அப்பாவின் ஆசை!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 18, 2023
பார்வையிட்டோர்: 4,565 
 
 

மாலை நேரத்தில் வருகின்ற மழை, கூடவே ஒரு குளுமையையும் கொண்டு வந்து விடுகிறது. அந்த மழையில் உருவாகும் இதமான சூழலில் மனசும் வயிறும் சேர்ந்து , நாக்குக்கு ருசியாக சூடாக எதையாவது சாப்பிட விரும்பும்.

அந்த மாதிரி நேரங்களில், மோகனுக்கு அவனுடைய அப்பா கூட இருக்க நேர்ந்தால், அவர் பேசறதை கேட்கும்போது.. அவனுக்கு ஆச்சர்யமாகவும்… சிலநேரம் வேடிக்கையாகவும் இருக்கும்.

“இந்த மழைக்கு இதமா சூடான டீயும், கூட வெங்காய பக்கோடா… இல்லேன்னா மொறு மொறுன்னு மெதுவடை… சாப்பிட்டா நல்லா இருக்கும். அதுவும் தெரு முனையில, காமாட்சி பாட்டி போடற வாழைக்கா பஜ்ஜியையும்.. உருளை கிழங்கு போண்டாவையும் அடிச்சிக்க முடியாது. உங்க அம்மா சுடற பலகாரத்தில கூட , அப்படி ஒரு ருசிய ஒரு நாளும் நான் அனுபவிச்சதே கிடையாது” என்பார்.

அவ்வப்போது அம்மாவையும் வம்புக்கு இழுக்கிற மாதிரி பேசி விட்டு, இவனை பார்த்து கண் சிமிட்டுவார். அம்மாவும் கோபம் வந்த மாதிரி.. “பேசாம நீங்க காமாட்சி பாட்டியவே கூட்டிட்டு வந்து, சமையல் பண்ண வெச்சுக்கங்க” என்பாள்.

“அடி இவளே, ஒரு பேச்சுக்கு சொன்னேன்டி! அந்த பாட்டி தான் இப்ப இல்லையே. அந்த நிலாவுல வடை சுட போய்டாங்களே.. அவங்க பேரன்தான் இப்ப பலகாரம் போடறான். அவன் கை பக்குவமும் பரவாயில்லே. ஆனா என்ன பண்ணறது. எனக்கு முன்ன மாதிரி சட்டுன்னு எழுந்து தெரு முனைக்கு போய் வாங்கி சாப்பிட முடியாதே.. வயசாயிடுச்சு.. நாலு எட்டு நடந்தாலே மூச்சு வாங்குது ” என்பார்.

மோகனுக்கு நினைவு தெரிந்து.. மழை காலம் என்றாலே.. அவர் வேலைக்கு போய்ட்டு திரும்ப வரும்போது, தவறாமல் காமாட்சி பாட்டி கடையில் நின்னு பலகாரம் பார்சல் வாங்கிட்டு வருவார். அவர் ரிட்டயர்டு ஆன பிறகும் கூட , அடிக்கடி அந்த கடைக்கு போயி பலகாரம் வாங்கிட்டு வருவார்.

பிறகு சரியாக நடக்க முடியாமல் போனதும், அவன் அம்மா மெல்ல தடுமாறி நடந்து போய், வாங்கிட்டு வந்து கொடுப்பாங்க. ஒரு சில சமயம் அவனிடம் கூட வாங்கிட்டு வர சொல்லி இருக்கார்.

ஆனால் அவனோ ,

“சாரிப்பா… கடைக்கு போக நேரம் இல்லப்பா. நானே ஆபீசில வேலை செய்து முடிக்க முடியாம.. வீட்லேயும் செய்யலாமுன்னு பைல், லேப் டாப் எல்லாம் எடுத்திட்டு வந்திருக்கேன். இப்ப தானே அம்மா டீ போட்டு கொடுத்தாங்க. நான் நாளைக்கு வரும் போது வாங்கிட்டு வரேன்” என்று சொல்லி விட்டு வேலையில் மூழ்கி விடுவான்.

மறுநாள் ஆபீஸ் வேலை முடிந்து வரும் போது அந்த விஷயத்தையே மறந்து விடுவான். விடுமுறை நாட்களில் கூட, அவன் மனைவி குழந்தைகளோடு வெளியே போய் வரும் போது அந்த கடைக்கு அருகில் காரை நிறுத்த முடியாமல், கூட்டமாக இருக்கிறது என்பதால் பலகாரம் வாங்க மனம் இருந்தாலும், இன்னொரு முறை வாங்கிக்கலாம் என்று வந்து விடுவான்.

ஏதாவது ஒரு சமயம் அதிசயமாக வாங்கி கொண்டு வந்து கொடுப்பான். கொடுத்து விட்டு அறிவுரை வேறு சொல்லுவான். “என்னப்பா.. அப்படி ஒரு கூட்டம்.! என்ன ஆயில் யூஸ் பண்ணறாங்க.. சுத்தமாக செய்யறாங்களான்னு தெரியல..” என்பான்.

ஆனால் வேறு பெரிய ஸ்வீட் ஸ்டால்களில் இருந்து மிக்ஸர், சிப்ஸ்.. என்றெல்லாம் வாங்கி கொண்டு வந்து கொடுப்பான். அவர் அதை விரும்பி சாப்பிட மாட்டார். கொஞ்சமாக எடுத்துக்கொண்டு போதும் என்று சொல்லி விடுவார்.

ஒருநாள் ஏதோ வேலை விஷயமாக டென்ஷனில் இருக்கும் போது, அம்மா தடுமாறி நடந்து போய்… அந்த கடையில் இருந்து பஜ்ஜி வாங்கி கொண்டு வந்து கொடுப்பதை பார்த்து விட்டு.. சத்தம் போட்டான் “ஏம்மா… அவரு தான், இந்த வயசுலயும் காரசாரமா சாப்பிட ஆசை படறார். நீங்களும் நடக்க முடியாம நடந்து போய் வாங்கி குடுக்கறீங்க “

“நீ ஏம்பா… டென்ஷன் ஆறே ! அவரு என்ன தினமுமா கேட்கிறார். ஏதோ மழை நேரத்தில் தான் ஆசைபட்டு கேட்கிறார். இப்படி ஒவ்வொருத்தர் மனசுக்குள்ளயும் ஏதாவது ஒரு ஆசை இருக்கும்பா !. உன் அப்பாவுக்கு இப்படி ஒரு ஆசை.”

அவன் சமாதானம் ஆகாமல் , முகத்தை உர்ரென்று வைத்திருப்பதை பார்த்துவிட்டு, “அவருடைய சின்ன வயசில இந்த பலகாரம் வாங்கி சாப்பிட கூட வழியில்லாமல், ரொம்ப ஏழ்மையில இருந்திருக்கார்பா. நீயும் நானும் வயிறார சாப்பிடணுமுன்னு.. பல நாள் சாப்பிடாம, அங்க ஒரு டீ வடை மட்டும் சாப்பிட்டுட்டு, இராத்திரி பகலா வேலை வேலைனு ஓடுவார். ஒவ்வொரு வீட்டிலே, சில ஆம்பளங்க குடிபழக்கத்துக்கு அடிமையாகி குடும்பத்தையும் சேர்த்து கஷ்ட படுத்துறாங்க. இது ஒன்னும்… அது மாதிரி மோசமான ஆசை இல்லையே ” என்று அம்மா சொல்லவும்…

“என்னமோ பண்ணுங்க” என்று சத்தமாக பேசி விட்டு, மோகன் பெட்ரூம் போய் கதவை படாரென்று சாத்திக்கொண்டான்.

அதற்கு பிறகு அவனுடைய அப்பா, அந்த பலகாரம் பற்றி வீட்டில் பேசவேயில்லை.

இன்றும் மாலை நேரத்தில், மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது. வழக்கம் போல மோகன், அவன் மனைவி கொடுத்த டீயை ருசித்துக் கொண்டு, ஆபீஸ் வேலையை வீட்டில் செய்து கொண்டு இருந்தான். அப்போது ..அவனுடைய மகன் முகேஷ் தயங்கி தயங்கி அவனிடம் வந்து நின்றான். மோகனும் மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்தான்.

“அப்பா… எனக்கு தெரு முனை கடையில் இருந்து வாழைக்கா பஜ்ஜி சாப்பிட வாங்கி தரீங்களா ” என்று கேட்டான்.

உடனே மோகன் அதிர்ச்சியாகி ஆச்சர்யமாக மகனை பார்த்தான்.

பின்னர் தலையை திருப்பி அருகிலிருந்த சுவரை பார்த்தான்.

அங்கே மாட்டியிருந்த படத்தில் , அமரராகி விட்ட அப்பா… சிரித்தபடி மோகனை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் வழக்கமாக செய்வது போல… கண்ணடித்து காட்டி சிரித்தது போல் அவனுக்கு தெரிந்தது.

– 07-17-23, My Vikatan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *