அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பினான் ராஜேந்திரன். வந்ததும் வராததுமாய், “”கனகா… கனகா… காபி கொண்டா…” என்று சொல்லிவிட்டு, பாத்ரூம் சென்றான். முகம் கழுவி, வேறு உடை மாற்றியவன் கூடத்தில் வந்து அமர்ந்தான்.
எப்போதும் அலுவலகத்தில், வேலை வேலை என்று இருக்கும் ராஜேந்திரன், இன்று சீக்கிரமாக வந்து இருப்பது கண்டு அதிசயமாய் பார்த்தாள் கனகா.
“”இந்தாங்க…” காபி டம்ளரை நீட்டினாள்.
“”எங்க பிள்ளைங்க… அவங்க குடிச்சாங்களா?” கேட்டவாறே காபியை வாங்கி குடித்தான்.
“”ம்… அவங்க குடிச்சிட்டு, இப்பதான் படிக்கப் போனாங்க,” சொல்லிட்டு கனகா நகர,””கனகா… சொல்ல மறந்துட்டேன். ஆபீஸ் பைல் ஒண்ணு முக்கியமானது, அதை வச்சிட்டு போயிட்டேன். ஆடிட்டர் சரி பார்க்கணும். அதை கொடுத்துட்டு வந்திடறேன். என் மேஜையில் இருக்கும்… எடுத்துட்டு வா,” என்றான்.
மனைவியிடம் பைலை வாங்கியவன், எதையோ தேடினான். ராஜேந்திரன் தேடுவதை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த கனகா,””இந்தாங்க… இதைத்தானே தேடறீங்க?” என்று கேட்டவாறே கடிதம் ஒன்றை நீட்டினாள்.
கனகா கடிதத்தை நீட்டவும், ஒரு நிமிடம் தன்னையே மறந்தான் ராஜேந்திரன்.
“அவளுக்கு எல்லாம் தெரிந்து விட்டதே…’ என்ற பயம் ஒரு பக்கமும், “இதை, அவள் எப்படி தாங்கிக் கொள்வாள்… பூமிக்கும், ஆகாயத்திற்கும் குதிப்பாளோ… வீடே ரெண்டுப்பட்டு விடுமோ…’ என்ற அச்சமும் மனதில் எழ, கடிதத்தையும், கனகாவையும் மாறி மாறி பார்த்தான்.
அவளோ, சர்வ சாதாரணமாக,””என்னங்க அப்படியே நின்னுட்டிங்க…. இந்தாங்க கடிதம்,” என்றவாறு, அவன் கையில் கொடுத்தாள்.
“”இல்ல… வந்து… கனகா,” வார்த்தைகள் வரவில்லை; தடுமாறினான் ராஜேந்திரன்.
“”ஏங்க தடுமாறுறீங்க…. என்னடா அமைதியா பேசறாளே… கோபப்படலையேன்னு நீங்க கேட்கலாம். இப்ப தெரிய வந்திருந்தாத்தானே கோபம் வர… இது எப்பவோ தெரியும்.”
“”என்ன… என்ன… எப்பவோ தெரியுமா?”
அவள் அமைதியைவிட, இது, அவனுக்கு இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. நடக்கப்போகும் விபரீதத்தை எண்ணி, மேலே பேச அவனுக்கு நாக்கு எழவில்லை.
ஒரு நிமிடம் அவனையே பார்த்த கனகா, தொடர்ந்தாள்…
“”என்னையும், பிள்ளைகளையும், அன்பாகவும், ஆசையாகவும் கவனிச்ச நீங்க, திடீர் திடீர்ன்னு கோபப்பட ஆரம்பிச்சிங்க… ஆரம்பத்துல எனக்கும் கோபம் வந்தது. பிறகு, அலுவலகத்தில் ஏதோ பிரச்னையாக இருக்கும். வேலை பளு அதிகமோ என நினைத்தேன். ஆனா, இதுவே தினமும் தொடர்ந்த போதுதான், உங்க நடவடிக்கையில் சில மாறுதல்களை கவனிச்சேன்.”
கனகா பேசுவதையே, வைத்த கண் எடுக்காமல் கேட்டுக் கொண்டிருந்தான் ராஜேந்திரன்.
“கனகா என்ன முடிவு எடுப்பாளோ…’ என்ற பயம், அவனை இடைமறித்து பேச விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது.
தொடர்ந்து பேசினாள் கனகா…
“”எதேச்சையா வீட்டை சுத்தம் செய்யும் போது, டைரியும், லெட்டரும் கிடைச்சது. படிச்சதும் கோபம் வந்தது. ஒரு பெண்ணுடன் உங்களுக்கு தொடர்பு இருக்கிறது என்று அறிந்த போது, கோபமும், அழுகையும் வந்தது.”
“”இல்ல கனகா…” என ராஜேந்திரன், ஏதோ சொல்ல, இடைமறித்தாள் கனகா.
“”கோபம் வந்தது என்னமோ உண்மைதாங்க… அதுக்காக உங்களையும், குழந்தைகளையும் விட்டுட்டு தற்கொலை செய்துக்குற அளவுக்கு நான் கோழையில்லை. உங்களை விட்டு பிரிஞ்சு போய், பிள்ளைகளின் எதிர்காலத்தை வீணாக்கற அளவுக்கு புத்தியில்லாதவளுமில்லை…
“”படிச்சவங்க நீங்க… குடும்ப கவுரவத்தை காப்பாத்தறது, உங்க கையில இருக்கு. சமுதாயத்தில் எப்படி இருக்கணும் என்பதும், உங்களுக்கு தெரியும். தவறுகள் நிகழுறது சகஜம். தொடர்வது தான் தப்புங்க. அதனால, நீங்க திருந்தி, திரும்பி வருவீங்கங்கற நம்பிக்கை எனக்கிருக்கு.”
கனகா பேச, பேச சிலையாக நின்றான் ராஜேந்திரன்.
கனகாவே மீண்டும் தொடர்ந்தாள்…
“”கணவன் எப்படி மனைவியின் சிறு சிறு செயலையும் அறிந்து புரிந்து, இருக்கிறானோ… அதுபோல தாங்க மனைவியும், கணவனின் ஒவ்வொரு அசைவையும், செயலையும் கவனிப்பாள். அறிந்து வைத்திருப்பாள். தெரிந்தும், தெரியாதவள் போல நடப்பவள்தாங்க மனைவி. தெரிந்ததை தெரிந்ததாக காட்டிக் கொண்டால், வீடு தினம் தினம் போர்க்களமாதாங்க இருக்கும். யாருக்கும் நிம்மதி இருக்காது… அதைவிட, பிள்ளைங்க மன உளைச்சலுக்கு ஆளாகி, அவர்களின் படிப்பு பாதிக்கும். எதிர்காலம் கேள்விக்குறி ஆகி விடும். இதனால, எத்தனை பிள்ளைங்க, அனாதையாகவும், திருடர்களாகவும் மாறியிருக்காங்க,” சொல்லி முடித்தவள், அவன் குடித்து விட்டு வைத்த டம்ளரை எடுத்துக் கொண்டு, சமையலறை நோக்கி நடந்தாள்.
பெரிய பூகம்பமே வெடிக்கப் போவதாக கற்பனை செய்து கொண்டிருந்தவன் எதிரே, நாசுக்காக அவன் தவறை உணர்த்திவிட்டு ஒன்றும் நடவாதது போல், சர்வ சாதாரணமாக நடந்து செல்லும் கனகாவையே பார்த்துக் கொண்டிருந்தவன் மனதில், இனம் புரியாத ஏதோ ஒன்று நெருடியது.
மனைவி என்பவள், கணவனின் சகலத்திலும் பங்கு கொள்பவள் என்பதை உணர்ந்தான்.
“”கனகா… நான் வெளியில் எங்கேயும் போகலை. இந்த குப்பையை எங்க போடறது?”
கையிலிருந்த லெட்டரை, சுக்கு நூறாய் கிழித்தபடி கேட்ட கணவனை, திரும்பிப் பார்த்து, இதழ் பிரியாமல் புன்னகைத்தாள் கனகா!
– சி. மங்கலட்சுமி (ஜூலை 2012)