கிழக்கே இரயில் வரும் ஓசை கேட்டது. சாலையை மறித்துக் கொண்டு இரயில்வே கேட்டைக் கடக்க முடியாமல் இருபுறமும் வாகனங்கள் வரிசைக் கட்டி நின்றன.
தலை நரைத்து விட்ட வயதிலும் இரயிலைப் பார்க்கும் நொடியெல்லாம் ஒரு வித நடுக்கம் உடலை உலுக்கி விடுகிறது. நேசனல் ஜியோகிராபிக் அலைவரிசையில் சிங்கம் மானின் மேல் உறுமிக் கொண்டு பாயுமே…அது போல இரயில் தண்டவாளத்தை விட்டு விலகி என் மேல் பாய்வது போல பிரமை தோன்றி மறையும்.
இந்த நேரத்தில் புறப்பட்டிருக்கக் கூடாது. காலார நடந்து வரலாம் என்று எண்ணி வந்தது தப்பாகி விட்டது.
இரயில் நெருங்கி வரும் ஓசை வளர்ந்து கொண்டே வந்து பிரளயமாக காதில் எழுந்தது. காதுகளை இருகைகளாலும் மூடிக் கொண்டேன். உடல் நடுக்கம் கொள்ள தொடங்கியது.
அப்பா….என அலறிக் கொண்டே இமைகள் மூடிக் கொண்டன.
***********
“ இன்னும் வீடு திரும்பலையா..? “
“ எங்க போய் தொலைஞ்சது…? “
“ சனியன்கள்…எவ்வளவு தின்னாலும் விடியாது…! “
அப்பாவின் அந்த அன்பு வார்த்தைகள் எனக்கானவை அல்ல. கேட்பவர்கள் அனைவரும் அப்பா என்னவோ என்னைத்தான் திட்டுவதாய் நினைத்துக் கொள்வர்.
என்ன அப்படி பார்க்கறீங்க..?
ஓ…யாரைத் திட்டுகிறாரா..எல்லாம் நாங்கள் வளர்க்கும் மாடுகளைதான்.
அப்பாவுக்கு ஏனோ இந்த மாடுகளைக் கண்டாலே பிடிப்பதில்லை.
அம்மா அப்பாவுக்கு நேரெதிர்.
ஒவ்வொரு மாட்டுக்கும் அழகான பெயர் சூட்டியிருப்பார். வெள்ளை வெளீர் என்று இருக்கும் மாட்டுக்கு லட்சுமினு பேரு. மையை உடல் முழுதும் அப்பிக் கொண்டவனுக்கு கண்ணன். வெளிர் மஞ்சலும் பழுப்பும் கலந்த மாட்டுக்கு சாமந்தினு பேரு… எல்லா மாடுகளுக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கும். எத்தனை பெயர்கள் இருந்தாலும் அப்பாவைப் பொருத்தவரையில் எல்லாமே சனியன்கள்தான்.
அப்பா அப்படி மாடுகளைக் குறிப்பிடும் போதெல்லாம் கோபம் கோபமாய் வரும். மனசுக்குள் புழுங்கி தவிப்பதைத் தவிர வேறெதும் செய்ய முடிந்ததில்லை.
“ என்ன நீங்க…லட்சுமி, சாமந்தினு எவ்வளவு அழகான பேரு இருக்கு… அதை விட்டுட்டு இப்படி கூப்பிடறீங்களே…? “ அம்மா சில சமயம் அப்பாவைக் கோபித்துக் கொள்வதுண்டு.
அப்பாவுக்கு ஏனோ இந்த மாடுகளைக் கண்டாலே பிடிப்பதில்லை. அவற்றைக் கண்டாலே எரிந்து விழுவார். இந்த மாடுகளும் சில சமயம் பொல்லாததுதான்.
ஒரு முறை மேய்ச்சலுக்கு அவிழ்த்து விட்டு, ஏதோ வேலையாக அப்பா போய் விட்டார். யாரும் இல்லாததால் இந்த மாடுகள் மேய்ந்து கொண்டே தொழுவத்தை விட்டு வெகுதூரம் சென்று விட்டன. அதோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
அவை ஏழுமலையின் கொல்லைக்குள் நுழைந்து விட்டன. பாத்திகளில் தூவப்பட்டிருந்த விதைகள் முளை விட்டு, முந்திய நாள் பெய்த மழைக்கு செழித்து வளர்ந்திருந்தன. வேலியைக் கடந்து அத்துமீறி நுழைந்த மாடுகள் அங்கே விளைந்த பயிர்களை எல்லாம் ஒன்று விடாமல் தின்று ஏப்பம் விட்டிருக்கின்றன. விருந்து முடிந்ததும் இரகசியமாகத் தொழுவத்தில் வந்து சேர்ந்து விட்டன.
இதில் எள்ளளவும் அப்பாவுக்குத் தெரியாது. எல்லாம் ஏழுமலை தொழுவத்தின் முன் வந்து கூப்பாடு போடும் வரைதான்.
“ ஏய் நாகப்பா…வெளியே வாடா ?”
“என்ன அண்ணே.. ஏதாவது பிரச்சினையா ?”
“ ம்ம்ம்… உன் மாடுகள் என்ன காரியம் செஞ்சிருக்குது தெரியுமா ? என் கொல்லையில புகுந்து எல்லாத்தையும் மேய்ஞ்சி தீர்த்திடுச்சுங்க…”
அப்பா மாடுகளைப் பார்த்தார். அவை நேரப் போகும் விபரீத்த்தை அறியாமல் சாவதானமாய் அசைப் போட்டுக் கொண்டிருந்தன.
அப்பாவுக்கு வார்த்தைகள் வற்றிப் போயிருந்தன.
“ஒழுங்கா கட்டி வளர்க்க முடியலனா மாடுகளை வளர்க்கச் சொல்லி யார் அழுதா ! இப்படி ஊரான் வீட்டுக் கொல்லையை நாசம் செய்யுதே எவன் பணம் குடுப்பான்..உங்கப்பனா குடுப்பான்…”
அப்பாவுக்குக் கோபம் தாளவில்லை. இருந்தும் குரலைத் தாழ்த்தியபடி இறங்கியே பேசினார்.
“ அண்ணே…தெரியாம நடந்திடுச்சு. சேதத்துக்கான பணத்தை நான் கொடுத்திடறேன். இதைப் பெரிசு பண்ணாதீங்கண்ணே…!”
ஏழுமலை எதற்கும் சமாதானம் ஆனதாய் தெரியவில்லை.
அப்பாவின் வார்த்தைகளில் திருப்தி கொள்ளாதவராய் இன்னும் என்னென்னவோ பேசினார். அவமானம் அப்பாவைத் தின்றது.ஏதேதோ சமாதானம் சொன்ன பிறகே ஏழுமலை கொஞ்சம் அடங்கிப் போனார். இதற்காக அப்பா ரொம்பவே பிரயத்தனம் எடுத்துக் கொண்டார்.
புளியம் மர விளாரை எடுத்தார். மாடுகளின் அட்டகாசம் அப்பாவை வெறிக் கொள்ளச் செய்திருந்தது.புளியம் விளாரால் மாடுகளை விலாசத் தொடங்கினார். மாடுகள் பரிதாபமாகக் கதறின.
“ சனியன்களா…வேளா வேளைக்க்ப் பச்சைப் புல்லும் கஞ்சித் தண்ணியும்தான் வைக்கிறேனே. இது பத்தாம ஊரான் வீட்டுக் கொல்லையில மேயறீங்களா…? “
“ இன்னொரு தடவை இப்படி பண்ணுவீங்க. . . பண்ணுவீங்க. . . “
அவற்றுக்கு அப்பாவின் வசவு புரிந்ததோ என்னவோ தெரியவில்லை. புளியம் விளார் மட்டும் உடலைப் பதம் பார்த்துக் கொண்டிருந்தது. மாடுகள் வலி தாளாமல் கதறின.
தகவல் அறிந்து அம்மா ஓடி வந்தார்.
“ வேணாங்க…பாவம் ! வாயில்லாத ஜீவனுங்க. ஏதோ தெரியாம செய்திடுச்சுங்க.. விட்டுடுங்க..! “
அம்மா எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார். தடுத்தும் பார்த்தார். அப்பாவின் கோபம் தணிந்ததாய் தெரியவில்லை.
பிறகு அப்பாவின் கை வலித்ததோ…மனம் சலித்ததோ…புளியம் விளாரைத் தூர எறிந்து விட்டுப் போய் விட்டார்.
மாடுகள் கதறி அழுதன. அம்மாவும் அழுதார். இவர்களைப் பார்த்து நானும் அழுதேன். அம்மா வீட்டுக்குள் ஓடி நல்லெண்ணெய் கொண்டு வந்து ஒவ்வொன்றுக்கும் தடவினார்.
“ ஏன் லட்சுமி இப்படி செஞ்ச..? “
அம்மா வாஞ்சையோடு அவற்றைத் தடவிக் கொடுத்தார். மாடுகளும் தம் முகத்தை அம்மாவின் முகத்தோடு உரசி சோகங்களைப் பரிமாறிக் கொண்டன.
ச்சீ… ச்சீ… இந்த அப்பாவுக்கு ஈரமே கிடையாது.
பிறிதொரு நாளில் மாலை நேரம். அப்பா மாடுகளை மேய்ச்சலுக்கு ஓடிச் சென்றார். நானும் அப்பாவோடு கிளம்பினேன். கையில் ஒரு குச்சி இருந்தது. மாடுகளை அடிப்பது போல் பாசாங்கு செய்வேன். அப்பாவைப் போல் அடிக்க மாட்டேன். கையை ஓங்கி விட்டு பின்னர் மெதுவாகத் தட்டிக் கொடுப்பது போல குச்சியை ஒற்றி எடுத்து விடுவேன். அப்பா குச்சியை எடுத்தால் சுளிர் என்று அடி விழாமல் இருக்காது.
எனக்குத் தெரியும். இந்த மாடுகளைக் கண்டாலே அப்பாவுக்குப் பிடிப்பதில்லை.
தண்டாவாளத்திற்கு அப்பால் புற்கள் செழித்து வளர்ந்திருந்தன. மாடுகளை அங்கே மேய விட்டு நானும் அப்பாவும் மரத்தடியில் அமர்ந்தோம்.
மாடுகள் சாவதானமாக மேய்ந்து கொண்டிருந்தன.
“ ஏன் டா… நீ படிச்சி என்னவாகப் போற.. ? “
“ மாடு மேய்க்கப் போறேன் ! “
அப்பா சிரித்தார். விழுந்து விழுந்து சிரித்தார். அப்பா சிரித்து அதிகம் பார்த்ததில்லை. சிரிக்கும் போது அப்பா இன்னும் அழகாகத் தெரிந்தார்.
“ அதுக்கு எதுக்குடா படிப்பு… அத இப்பவே மேய்க்கலாமே ! “
மீண்டும் சிரித்தார்.
“ நீ படிச்சி டாக்டராகணும்… இந்த அப்பனுக்கு ஊசி போடணும் ! “
சரி என தலையசைத்தேன்.
மஞ்சள் வெயில் மெல்ல உதிர்ந்து, இருள் பரவத் தொடங்கிய நேரம் மழை பிடித்துக் கொண்டது. வெகு நேரம் கழித்தே மழை ஓய்ந்தது. மழை நிற்கவும் இருள் முழுவதுமாய் பகலை விழுங்குவதற்கும் சரியாயிருந்தது.
எங்களைக் காணாது அம்மா சிம்னி விளக்கோடு வந்திருந்தார். அப்பா ஒரு கையில் என்னைப் பிடித்தபடி மாடுகளை விரட்டினார்.
மாடுகள் மழையில் நன்றாக நனந்திருந்தன.
இரயில் வரும் ஓசை வெகு தொலைவில் கேட்டது.
“எல்லா சனியனும் வந்துடுச்சா…? “
“ஒன்னு…ரெண்டு…மூணு…ம்ம்ம்ம் இன்னும் ஒன்னு கொறையுதுப்பா..! “
“ எந்தச் சனியன் இன்னும் ஊர் மேயுது… ? “
சிம்னி விளக்கைத் தூக்கி, சுற்றிலும் பார்த்தார்.
இரயில் நெற்றியில் விளக்கைக் கட்டிக் கண்டு ஓடி வந்து கொண்டிருந்தது. விளக்கின் ஒளி இருளை இரு கூறாகக் கிழித்துப் போட்டது.
அப்பாவுக்கு ஒரு நொடி தூக்கி வாரிப் போட்டது.
தண்டவாளத்தின் மத்தியில் லட்சுமி நின்று கொண்டிருந்தது.
“ ஏய்..லட்சுமி…இங்க வா ! “
அப்பா முதன் முறையாக லட்சுமினு பெயர் சொல்லி அழைத்தார்.
லட்சுமி நகராமல் அசை போட்டுக் கொண்டிருந்தது. அப்பா என் கைகளை உதறி விட்டு தண்டவாளத்தை நோக்கி ஓடினார்.
இரயில் ஓடி வந்து கொண்டிருந்தது.
இரயிலையும் அப்பாவையும் மாறி மாறி பார்த்தேன். அப்பாவும் லட்சுமியும் இன்னும் தண்டவாளத்தில் தான் நின்று கொண்டிருந்தனர்.
அப்பா லட்சுமியைத் தண்டவாளத்திற்கு அப்பால் இழுக்க பிரயத்தனம் செய்தார். லட்சுமியோ எந்த பிரஞ்சையுமின்றி அலட்சியமாக கிடந்தது.
“லட்சுமி வந்துடு…இரயில் வருது லட்சுமி…. வந்துடு லட்சுமி…”
மூச்சுக்கு முன்னூறு முறை லட்சுமி என்று அப்பா அழைத்தது அதற்குப் புதுமையாகத் தோன்றியதோ என்னவோ ! எதற்கும் அசைந்து கொடுக்காமல் நின்றது.
இரயில் அசுரத்தனமாய் நெருங்கிக் கொண்டிருந்தது.
“ ப்பா…வந்திடுங்கப்பா… ப்பாபா…”
அப்பா தன் வலிமை எல்லாம் திரட்டி லட்சுமியை ஒரே மூச்சில் பிடித்துத் தள்ளினார். லட்சுமி தண்டாவாளத்து வெளியே வந்து விழுந்தது.
இப்போது அப்பா மட்டும் தண்டவாளத்தில்…
அலறினேன்… அம்மா என் கண்களை மூடிக் கொண்டார். சிம்னி விளக்கு கையை விட்டு நழுவி எங்கோ போய் விழுந்தது.
இரயில் சென்று விட்டிருந்தது. அப்பாவும் சென்று விட்டிருந்தார். எல்லாம் நொடிக்குள் நடந்து விட, எதுவும் நடவாதது போல இருள் பழையபடி படர்ந்து விழுங்கியது.
**************
“ இரயில் போயிடுச்சுங்க… ! “
கண்களைத் திறந்தேன். உடல் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தது. கண்களில் கரைத் தட்டி நின்ற நீரை மேல் துண்டால் துடைத்துக் கொண்டேன்.
என் மேல் விழுந்த விசித்திர பார்வைகளை உதறி விட்டு வேகமாக நடந்த போது எனக்கு மட்டும் கேட்கும்படி சொல்லிக் கொண்டேன்.
“ அப்பாவுக்கு இந்த மாடுகள்னா ரொம்ப பிடிக்கும்…! “