அலாவதீனும் குட்டிநாயும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 8, 2014
பார்வையிட்டோர்: 8,893 
 
 

அன்று ஞாயிற்றுக் கிழமை காலைப்பொழுதில் டியுசனை முடித்துக்கொண்டு, வீட்டை நோக்கி ஆளுக்கொரு சின்ன சைக்கிளில், ஜோசப்பும், பீரிஜெயின் அலாவுதீனும் வந்து கொண்டிருந்தார்கள். பெரிய அரச மரத்தடியில், ஒரு நாய் குரைத்துக் கொண்டிருந்தது. அதைச்சுற்றி நான்கு குட்டி நாய்கள் கத்திக்கொண்டிருந்தன. ஜோசப் தன் சைக்கிளை நிறுத்திவிட்டு, தன் மூக்குக் கண்ணாடி மூக்குப் பகுதிக்குள் லேசாக அமுக்கிவிட்டு, யோசித்தான். இந்த நாய் நேற்றுக் காலை சினையாகத்தானே திரிந்தது. நேற்று மாலையோ இரவோதான் குட்டிகள் போட்டிருக்க வேண்டும்.

லவ்லி. வாவ் பியூட்டி! என்று கண்களை அகல விரித்தான். கொஞ்ச தூரம் சென்றுவிட்ட பீர்ஜெயின் அலாவுதீனுக்குக் காட்டி மகிழ, நினைத்து தன் சைக்கிளின் பெல்லை அடித்தான். அவன் திரும்பி பார்த்து, என்ன என்பது போலக் கேட்காமல் கேட்டான். ஜோசப் நாய்க் குட்டிகளைச் சுட்டிக் காட்டினான். பீர்ஜெயின் அலாவுதீனும், நாய்க்குட்டிகளின் சேட்டை மிகுந்த அக்காட்சிகளைப் பார்த்து பிரமித்துப் போய்த் துள்ளியபடி கைகளைத் தட்டினான்.

ஜோசப் ;அலாவுதீனுக்கு நீ ஒரு நாய்க்குட்டியை எடுத்து; போய் வளர்த்தா என்ன? ஒனக்குத்தான் நாய்க் குட்டியே இல்லையே’

‘ம்… எங்க அத்தை திட்டும். அதுவும் இல்லாம எனக்கு நாய் வளர்க்கத் தெரியாது. கொஞ்ச நேரம் இங்கேயே நின்னு பர்த்துட்டு போய்விடலாம்.

அத்தை திட்டுனா என்ன? மாமாகிட்ட சம்மதம் வாங்கி வளர்த்துரு. மாமா ஒனக்கு செல்லம் கொடுப்பாரு தானே. நாய் வளர்க்குற முறையை நான் உனக்குச் சொல்லித் தருகிறேன். சரியா?

‘ம்…ஏன் நீயும் ஒரு நாய்க்குட்டி எடுத்துப் போய் வளவே’ என்றான்.

‘ம்ஹ{ம்….எங்க டாடி மம்மிக்கு நாட்டு நாயினாலே பிடிக்குறதில்லே…. ஏற்கனவே டாபர்மேன், ஜெர்மேன் செப்பேடு, பொமரியன்னு மூணு பாரின் நாய் வளர்க்கிறோம்’. என்று சொல்லிவிட்டு, ஜோசப் ஒரு கல்லை எடுத்து தாய் நாயை அடிப்பது போல் போக்குக் காட்டினான். பால் குடித்துக் கொண்டிருந்த நாய்க்குட்டிகளைக் காலால் இலேசாக உதைத்து தள்ளிவிட்டான். தாய் நாய் சிறிது தூரம் ஓடிவிட்டது. அங்கிருந்த நாய்க்குட்டிகளின் மெல்லிய முனகல் ஒலிகள் சற்று பலமாகவே கேட்டன. மூன்று இடங்களில் பிஸ்கட் கலரில் திட்டு திட்டாக உள்ள வெண்மை நிறமுள்ள ஒரு நாய்க்குட்டிய லாவாகத் தூக்கிக்கொண்டு வந்து அலாவுதீனிடம் கொடுத்தான். நாய்க்குட்டிக் கத்தத் தொடங்கியது. மகிழ்ச்சியில் நாய்க்குட்டிக்கு சிறிய இதமான முத்தம் கொடுத்தான். முதுகை வாஞ்சையுடன் தட்டிக் கொடுத்தான். மற்ற குட்டி நாய்கள் மரத்தடியில் கத்திய வண்ணம் இருந்தன. வழி நெடுக அலாவுதீனுக்கு, நாய் வளர்க்கும் முறைகள் பற்றி, எழுபது வயதுக் கிழவன் போல், ஜோசப் விரிவுரை ஆற்றிவந்தான். அலாவுதீன் வீடு வந்தது. ஏதேனும் நாய் வளர்பில் சந்தேகம் வந்தால் தனக்கு உடனே போன் செய்து தெரிந்து கொள்ளுமாறு கடைசியாகக் கூறிவிட்டு ஜோசப் விடை பெற்றுக் கொண்டான்.

கேட்டைத் திறந்து நாய்க்குட்டியின் கத்தலுடன் உள்ளே நுழைந்தான். குட்டி நாயின் சத்தம் கேட்டு அத்தையும் மாமாவும் வெளியில் வந்தார்கள். அத்தை கோபப் பார்வையில் அலாவுதீனைப் பார்த்தாள். மாமாவோ நாய்க்குட்டியைக் கண்டு சத்தமில்லாமல் தன் மனைவிக்குத் தெரியாமல் ரசித்தார்.

மனதுக்குள்ளேயே ‘நாய்க்குட்டியை வளர்க்கப் போகிறாயா? பேஷ்..பேஷ்… சந்தோஷம் என்று மனைவி பார்க்காதவாறு அவனுக்குப் பின்னால் நின்று கொண்டு குட்… குட்… என்பதாக சைகை செய்து விட்டு பின்னர் மாடிக்கு தூக்கிச் செல்லுமாறு அன்பு கலந்த சைகை செய்தார். பைரோஸ் பானு கணவன் பக்கம் திரும்பி அலாவுதீனை நோக்கி சுட்டுவிரல் காட்டி, ‘பார்தீங்களா ஒங்க தங்கச்சி புள்ளய இன்னும் இரண்டு வருஷத்துல பத்தாவது போகப் போவுது. படிப்புல ஆர்வத்தக் காட்டுமா? நாய்க்குட்டியைத் தூக்கி வந்துருக்கு. போனக் காலாண்டுல 2 வது ரேங்க் தான் வாங்கியிருக்கான். அரையாண்டுல பஸ்ட் ரேங்க் எடுக்கல, அன்னிக்கு இருக்கு. இவனுக்குப் பொறந்தநாளு. மலேசியா போயிருக்கிற உங்க தங்கச்சியும் மாப்புள்ளயும் இவன சரியா வளக்காட்டி என்னைய சும்மா விட்டுருவாங்களா. புத்தகம் எடுத்துப் படிக்கறதுன்னா கசப்பு, பொம்ம படம் பாக்குறது, கிரிக்கெட்டு, கால்பந்து வெளையாடுறதுன்னா சோறு தண்ணி கூட வேண்டாம். இந்த நாய்க்குட்டியை வேற தூக்கி வந்துருச்சா பொழுதினைக்கும் அதோட தான் இனிமே ஆட்டம் போடும். ஏ உசுரு தான் போவுது’ என்று பெருமூச்சு விட்டாள் அத்தை.

பீர்ஜெயின் அலாவுதீனக்கு இந்தப் பேச்சு வழக்கமாக வாங்குற ஏச்சுதானே! ஏன்னா இன்னிக்கு நாய்க்குட்டியை சாக்கா வச்சு அத்தை திட்டுகிறார், என்று பயந்த படி மௌனமாகப் பார்த்தான். அவனின் மாமா, ‘அந்தக் காலக்கட்டம் வரும்போது புள்ளங்க மாறிடும். விளையாடற வயசுல விளையாட வேணாமா? அலாவுதீனுக்குத் திறமை ஜாஸ்தி. ஒரு தடவ படுச்சாலே போதும். அலட்டிக்காம படிச்சே இரண்டாம் ரேங் வாங்குறான். அது போதும். டென்த் வரும்போது அவனே உணர்ந்து படிப்பிலே கூடுதலா கவனம் செலுத்துவான். இந்தக்காலத்துப் புள்ளங்ககிட்ட கண்டிசன் போட வேண்டாம் அறிவுரை, ஆலோசனை, பரிந்துரை சொன்னாலே போதும். அலாவுதீனுகிட்ட எந்நேரமும் ஏன் கடுகடுப்பா பேசுற? அவங்க அம்மா ஊருல இருந்தா இப்படியெல்லாம் பேசமாட்டா. நீ பெத்த புள்ள ஏழாவதுல இரண்டு வருஷம். ஒன்னோட கண்டிசன் அவனிடம் பலிக்குதா? அலாவுதீன எப்பப் பார்த்தாலும் தேளாட்டம் கொட்டுற. உளவியல் ரீதியாய் சின்ன ஆறுதல் இந்த சின்னப் பையனுக்குத் தேவைப்படுகிறது. அதுனாலதான் குட்டி நாய் வளர்க்க ஆசைப்பட்டு எடுத்து வந்துட்டான்.

பைரோஸ் பானு இடமறித்து ‘ஆரம்பிச்சிட்டிங்களா ஒங்க உபதேசத்த… இவன் நாய் வளர்க்கட்டும், பேய் வளர்க்கட்டும் அதுபத்தி எனக்கு கவலை இல்ல. நிக்காவுக்குப் போயிட்டு வர்ரத்துக்குள்ள சயின்ஸ்ல ஐந்து பாடத்திலேயும் கேள்வி கேட்பேன். ஒழுங்கு மரியாதயா படி என்று கட்டளையிட்டு காரில் கிளம்பிச் சென்றாள். பிர்ஜெயின் அலாவுதீனும் இது வழக்கான மிரட்டல் தானே படித்துவிட்டால் போகிறது, என்றபடி கதவைதச் சாத்திவிட்டு … குட்டியுடன் மாடிப்பகுதிக்கு விரைந்தான்.

அந்த அறையில் மலேசியா சென்றுள்ள அவன் அம்மாவுடன் குழந்தையாக இருந்த போது எடுத்த போட்டோ ஒன்று மாட்டப் பட்டிருந்தது. நாய்க்குட்டிக்கு அதக் காட்டி ‘தோ பாரு …எங்க பேரண்ஸ்’ என்றான். நாய்க்குட்டி கத்தியபடி போட்டோவை நக்கியது. ஜோசப் சொன்னான் அல்லவா? நாய் வளர்க்கும் முறைகள் பற்றி! அத செயல்படுத்த ஆரம்பித்தான். தன் சேமிப்பிலிருந்த நூறு ரூபாய்த் தாளை உண்டியலிலிருந்து எடுத்தான். நாய்க்குட்டியைத் தூக்கிக் கொண்டு அருகிலுள்ள கடைவீதிக்குப் போனான். சிறிதாக ஒரு பெல்ட், மெல்லிய செயின், நாய் தின்னும் ரொட்டி பாக்கெட், நாயைக் குளிப்பாட்ட ஒரு சோப்பு, நெற்றியில வைத்துவிட ஒரு ஸ்டிக்கர் பொட்டு பாக்கெட் ஒன்று ஆகியன வாங்கிக்கொண்டு வீட்டிற்கு விரைந்தான்.

நாய்க்குட்டி வழி நெடுக கத்திக்கொண்டே வந்தது. ஸவர் பாத்தை மெலிதாகத் திறந்து விட்டு நாயைக் குளிப்பாட்டினான். பாதி சோப்பு கட்டியைக் கரைத்து விட்டான். தன் அம்மா வெளிநாட்டில் இருந்து அனுப்பிவைத்தத் துண்டால் மிருதுவாகத் துடைத்துவிட்டான். நாய்க்குட்டி கத்தியபடியே இருந்தது. அலமாரியிலிருந்து வாசனையுள்ள பவுடரை அதன்மீது தூவினான். முன்னைவிட அதிகமாகக் கத்தியது. நெற்றியில் ஸ்டார் வடிவமுள்ள ஸ்டிக்கர் பொட்டை ஒட்ட வைத்து நெற்றியில் முத்தமிட்டான். ஜாப்பர்க்கான்…ஜாப்பர்க்கான்…’ என்று கத்தி பெயர் சூட்டினான். புதிதாக வாங்கிய பெல்டையும், செயினையும் நாய்க் குட்டி கத்த கத்த மாட்டிவிட்டான். ஜன்னலோரக் கம்பியில் மெல்லிய செயினைக் கட்டினான். மிருதுவான தலையணைகளை எடுத்து நாய்க்குட்டியை உட்காரும்படிக் கேட்டுக்கொண்டான். அது நின்று கொண்டு கத்திக் கொண்டே இருந்தது. இடைவெளியில்லாமல் ஜாபர்க்கான் கத்திக் கொண்டே இருந்தது. உனக்குப் பசிக்குதா கீழே போய் பால் எடுத்துட்டு வறேன்’ என்று கீழே போய் தான் குடிக்கும் டம்பளரில் பால் எடுத்து வந்தான்.

நாய்க் குட்டி அதைக் குடிக்கவில்லை. ஒரு கட்டத்தில் அதைத் தட்டி விட்டது. அவனுக்கு சுருக்கென கோபம் வந்தது. வந்த வேகத்தில் அடக்கிக் கொண்டு மிதியடிகளைக் கொண்டு துடைத்து எடுத்தான். புதிதாக வாங்கிய ரொட்டித் துண்டுகளைத் துண்டாக்கி ‘சாப்பிடு ஜாபர்க்கான்’ என்று அன்புக் கட்டளையிட்டு ஊட்டவும் செய்தான். நாய்க் குட்டி திங்கவில்லை. ரொட்டித் துண்டுகளைப் பார்த்துக் கத்தியது. அறையில் புழுக்கம் அதிகமாகியது. நாய்க்குட்டியிடம் கேட்டான். ‘ஜாபாக்;கான் உனக்கு வேக்குதா இதோ ஏசி போட்டுவிடுகிறேன், என்றபடி ஏசி சுவிட்சைப் போட்டான். ஏசி சத்தத்தக் கண்டு மிரண்டு போய் கத்தியது “ஜாபர்க்கான் படம் பார்க்குறீயா’ எனக்கேட்டு டிவி சுவிட்சை ஆன் செய்தான். விலங்குகள் வரும் சேனலைப் போட்டு ‘ஜாபர்க்;கான் அங்க பார் அம்மா யானையும் குட்டியானையும் பார்!’ என்றான். நாய்க்குட்டி பதிலுக்குக் கத்தியது. இப்போதய கத்தலில் நாய்க்குட்டி பலமிழந்து கத்துவது அவனுக்குத் தெரிந்தது. நேரம் கடந்து இருட்டத் தொடங்கியது. மழை வேறு தூற ஆரம்பித்து விட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. டார்ச் லைட்டைத் துழாவி எடுத்துக்கொண்டு நாய்க்குட்டியைப் பார்த்தான். சத்தம் ஓய்ந்த பாடில்லை. ரொட்டியைத் திங்கவில்லை. கிழே தட்டிவிட்ட, டம்ளரில் இருந்த எஞ்சிய பாலைக் குடிக்கவும் இல்லை. சிறிது நேரத்தில் நாய்க்குட்டி சோர்வுடன் மூச்சிரைக்க கீழே படுத்துக் கொண்டது.

வீட்டிற்கு வெளியே இலேசாக ஒரு நாய்க் கத்துவது கேட்டது. கொஞ்ச நேரம் கழித்து ஜன்னலைத் திறந்தான். நாய்க் கத்தும் சத்தம் தெளிவாகக் கேட்டது. டார்ச் ஒளியைக் கொண்டு, சத்தம் வந்த திசையில் அடித்தான். ஜாபர்க்கான் நாய்க்குட்டியும் பதிலுக்குக் கத்தத் தொடங்கியது. மழை வேறு நன்றாகத் தூறிக்கொண்டிருந்தது. வீட்டிற்கு எதிரே உள்ள வேப்ப மரத்தடிக்கு கீழே காலையில் பார்த்த தாய் நாய் தனது குட்டிகளோடு வந்து மழையில் நனைந்து கொண்டே கத்தியது. பீர்ஜெயின் அலாவுதீன் கத்துகிற பெரிய நாய், ஜாபர்க்; கானின் அம்மா நாய் என்பதைக் கண்டுகொண்டான். அருகில் நின்ற மூன்று நாய்க்குட்டிகளும் அதற்கு சாட்சியாயின. ஒரு வினாடி மழைத்தூறல் நின்று கத்தும் அம்மா நாயையும், உள்ளே கட்டியிருக்கும் ஜாபர்க்கானையும் ஒரு சேரப் பார்த்தான். மெல்லிய டார்ச் ஒளியில் மலேசியாவில் உள்ள தன் அம்மா போட்டோவும், பீர்செயின் கண்களுக்குத் தெளிவாகத் தெரிந்தன.

வெடுக்கென டார்ச்சை கீழே போட்டுவிட்டு ஜாபாக்;கானின் பெல்டை அவிழ்த்து விட்டது தான் தாமதம். அவனின் கைகளுக்கு அகப்படாமல் ஒரு அசுர பலத்துடன் துள்ளிக் குதித்து மடிப்படியிறங்கி வெளிக்கதவின் தூவாரம் வழியே போய் தன் தாய் இருக்கும் திசையில் ஓடிச்சென்றது. அவன் மாடியில் இருந்த படியே, டார்ச் ஒளியில் பார்த்தான். மற்ற குட்டிகளோடு சோர்ந்து ஜாபர்கானும் பால் குடித்தது. இப்போது சத்தம் துளிக்கூட இல்லை. சிறிது நேரத்தில் மழை விட்டவுடன் தாய் நாய் ஜாபர்க்கான் உட்பட நாய்க்குட்டிகளுடன் இருளில் எங்கோ ஓடிச்சென்றுவிட்டது.

அப்போதுதான் தான் சோர்வாக இருப்பதாகவும், மதிய உணவு சாப்பிட வில்லை என்பதையும் பீர்ஜெயின் அலாவுதீன் உணர்ந்தான். காரின் ஹாரன் சத்தம் அலாவுதீனை சலனப்படுத்தவில்லை. காரணம் டார்ச் ஒளியில் வேலை நிமித்தமாக மலேசியாவிலுள்ள, தன் அம்மா அப்பாவுடன் தான் குழந்தையாக இருந்தபோது எடுத்த புகைப்படத்ததைப் பார்த்துக் கொண்டிருந்தான் கண்களில் நீர் சொட்டிக் கொண்டிருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *