அப்பாவின் உடல்நிலை கவலைக்கிடமாகி விட்டது..
“இதோ பாரப்பா ரவி, அப்பா நிலைமை நாளுக்கு நாள் மோசமாயிண்டு போறதைப் பார்த்தா, அவர் முடிவு எந்த நிமிஷமும் வரலாம்னு தோணுது. அதனாலே நீ மேற் கொண்டு நடக்க வேண்டியதற்கு எப்பவும் தயாரா இருக்கிறது தான் உசிதம்” என்று சொல்லி டாக்டர் சிவசாமி கைவிரித்து விட்டார்.
அப்பாவுக்கு இப்படியா ? மனதால் நினைத்துப் பார்க்கக்கூட அவனுக்கு
கஷ்டமாயிருந்தது.
அப்பா ஒரு ஆசாரசீலர். திருமணமான சில வருஷங்களிலேயே மனைவியை
இழந்தவர். ஆன்மீகத்திலும், பக்திமார்க்கத்திலும் முழு ஈடுபாடு கொண்டவர். சாஸ்திர சம்பிரதாயங்களைத் தீவிரமாகப் பின்பற்றுபவர்.
ஒவ்வொரு மகனும் தன் தந்தையின் அந்திமக்கிரியைகளை தன் முக்கிய கடமையாக நினைத்து சிரத்தையோடு செய்துமுடிப்பதில் அக்கறை செலுத்த வேண்டும் என்று ஆணித்தரமாக வலியுறுத்திப் பேசுவார். இறந்தவரின் ஆன்மா சாந்தியடைய இதுவே அனைவரும் பின்பற்ற வேண்டிய வழி என்று அடிக்கடி அவர் சொல்வதும் அவன் நினைவிற்கு வந்தது.
ஆனால், வயது நாற்பதை எட்டியிருந்தும், இறந்தவர்களுக்காகச் செய்யப்படும்
வைதிகச்சடங்குகள் பற்றி ரவிக்கு எதுவுமே தெரியாது. அத்தனை விஷயங்களையும் இப்போது உடனடியாகத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால், அவனுக்குத் துணையாக நின்று உதவக்கூடிய சொந்தக்காரர்களோ நண்பர்களோ கிடையாது,
குடும்பப் புரோகிதர் ஊரில் இல்லாததால் அவரின் மனைவி மாம்பலம் மாமியிடம் விரைந்து சென்று விஷயத்தைச் சொன்னான். அவர்களுக்கு சற்று தெரிந்தும் தெரியாமலும் இருந்தாலும் தெரிந்ததை சொல்லிக் கொடுத்தார்கள்.
அவர்கள் சொல்லச் சொல்ல அவன் நோட்புக்கில் எழுதிக்கொண்டு புறப்பட்டான்.
அன்று இரவு முழுவதும் மருத்துவமனையிலே கவலை தோய்ந்த முகத்துடன்
கண்விழித்துக் கொண்டு அப்பாவைக் கவனித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.
அடுத்த நாள் தலைக்கு மேல் முக்கியமான வேலைகளைப் பற்றி யோசிக்கலானான்.
டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்துகளை வாங்கி அப்பாவுக்குத் தர வேண்டும்.
சொசைட்டியில் லோனுக்கு அப்ளை செய்யவேண்டும். பாங்கிலிருந்து பணம் டிரா செய்து ரெடியாக வைத்துக் கொள்ள வேண்டும். கொளுத்தும் கத்தரி வெயிலில் அலைந்து திரிந்து இதையெல்லாம் முடிக்க வேண்டும். ஆபீஸில் ஆடிட் வேறு ஆரம்பம், அவன்தான் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லியாக வேண்டும்.
அடுத்த நாள் மதியம் ரவி வீட்டில் டெலிபோன் அலறியது. அது கொண்டு வந்த
செய்தி வீட்டில் எல்லோர் தலையிலும் இடியாய் இறங்கியது…
சற்று முன் ரவி ஆபீஸில் ஹார்ட் அட்டாக்கால் இறந்து விட்டதாகவும் அவர் உடலை வீட்டுக்கு கொண்டு வந்து கொண்டிருப்பதாகவும் ஆபீஸ் அதிகாரி வருத்தத்துடன் தெரிவித்தார். காலேஜில் படிக்கும் அவன் மகன் குமார் இதைக்கேட்டு அதிர்ந்து போனான். அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் இருக்க தற்செயலாக அவன் பார்வை கருப்பு அட்டை போட்ட அந்த நோட்புத்தகத்தில விழுந்தது.
அப்பா தன் விதி முடியப்போவதை எதிர்பார்த்து செய்யவேண்டிய காரியங்களை
முன்யோசனையுடன் துல்லியமாகக் குறித்து வைத்திருப்பது எப்படி என்றுதான்
அவனுக்குப் புரியவேயில்லை.