அபிநயங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 6, 2024
பார்வையிட்டோர்: 212 
 
 

(2015ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நீலக்கடலின் அலைகள் நித்தமும் தாலாட்டும் கரையோரம் அமைந்திருந்தது அந்தக் கட்டிடம். முற்றிலும் கண்ணாடிகளால் மறைக்கப்பட்டு ஒரு நீல அரக்கனைப்போல எழும்பி நின்றது அது. நான்கு கோபுரங்கள், எட்டு மின் தூக்கிகள், சிறிய பூங்கா. நடை பயில தனியாக சிமெண்ட் பூசப்பட்ட பாதை. உடற்பயிற்சி கூடம். நூலகம். கோயில். கூடி அளவளாகவும் சிறிய கூடம். அனைத்து இடங்களும் பளிங்குக் கற்களால் நிரப்பப் பட்டிருந்தது.

மேட்டுக் குடியினர் வாழும் குடியிருப்பு அது. கிட்டத்தட்ட நூறுக்கும் மேற்பட்ட அடுக்கு மாடி வீடுகள் இருக்கும். இருபத்தி நான்கு மணி நேர காவல், அந்நியர் வருகைக்குத் தடை, விசாரணை, கவனிப்பு எல்லாம் உண்டு அங்கே.

தனுஜா ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பெரிய பதவியில் இருக்கிறாள். வருடத்திற்கு பத்து லட்ச ரூபாய் சம்பளம். சொந்தமாக கார், செல் போன், ஏழெட்டு கடன் அட்டைகள் என்று வசதியாக வாழ்பவள். அவளுடைய கணவனுடன் பிணக்கு ஏற்பட்டு அவர்களது உறவு ரத்து ஆகி, நான்கு வருடங்கள் ஆகிறது. அவளுடைய கணவனை ஞாபகப்படுத்தும் ஒரே உறவு, அவளது மகள் பிரயத்தனா.. வயது பத்து.. ஐந்தாவது படிக்கிறாள்.

இங்கே தனுஜாவைப் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். தனுஜா அமெரிக்க ஆங்கிலம் பேசும் இந்தக் காலப் பெண்மணி. தலை முடியை ஆண்பிள்ளை போல் வெட்டிக் கொண்டு, கால்சராய், குட்டைச் சட்டை போட்டுக் கொண்டு, தொப்புள் தெரிய காரில் போகும், அம்பது கிலோ உடம்புக்காரி. அவளுக்கு அனாவசியங்கள் பிடிக்காது. வெட்டு ஒன்று, துண்டு ரெண்டுதான்.

மார்கழி மாதக் கச்சேரிகள், மற்றும் நாட்டிய நிகழ்வுகளுக்கு, தனுஜா ஒரு கௌரவ விருந்தாளி. கூடவே பிரயத்தனாவும் வருவாள். அங்குதான் அவள் அழகிரியை சந்தித்தாள். கனடா நாட்டிலிருந்து வந்த ஜோத்ஸனா ராமகிருஷ்ணனின் பரத நாட்டிய அரங்கேற்றத்திற்கு, தனுஜா போயிருந்தாள். அந்த நிகழ்வுக்கு அழகிரிதான் நட்டுவாங்கம்.

ஒரு பெண்ணின் நாட்டிய அரங்கேற்றத்திற்கு, ஒரு ஆண் நட்டுவாங்கம் செய்வதே, அவளுக்கு ஆச்சர்யமாகவும், கொஞ்சம் அசிங்கமாகவும் கூடப் பட்டது. ‘இதென்ன பொட்டைத் தனமா இருக்கு .. இவனுக்கு வேற வேலை கெடைக்கலியா .. ‘என்று அவள் மனம் நினைத்தது.

அழகிரி அழகான பட்டு வேட்டி சட்டை அணிந்திருந்தான். ஆறடி உயரமும், எலுமிச்சைப்பழ நிறமும் கொண்டவனாகவும் இருந்தான். பழைய காலத்து பாகவதர் கிராப் வைத்திருந்தான். அதை நடு வகிடு எடுத்து, படிய வாரியிருந்தான். நெற்றியில் ஒரு ரூபாய் அளவு, பெரிய சாந்து பொட்டு வைத்திருந்தான். சரியான அம்பி “ என்று முணுமுணுத்தாள் தனுஜா.

கனடா பெண் நிகழ்வு முடிந்தது முக்கியமானவர்களை மேடைக்கு அழைத்து, கவுரவம் செய்தது. போனவர்களில் தனுஜாவும் ஒருத்தி.

“ப்ளீஸ் மேம்! அழகிரி சாருக்கு நீங்கதான் சால்வை போர்த்தணும்”

“வித் ப்ளெஷர்“ என்று சால்வையை வாங்கிக் கொண்டே திரும்பினாள் தனுஜா. நெளிந்தபடியே நின்று கொண்டிருந்தான் அழகிரி.. ‘நெளியாதே ஆம்பளையாட்டம் நில்லு‘ என்று மனதிற்குள் கருவினாள் தனுஜா. மேலுக்கு சிரித்தபடியே சால்வையை அவன் தோளின் மேல் போர்த்தினாள். ரொம்ப நன்றிங்க ‘அவள் கையை மென்மையாகக் குலுக்கினான் அழகிரி. அவன் கை சில்லென்றிருந்தது. கூட கொஞ்சம் ஈரம் வேறு. யாரும் பார்க்காத போது, மெல்ல கைக்குட்டையால் கையை அழுந்தத் துடைத்துக் கொண்டாள் தனுஜா.

**

அடுத்த வாரமே, அழகிரியை காண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது தனுஜாவிற்கு. பிரயத்தனாவின் பள்ளியில் ஆண்டு விழா. அதற்கு அவள், கண்டிப்பாக ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமென்று, பள்ளி நிர்வாகி சொல்லிவிட்டார்.

“கண்ணனைப் பத்தின பாட்டு. பிரயத்தனாவோட அழகுக்கு, அவள் ஆண்டாள் வேஷம் போட்டா, புரோக்கிராம் பிச்சுண்டு போகும். அதனால அவள தயார் பண்ணிடுங்கோ”

பிரயத்தனாவுக்கும் நாட்டிய ஜுரம் வந்து, ஜன்னி கண்டது போல் அரற்ற ஆரம்பித்து விட்டாள்.

“மம்மி இன்னும் மூணு நாள்தான் இருக்கு. எப்படிம்மா நான் ஆடுவேன். நீதான் ஏற்பாடு பண்ணனும். ஒனக்குதான் பெரிய பெரிய மனுஷாள்லாம் தெரியுமே. அன்னிக்குக்கூட ஒருத்தர், தாம் தீம்னு கட்டையை தட்டிண்டு பாடினாரே அவரக்கூட தெரியுமே. சொல்லிக் கொடுக்கச்சொல்லும்மா..”

“தாம் தீம்.. கட்டை ‘தனுஜா யோசித்தாள். யாரைச் சொல்கிறாள்?

“யாருடி” என்றாள்.

உடம்பை லேசாக நெளித்துக் காட்டினாள் பிரயத்தனா. புரிந்து விட்டது. இதையே அவள் செய்து காட்டி பிரயத்தனாவை சிரிக்க வைத்திருக்கிறாள். அழகிரி..!பொட்டை..!

அதிவேகமாக செயல்பட்டாள். லையன்ஸ் கிளம் ராமசுப்புவுக்கு தொலைபேசினாள்.

“ஓ தனுஜா! ஹௌ ஸ்வீட் மை டியர்“ என்று வழிந்தது அறுபது வயது கிழம்.

‘குப்பையை ஒதுக்கு மேன்‘ என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டாள். தன் தேவையை அவரிடம் சொன்னாள். இரண்டு மணிநேரத்தில் அழகிரி, அவளது வீட்டின் அழைப்பு மணியை அடித்துக் கொண்டிருந்தான்.

விவரம் சொல்லி, தொகை பேசி, ஏற்பாடு செய்து விட்டு, அவள் நட்சத்திர ஓட்டல் விருந்துக்கு போனாள். வீடு திரும்பிய போது இருட்டியிருந்தது. லேசான போதையில் அழைப்பு மணியை அழுத்திய போது, கதவு லேசாக திறந்திருப்பது தெரிந்தது.

சட்டென்று போதையின் கிறக்கம் விலகியது. ‘மை காட்! என்ன நடந்திருக்கும்? கதவு திறந்திருக்கிறதே! பிரயத்தனா?’ மனம் வாயு வேகத்தில் சிந்தித்தாலும், உடல் ஒத்துழைக்க மறுத்தது. கால்கள் பின்னின. ராஜஸ்தான் கம்பளம் கால்களை இடறியது. தடுமாறி விழுந்த அவளது கைகளில் தனுஜாவின் பிஞ்சு விரல்கள் அகப்பட்டன.

கண்களை இறுக்க மூடிக்கொண்டு, மெல்ல விரல்களை வருடினாள். மேல்நோக்கி கை ஊர்ந்தது. விரல்களைத் தாண்டி முழுக்கையும் அதற்கடுத்தாற்போல் முகமும்.. திடுக்கிட்டு கண்களைத் திறந்தாள். சோபாவின் மேல் தனுஜா தூங்கிக் கொண்டிருந்தாள். அயர்ச்சியின் சாயல் அவள் முகத்தில் தெரிந்தது. ‘செக்யூரிட்டி எங்கே? ஆயா எங்கே? மை காட் எல்லோரும் பிரயத்தனாவைத் தனியாகவா விட்டு விட்டு போய்விட்டார்கள்?’ எல்லா விளக்குகளையும் போட்டாள். சுற்றிலும் பார்த்தாள். திவான் கட்டிலில், ஒருக்களித்து படுத்தபடியே, அழகிரி இவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“நீ இன்னும் போகலை?”

“வீட்டில யாரும் இல்ல. கொழந்த தனியா இருந்தது. அதான்.. “ என்று இழுத்தான். “அப்புறம் இது ஒங்களோடது..” என்று அவளுடைய பணப்பையை கொடுத்தான்.

“இது எப்படி ஒங்கிட்ட? யூ சீட்! நான் வராம இருந்திருந்தா இதை எடுத்துண்டு ஓடிருப்ப அப்படித்தான”

“இல்ல மம்மி எடுத்துண்டு போகாம இருக்கறதுக்குத்தான், அங்கிள் இங்கியே இருக்காரு” என்றாள் தூக்கத்திலிருந்து எழுந்த பிரயத்தனா.

“வாட் நான்சென்ஸ்! ஆயிரம் ரூபாய் மெய்டெனன்ஸ் தரேன். என்ன செக்யூரிட்டி இருக்கு இந்த காலனில.. அசோசியேஷன் மீட்டிங்ல கிழிக்கிறேன் பாரு.. ஆமா அந்த தடிச்சி ஆயா எங்க.. அடுத்த வாரம் அவளுக்கு சீட்டு கிழிக்கிறேன் பாரு”.

“அதுக்கெல்லாம் அவசியமில்ல மேடம். அவ இனிமே வரமாட்டா, ஆமாம் மேடம்! கொழந்த நகை, பணமெல்லாம் அவதான் எடுத்திண்டு போறதா இருந்தா. நான் பாத்துட்டேன். அதான் இதப் போட்டுட்டு ஓடிப்போயிட்டா“ என்றான் அழகிரி..

‘மை காட் அவளா!’ நாலு பேரைக் கேட்டு அலசி ஆராய்ந்து, அப்புறம்தானே அவளை வேலைக்கு வச்சேன். இந்த மாசத்தோட அவ வந்து பத்து மாசமாச்சு. ஒரு சின்னத் தப்பு பண்ணலயே அவ.. மே பி பெரிய தப்பு பண்றதுக்காக என் நம்பிக்கையை வளர்த்திருக்கா..

“அப்ப நான் கெளம்பறேன் மேடம்“ என்று நெளிந்தபடி சொன்னான் அழகிரி.

அதில் ஒரு ஆண்மை இருப்பதாகப் பட்டது தனுஜாவுக்கு. எங்கோ அவள் மனதில் மூலையில் சின்னதாக ஒரு பூ பூக்கத் தொடங்கியது!

– மே 2015

– திண்ணைக் கதைகள் – சிறுகதைகள், முதற் பதிப்பு: மார்ச் 2015, வெளியிடு: FreeTamilEbooks.com.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *