ஆம்
அவனுக்காக இப்பொழுதே
அழுதுவிடுங்கள்…
ஏனென்றால், அவன்
இன்னும் கொஞ்ச நேரத்தில்
இறக்கப் போகிறான்!
அவன் இறந்தபின்
அழுவதற்கு,
நீங்களும் உயிரோடு
இருக்கப் போவதில்லை!
அதனால்தான் சொல்கிறேன்
அழுதுவிடுங்கள். இப்பொழுதே
உங்களுக்குமாய்ச் சேர்த்து!
அவன் ஒரு
மனித வெடிகுண்டு…!
தலைவரின் தனியறைக்குள் அவனோடு சேர்த்து அந்த நான்கு பேரும் நுழைந்தார்கள். காடாய் மண்டியிருந்த தாடி மீசை, தோள்வரைத் தொங்கிய தலைமுடி, யானையைப் போன்ற சிறிய கண்கள் கொண்ட தலைவர் அவர்களைச் சற்று நேμம் அமைதியாய்ப் பார்த்தார்.
அப்பப்பா! அவர்களை ஊடுருவிய அந்தப் பார்வையின் கூர்மைதான் என்னே?
மற்ற மூவரும் அந்தப் பார்வையைத் தாங்க முடியாமல் தலை குனிந்தார்கள். அவன் மட்டும் அவர் முகத்திலிருந்து தன் விழிகளைத் திருப்பவேயில்லை. தலைவரின் வாய் ஒரு மெல்லிய கோடாய் விரிந்து அதிலே ஓர் அச்ச மூட்டும் புன்னகை பிறந்தது.
தலைவரின் செறுமலைக் கேட்டு மற்ற மூவரும் மறுபடியும் அவர் முகம் நோக்கினார்கள்.
தலைவர் தனக்கு எதிரே இருந்த மேசை மேல் சுருட்டிப் போடப்பட்டிருந்த அந்த நான்கு சீட்டுகளை இரண்டு கைகளாலும் வாரி எடுத்தார். குலுக்கினார். மறுபடியும் அவற்றை மேசை மேல் எறிந்தார்.
கண்களை மூடிக்கொண்டு இடது கையால் துழாவி ஒரு சீட்டை எடுத்தார். நால்வரும் நெஞ்சு படபடக்கக் காத்திருந்தார்கள். தலைவர் மெல்ல அந்தச் சீட்டைப் பிரித்தார். படித்தார்.
அவரது இடது கைச் சுட்டுவிரல் அவனை நோக்கி நீண்டது.
அவன் இதை எதிர்பார்த்தேயிருந்தான். தலைவர் எந்தச் சீட்டை எடுத்திருந்தாலும் தன்னையே தேர்ந்தெடுப்பார் என்று நம்பியிருந்தான். ஏனென்றால் அளிக்கப்பட்ட பயிற்சிகளில் முதன்மையாகத் தேறியது தான்தான் என்பதை அவன் அறிந்தே இருந்தான். அவன் மெல்ல இரண்டடி முன்னேறி இயக்கத்தின் வழக்கப்படி செவ்வணக்கம் செய்தான்.
மற்ற மூவரும் தலைவருக்கு முதுகு காட்டாமல் பின்னால் நகர்ந்து வெளியேறினார்கள்.
தலைவர் அவனிடம் நெருங்கி வந்து அவன் கையைப் பற்றிக் குலுக்கினார். தோளிலே தட்டிக் கொடுத்தார்.
அவனும் பின்னால் நகர்ந்து வெளியேறினான். வெளியே காத்திருந்த மற்றவர்கள் பெருங்குரலெடுத்து அவன் பெயரைச் சொல்லி வாழ்த்தினார்கள்.
துணைத் தலைவர் அவனை இறுதிப் பயணத்திற்கு ஆயத்தம் செய்தார். மறுபடியும் அவனுக்குக் கொள்கையின் நோக்கத்தை விளக்கி மூளைச் சலவை செய்யப்பட்டது. ஆயுதப் பயிற்சியாளரும் வெடிகுண்டு நிபுணரும் அவனுக்கு இறுதிக் கட்டப் பயிற்சியை அளித்தார்கள்.
அன்று மாலை அந்த அறைக்குள் இயக்கத்தின் மொத்த உறுப்பினர்களும் குழுமி இருந்தார்கள். தலைவர் கையைச் சொடுக்கியதும் எதிரே இருந்த திரையில் தகர்க்கப்பட வேண்டிய இலக்கைக் காட்டும் படம் ஓடியது.
இலக்கு ஓர் ஐந்து மாடி வணிக வளாகம். மக்கள் கூட்டம் பிதுங்கி வழியும் அந்த வணிக வளாகத்தின் காட்சிகளை அனைவரும் பார்வையால் விழுங்கினார்கள்.
வெடிகுண்டு வெடித்தால் எவ்வளவு உயிர்ச் சேதம் பொருள் சேதம் ஏற்படும் என்று தலைவரின் குரல் பின்னணியில் விளக்கியது. அது கேட்டு அனைவரும் பெருங்குரலில் ஆμவாரம் செய்தார்கள். காட்சி முடிந்தது. அவன் எழுந்து தலைவரை நெருங்கினான். தலைவர் அவனைக் கட்டித் தழுவிக் கொண்டார்.
அனைவரும் இயக்கத்தின் பெயரை, தலைவரின் பெயரை, அவனது பெயரைச் சொல்லி வாழ்த்தினார்கள். அவர்களைக் கையமர்த்திய தலைவர் ஒரு சிறிய வீரவுரை நிகழ்த்தினார். இயக்கத்திற்காக அவன் செய்யப் போகும் உயிர்த் தியாகம் எவ்வளவு உயர்ந்தது என்று புகழ்ந்துரைத்தார். மறுபடியும் அவனைக் கட்டியணைத்துக் கொண்டார்.
இறுதியாக அவன் இத்தனை நாள்களாய்க் காத்திருந்த அந்த நிமிடங்கள் வந்தன. தலைவர் வெடிகுண்டு ஆடையை அவன் உடலில் அணிவித்தார். தீப்பெட்டி அளவில் இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்யும் தொலைக் கட்டுப்பாட்டுக் கருவியை அவன் கையிலே கொடுத்தார்.
“மகனே உனக்கு விடை கொடுத்து அனுப்புகிறேன். இலக்கை அடைந்ததும் என்ன செய்வாய் என்று இன்னும் ஒரு முறை என் காதுகள் குளிரச் சொல் பார்ப்போம்…” என்று கேட்டுக் கொண்டார்.
அவன் மெல்லப் புன்னகைத்தான். “இந்த விசையை இப்படி அழுத்துவேன்!” என்றபடியே விசையை அழுத்தினான்.
மறு நொடி… “டமார்”
அதன் பிறகு அழுவதற்கு அங்கே எவருமே மிஞ்சியிருக்கவில்லை…!
காவல் துறையின் உயர் அதிகாரிகள் அங்கே குழுமியிருந்தார்கள். ஆணையர், அனைவரும் கேட்கும்படி அந்தக் கடிதத்தைச் சத்தமாகப் படித்தார்.
“மதிப்பிற்குரிய ஆணையர் அவர்களுக்கு!
நீங்கள் காணாமல் போய்விட்டதாய் அல்லது இறந்து போய்விட்டதாய் நம்பிக் கொண்டிருக்கும் கியூ பிரிவு துணைக் கண்காணிப்பாளர் மணிமாறன் எழுதும் கடிதம்.
இந்தக் கடிதம் உங்களுக்குக் கிடைக்கும் போது நான் உயிரோடு இருக்க மாட்டேன். என்னோடு சேர்ந்து இன்னும் பல பேர் கூட இறந்து போயிருப்பார்கள். புறநகர்ப் பகுதியில் இருந்த அந்தப் பெரிய கட்டிடத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பைப் பற்றித்தான் காவல் துறை இப்போது ஆய்ந்து கொண்டிருக்கும்… அது எப்படி நிகழ்ந்தது? ஏன் நிகழ்ந்தது? யாரால் நிகழ்ந்தது? என்பதை விளக்குவதே இந்தக் கடிதத்தின் நோக்கம்.
மூன்றாண்டுகளுக்கு முன் மதுரையில் நிகழ்ந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் என் தாய், மனைவி, குழந்தைகளை இழந்த நான் அதற்குக் காரணமான தீவிரவாதக் கூட்டத்தை வேரறுக்க உறுதி பூண்டேன். அதற்காகக் காவல் துறையிலிருந்து சொல்லாமல் விலகினேன்… என் தோற்றத்தை மாற்றிக் கொண்டேன்… அந்தத் தீவிரவாதக் கும்பலுக்குள் ஊடுருவினேன்… மனித வெடிகுண்டாய் மாறி அவர்களை அவர்கள் ஆயுதத்தாலேயே அழிக்க முடிவு செய்தேன்…
அந்தக் கடிதத்தை முழுவதுமாக ஏற்கெனவே பலமுறை படித்து விட்டிருந்த ஆணையரும் மேற்கொண்டு அதைப் படிக்க இயலவில்லை. அவர் கண்களைக் கண்ணீர் திரையிட்டது. அதற்கு மேல் அவரால் தாங்க முடியவில்லை. உடைந்து போய் அழுதார்.
தன் மகன் மணிமாறனுக்காய் அழுவதற்குக் குடும்பத்தில் அவர் மட்டும்தானே இப்போது மிஞ்சியிருக்கிறார்.