அம்மாவின் ஆசை எதையும் நான் இதுவரை நிறைவேற்றியதில்லை. பள்ளி நாட்களில் பாஸ் மார்க் வாங்கினால் போதும் என்ற அளவில் எனக்கு இலக்கு விதித்திருந்தாள்.
தமிழாசிரியர் குமரேசன் எங்கள் குடும்ப நண்பர் என்பதால் ஒவ்வொரு வருடமும் நான் அடுத்த வகுப்பு வருவதில் பிரச்சினை எழவில்லை. ரிசல்ட் ஒட்டுகிற தினத்துக்கு முதல் நாள் வீட்டிற்கு வருவார்.
“இந்த தடவையும்….” என்பார்.
அம்மாவின் கண்கள் நீரில் அசைவது தனி அழகு! மூலையாய் ஒடுங்கி நிற்கிற என்னைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டாள்.
“உம்மேல இப்பவும் நம்பிக்கை வச்சிருக்கேன்” என்றார் தமிழாசிரியர், போகுமுன்.
“அந்த வரி எனக்கானது இல்லை”
என்னைப் பார்த்துச் சொல்லப்பட்டாலும். அம்மாவிடம் “நன்றி” முனகலே இராது. கடமைப்பட்டவர் என்கிற ரீதியில் குமரேசன் ஸாரை அழுகை அலம்பிய கண்களால் பார்ப்பாள்.
குமரேசன் ஸார் கிளம்பிப் போய்விடுவார். போகுமுன் அந்தப் பார்வை நிறைய சொல்லிவிட்டுப் போகும்.
அப்பாவும் அவரும் நண்பர்கள். மூன்றே நாட்கள்தான் வயது வித்தியாசம். திருமண வயதில், தேடி வருகிற வரன்களில், முதல் வரன் அவருக்கு, இரண்டாவது அப்பாவுக்கு என்று (அசட்டுத்தனமாய்) நிர்ணயம் செய்து கொண்டார்களாம்.
முதலாவதாக “அம்மா” வந்திருக்கிறாள். குமரேசன் ஸாரின் தாத்தா தனது எண்பது வயதுகளில் இறையடி சேர்ந்து வீட்டில் “கல்யாணச் சாவு” உண்டாக்கி விட்டார்.
அப்பாவும் ரொம்ப மறுத்தாராம்.
“நாம பேசியது என்ன? மொத வரன் உனக்கு.. பொண்ணு வீட்டுல காத்திருக்கச் சொல்லுவோம்…”
“வேணாம். எடுத்த உடனே தடங்கல் மாதிரி எதுக்கு? உனக்குப் பார்த்ததா சொல்லிப் பேச்சு வார்த்தை ஆரம்பிச்சுரு. அடுத்த வரன் எனக்கு!”
இப்படித்தான் அம்மா அப்பாவுக்கு அமைந்தாள்.
பாவம் குமரேசன் ஸார்!
ஒரு வருஷம் தட்டிப் போய், சிவகாமி அவருக்கு வலுக்கட்டாயமாய் மனைவியானதும், எதிரெதிர் பொருத்தங்களுடன் ஸார் இன்று வரை தம் பெயர் சொல்ல மகவின்றி குடித்தனம் நடத்தி வருவது கிளைக் கதை.
பள்ளியிலேயே முடிந்தவரை தங்கி விடுகிறார். டியூஷன் எடுப்பது அங்கேதான். பணம் வற்புறுத்த மாட்டார்.அம்மாவிடம் அவர் ஏதோ கடன்பட்ட மாதிரி உணர்ந்திருக்க வேண்டும். அவளே மனைவியாக வாய்த்திருந்தால்… அவள் பேச்சைக் கேட்டுத்தானே ஆக வேண்டும். இந்த மன விதி அவரை ஆட்டிப் படைத்து எனக்கு “பாஸ்” போட்டுக் கொண்டிருந்தது.
இன்னொன்றாகவும் இருக்கலாம். ஏதாவது ஒரு பெண்ணின் ஆளுமையில் ஆண், வாழ்நாளைக் கழித்தாக வேண்டும். சிவகாமி பேச்சோ ரசிக்கவில்லை. அம்மாவின் கண்ணீர் சொல்கிற வேண்டுதலை நிறைவேற்றிப் பெறுகிற ஆனந்தம் விலை மதிப்பின்றி உணர முடிந்தது ஸாரால்.
பொதுத்தேர்வில் குமரேசன் ஸார் போல் நல்லவர்கள் நினைப்பதைச் செயல்படுத்த முடிவதில்லை. ஏதோ ஒரு ஆசிரியர் என் விதியை நிர்ணயித்து விடுகிறார். நம்பர் எழுதப்பட்டு பாதித் தாள்கள் அவருக்கே உபயோகப்படுகிற மாதிரி வெண்மையாய் என் அறிவுத் திறனை பறை சாற்றிக் கொண்டு நின்றால், என்னதான் மதிப்பெண் போடுவது? பூஜ்யத்திற்குக் குறைவாகத் தர, கல்வி நிர்வாகமும் அனுமதிப்பதில்லை.
அம்மாவை விடவும் குமரேசன் ஸார்தான் மிகவும் சங்கடப் பட்டார். எனக்கான முயற்சிகளில் இறங்கி விட்டார். அதுதான்.. பட்டறை வேலை!
“நமக்குத் தெரிஞ்சவரு. இவனைப் பத்தி நல்லாச் சொல்லியிருக்கேன். படிப்பு வரலேன்னா என்ன, பத்துப் பேருக்கு வேலையே போட்டுத் தர மாதிரி… பின்னால் பெரிய ஆளா வருவான்..”
பட்டறை மேலாளர் இரண்டே நிமிடத்தில் சொல்லிவிட்டார்.
“இவன் எதுக்கும் லாயக்கில்லே”
முதலாளி என்னை விலகி நிற்கச் சொன்னார். மேலாளரிடம் தனிமையில் கிசுகிசுப்பாய் அவர் சொன்னதில் குமரேசன் ஸார் பெயரும் இருந்தது.என்னை அனுசரிப்பதும் அவரது கடமைகளில் ஒன்று என்று புரிந்ததும் மேலாளர் குழப்பத்திலிருந்து விடுபட்டார்.
“போ! ரெண்டு ஸ்பெஷல் டீ வாங்கியா.”
“இந்த பாக்கெட்டில தண்ணி கொண்டா.”
“கேரேஜைக் கூட்டு.”
எனக்கும் விசேஷ பயிற்சி தேவைப்படாத அலுவல்கள். ஆறே மாதத்தில் நல்ல தேர்ச்சி. இனி எந்த கேரேஜிலும் இதே பணிகளை என்னால் செவ்வனே செய்ய இயலும்.
குமரேசன் ஸார் நடுவே எட்டிப் பார்த்து விசாரித்தார்.
“எப்படி இருக்கான்?”
“புத்திசாலிப்பய! சொன்ன வேலையைச் சரியா செய்யறான்.”
“பார்த்தியா, நீ நிச்சயம் முன்னுக்கு வருவே” என்பதுபோல் என்னைப் பார்த்துவிட்டுப் போவார்.
அம்மாவிடமும் சொல்லியிருப்பார் போலும். என் உணவு வகைகளில் அம்மாவின் கவனம் கூடியது.
“பாவம் ஒழைச்சுட்டு வர பையன்!”
முதல் மூன்று மாதம் சம்பளம் எதிர்பார்க்கக் கூடாது என்ற ஓனர் , குமரேசன் ஸாரிடமும் சொல்லியிருந்திருக்கிறார்.ஆனால், அவர் அம்மாவிடம், என் சம்பளப் பணத்தைத் தன்னிடமே தரச் சொல்லியிருப்பதாகக் கூறிப் பணம் கொடுத்து வந்திருக்கிறார்.
குட்டு உடைந்தது என்னால்தான்.
நான்காம் மாதம் நுறு ரூபாயைக் கொண்டுபோய் அம்மாவிடம் கொடுக்க, “இது என்னடா?” என்றாள்.
“சம்பளம்”
“அப்ப ஸார் கொடுத்தது?”
குமரேசன் தெளிவாக்கி விட்டார்.
“பையன் துடியா இருக்கான்னு எக்ஸ்ட்ராவா பணம் கொடுத்திருக்காரு. அதான் இது.”
“அப்ப, நீங்க கொடுத்தது?”
“அது மாசா மாசம் தர்ற சம்பளம்”
அவருடைய டியூஷன் பணம் குறைவதால் எந்த ஆபத்தும் இல்லாததால், குமரேசன் ஸாரின் பொய்கள் நிஜமாகிக் கொண்டிருந்தன.
பட்டறையில் புதிதாக வேலைக்குச் சேர்ந்து தானே முழுப் பெறுப்பும் எடுத்துக் கொள்கிற இன்னொரு பையனிடம் பேச்சுவாக்கில் பகிர்ந்த போதுதான் என் சம்பள ரகசியம் விடுபட்டது.
“உனக்கு அண்ணன் எவ்வளவு தராரு?”
சொன்னான். என்னையும் கேட்டான்.
“சம்பளத்தைத் தவிர நுறு ரூபா தனியாவும் தருவாரு.”
“ஒனக்கா?”
அவன் கண்களில் அவநம்பிக்கை மின்னியது.
என் பெருமை புரியாதவன்.மேலாளரிடம் போய் விசாரித்திருக்கிறான்.
“அடப் போடா! அவஞ் சம்பளமே நூறு ரூபாதான்.”
“நெசம்மாவா?”
“பின்னே? குப்பை அள்ற பயலுக்கு எத்தினி தருவாங்க?”
எனக்குக் கண்ணீர் எப்போதும் வந்ததில்லை. எதற்கு அழ வேண்டும். என் பிறவி ரகசியம் நான் அறியாதது. நான் “இந்த ரோல்” என்று நிர்ணயித்து மேடை ஏற்றியிருக்கிறார்கள். “மாட்டேன்” என்று ஓவர் ஆக்டிங் கொடுத்தால் சீனை விட்டுக் கீழிறக்கி விடுவார்கள்.
ஆனால் அம்மாவிடம் பகிர்ந்தேன்.
“என் சம்பளமே நூறு ரூபாதானாம்.”
அம்மாவிற்குப் புரிந்து விட்டது. குமரேசன் ஸார் அந்த மாதச் சம்பளத்துடன் வந்த நின்ற போது மென்மையாய் மறுத்தாள்.
“வே..ணாம். அவர் பென்ஷன் பணம் எங்க ரெண்டு பேருக்கும் போதும்.”
“ஏன்.. எ.. ன்ன சொல்றீங்க?” என்றார் தடுமாறி.
அம்மா அசையவில்லை. பாவம் குமரேசன் ஸார். தன் குட்டு வெளிப்பட்டு விட்டதில் நிதானம் தொலைந்து நின்றார். குரல் ஒத்துழைக்காமல் மழுப்ப முயன்றார்.
“இல்லே, அவன் ஏதோ தப்பாப் புரிஞ்சுக் கிட்டு…”
நானும் அம்மாவும் அந்த நிமிடங்களில் ஒரே மன தளத்தில் நின்றோம். என் தகுதி இதுதான் என்று எனக்கே புரிந்துவிட்டிருந்தது. அதை எந்த விமர்சனமுமின்றி ஏற்றுக் கொண்டிருந்த மனநிலை.
“அவனே தனியா பட்டறை வைக்கிற மாதிரி ஏற்பாடு பண்ணலாம்னு… அதுக்கு முன்னால ஒரு அனுபவத்துக்காக…” என்றார் மீண்டும்.
“இது போதும்” என்றாள் அம்மா.
முதன் முறையாக குமரேசன் ஸார் தொய்ந்து போனார்.அம்மாவைப் பார்த்தேன். அப்பாவை இழந்த தினத்தன்று இழப்பு மீறி கண்களில் ஒரு வைராக்கியம் புலப்படுத்தி நின்றிருந்த அம்மா… என்னைக் கைவிடாத அம்மா.
ஓனர் முன் போய் நின்றேன்.
“என்னடா?”
“என்னை அடிச்சாவது தொழில் கத்துக் கொடுங்க.”
சட்டென்று குனிந்து அவர் கால்களைக் கட்டிக்கொண்டு அழுதேன், பிடிவாதமாய்.
– ஆகஸ்ட் 2010