அம்மன் அருள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 24, 2023
பார்வையிட்டோர்: 1,217 
 

(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மாரிகாலம்; மார்கழி மாதம்; வழமைபோல் அடை மழை. ஆனால், மழை சோனாவாரியாகக் கொட்டிக் கொண்டே இருந்தது, கிழக்கு ஈழமே மாரிகாலத்தில் வழமை போலக் காணாத பெரு மழை. அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த மட்டக்களப்பு வாவியிலே ஒரு பரபரப்பு. முப்பது கல் தொலைவு நீண்டு பரந்த மட்டக்களப்பு வாவியின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து கொண்டேயிருந்தது. அதன் பயனாக மட்டக்களப்பு வாவியிலே சுரந்த மழை வெள்ள நீர் தடம் புரண்டு ஓடலாயிற்று.

மட்டக்களப்பு வாவிக்கரையிலே இருந்த மாரி அம்மன் கோயிலைத் தொட்டாற்போல் வெள்ளநீர் ஓடலாயிற்று. மக்கள் துயர்தீர்க்கும் மாரி அம்மன், மண்டூர்க் கோட்டைமுனைக் கிராமத் துக் கரையிலே தடம்புரண்டோடும் வெள்ளத்தைப் பார்த்தவாறு அமைதியாகவே கொலுவீற்றிருந்தாள்.

வெள்ளம் மாரி அம்மன் கோயிலினுள் புகுந்துவிடுமோ என்ற அச்சம் அர்ச்சகருக்கு. ஆகவே, அவசரம் அவசரமாகப் பூசையை முடித்துக்கொண்டு பிரசாதத் தட்டுடன் வெளி மண்டபத் தினுக்கு வந்தார்.

மழை சோனாமாரியாகப் பெய்து கொண்டிருந்தது. மட் டக்களப்பு வாவியிலே வெள்ளம் பெருக்கெடுத்துப் பரவுகிறது. எங்கும் வெள்ள நீர் புகுந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் யார்தான் இப்பொழுது கோயிலுக்கு வரப்போகிறார்களென்ற நினைப்பு அர்ச்சகருக்கு. இருந்தாலும், முதியவரான நாகலிங்கம் மட்டும் கண்ணீர் சொரியத் தன்னை மறந்து வழிபட்டுக் கொண்டு நின்றார்.

அர்ச்சகர் வழமையாகத் தினமும் காணும் காட்சிதான் அது. எத்தனையோ ஆண்டுகளாக முதியவர் நாகலிங்கத்தை நாள் தவறாமல் மாரிஅம்மன் சன்னதியில் பார்த்து வருகிறார். அர்ச்சகர் வழக்கம் போல் அவருக்குப் பக்கத்திலே பிரசாரத்தை வைத்துவிட்டு உட்கோயில் கதவைப் பூட்டிக் கொண்டு வெளியேறினார். மாரிஅம்மன் கோயில் அர்ச்சகருக்கு அவர் வேதனை! பெரியவ ரான நாகலிங்கத்துக்கு அவர் வேதனை! எல்லார்க்கும் அவரர் வேதனை! இந்தப் பரந்த உலகில் வேதனையே இல்லாத மனிதன் தான் யார்?

பஞ்சடைந்த கோலம்! தலைமுழுவதும் வெண்மயிர். நீண்டு வளர்ந்த வெண்ணிறத் தாடி. இடையிலே இரண்டாக மடித்துக் கட்டிய ஓர் எட்டுமுழ வேட்டி. தோளினுக்குரிய துண்டு இடுப் பிலே. இரண்டு தலைமுறைகளைப் பார்த்து விட்ட முதுமைக் கோலமானாலும், கைத்தடியின்றி நடக்கும் தெம்பு, இருந்தாலும், தளர்ந்து போன முதுமைக் கோலம்.

இவ்வாறு தோன்றும் நாகலிங்கம் ஏழையல்ல! பரம்பரைப் பணக்காரக் குடும்பத்திலே தான் நாகலிங்கம் பிறந்தார். அதிலும் பெற்றவர்களுக்கு ஒரேயொரு மகனாகப் பிறந்ததனால் திரண்ட சொத்தினுக்கு ஏகவாரீசானார். நாகலிங்கம்.

இளமைப் பருவத்திலே மனைவியை இழந்த நாகலிங்கம் மறுமணம் செய்து கொள்ளவேயில்லை. ஒரே பேறான தனது செல்லமகளை வளர்ப்பதிலே காலமனைத்தையும் செலவிட்டார். அதன் பயனாகப் பொல்லாத மதுவிடம் தஞ்சம் புகுந்தார். நாகலிங்கத்தின் இளமைக்காலம் அனைத்தையும் மது ஆக்கிர மித்துக் கொண்டது.

நாகலிங்கம் மதுவுக்கே அடிமையாகிச் சதா குடித்தே அழிப் பதாக இருந்தாலும், அவரது சொத்துக்கள் கரைந்து விடாது. பல தலைமுறைகளுக்குப் போதுமானதாக அவரது சொத்துக்கள் பரவிக் கிடந்தன.

மானத்தைச் சதா பழித்துக் கொண்டிருக்கும் மாறாத வடு வுக்கு மருந்தாகத்தான் நாகலிங்கம் மது குடிக்கத் தொடங்கினார். கிராமத்திலே தலைகாட்ட முடியாத அவமானம். வெளியிலே நடமாட முடியாத வெட்கக்கேடு; ஆதலினால் குடியோடு ஐக்கியப் பட்டுச் சதா வீட்டிலே முடங்கிக் கிடந்தார் நாகலிங்கம். அதிற்றான் நாகலிங்கம் ஓரளவு அமைதி கண்டார். ஆறுதல் அடைந்தார்.

கால நீரோட்டத்தின் தாமதியாத விரைவின் பயனாகத் தான் நாகலிங்கம் சமூகத்தைப் புரிந்துகொண்டார். முதுமைக் காலத்திற் றான் உலகத்தை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆகவே நாகலிங்கம் குடியை மறந்தார்.

பருவத்தின் எழிற்கோலத்திலே மணம் பரப்பி நின்றாள் பேத்தி மரகதம். ஒரே பேறான மகளின் புதல்வியான மரகதத்தினுக்கு வாழ்வு அளிக்கமுடியாது போயிற்றே என்று வருந்தினார் நாகலிங்கம். அதன் பயனாகத்தான் மண்டூர்க் கோட்டை முனையில் அருளோடு குடி கொண்டிருக்கும் மாரிஅம்மனை மட்டும் நம்பித் தினமும் வழிபட்டுக் கொண்டு வந்தார்.

நாள் தவறினாலும் முதியவரான நாகலிங்கம் மாரி அம்மன் கோயிலினுக்குச் சென்று வழிபடத் தவறவே மாட்டார். சமூகமே ஒதுக்கி வைத்துத் தந்த பழியை மாரி அம்மனாற்றான் இனித் தீர்க்க முடியுமென்பது நாகலிங்கத்தின் அசையாத நம்பிக்கை. தள்ளாடித் தளர்ந்த முதுமைக் கோலத்திலும் மாரி அம்மனை வழிபட்டுத் தன் குறையை வாய்விட்டே கூறி, அழுது கண்ணீர் சொரிவார் நாக லிங்கம்.

“குறை இரந்து வேண்டுபவர்களுடைய குறையை யெல்லாம் தீர்க்கும் மாரி அம்மனே! என்குறை யைத் தீர்க்கமாட்டாயா? என் பேத்திக்கு வாழ் வளிக்க உலகமாதாவாகிய உன்னாற்றான் முடியும். இந்த ஏழைக்கு இரங்கு தாயே! இரங்கு, மாரி அம்மனே!”

என்று மாரி அம்மன் சன்னதியில் நின்று கண்ணீர் சோர வாய்விட்டே சொல்லி அழுவார் நாகலிங்கம்.

பருவமீதில் வண்ணப்பூச்சிலே எழிலாக நிற்கும் மரகதத் தினுக்குத் திருமணம் செய்ய முனைந்து மண்டூர்க் கோட்டை முனைக் கிராமத்திலே தோல்வி கண்டார் நாகலிங்கம். அயல் கிராமங்களிலும் ஒருவருக்குப் பின் ஒருவர் என்ற வகையிலே எத்தனையோ வரன்களைப் பார்த்தார். முடிவிலே அனைத்தும் கைக்கெட்டியும் வாய்க்கெட்டாததாகவே போயிற்று, திரண்ட தனது பணத்தினாற் கூட மரகதத்தினுக்குத் திருமணம் செய்து

வைக்க முடியாது போயிற்று நாகலிங்கத்தால். இயன்றளவு முயன்று வரன் தேடுவதில் தோல்வி கண்ட நாகலிங்கம், பாரத்தை மாரி அம்மன்மீது போட்டார். அடியவர்களுக்கு அருள் சுரக்கும் மாரி அம்மனது அருளினை நாடினார் நாகலிங்கம். மாரி அம்மன் மீது அளவிடமுடியாத நம்பிக்கை வைத்ததனாற்றான், நாள் தவறாது அம்மனை வழிபட்டுக் குறையைத் தீர்த்து வைக்கும்படி வேண்டுவார். கருணையே உருவான மாரி அம்மன் எத்தனையோ பேர்களுக்கு அருள் சுரக்கும்போது, இன்னும் அவள் நாகலிங்கத்தினுக்கு அருளைச் சுரக்கவேயில்லை.

தனது மனக்குறையை மாரி அம்மனிடம் கண்ணீர் சொரிய நாகலிங்கம் முறையிட்டுக் கொண்டிருக்கும் போது கோயிலினுள் நுழைந்த துறவியான அவர் கேட்டார்.

ஒரு தடவையல்ல! பல தடவைகள் நாகலிங்கம் வாய்விட்டு அம்மனிடம் அழுத அவலக்குரலைக் கேட்ட துறவி தன்னை யறியாமலே கண்ணீர் சிந்தினார்.

தன்னுடைய ஏக்கக் குரலினுக்கு இன்னொரு மனிதக்குரல் கண்ணீர்விட்டுக் கொண்டிருப்பதை வெளியே வந்த நாகலிங்கம் பார்த்தார். காவி ஆடைபுனைந்து சடாமுடி தரித்திருந்த துறவியை நாகலிங்கம் உற்றுப் பார்த்தார். எங்கோ பார்த்த முகமாக இருக் கிறதேயென்று நன்றாக உற்றுப் பார்த்தார். முற்றுந்துறந்தவ ராயிற்றே என்றதனால் கை எடுத்து வணங்கிவிட்டு, தனது வீட்டினை நோக்கி நடந்தார்.

நாகலிங்கம் தள்ளாடியவாறு. அப்படியே கோயில் மண்ட பத்திலே சாய்ந்துவிட்டார். அவரது கண்களிலிருந்து கண்ணீர் பெருகி ஓடலாயிற்று.

கிழக்கு ஈழத்தின் தலைநகர் மட்டக்களப்பு. தலைநகரான மட்டக்களப்பினைச் சுற்றி வாவி பரந்துகிடப்பதனால், நகரப் பெயருடன் வாவி என்னும் பெயர் இணைந்து மட்டக்களப்பு வாவி என்று வழக்கமாகிவிட்டது.

மட்டக்களப்பு வாவியின் மேற்குக் கரையில் அமைந்த அழகிய ஊர் மண்டூர்க் கோட்டைமுனை. திரும்பிய பக்கமெல்லாம் பச்சைப் பசேலென்ற பசுமையான வயல்வெளிகள். உழுதுண்டு வாழ்வதிலே பரம்பரையாக இன்பம் கண்டவர்கள் மண்டூர்க் கோட்டை முனைக் கிராமத்து மக்கள்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழும் மண்டூர்ப்பகுதியின் கேந்திரஸ்தானமாக மண்டூர்க் கோட்டைமுனை துலங்கியது. ஆகவே மண்டூர்க் கோட்டைமுனையில் ஒரு கல்லூரி நிறுவப்பட வேண்டுமென்று மக்கள் அரசாங்கத்தை கோரினார்கள். அக்கோரிக் கையின் பயனாக மண்டூர்க் கோட்டைமுனையில் ஒரு கல்லூரி திறக்கக் கல்வி இலாகா தீர்மானித்தது. அதன் பயனாகக் கிழக்குப் பிராந்தியக் கல்வி அதிகாரி கல்லூரி அமைப்பதற்கான காணி யினைப் பார்வையிட வந்தார்.

மண்டூர்க் கோட்டையிலுள்ள பகிரங்க வீதியிலே உள்ள பல காணிகளைக் கல்வி அதிகாரி பார்வையிட்டார். அவைகள் அவ ருக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. இறுதியாக நாகலிங்கத்தின் வீட்டினுக்கு அருகாக இருந்த காணி கல்லூரி அமைப்பதற்கு ஏற்றதாகக் கல்வி அதிகாரிக்குத் தோன்றியது.

பற்றைக் காடுகள் மண்டிக்கிடந்த அந்தப் பெரும் நிலப்பரப் புக் காணியைத் தந்துதவும்படி கல்வி அதிகாரி நாகலிங்கத்தைக் கண்டு நேரடியாகவே கேட்டார்.

வழமையான விலையைக் காட்டிலும், அதிகமான விலை யென்றாலும், கொடுத்துக் காணியைக் குழந்தைகளின் நன்மைக் காக வாங்கிக் கல்லூரி நிறுவப் போவதாகத் தெரிவித்தார், கல்வி அதிகாரி.

பெரும் தனவந்தரான நாகலிங்கம், கிராமத்துக் குழந்தை களின் உயர்கல்வியினை முன்னிட்டுக் கல்வி அதிகாரி கேட்ட காணியினைக் கொடுத்தார். பணம் பெறாமல் நன்கொடையா கவே நாகலிங்கம் காணியினைக் கையளித்தார். நாகலிங்கத்தின் வள்ளல் தன்மையை வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்தார் கல்வி அதிகாரி.

நிலம் கிடைத்த கையுடனே கல்வி அதிகாரி நடவடிக்கை களைத் துரிதமாகவே மேற்கொண்டார். கல்லூரிக்கான கட்டிடங்கள் அமைக்கும் ஒப்பந்தம் கான்ட்ராக்டருடன் தயாராகியது.

கல்லூரிக் கட்டிடங்கள் அமைப்பதை மேற்பார்வை செய்யும் ஓவர்சியராக மாணிக்கத்தைக் கல்வி அதிகாரி நியமித்தார்.

கட்டிளங்காளையான மாணிக்கம் கல்வி இலாகாவின் கட்டிட ஓவர்சியராகப் பதவியேற்றவுடன் கையேற்ற முதலாவது வேலைத் திட்டம், மண்டூர்க் கோட்டை முனைக் கல்லூரிக் கட்டிட வேலை யாகும்.

ஓவர்சியர் மாணிக்கம் உல்லாசப் பேர்வழி. சதா மடிப்புக் கலையாத ஆடைகள். வாலிபத்தின் முறுக்கல்லவா? அதற்கான அரும்பு மீசை. களைசொட்டும் அவனது சிவந்த முகத்தினுக்குக் கருமையான அரும்புமீசை தனியோர் வசீகரத்தைக் கொடுத்தது.

செக்கச் சிவந்த மாணிக்கத்தின் மேனிக்கு அலை அலை யாகச் சுருண்ட கிராப்பு தனியோர் கவர்ச்சியைக் கொடுத்தது கடமையைக் கையேற்க வந்த மாணிக்கத்தை நாகலிங்கம் அன்பு டன் வரவேற்றார். அவனுக்காகத் தன் வீட்டின் முன் அறைகளிலொன்றை ஒழித்துக் கொடுத்தார். தங்குவதற்கு இடம் கொடுத்த நாகலிங்கம் வேளைக்கு உணவு கொடுக்காது விடுவாரா?

நாகலிங்கத்தின் வீட்டிலே விருந்துச் சாப்பாட்டைத் தினமும் சுவைத்துக் கொண்டு கடமை பார்த்து வந்த மாணிக்கத்தினுக்கு வீட்டிலே வளைய வந்து கொண்டிருந்த சுந்தரி பெரும் விருந்தானாள்.

சுந்தரி என்ற பெயருக்கேற்பவே சௌந்தரவதியாக விளங்கினாள் சுந்தரி. சுகபோக வாழ்வும், செல்வச் சிறப்பும் குற்றமே காணமுடியாத சுந்தரியின் அழகினுக்கு மெருகு கூட்டிது.

நாகலிங்கத்தின் திரண்ட சொத்துக்காகவல்ல; சுந்தரி சௌந்தர அழகினுக்காக அவளை அடைய எத்தனையோ வாலிபர்கள் துடித்துக் கொண்டு நின்றார்கள்.

எந்தச் சீதனமும் வேண்டாம். சுந்தரியை மட்டும் தந்தாற் போதுமென்று பலர் ஒற்றைக்காலில் நிற்கவும் செய்தார்கள்.

மனைவி மறைந்தவுடன், மகளை வளர்ப்பதிலே தன் வாழ்க் கையைச் செலவிட்ட நாகலிங்கம், சுந்தரி கண்கலங்கப் பொறுக்க மாட்டார். அத்தனை அன்பாகச் சுந்தரியைத் தாலாட்டி வளர்த்தார் நாகலிங்கம். சுந்தரியைப் பற்றிப் பலமான திட்டங்களும் தீட்டி யிருந்தார் நாகலிங்கம்.

தனது திட்டங்களைச் செயலாக்க நாகலிங்கம் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார். நாகலிங்கம் தேர்ந்தெடுத்திருந்த மாப் பிள்ளை இலங்கைப் பல்கலைக்கழகத்தில் வைத்தியப் படிப்பை முடித்துக் கொண்டு விசேஷ பட்டம் பெறுவதற்காக இங்கிலாந்து சென்றிருந்தான். இங்கிலாந்திலே கல்வியை முடித்துக் கொண்டு ஊர் திரும்ப இன்னும் ஒரே வருடம் மட்டும் இருந்தது.

இங்கிலாந்தில் மாப்பிளை படிக்கும் அத்தனை செலவையும் நாகலிங்கமே ஏற்றுக் கொண்டிருந்தார். இன்னும் ஒரு வருடந்தான். பின்னர், மாப்பிள்ளை வந்துவிடுவான். மண்டூர்க் கோட்டை முனைக் கிராமமே வியக்கத்தக்கதாகத் திருமண விழாவை நடத்த வும் நாகலிங்கம் திட்டம் தீட்டியிருந்தார்.

நாகலிங்கம் நினைத்துத் தீட்டிய திட்டமொன்று; நடந்த திட்டமோ வேறொன்று.

சுந்தரியின் மோகன எழில் மாணிக்கத்தைக் காந்தம் போல் கவர்ந்து இழுத்தது. அதேபோல் மாணிக்கத்தின் வசீகரமான தோற்றம் சுந்தரியைக் கவர்ந்து இழுத்தது. இருவரும் காதல் வயப்பட்டார்கள்.

பருவத்தின் பண்பிலே, வாலிப மயக்கத்திலே, காதல் என்னும் சக்தியிலே மாணிக்கமும் சுந்தரியும் இணைந்தார்கள், உள்ளத்தால் மட்டுமல்ல; உடலாலும் இணைந்தார்கள். இன்பமயமான அந்த இணைப்பு விபரீதத்தில் முடிந்தது. சுந்தரி இன்னோர் உயிரைச் சுமக்கலானாள்.

நிலைமையை நாகலிங்கம் அறிந்தபோது வெகுண்டெழுந்தார். நாகலிங்கத்தின் செல்வப் பெருக்கையும், செல்வாக்கையும் அறிந்திருந்த மாணிக்கம், தன்னை உயிருடனே சமாதி வைத்து விடுவாரென்ற பயத்தினால் இரவோடிரவாக ஊரைத் துறந்து ஓடினான். உத்தியோகத்தையும் உதறித் தள்ளிவிட்டு பிறந்த ஊரையும் துறந்து மாணிக்கம் ஓடினான்.

மகளின் நிலைமையினை அறிந்த நாகலிங்கம் கலங்கினார் குடும்ப கௌரவத்தினுக்கே களங்கத்தைத் தேடிவிட்டாளென்று அவர் சீறிச் சினக்கவில்லை. அரவணைத்தே உண்மையினைக் கேட்டறிந்தார்.

நடந்தது நடந்துவிட்டது. கறந்த பால் முலையில் ஒரு போதும் ஏறாதே! ஆகவே, கலங்கித்தான் ஆகப்போவது எதுவு மில்லையெனக் கண்ட நாகலிங்கம், குடும்ப கௌரவத்தைக் காக்க மாணிக்கத்தையே மருமகனாக்கிக் கொள்ளாத் தீர்மானித்தார்.

மாணிக்கத்தைத் தேடினார், தேடினார், ஈழமெங்குமே தேடினார்! மாணிக்கம் கிடைக்கவேயில்லை.

ஊர்வாயை உலைவாயால் மூடமுடியுமா? சுந்தரியைப் பற்றிய வதந்தி காட்டுத் தீபோல் ஊரெங்கும் பரந்தது. மண்டூர்க் கோட்டைமுனையைக் கடந்தும் பரவியது. குடும்பப் பழிக்கு அஞ்சி நாகலிங்கம் நடைப்பிணமானார். எங்கும் வெளியே செல்லாமல்; வீட்டிலே அடைபட்டுக் கிடந்தார்.

தந்தையின் நிலையினைக் கண்ட சுந்தரி கலங்கினாள். கண்ணீர் விட்டுக் கதறினாள். எத்தனையோ தடவைகள் உயிரைப் போக்கிக் கொள்ளவும் முனைந்தாள். அதனால் இன்னும் பழி தந்தையை வாட்டுமெனக் கருதித் தற்கொலை செய்யும் எண்ணத் தைக் கைவிட்டாள். தன் வயிற்றிலே வளர்ந்துகொண்டு வரும் சிசுக்காக உயிரைக் கையில் பிடித்து கொண்ட நடைப்பிணமாக உலாவினாள். சதா கண்ணீர் சிந்துவதும், எண்ணி எண்ணி ஏங்குவதுமாக இருந்தாள் சுந்தரி, அந்த ஏக்கத்திலே காலமும் விரையலாயிற்று.

காலம் விரைந்தது. சுந்தரி சுமந்த தாய்மைப் பேற்றினுக்குப் பயன் கிடைக்கும் நாளும் நெருங்கியது. ஏக்கமே உருவாகிக் கருகிமெலிந்த உடம்பாதலினால் பிரசவவேதனையைத் தாங்க முடியாது சுந்தரி தவித்தாள். கைதேர்ந்த வைத்தியரை நாகலிங்கம் வரவழைத்தார். அவரது அரும் பெரும் முயற்சியின் பயனாக, தங்க விக்கிரகம் போன்ற ஒரு பெண் மகவைச் சுந்தரி பெற்றெடுத்தாள்.

பெற்ற மகவை ஆசைதீரப் பார்த்து அன்பு முத்தமிட்டாள் சுந்தரி. அவ்வளவுதான். பிரசவ அறையிலேயே கண்களை மூடிவிட்டாள் சுந்தரி.

வைத்தியரால் சுந்தரியின் வயிற்றில் இருந்த குழந்தையைத் தான் காப்பாற்ற முடிந்தது. ஆனால், சுத்தரியைக் காப்பாற்ற முடியாது போயிற்று.

அருமை பெருமையாக வளர்த்த மகள் இறந்த அதிர்ச்சியை நாகலிங்கத்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. குடும்பத்துக்குப் பழி தேடிவிட்டாள் சுந்தரி என்று அவர் என்றுமே அவளைக் கண்டித்ததில்லை.

சுந்தரியின் திருமணத்துக்காக ஏலவே பல திட்டங்கள் அவர் தீட்டியிருந்தபோதிலும், சுந்தரி மாணிக்கத்தைத்தான் மணக்கப் போகிறேன் என்று ஒரு வார்த்தை கூறியிருப்பாளேயாகில், மறு பேச்சின்றித் திருமணத்தை நடத்தி வைத்திருப்பார். சுந்தரி கண் கலங்கப் பொறுக்காதவராயிற்றே நாகலிங்கம்.

சுந்தரியின் மறைவு குடும்பப் பழியை ஓரளவு துடைத்த தென்றாலும், அவள் விட்டுச் சென்ற குழந்தை அந்தப் பழியை இரட்டிப்பாக்கவே செய்தது. குடும்பப் பழியின் மங்காத சின்ன மாகவே சுந்தரியின் குழந்தை இருந்தது. அந்த வேதனை நாகலிங் கத்தை அணு அணுவாக வதைக்கலாயிற்று. அதிலிருந்து விடுபட நாகலிங்கம் மதுவிடம் தஞ்சம் புகுந்தார்.

நாகலிங்கத்தின் மனக்கவலையைப் போக்க மது அரக்கன் உற்ற துணைவனாகக் கைகொடுத்து உதவினான். மதுவுக்கு நாகலிங்கம் அடிமையாகிக் கொண்டு போனது போலவே, அவரது பேத்தியான மரகதமும் வளரலானாள்.

மரகதத்தை மிகவும் கண்காணிப்புடனே, பெருமையாகப் பாராட்டி வளர்த்தார் நாகலிங்கம். தாயைப்போல் பிள்ளை என்று இராமல், மரகதம் வைராக்கியம் கொண்டவளாகவே வளர்ந்தாள். நாகலிங்கத்தை விட்டு விலகாமல், அவரது உயிர்போல் இயங்கிக் கொண்டு வந்தாள் மரகதம்.

காலம் நாகலிங்கத்துக்குத் தள்ளாத முதுமையையும், மரகதத் துக்குக் கன்னித் தன்மையையும் கொடுத்தது.

நாகலிங்கம் பேத்தி மரகதத்தினுக்கு வரன் தேடலானார். அப்பொழுதுதான் ‘தகப்பன் பெயர் தெரியாதவள்’ என்ற பழி அவரை மிகவும் வலுவாகத் தாக்கியது. திரும்பிய பக்கமெல்லாம், ‘மரகதம் தகப்பன் பெயர் தெரியாதவள்’ என்னும் வசை நாகலிங் கத்தை மோதியது. பொல்லாத அந்த வசையான பழியினை அவ ரது திரண்ட செல்வத்தாற் கூடத் துடைக்க முடியாது போயிற்று. அப்பொழுது தான் நாகலிங்கம் தன்னை உணர்ந்தார். தன் சமூகத்தை உணர்ந்தார். இந்த உலகத்தை உணர்ந்தார்.

தன் பணத்தின் சக்தியில்லாத தன்மையை உணர்ந்த நாக லிங்கம் குடியைத் துறந்தார்; மதுவை மறந்தார்.

பேத்தி மரகதத்தினுக்கு இனி மனித சமூகத்தினால் வாழ் வளிக்க முடியாது. மனித சமூகத்தை நம்புவதில் எந்தவிதமான பயனுமேயில்லையெனக் கண்ட நாகலிங்கம், எல்லாவற்றிலும் வல்லவளும், உலக மாதாவுமான மாரி அம்மனை நம்பத் தொடங் கினார். மனிதனால் ஆகாத முயற்சி தெய்வத்தாற்றானே கைகூடு மென நம்பினார் நாகலிங்கம். மகத்தான அந்த நம்பிக்கையின் பயனாக மண்டூர்க் கோட்டைமுனை மக்களின் குலதெய்வமான மாரி அம்மனை நாள் தவறாது வழிபடலானார். மாரி அம்மன் சந்நிதிக்குச் சென்று தன் குறையை மாரி அம்மன் முன்வைத்து, அருள் சுரக்கும்படி நாள்தோறும் வழிபட்டுக்கொண்டு வந்தார்.

மண்டூர்க் கோட்டைமுனை மாரி அம்மன் கோயில் மண்ட பத்திலே சாய்ந்த, துறவிவேடம் கொண்ட மாணிக்கம் வெள்ளத் தின் தாலாட்டுதலினால் கண்களைத் திறந்தார்.

துறவி மாணிக்கத்தின் கால்களை வெள்ளம் தழுவிக் கொண் டிருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் மண்டபத்தினுள் வெள்ளம் புகுந்துவிடுமெனக் கண்டதனால், துறவி மாணிக்கம் எழுந்து உள்மண்டத்தினுள் சென்றார். மண்டபத்தினுள் வரிசையாக இருந்த தூண்களில் ஒன்றில் சாய்ந்த துறவி மாணிக்கத்தின் சிந்தனை விரிந்துகொண்டேயிருந்தது.

நாகலிங்கத்தினுக்குப் பயந்து ஓடிய மாணிக்கம் கடல் கடந்து கோடிக்கரையில் இறங்கினார். வாழ்க்கையிலே விரக்தியுற்ற மாணிக்கம் தமிழகத்துக் கோயில்களையெல்லாம் நடையாகவே சென்று தரிசிக்கலானார். உணவு கிடைத்த இடத்தில் உண்டும், படுக்க நிழல் கிடைத்த இடத்தில் துயின்றும், தென்னாட்டுத் திருக்கோயில்களை யெல்லாம் தரிசித்துக் கொண்டே சென்றார்.

ஓர் ஆண்டா ! இரண்டு ஆண்டா! இருபது ஆண்டுகளைத் தமிழ் நாட்டுத் திருக்கோயில்களைத் தரிசிப்பதிலே செலவிட்டார். நினைத்துப் பார்த்த மாணிக்கம் அதிர்ச்சியடைந்தார். அந்த அதிர்ச்சியின் இறுதிப் பயன் அவர் சடைமுடி தரித்த துறவி!

பற்றற்ற நிலையில் துறவியாக வாழ்ந்த மாணிக்கத்தினுக்குப் பின்னர்தான் சுந்தரியின் நினைவு எழுந்தது. அந்த நினைவும் கோயிலில் சுந்தரியைப் போன்ற மங்கை நல்லாள் ஒருத்தியைக் கண்டதனாற்றான் தோன்றியது.

ஒரு தடவை சுந்தரியை கண்களினால் காணவேண்டு மென்ற ஆசை துறவி மாணிக்கத்தினுக்கு எழுந்தது. ஆசைக்கு அணைபோட முடியாது அடிபணிந்த அவர் திரும்பவும் மண்டூர்க் கோட்டை முனைக்கு வந்தார்.

மண்டூர்க் கோட்டைமுனைக் கிராமத்தினுள் கால்வைத்த துறவி மாணிக்கத்தை முதலில் வரவேற்றது வெள்ளந்தான். ஆகவே மாரி அம்மன் கோயிலினுள் நுழைத்தார் நாகலிங்கத்தின் உருக்கமான வேண்டுகோளையும் கேட்டார்.

கோயிலினுள் புகுந்து நிற்கும் வெள்ளத்தைக் காண வந்த பலர், துறவி மாணிக்கத்தையும் கண்டு அளவளாவினார்கள். அதன் பயனாக நாகலிங்கத்தின் நிலைமையை விசாரித்து அறிந் தார்.

உண்மையை அறிந்த துறவி மாணிக்கம், தம் மகளினுக்கு வாழ்வு அளிப்பதா? இல்லையா? என்று சிந்திக்கலானார்.

“பற்றைத் துறந்து துறவியாக நிற்கும் எனக்கு இன்னும் எதற்குப் பற்று?” என்றது மாணிக்கத்தின் மனம்.

“சுந்தரியைக் கெடுத்துக் குலப்பழியை உண்டாக்கினாய். அந்தப் பழி அவளது மகளையும் பிடித்துக்கொண்டது. அதனால் வாழ்வே கிடைக்காமல் பரிதவிக்கிறாள். பேத்தியின் வாழ்வைப் பொறுத்த ஏக்கத்தினால் நாகலிங்கம் சாவின் முனையில் நிற்கிறார். கடைசி காலத்தில் அவரை நிம்மதியாகச் சாகவிடவாவது உன் மகளை ஏற்றுக்கொள். தந்தை தம் மகளை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் எதற்கு?” என்றது மாணிக்கத்தின் மனச்சாட்சி.

மனதுக்கும் மனச்சாட்சிக்கும் ஏற்பட்ட போராட்டத்திலே, துறவி மாணிக்கம் தத்தளித்துத் தடுமாறலானார். அந்தத் தடுமாற்றம் பல நாட்கள் நீடித்தது. அவர் இன்னும் முடிவினுக்கே வரவில்லை.

“பாவம், நாகலிங்கம்! சாகக் கிடக்கிறார்” என்று அனுதாபப் பட்ட அர்ச்சகரின் குரல் பல நாள் மனப்போராட்டத்தில் உழன்று கொண்டிருந்த துறவி மாணிக்கத்தை விழிக்கச் செய்தது.

மனச்சாட்சியினுக்கு வளைந்து கொடுத்த மாணிக்கம் தீர்க்க மான ஒரு முடிவினுக்கு வந்தவராக எழுந்து நடந்தார். அவரது கால்கள் நாகலிங்கத்தின் வீட்டினுக்கு அழைத்துச் சென்றன.

நாகலிங்கம் கண்களை மூடியவாறு படுக்கையிலே கிடந்தார். பக்கத்தே மரகதம் கண்ணீர் சொரிய நின்று கொண்டிருந்தாள்.

மரகதத்தைப் பார்த்தார் மாணிக்கம். உற்று நோக்கினார். சுந்தரியே நிற்பது போலிந்தது மாணிக்கத்தினுக்கு. தாயை உரித்து வைத்ததுபோல் மரகதம் நின்று கொண்டிருந்தாள்.

நாகலிங்கத்தை உற்று நோக்கிய மாணிக்கத்தின் கண்கள் கண்ணீரைச் சொரிய, வாய் ‘மாமா’! என்று குழைந்தது.

பழக்கப்பட்ட குரலைக் கேட்டது போல உணர்ந்த நாக லிங்கம் மெதுவாகக் கண்களைத் திறந்தார்.

“நான்… நான்…!” என்று தடுமாறிக் கண்ணீர் சிந்தினார் மாணிக்கம்.

காவி ஆடை புனைந்து, சடாமுடி தரித்துக் கண்ணீர் சிந்தும் மாணிக்கத்தை நாகலிங்கம் உற்று நோக்கினார்.

“நான்தான் மாணிக்கம். உங்களுக்கும் சுந்தரிக்கும் கொடிய துரோகமிழைத்த மகாபாவி. உங்கள் குடும்பத்துக்குப் பழியைத் தேடித்தந்த என்னை, உங்களது கடைசி காலத்திலாதல் மன்னித்து விடுங்கள்” என்று கண்ணீர் சொரியச் சொரியக் கூறினார் மாணிக் கம்.

“மாணிக்கம்…” என்று முணுமுணுத்தார் நாகலிங்கம். “மாணிக்கந்தான், மாமா…”

“மாணிக்கந்தான்!…. என் மரகதத்தின் தந்தை மாணிக்கந் தான் !…”

“மரகதத்தின் தந்தையான கொடிய பாவி மாணிக்கம் நான் தான், மாமா”

“தகப்பன் பெயர் தெரியாதவள் மரகதம்!…தகப்பன் பெயர் தெரியாத மரகதத்தினுக்குத் தகப்பன் வந்துவிட்டான்! என் மரகதத்தினுக்கு வாழ்வு கிடைத்து விட்டது; மாரி அம்மன் அருள் சுரந்தே விட்டாள்!”

“மாரி அம்மனது அருளேதான்!” என்று மாணிக்கத்தின் வாய் மெதுவாகக் கூறியது.

“மரகதம்!…உன் தகப்பன், அம்மா!”

“அப்பா!” என்று கதறினாள் மரகதம். மாணிக்கம் சிலையாக நின்று கண்ணீர் வடித்தார்.

– முற்போக்குக் காலகட்டத்துச் சிறுகதைகள், முதற் பதிப்பு: மாசி 2010, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *