அப்பாவைப் பற்றி ஒரு வாக்குமூலம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 24, 2014
பார்வையிட்டோர்: 7,483 
 
 

உங்களுக்கு என் அப்பாவைப் பற்றி தெரியுமா? அவரைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா? சரி, அது இருக்கட்டும். நீங்கள் ஜென்டாராட்டா தோட்டம் பற்றியாவது கேள்விப்பட்டதுண்டா? அப்படி தெரிந்திருந்தால் என் அப்பாவையும் தெரிந்திருக்க வேண்டும் அல்லது தெரிந்து வைத்திருக்க வேண்டும். சபாக் பெர்ணம் சாலையின் பத்தாவது மைலில் அமைந்திருக்கிறது இந்த ஜெண்டாராட்டா தோட்டம். பலருக்கு மூனாம்நம்பர் எஸ்டேட் என்பதுதான் பரீட்சார்த்தமான பெயர். தோட்டத்திற்கு நுழையும் பிரதான வாயிலின் அருகே விசாலமான திடல். இடது கோடியில் கிளைகளைப் பரந்து விரித்து நிற்கின்ற பெரிய நிழல் மரம், அதன் நிழலைப் பங்குப் போட்டுக்கொண்டிருக்கும் மாரியம்மன், முனீஸ்வரன் ஆலயங்கள். வலது கோடியில் ஆறு அறைகளைக் கொண்ட தோட்டத்துப்பள்ளிக்கூடம். இவற்றையெல்லாம் கடந்து சுமார் நானூறு மீட்டர் உள்ளே சென்றால் தோட்டத்து வீடுகள் வரிசையில் நின்றுகொண்டிருக்கும். எந்த சூழ்நிலையிலும் தோட்டத்தை விட்டு நம்மக்கள் வெளியேறக்கூடாது என்பதில் உறுதியொடு இருக்கும் தோட்டத்து நிர்வாகம், சகல சௌகரியங்களோடு ஏற்படுத்தி தந்த குடியிருப்பு பகுதி அது. அதை ஆமோதித்து வரவேற்கும் வகையில் இன்னும் அதிகமான குடும்பங்கள் அங்கே வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன. அவற்றுள் என் குடும்பமும் அடக்கம். முதல் வரிசையின் முற்றுப்புள்ளி என் வீடு. வீட்டைத் தேடி வருபவர்கள் அப்பாவின் பெயரைச் சொல்லிக்கொண்டுதான் வருவார்கள்.

அடடே உங்களுக்கு அப்பாவின் பெயர் தெரியாது அல்லவா? தோட்டத்தை விவரித்ததில் அப்பாவின் பெயரைத் தெரிவிக்க மறந்துவிட்டேன். கைலாசம் அதுதான் அப்பாவின் பெயர். ஆறடி உயரம். கட்டுமஸ்தான உடல். தடித்த மீசைக்கொண்ட பெரிய முகம். தலையை அலங்கரிக்காத சொற்ப மயிர். மன்மதன் என்ற மதமதப்பு அப்பாவிடம் எப்போதும் சற்று தூக்கலாகவே இருக்கும். அந்த மதமதப்போடுதான் அப்பா தோட்டத்தை வலம் வருவார். அப்பாவுக்கு முதல் மனைவி அம்மாதான் என்று நினைத்துவிட்டால் அது தவறு. அவரைப் பொறுத்தமட்டில் அவரது பைக்தான் அவரது முதல் மனைவி. எந்நேரமும் பைக்கோடுதான் சுற்றிக் கொண்டிருப்பார்.

தோட்டத்து மக்களிடையேயும் நிர்வாகத்தினரிடையேயும் அப்பாவுக்குத் தனிமரியாதையும் உண்டு; பயமும் உண்டு. அதற்கு சில காரணங்களும் உண்டு.

காரணம் ஒன்று – தொழிலாளர்களின் ஒருமித்த ஆதரவோடு தேர்ந்தெடுக்கப்பட்ட யூனியன் தலைவர் அப்பாதான். ஆகவே தோட்டத்து நிர்வாகத்தினரிடையே அப்பாவுக்கு நல்ல தொடர்பு உள்ளது. இதில் வேடிக்கை அப்பாவின் ஆங்கிலம். சினிமாவில் கவுண்டமணி பேசும் ஆங்கிலம்தான் அப்பாவின் ஆங்கிலமும். அவரது ஆங்கிலம் கேட்கும்போது நமக்கு குபீர் சிரிப்பு வருவது உறுதி. சத்தமாக சிரித்துவிடாதீர்கள்! அப்படி சிரித்தால் முதுகில் குத்துப்பரோட்டாவும் உறுதி.

காரணம் இரண்டு – தோட்டத்தின் முனீஸ்வரன் ஆலய பராமரிப்பு பொறுப்பும் அப்பாவுக்கே சொந்தம். திருவிழாவின் போது அப்பா மீது முனீஸ்வர சாமி இறங்குவது வழக்கம். அந்நேரம் அப்பா மக்களுக்கு அருள்வாக்கு அருள்வார். சில நேரங்களில் சாமி மலையேறிவிட்டாலும் சுயவாக்கு அருள்வாக்காக தொடரும்.

காரணம் மூன்று – பார்ப்பவரை மிரளவைக்கும் அப்பாவின் பலம். ஒருமுறை வேலைக்காட்டில் அம்மா வேலை செய்து கொண்டிருந்தபோது கங்கானி ஒருவன் அம்மாவிடம் தகாத வார்த்தையில் பேசிவிட்டான். அதை கேள்விப்பட்டு அப்பா கங்கானியை ஓங்கி ஓர் அறைவிட்டார். தோட்டம்முழுக்க அந்தச் சத்தம் கேட்டிருக்கும். கங்கானி காதும் மூக்கும் வாயும் ரத்தமுமாக ஒழுக அப்படியே சுருண்டு விழுந்தவன் மறுநாள் ஊரையே காலி செய்துவிட்டான்.

அப்பாவைப் பொருத்தமட்டில் ‘நானே ராசா நானே மந்திரி’ என்பதுதான் அவரது கொள்கை. அப்பா எதையும் அவ்வளவாக அலட்டிக் கொள்ளமாட்டார். வீட்டைப் பற்றியும் அவ்வளவாக கவலைக் கொள்ளமாட்டார். தோட்டத்தில் இருப்பதைவிட அப்பா பைக்கில் வெளியே சுற்றுவதுதான் அதிகம். மாதத்தில் விடுமுறையின்றி வேலைக்கு செல்வது அரிது. அவ்வப்போது தோட்டத்து ‘டிரெஸ்ஸரை’ சந்தித்து வேலைக்கு விடுப்பு வாங்கிவிட்டு வெளியூர் சென்றிடுவார். அப்பாவின் நிர்வாகத்தில் குடும்பம் தத்தளித்துக் கொண்டிருந்தது.

அப்பாவின் சுதந்திரத்தில் அம்மா எப்போதும் அடிமைதான். ஊராரின் பார்வைக்குதான் அப்பாவும் அம்மாவும் கணவன் – மனைவி. இல்லறத்தில் இருவருக்கும் இடையே நெருக்கம் என்ற வார்த்தை நெருங்கவே இல்லை. அம்மா ஒரு அப்பிரானி. அம்மாவின் பொழுது முன்வீட்டு முனியம்மாவோடும், பக்கத்துவீட்டு பச்சையம்மாவோடும் அரட்டை அடித்துக்கொண்டிருக்கும். பொருத்தமே இல்லாமல் அப்பாவுக்குக் கட்டிவைத்து விட்டதாக சொல்லி அடிக்கடி புலம்புவாள். அப்பாவோடு அம்மாவை ஒப்பிட்டால் அப்பாதான் முன்னணியில் நிற்பார். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் வயது வித்தியாசம் ஓர் ஆண்டுதான். அப்பாவுக்கு இளமை ஊஞ்சலில் தொங்கிக்கொண்டுதான் இருந்தது. அம்மாவோ முதுமைத் தட்டிவிட்டாள். இருவருக்கும் சண்டைகள் இல்லாத பொழுதுகளே கிடையாது. அம்மாவிடம் ஒரு பண்பு உள்ளது. யாருக்காகவும் எதற்காகவும் அப்பாவை விட்டுக்கொடுத்து பேசமாட்டாள். யாராவது அப்பாவைப்பற்றி தவறாக பேசிவிட்டால் அன்றைய தினம் தோட்டத்தில் பயங்கர வாய்ச்சண்டை இடம்பெறும். வாய்ச்சண்டையில் அம்மாவிடம் அகராதியில் அர்த்தம் தேடமுடியாத வார்த்தைகள் சரளமாக வரும்.

அம்மா அப்படியிருந்தும் அப்பாவைப் பற்றிய சில கிசுகிசுக்கள் தோட்டத்தில் உலா வந்தன. அப்பா வெளியூர் செல்வது பற்றி தோட்டத்து மக்கள் சிலர் மும்முரமாக ஆராய்ந்தனர். ஆராய்ச்சியின் முடிவாக அப்பா வெளியூர் என்ற பெயரில் அடிக்கடி தாய்லாந்து சென்று வருவது உறுதிப்படுத்தப்பட்டது. வேலைக்கு விடுப்பெடுத்து அப்பாவுக்குத் தாய்லாந்தில் என்ன வேலை? என்பதை ஆராய இரண்டாம்கட்ட ஆராய்ச்சி தொடங்கியது. ஆய்வுக்கு இடையே அப்பாவைப் பற்றிய புகார்கள் தோட்டத்து நிர்வாகத்தினரிடையே சென்று சேர்ந்தன.

புகார்களை ஏற்றுக்கொண்டு நிர்வாகமும் அப்பாவை விசாரிக்க அணுகியது. தோட்டத்து மக்களிடயே ஆர்வம் கொப்பளித்தது. அப்பா சிரித்தபடியே வந்தபோது எந்த நடவடிக்கையும் அவர் மீது பாயவில்லை என்பது மக்களுக்குத் தெரியவந்தது. பிறகென்ன? மூன்றாம்கட்ட ஆராய்ச்சி ஆரம்பமானது.

அப்பாவைப் பற்றிய கிசுகிசுக்கள் விடாத கறுப்பு போன்று ஒவ்வொரு நாளும் விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தன. அம்மாவையும் ஒருசில தோட்டத்து தோழிகள் நாசூக்காக விசாரித்தனர். பயனேதுமில்லை. அப்பா எதையும் கண்டுகொள்ளவில்லை. அவர் அப்போதும் ‘நானே ராசா, நானே மந்திரி’ என்றிருந்தார்.

தோட்டத்து நிர்வாகமும் அம்மாவும் அப்பாவைப் பற்றிய புகார்களைக் கண்டுகொள்ளவில்லை. ஆகவே அப்பா தாய்லாந்துக்கு மாந்திரீகம் தொடர்பாகத்தான் சென்று வருகிறார். மாந்திரீகத்தால் நிர்வாகத்தையும் அம்மாவையும் வசியம் செய்துவிட்டார். மாந்திரீகத்தால் வேலைக்குச் செல்லாமலே பணவரவு அப்பாவிடத்தில் துள்ளல் போடுகிறது. இப்படியாக தோட்டத்து மக்களே தங்களின் ஆராய்ச்சிகளுக்குச் சுபம் போட்டனர். அப்பாவுக்கு மக்களது முடிவு வசதியாய் போனது. மறுப்பு சொல்லாமல் தனது தாய்லாந்து பயணத்தைத் தொடர்ந்தார்.

அதுவரை தோட்டத்தை உலாவந்த கிசுகிசுக்கள் எல்லையைக் கடந்து பட்டணம் வரை சென்றடைய விசஷம் கேள்விப்பட்டு பெரியப்பா வீடு வந்தார். பெரியப்பா கேள்வியைத் தொடுக்க அப்பாவும் பதில் விடுத்தார்.

“தாய்லாந்துல பேர்போன ‘தோக்குரு’ இருக்காங்கண்ணே… அவங்களோட மாந்திரீகத்துல எனக்கு எவ்வளவோ நல்லது நடந்துருக்கு… அதுலயும் ‘மண்டிபூங்கா’ (பூக்குளியல்) பண்ணுன பிறவு என்னோட தோஷமெல்லாம் நீங்கி எனக்கு அதிர்ஷ்டம் கைக்கொடுக்க ஆரம்பிச்சிடுச்சு. எவ்வளவோ விஷயம் எனக்கு சாதகமா முடிஞ்சிருக்குண்ணே… அதான் தாய்லாந்துக்கு அப்பப்போ போயிட்டு வரேன்” அப்பா.

“நீ இப்படி சொல்ற, ஆனா ஊருல உன்ன பத்தின விஷயம் வேற மாதிரில்ல ஓடிகிட்டு இருக்கு . . .” சந்தேகத்தோடு பெரியப்பா.

“எவன் சொன்னது? சொன்னவன் மட்டும் கையில கெடச்சான் பிறவு என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது” கோவத்தோடு அப்பா.

“என்னமோ போ, வீட்லயும் கோவிலலேயும் கடவுள வெச்சிக்கிட்டு மாந்திரீகத்த நம்பிக்கிட்டு அதுல தீவிரம் காட்டுனா குடும்பம் வெளங்குன மாதிரிதான்?” சலிப்போடு பெரியப்பா.

அவர்களது உரையாடல் தோட்டத்து மக்களின் விடையை மறுஊர்ஜிதம் செய்தது. தோட்டத்தில் அருள்வாக்கு சொல்லிவந்த அப்பா மக்களிடையே தாய்லாந்து மாந்திரீகத்தின் தூதனாக புது அவதாரம் எடுத்தார். அப்பாவின் புகழ் தோட்டத்தில் தாண்டவமாடியது. அப்பாவுக்காக எங்கள் வீட்டிற்குத் தோட்டத்து மக்களின் படையெடுப்பு நாளுக்குநாள் அதிகரித்தது. அவரவர் தங்கள் கஷ்டங்களை அப்பாவிடம் முறையிட தோட்டத்து மாரியம்மனும் முனீஸ்வரனும் வேலையற்று போயினர். மக்களும் மறந்து போயினர்.

அப்பா மிகவும் பிஸியாகிப்போனார். மாதத்தில் மூன்று குடும்பங்களைத் தேர்வு செய்து தாய்லாந்து அழைத்துச் செல்ல கால்ஷீட் கொடுக்கலானார். உடன் சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.

நிபந்தனை ஒன்று – குடும்பத்தலைவர்கள் மட்டுமே பயணத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவர். (ஆண்தலைவர்கள் மட்டும் என்பது கூடுதல் சிறப்பு)

நிபந்தனை இரண்டு – அப்பாவின் அனைத்துப் பயணச்செலவுகளும் அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நிபந்தனை மூன்று – பயணத்தின் முடிவில் சத்தியம் செய்துகொடுக்கவேண்டும்.

நிபந்தனை நான்கு – முதல் மூன்று நிபந்தனைகளுக்கு மறுப்பு சொல்லக்கூடாது.

அனைத்துக்கும் தலையாட்டும் மாடுகளாய் தோட்டத்தில் சிலர் அனைத்துக்கும் தலையாட்டிவிட்டு பயணத்தைத் தொடர்ந்தனர். ஆண்தலைகளின் ஆதிக்கத்தில் தாய்லாந்து பயணம் வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருந்தது. பயணத்தில் தோட்டத்து கங்காணிகள் சிலர் தங்களைப் பதிந்துக்கொண்டது பயணத்தின் சிறந்த அங்கீகாரமாக கருதப்பட்டது.

பயணத்தில் பங்குபெற்ற சிலருக்கு இளமை திரும்பிக்கொண்டிருந்தது. அப்பாவைப் போல பைக்கில் ஊரை சுற்றிக்கொண்ருந்தனர். தலைமயிருக்கும் மீசைக்கும் தாடிக்கும் மருதாணி போட்டு சிவப்பாக்கியிருந்தனர். உடம்புக்கு ஆகாத கொழுப்பும் வாழ்க்கைக்கு ஆகாத மதமதப்பும் அவர்களிடத்தில் கும்மாளம் போட்டன. குடும்பத்தில் மனைவிகளும் பிள்ளைகளும் இரண்டாம் மூன்றாம் பட்சத்திற்குத் தள்ளப்பட்டனர். குஷியில் திளைத்தவர்களது குடும்பங்கள் தத்தளித்துக் கொண்டிருந்தன. அதிலும் சில குடும்பங்கள் மெல்ல மெல்ல மூழ்கிக் கொண்டிருந்தன. தொழிலையும் கடமையும் மறந்து தாய்லாந்து மாந்திரீகத்தில் இலயித்துக் கொண்டிருந்தவர்களுக்குத் தோட்டத்து நிர்வாகத்தினரிடமிருந்து சிவப்புக்கடிதம் வந்தபோது ஒவ்வொரு குடும்பத்திலும் சர்ச்சைகள் பூதாகரமாக வெடித்தன. சர்ச்சையில் அப்பாவுக்குப் விசேஷ அர்ச்சனைகள் பலவிதமாக நடந்தன.

காலங்கள் கடந்து போக தாய்லாந்து மாந்திரீகம் மெல்ல மெல்ல ஒரு முடிவுக்கு வந்தது. வேலையற்று கிடந்த தோட்டத்து மாரியம்மனும் முனீஸ்வரனும் மீண்டும் மக்களின் வேண்டுதலுக்குச் செவிசாய்க்க வேண்டியதாயிற்று. முனீஸ்வர ஆலய பராமரிப்பு நான்காம் வீட்டு நஞ்சப்பனுக்குத் தாரை வார்க்கப்பட்டது. யூனியனின் புதிய தலைவனானார் ஏழாம் வீட்டு ஏழுமலை. அவரவர் குடும்பத்தையும் தொழிலையும் கவனிக்க தொடங்கினர். தோட்டமும் மாமுல் நிலைக்குத் திரும்பியது.

என்ன அப்படி யோசிக்கிறீர்கள்? ஓ அப்பாவைப்பற்றிதானே!!!

அப்பாவுக்கும் தாய்லாந்துக்கும் இல்லை என ஆனது. அப்பாவைத் தேடி யாரும் வருவது கிடையாது. அவரது முதல்மனைவி கேட்பாராற்று வீட்டின் பின்மூலையில் கிடக்கிறது. பதவிகளை இழந்த அப்பாவை யாரும் கண்டுகொள்ளவில்லை. வெளியில் சொல்ல முடியாத நோயினால் அவதிப்பட்டு வெட்கப்பட்டு இறுதியில் புகைப்படத்தில் அடக்கமான அப்பாவை ஜெண்டாராட்டா தோட்டம் மறந்து போனது. சகலமும் மறைந்து போனது.

– இந்து பிரதிநிதித்துவச்சபை,மலேசியத் தேசியப் பல்கலைக்கழகத்தின் இலக்கியப் பயணம்-15 சிறுகதை தொகுப்பில் தேர்வு பெற்ற கதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *