கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 1, 2021
பார்வையிட்டோர்: 3,607 
 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நடுக் கோடையானாலும் பிற்பகலுக்குமேல் எலும்பு வரை ஒரு சிறு உள் நடுக்கம். சிவப்பு சால்வையைப் போர்த் திக்கொண்டு நாலு மணிக்கே வெய்யில் காய, கடற்கரைக்கு வந்தாகி விடணும். வீடு ரொம்ப கிட்ட. அந்த மட்டுக்கும் அவ்வளவு கிட்ட குடி பார்த்ததற்கு நடுப்பிள்ளை மகாராஜன்.

பையன்கள், பள்ளிக்கூடம் விட்டு, காலேஜ் விட்டு, ஆபீஸ்விட்டு ‘மாடினி” விட்டு, அவகாசமாய். சேர்ந்தும், தனித்தனியாயும் பின்னால் வருவான் கள். அனேகமாய் அழைத்துப்போகத் தான் வருவான்கள். படகருகே, வலைக் குவியல் மேல் சாய்ந்தபடி, தாத்தா உட்கார்ந்திருக்குமிடம் அவர்களுக்குத் தெரியும்.

அம்மாடி, வெய்யிலின் இதமே! கடலின் தகதகப்பு கண்ணைப் பறிக்கிறது. இப்பவே கண் மட்டுத்தான். ஆனாலும் அதோ அலை உருவாவது தெரிகிறது. வருவதே அலைபார்க்கத் தானே!

முதலில் கடலின் அடி வயிற்றிலிருந்து ஒரு விம்மல். உடனே அதற்கொரு சிகரம். அத்துடன் அது கரை நோக்கி உருண்டு புரண்டு விரையும் ஒரு திரளல், வருகையிலேயே கரையிலிருந்து மீளும் சிற்றலைகள் அத்துடன் விழைந்து திருகும் ஒரு குழையல், சிகரம் உடைந்து வெண் நுரை அலை மீது சரியும் இக்கல். சங்கதி ஏதோ சொல்ல வந்து, வாய் திறந்து வார்த்தை வராமல் இல்லை , ஒருவேளை அதன் பாஷையே அது தானோ என்னவோ – ஆத்திரத்துடன் கரை மீது மோதியதும் குடம் பால் சரிந்தாற்போல், கரைவரை நுரை – கரை தாண்டிக் கூடி பெரிதாய்ப் பரவி, பெரிதும், சிறிதும் பொடிந்தும் நுரைக் கொப்புளங்கள் தனித்தனி யாய். வெய்யிலை வாங்கிக்கொண்டதும், வர்ணங்கள் ஒவ்வொரு குமிழிலும் பிறந்து மிளிர்வது கண்கொள்ள வில்லை. இன்னும் அலுக்கவில்லை.

பொட்டலங்கள் போல் தலைமீது ஓலைப் பின்னல் குல்லாயும், அரையில் கோவணுமுமாய், கரிய உடல் நனைந்து, வெய்யிலில், எண்ணெய்க் காப்பிட்ட மூலவர்கள் போல் பளபளக்க செம்படவர்கள் கட்டுமரத்தை, சமயம் பார்த்து, பின் வாங்கும் அலைமுகட்டின் மேல் சவாரி தள்ளி தாங்களும் ஏறுகிறார்கள்.

அலைமீது ஒரு மரத்துண்டு மிதக்கின்றது. அலையோரம் பூமி , அலையின் கடைசல் பிடிப்பில் தேய்ந்து பளபளத்துப் பிம்பங்கள் தேய்ந்து தெரிகின்றன. தென்றலின் அலைப்பில் அலைத் திவலைகள் முகத்தில் விசிறுகின்றன. தலைமயிர். கலைந்து தும்பைக் குவியலாகிவிட்டது. இங்கு வந்தாலே மனத்தின் புத்துயிர்ப்பு உடல் முழுவதும் பரவி, விறு விறுப்பது தெரிகிறது.

“தாத்தா! என்னா சிர்க்கறே?”

“தாத்தா! என்னா தலையாட்டறே?”

கரையோரம் நண்டு பிடிக்கும், கிளிஞ்சல் பொறுக்கும், காசை வீசியெறிந்தால் அதை மீட்க , அதன் பின்னாலேயே அலையுள் பாயும் செம்படவச் சிறுவர் சிறுமியரின் நையாண்டி.

“தாத்தா அது என்னா தலை அப்படி லொட லொடன்னு ஆடுதே! களுத்துப் பூட்டு கயண்டுட்டுதா?”

“தாத்தா நீ பூம் பூம் மாடா?”

வந்த புதிதில் கடும் கோபம் தான் வந்தது. ஆனால் வைவதால், கைகொம்பைத் தூக்கிக்கொண்டு, அவர்களைத் துரத்திக் கொண்டு ஓடுவதால், அவர்கள் சீண்டலும் சிரிப்பும் இன்னும் மீறின. நிச்சயமாய் என் கையில் சிக்கமட்டார்கள் என்று எனக்குத் தெரிகிறது. போகப் போக இன்னொன்றும் தெரிகிறது. அவர்கள் தீங்கற்றவர்கள். நாளடைவில் அவர்கள் இளமையும் சிரிப்பும், சத்தமும் இயற்கையும் இளவெய்யில் போலவே எனக்கு வேண்டியிருக்கிறது.

“தாத்தா! நண்டு வேணுமா?”

“நெத்திலி வேணுமா?”

“கெண்டை ஓணுமா?”

ஒரு குட்டி மற்றவர்களைவிடத் துணிச்சல், கிட்ட வந்து நிற்கிறது, ஓடத் தயாராய் பாவாடைக் கொடுக் கைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு, விழிகள் கூத்தாடு கின்றன. ஏதோ முக்யமான ரகஸ்யத்தில் குரலை எல்லோருக்கும் கேட்க்கத் தாழ்த்தி, இமைகளைப் பூச்சி ரக்கைபோல் படபடத்துக் கொண்டு.

“தாத்தா! பெண்டாட்டி ஓணுமா?”

சிரிப்பு வெடித்து அவர்களிடையில் திகிறி சுற்றி என்னையும் தொத்திக்கொள்கிறது. தேவலை; இந்த அரைப்பட்டினியிலேயே இந்தத் துடுக்கு. கண்ணுக்கும் குறுகுறுப்பாய்த் தானிருக்கிறாள். வயதுக்கு நன்றாவே யிருப்பாள். ஆனால் வாய்தான் காதுவரை கிழியும். வாண்டு பாரேன் “பெண்டாட்டி வேணுமா” வாமே! சிக்காமு இப்போ இங்கிருந்தால் சும்மாயிருப்பாளா? வசை பாடியபடியே துரத்திக் கொண்டு ஓடுவாள்.

“சிறுக்கி நாக்கையறுக்க! ஏற்கெனவே பிராம்மண னுக்குச் சொல்லவேண்டாம்; நீ வேறே, ‘என்ன வரம் வேணு’ முனு கேக்கறையா?”

“ஐயோ பாட்டி, உனக்கு நாட்டுப் பெண்கள் வந் தாச்சு ; நாங்கள் பேரப்பிள்ளைகளும் வந்தாச்சு; இன்னும் தாத்தாவை இப்படிப் பேசாவிட்டால் தகாதா? உனக்கு. இந்த வயசில் தாத்தாவைப் பார்த்து அசிகையா என்ன?”

“ஏன், நான் தான் வெல்லப் பொதியாய் ஆயிட்டேன். அவர் இன்னும் யாருமே அசிகைப்படற மாதிரி தானே யிருக்கார்! ஏன் பேரப் பிள்ளைகள் நீங்களே பாருங்களேன், வரிச்ச கழிமாதிரி நெட்டையா , நெட்டியா அந்த உடலும் கத்தி மாதிரி மூக்கும்! இன்னும் அந்த முண்டா பனியன் தெரியணுமாம் அந்த மஸ்லின் ஜிப்பாவைப் பாரேன்! வயசுதான் ஆச்சே, பஞ்சக்கச்சம் வெச்சுக் கட்டிண்டால் பாந்தமாயிருக்காதா? ஜரிகைக்கரைவேஷ்டி தொங்கத் தொங்கப் பாதத்தை மூடி, தரையையும் தெருவையும் பெருக்கியாறது. மயிர் தான் பக்கெட் பக்கெட்டாய் காப்பி குடிச்சு, வெள்ளைக் கத்தாழையா நரைச்சுப் போச்சு. திண்ணையில் உட்காந்திண்டு வர வாளையும் போற வாளையும் பார்த்துப் தலை ஆட்டங் கண்டு போச்சு. இதுபோக உங்கள் தாத்தாவுக்கு என்னடாப்பா குறைச் சல்? காசுக்கு ஆசைப்பட்டானும் பெண்ணைக் கொடுக்க வரமட்டாளா? மனுஷனும் நான் இருக்கேனேன்னு பார்க்காட்டா, வந்த பெண்ணை வேண்டாம்னு சொல்லத் தயங்குவாரா?”

ஏலே சிக்காமு என்ன நீ என்னை பழித்தாலும், நீ மட்டும் உன் அலங்காரத்தில் மட்டோ? “எல்லாம் இருக்கிறவரைக்கும் தானே” என்று வழக்குப் பண்ணி உன் நாட்டுப் பெண்களுடன் போட்டி போட்டுக்கொண்டு. தீவளிக்குத் தீவளி பட்டுப் புடவை வாங்கிக் கட்டிக்கொண்டதில் குறைந்தாயோ?

“இருக்கிறவரை தின்னூட்டும் போறேன்”

“இருக்கிறவரை கட்டிக்கறேன்”

“இருக்கிறவரை பூட்டிக்கறேன்”

இது வயதானவர்களுக்கு நல்லதொரு ப்ரம்மாஸ்திரம் ஆனால் துருப் பிடிக்காமல், வயதிலிருந்தே உன்னைப் போல் உபயோகித்தவர் இல்லை.

“இருக்கிற வரைக்கும் தானே? திரும்பி வரேனோயில்லையோ?” என்று பிள்ளைப் பேறுக்குப் பிள்ளைப் பேறு பயமுறுத்திவிட்டு பிறந்தகத்துக்குக் கிளம்புவாய். கையில் குழந்தையை ஏந்திக்கொண்டு புத்தொளிர்வுடன் திரும்பி வருவாய் . வண்டியை விட்டிறங்கி, அம்மாவிடம் குழந்தையைக் கொடுத்து நமஸ்காரம் பண்ணி வாங்கிக் கொண்ட பின், என்னிடம் கொடுக்கையில், உன் முகத்தில் குழப்பம் வெட்கம், மகிழ்ச்சி, சிவப்பு. ஆயிரம் கேள்வி பதில்களுள், பாம்பு போல் நெளிந்து விளையாடும் சந்தேகம் ஒன்று என்னென்று எனக்குத் தெரியும். இருக்கிற வரைக்கும்” என்று உன் பாஷையில் நீ நட்ட வேலிக்குள், நீ வரும் வரை நான் இருந்தேனோ என்பது தானே!

“நான் இருக்கிற வரையில் என் கண்ணில் மண்ணைத் தூவாதேங்கோ . நான் கண்ணை மூடினப் புறம் என்ன அக்கிரமம் நடந்தாலும் எனக்கென்ன தெரியப் போறது?”

உன் வழக்கமான ப்ரலாபங்களில் இதுவும் ஒன்று.

உன் சந்தேகத்துக்கும் உனக்கு ஒரு பாஷைதான். ஒவ்வொன்றாய் இவ்வுலகத்துள் நீ கொண்டுவந்த உன் பிள்ளைகளுக்கு நீ இட்ட சட்டத்துக்கும் அதே பாஷை தான்.

“நான் இருக்கிறவரைக்கும் உங்களை யெல்லாம் ஒண் ணாவே பார்த்துண்டு இருத்துடறேன். நான் கண்ணை மூடினப்புறம் நீங்கள் எப்படிப் புட்டுண்டால் எனக்கென்ன தெரியப் போறது?”

சிக்காமுக்கு என்னவோ ஒன்றும் தெரியாதென்று தான் பெயர். ஆனால் ஒன்றுந் தெரியாதவர்களின் பாஷைதான் எல்லாம் தெரிந்த பாஷை. சந்தேகத்தில் தான் அன்பு நெறி மீறிடுகின்றது.

சிக்காமு , நீ போன பின் உன் பல்லவியால் நீ போட்ட கட்டும் விட்டுப் போச்சுடீ வேலையில் மாற்றிப் போன வன்கள் போக, மற்றவன்கள் ஒரு ஊரிலேயே மூலைக் கொருத்தனாய்க் குடித்தனம் பண்ணாறான்கள். வெளிச்ச மாய்ச் சொல்லாமலே என்னை ஆளுக்கு நாலு மாத மாய்ப் பங்கு போட்டுக் கொண்டிருக்கிறான்கள். அவர் களைச் குற்றம் சொல்வதிலும் பேச்சில்லை. உண்ணும் அரிசியை எண்ணி வடிக்கும் இந்த நாளில் ஒரே இடத்தில் ஊன்றிவிட முடியுமா? எல்லோரும் எனக்கு வேண்டிய வர்கள் தான். எல்லோரும் நான் பெற்ற பிள்ளைகள் தான். எல்லோரும் என்மேல் பிரியமாய்த்தானிருக்கிறான் கள். ஆனால் நாளைக்கு நான் தாம்பரம் கிளம்பப் போகிறேன். நாலுமாதம் அப்புவிடம் அங்கிருந்துவிட்டு அப்புறம் வில்லிவாக்கத்தில் வெங்கிட்டுகிட்டே. ஆகையால் இன்னும் எட்டு மாதங்களுக்கு இந்த அலைகளிடம் விடை பெற்றுக்கொள்ள வேண்டும். பிறகு, பிழைத்துக் கிடைந்தால், எல்லாம் நல்லபடி நடந்தால் மறுபடி இங்கே வருவேன் சிக்காமு பாஷையில் எல்லாம் இருக்கிறவரையில் தானே! இருக்கிறவரையில் என்பது ஆனால் அலைகள் உங்களுக்கில்லை. நாங்கள் போன பின்னரும் நீங்கள் இருப்பீர்கள்; இங்கு வரண்டாலும் நெஞ்சில் அலைந்து கொண்டிருப்பீர்கள்.

