பஸ் ஸ்டாண்டில் டிரங்குப் பெட்டியும் படுக்கைச் சுருணையும் வைத்துக் கொண்டு நின்றிருந்த அந்த இளைஞனைப் பார்த்ததும் ரமணி ஐயருக்கு மனசிலொரு மூர்க்க சந்தோஷம் பிறந்தது.
நாம்ப வெச்ச வத்தி பத்தி எரிஞ்சுட்டுது போல இருக்கே முகத்தில் விஷமத்தனமான நமுட்டுச் சிரிப்பு விகஸிக்க இளைஞனின் அருகே வந்து நின்றார் ஐயர். அவன் எங்கோ பார்த்தவாறு நின்றிருந்தான் முகத்தில் துயரமும் திகைப்பும் கண்ணீர் கலங்கும் கண்களூம்… ”இந்த மாதிரிப் பசங்களுக்கெல்லாம் பாவம், பரிதாபம் பார்க்கக் கூடாது,,” என்று நினைத்துக் கொண்ட ரமணி ஐயர் தொண்டையைச் செருமியவாறு, எங்கே ஸார் ஊருக்குப் பயணமா ? “ என்று சற்றுக்கேலியான பாவத்தோடே கேட்டு வைத்தார்.
அந்த இளைஞன் ஐயரை ஏற இறங்கப் பார்த்தான். தெரியலையே ஸார்,,,
நீங்க யாரு ?”
ரமணி ஐயருக்கு நெஞ்சில் உதைத்தது போல் இருந்தது. ”என்னைத்தெரியலியா” நீங்க தானே மெயின் ரோடு பதினேழாம் நெம்பர் வீட்டிலே முன் போர்ஷன் ரூம்லே குடியிருக்கிறவர்…”
இருக்கிறவர் இல்லே ஸார்.. இருந்தவர்…” இளைஞனின் குரல் அடைத்தது.
”ஏன் ? அந்த இடத்தைக் காலி பண்ணிட்டேளா ?”
நான் பண்ணலை அவர் தான் வீட்டுக்காரர் சுந்தரலிங்கம் இருக்காரே அவரை ஒண்ணும் சொல்லப்படாது “ என் பொல்லாத விதி, நான் பொறந்த நேரம்னு ஒண்ணு இருக்கு பாருங்கோ அதன் பலன் திடீர்னு இன்னிக்கிக் காலையிலே வந்து ”மரியாதையா ரூமை விட்டுக் காலி பண்ணிடுன்னு முகத்திலே அடிச்ச மாதிரி சொல்லிட்டார். “ ”என்ன காரணம்னு கேட்கலியா”?
வாடகை கொடுக்கறவனா இருந்தா கேக்கலாம். என்னவோ புண்ணியத்திற்கு ஏழைப்பையனாச்சேன்னு இடம் குடுத்தார். இவ்வளவு நாளு இருந்த்துக்கே நன்றி செலுத்தனும் ஸார்…. ஏன் ? நீங்க வாடகை குடுக்கிறது இல்லியா ஸார்”?
நான் எங்கே ஸார் போறது பணத்துக்கு? பொறந்தப்பவே அனாதையாயிட்டேன். நான் யார் யாரோட உதவியிலேயோ படிச்சேன். இன்னும் ஒரு வருசம் டிரெயினிங் பாக்கி இருக்கு. இது முடிஞ்சிட்டா எங்காவது ஒரு ஸ்கூல்லே வேலை பாத்துண்டு சொந்தமா சம்பாதிக்கச் சுயமாச் சாப்பிடலாம். அது தான் ஸார் வாழ்க்கையின் லட்சியமா இருக்கு.
இருபத்திரண்டு வருஷ காலமா பிறத்தியார் உதவியிலேயே இந்த உடல் வளர்ந்திருக்கு… திட்டினாலும் விரட்டினாலும் அவங்களைக் குறை சொல்லலாமா? எல்லாம் என் விதி ஸார், விதி! கண்கள் சிவந்து கலங்க அடைத்துக் கொண்டு வந்த அழுகையை அடக்கிக் கொண்டான் அவன்.
ரமணி ஐயர் சிலை போல் நின்று கொண்டிருந்தார். அப்படியானால் உங்களுக்கு என்னைத் தெரியாதா ?” என்றார் ரமணி ஐயர்.
”தெரியாது ஸார்… இவ்வளவு அனுதாபத்தோட கேக்கறேளே யார்னுதான் யோசிக்கிறேன்”.
சுந்தரலிங்கம் வீட்டுக்கு எதிர் வீட்டிலேதான் நானிருக்கேன் ? என்று சொல்லி விட்டு அவன் முகத்தில் ஏதாவது மாறுதல் ஏற்படுகிறதா? என்று கவனித்தார் ஐயர். ”அப்படியா,,, நான் பார்த்ததே இல்லை ஸார். நீங்க என்ன பண்றேள் ?” என்று புன்னகையுடன் கேட்டான் அந்த இளைஞன்.
அந்தக் குழந்தைத்தனமான புன்னகையைக் கண்டவுடன் ஓவென்று அழுதுவிடலாமா என்றிருந்தது ஐயருக்கு.”கலெக்டர் ஆபீஸ்லே கிளார்க் எதுக்கு உங்களை திடீர்னு காலி பண்ணச் சொன்னார் சுந்தரலிங்கம்.”
எனக்குத் தெரியலை ஸார், என்னவோ புகார் வர்ரதாம். எங்கேயிருந்து வர்ரதோ ? என்னன்னு வர்ரதோ ? நமக்கெதற்கு ஸார் இதெல்லாம் ? பிடிக்கலைன்னா வந்துட வேண்டியது தானே?”
சில நிமிடங்கள் இருவரும் மௌனமாய் நின்றிருந்தனர். மௌனமா? ரமணி ஐயரின் மனச்சாட்சி ஓ வென்று அழுது கொண்டிருந்து. நான் மகாபாவி மூர்க்கன்…. இவனையா, இந்தக் குழந்தையையா, அதுவும் இந்த அனாதைக் குழந்தையையா நான் சந்தேகித்தேன்? இவன் வாழ்க்கையில் என்னால் ஒரு களங்கமா ? சே, சே1 நான் என்ன மனிதன் என்ன மனிதன்… “
ஸார்.. எனக்காகவா நின்று கொண்டிருக்கிறார்கள். ”ம்” பரவாயில்லை தம்பி உனக்கு ஆட்சேபணை இல்லேன்னா எங்க வீட்டிலே வந்து இருக்கலாம்.”
ஆமாம், ரமணிதான் சொல்லுகிறான் என்று தன்க்குள்ளேயே அவர் முனகிக் கொண்டார். ரொம்ப நன்றி ஸார். என் சினேகிதன் ஒருத்தன் வண்ணாரப்பேட்டையில் இருக்கான். அவன் ரொம்ப நாளா கூப்பிட்டுண்டே இருக்கான்…
ஸார் எனக்கு உதவி செய்யறவர் ரொம்ப பேர் இருக்கா அதெ நெனச்சாதான் எனக்கு வருத்தமாக இருக்கு.
நான் யாருக்காவது உதவி செய்யறவனா எப்ப மாறப் போறேனோ, உதவி செய்தவங்களுக்கெல்லாம் கசப்பைத் தராமல், யாருக்கும் தந்ததில்லே சுந்தரலிங்கத்தைத் தவிர எல்லாம் என் விதி ஸார்,விதி பஸ் வந்துடுத்து சார்,நான் போயிட்டு வர்றேன் உங்க அன்புக்கு ரொம்ப நன்றி ஸார்.. ரொம்ப நன்றி!”
அந்த இளைஞன் பஸ்ஸிலேறிப் போய் விட்டான். உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றி ஸார்,ரொம்ப நன்றி” என்று ஒரு வல்லீட்டியை ரமணி ஐயரின் நெஞ்சில் ஆழச்சொருகிவிட்டு அல்லவா போய் விட்டான்!.
ரமணி ஐயர் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அப்படியே பெஞ்சில் உட்கார்ந்து கொண்டார். ரமணி ஐயருக்கு வாய்த்த இரண்டாம் தாரம் ஜானகி ரொம்ப அழகி என்பது மட்டுமில்லாமல் அவரை விட இருபது வயது இளையவள் என்பதனால் ரமணி ஐயர் ஊரிலுள்ள ஆண்களை எல்லாம் சந்தேகிப்பது என்ன நியாயம்?
ரமணி ஐயர் உண்மையிலேயே ரொம்ப நல்லவர்.மனைவியையோ,ஊராரையோ அவர் என்றைக்கும் சந்தேகித்தில்லை.எதிர் வீட்டின் முன்னறையில் ஒரு வாலிபன் குடிவந்த பிறகுதான் அவர் அவனைச் சந்தேகிக்க ஆரம்பித்தார். பாவம் அவர் நிலை அப்படி ஆகிவிட்டதா,என்ன?
சந்தேகம் என்று ஒன்று மூண்டு விட்டால் எல்லாம் அதற்கேற்பத்தான் நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ரொம்ப பழைய விஷயமாயிற்றே!
அப்படித்தான் ஆயிற்று. பயல் எப்பப் பார்த்தாலும் கையிலே ஒருபுத்தகத்தையும் வச்சிண்டு படிக்கிற சாக்கிலே ஜன்னலண்டையே நிக்கறானாம்.
சுத்தக்காலிப்பயல். இவர் வந்ததைக் கண்டதும் புத்தக்தாலே முகத்தை மறைச்சிக்கறானாம் நேரம் காலம் இல்லாம லைட்டைப் போட்டுண்டு இவர் ரூமையே ”வாச்” பண்றானாம்… என்று நாளுக்கு நாள் ஐயரின் மனதில் வன்மம் வளரலாயிற்று.கடைசியில் ஒரு நாள் ரமணி ஐயரின் ஆபிஸிலிருந்து வரும் போது அன்று சீக்கிரமே வந்து விட்டார். பயல் கையில் புஸ்தகத்தைக் காணோமே.. என்னத்தை அப்படி வெறிச்சிப் பார்க்கிறான்.
திருட்டுப்பய பார்வையை மாத்திப்பிட்டான் மானத்தைப் பார்க்கறான் மானத்தை! மானத்திலே என்னடா வச்சிருக்கு எனக்கா டேக்கா குடுக்கப்பார்க்கறே? உன் வயசிலே நானும் எத்தனை திருட்டு லவ் அடிச்சிருப்பேன்” என்று செருமிக் கொண்டார்.ஆமாம் அதுதான் உண்மை இன்று ஐயருக்குக் கோபம் அவன்மீது மட்டும் வரவில்லை.இங்கே மட்டும் என்ன வாழறதாம்.
இந்தக் கம்மனாட்டி முண்டையைப் பாரு ஜ்ன்னல் மேலே கண்ணாடியைச் சாத்தி வச்சிண்டு தரித்திரமே ! வேறே இடமில்லையா, உனக்கு? தலைவாரிக்கிறாளாம் தலை ரெண்டு கையையும் தலைக்கு மேலே தூக்கிண்டு… சேசே அவளைச் சொல்லியும் குத்தமில்லே.
என் புத்தியை அடிக்கணும் செருப்பாலே இந்த லட்சணதோட, கீர்த்தனை வேறே,ஆலாபணை தொடப்பக்கட்டை…..”
ஐயருக்கு முகம் சிவந்து போயிற்று. `ஒகோ` இது தினசரி நாடகம் போல இருக்கு இன்னிக்குக் கொஞ்சம் முன் நேரத்திலே வந்தாலே மாட்டிண்டா.. ரெண்டு பேரும் உம் இருக்கட்டும்.
என்ன இன்னிக்கு சீக்கிரமா வந்துட்டேள்? என்றாள் ஜானகி.
உனக்கென்ன கஷ்டமா இருக்கா? போடி போ காப்பி கொண்டா? என்று விரட்டி விட்டு ஜன்னல் கதவைப் படாரென அடித்து மூடினார்.
மனம் ஒரு நிலையில் இல்லை இப்படி ஒரு நிலைமை ஏற்படக் கூடாது, ஏற்பட்டு விட்டதே என்ன செய்வது? என்ன செய்வது? என்னத்தைச் செய்து தொலைப்பது எல்லாம் என் கிரஹச்சாரம்…!யோசித்து யோசித்து முடிவுக்கு வந்து விட்டார் முடிவு சுந்தரலிங்கத்திடம் தெரிவிக்கப்பட்டது.
அப்படியா, ரொம்ப நல்ல பையன் ஸார் தப்புன்னா என்னான்னே அவனுக்குத் தெரியாது குழந்தை ஸார் அவன்,என்று படபட்த்தார் சுந்தரலிங்கம்.
குழந்தை என்னைக்குமே குழந்தையா இருந்திடுமா ஸார். நான் ஒண்ணும் தப்புச் சொல்ல வரலே ஒரு வயசிலே வர்ர சேஷ்டை நாம் அதுக்கு இடம் குடுக்கப்படாது பாருங்கோ.” இப்படிப்பட்டவனா இருப்பான்னு நான் நெனைக்கலை ஸார்.
நமக்கு எப்படி ஸார் இதெல்லாம் தெரியும் என் ஓய்ப் சொல்லி ரொம்ப வருத்தப்பட்டு அழுதாள் ,ஸார்… அவளும் சிறிசு பாருங்கோ… பயப்படறா.”
“சரி ஸார் நீங்க போங்க நான் பார்த்துக்கறேன் என்று உறுமினார் சுந்தரலிங்கம்.
அந்த விளைவு?…
அவன் போய் விட்டான்.
உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றி ஸார், ரொம்ப நன்றி “ ரமணி ஐயர் அழுது விட்டார். நான் மகா பாவி மகா பாவி” மனத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தார்.
வீட்டருகே செல்லும் போது சுந்தரலிங்கத்தின் குரல் கேட்டது. ”ஸார்…
குற்றவாளி போல அவர் எதிரே நின்றார் ரமணிஐயர்.
பயலை அடிச்சி வெரட்டிப்பிட்டேன் காலிப்பயல்! இதெல்லாங்கிட்ட சேர்க்கப்பட்டாது ஸார்.”
ஜன்னல் கதவு திறந்தே இருந்தது. எதிர் வீட்டுக் கதவு மூடிக் கிடந்தது.
”ஜானகி” உம்”
”எதிர்வீட்டிலே முன் ரூமிலே இருந்தான் பாரு அந்தப் பையன் அவன் காலி பண்ணிட்டான் போலிருக்கு.. அது தான் ஜன்னல் சாத்திக் கெடக்கு”.
உங்களுக்கு என்ன தெரியும் ? ஆபிஸ்தான் தெரியும் அங்கே பையனுமில்லே, குட்டியுமில்லே எப்பவும் அந்த ஜன்னல் சாத்தி தான் கெடக்கு.”
ஐயோ! இவளும் ஒரு குழந்தைதானா?”
சுவருக்கு நேரே திரும்பி இருந்த ஐயர் சட்டையைக் கழட்டும் போது கண்களில் கரித்து நின்ற கண்ணீரைச் சட்டைக்குள்ளேயே துடைத்துக் கொண்டார்..
அவர் காதுகளில் அந்த அனாதைக் குழந்தையின் குரல் ஓலித்தது.
உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றி ஸார், ரொம்ப நன்றி.”
– 1963 – தாமரை இதழுக்காக எழுதிய கதை.
சிறுகதை உலகில் தனக்கென்று தனியிடத்தைப் பிடித்துக் கொண்டவர் ஜெயகாந்தன்.அலங்கார வார்த்தைகள் இல்லாமல் சமூக அவலங்களை சுட்டிக் காட்டும் அவரது கதைகளை இளம் எழுத்தாளர்கள் அவசியம் படிக்க வேண்டும்…