அலைகள் ஓய்வதில்லை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 29, 2021
பார்வையிட்டோர்: 4,973 
 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அதோ கறுப்பிலிருந்து கறுப்பு பிரிஞ்சு – இருளுக்கும் நிழல் உண்டோ – நிழல் மாதிரி இந்தப் பக்கம் வராப்போல இல்லை ? ஆமாம் வரது, ஆமாம் அவள்தான். அவளேதான். நடையில் தள்ளாட்டம்; ஆனால் அவள் நடைதான். அம்மாடி! வயிற்றுள் கோக்கோகோலா ‘ஜில்’

வந்து வாசற்படிக்கட்டில் அவர் அருகே அமர்ந்தாள். அவர் உடனே உள்ளே சென்று சொம்புடன் வந்து அவளிடம் கொடுத்துவிட்டுத் தன்னிடத்தில் உட்கார்ந்து கொண்டார். அவள் முகத்தைத் துடைத்துக் கொண்டு குடித்த ஆவலில் கழுத்தில் வழிந்து மார்த்துணி நனைந்தது.

தெரு அடங்கிப் போச்சு. இங்கேயே இப்படித்தான். வீடுகள் ஒட்டியில்லை. தனித்தனி காம்பவுண்டுகள். அவர்களுடைய வீடு மட்டும் இந்த posh area வில் ஒட்டாமல், சற்று அந்தக் காலத்து வீடு. ஓரிரண்டு காம்பவுண்டுகளுள் கார்கள் நின்றன. மனுஷாளும் அவர்கள் வீடு மாதிரி. எப்படியும் இவர்கள் அவர்களுடன் ‘டச்’ வைத்துக் கொள்ள வில்லை. விரோதம் இல்லை. ஆனால் தேவையில்லை. அப்படி அமைஞ்சு போச்சு.

“காப்பி குடிச்சாச்சா?” ஜாடையில்.

“இல்லை. நான் வீடு திரும்பவே எட்டாயிடுத்து. நீ?”

உதட்டைப் பிதுக்கினாள்.

“ஏதேனும் ஆகாரம் பண்ணினையா? ஹோட்டல்?-“

கையை விரித்தாள்.

வினாவில் அவர் புருவங்கள் உயர்ந்தன.

“பணம் எடுத்துண்டு போனால் தானே!”

“ஏன்?”

“தெரியல்லே.”

“என்ன அர்த்தம்?”

“தோணல்லே.”

கோபத்தில் அவருக்குக் கன்னம் குறுகுறுத்தது.

“அப்போ வழியில் மாரடைச்சால், கால் வலிச்சா, ஒரு சோடாவுக்கு, பஸ் சார்ஜுக்கு வழியில்லே?”

“அப்படித்தான் தோணறது.”

“நீ பேசறது சரியாயிருக்கா?”

“இல்லை.”

“அப்போ ஏன் அப்படி?”

“என்னவோ தோணித்து, அப்படியே கிளம்பிட்டேன்.”

“சாப்பிடக்கூட இல்லே!”

மடியில் கைகளைக் கோர்த்துக் கொண்டாள். அதுதான் பதில் போல்.

“எங்கே போனாய்?னு கேட்க மாட்டேன். ஆனால் இப்படிப் போய், அப்படி என்ன பார்க்கப் போகணும்?”

“சரி.”

Oh, God, இவள் வம்புக்கு இழுக்கிறாள். ஆனால் நான் இழுபடப் போவதில்லை.

தெருவில் ஒரு உருவம் அவர்கள் பக்கமாக வந்து சற்றுத் தயங்கி, தாண்டிச் சென்றது. Night watchman. முதல் ரவுண்டு.

கூடத்தில் சுவர்க் கடியாரம் 12 மணி அடித்தது 10.30.!

தானாகவே:

“நான் லேட்டுனு தெரியும்.”

அடங்கினாள்.

காத்திருந்தார்.

சற்றுப் பொறுத்து, தானாகவே :

“ஏன் போனேன், ஏன் அப்படிப் போனேன் எனக்கே இன்னும் நிச்சயம் ஆகல்லே. உங்களை ஆபீசுக்கு அனுப்பிச் சுட்டு, என்னவோ கிளம்பிட்டேன்.”

“கதவைக் கூட தாளிடல்லே. நான் வரும் வரை யாரும் உள்ளே புகாதது ஆச்சர்யந்தான்.”

“ஓ! அப்படியா? அது கூட நினைப்பில்லை என்னவோ கால் இழுத்துண்டு போன வழி போயிட்டேன். எலியட்ஸ் பீச்சு”

இங்கிருந்து எலியட்ஸ் பீச்சா? பேஷ்! இவளுக்கு என்னவோ பிடிச்சிருக்கு.

“மணல் சூடு உள்ளங்கால் பொரிஞ்சது. இருந்தாலும் நடந்து ஒரு ஓடத்து நிழலில் உட்கார்ந்தேன். அலைகளைப் பார்த்துண்டிருந்தேன். நாம் சமுத்ரம் பார்த்து எத்தனை நாளாச்சு!”

“அலைகளைப் பார்க்க சுவாரஸ்யமாத்தானிருக்கு. ஒவ்வொரு தடவையும் தூரத்திலே ஒரு ஒரு உரு எடுத்துண்டு சரிஞ்சு நுரை கக்கிண்டு கரை நெருங்கினதும் உடைஞ்சு பரவி, முத்துக் கொப்புளிச்சுண்டு சிதறி வந்த வழியே மீளறதைப் பார்த்துண்டேயிருக்கலாம். என்ன கோபம்! அத்தனையும் வியர்த்தம். ஏனால் அந்த ஓயாத கோபம்? இப்படித்தானே ஸேதுராமன் பாதங்களை எத்தனை முறை கழுவியிருக்கும்!

“ஒ, பக்தி பண்ண சமுத்ரம் போனாயாக்கும்!”

“அப்படியில்லை. ஆனால் இல்லேன்னும் சொல்ல முடியாது. ஒண்ணைத் தொட்டுத்தான் ஒண்ணு. அதில் பக்தி இருந்தாலும் தப்பில்லே.”

“ராமன் காலத்திலிருந்துதானா? அவனுக்கு முன்னா லும் மனுஷாள் இல்லையா?”

“வாஸ்தவம் தான். பல்லாயிர வருஷக் கணக்கில் எத்தனை பாதங்களைக் கழுவியிருக்கும்.”

“வாரித் தன்னோடு இழுத்துண்டும் போயிருக்கும்.”

“என் வாயிலிருந்து வார்த்தைகளைப் பிடுங்கற மாதிரிப் பேசறேளே! ஆச்சரியமாயிருக்கு.”

“என் இளமையில் அலைகளில் குளிச்சிருக்கேன். காலை ஒன்பது மணிக்கே வந்துடுவேன். இதுக்களுக்கு ஒரு தனி ஆகர்ஷணம் உண்டு. அலைகளில் குட்டிக்கரணம் போடுவேன் சுகமாயிருக்கும். உடம்புக்கு ஒத்தடம் கொடுத்த மாதிரி இதமாயிருக்கும். அப்புறம் ஒரு சமயம் குட்டிக்கரணம் போட்டுக் கீழே காலிறங்குகையில் பாதம் மணலில் பதிய வில்லை. பயந்து போனேன். அப்படியே இழுத்துண்டு போயிட்டால்? அன்றிலிருந்து அலைகள் பக்கம் போவ தில்லை. அம்மாவுக்கு மிஞ்சினேன். ஏற்கெனவே அவள் நிறையப் பறிகொடுத்தவள்.”

“எனக்கும்தான் மிஞ்சினேள். நம் கலியாணம் நடக்கு முன்னாலேயே -“

“Thank you. ஆனால் அலைகள் ஓய்வதில்லை.”

சற்றுப் பொறுத்து, அவள்: “சேகர் அலை தாண்டியே போய்விட்டான்.”

“ஓ, யோசனை அப்படியும் போக முடியுமோ?”

“ஏன் போகாது? ஒண்ணைத் தொட்டுத்தானே ஒண்ணு!”

“அவனை சிங்கப்பூருக்கே இழந்துட்டோம்.”

“இதோ பார் கோமதி, நாம் பெற்றதனால் மட்டும் நம் குழந்தைகள் நமக்குச் சொந்தமாகி விடாது. அது அது தன் விதியைத் தான் நூத்துக் கொள்ளத்தான். பிறவி என்பதே அதுதானே! பிரிவு சுலபமல்ல. ஒப்புக்கறேன். அவனுக்கும் இருக்காதா? ஒண்ணு வேணும்னா, ஒண்ணை இழந் தாகணும். வாழ்க்கையில் எதுவுமே இலவசமில்லை. அவன் வெளிநாடு போனதால் நமக்கு என்ன குறைவா வெச்சிருக் கான்? இன்னும் அமோகம். நம்ம வயசில் நமக்கு இது தேவையில்லாத அமோகம். ஆனால் அமோகம்.”

“ஆமாம்.”

“எப்பவோ ஒரு தடவை சொன்னேனாம். ஒரு குடும்பத் தில் ஒருவன் முன்னேறிவிட்டால் குடும்பமே உருப்பட்டு விடும்னு அதைக் கெட்டியாய் பிடிச்சுண்டுட்டான். அதை நடத்திக் காட்றான். முடியறது காட்டறான்.”

“அது சரிதான். ஒரு பக்கம் சொல்லிக்கப் பெருமையாத் தானிருக்கு.”

“அவன் சிங்கப்பூர் போகாட்டா, நீ வாரம் இருமுறை யேனும் உன் அலமாரியைத் திறந்து மூடி, திறந்து உள்ளே இருப்பதைக் கீழே போட்டு, மறுபடியும் அடுக்கி அழகு பார்த்துண்டிருக்க முடியுமா?”

“இந்த எடக்குப் பேச்சில் குறைவில்லை. உங்களை என்ன பண்றேனாம்?”

“Correct. அது உன் சந்தோஷம். ஆனால் என் தாய் என்னத்தைக் கண்டாள்?” அவருக்கு மூச்சு லேசாகத் திணறிற்று. ”காண, கண்டு மகிழ அவளிடம் என்ன இருந்தது? ஆனாலும் அவள் தன் வாழ்க்கையில் கசந்து கொண்டு நான் பார்த்ததாக எனக்கு ஒரு நாளும் நினைப் பில்லை . எப்பவும் சிரிச்ச முகம். சுறுசுறுப்பா எப்பவும் ஏதேனும் காரியமா, தோட்டம் போட்டுண்டு பசு மாடைப் பார்த்துண்டு வளைய வருவாள். காய்கறிக் கூடைக்காரி போணிக்கு அவளிடம்தான் வருவாள். நான் இப்படி ஆனப் புறமும் என்னிடம் என்னடி போணி?’ என்று கேட்டால், ‘அப்படியில்லேம்மா, நீ வாங்காட்டாப் போறே, சும்மா உன் கையை, காய்கறி மேல்வை போதும். உன் அம்ஷம் உனக்குத் தெரியாது, எங்களுக்குத் தெரியும்’ என்பார்கள்.”

“உங்கள் அம்மா கைராசி எனக்கும் தெரியும்.”

:ஒவ்வொருத்தர் அப்படி அம்சத்துடன் பிறக்கறா. ஆனால் நானும் பார்த்தாச்சு. இந்த அசாதாரிணிகள் பிறருக்குப் பயனாயிருப்பார்கள். ஆனால் தாங்கள் சுகப் பட்டதில்லை. அவர்களுக்குப் பெரிய பலம் அவா மனசு தான்.” பெருமூச்செறிந்தார். எங்கேயோ போயிண்டிருக் கேன். சேகரைப் பத்திப் பேசிண்டிருந்தோம். நம் பெண்ணைப்பத்தி நினைச்சையா?”

“நினைக்காமல் என்ன, பேசினால் தான் உண்டா ?:

“ஒரு சமயம், சுமார் அஞ்சு வருஷத்துக்கு முன்னால், அவளுக்குக் கலியாணம் நேரும் முன்னால் காத்தி, நீ இப்போ உக்காந்திருக்கையே இதே இடத்தில் – ஆமாம் அது இப்போ நினைவுக்கு வருவானேன்? ஒரு ஆச்சரியம், கோமதி நினைவுகள் அல்ல, எண்ணங்கள் ஒருநாளும் அழிவதில்லை. ஒரு தடவை தோன்றினவுடன், வீணாவதேயில்லை. சதா ஈதரில் நீந்திக் கொண்டேயிருக்கின்றன. மறுபடியும் ப்ரஸன்னமாக, இன்னொரு அர்த்தமாக முகூர்த்தத்துக்கு காத்திருக்கின்றன. மனுஷ ஜன்மத்தின் பெருமையே இது தான். எண்ணத்தின் மூலம் நாம் பிரும்மாக்கள், சிரஞ்சீவி கள். நாம் வாழ்க; எனக்கு உடம்பு சிலிர்க்கிறது.”

“உங்களையே வாழ்த்திக்கறேள்” இருட்டில் அவள் புன்னகை தெரியவில்லை.

“இருக்கலாம். ஆனால் ஒரு பொதுவான உண்மையை வெளிப்படுத்துவதன் மூலம் வாழ்க்கைக்கு நன்றி சொல்வ தாகத்தான் எண்ணம், பார்த்தையா மறுபடியும் வருவது எண்ணம்தான். எண்ணத்தின் உருவத்தில் நன்றி. அன்று இரவு அப்படித்தான் அமைஞ்சிருந்தது.

இங்கே நம் வீட்டுக்கெதிரே கொஞ்சம் மைதானமாயிருக் கறத்தினாலே, வானம் நிறைய இருக்கு. அன்னிக்கு நக்ஷதரம் ஒரேயடியா பூத்துக் கொட்டிக் கிடந்தது. நிலா இல்லை. இருட்போடு சேர்ந்த மர்ம வெளிச்சம். நீ உள்ளே வேலையா யிருந்தே. பசங்க வெளியே போயிருந்தாங்க.”

“அப்பா !”

“Yes?”

“நன்னாயிருக்கப்பா!”

அமைதியில் மனமே முழுத் துல்லியத்தில் ஸ்னானம் செய்த ஒரு தனி லேசு, ஒரு விடுதலை. முள் வேலியுள் அவர்கள் வீட்டெதிரே பசும் புல்தரை உண்டு Chlorophyll இன் குளுமை. தென்றல் அவர்களை ஒத்திற்று. கிழக்கே பார்த்த வீடு. நாம் கொடுத்து வைத்தவர்கள். காரணமே தெரியாத, தெரியத் தேவையற்ற ஒரு மன நிறைவு.

“அப்பா எனக்கு இப்போ ஒண்ணு தோணித்து.”

“சொல்லு.”

“இந்த சமயத்துக்கு மௌனம் தான் பாஷை. ஆனால் தோணினதைச் சொல்லித்தான் ஆகணும். தோணிடுத்து. இதுவே மௌனத்திலிருந்து தோணினதுதானேப்பா!”

“Beautiful. சொல்லு.”

“அப்பா! அப்பா அம்மா நீங்க ரெண்டு பேர். நான், சேகர், கண்ணன், ஸ்ரீகாந்து நாங்கள் நாலு பேர். நாம் சேர்ந்து எப்பவுமே ஒண்ணு.”

“ஒண்ணாத்தானேயிருக்கோம்! ஏன், மூத்தவனை மறந்துட்டியா?”

“மறக்கல்லே. ஆனால் நான், நம்மோடு அவளை சேர்க்கல்லே.”

“……..?”

“அவன் தனியாப் போயிட்டான். அவனுக்குக் கலியாண மான ஒரு வாரத்துள் நீங்களே அவனைத் தனிக்குடித்தனம் வெச்சுட்டேளே!”

“அதுதான் அவனை நீ சேர்த்துக் கொள்ளாத காரணமா?” அவர் புன்னகையில் கேலி அரும்பிற்று.

“இல்லை அவன் நம் இனத்தில் சேர்ந்தவன் இல்லை. நல்லவன்தான். ஆனால் நம்மோடு ஒட்டாமல் எப்பவுமே தன் சுபாவத்தில், தன் காரணம், தன் வழின்னு வாழறான்.’

“அது தப்பா? யாருமே அப்படித்தானே!”

“அது சரிதான். அவனுக்கு எங்களைப் பிடிக்கும். எங்களுக்கும் அவனைப் பிடிக்கும். பேச்சில், செயலில் correct. வாக்குத் தவறாதவன்னு பேர் வேறே வாங்கிட்டான். ஆனால் அவன் நம் இனத்தில் இல்லை. எனக்குச் சொல்லத் தெரியல்லே அப்பா!” அவர் கைமேல் தன் கையைப் பொத்தி, “அப்பா, நாம் 2+4=1” அவள் உள்ளங்கை சுட்டது. அவள் முகத்தை இருளில் பார்க்க முடியவில்லை. ஆனால் தகதகத்தாள். நக்ஷத்ர வெளிச்சம்? வானினின்று ஒரு மீன் சீறி விழுந்தது-ஏதோ சபதம் பிறந்தாற்போல்.

எங்கோ ஏதோ மொக்கவிழ்ந்து சமயம் கமகமத்தது.

அவளுடைய மூர்க்கம் தன்னையும் தொற்றிக் கொண்ட புல்லரிப்பில், கூடவே அச்சத்தில் தன் சுழலில் இழுத்துக் கொண்டு போய் விடாதபடி, தன்னைத் தன்னுடன் இருத்திக் கொண்டார்.

“Beautifull idea. ஆனால் நடப்புக்கு வராதேம்மா!”

“ஏன்?”

“உனக்கே கலியாணம் ஆனால், உன் புருஷனுக்கு இந்த அவையில் இடம் கிடையாதா?”

“கிடையாது. ஆளைப் பார்த்து, study பண்ணி அப்புறம் யோசிக்க வேண்டிய விஷயம். No. இதை யோசிக்க வேண்டி யதே இல்லை, இந்த equation சொன்னது சொன்னதுதான் 2+4=1, 2+4=1” ஜபித்தாள்.

“இது நடக்கற காரியமா காத்யாயினி?” அவர்தான் முழுப்பெயரிட்டு அழைப்பார்.

“உன் கலியாணம் நடந்து, நீ புக்ககம் போக மாட்டையா? பசங்கள் வேலையில் மாற்றலாகி வெளியூர் போகமாட்டார் களா? அவர்களுக்குப் பெண்டாட்டிமார் உரிய காலத்தில் வரமாட்டார்களா? குழந்தைகள் பிறக்காதா? எங்களுக்கு வயசேறிண்டே போகாதா?”

“இருக்கட்டுமே! சந்தர்ப்பவசங்களால் பிரிந்து போனாலும் ஒன்று என்பது பிளந்து போகணுமா? யார் எங்கிருந்தா லும் 2+4=1. வேறு எப்படி எனக்குச் சொல்லத் தெரியல்லே.”

“எனக்குப் புரியறதம்மா. 4+2=1. இது ஒரு லக்ஷியம். ஒரு அழகிய எண்ணம். இந்த வேளையின் விளைவு. ஆனால் அதில் நடப்பு இல்லை . நீதியில்லை . உன் பாசத்தின் சுயநலம் இருக்கிறது. ஆனால் குழந்தை, உன் எண்ணத்துக்கு நீ எங்கிருந்தாலும் சௌக்யமாயிருக்கணும். உன் நல்லெண்ணம் உன்னைக் காப்பாத்தட்டும்.” அவர் குரல் தழுதழுத்தது. அவள் தலையை இழுத்துத் தன் கழுத்து வளைவில் அணைத்துக் கொண்டார்.

இருவரும் அவரவர் யோசனைகளில் ஆழ்ந்திருந்தனர். எத்தனை நேரமோ, பின் அவள்,

“ஆமாம் அப்படிச் சொன்ன காத்தியைத்தான் வருஷக் கணக்கில் பார்க்க முடிவதில்லை. இத்தனைக்கும் கோவை தான். காண முடியாதவரை சிங்கப்பூரில் இருந்தால் என்ன, கோவையில் இருந்தால் என்ன?”

“ஏன் உன் தம்பி இங்கே திருவான்மியூரில் தானே இருக்கான்! அவனைப் பார்க்கப் போறையா?”

“அதெப்படி? அவளவாளுக்கு வீடுன்னு அமைஞ்சப் பறம் அங்கென்ன எனக்கு அனாவசிய வேலை?”

“இதன் பேர்தான் பெண்டுகள் நியாயம். இதனுள் நான் புகுந்து புறப்படப் போவதில்லை. இதுக்கு முடிவே கிடையாது. நம் பேச்சிலே நாம் திசை தப்பி, எங்கோ போயிட்டோம்.”

“ஆமாம், அலைகளைப் பார்த்துண்டு குருட்டு யோசனை பண்ணிண்டிருந்தேனா, திடீர்னு பசி நெனைப் பெடுத்துடுத்து. அதென்ன வரபோதே அப்படிக் கொழுந்து விட்டுண்டு!”

மனசை மாத்திக்க எழுந்து நடந்தேன். அலையோரமா நடந்தேனோ நடந்தேன், இன்னொரு ஓடம் கண்ணுக்குத் தட்டுப்படற வரைக்கும். ஆனால் நெருங்க நெருங்க ஓடத்தடி காலியாயில்லை. ஏற்கெனவே ஒரு ஜோடி பிடிச்சுண் டிருந்தது. வெள்ளைத் தோல்கள் ! ஹிப்பிகள் என்கிறோமே அவா போல இருந்தா. ஆண் ஒரு காதுலே மட்டும் வளையம் போட்டிருந்தான். ரெண்டு பேருமே அழுக்குன்னா அப்படி ஒரு அழுக்கு அந்த சிக்குப் பிடிச்ச தலை. சரைக்காத தாடி யும் ஊத்தை ஊறிப் போன மஞ்சள் காவிப் பல்லும் இந்த வெய்யில்லே எப்படி அவாளால் குளிக்காமல் இருக்க முடியறதோ ! ரெண்டு பேருமே சின்ன வயசுதான். ஆனால் முறுக்கு விட்டுப் போன உடம்பு. அவர்கள் உடைகள் நெருப்பில் போட்டால் கூடப் பத்திக்காது அப்படி ஒரு அழுக்கு.

அதென்ன அழுக்கையே வழிபாடாய்க் கொண்டு இப்படி ஒரு வர்க்கமா? அவர்களிடமிருந்து காற்று வாடையே – பாதி என் அருவருப்பும் கலந்திருக்கலாம் –

அவாளைத் தாண்டுகையில் என்னை விரட்டி அடிச்சது. மூக்கைப் பிடிச்சுண்டு ஓடினேன். அவா சிரிப்பு என்னைத் துரத்தித்து. எனக்குக் காலே விட்டுப் போம் போல் ஆயிடுத்து! இன்னொரு ஓடம் வரும் வரையில

ஆனால் அங்கேயும் இடம் காலியாயில்லை . ஒருத்தி முழங்காலைக் கட்டிண்டு உட்கார்ந்திருந்தா. அலையைப் பார்த்துண்டு. அவளுக்கு எட்ட, ஓடம் தந்த நிழலோரமா உட்கார்ந்தேன். அவள் வயது நாற்பதுகளில் இருக்கலாம். குறிப்பா அவள் கூந்தல் அடர்த்தியா, முரடா சாம்பல் விட்டுண்டு, அது அவிழ்ந்து, தடுமனா முதுகில் சரிஞ்சிருப் பது கூடத் தெரியாமல், அலையைப் பார்த்துண்டு இருந்தாள்.

எனக்கு முதுகு கெஞ்சித்து. ஆனால் இவள் உட்கார்ந் திருக்க நான் எப்படிப் படுக்கறது? காலை நீட்ட இடமில்லை.

ரெண்டு பேரும் அலையைப் பார்த்துண்டிருந்தோம்.

மெதுவாக அவள் முகம் என் பக்கம் திரும்பிற்று. விழி யோரங்களிலிருந்து இரண்டு ஸ்படிகங்கள் புறப்பட்டுக் கன்னத்தில் வழிஞ்சு மோவாயிலிருந்து உதிர்ந்தது. அருண்டு போயிட்டேன். ‘திக்’கெனு ஆயிடுத்து.

‘அலைகள் ஓய்வதில்லை’ என்றாள்.

அவளுடைய கண்ணீ ருடன், அவளுடைய அந்தப் பொதுவான வாக்கும் சேர்ந்து கொண்டு அவள் திடீர்னு களையாயிட்டா. “நீங்கள் தான் சொல்லணும். துக்கத்துக்குத் தெய்வம் உண்டோ?”

“இதென்ன கேள்வி? துக்கத்தைத் தெய்வமாய்க் கொண்டாடணுமா?”

“அப்படிச் சொல்லல்லேன்னா, அந்தத் துக்கத்தின் வெறி, காரணம் எல்லாம் நாளடைவில் அடங்கி, ஒரு படர்ச்சி காலத்துக்கும் மனசில் தங்கிப் போயிடறதே, அவரைப் பந்தலடியில் நிழல் மாதிரி, வைரத்தில் ஓட்டம் தெரியறது என்கிறாளே, கானல் நடுங்கற மாதிரி, அப்புறம் சமுத்திரத்தில், ஏரியிலோ அலை தாண்டின அமைதியில் ஒரு ஓடம் கவிழ்ந்து மிதந்தால் நெஞ்சில் அடைக்கும் அது மாதிரி…”

“கோமதி நீயா பேசறே?”

“பின்னே யாராம்? அவள் முகத்தில் களைமாறினதைப் பார்த்தேன். துக்க தேவதையாத் தோணித்து. தோணினதைச் சொல்றேன். அப்புறம்தான் குண்டைத் தூக்கிப் போட்டாள்:

“போன வருஷம் இதே அலைகளுக்குத்தான் என் பிள்ளையைப் பறிகொடுத்தேன்.”

தூக்கிவாரிப் போட்டது.

“கரையில் உட்கார்ந்திருந்தேன். அலையில் போய் நின்னுட்டு வரேன்னான். என்னையும் எனக்குக் கைப் புத்தகத்தில் ஸ்வராஸ்யம் போகல்லே. அவன் போனான். எனக்குப் புத்தகத்தில் கவனம். திடீர்னு ‘அம்மா’ன்னு ஒரு அலறல். நிமிர்ந்தால், அலையோடு போயிண்டிருந்தான். அந்த அலறலும் சேர்ந்து, உடல் பூரா வெலவெலத்துப் போயிட்டேன். வாயடைச்சுப் போச்சு. இது ஆள் நடமாட்டம் தள்ளிப் போன இடம். ஒத்தரும் கண்ணிலும் படல்லே. அவ்வளவுதான். போயே போயிட்டான். பிணம்கூடக் கிடைக்கல்லே.

என்னென்னவோ கேக்கணும், ஏதேனும் ஆறுதல் சொல்லணும்னு தோணித்து. ஆனால் குரல் தோத்துடுத்தே!

என் கேளாத கேள்விக்குப் பதில் சொல்வதுபோல்.

பையன் பதினாலு வயஸுக்கு வாட்ட சாட்டமா கட்டு மஸ்தாயிருப்பான். நல்ல வளர்த்தி. நான் பெத்திருந்தால் கூட எனக்கு அப்படிக் கிடைக்கமாட்டான். ‘அம்மா, அம்மா’ன்னு அப்படி உசிரை விடுவான்.”

‘என்ன சொல்றா?’ குழம்பிப் போனேன்.

“நான் இரண்பாந்தாரம். என் மூத்தாள், அஞ்சு வருஷத் துக்கு முன்னால் gas ஸ்டோவ் வெடிச்சுப் போயிட்டா. மாமா சீக்காளி. என்னைவிட ரொம்பப் பெரியவர். தன் உடம்பையும் பையனையும் சேர்த்து அவரால் பார்த்துக்க முடியல்லே. என் வீட்டிலும் வழியில்லை. அங்கேயும் அப்படி ஒண்ணும் வளமில்லை. ஆனால் விதின்னு ஒண்ணு இருக்கே மாமி, எப்படி சேர்க்கறது பாருங்கோ! இல்லாட்டா எனக்கு முப்பத்தி அஞ்சு வயசுலே ஒரு கல்யாணமா?” குலுங்கிக் குலுங்கி அழுதாள். இப்போது தனக்கும் சேர்த்து.

“மாமா எப்படி இருக்கார்?” அசட்டுக் கேள்வி.

“இருக்கார். யார்தான் என்ன பண்ண முடியும்? ஆனால் நான் அவர் எதிரே நடமாட நேரும் போதெல்லாம் அவர் கண்கள் மௌனமாய்க் குற்றச்சாட்டுடன் என்னைப் பின் தொடருவதாக எனக்குத் தோணும். எப்படியும் எனக்குக் குத்தமுள்ள நெஞ்சுதானே! அவன் அழைச்ச போதே, நானும் அவனோடு அலையில் நின்னிருந்தால் நானும் அவனோடு போயிருப்பேனோன்னோ! இப்படி இங்கே வந்து ஒக்கார்ர போதெல்லாம் பிராயச்சித்தம் பண்ணிக்கறதா நெனச்சுக்கறேன். ஆனால் இது பிராயச் சித்தம் ஆகுமா? இப்போ நானும் விழுந்துட்டாலென்ன? ஒரொரு சமயம் தோணறது. ஆனால் உசிர் வெல்லமா யிருக்கே! மானம் ஆறிப் போச்சு. ஊசிப் போன பண்டம். பொய் மறுபடியும் கவிஞ்சுண்டுடுத்து. அலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கறதுடன் சரி.”

சொல்லிக் கொண்டே எழுந்தாள். நானும் எழுந்தேன். மணல் கடந்து செல்கையில், ஏன், அப்புறமே நாங்கள் பேசவில்லை. ரோடு வந்ததும் சொல்லி வெச்சாப்போல, அவளுடைய பஸ்ஸும் வந்தது. ஏறிப் போயிட்டாள்.

அப்போதிலிருந்து நடந்து வரேன் பசி ஓய்ஞ்சு வெறும் வயிறு இழுத்துப் பிடிச்சுண்டு வலிக்க ஆரம்பிச்சுடுத்து. சேர்ந்தாப் போல் நடக்க முடியல்லே. அங்கங்கே உட்காந்து – என்ன இவ்வளவு தூரமா? வீடு போய்ச் சேர்வேனா?

வழியில் எத்தனை கார், லாரி பறந்தது. lift கேட்டிருக் கலாமோ? முதல்லே பழக்கமில்லை – அதுக்கெல்லாம் ஒரு தனி சாமர்த்தியம் வேணும். இப்பத்தான் தோணறது. ஒண்டிக் கட்டைப் பொம்மனாட்டியே அது சின்னவளோ, பெரியவளோ, என்னிக்குமே தனக்கு ஆபத்துத்தான். நான் பெரிய தப்புப் பண்ணிட்டேன்.”

இருவரும் அப்பறம் பேசவில்லை.

மேலே , நக்ஷத்ர மயானக் கொள்ளையிலிருந்து ஒரு நக்ஷத்ரம் திடீரெனத் தனிப்பிதுக்கிறது. என்னைப் பார்! இருவர் கவனத்தையும் பற்றி இழுத்தது. பெரிய கற்கண்டுக் கட்டி இல்லை, ஸ்படிகம். நான் இவ்வளவு பெரிசு ஆனால் நான் அநாமி. என் ஸ்படிகம் என் தனிக் கண்ணீர். எனக்காக இரங்குவோர் யார் இருக்கா?

அவர் குரல் அந்த அமைதியின் மந்தரத்தில் கண கணத்துக் கொண்டு வந்தது.

மஹா சோகம் மஹா யாகம்.
அதில் ஆத்மா தன்னையே ஆஹுதியாகச்
சொரிந்து கொள்கிறது.
ஆத்மாவுக்கு அழிவில்லை.
யாகத்துக்கும் முடிவில்லை.

பூவரசிலிருந்து ஒரு இலை உதிர்ந்தது.

“எல்லாம் சரி. இத்தனை வேதனைப்பட்டு அவலம் கெட்டு, சீர் அழிஞ்சாவது வெளியே போய் திரும்பி வரணுமா? என்பதற்கு காரணம் தெரியலையே!”

“காரணம் இருக்கிறது.” அவள் த்வனி அவருக்குச் சற்று ஆச்சர்யமாயிருந்தது. அது தேவையில்லை.

“ஆம். நான் சொல்லப் போகிறேன். நிச்சயமாய் சொல்லித்தான் ஆகவேண்டும். இத்தனை நேரம் கழித்து வந்து சொல்லாமல் முடியாது.”

அவருக்கு லேசாகக் கோபம் படர்ந்தது.

“ஏன் இப்படிப் படபடக்கிறாய்?”

“நேற்று நீங்கள் என் கையைப் பிடித்தீர்கள்.”

“பிடித்தேனா? எனக்கு ஞாபகமில்லை. சரி. பிடித்தேன். அதனாலென்ன?”

“எனக்குப் பிடிக்கவில்லை.”

அவருக்குத் திடீரென்று ஞாபகத்தில் கருவிழிகள் விரிந்தன. விழுந்து விழுந்து சிரித்தார்.

“ஓஹோ. அப்படியா கதை!”

அவள் சிணுங்கினாள்.

“எனக்கு இப்போதெல்லாம் அதெல்லாம் பிடிப்பதில்லை. குழந்தைகள் பெத்தாச்சு. வளந்தாச்சு. அவாளும் பெரியவாளாகி தனித்தனி மரங்களாக ஊணியாச்சு. இனி என்ன வேண்டிக்கிடக்கு?”

அவர் யோசனையாய் “ஆமாம். நீ ஏற்கெனவே சொல்லி யிருக்கிறாய். ஆனால் கோமதி யோசித்துப்பார். நீ ரிஷி பஞ்சமி முழிக்காவிட்டாலும் அந்த விரதம் தாண்டிய வயது அடைஞ்சாச்சு. நானும் சின்ன வயசில்லே. இனி நம்மிடையில் என்ன எதிர்பார்க்கிறேனாம்?”

“அப்படிச் சொல்லாதீர்கள். டாக்டர் மதுரம் சொன் னாள். மூணு நாளைக்கு முன்னால் B.P. பார்க்கப் போன போது ”உடம்பைப் பார்த்துக்கோங்கம்மா. அவரைப் பக்கத்தில் அணுகவிடாதீர்கள் -” எங்களுக்கெல்லாம் வயசாச்சும்மா – நீங்கள் சொன்னதைத்தான் நான் சொன் னேன்- ஆண்களை எத்தனை வயசானாலும் நம்ப முடியாது-“

“டாக்டர் மதுரம் என் பெண்ணாயிருக்கலாம். ஏன் பேத்தியாகக் கூட இருக்கலாம்.”

“ஆனால் அவ டாக்டராச்சே”

இரண்டு கைகளையும் தரையில் ஊன்றிக்கொண்டு பூவரச மரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“நான் ஏன் உன் கையைப் பிடித்தேன் தெரியுமா?”

“எனக்கெப்படித் தெரியும்?”

“நேற்று இரவு நீ மிளகுக் குழம்பு செய்திருந்தாய். மேஜையில் வாழை இலையில் குவிந்த சாதத்தில் ஆவி பறக்க கமாளித்தது. அதைத் தொடுவதற்கு என் கை கூசிற்று. அப்படி ஒரு கொதி சூடு. என் திண்டாட்டத்தைக் கண்டு நீ என் கையை உதறிவிட்டு சாதத்தைப் பரக்கப் பரக்கப் பிசைந்தாய்.”

“ஏனெனில் அதை அப்படி சாப்பிட்டால்தான் வயிற்றில் கவ்வும்.”

“உன் கை பொரிந்து போய்விட்டது. பார்க்க கஷ்டமர் யிருந்தது. கையைப் பிடித்தேன். எனக்காகத்தானே. சின்ன வயசில் அம்மா எனக்குப் பிசைந்திருக்கலாம். ஆனால் இப்போ இல்லை. உன் கையைப் பிடித்த மாதிரி அவள் கையைப் பிடித்திருக்கத் தோன்றியிருக்காது. என்னமோ தோணித்து பிடித்தேன். நன்றியா? அன்பா? விசுவாசமா? என்னத்தை அறிவேன்?”

“ஆமாம். எங்களுக்குக் கை பொரியறது பெரிசா? எத்தனை தடவை குக்கரில் சுட்டுக் கொண்டிருப்போம். தோசைக்கல்லில். காய்ச்சின பாலில். இதை எல்லாம் யோசிக்கக் கூட நேரம் கிடையாது. பொம்மனாட்டிப் பிழைப் பென்றால் லேசா?”

“அதில்லை கோமதி. தாய் மாதிரி பிசைஞ்சயே? இந்த வயசில் யார் பிசையறா? தாய்க்குப் பின் தாரம்ங்கற பழமொழி சும்மாவா? ஐ லவ் யூ கோமதி.” ஒரு கேவல் அவரிடமிருந்து புறப்பட்டது.

“ஓ. அப்படியா விஷயம். தப்புப் பண்ணிட்டேன்.”

“எல்லாப் பெண்களும் எப்படியோ அடிமனசில் விவஸ்தை கெட்டவர்கள். தப்புப் பண்ணிட்டேன்னா.”

அவள் கை அவர் மேல் பொத்திற்று.

“நீ என்னைத் தொடுகிறாய் கோமதி.”

“உங்களைத் தொடணும்ன்னா. ஒரு கனம் தீர்ந்தது. ரொம்ப நாழியாயிடுத்தே ரசிக்கலையா சாப்பிட வேண்டாமா? ஹோட்டலுக்குப் போவோமா? த்ரீ ஸ்டார். ஆட்டோ பிடிச்சா போச்சு.”

“இத்தனை நாழிக்கு மேலேயா? தனியாய்ப் போவது உசித்தமில்லை. ஹோட்டல் கூட மூடியிருக்கும்.”

“போனாப் போவட்டும். நானே சமைச்சுட்டா போச்சு. குக்கர்ல சாதம் வேகறத்துக்குள்ள GHAT ஆ பெருங்காயமும் மிளகும் போட்டு ரசம் நிமிஷமா காய்ஞ்சுடும். ஒரு பருப்புத் துவையலும் அரைச்சுட்டாப் போச்சு.”

நைட் வாட்ச்மேன் கம்பிகளைத் தட்டிக் கொண்டு அவனுடைய அடுத்த சுற்றில் வருகையில் அங்கு ஒருவருமில்லை. வீடு தாளிட்டிருந்தது.

– அலைகள் ஓய்வதில்லை (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: டிசம்பர் 2001, வானதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *