அரட்டைக் கச்சேரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 21, 2020
பார்வையிட்டோர்: 5,056 
 
 

(இதற்கு முந்தைய ‘முட்டைக் கோழி’ கதையை படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது).

நாட்டு மருந்து நாச்சியப்பன் எதிலுமே ரொம்ப ‘அத்தாரிட்டியான ஆள்’. அடாவடியான மனுஷன்.

சகலவிதமான நோய்களையும் தீர்க்கிற மாதிரியான பல்வேறு நாட்டு மருந்துச் சரக்குகள் அவரிடம் கிடைக்கும் என்கிற மாதிரி எல்லா தினுசான மனிதப் பிரச்சினைகளுக்கும் அவரிடம் உடனடியாக நல்ல யோசனைகள் கிடைக்கும்.

எதற்கும் யாருக்கும் பயப்பட மாட்டார். கொஞ்சம் அடிதடியில் இறங்கவும் யோசிக்க மாட்டார்; அப்படி இரண்டொரு தடவைகள் அடிதடியில் இறங்கிய விவகாரத்தில், ஜெயில் எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்துவிட்டு நாச்சியப்பன் ஜாமீனில் வெளிவந்த அனுபவங்களும் உண்டு.

கமலாச் சித்தி அவரிடம் போய் மகன் ராஜாராமன் வேணுகோபாலனின் மகளைக் கல்யாணம் செய்து கொள்வதில் முரண்டு பிடிப்பதை அழுது ஒப்பாரி வைத்துச் சொல்லிவிட்டாள். நாச்சியப்பன் காதுகளுக்கு இதெல்லாம் ஏற்கனவே வந்துவிட்ட கொஞ்சம் ஆறிப்போன செய்திதான். என்றாலும் சித்தி வந்து சொன்னதும் அதே செய்தி சூடாகிவிட்டது.

நாச்சியப்பன் கமலாச் சித்தியை ஒரு தடவைக்கு இரண்டு தடவைகள் முதலில் இருந்து சொல்லச் சொல்லி விஷயம் பூராவையும் நிதானமாக கவனத்துடன் கேட்டுக் கொண்டார். பிறகு, “ராத்திரி பதினோரு மணிக்கு மேல் உன் மவனை என்னை வந்து பாக்கச் சொல்லு. மண்டையில நாலு போடு போட்டு அவனை கல்யாணத்துக்குச் சம்மதிக்க வைக்கிறேன்… நீ கவலைப் படாம போய் குறட்டை விட்டு நல்லா நிம்மதியாத் தூங்கு… நான் பாத்துக்கறேன்” என்று சொல்லி சித்தியை அனுப்பி வைத்தார்.

சித்தி அவர் வீட்டை விட்டுக் கிளம்பும்போது ஒரு துணிப்பை நிறைய கடுக்காய்; சுக்கு; அமுக்கிரா கிழங்கு; சிறுகுறிஞ்சான் இலை; கண்டந்திப்பிலி; சித்தரத்தை போன்ற நாட்டு மருந்துச் சரக்குகளைப் போட்டுக் கொடுத்தனுப்பினார்.

தன் அம்மா எல்லாச் சமாச்சாரத்தையும் நாச்சியப்பன் மாமாவிடம் போய் சொல்லி விட்டாள் என்பது தெரிந்ததும் ராஜாராமனுக்கு திக்கென்று இருந்தது. மாமா ஏடாகூடமான ஆசாமி ஆயிற்றே… தன்னுடன் பேசிப் பேசியே கழுத்தை அறுத்து விடுவாரே என்கிற பயம் வந்தது. என்ன செய்வது என்றே தெரியவில்லை ராஜாராமனுக்கு. நாச்சியப்பன் தன்னை வரச் சொல்லிவிட்டால் போகாமல் இருக்க முடியாது. அப்புறம் அதுவே ஒரு புதுப் பிரச்சினையைக் கிளப்பி விட்டுவிடும்.

நாச்சியப்பன் ஜாலியாக வேடிக்கையாகப் பேசவும் செய்வார்; அதேநேரம் வினயமாகக் காரியமும் செய்து விடுவார். அதனால் ராஜாராமன் வேறு வழி இல்லாமல் நாச்சியப்பன் மாமாவைப் போய்ப் பார்த்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிவிட்டான். அவன் எதிர்பார்த்த மாதிரி பெரிய மீசையுடன் ஒரு ஆள் வந்து நாச்சியப்பன் அன்றே இரவு பதினோரு மணிக்கு அவனை வரச் சொன்னதாக வந்து சொன்னான். அன்று ராத்திரி சாப்பிட்டு முடிந்ததும் பதினோரு மணிக்கு மாமாவின் வீட்டிற்கு ராஜாராமன் கிளம்பினான்.

அது என்ன ராத்திரி பதினோரு மணி கணக்கு?

அப்போதுதான் நாட்டு மருந்து நாச்சியப்பனின் ஒரு நாளின் மற்றொரு வாழ்க்கையின் பக்கம் தொடங்கும். அகலமான அவர் வீட்டு வாசலின் எதிரில் கிட்டத்தட்ட முன்னூறு சதுர அடிக்கு வெற்றிடமாக இருக்கும். அதிகமாக ‘ரெட் ஆக்ஸ்சைட்’ கலந்து வழு வழுவென்று பூசப்பட்ட சிமிண்ட் தரை, தினமும் சாயந்திர வேளைகளில் நிறைய தண்ணீர் ஊற்றி கழுவப்பட்டு ஜில்லென்று இருக்கும். வட்டமாகப் போடப்பட்ட ஐந்தாறு நாற்காலிகளில் நாச்சியப்பனுக்கு ரொம்ப நெருக்கமானவர்கள் உட்கார்ந்துகொண்டு இருக்க, நடுவில் நாச்சியப்பன் ஒரு ராஜா நாற்காலியில் மிடுக்கோடு உட்கார்ந்திருப்பார.

பார்ப்பதற்கு அவர் முதலமைச்சர் போலவும், மற்றவர்கள் அவருடைய சக அமைச்சர்கள் போலவும் இருப்பார்கள்! ஊர்ப் பேச்சு ஆரம்பமாகும். அவரவர்களின் வீடுகளைத் தவிர்த்து ஊரில் இருக்கும் இன்னபிற வீடுகளைப் பற்றிய விஷயங்கள் ஒன்று விடாமல் அவர்களுடைய அரட்டையில் அடிபடும்.

சில நேரங்களில் சினிமா; சில நேரங்களில் அரசியல் போன்ற சங்கதிகளும் அரட்டையில் காரசாரமாக அடிபடும். ராத்திரி பதினோரு மணிக்குத் தொடங்கும் அரட்டைக் கச்சேரி அதிகாலை நான்குமணி வரைகூட அடிக்கடி நீடிக்கும்.

அப்போதுகூட ஏதோ சிறிது நேரமாவது தூங்க வேண்டும் என்கிற தர்மத்திற்குக் கட்டுப் பட்டவர்கள் மாதிரிதான் நாச்சியப்பன் குழுவினர் சுக் அரட்டைக் கச்சேரியை முடித்து வைத்துவிட்டு வேண்டா வெறுப்பாக எழுந்து நின்று தேசிய கீதம் பாடுவார்களே தவிர, கச்சேரியில் ஒருத்தர் கூட சோர்ந்து போயிருக்க மாட்டார்கள். கொட்டாவியும் கூட விட்டிருக்க மாட்டார்கள்! அப்போதுதான் ‘பேட்ரி’ சார்ஜ் செய்யப்பட்ட விளக்கு போல ரொம்பப் பிரகாசமாக இருப்பார்கள்! அது உண்மையும் கூட! அதற்கும் ஒரு சரியான காரணம் இருக்கிறது…

அரட்டைக் கச்சேரி நடு ராத்திரி ஒரு மணிக்கு உச்சாணிக் கிளையில் இருக்கும். எல்லோருக்கும் பொதுவாக அந்த நேரத்தில் மெல்ல மெல்ல தூக்கம் வா வா என்று வெற்றிலைப் பாக்கு வைத்துக் கூப்பிட்டுக் கொண்டிருக்கும். ஆனால் அதே நேரத்தில் நாச்சியப்பன் அரட்டைக் கச்சேரி குழுவினருக்கு அவர்களின் வயிறுகள் வகை வகையான அசைவ சாப்பாட்டை வருக வருக என்று கூப்பிட்டு ஆரத்தி எடுப்பதற்கு ரொம்ப மும்முரமாகத் தயாராகிக் கொண்டிருக்கும்.

அதற்கு என்றே திம்மராஜபுரம் தெப்பத்து மேட்டைச் சுற்றி நாலா பக்கமும் ராத்திரி திறந்த வெளிக் கடைகளில் வரிசையாக அடுப்புகள் எரிந்து கொண்டிருக்கும். நல்ல காட்டு உடும்பு – ராவுத்தர் கடையில் இருந்து; கோதுமைத் தவிடு மட்டுமே சாப்பிட்டு வளர்ந்த வான்கோழியின் பிரியாணி — குட்டை ரத்னம் கடையில் இருந்து; பரோட்டா சால்னா கோழி சாப்ஸ்; மற்றும் சுடச்சுட சுக்கா வறுவல் –- இவை எல்லாம் மணி கடையில் இருந்து. காடை,கெளதாரி, உல்லான் போன்ற ஸ்பெஷல் அயிட்டங்களுக்கு – சுப்பக்கா கடை இருக்கவே இருக்கிறது. வஜ்ரம், கானே, அஞ்சல் போன்ற மீன் அயிட்டங்களுக்கு கோமதியக்கா கடை பிரசித்தம். கடைசியாக தொன்னையில் வெது வெதுப்பான கருப்பட்டி அல்வா

மொபைலில் ஆர்டர் கொடுத்தால் போதும். சுடச்சுட யார் யாருக்கு என்னென்ன அயிட்டங்கள் தேவையோ அது அது அந்த அந்தக் கடைகளில் இருந்து ப்ளேட் ப்ளேட்டாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். வந்த வேகத்தில் ப்ளேட்டுகள் அடுத்தடுத்து காலியாகிக் கொண்டும் இருக்கும்.

விடாமல் மழை பெய்கிற நாட்களைத் தவிர, நாச்சியப்பனின் தினப்படி ராத்திரி வாழ்க்கையின் காட்சி இப்படித்தான் இருக்கும்.

சுடச்சுட அயிட்டங்கள் வரும் வேகத்திலேயே, நாச்சியப்பனும் உடனே தன் பர்ஸை எடுத்துத் திறந்து பணத்தை பைசல் பண்ணிவிடுவார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *