கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 13, 2021
பார்வையிட்டோர்: 2,959 
 
 

அப்பா இன்றைக்கும் வீட்டிலிருந்தார். திண்ணையில் உட்கார்ந்திருந்தார்.

அலுவலகம் விட்டு வீட்டிற்குச் சென்ற ராஜேசுக்கு எரிச்சலாக இருந்தது.

வெளியே வெறுப்பைக் காட்டாமல் அவரைத் தாண்டி உள்ளே சென்றான்.

வெள்ளிக்கிழமை வீடு வெறிச்சோடி இருந்தது.

மனைவி மக்கள் கோவிலுக்குச் சென்றிருந்தார்கள்.

நாற்காலியில் அமர்ந்தான்.

அப்பா, அம்மா, தம்பி, அவன், மனைவி, குழந்தை தேன்மொழியை விட்டு தனிக்குடித்தனம் வந்து ஆறுமாத காலமாகிறது.

அதிக தூரமில்லை. மூன்று கிலோ மீட்டர் தொலைவு. குக்கிராம சாயல் இல்லாத தொலைதூர பேருந்து போக்குவரத்து வசதிகள் உள்ள நகர சாயல் நகர்.வாடகை வீடு. ஓட்டு வீடு.

இத்தனைக் காலமாக எட்டிப் பார்க்காத அப்பா இரண்டாவது வாரமாக வந்து தங்கி இருக்கிறார்.

ஏன்..? ??…..

தம்பியுடன் தகராறா ..? அம்மா.. இவரது மனம் நோகும்படி பேசிவிட்டாளா..?

இவர்கள் இருவருமே பேசவில்லை.! தம்பி மனைவி பேசிவிட்டாளா..? இவர் மனம் நோகும்படி, அவமானப் படும்படி நடந்து கொண்டு விட்டாளா..?!

பேத்தி தேன்மொழியை விட்டு கண நேரம் பிரிந்திருக்காதவர் இத்தனை நாட்களாக எந்தவித பேச்சு மூச்சுமில்லாமல் எப்படித் தாங்கினார்…?

ஆசைப் பேத்தியைப் பிரிந்து வரும் அளவிற்கு அங்கு என்ன நடந்தது..?

தம்பியைக் கேட்க இயலவில்லை. அடிக்கடி வந்து தலையைக் காட்டுபவன் இப்போது வரவில்லை. என்ன காரணம்… அவன்தான் இவர் கோப தாபத்திற்குக் காரணமா…?

அம்மா, அப்பாவிடம்தான் வாயாடி. இவனுக்குச் சாதகமானவள். சமாதானமானவள். ஆனாலும் வரமாட்டாள். சீக்காளி ! படுத்தப் படுக்கை இல்லே. சர்க்கரை, ரத்தக் கொதிப்பு உபத்திரபவங்கள்.

ஏன் இருக்கிறார்..?

இவரையே கேட்கலாம். பிடிக்காதவன் பேச்சு பிடிக்கவில்லை என்றாலும் … தாம் தூமென்று குதிப்பார்.

“ஏன் சோத்துக்கு வந்து உட்கார்ந்திருக்கே ? என்று சொல்லாமல் சொல்லி கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாத குறையாய் கேட்குறீயா..? !” குதிப்பார்.

வேண்டாத மனைவி கை பட்டால் குற்றம். கால் பட்டால் குற்றம். !

“கூட்டுக் குடும்பமா இருந்து கொட்டமடிக்கிறீயா..?! வெளியே போடா நாயே..!” – துரத்தியவர்.

அப்படி அவர் ஏன் கேட்டார், எதற்கு கேட்டார் என்று இதுவரைத் தெரியாது. இருந்தாலும் ஏதோவொரு ஆத்திரம், கோபத்தில் இப்படி வெடித்து விட்டார்.

நான், மனைவி ஒருவரை ஒருவர் திகைப்பாய்ப் பார்க்க….

அடுத்த நாள் … அதே வேகம் தனிக்குடித்தனம்.!

அவரிடமிருந்து அந்த வார்த்தைகள் வரவில்லை என்றால் கூட்டுக் குடும்பம்தான். பிரிதல் என்ற பேச்சுக்கே இடமில்லை.

அம்மா, அப்பா, தம்பியெல்லாம் விட்டு ஏன் பிரிய வேண்டும்…?

அப்படிப்பட்ட அப்பாவிடம்…

இப்போது, ” ஏன் வந்தே..?, எதற்கு வந்தே..?” என்று கேட்டால் இணக்கமாகவா பதில் சொல்வார்..?…

ஒருக்காலும் மாட்டார். !

“அன்னைக்கு நான் உன்னைத் துரத்தினேன். இன்னைக்கு நீ என்னைத் துரத்துறீயா..?” – இப்படித்தான் நினைப்பார், கேட்பார்.

என் மனைவியை வீட்டுக் கேட்கச் செய்யலாம். அது இதைவிட பெரிய ஆபத்து.

“பெத்தப் புள்ள கேட்கலாம். அவன் பொண்டாட்டி , வீட்டுக்கு வந்த மருமகள் கேட்கலாமா ..? நான் தேடி கொண்டு வந்தவள். இன்னைக்கு நீ ஏன் வந்தே, எங்கு வந்தீங்கன்னு கேட்கிறது எவ்வளவு கொடுமை ! ?” – வார்த்தை, வடிகால்கள் இப்படி ஓடும்.

பாம்பென்றும் தாண்ட முடியாமல். பழுதென்றும் மிதிக்க முடியாமல்…. இதென்ன…பயங்கரம் ! – நினைத்து நாற்காலியில் கண் மூடி சாய்ந்திருந்த ராஜேஷ் மெல்ல எழுந்து வெளியே நடந்தான்.

அப்பா இவனைப் பொறுத்தவரை அரக்கன். சிறுவனாய் இருந்தபோது தவறுகளை சுட்டிக் காட்டித் திருத்தத் தெரியாமல் … ஓட ஓட விரட்டி துவைத்தெடுத்த மனுசன்.

அப்பா ! என்ன அடி, அறை, குத்து, உதை!. ஏதோ ஒரு தவறுக்குக் கொக்குப் பிடிக்க வைத்து மிதி ! இப்போது நினைத்தாலும் ராஜேசுகுக் குலை நடுக்கம்.

இருந்தாலும் அப்பா இப்போது வீடு தேடி வந்து தங்கி இருக்கிறார். எப்படிக் கேட்பது..? யாரை விட்டு விசாரிப்பது.

விபரம் தெரிந்தால்தானே… எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியும்…?

ஒன்றும் கேட்க வேண்டாமென்று இருந்தாலும்…

“வராத அப்பன் வந்திருக்கான்..! பிடிக்காதவனாய் இருந்தாலும் பெத்தவனாச்சே..? ஏன் வந்தே, எதுக்கு வந்தே..? கேட்டானா..??” என்று அப்பா பார்ப்பவர்களிடமெல்லாம் சிலாகித்தால்…?

“ஆயிரம்தான் மனத்தாங்கல், கசப்புகள் இருந்தாலும் பெத்தவர்தான் பெரியவர். நீ கேட்கக் கூடாதா..? பெத்தவரிடம் மகன் இறங்கிப் போவதில் என்ன அவமானம்..? அதுல என்ன நீ குறைஞ்சுடப் போறே…?” அப்பாவின் புகார், புலம்பல்களைக் கேட்டவர்கள் கண்டிப்பாய்த் தேடி வந்து புத்தி சொல்வார்கள் .

தேவையா இது..?!

‘ அப்பாவிடம் கேட்பதே உத்தமம். ! ‘ முடிவெடுத்துக்கொண்டுத் திரும்பினான் ராஜேஷ் .

இவன் வாசல்படி ஏறும்போதே உள்ளே பேச்சுக் குரல்.

“அம்மா பரமேஸ்வரி..! ”

“என்ன மாமா..? ”

” புள்ளங்களெல்லாம் எங்கே..? ”

“தோட்டத்தில் விளையாடுறானுங்க…”

“நாம பேசுறது அவனுங்க காதுல விழுமா…? ”

“விழாது.! ”

“நம்ம பேச்சு அவனுங்களுக்கு இடைஞ்சலாய் இருக்குமா…? ”

” இருக்காது ! ”

“உன் வீட்டுக்காரன் வேலை விட்டு வந்து வெளியே எங்கோ போயிருக்கான் தெரியுமா..? …”

“தெரியும். கவனிச்சேன்…! ”

“எப்போ திரும்புவான்..? ”

“தெரியாது.. ! ”

“ஒழுங்கா இருக்கானா…? ”

”மாமா..? ! ”

” அதாம்மா.. தண்ணி, சூது, கெட்ட சகவாசங்கள் வைச்சிருக்கானா…? ”

“இங்கே தனிக்குடித்தனம் வந்த பிறகு அதெல்லாம் சுத்தமா விட்டுட்டார் மாமா. ”

” எனக்காக பொய் சொல்லலையே..? ”

” சத்தியமா இல்லே மாமா…! ”

“அப்படின்னா… என் கணிப்பு ரொம்ப சரி. ”

“மாமா..! ”

” ஆமாம் பரமேஸ்வரி. அவன் மனைவி, புள்ளைக் குட்டிகுடும்பத்தைத் தாங்க… அம்மா, அப்பா, தம்பிங்க இருக்காங்க என்கிற தைரியத்துல .. வாங்குற மாச சம்பளத்தை யார் கண்ணிலும் காட்டாமல் , வீட்டுக்கும் செலவழிக்காமல், சேமித்தும் வைக்காமல்… கெட்ட சகவாசம் வைச்சி… குடி, சூதுன்னு கண்டபடி செலவழிச்சு தத்தரியா இருந்தான். நீ கண்டிச்சும் கேட்கலை. நான் மிரட்டியும் பணியல .

இது சரி வராது. இவனை எப்படி வழிக்குக் கொண்டு வர்றதுன்னு எனக்கு ரொம்ப நாளா மண்டைக்குள் குடைச்சல்.

அப்புறம்தான்.. திடீர்ன்னு…’ எரியறதை இழுத்தால் கொதிக்கறது அடங்கும்.! ‘ ன்னு தோணுச்சு.

அப்புறம் அதையும் எப்படி செயல் படுத்துறதுன்னு யோசனை. அதுக்கும் வழி கிடைச்சுது.

அந்த வழிதான் ஆள் தன்மானத்தைச் சுடுறாப்போல சண்டைப் போட்டு வீட்டை விட்டு வெளியே அனுப்பினேன் . இது அவனுக்குப் புரியாது. இருந்தாலும் என் மேல வருத்தம்தான். ஆனாலும் பிள்ளைக் கெட்டுப்போறதைப் பார்க்க பெத்த மனசு கேட்கலையே..!

நாம நெனைச்சது நடந்ததான்னு நோட்டமிடத்தான் இத்தனை நாள் கழிச்சி வந்தேன். இருந்த நாலு நாள்ல ஒன்னும் புரியல. சரியா இருக்கானா, திருந்திட்டானா , நடிக்கிறானா… தெரியல. அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்யத்தான் உன்னைக் கேட்டேன். நீ… ஆள் திருந்திட்டான்ன்னு உள்ளதைச் சொல்லிட்டே . கேட்க சந்தோசமா இருக்கு. இந்த சந்தோஷத்தோட நான் புறப்படுறேன். வீட்டுக்குப் போறேன். !” சொன்னார்.

‘அப்பா எவ்வளவு உயர்ந்தவர். அவர் அடித்தல் உதைத்தல் மிதித்தல் எல்லாம் பிள்ளைகள் நன்மைக்குத்தான் என்று புரியாதது எவ்வளவு பேதமை!’ – நினைக்க உடல் சிலிர்த்தது.

மடமடவென்று மதிப்பு மரியாதை வந்து…..

“உங்க சந்தோசத்தைக் கொண்டாட இன்னும் ரெண்டு நாள் இருக்கலாம்ப்பா !” என்று சொல்லிக் கொண்டே ராஜேஷ் உள்ளே சென்றான்.

அப்பா இவனை அதிர்ச்சி, திகைப்பாய்ப் பார்த்தார்.

ராஜேஷ் யோசிக்கவே இல்லை.

“அப்பா ! என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கப்பா !” சொல்லி சடாரென்று குனிந்து அவர் காலைத் தொட்டான்.

அவர் அள்ளி அணைக்க….. பார்த்த பரமேஸ்வரி கண்கள் பணித்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *