அப்பத்தா

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 16,535 
 

உப்புக் காகிதத்தைக் கண்ணாடியில் அழுத்தித் தேய்க்கிற சத்தம் போல இருந்தது. நெஞ்சுக்குழிக்கும், தொண்டைக்குழிக்கும் இடையே உயிர் ஊசலாடியது. ஆறு நாளாக மல்லுக்கட்டுகிறது அப்பத்தா. காய்ச்சல், தலைவலி என்று ஒரு நாள் படுத்ததில்லை. அப்பத்தா படுத்தா, வைத்தியம் பார்க்கக் கடவுள் தான் வரணும் என்று தாத்தா சொன்னது சரியாகி விடும் போலிருக்கிறது. மகன்கள், மகள்கள், பேரன் பேத்திகள் எல்லோரும் கட்டிலைச் சுற்றி நின்றார்கள். பிள்ளைகளும், பேரன் பேத்திகளும் பால் ஊற்றினால், அடங்குமென்று ஊற்றச் சொன்னார்கள். பால் இறங்கிக் கொண்டே இருந்தது. குரல்வளை அறுந்து போகிற மாதிரி, சத்தம் கூடியதே தவிர குறையவில்லை. ஆஸ்பத்திரிக்கு வேண்டாமென்று சுப்பையா டாக்டர் சொல்லிவிட்டார். நாடி படுத்துவிட்டது. முழுசாக அடங்கவில்லை.

தாத்தா தலைமாட்டிலேயே இருந்தார். உயிர் பிரியும்போது, பக்கத்தில் ஆள் இருந்தா, ஆன்மா அலையாது என்று நம்பினார். காப்பியோ, பலகாரமோ யாராவது கூப்பிட்டுக் கொடுத்தால் சாப்பிட்டார். கண்ணெல்லாம் சிவந்து, இரண்டு கைகளையும் கூப்பியபடியே, “கஷ்டப்படாம போயிரணும்“ என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டேயிருந்தார். கல்யாணமான நாளில் இருந்து இன்றுவரை கண்ணீர் சிந்தாமல் காப்பாற்றி இருக்கிறார். இருவருக்கும் இடையிலான நெருக்கமும், இணக்கமும் ஊரே அறிந்த ரகசியம். இன்றைக்கும், பகலிலும் இரவிலும் தனித்து இருந்தால் கதவைப் பூட்டிக் கொண்டு தான் இருவரும் பொழுதைக் கழிப்பார்கள். குளிக்கப் போனால், சேர்ந்துதான் குளிக்கப்போவார்கள். ஒருவருக்கொருவர் முதுகு தேய்த்து விட்டுக் கொண்டு, சிரிப்பும் கேலியுமாகக் குளித்தால்தான் குளித்தது மாதிரி இருக்கும். கல்யாணமான நாளில் இருந்து, அப்பத்தா படுக்கையில் விழுகிறவரை அதுவே நடைமுறை.

ஓரோரு வருஷம் இடைவெளி விட்டு மூன்று ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள் என்று ஐந்து குழந்தைகள் அப்பத்தாவுக்கு. ஐந்தும், ஒரு கை விரல் மாதிரி ஒற்றுமையான பிள்ளைகள். எல்லோரும் படித்து, வேலைக்குப் போய் மனசாரச் சம்பாதிக்கிறார்கள். வீட்டுக்கு வந்த மருமகள்களும், மருமகன்களும் கூட ஒத்தாசையான பிள்ளைகள். எல்லோருக்கும் பிள்ளை குட்டிகள் என்றாகி விட்டாலும், அப்பத்தாவும், தாத்தாவும் இன்றைக்கும் படுப்பது தனி அறையில்தான். பர்மாத் தேக்கில் செய்த ரெட்டைக் கட்டில். அப்பத்தாவை, அதில்தான் படுக்கப் போட்டிருந்தது. இந்தக் குடும்பத்துக்கு குத்தகை பார்க்கிற செவனம்மா நாச்சிகுளத்தில் இருந்து விழுந்தடித்துக் கொண்டு வந்தது. கட்டிலை விட்டு இறக்கித் தரையில் போட்டால், கஷ்டப்படுத்தாம ஆறு நாழிகைக்குள் அடங்கி விடும் என்றது. வீட்டுக்குள் நுழைந்ததும், கிழக்குப் பார்த்த வாசல் இருந்த அறையில் பாய் விரித்து, மெத்தை போடக்கூடாது, பாய் மட்டும் போதும் என்று செவனம்மா தாத்தாவிடம் உரிமையாகச் சொல்லி விட்டது. ஆறு நாழிகை, ஆறு நாளாகியும் அப்பத்தா மல்லுக் கட்டிக் கொண்டே இருந்தது.

செல்லூர் சித்தாப்பாவுக்கு ஜோசியத்தில் நம்பிக்கை உண்டு. காட்டுப்பட்டியில் இருந்து சாமியாடியையும், ஜோசியனையும் கூட்டிக் கொண்டு வந்தார். முத அமாவாசைக்கு முடிந்து போகுமென்றான் ஜோசியன். சாமியாடி திருநீறு கொடுத்து அதைத் தண்ணீரில் கலந்து மூணு தரம் கொடுக்கச் சொன்னான். “எது வேணும்னாலும் செய்யுங்க“ என்று தாத்தா சொல்லிவிட்டார். “கண்ண மூடுனாலும் பரவாயில்ல, கஷ்டப்படக்கூடாது“ என்பது தான் தாத்தா திரும்பத் திரும்பச் சொன்னது.

“முட்டைக் கரண்டியில் மூணு கரண்டி நல்லெண்ணெய் கொடுத்தா அடங்கும்“ என்று யாரோ சொன்னதும் நடந்தது. இரைப்பு அதிகமானதே தவிர, குறையவில்லை. குடித்த எண்ணெய், கொடுத்த பால் என்று எதுவுமே வெளியேறாமல், உள்ளுக்குள்ளேயே நின்றது, இன்னும் ஆச்சர்யமாகி விட்டது. கண்ணைத் திறந்து பார்க்கவேயில்லை. கை, கால் எதிலும் அசைவே இல்லை. ஒரு சொல், ஏதாவது உளறல் எதுவுமில்லை. வெளியேற முடியாமல் ஒற்றை மூச்சுக்காற்று, உள்ளிருந்து தொண்டைக் குழிக்குள் மோதித் திரும்பிக் கொண்டே இருந்தது. அளவற்ற வேகத்துடன் நெஞ்சுக்குழியில் போய் முட்டித் திரும்பியது. வெளியேறத் துடிக்கும் அந்த ஒற்றைக் காற்றின் விசையும், ஓசையும் உயர்ந்து கொண்டே இருந்தது. “யோசிக்காம தலையில நல்லெண்ண, வேப்பெண்ண, விளக்கெண்ண மூணும் சேத்துக் குளிப்பாட்டுனா“ ஒரு முடிவு வரும் என்று ஒரு கிழவி சொன்னது. குளிப்பாட்டி, உடை மாற்றிப் படுக்க வைத்ததும் அப்பத்தா முகத்துக்கு கூடுதல் பொலிவு வந்ததே தவிர, “எதிர்பார்த்த“ வேறு எதுவும் நடக்கவில்லை.

இரவில் ஆளுக்கொரு திசையில் களைத்துப் படுத்திருக்க தாத்தா அப்பத்தாவின் தலைமாட்டிலேயே படுத்துக் கிடந்தார். தனக்கும் அப்பத்தாவுக்குமான தனிமைகளுக்குள், தாத்தாவின் நினைவு நடைபோட்டது. கலகலவென்ற சிரிப்பும், கதம்ப வாசனையும் அப்பத்தாவின் பிறந்த வீட்டுச் சீதனம். அம்பது பேருக்குச் சமைச்சாலும், அப்பதான் குளிச்சு வந்த மாதிரி பந்தி பரிமாறும் அப்பத்தா. இலையை மறைக்க அப்பத்தா அள்ளி அள்ளிச் சோறு வைத்தாலும் முகத்தில் அடிக்காது. ஊர் உலகத்தில் புருஷனுக்குப் போட்டது போக, மிச்ச மீதி சாப்பிடுவது பெண்களின் வழக்கமென்றால், அப்பத்தா அதற்கு நேர் எதிர். அப்பத்தா சாப்பிட்ட பிறகு தான் தாத்தா சாப்பிடும். இத்தனை வருஷத்தில் ஒரு வேளை கூட கடையில் சாப்பிட்டதில்லை. வீட்டுச் சாப்பாடுதான்.

தான் சாப்பிட்டுப் பார்த்து எதைப் பரிமாறலாம், எதைப் பரிமாறக்கூடாது, உப்பு, உறைப்பு எதில் எவ்வளவு சேக்கணும் குறைக்கணும் – எல்லாம் அப்பத்தா தீர்மானிக்கும். அப்பத்தா கண்ணசைந்த பிறகு தான் தாத்தா சாப்பிட உட்காருவார். “ரெண்டும் ரொம்பத்தான் பண்ணிக்குதுங்க“ என்று அறிந்தும், அறியாமலும் மற்றவர்கள் பேசுவதைத் தாத்தா கூட சமயங்களில் பொருட்படுத்துவார். அப்பத்தா ஒப்புக் கொள்ளாது. “கண்டதச் சாப்பிட்டு அரை நாளு அவுக முடியாமப் படுத்தா எவ வந்து பாப்பா“ என்று உரக்கச் சொல்லிவிடும். தாத்தா தலைவலி என்று படுத்தால் போதும் ஊரையே ஊமையாக்கி விடும் அப்பத்தா. வீட்டுக் கோழிகளுக்கும், விருந்தாட வரும் காக்கைகளுக்கும், கொல்லையில் நிற்கும் காராம் பசுவுக்கும் கூடத்தெரியும், தாத்தா தூங்குகிறார் என்று. கொலுசு போட்டுக் கொண்டே, சத்தம் வராமல் நடந்து போகிற வித்தை அப்பத்தா மட்டுமே அறிந்த நளினம்.

பேரக் குழந்தைகள் விடுமுறைக்கு வந்தால், ஒவ்வொரு நாளும் விருந்து தான். கறிக்கடை தங்கராசு வீட்டுக்கு வந்து தனிக்கறியாக, வெள்ளாட்டங்கறியாக தந்து விட்டு போவான். குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நல்லி வெட்டி வைத்திருக்க வேண்டும். குழந்தைகளின் பட்டியலில் தாத்தா எப்போதும் உண்டு. கறி வறுத்த சட்டியை சூட்டோடு இறக்கி வைத்து, சுடு சாதத்தைப் போட்டுப் பெரட்டி, உருண்டை வைத்து எல்லோருக்கும் சமமாகப் பங்கு போடும். எவ்வளவு சூடும் பொறுக்கிற கைகள் அப்பத்தாவுக்கு. ஊறுகாய் ஜாடிக்குள் கை போட்டால் ஊசிப் போகும் என்பது மற்றவர்களுக்குத்தான். அப்பத்தா எதையும் கையில் தான் எடுக்கும். எந்தப் பண்டமும் ஊசிப் போகாது. காலையில், அம்மியில் அரைத்த தேங்காய்ச் சட்னி, இரவுவரை மணம் மாறாமல் இருக்கும். எல்லாம் அப்பத்தா கைப் பக்குவம். அந்தக் கைகள் குளிர்ந்து போய் வெளுத்துக் கிடந்தன.

பின்னிரவில் கூட, தாத்தாவும் அப்பத்தாவும் பேசிச் சிரித்து மகிழ்கிற சத்தம் கேட்ட வீடு இது. அறைக்குள்ளேயே, பல்லாங்குழி, பரமபதம், சீட்டுக்கட்டு, சதுரங்கம், தாயம் என்று வகைவகையான விளையாட்டுக்களுக்கும் குறைவிருக்காது. கறிச்சோறு சாப்பிடுகிற அன்றைக்கு வெற்றிலை போடுவது வழக்கம். தாத்தா மடித்துக் கொடுப்பார். “ஆம்பிளைங்க மடிச்சுக் கொடுத்தா, வீட்டுக்கு ஆகாது“ என்று யாரோ சொன்னதற்கு, ரெண்டுபேரும் புரையேறச் சிரித்திருக்கிறார்கள். மடித்துக் கொடுத்த வெத்திலையைச் சுவைத்து மணம் ஏறிய பிறகு, நாக்கை நீட்டி “எப்படி சிவந்திருக்கு?“ என்ற பாவனையில் அப்பத்தா கேட்பதும், தாத்தா கண்கள் விரிய ஆமோதிப்பதும் வீடே பார்க்கும் உற்சாகங்கள். ஓயாமல் பேசிச் சிரிக்கும் அந்த வாய் வறண்டு, காய்ந்து கிடக்கிறது.

கல்யாணமான போது, அப்பத்தாவுக்குப் பத்தொன்பது வயசு. தாத்தாவுக்கு இருபத்தி ஏழு. எட்டு வருட வித்தியாசம். பார்த்தால் சொல்ல முடியாது. கல்யாணமாகி, மூணாவது நாள் இந்த வீட்டுக்கு வந்த அப்பத்தா, திரும்ப ஒரு முறை கூட பொறந்த வீட்டுக்குப் போகவில்லை. இந்த வீட்டுக்கு வந்த அன்னிக்கு ஆனி முப்பத்தி ஒண்ணு. மறுநாள், ஆடிக்குப் பெண் தாய் வீடு போக வேண்டுமென்று பேச்சாக இருந்தது. தாத்தா சம்மதிக்கவில்லை. இரண்டு தரப்பிலும் வாக்குவாதம் முற்றி, பெரிய பிரச்சனையான போதும் தாத்தா ஒப்புக் கொள்ளவில்லை. “ஆடி மாசம் சேந்து இருந்தா, சித்திர மாசம் புள்ள பொறக்கும். கோடையில புள்ள பொறந்தா குழந்தைக்கும் ஆகாது, குடும்பத்துக்கும் ஆகாது“ என்றார்கள். “சித்திர மாசம் புள்ள பொறக்காமப் பாத்துக்குறது எம் பொறுப்பு“ என்று எல்லார் முன்பும் தாத்தா சொன்னதை, இப்போதும் அப்பத்தா சொல்லிச் சொல்லிச் சிரிக்கும்.

தன்னைப் பொறந்த வீட்டுக்கு அனுப்பவே வேண்டாமென்று, அப்பத்தா கேட்டுக் கொண்டதை தாத்தா யாருக்கும் சொல்லவேயில்லை. அந்தக் கோபத்தின் பின்னே என்ன இருந்ததென்று யாருக்கும் தெரியாது. அப்பத்தா பொறந்த வீட்டில் ஒத்தப் பொறப்பு. கூடப் பொறந்தவங்க யாரும் கிடையாது. அப்பத்தாவுக்குப் பதினைந்து வயசாக இருக்கிறபோதே, நெருங்கிய சொந்தத்தில் கண்ணுச்சாமியைப் பேசி முடித்திருந்தார்கள். கண்ணுச்சாமி படிப்பு முடிந்ததும் கல்யாணம் என்பது இரு வீட்டுச் சம்மதம். கண்ணுசாமிக்கு அப்பத்தாவின் மீது தீராத, மாளாத, குறையாத காதல். அப்பத்தாவுக்கு அப்படியெல்லாம் எதுவுமே கிடையாது. வண்ணச் சீரடி மண் மகள் அறிந்திராத வளர்ப்பு அப்பத்தாவுடையது.

நாலு வருஷத்துக்குள், ஓஹோவென்றிருந்த கண்ணுச்சாமி குடும்பம் பெரும் பள்ளத்தில் போய் விழுந்து விட்டது. அந்த ஒற்றைக் காரணத்திற்காகவே அந்தச் சம்பந்தம் வேண்டாமென்று, தாத்தாவைப் பேசி முடித்தார்கள். அப்பத்தாவுக்கு எதுவும் விளங்கவில்லை. தாயும், தகப்பனும் சொன்னதற்குத் தலையாட்டி விட்டது. கல்யாணத்துக்கு ஒரு வாரம் இருந்தபோது, கண்ணுச்சாமியைக் காணோம் என்று ஊரே தேடியது. பழனிக்குப் பாதயாத்திரை போனதாகவும், கல்யாணத்தன்று அதே முகூர்த்த நேரத்தில் முடி இறக்கி மொட்டை போட்டுக் கொண்டார் என்பதும் தெரிந்தபோது, எல்லாம் முடிந்து இரண்டு நாளாகி இருந்தது. இனி ஜன்மத்துக்கும் கல்யாணம் செய்யப் போவதில்லை என்று, ஊரறிய கண்ணுச்சாமி செய்த சத்தியம் அப்பத்தாவை அதிரச் செய்தது. காசு பணத்துக்காகத் தாயும், தந்தையும் செய்த படுகொலை அப்பத்தாவின் ஈரக்குலையைக் கலக்கிவிட்டது.

பொன்னைத் தேய்த்து ஊற்றச் சொன்னார்கள். செம்பு கலக்காத பசும்பொன். காசு கொடுத்தார் தாத்தா. மருந்து அரைக்கும் கல்லில் பொறுக்கத் தேய்த்து ஊற்றினார்கள். செல்லத்தம்மன் கோவில் குருக்கள் வீட்டுக்கு ஆள் அனுப்பி, தாமிரச் சொம்பில் அடைத்து வைத்திருந்த காசித் தண்ணீரைக் கொடுத்தார்கள். காசித் தண்ணீர் கொடுத்தால் மூச்சடங்கும் என்பதோடு மோட்சமும் கிடைக்கும் என்றார்கள். மூச்சிரைப்பு கூடியதே தவிர குறையவில்லை. முன்வாசல்மண், புறவாசல் மண், வயக்காட்டு மண் என்று விதவிதமாய்க் கரைத்து ஊற்றியும் அப்பத்தா அசைந்து கொடுக்கவில்லை. அமாவாசை என்பது கனத்தநாள். அதிலும் மூச்சிரைத்து படுத்துக் கிடந்தால் மூணாவது அமாவாசையும் தாண்டாது என்பது நம்பிக்கை. அப்பத்தா மூணாவது அமாவாசையும் தாண்டியது.

மூச்சிறைப்பு அதிகமானது. நினைவு திரும்பவில்லையென்றாலும், அப்பத்தா படுகிற பாடு தாங்க முடியாததாக இருந்தது. முன்னிரவில், அப்பத்தாவுக்கு வலிப்பு மாதிரி வந்து வெட்டி, வெட்டி இழுத்தது. உடம்பு தூக்கித் தூக்கிப் போட்டது. பத்து நிமிஷம் படாதபாடு பட்டு விட்டது. இத்தனை நாளும் பொறுத்துக் கொண்ட தாத்தா தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார். “இந்தக் கண்றாவியக் கண்ணால பாக்காம, நாம் முதல்ல போயிரணும்“ என்று தாத்தா கதறியதும் எல்லோரும் பதைத்துப் போனார்கள். எல்லோரும் உறங்கப் போகும்போது மணி இரண்டரை ஆகி விட்டது. அன்றைய இரவு களைப்பும், கண்ணீரும், துயரும் மிக்கதாக இருந்தது.

விடியற்காலையில், வீடு முழுக்கத் தேடியும் தாத்தாவைக் காணோம். தாத்தா எதற்கும், எப்போதும் மனசு விடாத ஆள் தான். என்றாலும் கிணறு, குளம், கம்மாய் என்று ஒரு இடம் விடாமல் தேடினார்கள். தாத்தாவைக் காணோம். அக்கம் பக்கத்து ஊர்களுக்கெல்லாம் ஆள்விட்டார்கள். திசைக்கு எட்டுப்பேர், பத்துப்பேர் என்று ஊரில் இருந்த எல்லா வாடகை சைக்கிள்களையும் எடுத்துக் கொண்டு இளவட்டங்கள் தேடினார்கள். ஒரு நாள் முழுசாகக் கழிந்தது. தாத்தா தட்டுப்படவில்லை. “எப்போ முடியும்” என்று காத்திருந்த எல்லோரும் தாத்தா இல்லாதபோது அப்பத்தாவுக்கு ஏதும் ஆகி விடக்கூடாது என்று சாமி கும்பிட்டுக் கொண்டார்கள்.

வீடு முழுக்க துயரம் நெறி கட்டிக் கிடந்தது. அப்பத்தாளுக்கு மூக்கு நிமிர்ந்திருப்பதாகவும், விடியும் வரை தாங்காது என்றும் கருப்பூரில் இருந்து வந்த அத்தை சொன்னது. தலையில் இருக்கும் துவாரங்கள் வழியாக உயிர் பிரிவது புண்ணியமென்றும், இடுப்புக்குக் கீழே உள்ள துவாரங்கள் வழி உயிர் பிரிவது பாவமென்றும் சொல்லிக் கொண்டிருந்தாள். எந்த உறவில் யார் யாருக்கெல்லாம் எப்படி சாவு வந்தது என்று விஸ்தாரமாகப் பேசி வீட்டின் அழுத்தத்தை அதிகரித்தாள். அவளது சொற்கள் ஈரம் சுமந்த, கனத்த பஞ்சுப் பொதி மாதிரி வீடெங்கும் பறந்து கொண்டிருந்தது. தாத்தாவைத் தேடிப்போனவர்கள் எல்லாம் வெறுங்கையோடு திரும்பிக் கொண்டே இருந்தார்கள்.

மறுநாள் பொழுது சாய்ந்து கொண்டிருந்தது. யாரோ தாத்தா வருவதாகச் சொன்னார்கள். வீடே ஓடி வந்து வாசலில் நின்றது. கைத்தாங்கலாக, ஒருவர் தாத்தாவை அழைத்து வந்து கொண்டிருந்தார். கூட வந்தவருக்கும் தாத்தா வயதுதான் இருக்கும். பிள்ளைகள் எல்லோரும் தாத்தாவைக் கட்டிப் பிடித்து அழ ஆரம்பித்தார்கள். தாத்தாவும் குனிந்த தலை நிமிராமல் அழுது கொண்டே இருந்தார். குன்னூர் சந்தை விலக்கு ரோட்டில் தாத்தா நின்று கொண்டிருந்ததாகவும், தற்செயலாகப் பார்த்துப் பேச்சுக் கொடுத்து, விவரம் தெரிந்து அழைத்து வந்ததாகவும் கூட வந்தவர் சொன்னார். வந்தவர் சொல்லித்தான் தாத்தா அவ்வளவு தூரம் போனது தெரிந்தது. தாத்தாவுக்கும், வந்தவருக்கும் அத்தை சாப்பிட கொடுத்தது. இரண்டு இட்லி மட்டும் சாப்பிட்டு விட்டு தாத்தா, அப்பத்தா இருந்த அறையில் போய் சுருண்டு படுத்துக் கொண்டார். வந்தவர் வாசலில் இருந்து, எல்லோரிடமும் பேசிக் கொண்டிருந்தார். நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, ஒரு பாயும் தலையணையும் வாங்கிக் கொண்டு உள்ளறைக்குப் போய் தாத்தாவுக்குப் பக்கத்திலேயே படுத்துக் கொண்டார். காலையில் முத பஸ்ஸுக்குத் தான் போகவேண்டும் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்.

முத பஸ்ஸுக்கு அரை மணி முன்னதாக, தாத்தாவே வந்தவரைத் தொட்டார். தொட்டதும் அவர் எழுந்து கொண்டு விட்டார். இருவருமே உறங்கவில்லை என்பது கண்களில் தெரிந்தது. அவரை, அப்பத்தாவுக்கு அருகில் தாத்தாவே அழைத்துப் போனார். இரண்டு கைகளையும் கூப்பியபடி வந்தவர் அப்பத்தாவைப் பார்த்தபடியே நின்றார். குடிப்பதற்குத் தலைமாட்டில் வைத்திருந்த தண்ணீரை எடுத்து, அவர் கையில் கொடுத்து அப்பத்தாவுக்கு ஊற்றச் சொல்லி சைகை காட்டினார் தாத்தா. அப்பத்தாவின் மீது விரல்படாமல் வந்தவரும் ஸ்பூனில் தண்ணீரை ஊற்றியதும், “புளக்“ என்கிற ஓசையுடன் தொண்டை குழியிலேயே மோதி இற்றுக் கிடந்த கையளவு காற்று அப்பத்தாவிடம் இருந்து தெறித்து வெளியேறியது. வந்தவர் கொடுத்த தண்ணீர் கடைவாயில் இருந்து வழிந்து, சரிந்து வெளியேறிக் கொண்டிருந்தது. வந்தவரைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்ட தாத்தா “என் செல்லமே“ என்று அப்பத்தாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுத குரல், அறையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த அப்பத்தாவின் மூச்சுக்காற்றோடு சேர்ந்து கலந்தது. காலடித்தடம் தேய்ந்து மறைய, கலங்கிய கண்களுடன், முத பஸ்ஸுக்குப் போய்க் கொண்டிருந்தார் கண்ணுச்சாமி.

Print Friendly, PDF & Email

1 thought on “அப்பத்தா

  1. பாரதி கிருஷ்ணகுமார் எழுதிய ”அப்பத்தா” அருமையான சிறுகதை. வெகுநாட்களாக வாசிக்க நினைத்த கதையை இன்று வாசிக்க முடிந்ததில் மகிழ்ச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *