கங்கா மிகவும் டென்ஷனாக இருந்தாள். சமீபத்தில் பிரசவத்தின் போது இறந்த வாணி கண் முன் தோன்றினாள். தலைப் பிரசவம் என்பது பெண்களுக்கு மறு ஜென்மம் என்று தன் மாமியார் கூறியது நினைவில் நிழலாடியது..
“டாக்டர்…ஒண்ணும் பயமில்லையே…” கங்காவின் உடல் நடுங்கியது.
“நார்மல் டெலிவரிதான் ஆகும். கவலைய விடுங்க” என்று பலமுறை சொல்லி விட்டார் மருத்துவர் தனம்.
தனம் வெறும் மகப்பேறு மருத்துவர் மட்டுமல்ல. சிறந்த மனநல ஆலோசகரும் கூட.
கங்காவை சூழ்ந்துகொண்ட குடும்ப உறுப்பினர்களைப் பார்த்து “அவங்களுக்கு ‘ஆங்சைட்டி தான்’ பயப்பட ஒண்ணுமில்லை… டெலிவரிக்குப் பிறகு நார்மலாயிடுவாங்க.. டோன்ட் ஒர்ரி,” ஆறுதல் கூறிக்கொண்டே கங்காவிற்கு மைல்டு செடேக்ஷன் செலுத்தினார்.
“டோகோஃபோபியா’னு சொல்றாங்களே அதுவா டாக்டர்” கவலையுடன் கேட்டார் கங்காவின் கணவர் சங்கரநாராயணன்.
டாக்டர் தனம் வாய்விட்டுச் சிரித்தார்…
“ஏன் சிரிக்கறீங்க டாக்டர்..? ஏதாவது தப்பாக் கேட்டுட்டேனா?”
தனம் சிரித்துக் கொண்டே “டைக்னோஸ் பண்ணத்தான் மருத்துவர்க்ள நாங்க இருக்கோமே! நீங்களா பொழுது போகாம, ஆன்லைன்ல எதையாவது பாத்துட்டு இவங்களுக்கு ‘டோகோஃபோபியா’வா? அவங்களுக்கு ‘பிரீச் பர்த்’ஆகுமா? ‘ட்ரவர்ஸ் பர்த் ஆகுமானு ஏன் குழப்பிக்கறீங்க…!” என்றார்.
“தேவகிக்கு வலி கண்டுடிச்சு டாக்டர்” என்றவாரே அவசரமாக வந்தாள் நர்ஸ் நளினி.
“….”
“பனிக்குடம் உடைஞ்சாச்சு…! டாக்டர்…”
லேபர் வார்டுக்கு விரைந்தாள் தனம்.
தேவகியின் கை கால்களை திமிராமல் அமுக்கியபடி உதவியாளர்கள் பிடித்திருக்க வழக்கமான பிரசவ நடைமுறைகளை செய்து கொண்டிருந்தது நர்ஸ் குழு.
“ம்..பலமா முக்குங்க…!”
“ம்…ம்ம்…ம்ம்ம்…”
“ம்.. இன்னும் பலமா…!”
“ம்…ம்ம்…ம்ம்ம்…ம்ம்…ம்ம்ம்.”
“விடாம முயற்சி பண்ணுங்க..?”
“விட்டுட்டீங்களே…! இன்னும் ஒரேமுறை ப்ளீஸ்…?” கெஞ்சுவதுபோல் கேட்டார்கள்.. நட்பு முறையில் கேட்டார்கள்…
ஊஹூம்…! ‘சாஃப்ட்கார்னர்’ பயனளிக்கவில்லை.
“மயிலே மயிலேன்னா இறகு போடாது…!” என்றாள் சீனியர் நர்ஸ்.
“என்னாடீ சீன் காட்ரே..?” என்று ஒரு செவிலி பழிப்பு காட்ட அனைத்து நர்சுகளும் கெக்கலித்துச் கேவலமாய் சிரித்தனர்.
தான் ஒரு கேலிப்பொருளாகிவிட்டோமே என்ற தேவகியின் உணர்வு மூளையில் உள்ள ‘அமிக்தலாவையும்’ ‘ஹைபோதாலமஸையும்’ தூண்ட, அப்போது நாளமில்லாச் சுரப்பிகள் வெளியேற்றிய அட்ரீனலீன், கார்டிஸல் போன்ற ஹார்மோன்கள் அவளுள் கடுமையான கோபப் புயலை உறுவாக்கியது.
கோபத்தின் விளைவு. “குவா…! குவா…!” சுகப்பிரசவம்.
தாய்சேய் நலம் என்பதை அறிந்ததோடு, புஷ்டியான பேரக்குழந்தையைக் கண்டதும் தன் அர்த்தமற்ற பயமெல்லாம் நீங்கி டாக்டர் சொன்னதைப் போல் மகள் தேவகியின் டெலிவரிக்குப் பின் நார்மலாகிவிட்டாள் கங்கா.
ஆங்சைட்டி நீங்கிய கங்கா குட்டிப் பேரனின் நெற்றியில் முத்தமிட்டாள்..
(தேன் சிட்டு – ஜனவரி 2022 பொங்கல் மலர்