சிக்காமு. நீ முற்றிலும் அறிந்தோ அறியாமலோ இருக்கிறவரை’ என்று சொன்ன தன் பொருள். நீ இருந்தவரை உறைக்காமல் , நீ போன பின் என் ரத்தத்தின் ஏக்கத்தில் உணர்கிறேன். சிக்காமூ, ஏக்கம் இருக்குடீ! இல்லை என்று எப்படி மறுப்பேன்? ஆனால் உனக்காக என்று சொல்ல முடியுமோ? நீ தெய்வத்துடன் கலந்து விட்டபின் உன்னை எப்படித் தனித்துக் குறிக்க முடியும்? நீ உயிரோ டிருந்தாலும், இரத்தத்தின் வெறியில் இந்த சமயம் நமக்கு ஒருவருக்கொருவர் உடல்வழி ஆக வேண்டியது ஒன்று மில்லை என்றாலும், நீ போனபின் என் தனிமையை உணர் கிறேன். மாலை வேளைகளில் நான் கரையோரம் நிற்கையில், என் கால்களைக் கணு வரை கழுவும் அலை களில் அறிகிறேன். விளம்பில் என்னை நிறுத்தி விட்டு அலைகள் தாண்டிய அமைதிக்கு நீ சென்று விட்டாய். எல்லைக் கோடுகள் அழிந்த ஒன்றுடன் ஒன்றிவிட்டாய். அங்கிருந்து தனியாய்ப் பிரித்து உன்னை எப்படிக் கூப்பிட முடியும்?

சிக்காமு, நம்மிடையில் தர்க்கம் நேரிடும் போது – நம்மி டையில் தர்க்கம் இல்லாத நாள் உண்டோ ? உன்னை ஓரிரு தரம் கைகூட மிஞ்சிவிட்ட வெட்கத்தில், அந்த நினைவின் வேதனையில் இப்பொழுது தலை குனிந்து உனக்கும் என்ன பயன், எனக்கும் என்ன சாந்தி? – நம்மிடையில் தர்க்கம் நேரிடும்போது, நீ எதிர்வாதாடும்போது கேட்பாயே “என்னைக் கரிக்கணும்னுதானே கட்டிண்டேள்?” என்று, அதிலும் ஒரு உண்மை யிருக்கிறதோ? கரிப்பதற்காவது ஒரு ஆள் வேண்டித்தான் இருக்கிருக்கிறது, தனிமையோ வேண்டியில்லை. அப்போது அக்கரிப்பும் எதிர்த்துருவங் களின் ஈர்ப்பேயன்றி கரிப்பாமோ?

“என்ன தாத்தா உனக்கே என்னவோ பேசிக்கறே?”

“பேசிண்டேனா என்ன? அது கூட எனக்குத் தெரியவில்லை.”

“என்ன தாத்தா அழுவறே?”

“அழுவறேனா!” கண்ணைத் துடைத்துக் கொள்கிறேன். ஆம், இமைகள் நனைந்திருக்கின்றன.

“தாத்தா நேரமாவல்லே, நீயாச்சும் தனியா குந்திட்டிருக்கையே! தாத்தா ! முவம் உனக்கு ஏன் திடீர்னு இவ்வளவு துயரமாப் போச்சு? தண்ணிலே விழப்போறியா? உன்னைப் பார்த்தா எனக்குத் திடீர்ன்னு பயமாயிருக்குது, தாத்தா!”

“பயப்படாதே குழந்தை. என் உயிர் தானே? போற நாள் வந்தாச்சே. அதுக்குள் நான் வேறு அவசரப் படணுமா?”

“பேச்சென்னவோ நியாயமாத்தான் பேசறே. ஆனால் என் நயினா சொல்லிச்சு , போறவங்க கூட அப்படித்தான் பேசு வாங்களாம் – என்ன சிரிக்கிறே?”

“உன் பேச்சுக்குத்தான்”

“என்ன தாத்தா திடீர்னு அழுவறே, திடீர்னு சிரிக்கறே? நீ இடம்மாத்தி உக்காரு. சுடுகாட்டுலே தான் ஆவி நடமாடுதுன்னு நெனிச்சியா? இங்கே அதுக்கு மேலே தாத்தா! உங்களவங்க எத்தினிபேர் குளிக்க வந்து உள்ளேயே போயிருக்காங்க! எங்கள வங்க பொழுதுக்கு வலையோடே கட்டுமரத்திலே போன வங்க எத்தினி பேர் திரும்பவேயில்லே! அவங்க மனையும் மக்களும் சோத்துப் பானையோடே கரையிலே காத்திருந்து காந்திருந்து குடும்பமே மணலோடு மண்ணா போயிருக்குது எத்தினி! இந்தத் தண்ணியிலே எத்தனை எலும்பு கரைஞ்சிருக்குது தெரியுமா? என் நைனா சொல்லிச்சு,உஜாராயிருக்கணும்னு. ஓயாமல் அலைபாயுதே சிலவங்களுக்கு சில சமயம் அத்தனை கைநீட்டி அவங்களை அழைக்கிற மாதிரியே யிருக்குமாம். உஜாராயிருக்கணும்னு என் நைனா சொல்லியிருக்குது.

“ஓ!”

“ஆமா, மெய்யாத்தான்! சாவணும்னுங்கற நினைப் பிலே வரக்கூடத் தேவையில்லியாம். இந்த அலை அழைக் கிற அழைப்பிலே சாவு பின்னாலே வந்து களுத்திலே கையைக் கொடுத்துத் தள்ளுமாம்.”

“நல்லாப் பேசறையே பெண்ணே, உன் பேர் என்ன?”

“சிக்காமூ – என்ன தாத்தா மாரைப்பிடிச்சுச்சிட்டே? தாத்தா தாத்தா ஒதுங்கு அலைவருது, அலை ஓடி வருது பாஞ்சு வருது!”

“வரட்டும் வரட்டும் சிக்காமு வந்து என்னைத் தொடட்டும்.”

“என்ன கொளந்தையாட்டப் பேசறியே! ஆனால் என் நைனா சொல்லியிருக்குது இந்தத் தண்ணி பெரியவங் களையும் கொளந்தையா ஆக்கிடுமாம் -“

“அதுவும் சரி. உன்னை அது தாயாக்கிய பின், என்னைக் குழந்தையாக்க வேண்டியது தானே!”

“சரி தாத்தா, நீ போவமாட்டியா , எனக்குப் பொழுது சாயுது நான் போய் வாரேன்.”

“இல்லை குழந்தை, பொழுது உனக்கு இப்போது தான் துவக்கம். பொழுது சாய்ந்தவன் நான். உன் ஆரம்பப்பசிக்கு பொழுது போதவில்லை, இன்னும் தேடி நீ போகிறாய். எனக்கோ இருக்கும் வரை உலகத்தின் போது அத்தனையும் என்னுடையது தான். ஆகையால் அலையோரம் படுத்து, பொழுதை நான் அசை போடுகிறேன். நீ போய்வா அம்மா!”

போகிறாள், என்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே. அவளுக்கு என் மேல் இன்னும் சந்தேகம்தான். சிக்காமு பேரோடு இல்லை, சந்தேகமும் உன் போல் தானோ? உனக்கும் அவளுக்கும் ஜாடை ஒற்றுமை துளிக்கூட இல்லை. ஆனால் இவள் என்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு போகையில், எங்களிருவரிடையே தூரம் மிகுகை யில், ஏனோ இவளில் உன்னைப் பொருத்திப் பார்க்கிறேன். அதோ கரை முகட்டில் மறைந்து போனாள். அவள் மறைந்த இடத்தில் அலை புரண்டு வந்து மோதி மூடுகின்றது. அவள் போன வழியில் விட்டுச் சென்ற அவள் அடிச் சுவடுகள், அலைகளின் கடைசலில் பளபளக்கும் பூமிக்குத் தம் கோர்வையில் தனிமாலையாய், அர்த்தமாய்த் து வள் கின்றன. ஒருவேளை அலைகளின் சேதியை சொல்லவே வந்து சொன்னபின், வந்த வழியே மறைந்த கடல் தேவதையோ? அப்படியே சிக்காமு நீ திரும்பி வந்து போனாலும் நான் ஆச்சரியப்படமாட்டேன், என் வயதில் நான் எதற்கும் ஆச்சரியப்படலாகாது.

ஆனால் அந்தக் குட்டி சொன்ன மாதிரி பொழுது சாய்ந்து தான் போச்சு. கொட்டிய மசிபோல் மேகங்கள் அலைகள் தாண்டிய கடலமைதியில் இறங்குகின்றன. இன்றி ரவின் இருள் அங்கு பிறந்து கரை நோக்கிப் புறப்பட்டாச்சு. இன்றையக் கிறுக்கல்களை யழித்து, நாளையப் பாடத் திற்குக் கரும் பலகையைத் தயாராக்குவது போல், பூமியைத் துடைக்க இரவு புறப்பட்டாச்சு. கறும்பலகையின் சுத்தம் அதன் கறுப்பில் தான். இருளுக்குத் தக்கபடி தான் அதினின்று புறப்படும் ஒளி. அது வருகையிலேயே, அலைகள் கடலில் தம் இடைவிடா ஸ்னானத்தில், அதைத் தம்மிடம் இழுத்து, சேலையாய் அவசரச் சுற்றாய்த் தம்மேல் சுற்றிக் கொள்கின்றன. அவைகளின் மேடு தாழ்வு, என் கண்ணுக்கு மூடாந்தமான நிழல்களாகின்றது. உருவக் கோடுகளின் உள் அடைப்பில் தெரியும் வெறும் இருளின் இடையே அவ்வப்போ அலையின் வெண் நுரையோட்டம், கறுப்புப் புடவையில் வெள்ளி சரிகை போல் ஒளி விட்டுவிட்டுக் காட்டுகின்றது.

அலைகளின் ஓயாத ஓசைக்கு என் செவி புதிதாய் விழித்துக் கொள்கின்றது. அம்முழு முழக்கத்தினின்று வித விதமான ஓசைகள் பிரிந்து வந்து, பாகுகூட்டி, என் நெஞ்சில் தந்தி அமைத்து இசைமீட்டலில், நான் புரிந்தும் புரியாத தும், அறிந்தும் அறியாமலும் நினைவில் புதைந்த அருவங்கள், கதிர் முளைத்து எழுகின்றன.

அவசரத்தில் நான் ஸ்திரீகளின் ஸ்னானத் துறையில் இறங்கி விட்டேன் போல், என்னைச் சுற்றி வெட்கம் கலந்த வெற்றிச்சிரிப்புகள், கேலிக் கொக்கரிப்புகள், சீற்றச்சீறல் கள், விரட்டலுடன் அழைப்பு கலந்த கூவல்கள், நீண்ட பெருமூச்சுகள், எல்லாம் ஒருங்கே நினைவில் அலைமோது கையில் குழலினின்று ஜலமெனச் சிரிப்பு என்னின்று பீச்சி யடித்து, என் நினைவு ஒட்டுக் கேட்குங் அரவங்களுடன் மோதியுடைந்து, ஸ்படிகச்சிற்கள் உதிர்கின்றன. அவைகள் னூடே, வருடங்களின் பின்னணியில் புதைந்து போன நினை வின் மொத்தமான அரூபம் புகுந்து புறப்படுகையில், ஒளிச் சிதர்களாய் ரூபம் பிரிகின்றது.

மடித்த விசிறி திடீரென விரிந்தாற்போல்,
பஞ்சவர்ணக்கிளி சிறகு விரித்துப் பறந்தாற்போல்
கோடைமழையில் வானவில் வளைந்தாற்போல்
காலடியில் மழைத்தேக்கத்தில் ஜாலவர்ணங்கள்
தோய்ந்தாற்போல,
சுண்டிய தந்தி தன் விதிர்விதிர்ப்பில் எட்டுத்
தந்திகளாய் விசிறினாற்போல்,
மந்தர ஸ்தாயியில் குரலின் கனத்த கார்வைபோல்
நான் ஒண்டியில்லை எத்தனை எத்தனையோ!

சிக்காமூ, நீயும் தனியில்லை. நீயும் அத்தனை அத்தனை. உன் பேர் சிவகாமசுந்தரி, நீ சிவாவாயும் காமுவா யும் சுந்தரியாயும் சிதறிப் போனாய்.

சிவை சிவே, பவே பவீ
காமு , காமி, காமினி , காமா, பூமா, ரமா, ஹேமா
காமாக்ஷி, மீனாக்ஷி, அஞ்சனாக்ஷி , அஞ்சனா , காஞ்சனா
சுந்தரி, நிரந்தரி, சுந்தரா, சுந்தா , சுந்து, சுகந்தி…

பெயர்கள், பெயர்களின் ஓசை, ஓசைகளின் சாயை. சாயையிலிருந்து மறுபடியும் ததும்பும் பெயர்கள். பெயர் களைத் தாங்கும் உயிர்கள், உயிர்களின் தனித்தனி வாழ்வ களாய்ப் பிரிந்து விட்டாய்.

இத்தனை பேர்களுடன் நானும் தனித்தனிப் பிரிந்து அவரவர்களின் தனித்தனி இயல்புடன் பின்னி இழையோடுகின்றேன்.

சிவகாமூ, உடல் பறக்கிறதடீ! இப்போ என்ன நேர்ந்து கொண்டிருக்கிறது? நான் பேசும் பாஷையென்ன? நான் எங்கேயிருக்கிறேன்? சிவகாமு , நீ வேறு நான் வேறு, நீயுமில்லை, நானுமில்லை. ஸ்ருதி பிறப்பித்துப் பிரிந்த பேதங்கள் மறுபடியும் கூடிய ஒன்று. மறுபடியும் ஒன்றி லிருந்து. நூறு. ஆயிரம், ஒன்றின் லக்கத்தின் பக்கத்தில், விழி விழியாய்ச் சுழித்த எத்தனையோ சுழிகள், ஒவ்வொன்றாய். உடன் உடனே அடுக்கடுக்காய் விழிக்கையில், அலைகளின் விளிம்பிலிருந்து நான் விழுந்தேனா, நீ பின்னிருந்து தள்ளினாயோ முன்னிருந்தே. கைப்பற்றியோ, கால்வாரியோ இழுத்து விட்டாயோ? நான் உள் அமிழ்ந்து கொண்டே போகும் ஆழத்தின் சுழிப்பில், என் உயிரின் வெறும் தாது வாய் என் உள் ப்ரக்ஞை மாத்திரம், தன் வியாபக பூரணத் தில் அடித்துக் கொள்கின்றது. சிவகாமூ. இந்நிலையை ஆத்மாவின் ராஸக்ரீடையை கரையிலிருந்தாலும் சரி, கடலிலிருந்தாலும் சரி, உனக்குப் புரியச் சொல்ல எப்படி என்னால் ஆகும்?

அட, உனக்குச் சொல்லித்தான் ஆகவேண்டியது என்ன?

இந்தச் சமயத்தின் பக்குவத்தில், என் இதயத்தில் அன்பு பொங்குகிறது. யார்மேல், என்னால் குறித்துச் சொல்ல இயலாது. காலமும் இடமும் உருவமும் என் ப்ரக்ஞையின் இஷ்டத்திற்கு வளைந்து கொடுக்கும் இந்நேரத்தில், தன்னையே ஒரு பெரும் இதயமாய்க் காண்கிறேன். அது சுரக்கும் அன்பில் என் ரத்தம் எல்லாம் பாலாய் மாறி இதயம் நிரம்பி வழிந்து, தன்னைச் சுற்றிப் பாலருவிகள் கிளையோடி, ஒன்றி ஈரருவி ஓரருவி, ஓரருவி பேரருவி, பேரருவி பாற்கடலாய்ப் பரவிவிட்டது. அலை கக்குவது அலை நுரை யன்று; அன்பு வெள்ளத்தின் பால் நுரை இவை அலை களல்ல, உள்ளத்தின் நெகிழ்ச்சிகள் ; ஆத்மபரவசத்தில்

ஆங்காங்கே ப்ரஞையின் விம்மல்கள்.

நிழலுக்குச் சட்டென சாளரத்தை இழுத்தாற்போல் கண் இமைகள் என்மேல் பாதி கவிந்துவிட்டன. இந்த நிலையின் பாதையில் அரைக்கண்தான் முழுக்கண்ணோ? அரைக் கண்ணின் நிழலும் முழுவிழிப்பின் ஒளியாலுமாய் நினைவோட்டத்தில், திரவியங்கள், ஞாபகங்கள், எண்ணங்கள். சம்பவங்கள் பிதுங்கி, கழன்று, தம்மைத் தாமே சுழன்று, மிதந்து செல்கின்றன.

இப்போது பாதாளம் தன் அடிவயிற்றில் பதுக்கி வைத் திருக்கும் புதையல்களும், சப்தரிஷிமண்டலம் ஏர்பூட்டி ஆகாயத்தை உழுது. அதைச் சுற்றிச் சிதறி கிடக்கும் மணிக் கற்களும், பூப்பொறிகளும் பொன் விதைகளும் ஒன்று கலந்து அவை நடுவே நான் திளைக்கிறேன். ஒவ்வொரு எண்ணமும் ஒரு நக்ஷத்திரச்சுடர். ஒவ்வொரு உணர்ச்சியும் ஒவ்வொரு ஞாபகமும் ஒரு சதங்கைமணி – கல் கல் கலீர் கிண் கிண் கிண்கிணி ஒவ்வொரு சம்பவக் கோர்வையும் ஒரு மலர்ச்சரம். இங்கு பகையென்பதேயில்லை. பகைகூட நாகம் கக்கிய நாகமணியாய்ப் பொலிகிறது.

ஆனால், நானே என் தன்மையில் பகை பாராட்டுபவ னல்ல என இப்பொழுது நிச்சயமாய்த் தெரிகின்றது. நெஞ்சில் வைத்துக்கொண்டு நஞ்சாய்ப் புகையுமளவுக்கு எனக்கு நெஞ்சில் அழுத்தமில்லை. அப்பாகூட கவலைப் படுவார். “மாதவா, புற்று மண்ணாய்ப் பிசுபிசுக்கும் மனசை வைத்துக்கொண்டு நீ எப்படித்தான் உலகத்தில் பிழைக்கப் போகிறாயோ? போவோர் வருவோர் எல்லாம் உன் தலை யைத் தடவித் தடவி நீ உருப்படுவதெப்போ?”

அம்மா அடுப்பங்கரையிலிருந்து வெளிப்படுகிறாள். ஒரு கையில் தட்டில், வெங்காய பஜ்ஜியின் வாஸனையும், மறு கையில் டம்ளரில் ஆவிபறக்கும் காப்பி மணமும் கலந்து எனக்குத் தலை லேசாய் சுற்றுகிறது.

“ஆமாம் உங்களுக்கும் எனக்கும் என்ன வந்தது? நம் பிள்ளையை நாளுக்கும் நாமே அடைகாத்திண்டிருக்க முடியுமா? அதன தன் தலையில் ஆண்டவன் எப்படி கிறுக்கியிருக்கானோ அப்படித்தானே நடக்கும்! கெட்டிக்காராள் எல்லாம் என்ன கயட்டிப்பிட்டா?”

உண்மையில் அம்மா என்னைச் சலித்துக் கொள்ள வில்லை. அம்மாவின் பாஷை என்னவென்று எனக்குத் தெரியும். அம்மா அப்பாவை விலாவில் குத்துகிறாள். அப்பா உருட்டிவிட்டாற் போலிருந்த நாள், நடந்தால் பெருச்சாளி ஓடுவதுபோல் இருந்த நாள் எனக்குத் தெரியும். அப்பாவை இப்போ X-ரே எடுக்க வேண்டிய அவசியமே யில்லை. இப்போது விலாவெலும்புக்குள் ‘ராக் ராக்’ காய் முண்டி நிற்கின்றன. அந்த நாளில் தைத்த சட்டைகள் அவர்மீது இப்போ ‘லாலிபீலி’யாய்த் தொங்குகின்றன. ஆனால் அம்மாவுக்கு இரக்கமில்லே. அம்மாவின் மறையடி சொல்குத்து அப்பாவின் விலாவில் ‘சதக்’ கென்று இறங்குவது எனக்குத் தெரிகிறது. கேட்கிறது என்று கூட சொல்வேன். அந்த ஊமைவலியில் அப்பாவுக்கு மூச்சு கொக்கி வாங்குவதும் தெரிகிறது.

“பிள்ளையைச் சொல்லப் போய்விட்டாயே. நீ என்ன வாழ்ந்தாய்?” என்றுதான் அம்மா சொல்லாமல் கேட் கிறாள். இந்த வீட்டில் நுழையும்போது என்னோடு கொண்டு வந்த பிறந்த வீட்டு சொத்து. கொஞ்சமாய்க் கொண்டு வந்தேனா? அத்தனையும்,

“பஸ் ஸர்வீஸ் ஓட்டறேன்”

“பால் பண்ணை வைக்கிறேன்.”

“Share மார்க்கட்டில் விளையாடறேன்”

“பிஸினேஸ் பண்ணறேன்”

(அம்மாவின் உச்சரிப்பின் கொச்சையில் சிந்தும் கேலி யையும் வைரத்தையும் என் ஓசையில் கொண்டுவர முடிய வில்லை) என்று அழிச்சது யார்? யாரிடத்திலும் ஏமாறாத வாள் வண்டவாளம் எல்லாம் எனக்குத் தெரியாதா என்ன?” என்று பளிச்சென்று கேட்காமலே இடிக்கிறாள். பாவம், அப்பாவின் உடல் குன்றுவதைப் பார்த்தால் பரிதாபமாயிருக்கிறது.

ஆனால் அம்மாவைப் பார்த்தாலும் தான் பாவமாயிருக் கிறது. கல்லுக்கணக்கில் கழுத்து கனக்க காசுமாலையும், வடம் வடமாய்ச் சங்கிலியும், கையில் பூட்டிய பொன் விலங் காய் கெட்டிக்காப்பும் போட்டுக் கொண்டு வளைய வந்த தெல்லாம் எனக்கே ஞாபகமிருக்கிறது.

“மரத்தொட்டிக்குப் பட்டை போட்டாற்போல், ஒட்டி யானம் உனக்குக் கணிசண்டீ” என்று அப்பா அம்மாவின் {அந்த நாள்) உடல் ‘கொஷ்குமுஷ்கு’வைக் கேலிபண்ணுகையில், அம்மாவுக்குக் கோபத்தில் கண் துளும்புகையிலேயே, சிரிப்பில் கன்னங்குழியும் (“ஐய, என் அதிர்ஷ்ட மே!”)

ஆனால் ஒருநாள் இருவருக்குமிடையில் லடாயில் அம்மா எது எதையோ கழற்றிக் கொடுத்துவிட்டு, சமைய லறையில் நுழைந்து அடுப்பெதிரில் தலைமேல் கைவைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்ததும், அடுப்பு சரியாய் எரியாமல் புகைந்து கண்ணைக் கரித்ததால் ஆத்திரத்துடன் கிண்ணி நெய்யை, கூடத்தில் அப்பா காது கேட்க நெருப்பில் “ஸ்வாஹா!” என்று சொல்லிக் கொண்டு ஆஹுதி விட்டதும் ஞாபகம் வருகிறது ஜவாலை குபீரென்று கிளம்பியதும் அம்மா, “மாதவா, இது என் வயிறுடா!” என்றாள்.

எனக்கும் துக்கம் தொண்டையை அடைத்தது.

அம்மாவின் கழுத்தெலும்புக்குழியில் மஞ்சள் கயிறு மாத்திரம்தான் தங்கியிருக்கிறது.

அப்பா அம்மா இரண்டு பேரைப் பார்த்தாலும் பாவமாயிருக்கிறது.

ஆனால் எனக்கு யாரைப் பார்த்தாலுமே பாவமாயிருக்கிறது.

நான் இன்று முதல் யாரிடமும் ஏமாறப் போவதில்லை.

***

குருட்டு யோசனையில் , வாசற்படியில் உட்கார்ந்திருக்கிறேன்.

“ஷாமி!”

திடுக்கிட்டுத் திரும்புகிறேன். என் வலது பக்கத்தில் இரண்டு குருவிக்காரன்கள் நிற்கிறார்கள். நாள் கணக்கில் குளிக்காமல் உடல்வாடை நேரிடையாய் முகத்திலடித்ததும் வயிற்றைக் குமட்டுகிறது.

இருவர் கழுத்திலும் வரிவரியாய், கறுப்பும் சிவப்பும் வெள்ளையுமாய்ப் பாசிமணி மாலைகள் தொங்குகின்றன. உடம்பிலும் முகத்திலும் மீசையிலும் அழுக்கு காய்ந்து, கறையோடிக் கிடக்கிறது.

“இவன் என் தம்பி. இவன் பெண்சாதி அதோ புள்ளார் கோவிலுக்குப் பின்னாலே மரத்து மறைவுலே இடுப்பைப் புடிச்சுக்கிட்டு, பல்லைக் கடிச்சுக்கிட்டு துடிக்கறா. உன் காலைப் புடிச்சுக்கிட்டு கெஞ்சறோம்” என் கால்மேல் கைவைக்க வருகிறான். விரல் நுனி பாதத்தில் படுகையிலேயே எனக்கு உடல் குலுங்குகிறது. “எங்கள் மானம் நீதான் காப்பாத்தணும். இவன் பெண்சாதி உன் தங்கச்சி மாதிரி . எங்களுக்கு ரொம்ப வேணாம். ஒரு வண்டிச் சத்தம், அவ்வளவு தான். எங்கள் கூட்டத்துலே போய் ஷேர்ந்துட்ட அப்புறம் கவலையில்லே.”

நான் அவசரமாய் ஜேபியில் துழாவுகிறேன். இரண்டு ரூபாய்கள் தட்டுப்படுகின்றன.

இளையவன் ஊமையாகவே நிற்கிறான். அவன் வேதனை அவனுக்கு வாயடைத்து விட்டது. அண்ணன் கண் தளும்புகிறது. அவனுக்கு என் தகப்பனார் வயது இருக்குமோ?

“ஷமி, உன் புண்ணியத்தை என்னிக்கும் மறக்க மாட் டேன் உன் ரூவா எங்களுக்குச் ஜும்மா வேணாம். நாங்கள் பிச்சையெடுப்போம். எச்சில் தின்னுவோம். ஆனால் இப்போ உன் துட்டு எங்களுக்கு ஜும்மா வேணாம். இதோ – இதோ” – அவசரமாய் ஒரு கறுப்பு மணிமாலையைத் தன் கழுத்திலிருந்து கழற்றி என் கையுள் திணிக்கிறான். “இது சின்னதுன்னு நினைக்காதே ஷாமி, இது எங்கள் ஷத்தியம். ஷாயங்காலமோ, காலையிலோ ஒரு மான்தோல் கொண்டு வந்து உன்கிட்டே கொடுத்துட்டு பாஷி மணியை மீட்டுப் போவோம். என்னவோ நினைக்காதே. நாங்கள் பொய் சொல்லுவோம், ஷத்தியம் வைப்போம். ஆனால் சொன்ன சொல் தவறமாட்டோம். நினைப்பிலே வெச்சுக்க. நாங்க தேசிங்கு ராஜா வம்சம் – வரோம் சாமி-“

மாலை வருகிறது.

ஒருத்தருக்கும் தெரியாமல், அந்த பாசிமணியைப் பனியனுக்கடியில் அணிந்து கொண்டிருக்கிறேன்.

மறுநாள் காலை வருகிறது. போகிறது. ஒருவாரம் ஆகிறது. “இவன் பெண்சாதி உன் தங்கச்சி மாதிரி!”

நள்ளிரவில் தட்டியெழுப்பினாற்போல் விழித்து கொள்கிறேன்.

கழுத்தைப் பாம்பு சுற்றிக்கொண்டாற்போல், ஒரு பயங்கரச் சில்லிப்பு.

இம்மாதிரி எத்தனையோ பொய் சத்தியங்களை விழுங்கிவிட்டு – அதுவே ஒரு தனி உயிர் பெற்றுவிட்டதோ?

பயவெறியில் அப்படியே கழுத்தினின்று அறுத்து ஜன்னல் வழி வீசி எறிகிறேன். மீது நேரத்துக்கு சரியாகவே தூக்கம் வரவில்லை. அது யாரையாவது கடித்துவிட்டால்?

விடிந்ததும் குழிதோண்டி, யாரும் கண்காணாது அதைப் புதைத்து விடவேண்டும்.

ஆனால் மறுநாள் அது விழுந்த இடத்திலும் தோட்டம் முழுதும் சல்லடை போட்டுச் சலித்தும் அது கிடைக்கவேயில்லை. வெகுநாள் அது மறைந்த கிலேசம் மனதை உறுத்திக்கொண்டேயிருந்தது.

பிறகு ஒருநாள் மாலை ஆபீஸிலிருந்து சைகிளில் திரும்பி வருகையில் இரும்பு வாராவதி ஓரத்தில் இரண்டு பேரையும் பார்க்கிறேன். மும்முரமாய் பதினெட்டாம் புள்ளி ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.

“ஊம்; என்ன பிறஞ்திச்சு உன் தம்பி சம்சாரத்துக்கு. பெண்ணா, பிள்ளையா?”

திடுக்கிட்டுத் திரும்பியதும் பெரியவன் என்னை அடையாளம் கண்டு கொள்கிறான். திக்பிரமையில் வெறிச்சிட்ட முகம் கண்ணோரங்களில், கன்னங்களில், நெற்றியில், சுட்ட கத்திரிக்காய் போல் அடக்கிய சிரிப்பில் சுருங்குகிறது. ஆனால் முழுக்க அடக்க முடியவில்லை. என் முகத்தில் அவன் சிரிப்பு பீச்சியடிக்கின்றது. என்னையறியாமல் என்னையும் தொற்றிக் கொள்கிறது. மூவரும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரிக்கிறோம். சிரித்துக்கோண்டேயிருக்கிறோம். எனக்கு வயிறு கூட வலிக்கிறது. ஆனால் சிரிப்பு ஒயவில்லை.


ஆனால் அவன் சொன்னது ஒன்று சரி. ரூபாயை அவன் என்னிடமிருந்து சும்மா வாங்கிக்கொண்டு போய்விடவில்லை. அதற்குப் பதில் அவன் என்னிடம் ஒரு வாக்கை விட்டுச் சென்றிருந்தான்.

சிந்தித்து சிந்தித்து, நான் அறியாமலே, வாக்கை வாயில் உருட்டுகையில், இன்னும் செவிக்கும் நாவிற்கும் மணம் கிட்டியும் ருசி கெட்டாதோர் தித்திப்பு. நினைக்க நினைக்க நெஞ்சின் அடிவாரம் வரை கமழும் ஒரு காவிய சௌந்தர்யம், அத்துடன் புதிதாய் மிளிரும் கவிதையின் இன்ப சோகம்.

அவன் எவனாயிருப்பினும் சரி
இவன் எவனாயிருப்பினும் சரி

“இவன் பெண்சாதி உன் தங்கச்சி மாதிரி.”

எனக்குத் தங்கையிருந்தாலும் தங்கச்சி என்கிற போது அத்தை ஞாபகம் தான் வரும். அப்பா அத்தையை அங்கச்சி என்றுதான் அழைப்பார்.

அப்பா! அங்கச்சி எப்படியிருப்பாள் தெரியுமா? பச்சைப் பாலில் கடைந்த வெண்ணெய்போல் எப்பவும் புதிதாய் , தளதளவென்றிருப்பாள். எப்பவும் குஷியாவே பிருப்பாள். (“தின்னு தெறிச்சுட்டு வளைய வரது தவிர வேலை என்ன?” என்று அம்மா உரக்கவே கத்துவாள்.)

குழந்தைகளைத் தவிர, அம்மாவும் பெரியவர்களும் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து, அத்தை குறத்தி வேஷம் மார்வாடி வேஷம் பாருங்கோ!” என்று பாவாடையணிந்து ரவிக்கை பொத்தான் நடுவில் மேலாக்கு நுனியை சொருகிக் கொண்டு தலைமேல் முக்காடு இட்டு நின்றால் அசல் அப்படியே தான்! அம்மாவின் சவுரியை யும் திருடி , தளரப்பின்னிய கூந்தல், குஞ்சலத்துடன் டம்பங் கூத்தாடி சாட்டை போல் தரையிலிடிக்கும் வேஷத்தின் பாவனையில், அடியை மிடுக்காய் எடுத்து வைக்கையில் என் இதயத்தில் சதங்கை குலுங்கும். நான் சின்னப் பையன். இன்னும் உடையாத என் இளங்குரலில் கக்கடகடகட வென என் சிரிப்பைக் கேட்கக் கேட்க அவளுக்கு ஆனந்தம் பொங்கும். அப்படியே ஓடிவந்து என்னை வாரிக் கொள்வாள்.

“அத்தை நொன்னுன்னு தடவை, நொன்னுன்னு தடவை” என்று மழலையில் கொஞ்சுவேன்.

“அங்கச்சின்னுதான் அழையேன். அத்தையென்ன அத்தை, அவரைக்காய் சொத்தை! நான் என்னவோ நூத்துக் கிழவியாட்டமா!”

அத்தைக்குக் கல்யாணம் ஆகவில்லை. சீக்கிரம் வரன் குதிரவில்லை. இத்தனைக்கும் தோஷ ஜாதகம் கூட இல்லை .

“இவளைப் பார்க்க வரவாளுக்கு பஜ்ஜியும் ஸொஜ்ஜி யும் பண்ணியே இந்தக் குடும்பம் பாழாப் போச்சு!” என்று அம்மா அலுத்துக் கொள்வாள். அம்மா எனக்குத் தான் அம்மா. ஒரோரு சமயம் அவள் பேசுவதைக் கேட்டால். ஐயே!…. அப்பா அம்மாவுக்கென்றே நாமாவளி பாடம் பண்ணியிருந்தார். இருவருக்கும் சச்சரவின்போடு அர்ச்சனை நடக்கும்.

சண்டி
சிகண்டி
லண்டி
லவண்டி
ரூப பயங்கரி
கோப ரூபிணி
சாபோத்பவி
மஹிஷா சூரி
அல்ப மயி
ஆக்ஷே பணி
அபஸ்மாரி
கனகதுர்க்கா (அம்மா பெயர் கனகம்)
துர்க்குணி
துன் மதி
துர்முகி
துராங்காரி

இதே ரீதியில் இன்னும் ஏதேதோ.

ஆனால் அம்மா ஆயிரம் வசை பாடியும், அப்பா அம்மாவை அர்ச்சித்தும், அத்தைக்கு இன்னும் வேளை வரவில்லை .

அப்பாவுக்குக் கலியாணமாகு முன்னரே, பாட்டி இறந்துவிட்டாள். அத்தை அப்பாவின் பொறுப்பாகி விட்டாள். அம்மா வரும் வரை அத்தை அப்பாவின் ஆசை அங்கச்சி. அம்மா வந்ததும், அம்மா வீட்டின் சட்டக்காரியாகி விட்டாள். அம்மா வீட்டுக்கு வருகையில் அத்தைக்குப் பத்து வயது.

தேள் கொட்டிப் பாத்திரமே ஓட்டையாகி விடும் என்” பார்கள்.

அத்தை என்ன தான் பருவமானாலும் மனுஷிதானே! வற்றா ஊற்றாயிருந்த அந்தச் சிரிப்பும் வேடிக்கையும் சுண்ட ஆரம்பித்து விட்டது.

ஆனால் அத்தைக்கு வேளை இன்னும் வரவில்லை.

ஒரு நாள் அத்தை கோயிலுக்குப் போய்வருகையில், காலடியில் ஏதோ இடறிற்று. செம்புழுதி படிந்து. அந்தி வெளிச்சத்தில், கிராவல் கல் மாதிரியிருந்தது. கையில் எடுத்தால் . தாமிரத்தில், சுமார் மூன்றங்குல உயரம் கிருஷ்ண விக்ரஹம். புல்லாங் குழலை அபினயம் பிடித்த கைகள்.

கண்ணன் உரு கிடைத்ததையே அத்தை ஒரு சூசக. மாகக் கொண்டாள். அல்லது கொள்ள முயன்றாள் என் கட்டுமா? அதை என்னவோ தானே தனியாய்ப் பூஜிப்பதும், அதனெதிரே உட்கார்ந்து அடிக்கடி சிந்தனையில் ஆழ்வது மானாள். தானாய் நேராததை. அல்ல நேர மறுத்ததை, தன் எண்ணத்தின் வலிமையால், நேர வைக்க முயன்றாள் போலிருந்தது. ஆனால் இப்பொழுது புரிகின்றது. எண்ணம் பலிதமானால், தான் பலிதமாகும் குறிகளாவது முன் தெரிந்தால் தான், வலிமையுடன் வலிமை கூடும். வலிமைக்கு ஊட்டம் வலிமைதான்.

ஆனாலும் வேளை வரவில்லை. வேளையை நேர வைக்க, அவள் கூட்டும் வலிமையிலே அவள் உள் முறிந்தாள். அவளை மூட்டம் மேலும் சூழ்ந்து கொண்டது.

அத்தைக்கு உடலிலேயே ஒரு அசதி கண்டு விட்டது. மணிக் கணக்கில் ஜன்னலண்டை உட்கார்ந்திருப்பாள். அம்மாவின் கரிப்புகூட அவளைத் தார்க்குச்சி போட்டு எழுப்ப முடியவில்லை. தேன்குழல் நாழியைத் திருப்பிக் கொடுக்கப் போன இடமானாலும் சரி, பொழுதைக் கொல்லத் தானே போனவிடம் ஆனாலும் சரி. போன இடத்திலேயே ஐக்கியமாகி விடுவாள். திரும்பி வந்ததும் அம்மாவின் ஆயிரம் திட்டலுக்கும் மந்தமாய், ஊமையாய், நின்றவிடத்திலேயே நின்று கொண்டிருப்பாள். அங்கச்சி ஏன், எப்படி, இப்படி அத்தையாய் மாறிப்போனாள்?

அத்தையைத் திடீரென்று ஒரு நாள் பிற்பகலிலிருந்து காணோம். அது எங்கேயாவது, பக்கத்துத் தெருவில், அதுக் கென்று யாரேனும் தோழி வீட்டில் உறங்கிக் கிடக்கும் என்று அம்மாவுக்கு என்றைக்குமே அசுவாரஸ்யம்.

அப்பா அந்த சமயம் ஏதோ ஒரு புது பிஸினேஸ்’ஸில் இறங்கியிருந்தார். யாரைக் கவனிக்கவுமே அவருக்கு நேர மேது?

ஆனால் இரவு நேரமாகியும் அத்தை திரும்பவில்லை என்றதும் தான் அம்மாவுக்கே வயிற்றில் கொஞ்சம் புளியைக் கரைக்க ஆரம்பித்தது. அப்பாவுக்குச் சொல்லியனுப்பி னாள். மூலைக்கொருவராய் அனைவரும் தேட , ஆரம் பித்து விட்டனர், அன்று ராமுழுக்க குழந்தைகள் – நாங்கள் கூடத் தூங்கவில்லை. விடியவே காத்திருந்தாற்போல் அண்டை அசலார் வீட்டுள் புகுந்து புறப்பட ஆரம்பித்து விட்டனர்.

“ஏண்டி கனகா, இப்படியும் உண்டோடி, நல்ல மரத்தில் புல்லுருவி யோடினமாதிரி?”

“ஏன் மாமி என் கிட்ட சொல்றேள்? எந்த இடியை ‘எங்கள் தலையில் போடக் காத்திண்டிருக்காளோ மகராஜி தெரியல்லே. அப்பவே படிச்சுப் படிச்சு அவர்கிட்டே முட்டிண்டேன். குதிராட்டம் வீட்டில் வெச்சுக்க வேண் டாம். ஏர்றதோ தாழறதோ எதையோ ஒண்ணை முடிச்சுப் போட்டு கௌரவத்தைக் காப்பாத்திப்போம்னு. அது எங்கே மாமி வீட்டிலே அடைவா தங்கினால் தானே! காலில் தான் சக்கரம் ஓடறதே! எல்லாம் தும்பை வீட்டுட்டு வாலைப் -“

வாசற் படியில் சட்டென நிழல் தட்டிற்று. அம்மா வாயில் வார்த்தை உறைந்து போயிற்று.

அப்பா வாசற்படியை அடைத்துக் கொண்டு நின்றார் மூழ்கி எழுந்த மாதிரி அப்பாவுக்குத் தலை, உடம்பு பூரா சொட்டச் சொட்ட நனைந்திருந்தது,

அப்பா அங்கச்சியைக் குழந்தை போல் ஏந்திக் கொண் டிருந்தார். ஏதோ சொல்ல முடியாமல் அப்பாவுக்கு வாய் திறந்து மூடித் திறந்து, நாக்கு விடுபட்டதும் அதனின்று கோரமானதோர் சத்தம் கிளம்பிற்று.

அங்கச்சியின் பின்னல் டம்பங் கூத்தாடி சாட்டைபோல் நுனியில் குஞ்சலத்துடன் பூமியை இடித்தது. அப்பாவின் ஏந்திய அணைப்புக் கடங்காது, விறைத்துக் கொண்டு நின்ற கையின் பிடியுள்ளிருந்து, கிருஷ்ண விக்ரஹத்தின் கழுத்து எட்டிப் பார்த்தது. அதற்கு விழி பிதுங்கிற்று.

கடைசிவரை. பொம்மையைப் பற்றிய விரல்களைப் பிரிக்க முடியவில்லை. அவள் கூடவே அவள் கண்டெடுத்த விக்ரஹமும் காட்டுக்குச் சென்றது.

உண்மையில் அங்கச்சிதான் ஏமாந்து போனவள் என்று தோன்றுகிறது.


மாலை வேளை.

நான் நடை வழியில் உட்கார்ந்து ஸ்வாரஸமாய்ப் படித்துக்கொண்டிருக்கிறேன்.

சுவாமி விளக்கை ஏற்றிவிட்டு, அம்மா அவசரமாய், கொல்லைக் கதவை மூடுகிறாள். எனக்கு இருட்டுகிறது. “ஏனம்மா?”

“உஷ்! சித்தே யிரு , இல்லாட்டா லக்ஷ்மி போயிடுவாள்.”

“லக்ஷிமி அப்பவே போயிட்டாளே!”

லக்ஷிமி வேலைக்காரக் குட்டி.

“சீ, வாயை மூடு! ஒரு சமயம் போது கிடையாது. வயசு கடாமாதிரி ஆறது. ஏற்கெனவே வீடு கொழிக்கிறது கேட்க வேண்டாம்!”

ஏதோ இருப்பதை விடாது கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டிருப்பதாய் அம்மா நினைத்துக் கொண்டிருக்கிறாள். எனக்கு இப்போது தோன்றுவது குயுக்திதானோ என்னவோ? கொல்லைக் கதவை மூடிவிட்டால் வாசற்புறமாய் வந்தவ ளுக்கு வந்த வழியே போகத் தெரியாதோ? வருவதற்கு வழி வாசல், போவதற்குப் புழைக்கடை என்று எந்த சட்டத்தில் எழுதியிருக்கிறது? அம்மா யாரை ஏமாற்றுகிறாள்? என்னையா, தன்னையேவா?


ஒருசமயம் நான் கிடந்த கிடக்கையாய்ப் படுத்து விட்டேன்.

டாக்டர் வருகிறார். டாக்டர் புட்டியிலிருந்து ஊசி வழி, ஊசிக் குழாயில் மருந்தைக் கறக்கிறார். மருந்தின் நீலம் குழாயில் நிறைகையில் நான் நீலத்தில் மூழ்குகிறேன்.

பிறகு எல்லாமே ஜலத்தில் மூழ்கியிருக்கையில், வெளியில் கேட்கும் அரவங்கள்.

வருவோர் வந்து படுக்கையண்டை நிற்கிறார்கள்.

அப்பா கவலையுடன் நெற்றியைத் தொட்டுப் பார்க்கிறார்.

தலைமாட்டில் அம்மா. வாயில் முன்றானையைத் திணித்துக் கொண்டு கண்ணீர் உகுக்கிறாள்.

வாசலில் கார் நிற்கிறது. போகிறது.

வெள்ளையடித்த சுவரில் பதித்த வெள்ளைப் பீங்கான்கள் பளபளக்கின்றன.

தலைமேல் ஓயாது விசிறி சுற்றுகிறது.

அவுன்ஸ் கிளாஸில் கிறுகிறுவென ஏறும் சிவப்பு மருந் தின் கிளுக் கிளுக்”.

பிறகு மூச்சின் திருகல் தன் சுழற்படிக்கட்டின் வழியே தன் இருள் கிடங்குகளுள் என்னை எங்கோ கொண்டு போய் விடுகிறது.

***

ஒளி மறுபடி நினைவில் மலர்கையில், இமையுள் நீலத் தின் மேல் ரோஜா படர்கின்றது. கண் விழிக்கிறேன்.

அம்மா அப்போது தான் குத்து விளக்கைச் சேவித்து எழுகிறாள். புன்னகை புரிந்தபடி என்னிடம் வருகிறாள்.

“மாதவா. கண்ணைத் திறந்தாயா? என் வயிற்றில் பாலை வார்த்தாயா?”

அவள் கண்களில் ஸ்படிகம் பளபளக்கிறது.

கூடத்தில் மெல்லிய காற்று அவசரமாய் நுழைகிறது. கொடியில் உலர்த்திய துணிகள் அசைகின்றன. அம்மாவின் பார்வை கவலையுடன் குத்துவிளக்கின் மேல் பாய்கிறது. சுடர் சொடசொடக்கின்றது. விளக்கின் கொண்டையில் சொருகிய பூச்சரத்தினின்று ஒரு சாமந்தி விளக்கின் பாதத்தில் உதிர்கினறது. அம்மாவுக்கு ரோமாஞ்சலியில் உடல் குலுங்குகிறது. நின்ற விடத்திலேயே விழுந்து விழுந்து நமஸ்கரிக்கிறாள்.

“அவள் விளக்கிலேயே வந்திருக்காடா!”

நெக்குருகி விக்கி விக்கி அழுகிறாள்.

எவள் வந்திருக்கிறாள்? சுற்றுமுற்றும் பார்க்கிறேன். எனக்கு யாரும் தெரியவில்லையே! எனக்கு இன்னும் மயக்கம் தெளியவில்லை. அந்த எண்ணத்தின் அசதியிலேயே தூக்கம் வருகிறது. என் கண்ணிமைகளை யாரோ மூடு கிறாப்போல் இருக்கிறது. என் மேல் போராய்க் குவிந்த நீலமலர் மெத்தையுள், அதன் ஆழத்தில் அமிழ்கிறேன். என் கண்ணை மூடியவள் அவள் தானோ ?

எவள்?


அறியேன். எங்கேயோ ஒரு ஜன்னல் திறந்து மூடு கிறது. எங்கிருந்தோ கவலையற்ற சிரிப்பின் இன்னொலி கண்ணாடி சாமான்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் ‘டிங் டிங்’

படுக்கையில் எழுந்து உட்காருகிறேன். வெளியே எட்டிப் பார்க்கிறேன். ஜன்னலின் கீழ் செடியில் ஒரு மலர்க் கொத்து, என் பக்கமாய்ச் சாய்ந்து சிரக்கம்பம் செய்கின்றது. திடீரென சப்தங்கள் அடங்கிவிடுகின்றன. அவள் என்னுடன் ‘கண்ணாமூச்சி’ விளையாடுகிறாள். என்னை அவளுக்குத் தெரியும். அதனால் அவளால் என்னை ஏமாற்ற முடிகிறது. இப்படி ஏமாறுவதும் இன்பமளிக்கிறது.

அவள் யார்?

உடல் திடீரென பரபரக்கின்றது. இதோ அவள் தன்னை எனக்கு வெளிப்படுத்திக் கொள்ளப் போகிறாள். வந்து கொண்டே யிருக்கும் விருந்தாளியின் பாதங்களைத் தாங்க, முன் ஓடும் ஜமக்காளச் சுருள் போன்று. என் நெஞ்சை ஒழித்துப் பெருக்கிக்கொண்டு அதனுள் இறங்கி சரசரவென விரியும் மோனத்தில் அவள் வருகையின் முன் னோசையை உணர்கிறேன். பரபரப்பு தாங்க முடியவில்லை. மார்பை இரு கைகளாலும் அழுத்திக் கொள்கிறேன்.

நிலைவாசலில் நிழல் தட்டுவது போல் ஒரு உணர்வு. கண்ணை மூடிக்கொள்கிறேன்.

நான் எழுந்து எதிர்கொண்டழைக்க மாட்டேன். எத்தனை நாளாய் இந்த சமயத்துக்கு ஏங்கியிருக்கிறேன்! அவளே உள்வந்து என்னை இப்படிக் காணட்டும்.

அவள் மூச்சு என் முகத்தில் மோதுகிறது. இந்த நிமிஷம் என் நரம்புகளில் ஏறியிருக்கும் முறுக்கில் மூச்சுப்பட்டால் போதும். நானே ஆயிரம் தந்திகளாய் அலறிவிடுவேன் ஜன்னலுக்கு வெளியே குளவி ஒன்று. அதன் ரீங்காரம் குடையடிக்கின்றது ஆக்கர் போல் அது என்னைத் துருவி, உள் வீங்குகையில், அதில் முங்கி முங்கி என் மூச்சுத் திணறுகிறது. தலையை உதறிக்கொண்டு விழித்துக் கொள்கிறேன்.

என்னை அழுத்திய வேகம் சட்டென விட்டுவிடுகிறது. நான் காத்திருந்த சமயம், என் கண்ணெதிரிலேயே என்னை ஏமாற்றி என்னைக் கடந்து விட்டது. சமயத்தின் வடிவத்தில் வந்து, தன்னைக் காண்பிக்காமலேயே என்னைத் தொட்டு விட்டு, சமயத்தினூடே சென்றுவிட்ட அவள் யார் ?

நான் தேடுவது யார்? ஏன் தேடுகிறேன்? ஏன் ஏமாறுகிறேன்?

ஒன்று அறிகிறேன்.

தேடத் தேட ஏமாறல்.

ஏமாற ஏமாறத் தேடல்.

பிறக்கும் கேள்வியிலேயே, அதற்குப் பதிலின் கரு. தொக்கியிருப்பது போல் தேடலிலேயே, தேடும் பொருளின் செந்தூரம் கலந்திருக்கிறது.

ஏமாந்தவனே கொடுத்து வைத்தவன். அவனைவிடத் தேடலின் போதையைத் தெரிந்தவன் யார்?


ஒருநாள்.

லைப்ரரியில் ஏதோ ஒரு புத்தகத்தையெடுத்துப் புரட்டு கிறேன். உள்ளிருந்து ஒரு துண்டுக் காகிதம் பறந்து விழுகிறது. எடுத்து அதில் எழுதியிருக்கும் மூன்று வரிகளைப் படிக்கிறேன்.

“இந்த தடவை ஏமாற்ற மாட்டேன். இன்று மாலை 4-30 மணிக்குக் கட்டாயம், வேப்பமர பஸ் ஸ்டாப் பில் காத்திருங்கள்.”

சுவர்க் கடியாரத்தின் மேல் கண் பாய்கிறது. நிஜார்ப் பையில் காகிதத் துண்டைத் திணித்துக்கொண்டு வெளியே ஓடுகிறேன்.

இந்த அசரீரி விளிப்பில் தான், இன்று, இத்தனை நாள் தவத்தின் கைகூடலா?

மாலையாகியும் கத்தரி வெய்யில் முதுகைப் பிளக்கிறது. கண்ணும் மூக்கும் செவியும் ஆவி பறக்கின்றன.

நிழலுக்கு ஒரு வேப்பங்கன்றுகூட கிடையாது. ஆனால் எனக்கு நினைவு தெரிந்து, அதற்கு முன்னிருந்து கூட – இது வேப்பமர ஸ்டாப் தான்.

பஸ்கள் வருகின்றன. நிற்கின்றன. போகின்றன. யார் யாரோ இறங்குகிறார்கள், ஏறுகிறார்கள், போகிறார்கள்.

நான் நின்று கொண்டேயிருக்கிறேன். பையுள் காகிதத்தை கை நெருடுகின்றது.

இவளாயிருக்குமா?

அவளாயிருக்குமா? இல்லை இவளா?

இவளா??

இவளா???

எவளா?

யாரோ , யாருக்கோ, என்றோ, கையொப்பம் கூட இல்லாது எதற்காகவோ எழுதின மூன்று வரிகளுக்காக, இன்று நான் இங்கு , இந்நேரம் எதற்கு. யாருக்காகக் காத்திருக்கிறேன்?

கேள்விகள் புத்தியின் ஜன்னல்கள்.

ஆயினும் ஒரு எணணம் – ஒரே எண்ணம் புத்தியுள் புகுத்து சாளரங்களையும் அடைத்துக் கொண்டுவிட்டால், புத்தியே அவ்வெண்ணத்தைச் சுமக்கும் ஒடாகி விடுகிறது.

ஏமாந்து கொண்டே, ஏமாந்து கொண்டேயிருக் கிறேன் என்பதை உணர்ந்து கொண்டே, அது பற்றி ஒன்றும் செய்ய இயலாது அங்கே காத்துக் கொண்டேயிருக்கிறேன்.

விளக்கு கூட வைத்தாகிவிட்டது.

நாற்கூடலில் வண்டிகளுக்குக் கைகாட்டி நிற்கும் செந்தலை என்னைச் சந்தேகத்துடன் பார்க்கிறான்.

இவளாயிருப்பாளா?

இல்லை இவளா?

இவளா??

இவளா ???

ஒருத்தி தன் தோழியிடம், என் காது கேட்க “ஸெமியா?” என்று ரகஸ்யமாய்க் கேட்டு அவள் தோளையிடித்துச் சிரிக்கிறாள்.

இன்னொருத்தி முகங் கடுக்கின்றாள். என்னையறியாமலே என் கண் துளும்புகிறது.

ஏமாறுவது என்றால் என்ன? தேடலுக்கு மற்றொரு சொல்லா? அல்லது தேடலுக்கே ஏமாறுதல் என்ற பொருளா?

ஏமாறலே தேடலின் தீவிரத்துக்கு சோதனை.

நாம் என்ன தேடியும், கடைசியில் கிட்டுவது தான் கிட்டும் பொருளுக்கு நம்மைத் தயாராக்கும் பதனம் எனலாமா?


“மாதவா , இங்கே ஒரு நிமிஷம் வந்துட்டுப் போயேன்!”

விசுப் பலகையில், ஜன்னலோரமாய், அம்மா உட்கார்ந் திருக்கிறாள். அவள் மடியில் இருபாதிகளாய் அறிந்த மாதுளம்பழம் கிடக்கிறது.

“மாதவா, வா இப்படி உட்கார். மாதவா, ஒண்ணு சொல்லப் போறேன் கோவிச்சுக்க மாட்டயே?”

சொல்லிக்கொண்டு வருகையிலேயே அம்மாவுக்கு முகம் திட்டாய்ச் சிவந்துவிட்டது. அம்மா நல்ல சிவப்பு.

ஏதுக்கிந்தப் பீடிகை?

“மாதவா, தெருவில் போற பெண்களை உறுத்து முறைச்சுப் பார்க்கிற சுபாவம் ஆண்களுக்கு உடம் போடே பிறந்ததுன்னாலும் – யாரையாவது நீ கையைப் பிடிச்சு இழுத்துட்டேன்னு நான் சொல்லவில்லை – ஆனால் அதுவும் ஒரு கட்டுலே இருக்க வேண்டாமா? அசலார் எதிரார் என்கிட்டே ஜாடையாவும் பளிச்சுன்னும், ‘ஏண்டி கனகா, நான் என்னென்னவோ கேள்விப் படறேனே? உன் பிள்ளை நடுத் தெருவிலே நின்னுண்டு வழியில் போற சிறிசுகள் பெரிசுகள் எல்லாத்தையும் முழுங்கறாப் போல் பாத்துண்டு நிக்கறானாமே? நான் அதை நம்பறேனான்னு கேக்காதே, என் காதில் விழுந்ததை உன் காதில் போட்டு வைக்கறேன். இருந்தாலும் அவனுக்கும் வயசாயிண்டு வரதோன்னோ, காலா காலத் தில் ஒண்ணைக் கட்டிப் போடறது தானே! யாராவது பெண் கொடுக்க மாட்டேன் என்கிறாளா? கனகா தலையை அசைக்க மாட்டாளான்னு தானே காத்திண்டிருக் கோம்!’ இப்படி அவா என் கிட்டே வந்து சொல்ற போது எனக்கு நாக்கைப் பிடிங்கிக்கலாம் போல இருக்கு.”

நான் ஒன்றும் பதில் பேசவில்லை. அம்மாவின் மடியில் மாதுளையின் பாதிகளிலிருந்து முத்துக்கள் அடுக்கடுக்காய் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றன. இனிக்கச் சுவைக்கும் ரஸத்தின் நடுவே துவர்க்கும் விதை பத்திரமாய் உட்கார்ந்து கொண்டிருக்கிறது. இனிக்கும் சாறும் துவர்க்கும் ஸமும் சேர்ந்து தான் முத்து.

இதுவும் அவள் சிரிப்புத்தான். “என்னைக் கண்டு பிடிக்க முடிந்ததா பார்!” என்று என்னைப் பின் மண்டை யில் ஓங்கித் தட்டிவிட்டு, மாதுளையில் புகுந்துகொண்டு சிரிக்கிறாள். அம்மா மடியில உட்கார்ந்து கொண்டு

“என்னை கருடா சுகமா?” என்று கேட்கிறாள்,

தலை சுற்றுதிறது. மண்டையை இரு கைகளாலும் பற்றிக் கொள்கிறேன்.


நான் கண்ணால் கண்டிராது, யார் என்று கூட வெறும் உணர்வில் மாத்திரமே கூட அறியாது, அவள் என் நினைவுள் புகுத்து பீடத்தைப் பற்றிச் கொண்டபின், நான் என் பாதியை உணர்கிறேன்.

பாதியிலும் விபரீதமான பாதி. துண்டாய்த் தனித் திடினும், அதற்கு உயிரற்றாலும். அதன் சாவிலேனும் அதற்கு முழுமையுண்டு. என் நிலையோ, உயிரிலே பாதி சாவிலே பாதியுடன் கலந்து ஊசலின் முழுமையில், ஊசலாடுகிறேன்.

கண்ணாடியுள் அகப்பட்டுக்கொண்ட பிம்பமாய், வெளி வர இயலாது தவிக்கிறேன்,

ஆயிரம் ஆயிரம் சித்திரங்கள், கோலங்கள் நெஞ்சில் பிறந்து விட்டு, தம் உருப்பெற சுவர் தேடித் தவிக்கின்றன.

கீழே சீறும் வெள்ளத்தின் மேல் ஆடும் பாலத்தின் அறுந்த நுனியில் தொங்குகிறேன்.

அதனால், எதனால் தான் அவளுக்கென்ன? நான் அவள் முள்ளில் மாட்டிக் கொண்டவன், அவள் இஷ்டத்திற்கு எந்நேரம் தேணுமானாலும் அவள் என்னுடன் என்னைத் தூண்டிலில் விளையாடலாம். அவள் கரையில் உட்கார்ந் திருப்பவள், காலம் கடந்தவள். காலத்தைப் பற்றி அவளுக் கென்ன கவலை?

அவளைத் தேடித்தேடி, திக்குத் தப்பி. அவளுக்காக ஏங்கித் தவித்து. தேய்ந்து கடைசியில் என் வழியில் எனக்குத் துணை யார் கிடைப்பினும் சரி அவரை, அவளாகக் காணத் தயாராகிவிட்டேன். எனக்கு இப்பொழுது வேண்டுவது அவள் கூட இல்லை . என் பிறப்புடன் என் விதியாய் என் னுடன் வந்திருக்கும் உள்ள எழுச்சி – அன்பு, பாசம், ஆத் திரம் அதை என்ன பெயரிட்டு அழைத்தாலும் சரி. அதற்கு ஒரு வடிகால் , ரூப உணர்வு கிட்டினால் போதும்.

ஆகையால், ஜாதகம் பொருந்தி நான் பார்க்கச் சென்ற முதல் பெண்ணையே வரித்துவிட்டேன். ஆகையால், பெண் என்னை நமஸ்கரித்து, என்னெதிரே வெகு நேரம் உட்கார்ந் திருந்தும் பாடியும் அவளை நான் சரியாய்ப் பார்த்தேன்

எனச் சொல்வதற்கில்லை, அவளைப் பார்க்கு முன்பேயே, ஏற்கத் தீர்மானித்த பின், பார்த்தாலும் என்ன இருக்கிறது?

அம்மா தன் ஏமாற்றத்தை அங்கேயே கூட மறைக்க வில்லை. வீடு திரும்பியதும் கேட்கவும் வேணுமா?

“என்னடாது? தட்டிக் கழிக்க முடியாது தாக்ஷண்யத் துக்குப் பார்க்கப் போனால், போன இடத்தில் பழத்தோல் வழுக்கின மாதிரி பல்டியடிச்சுட்டே? இதைவிட நல்ல பெண் இதைவிட வளத்துடன் உனக்குக் கிடைக்காதா?”

அதற்குள் என் தம்பி குறுக்கிட்டு! “அம்மா, மன்னி யோடு -“

“அது கெட்டுது போ! அதுக்குள்ளே நீ மன்னியுறவு கொண்டாடறது!”

“மன்னி பாடவேயில்லை. வாய் தான் அசைந்தது. அவள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அவளுக்குப் பின் குரல் கொடுத்தாளே அவள் தங்கை, குறுகுறுவென்றில்லை, பாடறப்போ, காதுலே டாலர் ஆடினதே ஒரு ஜோர்!”

“என்கிட்டே சொல்லி என்னப்பா பண்றது? உன் அண் ணன் தான் சொக்கி சுருள் பூரியா விழுத்துட்டானே! இதில் நான் ஏன் பூரணும்? அவன் கண்டது ரம்பை அவன் தாரம் அவன் பாடு! அவன் தலை விதியை அழிச்செழுத என்னா லாமோ?

சிக்காமு நீ என் வாழ்க்கையில் புகுந்த விதம் இப்போது தான். நீ கரையேறிய பின் உன்னிடம் ஒப்புக் கொள்கிறேன். என் வழியில் கண்ணியமில்லை என்கிறாயோ?

ஆனால் சிக்காமு உன்னை நான் ஒரு நாளும் மோசம் செய்ததில்லை. உனக்கு இப்போது தெரிந்திருக்கும்.

ஆனால் உன் பொறாமைகள், சந்தேகங்கள் பஞ்சணை மேல், உன் கூந்தலிலிருந்து மலர் விழுந்தாலும் லயம் பிசகி விடும் நேரங்களும், இறந்தவரையும் எழிப்பிவிடும் போன்ற உரத்த குரலில் உபயோகமற்ற பேச்சுக்களிடையிலும், பெருங்கணக்கில் நீ நல்லவளாய்த்தானிருந்தாய்.

உன்னில் எனக்கு ஏமாற்றமில்லை. நான் எதிர்பார்க்கவில்லை. அதனால் ஏமாற்றமில்லை. உன்னை நான் அடைந்ததும், என் தேடல் தானே நின்றது.

அவளுக்கும் எனக்குமிடையில் அவளை மறைத்த சாயலாய் நின்றாய்.

உன் மயக்கத்தில் அவளை மறக்க, என்னை மறக்க மனங் கொண்டேன்.

என்னை மறந்தால் அவளை மறக்கலாமன்றோ?

ஆயினும் சாதனை என்பதும் ஒரு நினைப்புத்தான் என இப்போது தானே தெரிகிறது!

அவளை நான் மறந்தாலும் அவள் என்னை மறப்பா ளில்லை ,

இலைப் பழுப்படியில் மறைந்து கிடைக்கும் பாம்பு போல், நெஞ்சடியில் உறைந்து கிடந்தாள்.

இருவரும் இளைப்பாறினோமோ? இப்போ ”ஜூட்” இல்லை . அம்பேல்.

என் உத்தியோகம் என்னை எங்கெங்கோ கடத்திச்சென் றது. சிக்காமுவையும் குழந்தைகளையும் கூட பிறந்த வீட்டில் விட்டுவிட்டு வேலை இழுத்த வழி அலைந்தேன்.

பிறகு ஒரு நாள், நெடுநாள் கழித்து ஊர் திரும்பினேன்.

நான் முன்னால் எழுதவில்லை. திடுமென முளைப்பதில் ஒரு குஷி.

வீட்டுப்படி மிதிக்கையில், விளக்கு வைத்தாகிவிட்டது. ரேகை மறையும் சமயம்,

“சிக்காமூ! டேய்பாலூ, வெங்கட்டும்”

யாருமே யிருப்பதாய்த் தெரியவில்லை. திண்ணை சாய் மணைமேல் அகல்விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, வாசற் கதவையும் திறந்து போட்டுவிட்டு, கிராமத்தில் இங்கே தான் இப்படி ‘ஹாய்யா’ போக முடியும். பட்டணத்தில் இந்த ஜம்பம் பலிக்குமா?

கூடத்தில் கைப்பெட்டியை இறக்கினேன்.

“யாரது? அத்திம்பேரா. அடாடா! வாங்கோ வாங்கோ! நில்லுங்கோ நமஸ்காரம் பண்றேன்.”

கோயில் ஆராய்ச்சிமணி என்மேல் தீர்க்கமாயிறங்கு கிறது. புதுப்புடவையின் சலசலப்பு. அவள் நமஸ்கரித்து நிமிர்ந்து எழுகையில், காற்றில் மிதக்கும் லாந்தர் அடியில் சூழ்ந்த இருளில், மூக்குத்தியின் பச்சை பளீரிடுகிறது. கண் களை இருகைகளாலும் இறுகப் பொத்திக் கொள்கிறேன். தரிசனத்தின் தேஜஸ் தாங்க முடியவில்லை. கண்ணுள் நீல மின்னல்கள் கிளை பிரிந்து விளையாடுகின்றன. கால்கள் கிடுகிடுத்தன. தூணில் சாய்ந்தேன். அவளை அடையாளம் கண்டு கொள்கையில் கால் கட்டை விரலிலிருந்து உச்சி மண்டைவரை இன்ப பயங்கரம் ஊடுருவுகின்றது.

காத்திருந்து, ஓய்விருந்து, மறுபடியும் விளையாட்டில் இறங்கி விட்டாளா? வெள்ளிக்கிழமையின் கண்மலர், கவம், ஆபரண அலங்கரண பூஷிதையாய் கர்ப்ப க்ருஹத்தி லிருந்து வெளிப்பட்டு விட்டாளா?

உக்ரமுகி.

“என்ன அத்திம்பேரே , பேந்தப்பேந்த முழிக்கிறேள்? என்னைத் தெரியல்லியா? என் காதிலே டாலர் தேடறேளா? எப்பவுமே ‘ டாலர்’ போட்டுக்கற வயசிலேயே உட்காந்திண் டிருக்க முடியுமா? அக்கா கலியாணத்தின் போது என்னைப் பார்த்தது தானே! அப்புறம் நீங்கள் தான் மச்சினி செத் தாளா இருக்காளா என்று கூட இந்தப் பக்கமே திரும்பிப் பார்க்கவில்லை. என் கலியாணத்துக்கூட உங்களால் வர முடியவில்லை. உங்களுக்கு உங்கள் வேலை அவ்வளவு மும் முரம், முக்கியம் இல்லையா? ஹூம் ஹூம் இருக்கட்டும் சொல்றேன்.”

உபசரிப்பில் கூடத்துக்கும் சமையலறைக்குமாய் அலை கிறாள். ஏதோ வாய் ஓயாமல், மூச்சு விடாமல் பேசிக் கொண்டே :

“நீங்கள் என்னை மறந்துட்டாலும் நான் உங்களை இன்னும் அடையாளம் வெச்சிண்டிருக்கேன் பார்த்தேளா! இதே வந்துட்டேன் அடுப்புலே காப்பி சுட்டுண்டிருக்கு. தோசைக்குக் கல்லைப் போட்டிருக்கேன். அவாள் எல்லாம் இன்னிக்குத் தெப்பல் பன்னெண்டு சுத்தும் பார்த்துட்டு தான் வருவா. தோசை ரெண்டு சூடா சாப்பிடுங்கோளேன். லேட்டா சாப்பிட்டுண்டாப் போறது. அவர்கூட நேத்து வரைக்கும் இங்கே தான் இருந்தார். இன்று காலையில் தான் ஊருக்குப் போனார். நீங்கள் வரப்போறேன்னு ஒரு வரி cபோட்டிருந்தேள்னா அவரை இன்னிக்கு நிறுத்தி வைச்சிருப் பேன். ஷட்டகரைப் பார்க்கணும்னு அவருக்கு எவ்வளவு ஆசை தெரியுமா? ஆனால் என்பைண்றது, மறுபடியும் எப்போ வாய்க்கறதோ அப்போத்தான். நீங்கள் கல்யாணத் துக்கு வராட்டாலும் உங்கள் புண்ணியத்தில் எனக்கு நல்ல இடமாக் கிடைச்சுப் போச்சு. என் வீட்டிலே எல்லாரும் என் மேல் பிரியமாய்த் தானிருக்கா. அங்கே பெண்ணேயில்லை. நான் தான் செல்லப்பெண். எதுக்காவது நான் பதில் பேசி னால் அம்மா என்னை முறைக்கிறாள். ‘எல்லாம் உனக்குப் புகுந்த இடத்தில் கொடுத்திருக்கிற இடண்டீன்னு. எனக்குப் பிறக்கப் போறது பெண்ணாயிருந்தால் அதைக் கண்டு அஸிகைப்படறது முதல் நான் தான். செல்லத்துக்கு என் இடத்தை அது புடிச்சுண்டுடுமே! என்ன அத்திம்பேரே உங்க ளுக்கு ஆச்சரியமாயிருக்கோ? என்னடாது மச்சினி இத்தனை வெகுளியாயிருக்குன்னு! என்ன பண்ணறது ஒத்தரையொத் தர் பாத்துக்கறதே மாமாங்கத்துக்கு மாமாங்கம்னு இருந் தால் அப்படித்தான் ஆகும். என்ன பண்றது எனக்கோ உடன் பிறந்தான் இல்லை. நீங்கள் தான் எனக்கு அண்ணா உங்கள் கிட்டக் கொட்டி ஆத்திக்கறேன் -“

எங்கோ நெஞ்சின் அடிவாரத்திலிருந்து எப்போ கேட்ட மாதிரி ஒரு குரல் செவியண்டை எழுகிறது.

“இவன் பெண் சாதி உன் தங்கச்சி மாதிரி.” எச்சரிக்கைக்கு எச்சரிக்கை. புத்திமதிக்குப் புத்திமதி . நெஞ்சுக்கு நேரே ஒரு கையில் கத்தியைப் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையால் , தன் உரிமையின் கேலியில் என் முகத்தை வருடுகிறான்,

“உன் கண்ணில் பட்டால் இப்படித்தான் படுவேன்’ என்கிறாளா?

தெரு முனையில் வெங்கிட்டுவின் உரத்த குரல் கேட்கிறது.


வாஞ்சியின் வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்.

வாஞ்சி, ஆபீஸில் • தப்புத் தண்டா ‘ வில் மாட்டிக் கொண்டு விட்டான். அதற்கு அவன் தன் சோம்பேறித் தனத்தில், தன் கீழ் சிப்பந்திகளை ரெம்பவும் நம்பி அவர்கள் காண்பித்த இடத்தில் கையெழுத்துப் போட்டது தான் காரணமோ, அல்லது. எவ்வளவு திடசித்தமுடையவனையும் சமயத்தில் காலை வாரி விடும் சபல புத்தியோ, எனக்கு நிச்சயமாய்த் தெரியாது. மோசடியை நான் கண்டு பிடிக் கும்படி நேர்ந்து விட்டது.

ஆபீஸில் அவன் மேல் நடவடிக்கை எடுத்தாகின்றது.. இரண்டு மாதங்களாய் ‘ஸஸ்பென்ஷனில் இருக்கிறான். அவன் வேலையை ஒழுங்குபடுத்தி, அதன் கணக்கு வழக்கு ஊழல்களைச் சரிப்படுத்தும் பொறுப்பு என் தலையில் விழுந்தது.

இன்று துரை என்னைத் தன் அறைக்குக் கூப்பிட்டான். நான் உள்ளே நுழைந்ததும் தன் இடத்திலிருந்து எழுந்து மேஜையைச் சுற்றி – (மேஜையா அது, டென்னிஸ் கோர்ட்!) என்னிடம் வந்து கை குலுக்கினான். அவன் இடது கையில் ஒரு கவர்.

“மிஸ்டர் மாடவ், ஹெட் ஆபீஸ் தங்கள் நன்றியை உங் களுக்குத் தெரிவிக்கும்படி எனக்கு எழுதியிருக்கிறார்கள். ஆகையால் அவர்கள் சார்பிலும் என் சார்பிலும்…”

அவன் சொன்னதெல்லாம் முழுக்க வாங்கிக்கொண் டேனா? கையில் வாங்கிக்கொண்ட கவரைத் திருப்பித் திருப்பிப் பார்க்கிறேன். ஒட்டியிருக்கிறது கனக்கிறது.

இப்போது நான் வாஞ்சியின் வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்.

இதுவரை வாஞ்சியின் வீட்டுக்கு நான் போனதில்லை. ஆனால் எத்தனையோ முறை அழைத்திருக்கிறான் வாஞ்சி. “லஷ்மியின் சப்பாத்தியையும் ‘பாஜி’யையும் ஒரு முறை நீ ருசி கண்டுவிட்டால், நீ என்னவோ பீற்றிக்கொள்ளும் குஜராத்தி பவன்கள் அவள் கிட்ட பிச்சை வாங்கணும்”

ஆனால் இதுவரை அவன் அழைப்பை ஏற்க எனக்கு வாய்த்ததில்லை. இந்த இரண்டு மாதங்களாய் நாங்கள் சந்திக்கக்கூட இல்லை. காரணம்? ஒருவருக்கொருவர் லஜ்ஜை தான்.

“வாஞ்சீ!” தொண்டையின் திடீர் கரகரப்பில் என் குரலே எனக்கு வினோதமாயிருக்கிறது. கதவு ஒருக்களித்துத் தானிருக்கிறது. மெதுவாய்த் தள்ளுகிறேன். உள் வாங்குகிறது.

உள்ளிருந்து ஒரு பையன் ஓடி வருகிறான். என்னைப் பார்த்ததும், நின்று புரியாமல் மிரள மிரள விழிக்கிறான்.

“அம்மா! அப்பாவைத் தேடிண்டு யாரோ வந்திருக்கா!”

முன்றானையில் கையைத் துடைத்தபடியே அவன் தாய் வருகிறாள். என்னைக் கண்டதும் சட்டென நிற் கிறாள். ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நிற் கிறோம்.

இது எப்படி சில சமயம் நேருகிறது என்று தான் தெரிய வில்லை. ஒருவருக்கொருவர் யார் என்று தெரிவித்துக் கொள்ளத் தேவையில்லை. சொல்லாமலே எங்களுக்கு எங்களைத் தெரியும். அவள் முகத்தில் தணல் கணகணக் கின்றது. நெற்றியில் குங்குமம் ஒழுகி வழிகின்றது.

பையனுக்கு என்னைக் கண்டு லஜ்ஜையோ பீதியோ தெரியவில்லை. ஓடி அம்மாவைக் கட்டிக்கொண்டு அவள் பின்னாலிருந்து என்னை எட்டிப் பார்க்கிறான். முகத்தில் இன்னும் பால் மாறவில்லை. தலை குருவிக்கூடாய் வளர்ந் திருக்கிறது. இன்னும் முடி கொடுக்கவில்லை போலும். பெரு விழி வட்டங்களில் நடுவே மூக்கின் எடுப்பு, கிராமத்தில் பனைமேடு பிரிக்கும் இரு குளங்களை நினைவு மூட்டு கின்றது.

அவள் அவனை ஒரு கையால் அணைத்துக் கொள் கிறாள். என்னைக் கண்ட குளிரில் அவர்கள் இருவரும் அப்படி ஒடுங்குவது காண, எனக்கு நெஞ்சை என்னவோ வேதனை பண்ணுகிறது. வாய் அடைத்துவிட்டது. உறையை அவளிடம் நீட்டுகிறேன். வாங்கி முன்னும் பின்னும் திருப்பிப் பார்க்கிறாள். விழிகள் விரிகின்றன. அவர் கை நழுவுகின்றது. அவள் கீழே விழுந்து என் பாதங்களைப் பற்றினதும் எனக்கு உடல் பதறுகிறது. ஆயினும் செய லிழந்து மரமாய் நிற்கிறேன். குனிந்த அவள் குடல் குலுங்குகிறது.

“அம்மா! அம்மா!” பையன் அலறுகிறான்.

அவள் கண்ணீர் என் பாதங்களை நனைக்கையில் ஒவ் வொரு சொட்டும் ஒரு ப்ரளயமாய் வீங்கி, நான் அதில் மூழ்கிப் போகிறேன் , என் விழியில் எழுந்த கண்ணீர்த் திரை யில் எழுதிய உருவில் அவள் தரிசனமாய்ப் படபடக் கின்றாள்.

நான் தேடாத சமயம், சற்றும் எதிர்பாராத சமயம் திடுமென எதிர் தோன்றி வேளை காட்டுகிறாளோ? என் பாதம் தொட்டுத் தன் பணிவு காட்டி எனக்கு விட்டுக் கொடுக்கின்றாளோ? அல்ல, தன் வெற்றியை நிலை நாட்டு கிறாளோ?

சமயங்களில் சமயங்களின் உருப்பெறுவதன்றி தனக் கென்று தனி உருப்பெற இயலாள் என எனக்கு ஊமையில் ஒப்புக்கொள்கின்றாளோ? என் வெற்றி இவ்வெற்றி, என்ன வெற்றி?

என் வெற்றியைக் கழற்றி அங்கேயே விடுகிறேன். என் காலை மெல்ல, மெதுவாய் , விடுவித்துக்கொண்டு வாசற்படி தாண்டு முன் ஒருமுறை திரும்பிப் பார்க்கிறேன். நமஸ்கரிப் பின் ஒடுங்கலில் செதுக்கிய சிலையாய் வணங்கிய அதே. நிலையில் மெய்மறந்து இன்னும் இருக்கிறாள்.

கதவை மெதுவாய் என் பின்னால் மூடுகிறேன்.

சிக்காமு இதை நான் உன்னிடம் சொல்லியிருந்தால் உனக்குப் புரிந்திருக்குமோ? ஆனால் இது மாத்திரமல்ல இன்னும் எவ்வளவோ உனக்குப் புரியாது என்று நான் கொண்டது, என் தேடலின் மமதை, என்னுடைய புரியா மையே தான் என்று இப்போது புரிகின்றது.

சிக்காமு, நீ கொடுத்து வைத்தவள். உன்னை அடைந் த்தில் நானும் கொடுத்து வைத்தவன். என் தராசு தடுமாறும் போதெலாம் எனக்குத் தக்கறு எடையாய் நீ அமைந்தாய். என்ன நிலையில் நிறுத்திவைக்க முடிந்ததோ யில்லையோ நான் தட்டு அறாது காத்தது நீதான். நான் தேடுமவளைத் தேடும் ஆர்வத்தில் எனக்குக் கிட்டியது ஏமாற்றம்தான். ஆனால் உன்னிடம்தான் என் பத்ர மடைந்தேன். நீ தந்த பத்ரத்தின் உதைகாலில் தான் என் தேடலுக்கு எழுச்சியே இருந்தது. ஆனால் பத்ரம் இருக்கும் வரை எங்கு தெரிகிறது? ஒவ்வொரு சமயமும் உன் கயிறின் ஆதாரத்தில் தானே என் முத்துக் குளிப்பில் நான் மூழ்க முடிந்தது. உன்னில் அல்ல – உன்னிலேயே தானோ அவள் என்னருகிலேயே இருந்து என்னை ஏமாற்றிக் கொண்டிருந் தாளோ? பத்ரம் தந்து, தான் தந்த பத்ரத்தைத் தகர்க்கும் ஆர்வமும் அவளே தானோ? காலடியில் புதையலை இடறிக் கொண்டே , இல்லாதவிடமெல்லாம் செல்லாத பொருளைத் தேடியிருந்தேனோ? நீ இல்லாமல் நானே எப்படி இத்தனை நாள் இருந்திருக்க முடியும்?

கிணற்றடியில் சறுக்கினதே சாக்காய் , தப்பிய நினைவு திரும்பாமலே நீ கண் மூடியதும் எனக்குக் கண் திறந்து விட்டது. உன் யாத்திரைக்கு உன்னைத் தயாராக்கிக் கொண்டிருக்கிறார்கள். பற்றிய மஞ்சளும், நெற்றியில் குங்குமமுமாய் மடியில் கட்டிய தேங்காய் வெற்றிலையுடன் படுத்தபடி, அரைக்கண்ணில் என்னைப் பார்த்து நீ புன்னகை பூக்கையில், ‘உன் கண்ணெதிரில் நான் இருக்கையிலேயே தேடுமிடம் தெரியாமல் தேடிக்கொண்டிருந்த முட்டாளே, இதோ நான் போய்விடப் போகிறேன் இனி என்ன செய்யப் போகிறாய்? ‘ என உன் உதட்டோரக் குழிவில் தேங்கிய மௌன ஏளனம், என்மேல் அர்த்தம் விடிகின்றது.

அவள் அல்ல நீ, நீ அல்ல அவள் – அவள் நீ . நீ அவள்
அவளா நீயா? அவளே நீ

என என்னைச் சுற்றிச் சுற்றி அவளும் நீயும் மின்னலிடுகை யில் என்னால் அடக்க முடியவில்லை. “சிக்காமு சிக்காமு கண் அவிந்து போனேனே!” என் கதறல் கேட்டு எல்லோரும் சற்று வியப்புடனேயே என்னை நோக்குகிறார்கள்.

“கிழவர் இத்தனை நாள் வயிற்றுக்குள் இவ்வளவா அடக்கி வெச்சிண்டிருந்தார் ! என்னமோன்னு நினைச் சோமே!” என்று ஒரு பேச்சு காதில் விழுகிறது. இன்னொரு குால்;

“நன்னாயிருக்கு உன் அதிசயிப்பு! கிழவரானாலும் மனுஷன் தானே! இனி அவர் கூப்பிட்ட குரலுக்கு ஏன் என்க யாரிருக்கா? பிள்ளைகள் நல்லவா . நாட்டுப் பெண்கள் தங்கக் கம்பின்னே வெச்சுப்போம். ஒரு தலையை வலிச்சால் பிள்ளைகள் டாக்டரை வரவழைப்பா. நாட்டுப் பெண்கள் கஞ்சி வெச்சு, வேணும்னா படுக்கையைத் தட்டிப் போடுவா. ஆனால் ‘ஐயோ!” ன்னு பதர்றவா யார்? தொப்புள் சுழியிலிருந்து கிளம்பற அந்த ‘ஐயோ’ வின் அதிகாரம் தான் உயிர் வளப்பாண்டி! பாக்கி உன் உபசாரம், மரியாதை, கடமையெல்லாம் வெறும் நாள் வளப்பான்கள்!”

அலைகள் திரள்கின்றன. உருண்டு ஓங்கிக் கொந்தளித் துக் கக்குகின்றன. அத்தனையும் கரை மீது அறைந்து பரவி நீர்த்து வடிகின்றன. திரும்பத் திரும்ப இதேதான். இருப்ப தைக் காணாததும், இல்லாததைத் தேடுவதும், இருப்பதைக் கண்டதும், கண்டதுமே இழப்பது மட்டுமின்றி வேறு என்ன?

என் கையுள் ஒருகை, சொப்புக் கை, நுழைந்து கட்டை விரலைக் கவ்விக் கொள்கிறது.

“அழாதே தாத்தா, நேக்குப் பயமாயிருக்கு என்னைத் தூக்கிக்கோயேன்!”

குனிந்து நோக்குகிறேன். என் கண்ணின் நீர் தாண்டி, ஸிந்து நிற்கிறாள்.

பாலுவின் கடைக்குட்டி, அவளை அப்படிக் காணும் அந்தச் சமயமே, இதுவரையில்லா என் நெஞ்சின் அடி இலைப் பழுப்புகளிடையே சலசலப்பு கேட்கிறது.

மறுபடியும் நெஞ்சடைப்பின் அடித்தகர்ப்பில் உள்ளத் தின் பெருந்தாவல். உடல் நரம்புகளை ஊடுருவும் உள் உணர்வின் ‘பராக்!’.

அவள் வந்துவிட்டாள்.

குழந்தையைத் தூக்கிக்கொள்கிறேன். இனி என்னை நடத்த, என்னைப் பிடித்த குஞ்சுக் கையைக் கண்களில் ஒத்திக் கொள்கிறேன்.


ஸிந்துவோடு பாலுவுக்கு அடுக்காய் ஆறு பெண்கள். இந்த சமயம் பின்ளை ‘யென்று ஒவ்வொரு சமயமும் ஏமாந்து ஸிந்து பிறந்ததும், பாலு வெட்கங்கெட்டவன் பெட்டைப் பயல், கூடத்தில் புரண்டு புரண்டு அழுதான். பாலுவுக்கு ஸிந்துவைத் தந்த அவன் மனைவிமேல் கோபம். அவன் மனைவிக்கும் ஸிந்துமேல் அலுப்புத்தான் என்றா லும், ஸிந்து வந்த பின் தான் பாலுவுக்குப் பெருகிற்று.

ஸிந்து இப்போது என் உள்ளத்தின் படிதாண்டி அதன் பொட்டலைப் போக்கி, என்னைப் புதுப்பிக்கவே வந்து விட்டாள்.

இதுவரை நான் ஸிந்துவைக் கண்டதில்லையா? என் காலடியிலேயே அவள் விளையாடவில்லையா? அவளை மற்றவர் கடிகையில் நான் சிபாரிசுக்குப் போனதில்லையா?” நான் அவள் விஷமம் பொறுக்காது அவளை கடிந்ததில்லையா?

ஆனால் அவள் வந்தாள் என்று அறியத் தெரிவதே ஒரு வாய்ப்பு என்று அன்றி அவள் நேரிடும் சமயத்தையும் ரூபத் தையும் விதிக்க யாரால் முடியும்!

துக்கத்துக்கு மாற்றாய், தன்னை மறக்கடிக்க, ஏற்றிக் கொள்ளும் மயக்கம் பட்டுப்பட்டு, பதமாகி, தேடித் தேடித் தேர்ந்த அறிவின் கத்திவிளம்பில் நர்த்தனமாடும் உள் பிரஞையின் ரூபதிவ்யம்; என் அந்தியில், ஸிந்துவில், அவளை அவள் அம்சபூரணத்தில் சந்திக்கும் அநுபவானந்தம். அதன் பெருக்கில், எங்களிடையில் வயதின் கோடுகள் அழிகையில், ஸிந்துவே என் குழந்தை.

ஸிந்துவே என் தாய்.

என் ஸஹி.

ஸிந்து என் சுமைதாங்கி.

நாங்கள் இருவருமே, ஏதோ ஒரு வகையில் மற்றவருக்கு வேண்டாப் பொருளாகி விட்டோம், நான் என் மூதால் : அவள் தன் வருகையால். அதனாலேயே நாங்களிருவரும் ஒருவருக்கொருவர் தேடிய பொருளாகி விட்டோம்.

மாலை நேரம் நாங்கள் கைப்பிடித்துக்கொண்டு நடக் கையில், என் வீட்டிலுள்ளவர்களின் கேலிக்கும் ஆத்திரத் துக்கும் ஆளாகிறோம்.

“நூத்துப் பாட்டனும், நூத்துக் கிழவியும் உலாத்தக் கிளம்பியாச்சா?”

“அதுக்கென்ன குறைச்சல்? அவா ரெண்டு பேருந்தான் ஒருத்தருக்கு ஒருத்தர் சரி. அது பிஞ்சுலே பழுத்த அத்துரு. அவரும் பழுத்து ஆச்சு. இப்போ அழுகிண்டிருக்கார்! ஒரு சுமுகம் உண்டா, சதா விஷத்தைக் கக்கிண்டு!”

நம்பேரில் விஷம் கக்கினால் என்ன? பாம்பு தன் –மண்டை மாணிக்கத்தைக் காப்பதுபோல் அல்லவா அவளை அடை காக்கிறார்!”

எனக்கு மயிர் கூச்செறிகிறது. ஸிந்துவைப் பிடித்த என் கை இறுகுகிறது.

ஸிந்து என் மாணிக்கம்.

என் தேடலிலேயே ஊறி ஊறி அவள் உறைந்து கரு வாகி உருவாகி, தன் ஒளி காட்டி, தன்னிடம்வர வழியும் காட்டும் என் தேடற் பொருள்.


ஆனால் எதுவுமே எதுவரை? ஸிந்து என்னை இப்போது பிரிந்து விடப் போகிறாள். என் கழுத்தை நெறிப் பதுபோல் கட்டிக்கொண்டு என் மார்மேல் படர்ந்திருக் கிறாள் உடல், நெருப்பில் வதங்கிய வெற்றிலையாய்ச் -சுருண்டுவிட்டாள்.

கொட்டு மழையில் ஒதுங்க இடமின்றி இருவரும் சொட்டச் சொட்ட நனைந்து வந்த அன்றிலிருந்து ஒரு வாரம் நேற்றிரவுவரை உடல் மழுவாய்க் காய்ந்தது. இன்று கம்பளிக்கடியிலும், முழங்கால் சில்லிப்பு மெதுவாய், ஆனால் தீர்மானமாய் இரக்கமற்று மேல் ஏறிக்கொண்டே வருகிறது.

என்னை அவளுக்குத் தெரியவில்லை . அவள் தாய் என் னிடமிருந்து அவளைப் பிடுங்கப் பார்க்கிறாள். ஆனால் குழந்தையின் ஆலிங்கனம் என் கழுத்தை நெறிக்கின்றது. வாய்க் கூரையை வரண்ட நாக்கு “தாத்தா தாத்தா” என்று சப்தமற்று உதைக்கின்றது.

“என் கண் எங்களிடம் ஒட்டாமலே போயிட்டாளே!” என்று பாலுவின் மனைவி வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறாள். பாலு என்னை ஒரு தினுசாய்ப் பார்க்கிறான். எல்லோரும் எங்களைப் பார்க்கிறார்கள்.

அவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அவர்களிடம் அழுகையிருக்கிறது. அது கூட என்னிடமில்லை.

திடீரென என் கழுத்தின் மேல் பிடி தளர்கின்றது. குழந்தையின் தலை சாய்கின்றது. கனத்தை மெதுவாய் கீழே இறக்கிவிட்டு எழுகிறேன்.

பாம்பைக் கண்டாற்போல், எல்லோரும் எனக்கு வழி விட்டு, ஒரு மூலையாய் ஒதுங்கி என்னையே பார்க்கிறார்கள்,

திண்ணையில் போய் உட்கார்ந்து விடுகிறேன்.

எல்லோரும் அலைகளே.

என்னை அழைத்துப்போக வரும் பேரப் பிள்ளைகளின் குரல்கள் கேட்கின்றன.

– அலைகள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: செப்டம்பர் 1993, வானதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *