அலமுவின் சுயசரிதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 13, 2014
பார்வையிட்டோர்: 9,979 
 
 

[ஸ்ரீமதி அலமு தன் சுய சரிதையை எழுதியிருக்கிறாள். அவளுக்கு எழுதுவதற்கான அவகாசம் அதிகமாய்க் கிடையாதாகையால், இந்தச் சரித்திரத்தின் நடை ஒரு மாதிரியாயிருந்தாலும் நீங்கள் மன்னித்துக் கொள்ளவும். அவளுடைய வாழ்க்கையின் பல சந்தர்ப்பங்களைப்பற்றிய குறிப்புகள் அவ்வப்போது அவள் வைத்திருந்தபோதிலும், அவைகளை அவள் லக்ஷ்யம் செய்ததாகத் தெரியவில்லை. ஆகவே, அவள் முக்கியமாகத் தன்னுடைய ஞாபக சக்தியின் பேரிலும், கற்பனை சக்தியின் பேரிலுமே பூராவாக நம்பிக்கை வைத்திருக்கிறாள்.

அலமு தன் கதையை எழுத ஆரம்பித்துவிட்ட சமாசாரம் கேள்விப்பட்ட அவளுடைய பழைய சிநேகிதிகளுக்கிடையே மிகுந்த பரபரப்பும் பீதியும் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அவளுடைய பயமற்ற, யோசனையற்ற வழக்கங்களையறிந்த அவர்கள், அவள் தங்களைப்பற்றி என்ன சொல்லப் போகிறாளோவென்று திகிலுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சுப்பிப் பாட்டி இது காரணமாகச் சமையலில் அடிக்கடி பிசகு செய்கிறாளென்று தெரிகிறது. அவள்மட்டுமல்ல; இன்னும் பல வீடுகளில் இவ்வாறு நடப்பது வாஸ்தவம்.]

அதிகாரம் 1

முன்னுரை

இந்த அபூர்வமான கதையை நீர் வாசிப்பதற்கு முன்னால் இந்தக் கதையில் என்னதான் இருக்கிறதென்று (நீர் ஏமாறக்கூடாதென்பதை உத்தேசித்து) தெரிவித்து விடுகிறேன். இது ஒரு ஸ்திரீயின் கதை — பூரா கதையும் அல்ல. ஏனெனில், நான் இன்னும் இறக்கவில்லை. இது ஒரு நாடகமல்ல; இது ஒரு துப்பறியும் கதையல்ல; அல்லது இது ஒரு செந்தமிழ் நவீனமுமல்ல.

ஆனால், ஒன்றுமட்டும் நிச்சயம்: இந்தக் கதை எல்லாப் பெண்களுக்கும் பிடிக்கும். பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் வாசித்துத்தான் பாருங்களேன்.

அதிகாரம் 2

என் பெற்றோர்

ஈசுவர சாட்சியாய் நான் 1908ஆம் வருஷம் மே மாதம் பத்தாம் தேதி அவதாரம் செய்தேன். வழக்கம்போல் எனக்குப் பெற்றோர் இருவர்தான்: தாயும் தகப்பனும். என் தகப்பனார் கட்டு மீசையுடன்கூடிய ஒரு போலீஸ் கான்ஸ்டபிள். நான் பிறக்கும்போதே தம்முடைய தியாகத்தினால் ஹெட்கான்ஸ்டபிள் பதவியை அடைந்துவிட்டார்!

என் தகப்பனாரை நான் மறக்கவே மாட்டேன். ஏனென்றால், அவர் பெரிய பெரிய சண்டைகளெல்லாம் போட்டிருக்கிறார். ஒரு சமயம் ஒரு கொள்ளைக் கூட்டத்தாரை ஒற்றைக் கையினால் – அவருடைய மற்றொரு கை சட்டைப் பைக்குள் இருந்தது – அடித்துத் துரத்தியிருக்கிறார்.

என் தாயாரும் நல்ல தைரியசாலி. அவளுக்குக் கலியாணமாவதற்குமுன் பல பெரிய மனிதர்கள் வீட்டிலெல்லாம் வேலை செய்திருக்கிறாளாம். ஓர் இடத்திலாவது ஒரு வாரத்திற்குமேல் இருந்தது கிடையாதாம். இது காரணமாக எங்கள் வீட்டில் இன்றைக்கும் பல பெயர்கள் போட்ட வெள்ளிப் பாத்திரங்கள் இருக்கின்றன. அம்மாவையும் அப்பாவையும்பற்றிச் சொன்னது போதும். இனிமேல்…

என்னைப்பற்றித்தான்

நான் பிறந்தபோது என் தாயும் தகப்பனும் ரொம்ப சந்தோஷம் அடைந்தார்கள். என் தாயார் நான்தான் இந்த உலகத்துக்குள்ளேயே ரொம்ப அழகு, ரொம்பச் சமத்து என்று நினைத்தாள். எல்லாத் தாயார்களுமே தங்கள் குழந்தைகளைப்பற்றி அப்படித்தான் நினைக்கிறார்கள். இருந்தபோதிலும் என் விஷயத்தில்மட்டும் என் தாயார் அப்படி நினைத்தது மிகவும் சரி.

ஒரு சமயம் எனக்கு மூன்று வயது ஆகியிருந்தபோது நான் ஓடிப்போய்க் காணாமற் போய்விட்டேன். என் தகப்பனார் பல பேருடன் தேடியதில் கடைசியாக ஆற்றங்கரையில் தன்னந்தனியாகத் தவழ்ந்துகொண்டிருந்தேனாம்.

எனக்கு நாலு வயதானபோது என்னை ஒரு பாம்பு கிட்டத்தட்டக் கடித்துவிட்டது. நல்ல வேலை, நான் அதை முன்னதாகவே கடித்துவிட்டேன். அது இரண்டே நிமிஷத்தில் இறந்தது. எனக்கு என் அம்மா கூழ் மோர் காய்ச்சி வைத்தாள். அதை நான் குடிப்பதற்குள் என் அப்பா சாப்பிட்டு விட்டுப் போய்விட்டார்.

(அநேகமாய்க்) கொல்லப்பட்டேன்!

நான் ஒரு சமயம் அநேகமாய்க் கொல்லப்பட இருந்து தப்பிப் பிழைத்தேன். நான் இருந்த ஊருக்கு நூறு மைலுக்குள் ஓர் ஊரில் என் வயதுள்ள ஒரு பெண்ணை ஒருவன் கொன்றுவிட்டு நகைகளைக் களவாடிச் சென்றதாகச் செய்தி கிடைத்தது. ஒருகால் அந்தப் பெண் நானாக இருந்தால்…?

(ஏறக்குறைய) இறந்தேன்!

ஒரு பதினெட்டாம் பெருக்கின்போது என் தாயாருடன் சிற்றுண்டி சாப்பிடக் குளத்துக்குப் போனேன். கால் சறுக்கி விழுந்துவிட்டேன். அப்போது நான் இறந்திருந்தால் உயிரோடு இருந்திருக்க மாட்டேன். நல்ல வேளையாகக் குளத்தில் ஜலம் இல்லாமையால் தப்பிப் பிழைத்தேன்!

சண்டையில் ஜயித்தேன்!

ஆகவே, மேற்கூறிய சம்பவங்களிலிருந்து என்னுடைய குழந்தைப் பருவம் எவ்வளவு அபாயகரமான கண்டங்கள் நிறைந்ததென்று நீங்கள் ஒருவாறு அறிந்திருக்கக்கூடும். ஒரு சமயம் என்னை வெகு கோபமாக ஒரு கொசு துரத்திக் கொண்டு வந்துவிட்டது. நான் போலீஸ்காரர் பெண் என்பதை மனத்தில் நினைத்துத் தைரியமாய்ச் சண்டைக்கு நின்று ஜயித்தேன்.

பள்ளிக்கூடம்

”அலமு” என்று கூப்பிட்டார் என் அப்பா. ”நீ புத்திசாலிதான்! இருந்தாலும் உனக்குக் கொஞ்சம் படிப்பும் வேண்டும். பள்ளிக்கூடத்துக்குப் போய் வாசிக்க வேணும்” என்றார்.

சற்று நேரத்துக்குள் என் சாமான்கள் எல்லாவற்றையும் – மரப்பாச்சி, ரெயில் வண்டி, மாக்கல், குங்குமச்சிமிழ், பாசிமணி, சொப்பு – வாசிப்புக்கு முக்கியமாய் வேண்டிய இவ்வித மற்றச் சாமான்களையும் எடுத்துக்கொண்டேன்.

பள்ளிக்கூடத்தில் சேர்ந்தவுடன் அங்கிருந்த மற்றப் பெண்களைவிட நான் எல்லா விதத்திலும் கெட்டிக்காரி என்று அறிந்துகொண்டேன். வாத்தியாரம்மாகூட என்னை ‘அரைச்சமத்து’ என்று சொன்னாள். மற்றப் பெண்களிடம் இருக்கிற சமத்தைவிட எனக்கு அரைப்பங்குகூட என்று தானே அதற்கு அர்த்தம்?

என்னுடன்கூட ராஜகோபாலன் என்று எட்டு வயதுப் பையன் ஒருவன் வாசித்தான். அவன் ரொம்ப அழகு. எனக்கும் அவனுக்கும் ரொம்ப சிநேகிதம். அவனைப் பார்த்தவுடனேயே அவன் வயதானவுடன் பெரிய துஷ்டனாகப் போவான் என்று எனக்குத் தோன்றிற்று. என் ஜோஸ்யம் பலித்தது. அதேபோல் அவன் இப்போது ஒரு முனிஸிபல் சேர்மனாயிருக்கிறான். அப்போது அவன் ஒரு கடிதம் எழுதி என் கையில் கொடுத்தான்:

என் அலமுவுக்கு,

எனக்கு உன்மேல் ரொம்ப ஆசையாயிருக்கு, நிச்சயமாய். ஆசையாக உன் கண்ணைப் பார்த்தால் என்னவெல்லாமோ செய்கிறது. உன்னைக் கண்டால் நிறையக் கொழுக்கட்டை தின்பதுபோல் இருக்கிறது.

அருமை அலமு – எனக்கு உன்மேல் ரொம்ப ஆசை. உன்னை எப்பவும் நேசிப்பேன் – நமக்குக் கலியாணம் ஆகும் வரையில் –

உன் பிரியமுள்ள தோழன்

இராஜகோபாலன்.

பி.கு. – எனக்குக் கலியாணம் செய்வதற்கு என் தகப்பனார் ‘நீ சின்னவன், அனுபவம் போதாது’ என்று சொல்கிறார்; நான் ‘அவருக்கு ரொம்ப வயதாகி விட்டது, மூளை மழுங்கிவிட்டது’ என்கிறேன்.

ராஜு

அதிகாரம் 3

ரூபலாவண்யம்

எனக்குப் பதினாலு வயசானதும், இயற்கையாகவே நான் நிரம்ப அழகாய்ப் போய்விட்டேன். என் கண்கள் நீல மலையை யொத்திருந்தன. என் குதிகால்வரை என் தலை மயிர் பொங்கி வழிந்தது. பல் முத்துப்போல் இருந்தது. சுருங்கச் சொன்னால் – பெருமை யடித்துக்கொள்கிறேன் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள் – நான் ரொம்ப அழகாய்த்தான் இருந்தேன்.

என் புத்திசாலித்தனத்தைப்பற்றிச் சொல்லத் தேவையில்லை. எனக்குத் தெரியாத விஷயங்களைப்பற்றியெல்லாம் அசாத்தியமாய்ப் பேசி வந்தேன். ஆகவே, என் வயதுள்ள மற்றப் பெண்களுக்கெல்லாம் என்மேல் அசூயை ஏற்பட்டது ஆச்சரியப்படத் தக்கதன்று.

எனக்கு வந்த வரன்கள்

முதல்முதலில் என் அத்தையிடம் ஒருவர் என்னைப் பற்றிப் பேசினார். நல்ல பணக்காரனா என்று பார்த்துக் கொண்டுதான் அத்தை என்னைப்பற்றிப் பேச்செடுப்பாள்.

”பெண் நல்ல சூடிகை” என்றார் வந்தவர்.

”ஆமாம்.”

”என்னை அவளுக்குக் கலியாணம் செய்துவைத்துக் காப்பாற்ற வேணும்.”

”எதிலிருந்து காப்பாற்றவேணும்?” என்று அத்தை ஆச்சரியத்துடன் கேட்டாள்.

”ஏன், பிரம்மசாரிதனத்திலிருந்துதான்” என்றார் அவர்.

அன்று நான் என் குறிப்புப் புத்தகத்தில் என்ன எழுதினேன், தெரியுமா? இதுதான்: ”எனக்கு வந்த முதல் வரன். இன்று நான் 9-30 மணி முதல் 10 மணிக்குள் 77 தரம் புன்னகை புரிந்திருக்கிறேன்.”

அடுத்தபடியாக வந்தவர் ஓர் அபூர்வமான அழகர். என்ன உயரம்! என்ன மூக்கு! என்ன மோவாய்க்கட்டை! அவருக்கு ஸப்ரிஜிஸ்டிரார் ஆபீஸில் காப்பி எழுதும் வேலை. அவர் நல்ல அதிர்ஷ்டசாலிதான். ஏனென்றால், அத்தை அவருடன் தாராளமாய்ப் பேசினாள். ”நீர் இந்த இந்தியா முழுவதும் சுற்றினீரானாலும் என் மருமகள் மாதிரி உமக்குப் பெண் கிடைக்காது!” என்றாள் அத்தை. அது நிஜந்தானே?

அதிகாரம் 4

‘எப்போதும் சரிதான்!’

நான் ரொம்பக் கெட்டிக்காரியாதலால் என்னைப்பற்றி எல்லாரும் பெரிய பெரிய யோசனைகள் எல்லாம் கேட்க வருவார்கள்.

ஒரு சமயம் ஒரு பெரிய ராவ்பகதூர் என்னிடம் வந்தார் ”அலமு! என் பிள்ளைக்குக் கலியாணம் செய்யவேணும். உன் யோசனையைக் கேட்கலாம் என்று மெட்ராஸிலிருந்து போட்மெயிலில் வந்திருக்கிறேன். உன்னுடன் வாசித்தாளே, ராஜி, அவள் எப்படி?” என்றார்.

”ரொம்ப நல்ல பெண்.”

”ஏன் அவ்வளவு தீர்மானமாய்ச் சொல்கிறாய்?”

”இல்லை. அந்தப் பெண்ணுக்கு ரொம்பத் தாராள மனஸ¤. ஒரு சமயம் பள்ளிக்கூடத்தில் வாசிக்கும்போது ஒரு காலணாவுக்கு அவள் பெப்பர்மின்ட் வாங்கினாள். கூட இருந்த ஒரு பெண்ணுக்கும் கொடுக்கமாட்டேனென்று சொல்லிவிட்டு எனக்குக் கொடுத்தாள். பாவம், ரொம்ப நல்ல மாதிரி!”

”ஒருகால் உன் தீர்மானமே சரியாயிருக்கலாம் என்று தோன்றுகிறது” என்று இழுத்தாற்போல் சொன்னார்.

நான் வழக்கம்போல் அடக்கமாய், ”ஏன், அலமு சொல்வது எப்போதுமே சரிதான்!” என்று பதில் சொன்னேன்.

அதிகாரம் 5

கல்யாணக் கடிதங்கள்

ஒரு சமயம் என் தகப்பனாருக்குப் பலரிடமிருந்து என்னைக் கலியாணம் செய்துகொள்வதற்காகக் கடிதங்கள் வந்து குவிந்தன. என் தகப்பனார் என்னை ஒருவருக்கும் கட்டிக் கொடுக்கமாட்டேனென்று சொல்லிவிட்டார். கடிதங்களில் முக்கியமாய் ஒன்றைக் கீழே கொடுத்திருக்கறேன்:

‘ஐயா,

தங்கள் பெண்ணை அடையும் பாக்கியத்தைத் தாங்கள் எனக்குக் கொடுக்கவில்லை. எனக்கு வேறு வரன் அகப்படாவிட்டால் நான் பிரம்மசாரியாகவே இருக்கவேண்டி வருமோவென்று பயப்படுகிறேன்.

நல்ல சீர் வரிசைகள் செய்யக்கூடிய பெண்களாக உங்களுக்குத் தெரியுமா? இப்போது எனக்கு மாட்டு வியாபாரம் மந்தமாயிருப்பதால் தாங்கள் இவ்விஷயத்தில் உதவி செய்தீர்களானால் நான் மறக்கவே மாட்டேன்.

தாங்கள் தங்கள் பெண்ணைக் கொடுக்கும் விஷயத்தில் மறுதளித்தது தீர்மானமாகவேதானா? அல்லது ஏதாவது அரைகுறையாக நான் ஒரு நம்பிக்கை வைத்திருக்கலாமா?

உங்கள் பதில் உடனே.

அநாமதேயம் பிள்ளை

மாட்டுத் தரகன்.’

அதிகாரம் 6

‘ஒன்றும் சொல்லாதே!’

இந்தக் கதையைத் திருப்பி வாசித்ததில் என் கலியாண விஷயமாய் நான் ஒன்றும் குறிப்பிடவில்லை யென்ற அறிகிறேன். அதற்கும் காரணம் இல்லாமலில்லை. அது என் கணவனின் உத்தரவின்படி விடப்பட்டிருக்கிறது.

நான் ஒரு சமயம் ஒரு நாடகத்துக்குப் போயிருந்தேன். நாடகம் ஹரிச்சந்திரா. அதில் சோகரஸம் அதிகமாயிருக்க வேண்டிய இடங்களில் எல்லாம் என்னுடன் கூட வந்திருந்த அத்தான் சிரித்துக்கொண்டேயிருந்தார்.

”என்ன, உங்களுக்குக் கொஞ்சங்கூட இரக்கம் இல்லையா?” என்று கேட்டேன்.

”முதல் முதலில் எனக்கு இந்தக் கதையில் நம்பிக்கை கிடையாது. இரண்டாவதாக, இப்போது நான் வெற்றிலை போட்டுக்கொள்கிறேன். மூன்றாவதாக, பெண்கள்போல் கோழைத்தனத்தைக் காட்டுவதாக உத்தேசமில்லை” என்றார்.

”நீங்கள் ரொம்ப ரொம்பப் பொல்லாத, ஈவு இரக்க மற்றவர்” என்றேன்.

அவர் புன்னகையுடன் கண்ணைச் சிமிட்டினார். ”ஓ! எனக்குத் தெரியும். நான் வருமான வரி உத்தியோகஸ்தராகப் போகிறேன்” என்றார். பிற்பாடு பேசிக்கொண்டிருந்ததில், ”என்னைக் கலியாணம் செய்துகொள்கிறீர்களா?” என்று கேட்டேன். ”ஆகட்டும்” என்றார். நான் அவருக்கு அதற்காக என் மனமார்ந்த வந்தனத்தை அளித்தேன். ”அதைப்பற்றி ஒன்றும் சொல்லாதே” என்றார். ஆகையால் நான் ஒன்றும் சொல்வதாக உத்தேசமில்லை.

இத்துடன் என் சிறு சுய சரிதையை முடிவுசெய்து கொள்ளுகிறேன். பாக்கிக் கதையை எழுத முடியாது; ஏனென்றால் நான் இன்னும் இறந்துபோகவில்லை. அவ்விதம் ஏற்பட்ட பிறகு பாக்கிக் கதையையும் எழுதுகிறேன்.

என் அபூர்வமான கதையை வாசித்த பிறகு நீங்கள் உடம்பு செளக்கியமாயிருப்பீர்களென்று நம்புகிறேன். உங்கள் வீட்டில் (யாராவது இருந்தால்) அவர்கள் எல்லோரும் செளக்கியமா? அவர்களை நான் ரொம்ப விசாரித்ததாகச் சொல்லுங்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *