அழகான மண்குதிரை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 8, 2015
பார்வையிட்டோர்: 8,613 
 
 

நந்தினி கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டாள். ஆயிற்று. இன்னும் கால்மணிக்குள் அவள் இறங்குமிடம் வந்துவிடும்.

அவள்மட்டும் தனியாகப் போய் நின்றால், அம்மா என்ன சொல்வாள்?

அவர்தான் ஆகட்டும், தலைதீபாவளியும் அதுவுமாய், இப்படியா தன்னை விட்டுக்கொடுப்பது! ஒரு மரியாதைக்காவது..

‘நீ கணவருக்கு மரியாதை கொடுத்தது என்ன தட்டுக்கெட்டுப் போயிற்று, அவரிடம் அதை எதிர்பார்க்க?’ அந்தராத்மா இடித்துரைத்தது.

பழகின தெருக்களிடையே பஸ் நுழைந்து சென்றபோது, இனம்புரியாத மகிழ்ச்சி தோன்றியது. இன்னும் ஐந்து நிமிடம்தான். கண் அனிச்சையாகக் கடிகாரத்தில் பதிய, அடிவாயில் கசந்தது.

‘முதலில் இந்தக் கடிகாரத்தைத் தொலைத்துத் தலைமுழுக வேண்டும்!’

அந்த பாழாய்ப்போனவன் கொடுத்த பல பரிசுகளுள் ஒன்று அது. பாவி, புகழ்ச்சியையும், பரிசுப் பொருட்களையும்கொண்டு, எந்தப் பெண்ணையும் வீழ்த்திவிடலாம் என்று நன்கு உணர்ந்தவன்.

“உன் அழகுக்கு அழகு சாதனங்களே வேண்டாம். இருந்தாலும், கடையிலே இதைப் பாக்கறப்போ, ஒனக்குக் குடுக்கணும்னு தோணிச்சு!” அரைகுறை மலாயில் சொல்லிவிட்டு, லிப்ஸ்டிக், முத்துபதித்த வளையல் இப்படி ஏதாவது கொடுப்பான் அவன்.

இவ்வளவு அன்பானவர் இப்படி, பங்களா தேஷிலிருந்து நாடு விட்டு நாடு வந்து, இரவு பகலெனப் பாராது உழைக்கிறாரே என்று நந்தினிக்குப் பச்சாதாபம் மேலிடும்.

‘இவருடைய அழகுக்குச் சினிமா நடிகராகி இருக்கவேண்டும். எல்லாப் பெண்களும் இவருடைய காலடியில் கிடக்க மாட்டார்களா!’ தன் எண்ணத்தை அவனிடம் தெரிவித்தாள், ஒரு முறை.

வாய்விட்டுச் சிரித்தான் அவன். “அந்தப் பேராசை எல்லாம் எனக்குக் கிடையாது நந்தா. ஒன்னைமாதிரி அழகான ஒரே பொண்ணோட அன்புதான் எனக்குப் பெரிசு. சில சமயம் நினைச்சுப்பேன், ஒன்னைச் சந்திக்கணும் என்கிறதுக்காகவே பிழைப்பைத் தேடற சாக்கில இப்படி வேற நாட்டுக்கு விதி நம்மை அனுப்பி இருக்குன்னு!”

நந்தினிக்குப் பெருமையாக இருந்தது. தனக்கு எந்தக் காலத்திலும், எவரும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து நடத்தியது கிடையாது என்று பட்டது அவளுக்கு. அவள் சின்னப் பெண்ணாக இருந்தபோது, அப்பாதான் ஓயாது அவளது அழகைப் புகழ்ந்துகொண்டு இருப்பார். அதனால் உண்டான கர்வத்தில் அவளுக்குப் படிப்பில் சுவாரசியம் இல்லாது போயிற்று. பிற பெண்களிடமும் அலட்சியம்.

அப்பா அகாலமாகப் போனபோதும் அவர் அறியாமல் விதைத்த விஷக்கன்று வாடவில்லை. ‘நான் அழகி!’ என்று தலைநிமிர்ந்து நடப்பாள். பார்ப்பவர்கள் எல்லோருமே சொல்லிவைத்தாற்போல் ஒரு முறைக்கு இரு முறை திரும்பித் திரும்பிப் பார்த்தது நந்தினி தன்னைப்பற்றிக் கொண்டிருந்த கணிப்பை ருசுப்படுத்தியது போலிருந்தது.

யாருடனும் ஒத்துப்போகாமல், என்னமோ மகாராணியாகத் தன்னைப் பாவித்து நடந்துகொள்ளும் மகளின் போக்கு அவளுடைய தாய்க்குக் கவலையை ஊட்டியது. அப்பா இல்லாத பெண் என்று அருமையாகவேறு வளர்த்துவிட்டோமே! இவளுடன் யாரால் ஒத்துப்போக முடியும்?

பலவாறாக யோசித்தவள், “ஒனக்கும், கோபாலுக்கும் சீக்கிரமே கல்யாணத்தை முடிச்சுடணும்னு அத்தை ஆசைப்படறாங்க, நந்தினி. ஒனக்கும் வர்ற பத்தாவது மாசம் பதினேழு முடியப்போகுது,” என்று மெள்ள ஆரம்பித்தாள்.

நந்தினி சிரித்தாள் — சினிமாவில் வில்லன் சிரிப்பானே, அந்தமாதிரி.

“என்னடி?” என்றாள் அம்மா, அதிர்ந்துபோய்.

“பின்னே என்னம்மா? ஆசைக்கும் ஒரு அளவு வேணும். எவ்வளவு சுயநலம் இருந்தா, அந்தக் கறுப்பனை என் தலையில கட்டலாம்னு யோசிச்சிருப்பாங்க அவங்க!”

தாயின் முகம் வாடியது. “அப்படியெல்லாம் தூக்கி எறிஞ்சு பேசாதே, நந்தினி. அப்பா இருக்கிறபோதே சொல்லிட்டு இருந்ததுதானே! ஒறவும் விட்டுப் போகாது, அப்புறம்… கோபாலும் தங்கமான பிள்ளை!”

நந்தினி மீண்டும் சிரித்தாள், இளக்காரமாக. “ஏதோ, நிறம்தான் தங்கம் மாதிரி இல்ல. குணமாவது தங்கமா இருந்தா சரி!”

“ஆனாலும் ஒனக்கு இவ்வளவு மண்டைக்கனம் கூடாது!” அம்மாவின் அதட்டல் அவளைப் பாதிக்கவில்லை.

“அம்மா! நான் எனக்குப் பிடிச்சவரா, அழகானவரா ஒருத்தரோட பழகிப் பாத்துட்டு, அப்புறமாத்தான் பண்ணிப்பேன். என்னோடது காதல் கல்யாணமாத்தான் இருக்கும். ஒருத்தரோட சேர்ந்து வெளியே போனா, பெருமையா இருக்க வேணாம்?”என்று இரைந்தாள்.

அவளையும் அறியாது, அத்தான் கோபாலையும், அவளுடைய தொழிற்சாலையில் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்கும் கிரனையும் ஒப்பிட்டுப் பார்த்தது அவள் மனம். அந்தக் கிரனுடன் இணைந்து நடந்தால் எப்படி இருக்கும்! ஏக்கப் பெருமூச்சு விட்டாள்.

“ஓயாம வீடியோ பாத்தா இப்படித்தான்! காதல், கீதலுன்னு பினாத்திக்கிட்டு, கண்டவனை இழுத்துக்கிட்டு வராதே,” என்று அலுத்துக்கொள்ளத்தான் முடிந்தது பெற்றவளால்.

அதன்பின், தற்செயலாகச் சந்திப்பதுபோல், கிரனைக் கேண்டீனிலும், மாடிப்படிகளிலும் பார்த்துப் பேச முற்பட்டாள் நந்தினி. அவனிடம் மணி கேட்டாள். அவனுடைய மலாயைப் பாராட்டினாள். அவள் எதிர்பார்த்தபடியே, அவனது கவனம் அவள்பால் திரும்பியது. முதலில் சற்றுப் பயந்தவனைப்போல் இருந்தவன், சிரிக்கச் சிரிக்கப் பேசினான்.

பல நூறு பெண்கள் வேலைபார்க்கையில், அவர்களை ஒரு பொருட்டாகக்கூட மதியாது, தன்னை நாடுகிறார் இந்த அழகர் என்ற நினைப்பில், நந்தினியின் தலை மேலும் அண்ணாந்தது.

அவனுடன் கைகோர்த்துக்கொண்டு சினிமாவுக்குப் போனாள். கதாநாயகியாகவே தன்னைப் பாவித்துக்கொண்டு, அவனது பரந்த தோளில் சாய்ந்தபடி நடந்தாள். சிறுசிறு பரிசுகளால் அவனை மேலும் திணற அடித்தான் அவன்.

“ஒனக்கு என்னென்னமோ குடுக்கணும்னு ஆசை அடிச்சிக்குது. ஆனா, நான் ஏழை. இருந்தாலும், ‘ஓவர்டைம்’ பண்ணி வந்த காசில ஆசை ஆசையா இதை வாங்கிட்டு வந்தேன்!” என்று வசனம் பேசியபடி, ஒரு நாள் அந்தக் கடிகாரத்தை அவன் அவளுக்கு அணிவித்தபோது, என்னமோ அவன் கையால் தாலியே கட்டிக்கொண்டதுபோல் பூரித்துப்போனாள் நந்தினி. தனக்காகவே தூக்கம் முழித்து, உடலை வருத்தி வேலை பார்த்திருக்கிறார்! இந்த அன்புக்கு ஈடாக என்ன வேண்டுமானாலும் கொடுக்கலாமே என்று நெகிழ்ந்துபோனாள்.

காய் கனிந்ததைப் புரிந்து கொண்டவனாக, “ரெண்டு நாள் நாம்ப ரெண்டு பேரும் இப்படியே ஜாலியா, எங்கேயாவது வெளியூர் போயிட்டு வரலாமா, டார்லிங்?” என்று கொஞ்சினான். அவள் யோசிப்பதற்கே இடம் கொடாது, இறுக அணைத்தபடி நடந்தபோது, நந்தினி இவ்வுலகில் இல்லை.

கிரனின் மடியில் உட்காராத குறையாகச் சாய்ந்தபடி அவள் அயலூர் போகும் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தபோதுதான் அது நடந்தது.

எங்கிருந்தோ வந்தான் கோபால். நேரே கிரனுக்கருகில் வந்தவன், யோசியாமல் அவனது இரு கன்னங்களிலும் மாறி மாறி அறைந்தான். எதுவும் பேசாது, நந்தினியின் கையைப் பிடித்து இழுத்தபடி நடந்தான்.

தன்னை மீட்கக் காதலர் ஓடி வருவார் என்று எதிர்பார்த்த நந்தினிக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

வீட்டுக்குள் நுழைந்ததுமே, “நீ இன்னும் மைனர். அதனால அந்த ரௌடியைப் போலீசில பிடிச்சுக் குடுக்க என்னால முடியும். ஆனா, ஒனக்கும் சேர்த்துத்தான் கெட்ட பேரு வரும். அதான் அவனை விடறேன்,” என்று அதட்டியவன், “இனிமே நீ வேலைக்குப் போக வேணாம். ஒழுங்கா, வீட்டில இரு!” என்றான் கண்டிப்புடன்.

“அதைச் சொல்ல நீ யாரு?” என்று சீறினாள் நந்தினி.

அவன் எதுவும் பேசவில்லை. அதுவரை பேசியதே அதிகம் என்று நினைத்தவன்போல, வெளியே நடந்தான்.

உள்ளேயிருந்து வந்த அம்மாதான் அவளுடைய கேள்விக்குப் பதிலளித்தாள். “மரியாதையாப் பேசுடி. ஒன் குணம் தெரிஞ்சும், பெரிய மனசோட, ஒன்னைக் கட்டிக்க ‘சரி’ன்னிருக்கான் கோபால்!”

“அம்மா!” குரலில் அதிர்ச்சியைவிட அதட்டலே அதிகமிருந்தது.

“இன்னும் நாலு நாளில கல்யாணம், கோயிலிலே வெச்சு. கண்ட பயலோட நீ… ஒன்னை இப்படியே விட்டா, நான் விஷத்தைத்தான் தேடிப் போகணும்!”

“நான் கிரனைத்தான் கட்டிப்பேன்!”

“புரியாம உளறாதே நந்தினி. அவன் வெளிநாட்டுக்காரன். காண்டிராக்டிலே வந்திருக்கிறவன். அப்படியே பேருக்கு ஒன்னைக் கட்டிக்கிட்டாலும், கையில புள்ளையைக் குடுத்தப்புறம், ஒன்னை ‘அம்போ’ன்னு விட்டுட்டுத் திரும்பப் போயிடுவான். ஒன்னையுமா கூட்டிட்டுப் போவான்? அங்கே அவனே சோத்துக்கு வழி இல்லாமதானே இங்க வந்திருக்கான்! ”

“எனக்காக அவர் இங்கேயே இருப்பாரு!” என்றவளின் சுருதி இறங்கிப் போயிருந்தது.

“அடம் பிடிக்காதே, நந்தினி. ஒன்னை அழ வைக்கணும்னு எனக்குமட்டும் ஆசையா? இந்த நாட்டு ஆம்பளையைக் கட்டிக்கற பொண்ணு அயல்நாடா இருந்தா, அவ இங்கேயே தங்கலாம். ஆனா, நீ ஒருத்தனைக் கட்டிக்கிட்டா, அவனால அது முடியாது. அவன் திரும்பிப் போய்த்தான் ஆகணும்”.

உண்மை பயங்கரமாக இருந்தது. சொற்ப வருடங்களே கிரனுடன் வாழ்ந்துவிட்டு, பின் அவனுடைய குழந்தைகளுடன் திண்டாடிக்கொண்டு, வாழாவெட்டியாக, எல்லாருடைய இளக்காரத்துக்கும் ஆளாக வேண்டுமா அவள்?

ஆயினும், கிரன் இல்லாத வாழ்வை நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத நிலையில், அழுகை பீறிட்டது. அவருக்கு மட்டும் இதெல்லாம் முன்பே தெரியாமல் இருந்திருக்குமா? பின் ஏன் தன்னிடம் இவ்வளவுதூரம் பழகி, தன்னைப் பைத்தியமாக அடிக்கவேண்டும்?

அடுத்த சில தினங்கள் அறைக்குள்ளேயே அடைந்துகிடந்து, ஓயாது அழுதாள். இடையிடையே யோசித்தாள். அம்மா அவளுடைய நல்லதுக்குத்தான் சொல்கிறார்கள் என்று விளங்கியது.

மண் குதிரை அழகாக இருக்கலாம். அதற்காக, அதை நம்பி ஆற்றில் இறங்குவார்களா யாராவது?

வெறும் அழகுக்காகத் தன்னைப் பலியிட்டுக்கொள்வது அபாயகரமானது, அறிவீனம் என்ற முடிவுக்கு வந்தாள். அந்த முடிவில் மகிழ்ச்சியோ, எதிர்பார்ப்போ இல்லை.

பலியாடுபோல் திருமணப் பந்தலிலே கோபாலினருகே உட்கார்ந்திருந்தாள் நந்தினி. கடைசியில், தனக்குக் கொடுத்துவைத்தது இந்தக் கறுப்பருடன் சேர்ந்த வாழ்வுதான் என்ற எண்ணம் உறைக்கையில், துக்கம் பொங்கியது.

அன்றிரவு.

“நீ என்னென்னமோ நினைச்சு கனவு கண்டிருப்பே! என்னால எல்லாம் பாழாயிடுச்சு, இல்ல?” என்ற புதுக்கணவனின் தொனி குத்தலா அல்லது கரிசனமா என்று அவளுக்குப் புரியவில்லை. இருந்தாலும், கோபால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவர்களது தனியறையைவிட்டு வெளியேறி, சோபாவில் படுத்துக்கொண்டபோது, நந்தினிக்கு அவன் நாலு வார்த்தை அதட்டியிருந்தால் தேவலை என்று தோன்றியது.

கோபாலைப் பொறுத்தவரை, குற்றம் சொல்லமுடியாதபடி நடந்துகொண்டான். அவள் கேட்குமுன், வீட்டுக்குத் தேவையான சாமான்களை வாங்கிப்போட்டான். அதே சமயம், அவள் ஒருத்தி இருப்பதைக்கூட பொருட்படுத்தாதவனாக நடந்துகொண்டான்.

இப்படி ஒரு உம்மணாமூஞ்சியுடன் வாழ்நாள் பூராவும் எப்படித்தான் தள்ளப்போகிறோமோ என்ற பீதி நந்தினியைப் பிடித்துக்கொண்டது. மௌனம் சாதித்தே தன்னைக் கொல்வதற்குக் கல்யாணமே செய்து கொண்டிருக்க வேண்டாமே என்று ஆத்திரப்பட்டாள். ஆனால், வாய்விட்டு கணவனை எதுவும் கேட்கவும் அவளுடைய சுயகௌரவம் இடங்கொடுக்கவில்லை.

நந்தினிக்கு அவள் தாயிடமிருந்து அழைப்பு வந்திருந்தது.

“தீபாவளிக்கு இன்னும் நாலு நாள்தான் இருக்கு…,” என்று இழுத்தவளைப் பாராமலேயே, “நாளைக் காலையில தயாரா இரு. பஸ்ஸிலே ஏத்தி விடறேன்!” என்று விறைப்பாகப் பதிலளித்தான் கோபால்.

‘ஒங்களையும்தான் அழைச்சிருக்காங்க!’ என்று சொல்லவந்ததை அடக்கிக்கொண்டாள்.

அவர்களுக்குத் தலைதீபாவளி. இதுகூடவா தெரியாது அவனுக்கு?

“என்ன நந்தினி? இளைச்சு, கறுத்துப் போயிட்டியே! ஏதேனும் ‘விசேஷமா’?” பக்கத்து வீட்டு சரசா கண்ணைச் சிமிட்டியபடி கேட்டபோது, நந்தினிக்கு வாய்விட்டு அழவேண்டும்போல் இருந்தது.

இருவரும் ஒன்றாக வேலை பார்த்தவர்கள்தாம். அப்போதெல்லாம் சரசாவுடன் முகம்கொடுத்துக்கூடப் பேசமாட்டாள் நந்தினி, தன் அழகுக்கு சர்வசாதாரணமாக இருந்தவளுடன் என்ன பேச்சு என்று இறுமாந்திருந்தவளாக. ஆனால் அவளோ, அதையெல்லாம் மறந்துவிட்டு, தோழமையுடன் வந்து குசலம் விசாரிக்கிறாள்!

‘அழகோ, அழகில்லையோ, எல்லாரும் ஒரு நாள் வளர்ந்து ஆளாகத்தான் போறோம். கடைசியிலே பிடி சாம்பலாத்தான் போகப்போறோம்’. அவளுக்குப் புத்தி புகட்டவென்று அம்மா எப்போதோ சொன்னது காலங்கடந்து இப்போது புரிந்தது.

யார் தன் அழகை ரசித்துப் பெருமைப்பட வேண்டுமோ, அவரே தன் முகத்தைப் பார்க்கக்கூட வெறுத்து விலகுகிறார்! நந்தினிக்குக் கண்ணீர் ததும்பியது.

அதற்குத்தானே ஒரு காரணத்தைக் கற்பித்துக்கொண்ட தோழி, ” இன்னுமா அந்த வெளிநாட்டானை மறக்கலே, நீ? விட்டுத்தள்ளுவியா!” என்று சமாதானப்படுத்திவிட்டு, “நம்பகூட வேலை செய்தாளே, குண்டு சுசீலா, அவளை நீ போன கையோட செட்டப் செய்துட்டான்,” என்று தெரிவித்தாள்.

“யாரு?” தெரிந்தும் தெரியாதவள்போல் கேட்டாள் நந்தினி.

“எல்லாம் அந்தத் தடியன் கிரன்தான். நாங்க அவளுக்கு எவ்வளவோ புத்தி சொல்லிப்பாத்தோமே! ‘ஒங்களுக்குப் பொறாமை!’ன்னுட்டா. இப்ப வயத்திலே ஒண்ணு. அந்தப் பழிகாரன் அப்புறம் இங்க ஏன் இருக்கான்?”

சரசா விவரித்துக்கொண்டே போனபோது, தான் எப்படிப்பட்ட கண்டத்திலிருந்து தப்பினோம் என்று அதிர்ந்தாள் நந்தினி. அன்று அத்தான் மட்டும் அவனை அடித்து, தன்னை இழுத்துக்கொண்டு போயிருக்காவிட்டால், தானும் இப்படி… ஐயோ!

மற்றவள் தன்பாட்டில், “ஒன் கல்யாணத்திலே நாங்க எல்லாம் என்ன பேசிக்கிட்டோம், தெரியுமா? ‘சொந்தம்கிறதாலே இப்படிக் கொஞ்சம்கூட பொருத்தம் இல்லாதவருக்கு இவளைக் குடுக்கறாங்களே! இவ கலரென்ன, அவர்…” என்று சொல்லிக்கொண்டேபோனபோது, ஆத்திரத்துடன் இடைமறித்து, “அட்டையைப் பாத்த உடனே, புஸ்தகத்தோட உள்ளே இருக்கிறது என்னன்னு தெரியுமா? வெளித்தோலைப் பாத்து ஆளை எடை போடக்கூடாது!” என்று கணவனுக்கு வக்காலத்து வாங்கினாள்.

அத்தான் தன்னை எப்பேற்பட்ட ஆபத்திலிருந்து காப்பாற்றி இருக்கிறார்! இது புரியாமல், அவர்மேல் ஆத்திரப்பட்டோமே! எவனுடனோ கையைக் கோர்த்துக்கொண்டு தான் சினிமா, கடைத்தெரு என்று சுற்றியதை அறியாதவரில்லை. அப்படி இருக்கையில், வேறு யார் தன்னை மணக்க முன்வந்திருப்பார்கள்?

இனியும் ஏன் வரட்டுக் கௌரவம் என்று ஏதோ இடித்துரைத்தது. உடனே அத்தானை போனில் கூப்பிடவேண்டும். ‘மாப்பிள்ளை வராம என்ன தலைதீபாவளி?’ன்னு அம்மா சத்தம் போடறாங்க. அடுத்த பஸ்ஸிலேயே வாங்க’என்று.

‘அம்மாதானே கூப்பிடறாங்க? நீ கூப்பிடலியே!’ என்று சீண்டுவாரோ? அந்தக் கற்பனையிலேயே நந்தினியின் இதழ்க்கடையில் புன்முறுவல் அரும்பியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *