அம்மாவும் மாமியாரும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 24, 2017
பார்வையிட்டோர்: 12,455 
 
 

எனக்கு தற்போது வயது பத்தொன்பது. ஊர் திம்மராஜபுரம்.

படிப்பு எனக்கு எட்டிக்காயாக கசந்தது என்பதால் பத்தாம் வகுப்பில் இரண்டு தடவைகள் பெயிலானேன். அதன் பிறகு தற்போது என் அப்பாவுக்கு உதவியாக வெல்ல மண்டியைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

ஆங்….இந்தக் கதை என்னைப்பற்றியல்ல. என் அம்மாவையும், பாட்டியையும் பற்றியது என்பதால் அவர்கள் விஷயத்துக்கு வருகிறேன்.

என் அம்மாவுக்கு கல்யாணம் ஆனதிலிருந்தே, என் பாட்டியுடன், அதாவது அம்மாவின் மாமியாருடன் தினமும் தகராறும் சண்டையும்தானாம். இதை அம்மா என்னிடம் அடிக்கடி சொல்லி வருத்தப்படுவாள். பாட்டியின் கொடுமைகளை என்னிடம் சொல்லி நியாயம் கேட்பாள்.

இத்தனைக்கும் என்னுடைய அம்மாதான் தனக்கு மூத்த மருமகளாய் வரவேண்டும் என்று பாட்டி ஒற்றைக்காலில் நின்று அடம் பிடித்தாளாம்.
அதற்கு காரணம் அம்மாவின் அசாதாரண அழகு. பணவசதி இல்லாத குடும்பத்தில் பிறந்தவளாக இருந்தாலும், என் அம்மாவின் அழகிற்காக அவளைத்தான் என் அப்பாவிற்கு கட்டி வைக்கவேண்டும் என்று என் தாத்தாவை எதிர்த்து சண்டைபோட்டு கல்யாணத்தை நடத்திவைத்தாளாம்.

என்னுடைய அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ‘தேனிலவு’ எப்போது முடிந்ததோ தெரியாது, ஆனால் பாட்டிக்கும் அம்மாவுக்குமான தேனிலவு ரெண்டே மாதத்தில் முடிந்துவிட்டது.

முதலில் இப்படித்தான் ஆரம்பித்ததாம்:

“வசதி இல்லாத வீட்டுக் குட்டியாச்சே, சொன்னதைக்கேட்டு வாயை மூடிகிட்டு இருப்பாள்னு பாத்தா – இவ்வளவு பெரிசா கிழியுதேடி உன் வாய்?”

“பொறவென்ன, பால் பாயாசம் இதுக்கு முன்னாடி நீ சாப்பிட்டுருக்கியான்னு பணச் செருக்கில் கேட்டா, நான் மட்டும்னு இல்ல, எந்தப் பொண்ணும் வாயை மூடிகிட்டு சும்மா இருந்திரமாட்டா…அதைப் புரிஞ்சுக்க. திருப்பியும் இதுமாதிரி வாய் நீளுச்சுனா நான் ரொம்பப் பொல்லாதவளாயிடுவேன்.”

“ஆமாடியம்மா…இனிமேதான் நீ பொல்லாதவளாகி நான் பாக்கப்போறேன்.”

“சரி அப்படியே வச்சிக்குங்க. இப்பவே நான் பொல்லதவதான்.”

இப்படித்தான் என்னுடைய அம்மாவுக்கு கல்யாணம் ஆன ரெண்டாவது மாதத்திலேயே சண்டை பிள்ளையார்சுழி போட்டுவிட்டதாம்.

இவுக சண்டை கடந்த இருபது வருஷமா ஊர்முழுக்க பிரசித்தமாம்.

அப்பா ஒருநாள் வெறுத்துப்போய், அடுத்த ஊரான நடுவக்குறிச்சி பெரியப்பாவிடம் சென்று புலம்பி, நியாயம் கேட்டாராம்.

பெரியப்பா, பெரியம்மா ஆத்தங்கரைக்கு போனதை உறுதி செய்துகொண்டு, “ஏல கோட்டிக்காரா… நீ புலம்பற இந்தக் கஷ்டமெல்லாம் உன் வீட்ல மட்டும்தான்னு நெனக்கியா? இல்லவே இல்லை, வீட்டுக்கு வீடு இதே வாசப்படிதாம்ல…மர வாசல்படி இல்லேன்னா, கல் வாசப்படி! எந்தப் பயல் வீட்லையும் பொன் வாசப்படி மட்டும் கிடையவே கிடையாதுலே!” என்று அப்பாவை பொறுமையாக இருக்கும்படி சொல்லி அனுப்பிவிட்டாராம்.

ஆனா பாட்டி, “என் மருமவ பாக்கறதுக்குத்தான் அழகு, அவ வேலையெல்லாம் எழவு” என்று ஊர் பூராவும் சொல்லித் திரிந்தாளாம்.

நல்ல வேளையாக கல்யாணமான நான்காவது மாதத்திலேயே அம்மா உண்டாகிவிட்டாள். இல்லையென்றால் அம்மாவுக்கு மலடி என்கிற பட்டத்தையும் பாட்டி கொடுத்திருப்பாள்.

அப்பா, பாட்டியை , “அவ நல்லபடியா பிள்ளையைப் பெத்தெடுக்கிற வரைக்கும் சண்டை கிண்டை எதுவும் போடாம வாயை மூடிட்டு இருங்க”
என்று அதட்டினாராம்.

“மொதல்ல இத ஒன் பொண்டாட்டிகிட்ட போய் சொல்லுலே…வந்துட்டான் நீட்டிகிட்டு” என்று பாட்டி பதிலுக்கு அப்பாவை கடுப்படித்தாளாம்.

அதன்பிறகு நிஜமாகவே நான் பிறக்கும்வரை அவர்கள் இருவரும் சண்டை போட்டுக்கொள்ளவே இல்லையாம். இதைப்பார்த்து ஊரே ஆச்சரியப்பட்டுப் போனதாம். திம்மராஜபுரம் வாய்க்காலில் வெள்ளம்தான் வரும் என்றுகூடப் பேசிக்கொண்டார்களாம்.

ஆனால் நான் பிறந்த மறுநாளே சண்டையை ஆரம்பித்துவிட்டார்களாம். அதற்கப்புறம் என்ன, நான் வளர்ந்ததே அவர்களின் ஓயாத சண்டையின் மத்தியில்தான்.

இப்படியெல்லாம் தொடர்ந்த சண்டைகள் என்னுடைய இருபதாவது வயதில் பாட்டி செத்துப்போன சமயத்தில்தான் நின்றது. பாட்டி திடீரென்று இறந்துவிட்டாள்.

இத்தனை வருடங்களும் சதா பாட்டியுடன் கச்சைகட்டிக்கொண்டு சண்டையிட்ட அம்மா, பாட்டி செத்தவுடன் மார்பிலும், தலையிலும் அடித்துக்கொண்டு, தரையில் உருண்டும், புரண்டும் அழுதாள். அதைப் பார்த்த ஊர்ஜனம் பூராவும் அப்படியே வாய் பிளந்து நின்றுவிட்டது. எனக்கேகூட அம்மாவின் அழுகை ரொம்ப ஓவராக தெரிந்தது.

அதன்பிறகு அம்மா பல நாட்களுக்கு திக்பிரமை பிடிச்சு வீட்டின் மோட்டுவளையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அடிக்கடி பெருமூச்சாய் விட்டுக்கொண்டிருந்தாள். அவள் எங்களிடம் பேசுகிறதே மிகவும் குறைந்து போய்விட்டது. அப்படியே பேசினாலும் மிக மெல்லிய குரலில் பேசுவாள். இந்த அமைதி எங்கள் வீட்டிற்கு மிகவும் புதிது.

அன்று என் பெரியம்மாவும், அம்மாவும் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென்று அம்மா என்னைப்பார்த்து, “ஏல ராசா இங்கன வா” என்றாள். போனேன்.

“அப்பாகிட்ட நேத்தே பேசிட்டம்ல, நடுவக்குறிச்சில கிளியாட்டம் ஒரு பொண்ணு இருக்காம்…பெரியம்மா சொல்லுதாக. காலாகாலத்துல எல்லாம் சீக்கிரம் நடக்கணும்….அடுத்த வாரம் நாம போயி அவள பார்த்துரலாம்.”

“என்னம்மா எனக்கு வயசு இருபதுதான ஆகுது.” என்று இழுத்தேன்.

“மொதல்ல பொண்ணை வந்து பாருல…..அப்புறம் நீ வேண்டாம்னு சொன்னா, நாங்க அதுக்கு ஒத்துக்கிடறோம்” என்று பெரியம்மா என் ஆசையைத் தூண்டிவிட்டாள்.

அடுத்தவாரமே, நாங்கள் குதிரை வண்டியில் நடுவக்குறிச்சி சென்றோம்.

எனக்கு பெண்ணை மிகவும் பிடித்துவிட்டது. மிக சூட்டிகையாக வட்ட முகத்தில் வரிசையான பற்களில் அழகுடன் வளப்பமாக இருந்தாள். இரண்டு மாதத்தில் கல்யாணம் என்று முடிவானது.

குறிப்பிட்ட நாளில் கல்யாணம் மிகச் சிறப்பாக நடந்தது. நிறைய சீர் செனத்திகள் எங்கள் வீட்டிற்கு வந்தன. ஒரே வாரத்தில் எனக்கு எல்லாமே என் மனைவிதான் என்றாகிப் போனேன்.

அடுத்த சில நாட்களில் நான் என் மனைவியுடன் நடுவக்குறிச்சி சென்று மாமனார் வீட்டில் சிலநாட்கள் புது மாப்பிள்ளை தோரணையில் தங்கி இருந்தேன்.

அப்போது ஒருநாள் நானும் என் அருமை மனைவியும் பெரியம்மா வீட்டுற்கு மதிய விருந்துச் சாப்பாட்டிற்கு சென்றோம். சாப்பிட்டதும் வெய்யில் உக்கிரமாக தகித்துக் கொண்டிருந்ததால், ஒரு தனியறையில் நாங்கள் கதவைச் சாத்திக்கொண்டு ஓய்வெடுத்தோம்.

என் மனைவி அயர்ந்து தூங்கிவிட்டாள்.

நான் தண்ணீர் குடிக்க மெதுவாக எழுந்து கூடத்திற்கு வந்தபோது, பெரியம்மா, பெரியப்பாவிடம் எங்களைப்பற்றி ஏதோ சொல்ல, நான் உற்றுக் கேட்டேன்:

“இருபது வருசமா ஒரு மருமகளா இருந்து, மாமியார்கிட்ட குடுமிப்பிடி சண்டை போட்டுகிட்டே இருந்தவளுக்கு, திடீர்னு மாமியார் கண்ணை மூடியதும் சண்டை போடறதுக்கு ஆள் இல்லாம, பிள்ளைக்கு கல்யாணம் பண்ணுகிற சாக்கை வச்சிகிட்டு, ஒரு சின்னப்புள்ளைய வீட்டுக்கு மருமவளா கூட்டியாந்து, இவ மாமியாரா அதிகாரமா காலை நீட்டி உட்காந்துகிட்டு, எல்லா சண்டையையும் விட்ட இடத்திலிருந்து மறுபடியும் ஆரம்பிக்கலாம்னு எப்படி தந்திரமா என் தங்கை கணக்குப் போட்டிருக்கா பாருங்க….”

“அடபோடி….வீட்டுக்குவீடு வாசப்படிதான்….” அதன்பிறகு பெரியப்பா சொன்னது என் காதில் ஏறவில்லை.

‘என் அம்மாவா அப்படி மாறிவிடுவாள்? இருக்காது, இருக்கவும் முடியாது.’

மறுநாள் திம்மராஜபுரம் வந்து சேர்ந்தோம். பெரியம்மா சொன்னது என் மனதை அரித்துக் கொண்டிருந்தது.

அன்று மாலை என் அம்மா என் அருமை மனைவியை, “மசமசன்னு குதிரு மாதிரி நிக்காத. போயி முகரையை கழுவு; சாமிக்கு விளக்கேத்து; அவனுக்கு காப்பிபோட்டுக் கொடு” – என்று விரட்டிக் கொண்டிருந்தாள்.

என் மனைவி மரியாதையுடன் “சரிம்மா” என்று சொல்லிவிட்டு முகம் கழுவச் சென்றாள்.

எனக்கு சுருக்கென்றது. ‘அதென்ன குதிரு….முகரை போன்ற அமில வார்த்தைப் பிரயோகங்கள்? குரலை உயர்த்தி அதென்ன அதிகார தோரணை?’

‘நான் பத்தாவது தேறாதவன்தான். படிப்பு ஏறவில்லைதான். ஆனால் என்னையே நம்பி வந்திருக்கும் ஒரு அப்பாவி இளம் பெண்ணின் கணவன் நான். அவளின் எந்தவிதமான மன சஞ்சலத்திற்கும், மன வலிக்கும் நான்தான் பொறுப்பு. ஒரு நல்ல ஆண்மகனுக்கு அழகு தன் மனைவியை பொத்திப் பொத்தி பாதுகாப்பது. அவளைக் கண்கள் கலங்காமல் வைத்திருப்பது. வாழ்நாள் முழுவதும் ஒரு அன்பான புரிதலுடன் அவளை மதித்து நல்ல கணவனாக இருப்பது…’

என் அம்மா இப்போது ஒரு மாமியார். அம்மா மீது பாசம் உண்டு. ஆனால் அவளின் மாமியார் அதிகாரத்துக்கு நான் கண்டிப்பாக உடந்தையல்ல.

அன்று இரவு முழுதும் யோசித்தேன். எதையும் வருமுன் காப்பதுதான் உத்தமம்.

மறுநாள் என் அம்மா, அப்பாவிடம், “நான் தனிக்குடித்தனம் போய் என் காலிலேயே நிற்க ஆசைப்படுகிறேன்” என்று மரியாதையுடன் சொன்னேன்.

அதற்குள் என் மனைவி பதட்டத்துடன், “என்னங்க அம்மா, அப்பாதாங்க நமக்கு தெய்வம்..” என்றாள்.

“வாஸ்தவம்தான், நமக்கு எப்ப தோணுதோ அப்ப வந்து தெய்வங்களை நேரில் தரிசிக்கலாமே” என்றேன்.

அடுத்த வாரமே நாங்கள் பாளையங்கோட்டைக்கு தனிக்குடித்தனம் சென்றோம். இப்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம்.

வீட்டுக்குவீடு வாசப்படியாவது, சுண்டைக்காயாவது !?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *