அன்புப்பசி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 8, 2022
பார்வையிட்டோர்: 3,641 
 

காலையில் கண்விழித்ததும் உலகமே தமக்காக இயங்குவது போல் மனம் உணர்ந்த போது, தன் மீது தனக்கு முன்பு வெறுப்பாக இருந்த நிலை தற்போது மாறியிருந்ததை ஆச்சர்யம் கலந்த ஆனந்த நிலையாக எண்ணினாள், இரண்டு குழந்தைகளைப்பெற்று நான்காவது ஆண்டின் திருமண நாளை கொண்டாட தயாராக இருந்த இலக்கியா!

காலை எழுந்து வந்து பார்த்த போது கணவர் காஃபி போட்டுக்கொண்டிருந்தார். அதிகாலையிலேயே தம் பேரன்களுக்கு இட்லி செய்து ஊட்டி விட்டுக்கொண்டிருந்த மாமியார்,மாடுகளுக்கு தீணி போட்டு விட்டு,வீட்டின் முன்பு உள்ள தனது சிறிய மளிகைக்கடையை திறந்து வைத்து வியாபாரத்தை துவங்கி விட்ட மாமனார், இன்று தான் அணிய வேண்டிய திருமணநாள் உடைகளை பிடிவாதமாக அன்பின் மிகுதியால் தானே பணம் கொடுத்து வாங்கி வந்து,அதன் மடிப்புகளின் சிறு சுருக்கங்களை மின்சார இஸ்திரி பெட்டியில் மகிழ்ச்சியாக தேய்த்துக்கொண்டிருந்த நாத்தனார் என தாம் பார்க்கும் காட்சிகள் கனவு போலிருந்தது. வாழ்வே தலைகீழாக மாறியிருந்தது!

முன்பு வெறுப்பில் இறைவழிபாட்டையும் நிராகரித்தவள்,தற்போது காலையில் எழுந்தவுடன் பூஜையறையில் தீபம் ஏற்றி வழிபட ஆரம்பித்து விட்டாள். ‘கடவுளே இந்த வாழ்க்கையை எனக்கு தந்த உனக்கு நன்றி. எனக்கு இதை விட வேறெதுவும் வேண்டியதில்லை. இவ்வாழ்க்கை என்றும் நிலைத்திருக்க அருள் புரிய வேண்டும்’என வழிபடுவாள்!

இல்லாதோருக்கு எதிர்பார்ப்பது கிடைக்கும்போதே அதன் பெருமை புரியும். நிழலின் அருமை வெயிலில் இருந்து வருவோருக்கே தெரியும். அது போல அன்பின் அருமை அதை பெறாமல் வாழ்ந்த இலக்கியாவிற்கு மிகப்பெரிதாகத்தெரிந்தது ஆச்சரியமில்லை!

சிறுவயதிலிருந்தே பெற்றோரின் ஒற்றுமையின்மை காரணமாக தம்மை விடுதியிலேயே படிப்பு முடியும் வரை விட்டு விட்டனர். பெற்றோரை மாதம் ஒரு முறை சந்தித்தாலும் எதிர்பார்க்கும் மனதின் ஏக்கப்பசியைத்தீர்க்குமளவுக்கான அன்பு எப்போதுமே தமக்கு பரிமாறப்படாமல் ஏமாற்றத்துடனேயே விடுதிக்கு திரும்பும் துரதிஷ்டசாலியாகவே தன்னை உணர்வாள்!

பெற்றோரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான். காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்களது பெற்றோர் வீட்டில் சேர்த்துக்கொள்ள மறுத்ததோடு, சொத்துக்களிலும் பங்கு கொடுக்க மறுத்து விடவே வாடகை வீட்டில் இருந்து கொண்டு இரண்டு பேரும் வேலைக்கு சென்றால் மட்டுமே வாழ்க்கை எனும் நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில் தானும் கருவாக உருவாக,முதலில் பொருளாதார சூழ்நிலை கருதி அழித்து விட நினைத்தவர்கள் நட்பு வட்டாரம் வேண்டாமென சொல்ல,வேண்டா வெறுப்பாக பெறப்பட்ட பெண்ணாக உலகுக்கு வந்தவள் தான் இலக்கியா!

நினைவு தெரிந்த நாளிலேயே பக்கத்து வீட்டு பாட்டியிடம் இலக்கியாவை விட்டுச்சென்று விடுவார்கள். சில நாட்கள் திரும்பி வர வெகு நேரமாகும். பசியுடன் வெறும் தரையில் கொசுக்கடி தெரியாமல் சோர்வின் மிகுதியால் உறங்கிப்போவாள். பக்கத்திலிருக்கும் பாட்டி வீடே தனக்கு அனாதைகள் வாழும் சத்திரமானதாக நினைத்து அழுவாள்.

சில சமயம் அப்பா குடித்து விட்டு வருவதும்,அம்மா தரும் உணவை தூக்கி வீசுவதும்”உன்னை மட்டுமே நம்பி வந்த எனக்கு இதுவும் வேணும்,இன்னமும் வேணும். சொந்தபந்தமே இல்லாமப்போயிடுச்சு.காதல்,கத்திரிக்காயினு எல்லாத்தையும் ஒதறிட்டு வந்து இன்னைக்கு யாருமற்ற அனாதையா போயிட்டேன். ஏன்னு எட்டிப்பார்க்க நாதியில்லை “என அம்மா அழுது விட்டு ,இரவு உண்ணாமலேயே தூங்கச்செல்வதும்,தன்னை இருவருமே அரவணைத்து தூங்க வைக்க முயலாததும், அவர்கள் மீது வெறுப்பாகும் நிலையை மனம் உருவாக்குவதை சிறுமியாக இருக்கும்போதே உணர்ந்து கொண்டாள்!

தன்னுடன் விடுதியில் தங்கியிருக்கும் தோழிகளிடம் தாத்தா,பாட்டி அடிக்கடி போனில் பேசுவதும்,நேரில் வந்து பார்ப்பதும்,விடுமுறை நாட்களில் மாமா வீடு,அத்தை வீடு,தாத்தா வீடு,சித்தப்பா வீடு என சென்று வருவதுமான நிலை தமக்கில்லையே என வருந்துவாள்!

ஒரு முறை தோழியுடன் அவளது தாய்வழி தாத்தா வீட்டில் கிராமத்தில் நடந்த திருமண விழாவுக்கு சென்றிருந்த போது தான் இப்படியொரு அன்புலகம் இருப்பதை தெரிந்து கொண்டாள் இலக்கியா!

என்னவொரு குதூலகம்,மகிழ்ச்சி.ஆட்டம்,பாட்டம்,கொண்டாட்டம்.படிப்பு,பணம்,வேலை என அந்த செயற்க்கையான வாழ்வையே நகரத்தில் சுற்றி வருவோருக்கிடையே இப்படியொரு வாழ்க்கை முறை கிராமத்தினரிடையே இருப்பது அவளை வசப்படுத்தியது. அதில் படித்தவர்,படிக்காதவர்,ஏழை,பணக்காரர் பாகுபாடின்றி உறவுகள் ஒன்று கூடி, அவர்களே ஆளுக்கொரு வேலையை கௌரவம் பார்க்காமல் செய்து வியப்பாக இருந்தது!

ஆடிக்காரில் வந்து இறங்கும் மில் முதலாளி பெண்,ஏழையான தன் உறவினர் வீட்டில் அடுப்படி வேலையை செய்ய முன் வருவதும்,கூலி வேலைக்கு செல்லும் பெண் எந்த வேலையிலும் ஈடுபடாமல் ஆடிப்பாடுவதும் ஆச்சரியமாக இருந்தது. விழாக்களின் போது பணங்கள் இணையாமல் மனங்கள் இணைவது இலக்கியாவிற்கு பிடித்திருந்தது!

அதே சமயம் அவர்களிடம் இருக்கும் பிடிவாத குணத்தையும் கண்டாள். “அதோ அந்த செவப்புக்கலரடித்த வீட்டுக்கு மட்டும் யாரும் போக மாட்டோம். அவங்க பெத்தவங்களை விட்டுட்டு படிக்கும் போது பழகியதால கல்யாணம் பண்ணிட்டாங்க”என்ற தோழியின் பேச்சு சற்று நெருடலாக இருந்தாலும்,வெளியுலக நடைமுறைக்கு ,அரசியல் சட்ங்களுக்கு எதிராக இருப்பதாகவும் பட்டது. முறைப்படுத்தப்படுதல் என்பது மனித வாழ்க்கை முறைக்கு முக்கியமானதாகவே பட்டது!

நகரத்தில் வரிசையில் நின்று பொருட்களை வாங்குவது போல ,அக்காவுக்கு பின் தங்கை திருமணம் என வரிசைப்படுத்தி நடத்துவதிலும் தவறேதுமில்லை என தோன்றியது.

திருமணம் என்பது உடல் சுகம்,வாரிசுகள்,மன விருப்பம் என்பதைத்தாண்டி பொருளாதாரத்தேவைகள்,உறவுகளின் ஆதரவு என இன்னொரு வகையான பாதுகாப்பு மிக அவசியமெனப்பட்டதை அனுபவத்தில் தெரிந்துகொண்ட பின்பே, ஒரு பெண்ணை ஆண் விரும்பினாலும்,பெண்ணின் சொந்தங்கள் ஆணின் நடவடிக்கையையும்,அவர்களது குடும்ப பின்னணி போன்ற அவசியமானவற்றை விசாரித்து பின் சம்மதிக்கும் பழக்கம் இருந்ததை,தற்போதும் இருப்பதை தம் பெற்றோரின் திருமணத்துக்கு பிந்தைய நடவடிக்கைகளை ஒப்பிட்டுப்பார்த்த போது ஏற்றுக்கொள்ளவே தோன்றியது இலக்கியாவுக்கு!

தமக்கு பெற்றோர் பார்த்து நடத்தப்பட்ட திருமணத்துக்கே தமது பெற்றோரின் உறவுகள் யாரும் வராதது கண்டு கணவனது உறவுகள் கேவலமாக பேசியது மகிழ்ச்சிக்கு பதிலாக கண்ணீரை வரவழைத்தது!

அவர்கள் பேசியதற்க்கு மேலும் இடமளிப்பது போல முதல் குழந்தை உருவான பின் வளைகாப்பு சீர் செய்ய பெற்றோர் முயலாததும்,பிரசவத்துக்கு வந்து தாய் வீட்டுக்கு அழைத்துச்செல்லாததும் சொல்ல முடியாத துயரத்தை உண்டாக்கியது!

கணவனின் உறவுகளில் நடக்கும் எந்த நிகழ்வுகளுக்கும் தம் பெற்றோர் வருவதில்லை. போனில் அழைத்து கேட்டால் “உன் கணவனோட ஆட்களுக்கு பெரியவங்க சம்பாதிச்ச சொத்து கிடக்குது. எல்லா காரியத்துக்கும் போவாங்க,வருவாங்க.எங்களுக்கு என்ன இருக்குது?அடிக்கடி லீவு போட்டா டவுன்குள்ள வாழ்ந்துட்டு,வீட்டு வாடகை கட்டி எங்க வயித்த கழுவ வேண்டாமா?” என தாய் கூறும் போது மேலும் பேச பிடிக்காமல் போனை துண்டித்து விடுவாள்!

காதலை ஆதரித்து பல கதைகளும்,நாவல்களும்,கவிதைகளும்,சினிமாக்களும் வெளி வந்தாலும், காதலுக்கு பிந்தைய வாழ்வின் பக்கத்தை யாரும் எழுதத்துணிவதில்லை எனும் ஏக்கமும், இலக்கியாவின் எதிர்பார்ப்பாகவே இருக்கும்!

விளைவுகளை சிந்தித்து வருவதில்லை காதல் என்பது உடன் படித்த மாணவனின் வசீகர சிரிப்பின் வலையில் வீழ்ந்த போது இலக்கியாவாலும் உணர்ந்து கொள்ள முடிந்தது. அதே சமயம் பெற்றோரின் வாழ்வின் நிலையை அறிந்த அனுபவம் பெற்றவளாதலால் அக்காதல் வலையிலிருந்து சட்டென தன்னை விடுவித்துக்கொண்டாள்!

தவறோ,சரியோ தாம் ஒன்றை செய்து விட்டால் அதை சரியென எண்ணுவதும்,அதே செயலை செய்தோரை ஆதரிப்பதுமான அபாயகரமான மனநிலை மனிதர்களது வாழ்வை சூனியமாக்கி விடுமென்பதை அறியாதவர்களாகவே கண்களைக்கட்டிக்கொண்டு கிணத்தில் விழுவது போல் பலர் வாழ்வதாக நினைப்பாள்!

அனுபவங்களே நமக்கு அனைத்துவிதமான நன்மை தீமைகளின் சாராம்சங்களை கற்றுத்தருகின்றன. வேலையோ,பணமோ,பதவியோ,நகரத்தில் வாழும் நிலையோ,காதலோ,வாகனங்களோ இவை மட்டுமல்ல பலவிதமான நிலைகளில் மனத்தின் எதிர்பார்ப்புகளும்,ஏக்கங்களும் உள்ளதாகவும்,அவற்றை அந்தந்த தருணங்களில் தீர்க்கும் வாய்ப்புகளை இழக்கும் போது அவை தீராத வடுக்களாக மனதில் பதியப்பட்டு பூரணமற்ற நிலையை உணரச்செய்து,நிம்மதியை குலைப்பதாக புரிந்து கொள்ள முடிந்தது!

மூத்தோர் வாழ்ந்த முறையான,நிலையான,நிம்மதி தரும் வாழ்க்கை உலகத்தில் தமக்கு இடம் கிடைத்து விட்ட மகிழ்ச்சியுடன் திருமண நாள் சேலையைக்கட்டிக்கொண்டு,தம்பதியராக கணவனின் பெற்றோரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு, அருகிலிருக்கும் கணவரது குலதெய்வ கோவிலில் பொங்கல் வைத்து வழிபடும் பொருட்டு,அதற்க்குத்தேவையானவற்றை எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் கணவர் ஓட்ட எடுத்து தயாராக நின்றிருந்த காரில் குழந்தைகளை மடியில் வைத்த படி,அருகில் மாமியாரையும்,நாத்தனாரையும் அமரச்செய்து,தானும் ஏறியமர்ந்து,மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவாறு ஆனந்தப்பட்டுக்கொண்டாள் இலக்கியா!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *