தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 10, 2017
பார்வையிட்டோர்: 10,763 
 

கல்யாண மண்டபம். மணப்பெண்ணுக்கு மாமன் சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. சொக்காரன் என்ற முறையில் அலந்தரம் செய்துவிட்டு மேடையிலிருந்து கீழே இறங்கினேன். மண்டபத்தில் நெருக்கடி. உட்காருவதற்கு எங்கேனும் நாற்காலி உள்ளதா? என்று பார்வையைப் படரவிட்டேன்.

மண்டபம் பெரிதும் இல்லை. ரொம்பச் சின்னதும் இல்லை. நடுத்தரமாக நீண்டு ஒல்லியாக இருந்தது. கூட்டம் அதிகம் இல்லாவிட்டாலும் நெருக்கடியாகத் தெரிந்தது. ஆங்காங்கே மூணு நாலுபேர் கூடி நின்று பேசிக் கொண்டிருந்தனர். அநேகமாக எல்லோரும் எங்கள் ஊர்க்காரர்கள்தாம். ஆனாலும் நிறையப் பேரை எனக்கு அடையாளம் தெரியவில்லை. “சொந்த ஊரில் அந்நியனாகிப் போனேன்’ என்று ஏதோ ஒரு கதையில் படித்த வரியை நினைத்துக் கொண்டேன். எங்கள் ஊரிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தள்ளியுள்ள புதுக்கோட்டையில் இந்தக் கல்யாணம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அரவணைப்புகடைசிக்கு முந்திய வரிசையில் ஒரு நாற்காலி ஆள் இல்லாமல் இருந்தது. அதில் உட்காரலாம் என்று எண்ணி மெல்ல நடந்தேன். பாதைக்கு இடைவெளி குறுகலாக விட்டுத்தான் நாற்காலி பரப்பியிருந்தார்கள். அடையாளம் தெரிந்தவர்களிடம் பேசிச் சிரித்துக் கொண்டே அந்த நாற்காலி நோக்கிப் போனேன்.

நெரிசலில் வளைந்தும் நெளிந்தும் சென்று கொண்டிருந்தபோது, “”அத்தான் செüக்கியமா?” என்றொரு குரல் காதில் விழுந்தது. அது பெண்ணின் குரல். நம்மை இருக்காது, வேறு யாரையாவது இருக்கலாம் என்று எண்ணிக்கொண்டே நிற்காமல் போனேன்.

“”உடன்குடி அத்தான் உங்களைத்தான்” என்று மீண்டும் குரல் கேட்டது. நம்மிடம்தான் கேட்கிறார்கள் என்பது உறுதியானதால் நின்று திரும்பிப் பார்த்தேன்.

நாற்பதுக்கு மேல் மதிக்கத்தக்க வயதுடைய ஒரு பெண் என்னைப் பார்த்துச் சிரித்தவாறே, “”அத்தான் சுகந்தானா அக்காள் வந்திருக்காங்களா?” என்று சொல்லிக்கொண்டே பக்கவாட்டு நாற்காலியிலிருந்து எழுந்து நின்றாள். பார்த்த மாதிரி தெரியுது. ஆனால் யார் என்று பிடிபடவில்லை. அவளுக்கு அருகே பார்வதி சித்தி உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுடைய மருமகளாக இருக்க வாய்ப்பில்லை. பார்வதி சித்தியின் மருமகள்மார் ரெண்டுபேரும் எனக்குத் தெரியும். வேறு யாராக இருக்கும்? அத்தான் என்று உரிமையோடு அழைக்கிறாளே என்று யோசித்துக் கொண்டே, “”ஆமா நல்ல சுகம்தான். உடன்குடியில் ஒரு கல்யாண வீடு. அக்கா அங்கே போயிருக்கா?”

என்று சொல்லி வைத்தேன்.

ஆனாலும் என்முகத்தில் சந்தேக ரேகையும் சலன உணர்வும் தோன்றத்தான் செய்தன. இதைப் பார்வதி சித்தி கவனித்திருக்க வேண்டும்.

“”முருகா இவள் யாரென்று ஒனக்குத் தெரியலைன்னு நெனைக்கிறேன். இவள்தாம்பா லிங்கபாண்டி பொண்டாட்டி. சீனியாப்ப அக்கா மருமொவா” என்று சொன்னார்கள்.

எனக்கு இப்போது ஞாபகத்துக்கு வந்துவிட்டது. ஆள் ரொம்பவும் மாறிப் போயிருந்தாள். லிங்கபாண்டி மனைவி கமலமா?

“”பார்த்து ரொம்ப நாளாச்சுதா அதுதான் கொஞ்சம் மறதி” என்று சொல்லிக் கொண்டே, “”லிங்கபாண்டி வந்திருக்கானா? எங்கே இருக்கான்?”

என்று கேட்டேன்.

“”அவிய தூத்துக்குடிக்கு ஒரு வேலையா போயிருக்காவ. திரும்பி வரும்போது இங்கே வாரேன்னு சொல்லியிருக்காவ” என்றாள்.

“”மதிய சாப்பாட்டுக்கு மேலதான் புறப்படுவேன். அவன் வந்தா சொல்லு. அவனையும் பார்த்து ரொம்ப நாளாச்சு” என்று சொல்லிவிட்டுக் கடைசிக்கு முந்திய வரிசையில் காலியாக இருந்த நாற்காலியைப் பார்த்தேன். அதற்குள் அது ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. யாரோ ஒரு வாலிபன் அமர்ந்திருந்தான்.

“”உங்களைப் பார்த்தது நல்லதாப் போச்சு. உங்ககிட்ட முக்கியமான விசயம் ஒண்ணு பேசணும். அவங்க வந்ததும் பேசலாம்னு பார்க்கிறேன்” கமலா சொன்னாள்.

“”சரி பேசுவோம்” என்று சொல்லிவிட்டு ஒரு ஓரத்தில் கிடந்த நாற்காலியில் போய் உட்கார்ந்தேன்.

உட்கார்ந்துவிட்டாலும் மனம் அமைதியாகவில்லை. லிங்கபாண்டியையும் அவன் மனைவியையும் சுற்றி நினைவுகள் உருண்டன.

பழைய சம்பவம் மனக்கண்ணிலே விரிந்தது.

எங்கள் ஊர் வாய்க்கால்கரைப் பாலம் குளிர்ச்சியான இடம். இதனால் எப்போதும் அங்கே ஓர் இளைஞர் கூட்டம் இருக்கும். இரவு பத்து மணி வரை அந்த இடம் கலகலப்பாகவே இருக்கும். சில நாள்களில் அதையும் தாண்டி இரண்டு மூன்று பேர் இருந்து பேசிக் கொண்டிருப்பார்கள். படிப்பு முடிந்து வேலை தேடிக் கொண்டிருந்த நானும் நாள் தவறாமல் அங்கு போவது வழக்கமானது. வாய்க்கால்கரைப் பாலம்தான் எனக்கும் லிங்கபாண்டிக்கும் நெருக்கத்தை உண்டாக்கியது. லிங்கபாண்டி மட்டுமல்ல, இன்னும் பலபேர் அதில் அடங்குவர். லிங்கபாண்டி எனக்குச் சித்தப்பா மகன்தான். என்னைவிட ரொம்பச் சின்னவன். சிறுவயதிலே பள்ளிக்குப் போவதை நிறுத்திவிட்டு விவசாயத்தில் இறங்கியவன். வேலையில்லாமல் இருந்த நானும் அப்பப்போ அப்பாவுக்கு உதவியாக வயலுக்குப் போவதுண்டு. விவசாயத்தில் அனுபவசாலியான அவனிடம் சில யோசனைகள் கேட்பதுண்டு. நாங்கள் இருவரும் சேர்ந்து எங்கள் வயல்களுக்குப் போய் வருவதுண்டு. எங்கள் வயல் வடகாட்டில் இருந்தது. அவன் வயல் ஊரடியில் உள்ள தெற்குக் காட்டில் இருந்தது. ரெண்டு மூன்று வருடத்தில் எங்களுக்குள் நல்ல நெருக்கம் ஏற்பட்டுவிட்டது.

ஒரு முறை வேலை தேடும் விசயமாக வெளியூர் சென்றிருந்தேன். திரும்பி வருவதற்கு இரண்டு நாட்கள் ஆயிற்று. வந்ததும் அம்மா சொன்னார்கள்,

“”லிங்கபாண்டி வடக்குத் தெருவில் ஒரு பிள்ளையைக் கூட்டிக்கொண்டு ஓடிவிட்டானாமே உனக்குத் தெரியுமா?”

அம்மாவின் கேள்வி எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. “”எனக்குத் தெரியாதே” என்றேன். உண்மையில் எனக்குத் தெரியாது. நான் வெளியூர் போவதற்கு முந்திய நாள் இரவு ஒன்பது மணி வரை அவனும் நானும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது கூட அவன் எதுவும் சொல்லவில்லை. அது மட்டுமல்ல,. அவன் காதல் விசயமே எனக்குத் தெரியாது. இதுவரை எவ்வளவோ விசயம் பேசியிருக்கிறோம். ஆனால் இந்தக் காதல் விசயத்தை என்னிடம் சொல்லவேயில்லை. லிங்கபாண்டி பெரிய கில்லாடியாகத்தான் இருந்திருக்கிறான்.

சாயங்காலம் வாய்க்கால்கரைப் பாலத்துக்குப் போனேன். எனக்கு முன்னரே ஒரு கூட்டம் அங்கு இருந்தது. என்னைக் கண்டதும் காதல் ஜோடியை “”எங்கே கொண்டு விட்டுட்டு வந்திருக்கிய?” என்று நான்தான் கூட்டிக் கொண்டு போனது போல் என்னிடம் கேட்டனர். நான் வெளியூர் போன சமயத்தில் லிங்கபாண்டியும் போயிருப்பதால் இப்படி நினைக்க வைத்துள்ளது. நாங்கள் இரண்டு பேரும் ஒன்றாகத் திரிந்ததைப் பார்த்தவர்கள் இந்த முடிவுக்குத்தான் வருவர். எதேச்சையாக நடந்ததை இணைத்துக் கதைகட்டி இரண்டு நாள் பேச்சு நடந்திருப்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது.

நான் என்ன சொல்லியும் யாரும் நம்பத் தயாராக இல்லை. எதையாவது சொல்லிச் சொல்லி என்னை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார்கள். லிங்கபாண்டி பற்றி அனுதாபமும் கேலியாகவும் பேசி நேரம் கரைந்து கொண்டிருந்தது. இரவு ஏழரை மணி இருக்கும். லிங்கபாண்டி வீட்டுப் பக்கமிருந்து வந்த ஒருவர் எங்களிடம்,

“”லிங்கபாண்டியும் அவன் காதலியும் ஆட்டோவில் வந்திருக்காங்க. லிங்க பாண்டியின் அம்மா அவங்கள வீட்டுக்குள்ள விடமாட்டேன், வந்தால் விளக்குமாறால் சாத்திப்புடுவேன்னு சொல்லி சண்டை போடுறாங்க” என்று தகவல் சொன்னார்.

உடனே நானும் இன்னும் சிலரும் என்னதான் நடக்கிறது என்று பார்ப்பதற்காக லிங்கபாண்டியின் வீட்டை நோக்கிப் போனோம். நாங்கள் சாயாக்கடை பக்கம் போய்க் கொண்டிருந்த போது எங்களைக் கடந்து வேகமாக சீறிப்பாய்ந்தது ஆட்டோ. அதில் லிங்பாண்டியும் அவன் கூட அந்தப்பொண்ணும் போவதாக ஒருவன் சொன்னான். நான் ஆட்டோவினைச் சரியாகக் கவனிக்கவில்லை.

ஆட்டோவுக்குப் பின்னால் மூச்சிறைக்க ஓடிவந்த சிறுவர்கள் ஆளாளுக்கு விவரம் சொன்னார்கள்.

“”லிங்கபாண்டி அண்ணனை அந்தப் பாட்டி விளக்கமாறெடுத்து அடிக்கப் போனாங்க. லிங்கபாண்டியண்ணன் அழுதுக்கிட்டே ஆட்டோவில் ஏறிப்போனாங்க” என்று அவர்கள் சொன்னதைக் கேட்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. பக்கத்தில் இருந்த சைக்கிள் கடையில் சைக்கிள் எடுத்துக்கொண்டு ஆட்டோ போன வழியில் வேகமாக மிதித்தோம். நாங்கள் ரெட்டைப்பனை முக்குகிட்ட போனபோது கூட்டாம்புளியிலிருந்து சைக்கிளில் வந்து கொண்டிருந்த பொன்பாண்டி அண்ணன், “”எங்கே போறிங்க?” என்று எங்கள் குரலை அடையாளம் கண்டு கேட்டார். நாங்கள் விவரம் சொன்னோம். அதற்கு அவர்,

“”ஆட்டோ அப்பவே கூட்டாம்புளியைத்தாண்டி போயிருக்கும். நான் அய்யன் கோயில் வளைவில் ஆட்டோவைப் பார்த்தேன். நான் நல்லாப் பார்த்தேனே, ஆட்டோவுக்குள் யாரும் இல்லையே” என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார்கள்.

சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு யோசித்தோம். வந்திருந்தவர்களில் நான்தான் பெரியவன் மற்றவர்களெல்லாம் வயதில் இளையவர்கள்.

“”அய்யன் கோயில் வளைவில் ஆட்டோவைப் பார்த்த பொன்பாண்டி அண்ணன் அதற்குள் ஆள் இல்லை என்று சொல்லிவிட்டார். அப்படி என்றால் அதற்கு முன்னாலதான் ஏதோ ஓரிடத்தில் இறங்கியிருக்க வேண்டும். ஒரு வேளை கவுட்டை முக்கில் இறங்கியிருக்கலாம். ஏனென்றால் அந்த வழியாகப் போனால் லிங்கபாண்டியின் வாழைத் தோட்டத்துக்குப் போய்விடலாம். எனக்கென்னமோ அங்குதான் போயிருப்பார்கள் என்று தோணுது அங்கே போய்ப் பார்ப்போமா?” என்று சொன்னேன்.

மற்றவர்களுக்கும் நான் சொன்னது சரி என்று பட்டது. சைக்கிளைக் கொண்டு கடையில் விட்டுவிட்டு இரண்டு பேட்டரி லைட் எடுத்துக் கொண்டோம். கவுட்டை முக்குக்கு வந்தோம்.

பேட்டரி வெளிச்சத்தில் கவுட்டையைத் தாண்டினோம். ஒற்றையடித் தடமாகக் கிடந்த பாதை ஒரு வாய்க்கால் வரப்பில் கொண்டு விட்டது.

கோடையாக இருந்ததால் வாய்க்காலில் தண்ணீர் இல்லை. இரண்டு பக்கமும் வாழைத் தோட்டம். வெட்டுவதற்குத் தயாரான நிலையில் விளைந்த வாழைத்தார்கள்.

“”இங்கே இருப்பாங்களா? வேறே எங்கேயும் போயிருப்பாங்களா?”

“”பக்டோன் எதுவும் குடித்து விட மாட்டார்களே”

ஆளுக்கொன்றாகப் புலம்பிக் கொண்டே வரப்பில் நின்ற ஈர்வலி முள்செடியை விலக்கிக் கொண்டு நடந்தோம்.

லிங்கபாண்டியின் வயல் வந்தது. இடுப்பளவுக்கு வளர்ந்திருந்த வாழைக்கன்றுக்குள் தேடிப் பார்த்தோம். காணவில்லை. கூப்பிட்டுப் பார்த்தோம். பதில் இல்லை.

“”என்ன செய்வது? எங்கே போயிருப்பார்கள்? சரி வீட்டுக்குப் போவோம். காலையில் பார்த்துக் கொள்ளலாம்” என்று முடிவுக்கு வந்த போதுதான் ஒருவன் கையிலிருந்த பேட் டரி லைட்டின் வெளிச்சத்தை இரண்டு வயல் தள்ளி வெள்ளரித்தோட்ட காவலுக்குப் போட்டிருந்த பரண் மீது பரப்பினான். அங்கே அசையாமல் இரண்டு தலைகள். எங்களுக்கு “பக்’ என்று ஆகிவிட்டது. விபரீதம் நடந்துவிட்டது போலிருக்கே என்ற பயத்தில் “”லிங்கபாண்டி, லிங்கபாண்டி” என்று கத்தினோம்.

நாங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பேரைச் சொல்லிக் கொண்டு, “”நாங்கள்தான் வந்திருக்கிறோம். பயப்படாதே அவசரப்பட்டு எந்த முடிவும் எடுத்து

விடாதே” என்று வேகமாகப் பரண் பக்கம் போனோம்.

எங்கள் குரல்களின் அடையாளம் தெரிந்திருக்க வேண்டும். லிங்கபாண்டி கொஞ்சம் தலையை நிமிர்த்திப் பார்த்தான். அதற்குள் நாங்களும் பரணுக்கு அடியில் போய்விட்டோம். எங்கள் மீது நம்பிக்கை வந்ததும் கீழே இறங்கி வந்தனர். ஒரே அழுகை. இரண்டுபேரும் மாறி மாறி அழுதார்கள்.

“”சாகப்போகிறோம். சாவதைத் தவிர வேறு வழியில்லை” என்று கதறினர். பரணில் கிடந்த பையை ஒருவன் எடுத்தான். அதில் துணிமணிகளுக்கிடையில் மூட்டைப்பூச்சி மருந்து பாட்டில் இரண்டு இருந்தன. அதனை உடைத்துச் சிதறிவிட்டு பாட்டிலைத் தூர எறிந்தான் ஒருவன்.

“”இவ்வளவு தைரியமாக வீட்டை விட்டு வெளியேறத் தெரிந்தவர்களுக்கு வாழ்வதற்குத் தைரியம் இல்லையா? சாக நினைப்பது கோழைத்தனம். இவ்வளவு சிக்கல் வரும் என்பதை முதலிலேயே எண்ணிப் பார்த்திருக்க வேண்டும். அதை விட்டு விட்டு இப்போ வந்து சாகணும்னு நெனைக்கிறது முட்டாள்தனம். தொடர்ந்து முட்டாள்தனமாகவே நடக்க நினைக்கலாமா?” என்று எனக்குத் தெரிந்தவரை புத்திமதி சொன்னேன். எல்லோருமாகச் சேர்ந்து அவர்கள் மனத்தை மாற்றி ஒரு நம்பிக்கை வருமாறு பேசினோம்.

இருட்டில் முகம் தெரியாவிட்டாலும் இருவரிடமும் ஏதோ ஒரு பிரகாசம் தோன்றியது போல் உணர்ந்தோம்.

சாவது என்ற முடிவைத் தடுத்துவிட்டாலும் அடுத்து என்ன செய்வது அதுவும் அன்றைய இரவில் அவர்களை எங்கே தங்க வைப்பது என்ற பெரிய கேள்வியும் எழுந்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நானும் பாலுவும் வடக்குத் தெருவில் உள்ள கமலாவின் வீட்டிற்குச் சென்றோம். மற்றவர்கள் வயலிலே இருந்தனர்.

கமலாவின் வீட்டில் விளக்கு எரியவில்லை. கதவு தாழ்ப்பாளிட்டு இருந்தது. தட்டினோம். கூப்பிட்டுக் கொண்டிருந்தோம். நீண்ட நேரத்திற்குப் பிறகு கதவு திறந்து கமலாவின் அண்ணன் வெளியே வந்தார். அவர் ஓரளவுக்கு எனக்குப் பழக்கமானவர். நாங்கள் உள்ளே நுழைந்தோம். கமலாவின் அப்பாவும் அம்மாவும் ஆளுக்கொரு கட்டிலில். பெண்பிள்ளை ஓடிப்போன அவமானம் அவர்களை மெüனமாக்கியிருந்தது. பேச்சுக்கொடுத்தோம்.

“”ஓடிப் போனது தவறுதான். தெரியாமல் செய்துவிட்டார்கள் என்று சொல்ல மாட்டேன். தெரிந்துதான் செய்துள்ளனர். என்ன செய்வது? சிறியவர்கள் யோசிக்காமல் செய்துவிட்டனர். இப்போது திரும்பி வந்துள்ளனர். லிங்கபாண்டியின் அம்மா பிடிவாதமாக இருக்காங்க. வீட்டுக்குள் விட மறுக்கிறார்கள் உங்களை நம்பித்தான் நாங்கள் வந்திருக்கிறோம். நீங்கள் இப்போ சம்மதிக்கவில்லை என்றால் இரண்டு பேரும் செத்து விடுவார்கள். சாகவிடுவதை விட வாழ்வதற்குத் துணைபோவதுதான் நல்லது. உங்கள் அரவணைப்பு இப்போது அவங்களுக்குத் தேவை” சாதுரியமாகப் பேசினோம்.

முழுமனதோடு இல்லாவிட்டாலும் முக்கால்வாசி மனதோடு நாங்கள் பேசியதைக் கேட்டார்கள்.

“”நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று திருப்பிக் கேட்டார் கமலாவின் அப்பா. “”இரண்டு மூன்று நாட்கள் மட்டும் உங்கள் வீட்டில் தங்கட்டும். மற்றதைப் பிறகு பார்த்துக் கொள்வோம். குறிப்பாக இன்று இரவு உங்கள் வீட்டுக்கு அழைத்து வருவோம்” என்றோம். சம்மதித்தனர். வயலுக்குப் போய்க்கூட்டிவந்து அவர்கள் வீட்டில் தங்க வைத்தோம்.

ஆலோசனை செய்து பதிவுத் திருமணம் செய்து வைத்தோம். ஒரு வாரம் கழித்து எங்கள் வீட்டுப் பக்கத்திலே வீடுபார்த்து இருவரையும் குடியமர்த்தினோம்.

திருமணம் செய்து குடித்தனம் வைத்து விட்டாலும் இவர்கள் காதல் காலத்தை வென்று நிலைக்குமா? என்றொரு சந்தேகமும் என் உள்மனத்தில் எழுந்தது.

அதற்குப் பிறகு வேலை கிடைத்து வெளியூர் போய்விட்டேன். எப்போதாவதுதான் ஊருக்கு வருவேன். அதுவும் அம்மா அப்பா மறைவிற்குப் பிறகு மகா இடைவெளியானது.

ஊருக்கு வரும்போது ஒன்றிரண்டு தடவை லிங்கபாண்டியைப் பார்த்திருக்கிறேன். எங்கள் வீட்டுப்பக்கம் இருந்தவன் அம்மன் கோயில் பக்கம் வீடு வாங்கிப் போய்விட்டான் என்றும் சொல்லக் கேட்டுள்ளேன். ஆயினும் இதுவரை ஒருநாள் கூட அவன் வீட்டுக்குப் போனதில்லை. அவன் மனைவி பிள்ளைகளைப் பார்த்ததில்லை.

நான் ஊருக்கு வரும் போதெல்லாம் லிங்கபாண்டியின் வீட்டுக்குச் செல்லாமல் இருந்ததற்கு நேரம் கிடைக்காததுதான் காரணம் என்றெல்லாம் சொல்ல முடியாது. லிங்கபாண்டியின் அம்மாவும் முழுமையான காரணம். லிங்கபாண்டியின் அம்மா எனக்குச் சொந்தம்தான். சித்தி முறைதான். அவர்களும் உரிமையோடு கூப்பிட்டுப் பேசும் பாசம் கொண்டவங்கதான். ஆனால் லிங்கபாண்டி கல்யாணத்துக்குப் பிறகு ரொம்ப மாறிவிட்டார்கள்.

லிங்கபாண்டி கமலாவைக் கல்யாணம் பண்ணினதுக்கு நான்தான் காரணம் என்று நினைத்துக் கொண்டு என்னிடம் பேசமாட்டார்கள். தானாக நினைத்தார்களோ? யாராவது சொல்லிக் கொடுத்து நினைத்தார்களோ? தெரியாது. எப்படியோ அவர்கள் மனத்தில் என்மீது அப்படியொரு வெறுப்பு. எங்க அம்மாவிடமும் போய்ச் சண்டை போட்டிருக்காங்க. அதுமட்டுமல்ல; அந்தச்சமயத்தில் அவங்களால் எனக்கு ஒரு பெரிய அவமானமே ஏற்பட்டது. இப்படி இருக்கும் போது நான் லிங்கபாண்டி வீட்டுக்குப் போறது அவங்களுக்குத் தெரிந்தால் அவங்க வயிற்றெரிச்சலில் எனக்குச் சாபம் கொடுத்திடுவாங்க என்ற பயம் எனக்குள் இருந்தது. வம்பை எதுக்கு விலைக்கு வாங்கணும்? என்று நினைத்துதான் லிங்கபாண்டியின் வீட்டுக்குப் போவதைத் தவிர்த்தேன்.

ஏறத்தாழ முப்பது வருடங்களுக்குப் பிறகு லிங்கபாண்டியின் மனைவியை நான் இப்போது பார்க்கிறேன். கால இடைவெளி, கமலாவின் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் இவையெல்லாம் சேர்ந்து அவளை அடையாளம் காணமுடியாமல் ஆக்கிவிட்டன. ரொம்ப வேண்டியவங்க கூட நமக்கு அடையாளம் தெரியாமல் போய்விட்டதே என்று எண்ணிக் கொண்டே பழைய நினைவுகளிலிலிருந்து நிகழ்காலத்திற்கு மனம் திரும்பியது…

உங்க கிட்ட முக்கியமான விசயம் பேசணும்னு கமலா சொன்னாளே } அது என்னவாக இருக்கும். இப்படி யோசனை செய்து கொண்டிருக்கும்போது லிங்கபாண்டி தன் மனைவியோடு என்னை நோக்கி வந்து கொண்டிருந்தான். கல்யாண மண்டபத்தில் கூட்டம் குறைந்து கொண்டிருந்தது. என் அருகில் காலியாகக் கிடந்த நாற்காலிகளில் இருவரும் அமர்ந்தனர்.

“”கொஞ்ச நேரம் குடும்ப விசயம் பற்றிப் பேசிக்கொண்டிருந்து விட்டு, ஆமா கமலா.., நீ என்னிடம் எதுவோ பேச வேண்டும் என்றாயே, அது என்ன?” கமலாவிடம் கேட்டேன்.

“”அதுவா அத்தான்! இவங்க அம்மா பற்றிய

விசயம்?” என்றாள் அவள்.

“”நீ சும்மா இருக்கமாட்டியா?” என்று அவளைத் தடுத்தான் லிங்கபாண்டி.

“”அம்மாவுக்கு என்ன? அவங்க ஏதாவது தொந்தரவு கொடுக்காங்களா?” என்று கேட்டேன்.

“”அத்தான் இப்போ நிலைமையே வேற மாதிரி. அத்தை முன்னைப் போல இல்லை. உடம்புக்கு ரொம்ப முடியலை. அது மாத்திரம் இல்ல. அவங்க உசிராக நம்பி இருந்த இளைய மகனும் சரியா கவனிக்கிறது இல்லை. அதனால நாங்க கூட இருந்தா பரவாயில்லை. கடைசிக் காலத்திலயாவது நிம்மதியாகச் சாகலாம்னு நெனைக்கிறாங்க. எங்களை அவங்க கூட வரச்சொல்லி ஆள்மேல் ஆள் சொல்லி விடுறாங்க. தினசரி யாராவது வந்து சொல்லிக்கிட்டே இருக்காங்க. நானும் போயிடலாம். இல்லை என்றால் அவங்களை எங்க வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வரலாம்னு நெனைக்கிறேன். ஆனால் இவங்க ஒரே பிடிவாதமாக இருக்காங்க” என்று சொல்லி விட்டு என்னையும் லிங்கபாண்டியையும் மாறி மாறிப்பார்த்தாள்.

“”நீ போயேன். நம்மால எல்லாம் அவுங்க கிட்ட போக முடியாது. அவங்களையும் நம் வீட்டுக்குக் கூப்பிடமுடியாது. நம்மைப்படுத்தின பாட்டுக்குப் படட்டும். பட்டு அழுந்தட்டும்” என்று கோபமாகக் கத்தினான் லிங்கபாண்டி.

“”ஆமா! அவங்க பாடுபடுத்தினாங்க என்பதற்காக நாமும் கொடுமை படுத்தலாமா? என்ன இருந்தாலும் அவிய உங்களைப்பெற்று ஆளாக்கின தாயி இல்லையா? வயசான காலத்தில நாமதான் காப்பாத்தணும்” என்று மீண்டும் கமலா சொன்னாள்.

கமலா இப்படிப் பேசியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் கமலாவையும் அவள் பிறந்த வீட்டையும் பற்றி லிங்கபாண்டியின் அம்மா பேசிய பேச்சுகள் எனக்குத் தெரியும். அந்த அளவுக்கு யாராலும் தாங்க முடியாத பேச்சு. இன்னும் எவ்வளவோ தொந்தரவு கொடுத்திருக்காங்க. இருந்தாலும் கமலா மாமியாருக்குப் பரிந்து பேசியது எனக்கு வியப்பாக இருந்தது.

“”பெரியவங்க அப்படித்தான் இருப்பாங்க. சின்னபிள்ளைகள் நாமதான் அனுசரித்துப்போகணும். அத்தைக்கு எங்களைவிட்டால் வேறு யாரு இருக்கா அத்தான்? அதுக்கு நீங்கள்தான் உதவி செய்யணும்” என்று சொல்லி என்னை ஏற இறங்கப் பார்த்தாள்.

“”நான் என்ன செய்ய வேண்டும்?” அவளிடம் கேட்டேன்.

“”நீங்க எப்படி எங்களைச் சேர்த்து வாழ வைத்தீங்களோ! அதைப்போல அத்தை கிட்ட உங்க தம்பியையும் சேர்த்துவிடுங்க” என்றாள்.

கமலா இப்படிச்சொன்னதும் லிங்கபாண்டியின் அம்மாவால் நான் பட்ட அவமானம் நினைவுக்கு வந்தது.

லிங்கபாண்டி பதிவுத்திருமணம் செய்துகொண்டது அவன் அம்மா காதில் விழுந்தது. கொதித்து எழுந்தார்கள். ஏற்கெனவே வீட்டு வாசப்படி மிதிக்கக்கூடாது என்று துரத்தியிருந்தார். இப்போது வயல் பக்கம் போகக் கூடாது என்று தடைபோட்டார். சொத்தில் பங்கு கிடையாது கையெழுத்துப் போட்டுக்கொடு என்று சொல்லி எழுதி வாங்க ஆள் அனுப்பினார். வயல் இல்லை என்றால் லிங்கபாண்டி பிழைக்க முடியாது என்பதை அறிந்து, நான் அவன் அம்மாவிடம் போய், “”சித்தி அவனுக்கு ஏதாவதொரு வயலைக் கொடுங்க. அவனும் பிழைக்க வேண்டுமல்லவா?” என்று கேட்டேன். “”ஒன்றும் தரமுடியாது. உன்னாலதான் என் பிள்ளை கெட்டுப்போனான்” என்று என்னிடம் சண்டைக்கு வந்தார்கள்.

பேசிப் பயனில்லை என்று நானும் வந்துவிட்டேன். மறுநாள் காலையில் என்வீட்டுக்கு போலீஸ்காரர் ஒருவர் வந்து, ஸ்டேசனுக்கு வருமாறு அழைத்தார். என்ன விசயம்? என்று தெரியாமல் நான் விழித்தேன். அதற்கு அவர், “”சீனியாப்ப அம்மா வீட்டில்போய் தகராறு பண்ணியதாக அந்த அம்மா புகார் கொடுத்திருக்காங்க சப்இன்ஸ்பெக்டர் உங்களைக் கூட்டிக் கொண்டு வரச் சொன்னார்” என்றார்.

“”நான் ஒன்றுமே செய்யலை சார்” என்று சொன்னேன்.

“”சொல்லுறதை ஐயா கிட்ட வந்து சொல்லுங்க” என்று சொல்லிவிட்டு அவர் போய் விட்டார். போலீஸ் வீட்டு வாசலுக்கு வந்ததும் கூட்டம் கூடிவிட்டது. என் அம்மா நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதார்கள்.

ஊராட்சி மன்றத் தலைவர் எனக்கு வேண்டியவர். அவரை அழைத்துக் கொண்டு புதுக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனேன். உண்மையைப் புரிந்து கொண்ட சப் இன்ஸ்பெக்டர் என்னிடம் எழுதி வாங்கி, வேலை தேடிக்கொண்டிருக்கும் பட்டதாரி என்பதைத் தெரிந்து புகார் பதிவு செய்யாமல் அனுப்பி வைத்தார். என்னதான் தவறு செய்யாவிட்டாலும் போலீஸ் ஸ்டேஷன் போனது அசிங்கமாகத்தான் பட்டது. இந்த அவமான உணர்வு என்னைவிட்டுப் போக பல நாட்களாயின.

அப்போ இப்படி அவமானப் படுத்தப்பட்ட நான் இப்போ போனால் என்ன நடக்குமோ? என்று மனத்துள் எண்ணிக்கொண்டிருந்தேன்.

என் மனவோட்டத்தை அறிந்தவள் போல் கமலா, “”முன்ன மாதிரி இப்போ அத்தை இல்லை. அவங்க ரொம்ப மாறியிருக்காங்க. நீங்க போனால் தப்பா ஒண்ணும் பேசாமாட்டாங்க” என்றாள்.

யோசித்துப் பார்த்தேன். பேசிப் பார்க்கலாம் என்றது ஒரு மனது. பின் ஏன் அவமானப் பட்டுத் திரும்பப் போகிறாய் என்று திருவிளையாடல் வசனம் பேசியது இன்னொரு மனம். கமலா சொல்வதைப் போல் லிங்க பாண்டியின் அம்மா மனசு மாறி திருந்தியிருந்தால் முதுமைக்காலத்தில் அவர்களுக்கு உதவி செய்யகிடைத்த வாய்ப்பாகக் கருதிக் கொள்ளலாம் என்று அறிவு உணர்த்தியது. அவமானப் பட்டாலும் பரவாயில்லை சீனியாப்ப சித்தியிடம் பேசிப்பார்க்கலாம் என்று முடிவெடுத்தேன்.

லிங்கபாண்டியிடம் என் முடிவைச் சொன்னேன். முதலில் அவன் ஒத்துக் கொள்ளவில்லை. கமலா உறுதியாக இருந்தாள். நீண்ட தர்க்கத்திற்குப் பிறகு லிங்கபாண்டி சம்மதித்தான்.

கல்யாண மண்டபத்திலிருந்து ஊருக்குப்போய் லிங்க பாண்டியின் அம்மா இருந்த வீட்டுக்குப் போனேன். தென்னந்தட்டிப் படலையை அவிழ்த்துக் கொண்டு உள்ளே போனேன். உயர்ந்த திண்ணையில் அறுந்த நார்க்கட்டிலில் சித்தி படுத்திருந்தார்கள். உடல் மெலிந்து, குழி விழுந்த கண்களில் பீழை நிறைந்து, முடி நரைத்து, தோல் சுருங்கி, சுருண்டு கிடந்த சித்தியைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

“”சித்தி” என்றேன். “”யார்?” என்று திடுக்கிட்டார்கள்.

“”நான்தான் முருகன்” என்றேன்.

“”செல்லக்கிளி அக்கா மகனா?” என்றார்கள். குரல் மட்டும் முன்புபோல் கணீர் என்றிருந்தது.

“”ஆமா சித்தி” என்றேன்.

சித்தியின் உடம்பில் உணர்ச்சி பொங்கியது. கண்களில் நீர் கசிந்தது. கொஞ்சநேரம் கேவினார்கள். தெளிவாகி, “”பிள்ளைகளெல்லாம் நல்லா இருக்காங்களாய்யா” என்றார்கள்.

“”எல்லாரும் நல்லா இருக்கோம். சித்தி லிங்கபாண்டி வீட்டுக்கு உங்களைக் கூட்டிக் கொண்டு போகலாம் என்று நினைக்கிறேன். அப்படி இல்லைன்னா அவனை இங்கே வரச் சொல்லலாம்னு நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்று நேரடியாக விசயத்துக்கு வந்தேன்.

“”நான் என்ன நினைக்கிறது? நீ எதை நினைக்கிறாயோ அதைச் செய். அது சரியாகத்தான் இருக்கும்”.

இப்பொழுது கண்ணீர் தாரையாக வடிந்தது. கண்ணீரைக் கைகளால் துடைத்துக் கொண்டார்கள்.

“”ஆனா ஒண்ணு. அன்றைக்கு என் பிள்ளையை இந்த வீட்டு வாசப்படிக்கு வரக்கூடாதுன்னு திட்டி வெரட்டி விட்டேன். இது என் மனசுல கிடந்து அறுத்துகிட்டே இருக்குது. அதனால என் பிள்ளை இந்த வாசப்படி மிதிச்சாதான் என் கட்டை வேகும்” என்று சொல்லி என் கைகளைப் பிடித்துக் கொண்டு கதறினார்கள்.

சித்தியின் உள்ளக் கிடக்கை புரிந்து விட்டது. லிங்கபாண்டியை செல் பேசியில் தொடர்பு கொண்டேன். ஐந்து நிமிடத்தில் குடும்பத்தோடு அங்கே வந்தான்.

அரவணைப்பு கிடைத்துவிட்ட லிங்கபாண்டியின் அம்மாவின் கண்களில் நீர் துளிர்த்தது.

காதல் வசப்பட்டு சமூகக் கட்டுப்பாட்டை மீறிக் கல்யாணம் செய்துகொள்வது மட்டும் காதலுக்கான அங்கீகாரம் இல்லை. வாழ்வை வசப்படுத்தி வாழ்ந்து காட்டும் விதத்தில்தான் காதல் அங்கீகாரம் பெறுகிறது என்பதை உணர்ந்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டேன்

– மா.இராமச்சந்திரன் (ஜூலை 2015)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *