அம்மா, நீங்க கவலைப்பட வேண்டாம். உங்களுக்குப் புரமோஷன் தகும். மேல் பதவியை வேண்டாம்னு சொல்லி அப்பாவுக்காக விட்டுத் தர நினைப்பது புத்திசாலித்தனம் இல்லை…”
கார்த்திக்கை உற்றுப் பார்த்தாள் பார்வதி.
“புரியாமல் பேசுகிறான் ‘
பதவி உயர்வு முக்கியமானது, குறிப்பாக அரசு அதிகாரிகளுக்கு. அதுவும் பதவி ஓய்வுக்கு முன்பு வரும் கடைசி உயர்வு விசேஷமானது. ஆனால் அவள் அளவில் அது குடும்பப் பிரச்னையாகியுள்ளது.
“”நீங்க பின் வாங்காதீங்கம்மா…. அப்பாவுக்குக் கஷ்டமா இருக்கும்தான். அதுக்கென்ன பண்றது? நீங்க சீனியர். அதிகார வர்க்கத்தில மேல போகப் போக உயர் பதவி கம்மியாதான் இருக்கும். உங்களுக்குப் புரமோஷன் கிடைச்சா அப்பாவுக்கு ரிடையராகற வரைக்கும் மேல போக முடியாதுதான். அதுக்காக நீங்க ராஜினாமா செய்யறது அப்பாவுக்குப் பெருமையா இருக்காது” என்றாள் மகள் உமா.
ஞாயிற்றுக்கிழமையில் கிடைத்த நேரத்தை மூவரும் விவாதமாக்கிக் கொண்டிருந்தார்கள். பரமசிவம் வெளியே போயிருந்தார்.
*****
மூன்று மாதங்களாகப் பார்வதிக்கும் பரமசிவத்துக்குமிடையே மனதளவில் போட்டி நடக்கிறது. சக்தி பெரிதா, சிவம் பெரிதா என்கிற மாதிரி….
அந்தப் போட்டியை மெüனமாகப் பார்த்துக் கொண்டு நிற்கிறது, நூறு ஆண்டுகளைக் கடந்த அந்தச் சிவப்பு நிறக் கட்டடம், எழும்பூர் ரயிலடியிலிருந்து கூப்பிடு தூரத்தில்.
அந்தக் கட்டடத்திற்குள் தனித்தனியாக வலது காலை முன்னெடுத்து நுழைந்த பரமசிவமும் பார்வதியும் சுக வாழ்வைக் கண்டது அங்கேதான். இப்போது மனப் போராட்டம் நடப்பதற்குக்க காரணகர்த்தாவும் அந்த இடம்தான். பார்வதிக்குச் சொந்த ஊர் நாமகிரிப் பேட்டை. எம்.ஏ. படித்திருந்தாள். பி.ஏ.வில் தங்கப் பதக்கம். கல்லூரி ஆசிரியை ஆகலாம் என்ற கனவில் பிஎச்.டி செய்ய நினைத்தபோது அக்கட்டடத்திலுள்ள அலுவலக வேலைக்கு மனுப் போட்டாள். தேர்வு எழுதினாள். சிபாரிசின்றி வேலையும் கிடைத்தது.
சென்னை புதிய இடம். அம்மாவுடன் வந்து குடியேறினாள்.
அவளுக்குப் பின் இரண்டாண்டுகள் கழித்து மேலும் மூவர் வேலைக்குத் தேர்வானார்கள். அவர்களில் ஒருவன் பரமசிவம். முசிறிக்காரன். பெயர் பொருத்தம் முதல் சந்திப்பிலேயே அவர்களைக் கவர்ந்தது. முதல் புன்சிரிப்புக்கு அது காரணமாயிற்று. அந்தப் பொருத்தம் குறுகுறுக்க வைத்தது. தனியாகப் பேசப் பழகச் செய்தது. பார்க், பீச், சினிமா என்று சுற்றாவிட்டாலும் அங்கங்கே தனியாகக் சந்தித்தார்கள். காதல் வளர்ந்தது.
கல்யாணத்திலும் பிரச்னை தோன்றவில்லை. இரண்டு வீடுகளிலும் பச்சைக் கொடி தெரிந்தது. பார்வதியின் கழுத்தில் மூன்று முடிச்சுகளைப் போட்டான் பரமசிவம். அந்த மூன்றாவது முடிச்சின்போது அவன் மனதில் நிழலாடிய நினைவு இன்றும் தொடர்கிறது. பார்வதி, பரமசிவத்தைவிடச் சீனியர்.
அதுதான் இப்போது காரணமாகியுள்ளது.
உதவி கமிஷனர்களில் ஒருவர் டெபுடி கமிஷனர் பதவிக்குச் செல்ல வேண்டும். பரமசிவத்துக்கு இன்னும் நான்கு ஆண்டுகள் சர்வீஸ் உள்ளது. பார்வதிக்கு ஐந்து ஆண்டுகள். டெபுடி கமிஷனர் என்பது அந்த அலுவலகத்தின் இரண்டாவது பெரிய பதவி. எளிதில் கிடைக்காத வாய்ப்பு.
பரமசிவத்தின் மனதில் அவ்வப்போது படும் – “பதவி உயர்வு வேண்டாம் என்று அவள் எழுதிக் கொடுத்தால், அடுத்ததாக உள்ள தனக்கு அந்த வாய்ப்பு வரும். எனக்குப் பிறகு அந்த இடம் அவளுக்குக் கிடைக்கும். இரண்டு பேரும் அந்தப் பதவியைப் பெற்று ரிடையர் ஆனமாதிரி இருக்கும்’
ஆனால் வெளிப்படையாகச் சொல்ல வாய் வரவில்லை. அவர் மனம் பேசுவதை அலுவலகத்தில் உள்ளவர்கள் சுலபமாக ஊகித்தார்கள். மகனும் மகளும் கூட யூகம் செய்தார்கள். பார்வதிக்குப் புரியாதா என்ன? பாம்பின் கால் பாம்பறியாதா?
முடிவு எடுக்க வேண்டியது அவள்தான் என்பதால் பிரச்னை அவளுக்குப் பெரிதாகியுள்ளது. பிள்ளைகளின் மனங்களையும் அது சுற்றி வந்துஅலைக்கழித்தது.
ராஜினாமா கடிதம் அல்லது பதவி உயர்வு வேண்டாம் என்கிற கடிதம் இரண்டில் ஒன்றைத் தன்னால் செய்ய முடியும், எளிதாகச் செய்ய முடியும் என்பதை உணர்ந்தாள்.
ஆனால் பிறர் மதிப்பில் கணவன் பெயருக்குப் பாதிப்பு வரும் என்பது அவளது யோசனை. அலுவலகத்தில் உள்ளவர்களுக்குப் புறம் பேசத் தீனி கிடைக்கும். நாளை பிள்ளைகளும் சொந்த பந்தங்களும் கூட அவரைக் குறை காண்பார்கள். அவள் சிந்தனையை இவை அரித்தன. பதவி உயர்வை ஏற்றுக் கொள்வதில் அவளுக்குள்ள ஒரே தயக்கம், “கணவன் முகத்தில் மலர்ச்சி குறைந்துவிடும்’ என்பதுதான். குடும்பத்தில் இனிமை தொடர வேண்டும் என்பது அவள் நோக்கம். உமாவைத் தன் பக்க உறவுக்காரப் பையனுக்கு முடிச்சப் போட்டு வைக்க வேண்டும் என்பதுவும் அவள் உள் மனதின் ஆசை. “அதற்கு எந்தவிதச் சிறு தடையும் தோன்றக் கூடாது’
அவர்களுடைய திருமண நிச்சயத்தில் அவளுடைய மாமனார் காட்டிய பெருந்தன்மையை நினைத்துப் பார்ப்பாள். அவர்களின் காதல் வெற்றிக்கும் குடும்ப வாழ்க்கைக்கும் அதுதான் முக்கிய காரணம்.
ஓ.சி. என்று சொல்லப்படும் முற்பட்ட பிரிவுக்காரர் பரமசிவம். அவள் பி.சி. என்கிற பிற்பட்ட உட்பிரிவு. பார்வதி வீட்டில் அசைவம். பரமசிவம் வீட்டில் அது கிடையாது. பார்க்க லட்சணமாயிருந்த பார்வதியை அவனது அப்பாவிற்குப் பிடித்துவிட்டதால் மற்றவை சுலபமாகிவிட்டன. கல்யாணத்துக்கு முன்பு அவள் புலால் சாப்பிட்டதோடு சரி. அதன் பிறகு அவள் அதன் ருசியை அறியாள். அதில் அவள் மாமியார் குறியாய் இருந்தாள்.
அரசு ஆவணம் அவளைப் பிற்படுத்தப்பட்ட வகுப்பு எனச் சொல்லி அவள் தகுதியை மேல் பதவிக்கு மேலும் உயர்த்திக் காட்டியது.
பரமசிவம் தொழிற்சங்கவாதி. அதிகாரிகளின் யூனியன் செயலாளர். இப்போது அந்தப் புகழுக்குப் பங்கம் நேரிடக் கூடாது என்பதிலும் அவரது கவனம் இருந்தது.
“பதவி உயர்வை மறுத்துப் பார்வதி எழுதிக் கொடுத்தால்தான் சுயநலக்காரன் என்று கெட்ட பெயர் வரும்’
இந்தக் கோணங்கள் எல்லாம் அவர்களின் மனப் போராட்டத்தின் வடிவங்கள்.
*****
அன்றிரவு பார்வதியும் பரமசிவமும் நெடுநேரம் தங்கள் அறையில் தொலைக்காட்சியைப் பார்த்தார்கள். ஞாயிறு இரவு ஓய்வாகப் பார்த்தனர்.
ரிமோட் பரமசிவத்தின் கையில் இருந்தது. பார்வதி அவருடைய இசைவிற்கு ஏற்பப் பார்த்தாள். பத்துமணி வரை சலிப்பில்லாமல் இருந்தது. விளக்கை அணைக்கும் நேரம் வந்தது.
“”லைட் ஆஃப் பண்ணட்டுமா?” என்றார்.
“”உம்” என்றாள்.
அவ்வளவுதான் பேச்சு நிகழ்ந்தது.
இந்த மாதிரி வேளைகளில் நிகழ்ச்சிகளைப் பற்றித் தனது கருத்தைச் சுட்டிக் காட்டிப் பேசும் கணவனின் ரசனையைக் கவனிப்பாள் பார்வதி. தனி அறையில் அவர் பேசும் பேச்சின் உள் அர்த்தம் அவளை இந்த வயதிலும் கவர்ந்து இருக்கும்.
இன்று அந்த மாதிரி ரசனையை அவர் உதிர்க்கவில்லை. சுரத்தில்லாமல் பார்த்து முடித்த மாதிரி இருந்தது.
விளக்கை அணைத்தார் பரமசிவம். போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டார். சட்டென்று பார்வதியின் உள்ளம் வெதுவெதுப்பு ஆனது. அழுகை, ஏமாற்றம், தோல்வி, விரக்தி இவற்றின் கலவை அது.
ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தாள்.
“வரக் கூடிய பதவி நியமனம் சீக்கிரம் வந்தால் இந்த நிலைக்கு முற்றுப் புள்ளி வந்துவிடும்’ என்று ஒருபுறம்.
“இந்தப் பதவி உயர்வும் வேலையும் வேண்டாம் என்று எழுதித் தந்தாலும் இவை மறைந்துவிடும். நிம்மதி நிலவும்’ என்று மறுபுறம்.
அவள் மனதை அரிக்கத் தொடங்கியது. கணவனைத் திரும்பிப் பார்த்தாள். அவரது தோளின் மேல் கையைப் போட்டாள். ஆதரவை நாடியது அது. அவர் அசைந்து கொடுக்கவில்லை. கைப்பிடிப்பை அழுந்த உணர்த்தினாள். இப்போது அவர் பதில் கூறும் நிலைக்குத் தள்ளப்பட்டார். என்னவோ தெரியவில்லை. அவர் மனம் இளகவில்லை.
அவளுக்கும் அதற்கும் மேல் இறங்கிச் செல்ல மனம் கூசியது. கணவனே ஆனாலும் ஐம்பதைத் தாண்டிய தன்னிலையை உணர்த்தியது.
அவரிடமிருந்து எந்தப் பதில் உணர்வும் வெளிவரவில்லை. தனது கையை அவள் விலக்கிக் கொண்டாள். அவள் நகர்ந்து கொண்டாள். இடைவெளியை உணர்த்தினாள். அவர் பொருட்படுத்தவில்லை. ஆனால் அவர்களைத் தூக்கமும் பொருட்படுத்தவில்லை. இருவரையும் சிந்தனை ஆட்படுத்தியது.
*****
விடியற்காலை ஐந்தரை மணிக்கு எழுந்தாள் பார்வதி. கணவன் நல்ல உறக்கத்திலிருப்பதைக் கண்டாள். எழுந்து குளியலறைக்குச் சென்றாள்.
காலையில் செய்யும் முதல் வேலை சமையலறைக்குச் சென்று காபிக்கு டிகாக்ஷன் போடுவதுதான். அந்த வீட்டின் முதல் காபியை அவள்தான் குடிப்பாள்.
ஆனால் இப்போது அவள் செய்ய முற்பட்டது… முகத்தை நன்றாகக் கழுவினாள். கூடத்துக்கு வந்தாள். கையில் காகிதத்தையும் பேனாவையும் எடுத்தார். எழுத ஆரம்பித்தாள்.
“ஆணையர் அவர்களுக்கு….’ பத்து நிமிடங்களில் எழுதி முடித்தாள்.
தன் கைப்பையில் அந்தக் காகிதத்தைப் பத்திரப்படுத்தினாள். சமையலறைக்குச் சென்றாள். வழக்கமான காபி.
ஏழுமணிக்கு வேலைக்காரி வந்தாள். எட்டு மணிக்குக் கார்த்தி கிளம்பினான். எட்டரை மணிக்கு உமா புறப்பட்டாள். ஒன்பது மணிக்கு வேலைக்காரி நகர்ந்து கொண்டாள். கடைசியாக ஒன்பதரை மணிக்கு ஒன்றாகக் கிளம்பினார்கள், பரமசிவமும் பார்வதியும்.
வழக்கமாகக் காரில்தான் செல்வார்கள். இன்றும் அப்படியே… என்ன, இன்று பார்வதி காரை ஓட்டினாள். இடது பக்கத்தில் பரமசிவம்… பேசாமல் வந்தார்.
“இரவில் தான் பேசாமல் அவளை “மூட் – அவுட்’ செய்ததற்கு இப்போது பழிக்குப் பழி வாங்குகிறாளா?
மெüனமாக யோசித்தார். பேசத் துணியவில்லை. பார்வதி அவ்வப்போது அந்த மாதிரி சக்தி ரூபம் எடுப்பது அவருக்குப் புதிதல்ல.
அலுவலகத்துக்கு வந்ததும் தத்தம் அறைக்குப் பிரிந்து சென்றார்கள்.
தன் அறைக்குச் சென்றதும் இரண்டு நிமிடங்களில் ஆசுவாசப்படுத்திக் கொண்டு கோப்புகளைப் பார்த்து அனுப்பினாள். உதவியாளர்கள் கையில் கொண்டு வந்த காகிதங்களைப் பார்த்துத் தன் முடிவைச் சொன்னாள்.
எதிரிலிருந்த கடிகாரத்தை அவ்வப்போது பார்த்துக் கொண்டாள். உச்சி நேரம் வரக் காத்திருந்தாள்.
மணி பன்னிரண்டு ஆனதும் இருக்கையிலிருந்து எழுந்தாள். கைப் பையைத் திறந்து தான் எழுதிய கடிதத்தை எடுத்தாள். தன் அறையிலிருந்த ஜெராக்ஸ் மிஷினில் ஒரு பிரதியை எடுத்துத் தன் தனிக் கோப்பில் கோர்த்தாள்.
நிதானமாகத் தன் மேலதிகாரியைப் பார்க்கக் கிளம்பினாள்…
*****
மாலை நான்கு மணிக்குத்தான் செய்தி பரவியது. அதுவரை அவள் அமைதி காத்தாள். பரமசிவத்தின் காதுகளுக்கும் எட்டியது.
“பார்வதி மேடம் வேறு இடத்துக்கு மாறுதல் கேட்டு கடிதம் தந்திருக்காங்க’
“என்ன? என்னிடம் சொல்லாமலா?’ பரமசிவம் நெற்றியைச் சுருக்கிச் சுளித்தார்.
மத்தியானம் ஒன்றாகச் சாப்பிட்டபோது கூட அழுத்தமாக இருந்திருக்கிறாள். நெற்றியில் படர்ந்த அதிர்ச்சி தலைவலியை உண்டு பண்ணியது.
“என்னைக் கேட்கத் தோன்றவில்லையா?’ – சினம்.
வேகமாக எழுந்தார்.
அறையை விட்டு வந்தார். நடையில் ஷூவின் அதிர்வு வெளிப்பட்டது. பார்வதியின் அறைக் கதவைப் பட்டென்று திறந்தார். பார்வதி நிதானமாக நிமிர்ந்தாள். அவரை எதிர்பார்த்ததுதானே? அவள் அருகில் நின்று ஒரு கோப்பைக் காட்டிக் கொண்டிருந்த பெண்ணும் நிமிர்ந்து பார்த்தாள். ஒருவாறு அவளுக்கு விளங்கியது. அறையை விட்டு வெளியே செல்ல எத்தனித்தாள்.
“”இரு ரேகா” என்றவள், “”உட்காருங்க” என்றாள் கணவனைப் பார்த்து. ஃபைலை மேலும் நோட்டமிட ஆரம்பித்தாள். ஐந்து விநாடிகள்…
“”அப்புறம் வரேன்” என்று வந்த வேகத்தில் கிளம்பிவிட்டார்.
*****
அன்று மாலை வீட்டில் களேபரம் நிகழ்ந்தது.
ஆளாளுக்குப் பார்வதியைப் பிய்த்து எடுத்தார்கள்.
“”எப்படிம்மா எங்களக் கேக்காம முடிவெடுத்தீங்க?” கார்த்திக் கொதித்தான்.
“”இவ்வளவு கோழையா நீங்க சரணடைஞ்சிருக்கக் கூடாது” உமா வெடித்தாள். அப்பா முன்னாடியும் அதைச் சொன்னாள்.
“”பாரு… பசங்களுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது. ஆபிஸ்ல இருக்கறவங்க என்ன பேசிக்கிறாங்க தெரியுமா? சுயநலத்தில மேடத்தை அவர் ஜெயிச்சுட்டார்”
“”எனக்குத் தெரிஞ்ச வழி இதுதான். குடும்ப நன்மை எனக்கு முக்கியமாகப் பட்டது….”
அதோடு முடிந்தது அந்தச் சூறாவளி.
அதற்கப்புறம் அந்தச் சிவப்பு நிறக் கட்டடத்திலும் சரி, வீட்டிலும் சரி, அமைதி நிலவியது. விவாதங்கள், பேச்சுகள் குறைந்தன. பார்வதியின் இடமாறுதல் நாளை இரண்டு பக்கங்களும் எதிர்பார்த்துக் காத்திருந்தன.
*****
பதவி உயர்வுடன் பார்வதிக்கு இடமாறுதல் கிடைத்துவிட்டது. ரொம்ப தூரமில்லை. வீட்டிலிருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ள அலுவலகத்துக்கு தினமும் காரில் போய் வந்துவிடுகிறாள்.
மூன்று மாதம் கழிந்தது.
அவள் இல்லாத பழைய அலுவலகத்தில் பரமசிவம்தான் சீனியர். வேறு வழியில்லாமல் அவருக்குப் புரமோஷன் கொடுத்தார்கள். பரமசிவத்தின் முகத்தில் மலர்ச்சி.
அன்று இரவு வீட்டில் எல்லாரும் இருந்தார்கள்.
பரமசிவம் சிரித்த முகத்துடன் சொன்னார்:
“”என்னைவிட உங்க அம்மாதான் புத்திசாலி”
– இடைப்பாடி அமுதன் (ஜூலை 2012)