாளர்கள் உயிரிழந்தனர். அறுபத்தொன்பது பேர் காயமுற்றனர். அந்த அறுபத்தொன்பது பேர்களில் அரவிந்தனும் ஒருவன். சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து. தீக்காயங்கள் ஆறியபின், ஓய்வில் இருந்து வீட்டு மீண்டும் அதே கப்பல் பட்டறைக்கு வேலைக்குச் சென்று வந்தான். 

“தீக்காயங்கள் ஆறிடும் மாமா. காலப் போக்கி’ல வரு கூட மறைஞ்சு போயிடும். காது செவிடானா, கண் குருடானா, கால் ஒடிஞ்சு நொண்டியானா, முடமாப் போனா, கைகால் விரல்களை இழக்க நேர்ந்தாத்தான் லாயர் வச்சு வழக்காடி பலனை எதிர்பார்க்க முடியும்…” 

தொழில் துறை நடப்புகளை ஓரளவுக்குத் தெரிந்து வைத்திருந்தான் அரவிந்தன். இழப்பீடு தொடர்பாக வழக் குத் தொடர்வதிலும் சில விதி முறைகள் இருக்கின்றன. அதையெல்லாம் அருளப்பனுக்குச் சொன்னால் புரியாது; விளக்கிச் சொன்னாலும் ஆகப்போவது ஒன்றுமில்லை. எனவே, அரவிந்தன் நிறுத்திக் கொண்டான். 

“அப்படி இருக்கும் போது, நீ ஏன் திரும்பவும் அந்தக் கொலைகார இடத்துக்கு வேலைக்குப் போகணும்? வேற எங்கயாவது வேலை தேடிக்க வேண்டியதுதானே?’ அலுத் துக் கொண்டார் அருளப்பன். 

“தேடிக்கலாம் தான் மாமா. ஆனா இந்த வேலை தாவுற வேலையிருக்கே அது எனக்குக் கொஞ்சம்கூட பிடிக்க’ல. கனரகத் தொழிற்சாலைகளுக்கு அதனால ஏற்படக்கூடிய நெருக்கடியையும் பாதிப்பையும் சிந்திச்சுப் பார்க்கணும் மாமா. வேலை தாவும் போக்கினா’ல அரசாங் கத்துக்கு ஏற்படக்கூடிய இடர்ப்பாடுகளையும் உணர்ந்து பார்க்கணும் மாமா, துணிச்சலும் துயரமும் கலந்த வரலாற்றுக்குச் சொந்தக்காரங்க நாங்க. அந்த வரலாறை என்றைக் காவது ஒரு நாள் சொல்லத்தான் போறேன். அது வரைக்கும் பொறுத்திருங்க…” அரவிந்தனின் குரல் தழுதழுத்தது. 

நடந்து முடிந்த விபத்தையும், அதன் விளைவாக உயிர் நீத்த தன் சக தொழிலாளர்களையும் நினைத்துப் பார்த்துத் தாங்கிக் கொள்ளும் தெம்பு இப்பொழுது அரவிந்தனிடம் இல்லை. 

“என்னமோப்;பா, மாமன்கிற முறைக்குச் சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டேன். அதுக்கப்புறம் உன் விருப்பம்.”பட்டும் படாமலும், ஒட்டியும் ஒட்டாமலும் பேசினார் அருளப்பன். 

அன்னம்மாள் ஒரு கோப்பையில் தேநீர் கொண்டுவந்து வைத்துவிட்டு நகர்ந்தாள். 

“அன்னம்மா…!” அருளப்பன் விளித்தார். 

“என்னப்பா?” நின்று திரும்பிப் பார்க்காமலேயே கேட்டாள். 

“உன் சாதகத்தை எடுத்துகிட்டு அய்யப்பன் வீட்டுக்குப் போயிருக்கு உங்க அம்மா. நீ அங்கபோயி, நான் வர்றதுக்குக் கொஞ்ச நேரமாகும்’னு சொல்லு.” நிதானமாக, ஒவ்வொரு சொல்லாக அடுக்கி, அழுத்தம் திருத்தமாக உச்சரித்தார் அருளப்பன். 

‘பூம் பூம்’ மாடு மாதிரி தலையை ஆட்டிக்கொண்டே துள்ளி ஓடி மறைந்தாள் அன்னம்மாள். 

அருளப்பன் பேசியதையும், அன்னம்மாள் நடந்து கொண்ட முறையையும் தொடர்புபடுத்திப் பார்த்த அரவிந்தன் குழம்பிப் போனான். வினாடி நேரத்தையும் வீணடிக்க விரும்பவில்லை அவன். 

“என்னது மாமா, ஏதோ சாதகம் கீதகம்’னு..” 

“எல்லாம் காரியமாத்தான்.” ஒரு நமட்டுச் சிரிப்பை உதிர்த்துவிட்டு,”உம்நேத்தண்ணி ஆறிப்போவுது முதல்’ல அதைக் குடி.” என்றார், அருளப்பன். 

தேநீரை அருந்திக் கொண்டே, “வீட்டுப் பக்கம் வர்ற தில்லையே மாமா. அம்மா உங்களைப் பார்கணும்’னு சொன்னாங்க…” அரவிந் தன் கூறினான். 

“அது அதுக்கு நேரம் காலம் வரவேண்டாமா…” பட்டென்று சொல்லிவிட்டு சுருட்டை உறிஞ்சிப் புகையை ஊதினார். புகை கக்கி இரைந்து செல்லும் பழங்காலப் புகை வண்டியை நினைவூட்டியது அரவிந்தனுக்கு. அருளப்பனே தொடர்ந்து “அநேகமா அடுத்த வாரம் வருவோம்’னு அம்மாகிட்ட சொல்லு.” என்று முத்தாய்ப்பு வைத்தார். 

“நேரம் காலம் வரவேண்டாமா…?” 

“அடுத்த வாரம் வீட்டுக்கு வருவோம்…” போன்ற சொற்களை அருளப்பன் திருவாய் மொழிந்த போது’ மெய் மறந்து மிதந்தான் அரவிந்தன். உடலெங்கும் புல்லரிப்பு புதிர் அவிழ்க்கப்படும் வேளை அடுத்து விட்டது என்று நினைக்கும் தோறும் அவன் இதயத் துடிப்பு வேகவேகமாக அடித்துக் கொண்டது. திருமணம் என்றதும் குமரிகளுக்கு நாணம் ஏற்படுவது இயற்கைதானே.. அந்த நாணத்தின் எதிரொலிதான் அன்னம்மாளின் போக்கில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்திற்குக் காரணாக இருக்க வேண்டும் என்று அவன் யூகித்தான். அன்னம்மாளுடன் மணவறையில் வீற்றிருக்கும் போதை நிறை காட்சியை ஒரு கணம் மனத்திரையில் ஓட விட்டான். வினோதமான உணர்வலையால் தாக்குண்டு தன்னையே இழந்து நின்றான். 

“அரவிந்தா!” அருளப்பனின் குரல் கேட்டு தன்னு ணர்வு பெற்றான் அரவிந்தன். 

நாணம் அவனையும் பற்றிக் கொண்டது போலும். 

“என்னப்பா யோசனை…?” 

“ஒண்ணுமில்லெ மாமா…” மென்று விழுங்கினான் 

கூடத்தின் கூரையை அண்ணாந்து பார்த்துக் கொண்டே “உம்… உனக்கு அருணாசலத்தைத் தெரிஞ்சிருக்க முடியாது. அவரும் நானும் அந்த காலத்துக் சிநேகிதங்க. தெய்வ சங்கல்ப் பமோ என்னமோ.. நேரமும் காலமும் வந்து கூடுறதைப் பாரேன். வீட்டுவரி சம்மந்தமா பட்டணத்துக்குப் போயிருந்தப்போ தற்செயலா சந்திச்சிட்டோம். அடிபட்டு ஆசுபத்திரியில கெடந்தப்போ நானும் உன் அத்தையும் அன்னம்மாளும் அவரு வீட்டுக்குப் போயிருந்தோம்.பேச்சை நிறுத்திக் கொண்டு, சுருட்டைப் பற்றவைத்துக் கொண்டார் அருளப்பன். 

என்ன பேசுகிறார், எதற்காக இதையெல்லாம் சொல்லு கிறார் என்பதை விளங்கிக் கொள்ள முடியாமல் அரவிந்தன் விழித்தான். 

“அதுக்கப்புறம் ஒரு வாரம் கழிச்சு, அருணாசலமும் குடும்பத்தோட நமம வீட்டுக்கு வந்திருக்காரு. ரொம்ப நல்ல குடும்பம். அவரு மகன் பேரு அறவாழி தான் பொருளாதாரப் பட்டதாரியாம். அவரு கூட்டா சேர்ந்து நடத்துற நகைக் கடைக்கும் துணிக்கடைகளுக்கும் அறவாழிதான் மானேசர்..” என்று கூறிக்கொண்டே அர விந்தனின் முகத்தில்’பார்வையை மேயவிட்டார். 

நல்ல வசதியோட வாழ்றாங்க’னு சொல்லுங்க… ஒப்புக்குச் சொல்லி வைத்தான் அரவிந்தன். 

“வசதினா வசதி அப்பேர்பட்ட வசதி போ! தங்க விலை ஏற்றத்தால் எக்கச் சக்கமான லாபமாம்!” பொருளப்பர் பேசினார் அருளப்பன் உருவத்தில். மேலும் தொடர்ந்தார்,” அவங்களே வலிய வந்து சொல்லுப்போது நாம் அலட்சியப்படுத்திட முடியுமா?” புருவங்களின் நெரிப்பில் கேள் விக்குறிகளை வரைந்து காட்டினார் 

“புரியவில்லையே மாமா… அரவிந்தனின் குரல் கம்மியது. ஏதோ ஒரு வகைத் திகில் அவனது உணர்வு நாளங்களை ஊடுருவிச் சென்று இதயத்தில் குந்திக் கொண்டு அழுத்தியது. 

“எல்லாத்தையும் விபரமா சொல்லத்தானே அடுத்த வாரம் உன் வீட்டுக்கு வரப்போறோம்” பொடி வைத்துப் பேசினார் அருளப்பன். பொறி கலங்கிப் போனவன் போல் பேந்தப் பேந்த விழித்தான் அரவிந்தன். 

”நேரம் ஆனது, முட்டைகளைக் கடையி’ல சேர்த்தா கணும். நீ அஞ்சுகத்தோட பேசிக்கிட்டிருந்திட்டு, புறப்படும் போது வீட்டைப் பூட்டிட்டுப் போ. அதோ பூட்டு” என்று ஆணியில் தொங்கிக் கொண்டிருத்த பூட்டைச் சுட்டி காட்டிக் கொண்டே முட்டைக் கூடையுடன் நடந்தார் அருளப்பன். 

குழம்பிப் போயிருந்த அரவிந்தன் கிளிக்கூண்டை நோக்கினான். அஞ்சுகம் கூண்டின் குறுக்குக்கம்பியில் நின்று கொண்டு அமைதியே உருவாக அரவிந்தனை நோக்கிக் கொண்டிருந்தது. அவன் தேநீர்க் கோப்பையை நோக்கிக் கொண்டிருந்தான். மீதமிருந்த தேநீரில் ஈ ஒன்று தத்தளித்துக் கொண்டிருந்தது. 

இரண்டு மீட்டர் நடந்திருப்பார். எதையோ நினைவு படுத்திக் கொண்டவராக திரும்பி வந்த அருளப்பன்,’ அரவிந்தா, அன்னம்மா கல்யாண விசயமா பேச வர்றோம்’னு அம்மாகிட்ட சொல்லு. தடபுடலா ஒண்ணும் செய்ய வேண்டாம். சம்மந்தி வீட்டுக்குப் போகவேண்டி இருக்கும், அதுக்கப்புறம் பார்த்துக்கலாம்!” கிடுகிடுவென சொல்லி முடித்தார். 

அரவிந்தனின் தலை சுற்றியது. ஓராயிரம் ஈட்டிகளின் ஒருமுகத் தாக்குதலை அவனது இதயக் கேடயத்தால் தாக்குப்பிடிக்க இயலவில்லை. “சம்மந்தி வீடா?” உணர்வற்ற அவன் நா அசைத்தது. 

“ஆமாம்’பா. அன்னம்மாளுக்கு ரொம்பவும் பிடிச்சுப் போச்சு. அறவாழியும் சம்மதம் தெரிவிச்சுடுச்சு.!” என்று கூறிக் கொண்டே நடையைத் துரிதப்படுத்தி கண் இமைக்கும் நேரத்தில் அரவிந்தனின் பார்வையிலிருந்து மறைந்து போனார் அருளப்பன். 

ஆழ்கடலில்-சூறைக்காற்றில் அகப்பட்டவன் போலானான் அரவிந்தன். நெஞ்சமெல்லாம் வறண்டு விட்டது அவனுக்கு. செவிப்பறைகளில், ‘நொய் நொய்’ என்ற ஒலியைத் தவிர வேறு எதுமே எழவில்லை. மூளை நரம்புகள் இயங்க மறுத்தன .. கால்களோ உடல் பளுவைத் தாங்கிடும் ஆற்றலை இழந்தன. ‘தொப்’பென நாற்காலியில் சாய்ந்தான். 

கடந்து போன அந்த நாட்களின் நினைவலைகள் அரவிந்தனின் மனக்கரையை ஈரப்படுத்தின சின்னவயதில் அன்னம்மாளுடன் ஆடிப்பாடித் திரிந்து கண்ணாமூச்சு விளையாடிய அந்த இனிய காட்சிகள்; மழைக்காலங்களில் மண்வெட்டியை எடுத்துக்கொண்டு அன்னம்மாளுடன் சேர்ந்து மண்ணைக் கொத்தி நாக்குப் பூச்சிகளை சேகரித்து போட்டி போட்டுக்கொண்டு தூண்டில்போட்டு மீன் பிடித்த அந்த இனிய நினைவுகள், ஆடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டுசெல்லும் பொழுது; ‘டொக்கு’ப் பழம் வேண்டுமென்று அவள் அடம் பிடிக்க, ஆவேசத்துடன் மரத்தில் ஏறிய அவனை மொசுடுகள் கடியோ கடியென்று கடித்துத துன்புறுத்திய அந்த வேதனை கலந்த இனிய நிகழ்ச்சிகள்; பட்டம் விட்டதும், காகிதப் படகுகளைச் செய்து ‘அல்லூ’ரில் மிதக்கவிட்டு விளை யாடியதும் இன்னும் என்னென்னவோ நினைவுகள் அவன் நினைவுத் திரையில் தோன்றித் தோன்றி மறையலாயின. 

கலைக்க முடியாத நினைவுகள் என்று அரவிந்தன் நம்பிக்கொண்டிருந்த எல்லாமே பழங் கனவாகிவிட்டனர் 

அன்னம்மாளை அவன் காதலித்தது உண்மை! அரவிந்தனின் மேல் அவள் உயிரையே வைத்திருந்ததும் உண்மை! நிலவும் வானும், கதிரும் மீனும் இதற்கு சாட்சி சொல்லத் தேவையில்லை. வீட்டுக்கு வந்த நாள் முதல் கண்ணாரக் கண்டு காதாரக் கேட்டுக் கொண்டிருக்கும் அஞ்சுகமே சாட்சி! 

ஆனால்…அன்னம்மாள் மாறிவிட்டாளே…! 

அழுதே அறியாத அரவிந்தனின் விழிகளை நீர் திரை யிட்டது. கண்களைத் துடைத்துக் கொண்டு இருக்கையை விட்டெழுந்தான். 

இதுவரையில் நடைபெற்ற உரையாடலையும் திகழ்ச்சிகளையும் கண்டும் கேட்டும் கொண்டிருந்த அஞ்சுகம், ‘மாமா அழுவுது…”என்று கரகரத்தக் குரலில் உளறிற்று. 

அரவிந்தன் நிமிர்ந்து பார்த்தான். அமைதியே வடிவாக அஞ்சுகம் இருப்பதைக் கண்டான். அவன் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது. 

“அஞ்சுகம்…!!” அலறிவிட்டான் அரவிந்தன். விம்ம லுக்கும் விக்கலுக்கும் இடையே, கூண்டை இரு கரங்களாலும் பற்றிக்கொண்டு. “அஞ்சுகம்! நான் அழவில்லை! என் இதயம்…ஆமா, என் இதயம் குமுறுது. உன் அக் காளுக்கு என்னைப் பிடிக்கலையாம். சொகுசான வாழ்வு அவளை நாடி வரும்போது ஆபத்தோட போராடி உட லுழைப்பைப் பயிராக்கிப் பாடுபட்டு, நாடு வாழ்ந்தாதான் நாமும் வாழமுடியும் என்கிற கொள்கையி’ல ஊறிப்போன என்னை அவளுக்கு எப்படிப் பிடிக்கும்? உனக்குப் புரியுதோ இல்லையோ… வேற யாரிடம் என் மனவேதனையைச் சொல்லி அழுவேன்? அஞ்சுகம்… எழுபத்தாறு பேரோட எழுபத்தேழாவது ஆளா என்னையும் பலி கொண்டிருக்கக் கூடாதா…? 

கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டான் அரவிந்தன். “பணமும் படோடோபமும் தான் வாழ்க்கை யின் தத்துவம்’னு நம்பியிருக்கிற என் மாமாவோட ஆளுகைக்கு அன்னம்மாள் ஆட்பட்டிருந்தால் அவளுக்காக ரெண்டு சொட்டுக் கண்ணீரை முன்கூட்டியே அர்ப்பணிச் சுடுறேன். அவ்வளவுதான்!” 

செங்கோடு ஓடியிருந்த அரவிந்தனின் விழிகள் கூடத்தை ஒருமுறை வலம் வந்து, அஞ்சுகத்திடம் நிலை குத்திட,” அஞ்சுகம்… நான் கிளம்புகிறேன். இனிமேல் உன்னைப் பார்ப்பேனோ இல்லையோ…” அரற்றிக் கொண்டே பூட்டை எடுத்தான். 

அதுவரையில் குத்துக்கல் போல் ஆடாமல் அசையால் இருந்த அஞ்சுகம், கூண்டில் முட்டி மோதிக்கொண்டு,” மாமா! மாமா!!” என்று அலறிய காட்சி நெஞ்சை நெகிழ வைத்து. 

வெளியே வந்து கதவைச் சாத்தினான். 

உள்ளே…… 

‘கீச்சுக் கீச்’சென்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தது அஞ்சுகம். அரவிந்தன் கதவைப் பூட்டினான். மரக்கதவை மட்டுமா பூட்டினான்? அவனது மனக்கதவையும் சேர்த்தே பூட்டினான். திரும்பிப் பார்க் காமலேயே நடந்தான். நடையில் தளர்ச்சி தெளிந்தது. 

மளமளவென நாட்கள் நகர்ந்தன.. 

கிடுகிடுவென காரியங்கள் நிகழ்ந்தன… 

அறவாழி அன்னம்மாள் திருமணம் ஆரவார ஆடத் பரத்தோடு நடந்து முடிந்தது. அருளப்பனுக்கு ஆகாயம் தில் மிதப்பதைப் போன்ற உணர்வு. 

அரவிந்தன் எதிலுமே பட்டுக் கொள்ளவில்லை. பாலைவனமாகிவிட்ட அவனது மனம் பாலைவன நாடான அரேபியா நோக்கித் தாவியது. ஃசித்தாவில் நிர்மாணிக் கப்படும் கப்பல் துறை வேலைகளுக்குச் சிங்கப்பூரில் ஆள் திரட்டிக் கொண்டிருந்த நிறுவனங்களை அவன் அறிந்திருந்தான். 

நண்பர்களின் சங்கிலிக் கோர்வை போன்ற அறிவுரை களும், தாய் வடித்த கண்ணீரும் அவன் திட்டத்தை மாற்றி அமைத்தன. 

பெற்ற தாய்க்கு அவனைத் தவிர வேறு யார் துணை இருக்கிறார்கள்? தள்ளாத அகவையில் பொல்லாத சுற்றத் தார் கொல்லாமல் கொன்றுவிடுவார்களே! திருமணம் என்ற பேச்சையே எடுக்கவேண்டாம் என்று அன்னையிடம் வேலை மன்றாடிக் கேட்டுக்கொண்டு, தானுண்டு தன் யுண்டு – மக்கள் நலனுக்குப் பணியாற்ற – குடிமக்கள் ஆலோசனைக் குழு உண்டு என்னும் போக்கில் வாழ்க் கையை அமைத்துக் கொண்டான் அரவிந்தன். 

அருணாசலம் நான்கு மறை அருளப்பன் இல்லம் வந்து போனார். அப்பொழுதெல்லாம் அஞ்சுகத்தின் மேல் ஒரு கண் இருக்கத்தான் செய்தது. எப்படியும் அஞ்சுகத்தைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ளவேண்டும் என்ற ஆசை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பூதா கரமாக அவர் மனதில் எழுந்து வியாபித்தது. 

குடும்ப சமேதராய் ஐந்தாவது முறையாக வந்திருந்த போது, அருணாசலம் தன் விருப்பத்தை அருளப்பனிடம் வெளியிட்டார். முதலில் பிகு பண்ணத்தான் செய்தார் அருளப்பன். அருணாசலத்துக்கு அவரைப்பற்றித் தெரியாதா என்ன? படைக் கலன்களை எடுத்தார். காரியம் என்ற வில்லில் பணக்கணையை ஏற்றி அருளப்பனை நோக்கி விடுத்தார். அந்தோ! அருளப்பன் வீழ்ந்து விட்டார்!

செய்தியைச் சொல்லிவிட அஞ்சுகத்தை நாடி ஓடோடி வந்தாள் அன்னம்மாள். 

”அஞ்சுகம்…! ஏ, அஞ்சுகம்! ஒரு இனிக்கிற செய்தி கொண்டு வந்திருக்கேன். என்ன செய்தி’னு கேட்க மாட்டியா? இனிமே நீ எங்க வீட்டுக்கு வந்து என்னோட தான் இருக்கப்போறே. என் மாமனார் உன்னை விலை கொடுத்து வாங்கிட்டாரு. ‘காராங்கூணி’ கூட வாங்கிக்க முடியாத இந்த அசிங்கமான கூண்டுக்குப் பதிலா, புதுசா… அழகான கூண்டு வாங்கித் தருவோம. அது மட்டுமா..? நாணத்தோடு அஞ்சுகத்தை நோக்கினாள். “சொல்லட்டுமா? எனக்கு வெட்கமா இருக்கு…நீ கத்திக் கலாட்டா பண்ணக் கூடாது. சொல்லட்டுமா? வந்து … வந்து… உனக்குத் துணையா ஒரு ஆண் அழகன் வரப்போறான்…!” என்று கூறிக்கொண்டே, முகத்தை இரு கரங்களாலும் பொத்திக் கொண்டாள் அன்னம்மாள். 

அஞ்சுகம் அசையவில்லை. குரல் கொடுக்கவில்லை. 

“ஏன் உம்’னு இருக்கே.. ? பேசேன் . !” அன்னம்மாள் குரலில் கனல். 

“மாட்டேன்…!” அஞ்சுகத்தின் குரலில் தீப்பொறி. 

அரவம் கேட்டு அருளப்பன் அங்கே வந்தார். 

“என்னம்மா, அன்னம்… என்ன தகராறு?” சிரித்துக் கொண்டே கேட்டார் 

“பாருங்கப்பா இந்த அஞ்சுகத்தை…! இங்கே இருந்து வரமுடியாது’னு அடம்பிடிக்கிறதே…” அன்னம்மாள் சிணுங்கினாள். 

“நீ ஒரு விளங்காத பொண்ணும்மா. அது என்ன தானாவே பறந்தா வரப்போறது? நீ தானே கூண்டோட தூக்கிக்கிட்டுப் போகப்போறே! கவலையை விடு…”சமா தானம் சொல்லிக் கொண்டே அஞ்சுகத்தை நெருங்கிய அருளப்பன், அஞ்சுகம்! உனக்குத் தீனிபோட்டு வளர்த்துப் பேசவும் கற்றுக் கொடுத்ததுக்காக சம்மந்தியார் முன்னூறு வெள்ளி சன்மானம் கொடுத்திருக்கார். இனி நீ அவருக்குத் தான் சொந்தம். அதனால், அடம்பிடிக்காம அங்கேயே போய் இரு” என்று கட்டளையிட்டார். 

அஞ்சுகம் துள்ளிக் குதித்துக் கூண்டை சுற்றிச் சுற்றி வந்தது. மாட்டேன். போகமாட்டேன்! நான் அக்கா இல்லே…! மாட்டேன்! மாமா எங்கே? மாமா மாமா!!” கரகரத்த குரலில் கத்திக் கொண்டிருந்தது. 

அன்னம்மாள் திடுக்கிட்டாள். 

அருளப்பன் நிலைக்குத்தி நின்றார். 

அரவிந்தனை வஞ்சித்து விட்டதையும், பணத்துக்காக வும் ஆடம்பர வாழ்வுக்காகவும் அவளை அறவாழிக்கு மணமுடித்துக் கொடுத்ததையும் அஞ்சுகம் இடித்துரைப்ப தாகவும் நினைத்து ஒருகணம் தடுமாறத்தாம் செய்தார் அருளப்பன். 

தந்தையும் மகளும் இருவேறு திசைகளில் சிந்தனையை ஓடவிட்டனர். 

திசைகள்தான் வேறேதவிர சிந்தனை ஒன்றுதான். 

ஆடம்பரப் பிரியையான அன்னம்மாள் சற்றைக்கெல் லாம் சுதாரித்துக் கொண்டாள். பணப்பேயான அருளப் பனோ. அஞ்சுகத்தின் கூற்றைக் குப்பைக் கூடையில் எறிந்தார். 

ஆடம்பர ஓய்யார வாழ்வு தனக்கு அமைந்துவிட்டதை எண்ணிக் குளிர்ந்து நின்றாள் அன்னம்மாள். பணக்கார சம்பந்தமும் பெரிய இடத்து சகவாசமும் அமைந்து விட்டதை நினைத்துக் குளிர்ந்து போனார் அருளப்பன்! 

இரு துருவங்களின் மத்தியில்… 

பூமத்தியக் கோடென வெந்துப் புழுங்கும் நிலையில் அஞ்சுகம்! 

”அஞ்சுகம்! அனாவசியமா உளறாதே .. உன்னை விற்றாச்சு. ஒழுங்கு மரியாதையா அன்னம் சொல்றபடி நடந்துக்க!” அதட்டினார் அருளப்பன். 

‘முடியாது! நான் அக்கா இல்லே! என்னை விற்க முடியாது! நான் பேசமாட்டேன்!!” வலுவையெல்லாம் ஒன்றுசேர்த்து முழங்கிற்று அஞ்சுகம். 

சிங்கப்பூரின் ஆக உயர்ந்த ஓசிபிசி கட்டிடத்தின் ஐம்பத்து இரண்டாம் மாடியிலிருந்து தலைகீழாகத் தூக்கி எறியப்பட்டதைப் போன்ற உணர்வு. அஞ்சுகத்துக்கு. பேசக் கற்றுக்கொடுத்தது மாபெரும் தவறாகி விட்டது என்ற கடுகடுப்பு எல்லாம் சேர்ந்து அருளப்பனை மூச்சு முட்ட வைத்தது 

“பேசமாட்டாயா? நீ பேசமாட்டாயா? உன்னா’ல பேச முடியாதா? ச்சீ! பத்து வெள்ளி பெறுமானமில்லாத ன்னை முன்னூறு வெள்ளி கொடுத்து வாங்கியிருக் கிறாரே – எதுக்காக? நீ பேசறதுனா’ல தானே? சனியனே, மரியாதையா பேசிடு. இல்லேனா பட்டினிதான்! நாலு நாளைக்கு காய்ஞ்சா தானாப் பேசுவே. ஆமா, தானாவே பேசுவே!’ ஆவேசம் வந்தவர்போல் அருளப்பன் துள்ளினார் 

அன்னம்மாள் பக்கம் திரும்பினார். அவன் அங்கே இல்லை! 


அஞ்சுகம் அருணாசலம் இல்லம் வந்து மூன்று முழுநிலா தோன்றி மறைந்துவிட்டது. அமாவாசை இருள் மட்டும் அஞ்சுகத்தின் மனத்தைவிட்டு அகன்றிடவில்லை. பழைய கலகலப்பும் சுறுசுறுப்பும் பறந்துத்திரிய முடியாத அஞ்சுகத் திடமிருந்து பறந்து போய்விட்டன. கண்ணையும் கருத்தை யும் கவர்ந்திழுத்த சிறகுகள் புகையோடிப்போன அடுக் களைச் சுவரைப் போன்று பொலிவிழந்து காட்சியளித்தது. சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் அதன் விழிகள் சோபை இழந்து சோர்வுற்றிருந்தன. 

அழகான கூண்டு! அதில் பூ வேலைப்பாடு அமைந்த தண்ணீர்க் கிண்ணம். பழக்கீற்றுகளுக்கான பளபளக்கும் பளிங்குத்தட்டை. நாளுக்கு நான்கு பப்பாளிப் பழக்கீற்று களைத் தின்னும் அஞ்சுகம், இரண்டு நாளைக்கு ஒரு பழக் கீற்று அளவு சாப்பிடுவதே அரிதாகியிருந்து. கேலியும்கிண்ட லும், கோபமும் கொஞ்சலுமாகப் பேசிக் கொம்மாளமடித்த அந்தப் பஞ்சவர்ணக்கிளி – அஞ்சுகம-கடந்த மூன்று மாதங் களாக “மாமா …மாமா..” என்ற பல்லவியைத் தவிர வேறு எதையுமே ஒலிக்க மறுத்தது. நேரம் காலம் கூட அதற்குத் தெரியவில்லை. எல்லாவற்றையும் மறந்து விட்டது போலும் .. ஒன்றைத் தவிர! 

அருணாசலம் எவ்வளவோ முயன்று பார்த்தார். அஞ் சுகம் மசியவில்வை. கரு சுமந்த அன்னம்மாளும் தன் வித்தை களை எல்லாம் காட்டிப் பார்த்து விட்டாள்; பலிக்கவில்லை. அறவாழிக்கு இதற்கெல்லாம் நேரம் இருப்பதில்லை; வியா பாரத்தில் கண்ணும் கருத்துமாக இருந்தான். 

அருளப்பன் தன் மகளைக் காணப் பல முறை வந்து போனார். வீட்டையும், கொல்லையையும், கோழிப்பண்ணையையும் விற்று விட்டுப் பட்டணத்தில் குடியேறும் திட்டம் அவரிடம் இருந்தது. அதற்கு அருணாசலத்தின் உதவி தேவைப் பட்டது. 

அருளப்பணின் குரலைக்கேட்ட மாத்திரத்தில், அலகைக் கூரையை நோக்கி அணணாத்திக் கொண்டு கற்சிலைபோல் சமைந்திடும் அஞ்சுகம். அவரும் எவ்வளவோ முயன்று பார்த்து விட்டார்; அசைந்து கொடுத்தால் தானே…? 

ஒருமுறை, அருளப்பன் பொறுமையை இழக்க நேரிட்டது.  

“ஏய், அஞ்சுகம்! உனக்கு அவ்வளவு நெஞ்சழுத்தமா? உன்னை என்ன செய்யப் போறேன் தெரியுமா? அரிவா ளாலே உன்னைக் கொஞ்சம் கொஞ்மா, சதக் சதக்’னு கொத்தி, மூசாங் பூனைக்குப் போடலே… பார்!” என்று காட்டுக் கத்து கத்தினார். 

“அந்த அதிகாரம் உங்களுக்குக் கிடையாது, சம்மந்தி யாரே! அஞ்சுகம் இப்ப எங்க வீட்டுப் பொண்ணு! நீங்க வித்தீங்க; நான் வாங்கிட்டேன். அதைக் கொத்தவோ, கொல்லவோ உங்களுக்கு என்ன உரிமையிருக்கு?” என்று மீசை மேல் விரல்போட்டுப் பேசிக் கொண்டே வந்தார் அருணாசலம். 

“ஏதோ-பழைய நெனைப்பு! அதான் பேசிப்புட்டேன்” போர் முரசு கொட்டிய அருளப்பன் பெட்டிப் பாம்பானார். 

வாழ்க்கையை வியாபாரப் பொருளாகக் கருதினார்கள் அருளப்பனும் அவர்தம் அருந்தவப் புதல்வி அன்னம்மாளும். ஈவு இறக்கம் என்பதெல்லாம் இதயத்தில் சுரந்திடத் தேவை யில்லை. உதட்டளவில் நிறுத்திக் கொண்டால் போதும் எனும் குருட்டு மனப்பான்மையில் மூழ்கிப் போனவர்கள்… 

வளமான வாழ்வு! 

வகை வகையான ஆடை ஆபரணங்கள்! 

பெரிய இடத்துச் சம்மந்தம் என்கின்ற துருபிடித்துப் போன பட்டயம். 

இவ்வளவும் இருந்தென்ன? பண்பு நலம் பேணத் தெரியவில்லையே…! 

அரவிந்தனை விரும்பினாள் அன்னம்மாள்; உண்மை! 

அவனும் அவள்மீது உயிரையே வைத்திருந்தான்; உண்மை! 

அருளப்பனுக்கும் இது தெரியும்; மறுக்க முடியாத உண்மை! 

சந்தர்ப்ப சூழ்நிலையால், விபத்துக்குள்ளானான் அரவிந்தன். அரவிந்தனின் அங்கத்தில் சிறிய மரு. அவன் மனம் மாசு மருவற்றே இருக்கிறது. இருந்தும் அவனைப் புறக்கணித்தாள் அன்னம்மாள். பக்க மேளம் வாசித்தார் அருளப்பன். 

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அறவாழிக்குக் கழுத்தை நீட்டினாள் அன்னம்மாள் ; பொருள் என்னும் போதைக்கு அடிமைப்பட்டு, அருணாசலத்துக்கு சம்மந்தி யானார் அருளப்பன். 

ஆனால், விலைபேசப்பட்டு-விற்பனைப் பொருளாகி விட்ட அஞ்சுகம்? 

ஆசைகளை அடக்கிக் கொள்ளவும், தேவைகளைக் குறைத்துக் கொள்ளவும் இசையாதவர்களிடம் 

பண்பு நலத்தை எந்தக் கோலத்தில் எதிர்பார்க்க முடியும்? 

‘அக்கா’ என்னும் அன்னம்மாள், மாமா என்னும் அர விந்தனுக்குத் தான் என்ற முடிவை விடாப்பிடியாகப் பிடித் துக் கொண்டிருக்கும் அப்பாவி அஞ்சுகம் இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தான் வாழப் போகிறது? 

அரவிந்தன் வருவான், வருவான் என்கின்ற எதிர் பார்ப்பில் உயிர் வாழ்ந்தும், ‘அவன் நினைவு’ கலையாத இறுதி மூச்சை விடவேண்டும் என்ற பேராசையிலும் அஞ்சுகம் நாட்களைக் கடத்த… 

காலக் கிறுக்கன் அஞ்சுகத்தின் பளப்பு நிறங்களை விலைபேசிக் கொண்டிருந்தான். நிறங்களைப் பறிக்கும் காலக் கிறுக்கன், அரவிந்தனின் நினைவைப் பறிப்பதற்குள்….

– அவன் (சிங்கப்பூரன் சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூன் 1993, நிலவுப் பதிப்பகம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *