(1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஊதல் காற்று உடலைக் கிழித்தது. விறுக்கு விறுக்கென்று கைகளை வீசியபடி வேகமாக நடந்து கொண்டிருந்தார் கந்தப்பு. அந்த வெற்று உடம்பில், இணுவிலின் பேர் போன செம்மண் புழுதியை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தது காற்று. கூடுவிட்டுப் போன மார்பும் அதற்குமேல் ஒட்டிவைத்தார் போன்று உடலுக்குச் சற்றே பெரிதான தலையும், குழி விழுந்த கண்களும், கவுண்மேந்து உத்தியோகத்தனாக இருந் தால் எந்த நேரமும் ‘மெடிக்கல் சர்டிபிக்கெட்” எடுக்கக் கூடிய தேகக் கட்டுமாக, அந்த நிர்மானுஷ்ய மான ரோட்டிலே , கந்தப்புவின் வீச்சு நடை சிறிது பயங்கரத்தை விளைவிக்கக் கூடியதாகத்தான் இருந்தது.
தூரத்தில் அதிசயமாக பஸ் ஒன்று வந்து கொண் டிருந்தது. “இன்று மட்டும் பஸ்ஸிலே போனால்?” என்ற சபலம். அவரையும் அறியாமல் அவருடைய கைகள் மடியைத் தொட்டன. மூன்று நாளாகச் சுருட்டியபடி கிடந்த அந்தப் பதினேழு சதம் வியர்வை மணத்துடன் காட்சியளித்தது.
– இண்டைக்காவது முதலாளி கணக்குத் தீர்த்தா ரெண்டால்…உந்தச் சில்லறைக் கடன்களை ஒரு மாதிரி சரிக்கட்டலாம். சுப்பையாவின்ரை கடைக் காசை இண்டைக்கு குடுத்திட வேணும். அவன் வீட்டிலை பழி கிடப்பன்… இப்ப நாலு நாளாய் விரதம்…ம்…. அவள் பொடிச்சியைத் தனிய கடன்காரருக்கு வகை சொல்ல விட்டிட்டு நான் என்ரைபாடு…சீ…என்ன புழைப்பு…
– காலம்பறவும் தேத்தண்ணிக்குச் சீனியில்லை…பனங்கட்டியோட எத்தினை நாளைக்குச் சரிக்கட்டிறது …ம் … வரவரப் பிலயீனம் தான் கூடி விட்டது…டிஸ் பென்சரியிலை இரும்புச் சத்து மருந்து வாங்கிக் குடிக்க வேணும்…முன்னையெல்லாம் கை என்ன கெச் சிதம்….இப்ப வயது போகப் போக கையும் பிரண்டு கொடுக்குதில்லை.
முனியப்ப கோயில் வந்ததும் கந்தப்புவினுடைய கை தானாகவே மேல் துண்டை அகற்றியது. நடை யைத் தளர்த்தாமலே உரோமமில்லாத அந்த மார்பிலே கையை வைத்து “அப்பனே முனியப்பா” என்று வாய் விட்டு அரற்றிக் கொண்டார்.
– ஏன் இண்டைக்கும் எனக்கொரு பெடியன் கட்டி னானெண்டால் கரைச்சலில்லாமல் அறுபது, எழுபது கட்டு கணக்கெழுதலாம்…சின்னவனைக் கூட்டிக் கொண்டு வரலாம். மனம் கேட்டால்தானே ….. அவன் ஒருத்தன் எண்டாலும் நாலு எழுத்துப்படிச்சு…மூதேவி…நேற்று சிலேட்டுத் துண்டை உடைச்சு போட்டு வந்து நிக்குது…அது எங்கை படிக்கப் போகுது….இழுத்துக் கொண்டு போய் இதைப் பழக்கிவிடலாம்…வேண்டாம். இந்த நாத்தல் தொழில் அவனுக்கு வேணாம்…செத்தாலும் பரவாயில்லை…இந்த நாசமாய்ப் போற தொழிலைப் பழகினால்…கடைசியில் இதுதான் கதி எண்டு கிடந்திடுவன்…
…ச்சீ! அந்தக் காலத்திலை றயில் கதவு சாத்திற வேலை எனக்கும் கிடைச்சதுதானே. நானும் என்ரை முதேவியின்ரை சொல்லைக் கேட்டு அந்தக் கவுண் மேந்து வேலையை வேண்டாமெண்டேனே! என்னைச் செருப்பாலே அடிக்க வேணும்…
ராஜாமில் ஒழுங்கை தாண்டியவுடனே, கந்தப்பு வின் கண்கள் அவரை அறியாமலே தூரத்து நோட்டம் விட்டன. மரவள்ளிக் கிழங்குக்காரி ஒருத்தி சந்தி யடியில் வந்து கொண்டிருந்தாள். ”அவளுக்குத் தெரியவா போகிறது” என்று நந்தாவில் தோட்டத்து மதகடியின் பக்கலில் குந்தினார். நாயுண்ணி மர மொன்று தொடையிலே குத்தியது. தொட்டாச் சிணுங்கி இலைகளைத் தொடுவதும் விடுவதுமாக இருந்தார்.
எதற்காகவோ தேகம் நடுங்கியது.
பரியாரி வீட்டைத் தாண்டும்போது மனுஷியின் ஞாபகம் மறுபடியும் வந்தது. “ஆஸ்பத்திரி மருந்துத் தண்ணியிலை அவளுக்குச் சுகமில்லை… வேலனைப் பரியாரியிட்டை தான் காட்ட வேணும்…”
தலையெல்லாம் ஒரு மாதிரிச் சுற்றிக்கொண்டு வந்தது. கல்லும் மக்கியுமான அந்த மாத்தனை ஒழுங் கையில் இறங்கிய போதுதான் தார் ரோட்டின் அருமை தெரிந்தது. துரையப்பாவும் கந்தையாவும் முன்னே , ஒரு சைக்கிளிலில், போய்க் கொண்டிருந்தார்கள். “மனுஷி படுக்கையிலை விழுந்திருக்காட்டில் என்ரை சைக்கிளை வித்திருக்கத் தேவையில்லை . இனி அப்பிடி ஒன்று எப்ப அவிழ்க்கப் போறனோ?”
“என்ன மாணிக்கம் இன்னும் கடை திறக் கேல்லைப் போல கிடக்கு…”
“ஓமண்ணை. இண்டைக்கு எழும்பக் கொஞ்சம் செண்டு போச்சு” மாணிக்கத்தினுடைய மூத்த மகள் முற்றத்தைக் கூட்டிக்கொண்டு நின்றாள் . என்ரை பூரணத்துக்கும் இவளோட்டை வயதுதானே! ஆனால், அவள் ஒரு விரல் கடை உயரம்…மாணிக்கமும் ஒரு மாதிரி பொடிச்சியின்ரை விஷயத்தை ஒப்பேற்றிப் போட்டுது…நானும் அவள் பூரணத்துக்கு எங்கை யாலும் பார்க்க வேணும்…எண்டால் என்னத்தை அள்ளிக் குடுக்கிறது…அது…அது பிறக்க வேண்டிய இடத்திலை பிறக்க வேணும்…அவன் சண்முகம் இப்ப கார்விடப் பழகி இருக்கிறான்….அவனுக்குப் பேசலாம் தான்…வயிரவன் எவ்வளவு கேக்கிறானோ?
2
கொக்குவில் சுருட்டுக் கொட்டில்கள் எதற்காவது பிரமாண்டமான போர்டு பலகை தொங்க விடுவதில் யாரும் காசு செலவிடாமல் இருந்தும்கூட , அனுபவஸ் தர்களுக்குச் சுருட்டுக் கொட்டில்களை இனம் கண்டு பிடிப்பதில் எப்பொழுதும் சிரமம் இருந்தது கிடை யாது. ஒழுங்கைக் கரையோடு சோர்வு தட்டி நிற்கும் கதியால்களின் வரிசையில் இருந்து மூக்கைத் தாக்கும் ஒரு நெடி புறப்படுமாயின், வெகு சமீபத்தில் கொட் டில் ஒன்று இருக்க வேண்டுமென ஊகித்து விடலாம்.
கதவைத் தள்ளியபோதே கோண்டாவில் முருகேசு வின் குரல் கேட்டது…ம்…இண்டைக்கும் செண்டு போச்சு போல கிடக்கு… துண்டை உதறிக் கொடியிலே போட்டு விட்டுத் தூளை அள்ளி வைத்துக் கசக்கத் தொடங்கினார். நெட்டியும் முட்டியுமாகத் தூள் கர கரத்தது. கோடாத் தண்ணீர் சிறிது தெளித்து, பதம் படுத்தலாம் என்றால் நிறை கூடிவிடும் என்ற பயம் வேறு.
“என்ன முருகேசு…இண்டைக்கு ‘டைமன்’, தானே?”
“இல்லையண்ணன்! இப்ப ‘பிறிளியனுக்கு’ கொஞ்சம் பிறியம் வந்திருக்கு; இண்டைக்கு உங்க ளுக்கும் அதுதான்…”
கந்தப்புவுக்குப் பகீரென்றது. வால் பருத்த அந்தப் புதிய சைஸ் சுருட்டு எப்பொழுதுமே அவருக்கு ஒத்து வந்ததில்லை.
“…தம்பி, சுப்பிரமணியம்….ஒரு றீல் கட்டை எறி மேனை…”
“இந்தா கந்தப்பு…இண்டையான் சைஸ் கொஞ்சம் கவனம்….கையை இழுத்துப் போடும்….காப்பிலை நாலுக்கு வச்சிருக்கிறன்…நேற்றைக்கு இருப்பு அடுக்கிற போதுதான் பார்த்தன்….உன்ரை கட்டிலை இரண்டு தலைப்பாலே பிரிஞ்சு போச்சு – கொஞ்சம் கண்ணைத் திறந்துவைச்சுப் பிடி காணும்.”
முதல் சுருட்டைச் சுருட்டி வாலைக் கட்டுவதற்கு நூலை வலது தொடையில் தடவியபோது கை மறு படியும் நடுங்கியது…கந்தப்புவின் வாய் எதையோ முணு முணுத்தது.
***
பன்னிரண்டு மணிக் கோச்சுப் போனபோது கூட கந்தப்புவின் கை படியவில்லை. தூள், வெயிலுக்குக் கர கரவென்று முறுக்கேறிக் கிடந்தது. உள்ளிலை, விரித்த உடனேயே ஒடிந்தது, காப்பிலை, பிசு பிசு வென்று, தலைப்பைப் பூட்டிய மறுகணமே பிரிந்து கொடுத்தது. நூற்று முப்பது, நூற்று நாற்பது தேறும்போலக் கிடந்தது.
வெட்டுக்கார ஆள் – பொடியன் தான் – கொஞ்சம் வேலை தெரிந்தவன் – முதலாளியின் வலது கை – வந்து வெட்டத் தொடங்கியபோதே கந்தப்புவுக்கு உள் நடுக்கம் ஆரம்பித்து விட்டது.
“இதென்ன காணும் தேங்காய்ச் சாக்குப்போல – கண்மண் தெரியாமலே தூளை அள்ளி வைக்கிறீர் – என்ன தொங்கல். இதை ஒருக்கால் பாரும்…!” கந்தப்புவின் சுருட்டு எல்லோருடைய கண்பார்வைக் கும் அனுப்பி வைக்கப்பட்டது. நாக்கைப் பிடுங்கிக் கொண்டு செத்து விடலாம் போல் தோன்றியது.
ம்…மானங்கெட்ட சீவியம்!
மத்தியானம் பாண்காரன் வந்தபோது கந்தப்பு வழக்கம்போல் அரை றாத்தல் பாண் வாங்கி, முதலாளி வீட்டுக் கோடியில் இரகசியமாகப் பிடுங்கிய இரண்டு மிளகாயுடன், உறைக்க உறைக்கக் கடித்து மென்றார். அந்த வரண்ட தொண்டையில் மிகச் சிரத்துடன் அந்த முறுகிய பாண் இறங்கிய போது ஏனோ அந்தப் பல வீனமான கண்களில் நீர் துளித்தது.
கந்தப்புவால், பசித்தும் கூட, அந்தப் பாண் முழுவதையும் உண்ண முடியவில்லை. அன்றைக்குப் பாரதத்தில் அபிமன்யு வதைப் படலம் வாசிப்பு நடைபெற்றது. அந்தச் சிறுவன் அபிமன்யுவைச் சக்கரவாகமாக எல்லோரும் சுற்றி வளைத்து நின்ற அந்த நேரத்தில் அவன் ‘தந்தையே’ என்று பரிதாப மாக ஓலமிட்ட இடம் வந்தபோது, கந்தப்புவுக்கு உண்மையிலேயே அழுகை வந்தது. உலகத்திலே எல்லோருமே கௌரவர் போலவும், தான் நிர்க்க தியாகத் தன்னந்தனியாக நிற்பது போலவும் மன ஆழத்தில் நிழலாடியது.
மனத்திலே பிழியப் பிழிய வேதனை கொப் பளித்தது.
பின்னேரம் முதலாளியிடம் கணக்கெழுதுவ தற்காக நின்றார் கந்தப்பு.
“என்ன காணும் கந்தப்பு, இதைப் பாரும்…இப்படிப் பிசைஞ்சு வைச்சால் இதை எவன்ரை தலையிலே கட்டிறது…நாலு நாளிலே எனக்குத்தான் திருப்பி அனுப்புவங்கள்.”
முதலாளி சுருட்டை இருப்புடன் கலந்த போது, மெதுவாக ஆனால் கந்தப்புவின் காதில் விழக்கூடிய விதமாக,
“ஊரிலை மற்றவன்ரை கொட்டிலெல்லாம் எரிஞ்சு போச்சோ….என்னோடைதான் ஒட்ட வேணு மெண்டால்…”
முப்பது வருஷமாய்ப் பழக்கப்பட்டுப் போன அந்தக் கொட்டில்கால், புகையிலைப் பாடம், இருப்புப் பெட்டி , காம்புக் குவியல் எல்லாம் அவருடைய கண் களுக்கு மங்கலாகத் தெரிந்தன.
யந்திரம் போல், காப்பிலை நெட்டியை வீசுவதற் காக எழுந்தபோது, சுருட்டுக் கட்டும் நூல் அவர் வேட்டி நுனியில் வைராக்கியத்துடன் ஒட்டிக் கொண்டு இழுபட்டது – அவருடைய விசுவாசத்தை நையாண்டி செய்வது போல.
படலையைத் திறந்து கொண்டு வெளியே வந்த போது,
“நாளைக்கு மறுபடியும் இந்தக் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே வரவா? இனியுமா?” என்ற வேதனை ஓலம் தான் ஓங்கி நின்றது.
இரண்டு கிழமைக் கூப்பன் இன்னமும் வெட்ட வில்லை….மயிலன் வீட்டிலை வந்து பழிகிடக்கப் போறான்…
வாசிகசாலை கழிந்ததும் நாகம்மாக் கிழவி வழக்கம் போல் ‘குடி சுத்துக்குக் காத்துக் கொண்டிருந்தாள். காதிலேயிருந்த நாட்டுப் புகையிலைச் சுருட்டை நீட்டி விட்டு வீட்டுப் பக்கம் வந்ததும் அவரையறியாமலே கால் உள் வாங்கியது.
உள்ளே சின்னாச்சி இருமும் சத்தமும் பூரணம் ஓலை கிழிக்கும் சத்தமும் தெளிவாய்க் கேட்டன.
கிணற்றடியில் கால் கையைக் கழுவிப் போட்டுக் குந்திலே சாய்ந்தார். சின்னாச்சியை எப்பிடி இருக்குது’ என்று கேட்கவே பயமாயிருந்தது. ஒரே பயங்கரமான மௌன அமைதி அவரை உலுப்பியது.
பசி வயிற்றைக் குடைந்தது.
பூரணத்தில் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
அப்பு வந்து இவ்வளவு நேரமாச்சே என்று எட்டிப் பார்த்தாளா? அவ்வளவுக்குத் திமிர்…ம்.
பசியின் உத்வேகத்தில் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்தார்.
“அப்பு சாப்பிடவாணை”
ஆர்வத்துடன் திரும்பிப் பார்த்தார்; யாரும் இல்லை; வெறும் மயக்கம்.
இவள் எங்கே போட்டாள்; அவ்வளவு இளக்கார மாகிவிட்டேனா?
கிணற்றடியை எப்படிப் பார்த்ததுதான் தாமதம்; ஸ்தம்பித்து விட்டார். கோபம் எல்லையைக் கடந்து விட்டது.
“என்னடி சனியன் – கிணத்தடிக்கு வந்தால் ஏனடி இவ்வளவு நேரம்…அங்காலை ஆரையடி பார்த்து இளிக்கிறாய்….கிசு கிசு எண்டு வளர்ந்திருக்கும் மூதேவி…” அந்தக் குடத்தைத் தூக்கி அவளுடைய மெலிந்த இடுப்பிலே பலம் கொண்ட மட்டும் இடித்தார் கந்தப்பு.
“ஐயோ அப்பு” என்று கத்தினாள் அவள்.
‘தொம் தொம்’ என்று அதைத் தொடர்ந்து அவள் முதுகிலே அடி உரத்து விழுந்தது.
உள்ளுக்குப் படுத்திருந்த சின்னாச்சி , “ஐயோ ஏனப்பா அவளைப் போட்டுக் கொல்லுகிறாய்” என்று ஈனஸ்வரத்தில் முனகினாள்.
“சனியன்கள்…பிசாசுகள்…!”
“நீ எங்கேயடா போட்டு வாறாய்”
சின்னவனுக்கு வார்த்தை வரவில்லை. நடுக்கத் திலேயே பாதிச்சொற்கள் செத்துவிட்டன.
“அக்கா…பெரியம்மா…வீட்டை..ஆ!”
“மூதேவி…இரவு இரவாய் வீட்டுக்கு வீடு…சுத்து றாயோ…விளக்கு வைச்சு இவ்வளவு நேரம்…படிச்சி யாடா..இதுதான் உன்றைப் படிப்போ…டேய் இப்படித்தான் படிச்சுக் கொட்டப் போறியோ…”
சின்னவனுடைய பிஞ்சு முதுகு சிவந்து கொண்டிருந்தது .
“அப்பு …என்ரை அப்பு. என்ரை அப்பு ஆணை அடியாதே …ஐயோ .. நோகுது. அப்பு…ஆணை அடியாதே…ஐயோ..நோகுது. அப்பு….என்றை அப்பு எல்லோ…அப்பு…உன்றை வேட்டி தோச்சு போட்ட னான் அப்பு. உன்ரை வேட்டி தோச்சுப்போட்டனான் அப்பு…”
அவன் இவ்வளவு நேரமும் கையிலே மறைத்து வைத்திருந்ததைக் கீழே தொப்பென்று போட்டு விட்டான்.
பெரியம்மா வீட்டிலே அப்புவுக்கு வாங்கி வந்த மீன்கறி மண்ணோடு கலந்து கொண்டிருந்தது.
3
உள்ளேயிருந்து பெரிய விக்கலும் சின்ன விக்கலு மாக மாறி மாறி வந்து கொண்டிருந்தது. வெளித் திண்ணையில் வியர்வையைத் துடைத்தபடி இருந்த கந்தப்புவுக்கு ஒவ்வொரு விக்கலும் ஈட்டி முனையைப் போல் குத்தியது. உள்ளத்தில் பொங்கிய வேதனை பசியின் வேதனையைக்கூட மறக்கடித்து விட்டது.
சந்திரன் ஏறிக்கொண்டே வந்தான். “மோனை கொப்புவைக் கூப்பிட்டு ஏதாலும் குடன்” சின்னாச்சி சிரமத்துடன் முனகினாள். உள்ளே பேச்சு மூச்சில்லை.
“எல்லோரும் வர்மம் சாதிச்சால் ஆர் ஆரைக் கேக்கிறது…உங்களைத்தான் … போய்ச் சாப்பிட்டிட்டு விடுங்கோவன்…அவளும் சாப்பிடாமல் கிடக்கிறாள்..”
கந்தப்பு போய்ப் பலகையை இழுத்துப் போட்டுக் குந்தினார்..பேச்சு மூச்சில்லாமல் சட்டியைக் கழுவிக் கொண்டு வந்து அவர் முன்னே வைத்தாள் பூரணம். அடியிலே ஒட்டிக் கொண்டிருந்த மயிரை எடுத்து அவளுக்குத் தெரியாமல் வெளியே வீசினார் கந்தப்பு.
இன்னொரு நாளாயிருந்தால் எத்தனை அடி விழுந் திருக்குமோ…
சோறு நல்ல கணக்காய்ச் சுட்டுக் கொண் டிருந்தது. ”இதுக்கு மாத்திரம் அந்த மீன் குழம்பு இருந்தால் ….” கந்தப்புவுக்கு மனதைப் பிழிந்தது. பூரணம் உடனுக்குடன் அரைத்த மாங்காய்ச் சம்பலுடன் சோற்றைப் பிடித்துச் சாப்பிட்டார்; வாய்க்கு இதமாயிருந்தது … பானையிலே சோறு இருக்கிறதா’ என்று கேட்க விருப்பமாய்த்தானிருந்தது. ஆனால், பூரணத்தின் முகத்தை நிமிர்ந்து பார்க்கும் அளவுக்கு தைரியம் பிறக்கவில்லை.
வாயைக் கொப்பளித்து நாலு மிடறு தண்ணீரும் குடித்துவிட்டுச் சுருட்டைப் பற்ற வைத்துக் கொண்டு காற்று வாங்க வெளியே போனார். பனைமட்டை வரித் துப்பிடித்த அந்தக் குசனியில், மண்ணெண்ணெய் விளக்கின் மங்கிய ஒளியில் அவள் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
கந்தப்புக்கு பகீரென்றது. பகல் சாப்பிட்டாளோ என்பது கூடச் சந்தேகம் தான். அவள் மறுபடியும் சின்னவன் மத்தியானம் பள்ளியிலிருந்து வாங்கிவந்த பாண் துண்டைத்தான் கண்ணீருடன் மென்று கொண்டிருந்தாள்.
அன்று இரண்டாவது முறையாகக் கந்தப்புவின் கண்களில் நீர் துளித்தது.
4
வெளிக் குந்தில் பாயைக் கொண்டு வந்து போட்ட பூரணம் விர்ரென்று உள்ளே போனாள். அந்த மௌனமே கந்தப்புவைத் தின்றுவிடும் போல இருந்தது. அவர் வாய்விட்டுக் கேட்பதற்கு முன் பாகவே பூரணம் செம்பும் தண்ணீரும் கொண்டுவந்து குந்தின் ஓரமாக வைத்தாள்.
சின்னவன் வாசல் திண்ணையிலே குப்புற படுத் தவன் அப்படியே அழுத கண்ணீர் கன்னத்தில் காய்ந்த படியே நித்திரையாய்க் கிடந்தான். அவனைத் தூக்கிப் பாயிலே கிடத்தினாள் பூரணம். கையோடு படலையை யும் கட்டிவிட்டு வந்து கை விளக்கைத் தூக்கி மாடா விலே வைத்தாள். அப்படி வைத்தபோது எதற்காகவோ கந்தப்பு இருந்த பக்கமாகத் திரும்பி பரிதாபத்துடன் பார்த்தாள். ‘அப்பு படுக்கிறன்’ என்ற அர்த்தம் அதில் தொனித்தது.
நாலைந்து முறை கதைக்க உன்னிய கந்தப்பு கதைக்க முடியாமல் தவித்தார். கொடியிலே சீலையொன் றும் காயப்போட்டு இல்லை. இருந்தாலும் ‘கொடியிலே போட்ட சீலையை எடுத்து உள்ளுக்கு வை மேனை’ என்று கூறுவமா? எதற்கும் நாளைக்கு விடியட்டும் – மனதைத் தேற்றிக்கொண்டார்.
பாயைப் பின்பக்கம் விரித்தாரோ என்னவோ முது கெல்லாம் குத்தியது. அது போதாதென்று தேக மெங் கும் புழுங்கி அவிந்தது. இடையிடையே , வீசிய காற்று தாராளமாய்ப் புழுதியை அள்ளி இறைத்தது. மண் ணெல்லாம் தேகத்தில் ஒட்டிக்கொண்டு பிசுபிசு வென்றது.
இந்தப் ‘பிசு பிசு’ நினைவு நல்லூரில் பிரதட்டை பண்ணியதைத்தான் ஞாகப்படுத்தியது.
“சின்னவனுக்காக எத்தனை நேர்த்திக் கடன் செய் திருப்பன்… பாவம் பிசாசு போல கண்மண் தெரியாமல் நொருக்கிப்பொட்டனே … அந்தப் பிஞ்சு முதுகிலே கை விரல் அவ்வளவும் … போய் அவனைத் தடவி… விட் டால் . பாவம்… வெறும் மேலுடன் …. அந்தப் பொத் தான் பூட்டாத கால் சட்டையுடன் அவன் வாசலில் கிடந்த விதம்….”
பெரியதொரு பெருமூச்சு பீறிக் கொண்டு புறப் பட்டது. அன்று விடியத் தமக்கையிடம் தன்னுடைய ஊத்தை படிந்த ஒரே சேட்டைத் தூக்கிவைத்து
“அக்கா உள் வளமோ, பிறவளமோ?” என்று கேட்டது ஞாபகத்திற்கு வந்தது.
அடுத்த கணக்குத் தீர்வையுடன் ஒரு சேட் அவனுக்குத் தைக்க வேணும்.
குந்தில் மேல் சப்பணம் கட்டியிருந்து உள்ளே எட்டிப் பார்த்தார். பூரணத்தின் கால்கள் வாசலையும் தாண்டி வெளியே நீட்டிக் கொண்டிருந்தன. அவளை ஒரு நல்ல இடத்திலே கட்டிக் கொடுத்தால் தான் மனசு கொஞ்சம் ஆறும்…பிறந்த நாளிலே இருந்து என்னாலை அவளுக்கு என்ன சுகம்…மாடாவிளக் கின் ஒளியில் அவள் நித்திரை கொள்ளும் போது அவளுடைய முகம் எப்படி இருக்கும் என சிந்தித்துக் கொண்டிருந்தது அவர் மனம்.
“சின்னவன் மாத்திரம் ஒரு எட்டாவது பாஸ் பண்ணினான் எண்டால் கனகுவைப் போல சங்கக் கடையிலையாவது சேர்த்து விடலாம்..”
பூரணம் புரண்டு படுக்கும் சப்தம்.
என்ன மாதிரி அந்த மெலிஞ்சு போன இடையிலே இடிச் சன் பாவி!…நாரி முறிஞ்சிருக்குமோ என்னவோ….குமர் எண்டும் பாராமல் …எவ்வளவு வேலையென்று ஒரு நாளைக்கு பார்க்கிறாள். காலமை வெள்ளன எழும்பி இரண்டு வாளி தண்ணி சுடவைச்சுக் குடுப்பம்…குளிச்சால் தேக நோவு கொஞ் சம் குறையும்.
காற்று மறுபடியும் புழுதியை அள்ளி இறைத் தது.
ஒருவாளி தண்ணி அள்ளித் தெளித்தால்….
இந்த எண்ணத்துடனேயே கந்தப்பு நித்திரை யாகி விட்டார்.
***
“அப்பு”
திடுக்கிட்டு விழித்தார் கந்தப்பு. அந்தத் தீனமான குரல்! யார் கூப்பிட்டது? சின்னவனா? அந்தக் குரலின் உருக்கம் கந்தப்புவை என்னவோ செய்தது; கந்தப்பு இறந்து போய்க் கிடப்பது போலவும், சின்ன வன் கதறுவது போலவும் ஒரு காட்சி. அடுத்து – தனி ரோட்டிலே தோளிலே ஒரு துண்டைப் போட்டுக் கொண்டு சின்னவன் விறு விறுக்கென்று நடக்கிறான் – சுருட்டுவதற்குத்தான்.
எங்கோ நாய் ஒன்று ஊளையிட்டது.
நாய் ஊளையிட்டால் யமன் வருவானாமே ! தேகம் நடுங்கியது. இருட்டைத் துழாவினார். அந்த வளைந்த மாங்கொப்பின் அடியில் நிழல் தட்டி மறைந்தது.
மேலே சந்திர ஒளியில் திட்டுத் திட்டாகத் தெரிந்த மாங்கொப்பு காற்றிலே மெதுவாக அசைந்து கொடுத் தது.
அது அவரை ‘வா வா’ என்றது. நான்…நான் செத்துப் போனால் சின்னவன்…பூரணத்தின் கதி…
அன்று மீதி இரவு அவர் உறங்கவே இல்லை; அந்த மாங்கொப்பையே இமை கொட்டாமல் பார்த்தபடி கிடந்தார்.
அது அவரை அன்புடன் ‘வா வா’ என்று அழைத் துக் கொண்டிருந்தது போலப் பட்டது.
– 1959-61
– அக்கா (சிறுகதைகள் தொகுப்பு), முதற் பதிப்பு: டிசம்பர் 1964, பாரி நிலையம், சென்னை.
– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை.