கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 11, 2019
பார்வையிட்டோர்: 6,303 
 

வீடு…. எல்லாம் முடிந்த மயான அமைதி. படுத்தப் படுக்கையாய் இருந்த அம்மா நாற்காலியில் அமர்ந்து இன்னும் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள். கொள்ளி வைத்து விட்டு திரும்பியதற்கடையாளமாய் மொட்டை அடித்து தினேஷ் சோபாவில் அமர்ந்து வீட்டின் கான்கிரீட் தளத்தை இலக்கில்லாமல் வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தான். கணேஷ் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாதாவனாய் வெளியே வெற்றுப் பார்வைப் பார்த்தான்.

அப்பா சாவு அவனுக்குப் பெரிய இடி. அவனுக்கு மட்டுமா !? குடும்பத்திற்கு மட்டுமில்லாமல் ஊருக்கும்.

தணிகாசலம் சாக வேண்டிய வயதில்லை. ஐம்பதில் இருந்தாலும் நாற்பதின் தோற்றம். உற்சாகமான ஆள். எதற்கும் கவலைப்படாத மனுசன். வாழ்க்கையை அணுஅணுவாக ரசித்து வாழ்பவர்.

தணிகாசலம் எழுத்தர் வேலைக்குச் கார் என்பது கனவு. ஆனால் மனிதன் அதையும் வாங்கி அனுபவித்தவர். சொந்த வீடு. மாடியில் வாடகை வருமானம். ஒரு பையன் டாக்டர் படிப்பு. இன்னொருவன் பொறியியல். இன்னும் இரண்டு வருடத்தில் இருவருமே கை நிறைய சம்பாதிப்பவர்கள்.

‘‘எப்படிப்பா இது சாத்தியம் ?’’ விபரம் புரிந்த கணேஷ் அவரையே கேட்டிருக்கிறான்.

‘‘நல்ல மனசு !’’ அவர் இரண்டே வாக்கியத்தில் பதில் சொல்லி இருக்கிறார்.

‘‘புரியலை…!’’

‘‘தம்பி ! நாம யாருக்கும் கெடுதல் செய்ய வேணாம். நல்லதையே நினை. அதையே செய். பின்னால் உனக்கு அதுவே அது இரட்டிப்பாய்த் திரும்பும். வாழ்க்கை நல்லபடியாய் அமையும்.’’

கணேஷீக்குப் புரிந்தும் புரியாதது மாதிரி இருந்தது.

காரும் வீடும் கடன்தானென்றாலும் அது மாதாந்திர வருவாயில் கஷ்டமில்லாமல் பிடிபடும் கடன்.

கணேஷீக்கு அப்பா ஒரு விசித்திரம். அவர் சாமி கும்பிடாத மனுசன். அம்மாவுக்காக உடன் போவார். சுற்றுலா சென்றால் சுற்றிப் பார்ப்பார். கல்தச்சர்களின் கலை உள்ளம், கை வண்ணத்தை ரசிப்பார்.

‘‘சாமி இருக்கு. அதை வணங்குற எல்லாத்துக்கும் ஒரு காரணத்தைக் கற்பிச்சுக்கிட்டாலும் அதை வெறுக்கிறேன். அதுதான் ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வெரு சாமிக்கும் வேறு பாடாய் சண்டை. அதைச் சாடும்போது நான் சாமியையே சாட வேண்டி இருக்கு. இல்லேன்னு சொல்ல வேண்டி இருக்கு. கோயிலுக்குப் போக வேண்டியதில்லே . விக்கிரம், வெற்றிடங்களைப் பார்த்துக் கையில, கன்னத்துல போட்டுக்க வேண்டியதில்லே. யாருக்கும் கஷ்டமில்லாம என்னை, உலகத்தை.. நல்லவா வைன்னு நினச்சுப் போ. அதுவே உண்மையான பக்தி. சொல்வார். நியாயம்தானே…!? ’’

‘‘தம்பி ! இந்த கோயில்களை அரசர்கள் ஏன் கட்டினாங்க தெரியுமா ? மக்களுக்கு வேலை கொடுக்க. அது மட்டுமில்லே படை, பொக்கிஷங்களைப் பாதுகாக்க. ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு குளம். ஏன் ? கோயில் கட்டுமானப் பணிக்கு தண்ணீர்த் தேவைக்குக் குளம். அதான் ஒவ்வொரு கோயிலுக்கும் குளம்.’’

‘‘இன்னைக்குச் சீரும் சிறப்புமாய் இருக்கிற இந்த கோயில் சிலை நாளைக்குச் சீந்துவாரில்லாமல் போகலாம்.. அதற்கு உதாரணம் நிறைய பாழடைந்த கோயில்கள். வீரபாண்டியன் வழிபட்ட விக்கிரங்கள் இன்றைக்குத் திருச்செந்தூர் கோயில்ல கேட்பாரற்று கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கு. செஞ்சிக் கோட்டை சாமி வெறும் சிலையாய் நிக்குது. அன்னையக் காலக்கட்டம் எவ்வளவு சீரும் சிறப்புமாய்க் கொண்டாடி இருக்கும். அன்னைக்கிருந்த சாமி சக்தி இன்னைக்குக் காணாம போகக் காரணம் ? கடவுள் இல்லே. கொண்டாடினால் கோயில், சாமி. இல்லைன்னா… கூடாரம் வெறும் சிலை. அது எந்த சாமியாய் இருந்தாலும் இதுதான் நியதி.’’

அப்பா வாழ்ககை எங்கும் பூமலர். அப்படித்தான் சொல்வார்.

அப்பா அம்மாவைக் காதலித்துத் திருமணம் முடித்தவர். காதலும் அவருக்குக் கைவசம். அதிலும் கொஞ்சம் புரட்சி. துணிச்சல். பெண் மூத்தவள். வயதில் சிறுத்தவளை முடி என்று எவர் சொல்லியும் கேட்கவில்லை.

‘‘என்னைவிட என் பொஞ்சாதி மூத்தவள் !’’ என்று எந்த சபையானாலும் சங்கடமில்லாமல் சொல்வார். அம்மாதான் சங்கடப்படுவாhள்.

‘‘ஆண் வயசு குறைஞ்ச பெண்ணைத் திருமணம் செய்யலாம். பெண் செய்யக்கூடாதோ. நான் அவளைக் கட்டலை. அவள்தான் என்னைத் திருமணம் முடிச்சாள். இப்போ உங்க கணக்கு உலக நடப்பு சரியா ?’’ திருப்பிக் கேட்பார். யார் என்ன பதில் சொல்ல முடியும். ?

‘‘யோவ் ! நான் மட்டும் இந்த காரியத்தைச் செய்யலை. எனக்கு முன்னாடி மகாத்மா காந்தி தாத்தா செய்திருக்கார். இன்னும் ஆங்கில எழுத்தாளர்கள் நிறைய பேர். நான் அவுங்க காத்துல கெடந்த தூசு.’’

தணிகாசலம் மனைவிக்கு நல்ல கணவனாகவே விளங்கினர். யாருமில்லா சமயம் இல்லை கவனிக்காத நேரம் அவளிடம் செல்லக் கொஞ்சல், குளவல், உரசல், கிள்ளல், முத்தம் என்று நிறைய இன்னும் சொல்லப் போனால் அம்மா படுத்தப்படுக்கை ஆன பிறகு நிறைய. அவள் வாழ்க்கையின் பிடிப்பு தளர்ந்து மனம் ஒடிந்து விடக் கூடாதென்பதற்கான உற்சாகம் அது.

அவர் பிள்ளைகளுக்கு நல்ல அப்பா. முகம் கோணாதவர். பிள்ளைகளைத் தொட்டு அடிக்காமல் தவறு செய்தால் கண்களால் கடுக்கி கனிவாய் சொல்லி தடுத்து… நல்ல அப்பா.

வாழ்வில் எந்தக் கஷ்டமும் இல்லை. அப்படி இருக்கும்போது எப்படி தூக்குப் போட்டு !…….

வயிற்று வலி இல்லை. தீPராமலேயே துன்புறுத்தும் உள் நோய் எதுமில்லை. ஐம்பது வயதென்றாலும் இருபத்தைந்து வயது இளைஞனாய் மாறாத உடம்பு. எங்கேயும் சதை தொங்கல் கிடையாது.

ஒருத்தன் சாலை நடுவில் கழுத்தில் துண்டுப் போட்டு முறுக்கி கடன் கேட்கும் நிலை இல்லை. கடனே பிடிக்காது. ஏன் சாவு ?

‘‘என்ன கஷ்டம் ? எதற்கு இந்த முடிவு ? ’’ துக்கத்திற்கு வந்த எத்தனையோ பேர்கள் இவனை மட்டுமில்லாமல் தினேஷ் அம்மாவைத் துளைத்துத் துளைத்து கேட்டுவிட்டார்கள்.

‘‘தெரியலையே…!’’ கதறி கோவென்று ஒப்பாரி வைப்பதைத் தவிர வேறொன்றும் முடியாத நிலை.

அதிலும் அம்மா பாவம். ஒன்றரை வருடங்களாகப் படுத்தப்படுக்கை. என்ன நோயோ தீராத சிகிச்சை. அப்பா மனைவியை ஒரு குழந்தையாய் நேசித்து தூக்கி, தோழியாய்ப் பாவித்து ஆறுதல் சொல்வதும் தாதியாய் மருந்து கொடுப்பதும்…. வலி உள்ள முழங்கால் முட்டிகளுக்குத் தைலம் தடவி பணிவிடைகள் புரிவதும் ஒரு தாயாலும் முடியாது. ஏன் எவராலும் முடியாது. வேதவள்ளி கொடுத்து வைத்தவள்.

‘‘ஏங்க ? எதுக்குங்க இப்படி ஒரு முடிவு ? நான் என்னங்க பாவம் பண்ணினேன். புள்ளைங்க என்ன தவறு செய்தாங்க.’’ அம்மா கதறிய கதறல் கோரம்.

இனி அம்மாவுக்குப் பணிவிடைகள் செய்ய அப்பாவைப் போல் யார் ?

‘‘கவவைப்படாதேடா செல்லம். எல்லா நோயும் தீரக்கூடியது. நான் சரிபடுத்தறேன். எத்தனை செலவானாலும் சரி. என்னையே அடகு வைச்சு முடிப்பபேன்.’’ அணைத்து ஆறுதல்
சொல்ல அவருக்கு இணை அவர்.

‘அப்பா அப்பா ஏன் இந்த முடிவு ?’ கணேஷ் மனசு கதற எழுந்து போய் எதிரிலிருந்த அறையில் அமர்ந்தான்.

அது அப்பா அறை. அம்மா படுக்கையில் விழாதவரை அவர்கள் படுக்கை அறையாக இருந்தது, அவள் படுத்து காற்றோட்டத்தற்காக வரண்டாவிற்கு வந்த பிறகு அப்பாவுக்கும் தம்பிக்கும் படுக்கையறையாயிற்று. கட்டிலில் தினேஷ,; தணிகாசலம் படுத்துக் கொள்வார்கள்.

அந்த அறையில் கட்டில் ஒரு பீரோ அப்புறம் லாப்டில் அவர் பெட்டி. அது சூட்கேஸ். அப்பா வேலைக்குப் போன போது முதன் முதல் வாங்கியது.

அந்த பெட்டி என்றைக்குமே திறப்புதான். பண வைப்பு, வரவு செலவெல்லாம் அதில்தான். ஆனாலும் பூட்டு திறப்பு கெடையாது. பூட்டு இல்லாமலில்லை. பூட்டுவது கிடையாது.

‘‘அம்மா, அப்பா, புள்ளைங்க… ஏன் பூட்டனும் ? ஒருத்தருக்கொருத்தர் நம்பிக்கை இல்லாத என்ன வாழ்க்கை ? யார் பணம் சில்லரை எடுத்தாலும் அப்பா நான் இவ்வளவு எடுத்தேன் நான் அவ்வளவு எடுத்தேன் சொன்னால் போதும். அப்படியே சொல்லாமல் மறந்து போனாலும் அது பெரிய குற்றம் கெடையாது. அத்தியாவசத்துக்குத்;தான் எடுத்திருக்கனும் மறப்பு மனித சகஜம். !’’ சுலபமாக எடுத்துக் கொள்வார். அதே போல் அநாவசியமாக யாரும் அதில் காசு பணம் எடுப்பது கெடையாது. எடுத்தாலும் சொல்லிவிடுவார்கள். அப்புறம் எதற்குப் பூட்டு ?

அந்தப் பெட்டியில் பணம் காசு மட்டும் கெடையாது. வங்கி பாஸ் புத்தகம் முக்கிய தஸ்த்தாவேஜ்கள் மற்றும் வருசத்து டைரி. அப்பா அலுவலகத்தில் கொடுக்கும் அந்த டைரியை யாருக்கும் கொடுக்க மாட்டார். தான் உபயோகப்படுத்துவார். முக்கிய குறிப்புகள் எழுதுவார். சமயத்தில் புதுக்கவிதைகள் கிறுக்குவார். கற்பனைகள் நன்றாக இருக்கும். பத்திரிக்கைகளுக்கும் எழுதிப் போட்டுப் பிரசுரமாகி இருக்கிறது.

‘அப்பா அதில் ஏதாவது எழுதி இருப்பாரோ ? ’ இவனுக்கு சட்டென்று மனசுக்குள் பொரி தட்டியது. எழுந்து எடுத்தான். கட்டிலில் வைத்து திறந்தான். பச்சை நிற டைரி. எடுக்கும் போதே அப்பாவின் மனசைப் போல் மெத்தென்று இருந்தது.

பிரித்தான் ஒவ்வொரு ஏடுகளாகப் புரட்டினான். பக்கங்களில் ஏதோ கணக்குகள் சில புதுக்கவிதைகள். குறிப்புகள். நேற்றைய தேதியில் அடர்த்தியான எழுத்துக்களுக்குப் பிறகு எழுத்துக்களில்லை. என்ன எழுதி இருக்கார். கண்களை ஓட்டினான்.

‘அன்பு மகனுக்கு அப்பா எழுதும் கடைசிக் கடிதம் !’ முதல் வரியே இவனுக்காக எழுதியதுபோல் தூக்கிவாரிப் போட்டது. படபடப்பும் பரபரப்புமாக தொடர்ந்தான்.

‘இதை எப்போதாவது படிப்பாய் என்ற நோக்கத்தோடே எழுதுகிறேன். தம்பி ! அம்மா படுத்தப்படுக்கையான பிறகு எங்களுக்குள் உறவில்லை. என்னதான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அந்த ஏக்கத்தின் தாக்கம் என்னை விட்டுப் போகவில்லை. இதை என் பெண் நண்பி ஒருத்தி கண்டு கொண்டாள். எங்கள் நட்பின் ஆழம் இறுக்கம் எனக்கு எப்படி உதவுவதென்று யோசிக்கையில் நண்பர்களுக்குள் காசு பணம் கொடுத்து உதவுபோல் கற்பைக் கொடுத்து உதவினால் என்ன என்று தோன்றி இருக்கிறது. தீர யோசித்து அதை என்னிடம் சொன்னாள். எனக்கு அதிர்ச்சி. எங்களுக்குள் ஏகப்பட்ட வாக்குவாதம்; இறுதியில் அவள் ஜெயித்தாள். அவளுக்கு கணவன் குழந்தைகள் உண்டு. எங்கள் உறவு எவருக்கும் தெரியாமல் ஜாக்கிரதையாக இருந்தோம். விதி…. கர்ப்பமாகி விட்டாள். வெளியில் தெரியாமல் கலைக்க எங்களுக்குள் ஏகப்பட்ட நடவடிக்கை. ஏன் ?… கணவன் மேல் பழியைப் போட்டு மருத்துவமனையில் போய் சுத்தம் செய்ய வழி இல்லை. காரணம் அவன் குடும்பக்கட்டுப்பாடு செய்து கொண்டவன். மாத்திரைகள், பப்பாளிப்பழங்களுக்கெல்லாம் அது அசைந்து கொடுக்கவில்லை. முயற்சி தோல்வி ஆக ஆக அவளுக்குப் பீதி. அந்த பீதியில் ஒரு நாள் அவள் திடீரென்று தற்கொலை. இறந்தே போனாள் ’

‘சேதி எனக்குப் பெரிய இடி. அவள் சாவு பெரிய வலி. அவளை நான் கொன்றதாய் குற்ற உணர்வு. மாண்டதாய் வேதனை. பரிதாப்பட்டு உதவ வந்ததன் பலன் சாவு உயிரிழப்பா ? என்னால் தாளவே முடியவில்லை. எனக்கு உதவ வந்து அவள் இறக்க.. நான் மட்டும் வாழ்வது என்ன நியாயம் ? வாழ்ந்தாலும் அவள் இறந்த பாவம் என்ன சும்மா விடுமா ? இருந்து அவளை நினைத்துப் பார்க்க அருகதை உண்டா ?’

‘தம்பி ! அம்மாவுக்கு நல்ல கணவன். உங்களுக்கு நல்ல தகப்பன். ஊருக்கும் நல்லவன். இந்த ஒருத்திக்கு மட்டும் ஏன் கெட்டவனாக இருந்து வாழ வேண்டும். ?! இதுதான் என்னை மீண்டும் மீண்டும் தாக்கியது. தொட்ட அவளுக்கும்; நல்லவனாக இருக்க முடிவு செய்தேன் முடிவு தற்கொலை. தற்கொலை முடிவு கோழை. எனக்கு விருப்பமில்லை. ஆனால் இதற்கு முடிவில்லையே !! தம்பி ! நம் மக்கள் காதலுக்கு எதிர்ப்பும், கற்புக்கு கோயிலும் கட்டிய விளைவு இது. கற்பு பெரிதாக்கப்படாமலிருந்தால் நிறைய கொலை, தற்கொலைகள் குறையும். உங்களுக்கு சிறகுகள் முளைத்து விட்டன. என்னை மறந்து அம்மாவைப் போற்றி வாழுங்கள். வணக்கம்’.

முடிக்க…..‘‘ அப்பா……..! ’’ கணேஷ் கதறினான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *