(இதற்கு முந்தைய ‘ஜே.கிருஷணமூர்த்தி (ஜேகே)’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது).
அன்றைய ஹிண்டுவில் வேறு செய்திகள் எதையும் வாசிக்காமல் அப்படியே எழுந்து அவன் மாடி பால்கனிக்கு போய்விட்டான்.
விருதுநகர் வீட்டில் அந்தப் பால்கனி அவனுக்கு மிகவும் முக்கியமான பிரத்தியேகமான இடம். எழிலின் மறு பெயர் அந்தப் பால்கனி என்று சுருக்கமாகச் சொல்லலாம்.
பால்கனியை வந்துத் தொடுகிற மாதிரி பச்சைப் பசேலென விரிந்தும் பரந்தும் வளர்ந்திருந்த வேப்ப மரத்தைப் பார்த்தபடி மெளனமாக நின்று கொண்டிருந்தான்.
பதினைந்து வருடங்கள் அவன் சிந்தனையில் பிரும்மாண்டமான ஆக்கிரமிப்பை ஏற்படுத்தி இருந்த ஜேகே தற்போது உயிருடன் இல்லை என்ற செய்தி அவன் மனசை அசைத்துப் பார்த்தது.
மாடிப் படிகளில் அப்பா ஏறி வருவதையும், அவன் பின்னால் வந்து மெளனமாக நிற்பதையும் அவனால் உணர முடிந்தது. அவன் திரும்பிப் பார்க்கவில்லை. அப்பாவும் பேசுவதற்கு முயற்சி எதுவும் செய்யவில்லை. சில நிமிடங்களுக்குப் பிறகு அப்பா நகர்ந்து கீழே இறங்கிச் செல்லும் மெல்லிய ஒலி கேட்டது.
அவன் மெளனமாக பால்கனியிலேயே நின்று கொண்டிருந்தான். வாழ்க்கை எந்தத் தாட்சண்யமும் இல்லாமல் கம்பீர நீரோட்டமாய்க் கண் முன்னே கரையற்று ஓடிக் கொண்டிருந்தது. வாழ்க்கை அவன் அப்பாவின் நெஞ்சில் இருந்த பெரிய துயரத்தையும் ஒருநாள் துடைத்துப் போட்டுவிட்டது.
ஆம், அவன் ஜேகேயின் கூட்டங்களுக்கு பல தடவைகள் சென்றிருந்த தருணங்களில், அடையாறு ஆலமரத்தினடியில் அடிக்கடி காதம்பரியைப் பார்த்திருக்கிறான். புன்னகையில் ஆரம்பித்த அறிமுகம், நட்பில் தொடர்ந்து, ஜேகேயின் தத்துவங்கள் பற்றி அவளுக்குள் இருந்த தெளிவின்மைகளை அவனிடம் பேசிப் புரிந்துகொண்டாள். அதுவே நாளடைவில் மனப் புரிதலில் தொடர்ந்து காதலில் வந்து கனிந்தது.
காதம்பரி மெட்ராஸில் இருந்ததால் அவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்வது இலகுவாக இருந்தது. ஆழமான புரிதலில் இருவரும் ஒருவரை ஒருவர் வாழ்க்கைத் துணையாய் ஏற்று இணைந்து வாழலாம் என்ற முடிவிற்கு வந்தார்கள். உடனே சேர்ந்து வாழவும் ஆரம்பித்து விட்டார்கள். அப்போது அவனுக்கு 48 வயது; காதம்பரிக்கு 35 வயது. முதிர் கன்னியும், முதிர்ந்த காளையும்.
கதம்பரியை திருமணம் செய்துகொண்ட செய்தியை சில மாதங்களுக்குப் பிறகு அவன் தன் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் கடிதம் மூலம் தெரிவித்தான். திருமணம் முடிந்து ஐந்து மாதங்களுக்குப் பிறகே காதம்பரியை அவன் ஊருக்கு அழைத்துப் போனான்.
அவன் அப்பாவின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கி வழிந்து கொண்டிருந்தது. பெரிய துயரம் நீங்கிவிட்ட நிம்மதி அவரின் கண்களில் நிறைந்திருந்தது. துவண்டு போய் கிடந்த அவரின் வாழ்க்கை புத்துணர்ச்சி பெற்று விட்டது.
அவனுடைய எல்லா வயதிலும் அவனை உட்காரவைத்து அவரைக் கவர்ந்த பழைய ஆங்கில இலக்கியங்களையும், பல தேசத்து அரசியல் வரலாறுகளையும் பிரசங்கம் செய்வதுபோல ஆங்கிலத்தில் உரத்த குரலில் சொல்லிச் சொல்லி அவனையும் பிரமிக்க வைத்து அவரையும் மகிழ்வித்துக் கொண்டு பொழுதுகளை மறக்க முடியாததாக மனதில் பதிய வைத்திருந்தாரே – அந்த அவருடைய மென்மையான வெளிப்பாடுகளை அப்பா காதம்பரியை உட்கார வைத்துக் காட்ட ஆரம்பித்து விட்டார்.
ஒரே ஒரு வித்தியாசம். அந்தக் காலத்தில் அவர் அவனிடம் எவ்வளவு மணி நேரங்கள் பிரசங்கம் செய்து கொண்டிருந்தாலும் அப்பாவுக்கு மூச்சு வாங்காது. ஆனால் காதம்பரியிடம் பிரசங்கம் செய்தபோது ஏராளமாக மூச்சு வாங்கியது. காதம்பரி பதறி எழுந்து அப்பாவின் முதுகைத் தடவிக் கொடுப்பாள். “பேசினது போதும்; நாளைக்குச் சொல்லுங்கோ…” என்பாள். அப்பா கேட்க மாட்டார். சில நிமிடங்கள் ஓய்வு எடுத்துக்கொண்ட பின், அப்பா மறுபடியும் அவரின் பிரசங்கத்தைத் தொடர்வார்.
காதம்பரியை அவன் ஊருக்கு அழைத்துப் போகிற ஒவ்வொரு முறையும் அப்பாவின் இந்தப் பிரசங்கங்கள் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருந்தன. அவன் மேல் அவருக்கு எத்தகைய அன்பு இருந்ததோ, அதே அளவு அன்பு காதம்பரியிடமும் அப்பாவிற்கு ஏற்பட்டது.
அப்பா 1993 ம் வருடம் ஜூலை 31 ஆம் தேதி மாரடைப்பால் காலமானார்.
அப்பாவுக்கு மரணம் வரப்போவதை ஒரு மாதத்திற்கு முன்பு, அவன் தன் அம்மாவிடம் மட்டும் சொல்லியிருந்தான். மரணத்தின்போது அப்பாவின் அருகில் தான் இருக்க மாட்டேன் என்பதையும் அவன் சொல்லியிருந்தான். அப்படியே நிகழ்ந்தது.
அவன் அப்பா இறந்து போவதற்கு சில வருடங்கள் முன்பாகவே அவர் இறந்து போகும் காலம்; இறந்து போகும் விதம் போன்றவை அவன் நெற்றி மேட்டின் அரூப வெளியில் செய்தியாக அவனுக்குச் சொல்லப் பட்டிருந்தது. அதற்கும்மேல் அவன் அப்பாவின் மறுபிறப்பு திருவிடைமருதூரில் நிகழும் என்கிற செய்தியும் அவனுக்கு கூறப்பட்டிருந்தது.
அப்பா இறந்து நான்கு வருடங்களுக்குப் பிறகு அவனும் காதம்பரியும் கும்பகோணத்தில் ஐந்து நாட்கள் தங்கி பல கோயில்களுக்குச் சென்று வந்தார்கள்.
ஒருநாள் கும்பகோணத்தில் இருந்து பஸ்ஸில் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு அவன் காதம்பரியுடன் சென்று கொண்டிருந்தான். அவன் எதிர்பார்க்கவே இல்லை. அவன் பயணித்த பஸ் திருவிடைமருதூர் வழியாகச் சென்று கொண்டிருந்தது. சரேலென அவன் முதுகுத்தண்டு சிலிர்த்தது. திருவிடைமருதூர் கொஞ்சம் பெரிய கிராமமாகக் காட்சி அளித்தது.
அதன் சில கோபுரங்களையும், வீதிகளையும், பெரிய வீடுகளையும் பஸ் நிசப்தமாகக் கடந்தபடி மெதுவாக நகர்ந்து சென்று கொண்டிருந்தது. ஏதோவொரு கால கட்டத்தில் அவன் அப்பா இங்கேதான் பிறந்து வாழப் போகிறார் என்று எண்ணிய மாத்திரத்தில் அவன் கண்களில் கண்ணீர் திரையிட்டது.
அப்பா இறந்து போவதற்கு இருபது நாட்களுக்கு முன்பு அவரை கடைசியாகப் பார்த்து விடலாம் என்கிற எண்ணத்தில் காதம்பரியும் அவனும் விருதுநகர் போனார்கள். அப்போதும் அப்பா காதம்பரியை உட்காரவைத்து அந்தக் காலத்தில் உயர் நீதி மன்றத்தில் நீதிபதியாக இருந்த எ.எஸ்.பி அய்யர் லண்டனில் படித்துக் கொண்டிருந்த போது சந்தித்த சில அனுபவங்கள் பற்றி மிகுந்த உணர்வுப் பெருக்குடன் சொல்லிக் கொண்டிருந்தார்.
காதம்பரியை அவன் தன்னுடைய மனைவியாய் தேர்ந்து எடுத்திருந்ததில் வார்த்தைகளில் சொல்லத் தெரியாத திருப்தி அப்பாவிற்கு இருந்தது. காதம்பரியின் இலக்கிய வாசிப்புகளும்; உலக சினிமா பற்றிய அவளின் விரிந்த அறிவுச் சேர்க்கைகளும்; சகல மனிதர்களிடமும் அவள் காட்டும் அன்பும், பரிவும் அப்பாவிற்கு மன நிறைவைக் கொடுத்திருந்தன.
காதம்பரியை அவன் மணந்து கொண்டிருந்ததில் இன்னொரு கோணத்திலும் அப்பாவிற்கு பரிபூர்ண திருப்தி இருந்தது. அந்தக் கோணம் என்னவெனில், ‘சாப்பாட்டில் பரம்பரை பரம்பரையாக சைவ உணவை மட்டுமே சேர்த்துக் கொள்ளும் வழக்கத்தைக் கடை பிடிக்கும் கண்டிப்பான பிராமணக் குலத்தில் பிறந்தவள் காதம்பரி’ என்பதே அது….