கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 14, 2021
பார்வையிட்டோர்: 5,305 
 
 

(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சுள்ளிக் கத்தையை ‘மளுக் மளுக்’ கென்று முறித்து வைத்து ஊதாங் குழலினால் ‘சுர் ‘ரென்று அடுப்பை ஊதி விட்டாள் செல்லி. அடுப்பின் மீது இருந்த சோற்றுப் பானையில் அரிசி ‘தள தள’வென்று கொதிக்க ஆரம்பித்தது. குடிசையின் மூலையில் முடங்கிக் கிடந்தான் துரை என்கிற அவள் மூத்த மகன். இளைய பையன் கதிர்வேலு மட்டும் மிகவும் விழிப்பாகத் தாயின் எதிரில் சோற்றுக் கிண்ணத் துடன் சாப்பாட்டுக்காகக் காத்திருந்தான்.

செல்லி சோற்றை வடித்து நிமிர்த்தியதும் பக்கத்தில் இருந்த அகலமான சட்டியில் அதைக் கொட்டினாள். தும்பைப் பூவைப் போல சோறு ‘ பல பல ‘ வென்று அதில் கொட்டியது.

“அம்மா! பசிக்குது” என்றான் கதிர்வேலு.

“பசிக்குதா? பசிக்கும் பசிக்கும். இரண்டணா வடை யையும் அண்ணனுக்குக் கொடுக்காம துண்ணே பாரு. பசிக்கும்டா பயமவனே, என்னத்தைக் கடிச்சிப்பே சோத்துக்கு?”

“ஏன் கொழம்பு வக்கலை?” கதிர்வேலு அதிகாரத் துடன் கேட்டான் தாயைப் பார்த்து.

“கேப்பேடா! ஏன் கேக்க மாட்டே? உங்க அப்பன் வச்சுட்டுப் போனான் பாரு வீடும், காணியும் ! நீ கேக்க மாட்டே ! சீ…. எழுந்திருச்சிப் போயி ஓரணாவுக்கு ஒடச்ச கடலே, பச்சை மிளகா வாங்கிட்டு வா, போ . தொவையல் அரெச்சு தண்ணி ஊத்திச் சோறு போடுறேன்.” சுருக்குப் பையை அவிழ்த்து வெற்றிலை, புகையிலைச் சருகுடன் உறவாடிக்கொண்டு முடங்கிக் கிடந்த ஓரணாவை எடுத்துக் கதிர்வேலுவிடம் கொடுத்தாள் செல்லி.

கதிர்வேலு கடைக்கு ஓடியவுடன் செல்லி துரை படுத் திருந்த இடத்துக்குச் சென்று, அவன் அருகில் உட்கார்ந் தாள். பிறகு மெதுவான குரலில், “ராசா , எழுந்திரு! சோறு திங்க வாடா கண்ணு” என்று கூப்பிட்டாள்.

துரைக்குத் தாயை ஏறிட்டுப் பார்க்கவே பிடிக்கவில்லை. அவள் தன்னை ஒப்புக்காக ‘ராசா, கண்ணு’ என்றெல்லாம் அழைப்பதாக நினைத்தான். பிறந்த சில நாட்களில் நோயாளி ஆகிவிட்ட அவனை எல்லோரும் வெறுக்கிறார்கள் என்பது அவன் தீர்மானம்.

“மொண்டிப் பையன்டோய் …!” துரைக்குப் பெயரே அதுதான். காலும், கையும் கோணிக்கொண்டு, சுரைக் காய் வயிறும், வற்றிய முகமுமாக அவன் குடிசை மூலையில் பதுங்கியே தன் நாட்களை விரட்டிக் கொண்டிருந்தான்.

செல்லி அவனுக்காக அழுது தீர்த்து ஓய்ந்து விட்டாள். ‘அப்பன் ஒழுங்கானவனாக இருந்தால் தானே பிறந்தது சரியாக இருக்கும்? அவன் கெட்டலைஞ்சவன் தானே’ என்று இறந்துபோன கணவனை ஓயாமல் சபித்துக்கொண்டே இருந்தாள் அவள். வாழைக் குருத்துப்போல் தளதள வென்று இருக்கும் கதிர்வேலுவைப் பார்க்கும் போதெல்லாம் அவள் பெருமையுடன் தன்னையே பார்த்துக்கொண்டாள்.

ஆனால், மொண்டிப் பையன் துரையின் இதயம் தங்கமாகவும், ராசாப்பையன் கதிர்வேலுவின் இதயம் வேம்பாகவும் இருந்த விந்தையை அவள் நினைத்து நினைத்து வியந்தாள்.

துரை முக்கி முனகிக்கொண்டே எழுந்திருந்து அடுப் படிக்கு நொண்டிக்கொண்டே வந்து உட்கார்ந்தான். செல்லி, குடிசைக் கூரையில் ஒளித்து வைத்திருந்த பொட்டலத்தை அவிழ்த்து இரண்டு வடைகளை அவன் முன்பு வைத்துவிட்டு, கிண்ணத்தில் சோறு போட்டு தண்ணீர் ஊற்றினாள்.

துரை இரண்டு வாய் அள்ளிச் சாப்பிட்டிருக்க மாட்டான். கதிர்வேலு கடையிலிருந்து ஓடி வந்தான். துரை ஒவ்வொரு வாய் சோற்றுக்கும், வடையைக் கடித்துக் கொண்டு சாப்பிடுவதைக் கவனித்தான். அவனுக்கு ஆத் திரம் பற்றிக் கொண்டு வந்தது.

“யம்மோவ் …… உனக்கு அவன் தானே ஒசத்தியாப் பூட்டான்?” என்று செல்லியைப் பார்த்துக் கத்தினான்.

“நீ மத்தியானம் துண்ணலையாடா நாலு வடை? இதுக்குப் போய்க் கத்துறயே?” என்று செல்லி கேட்கவும், “ஆமாமாம்…… இந்த மொண்டிப்பய தானே உனக்குச் சம்பாதிச்சி வாரியாறான்? நான் எண்ணெய்க் கடையிலே தினம் நாலு அணா சம்பாதிக்கிறது ஒனக்கு தெரியுதா?” என்று பதிலுக்குக் கேட்டான் கதிர்வேலு.

துரைக்கு என்ன தோன்றியதோ? கலத்துச் சோற்றை நகர்த்தி விட்டுப் போய்ப் படுத்தவன் தான். அப்புறம் அவன் ஒரு வாரம் வரையில் கண் விழிக்கவில்லை. உலகத் தவரின் சுடு சொற்களுக்கு ஆளாகாமல் அவன் கண்ணை மூடிக்கொண்ட போது, செல்லி அலறிய அலறல் அந்த வட்டாரத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.

அதன் பிறகு கதிர்வேலுவிடம் அவள் பாசம் படிப் படியாக வற்ற ஆரம்பித்தது.

“பய மவனே ! கூடப் பொறந்தவனை முழுங்கிப் போட்டியேடா பாவி” என்று அடிக்கடி கூறி அவனை ஏசிக் கொண்டிருந்தாள். மொண்டிப் பையனாக இருந்தாலும் துரைக்கு அவளிடம் அலாதியான பாசம் இருந்தது. எத்தனை நாட்கள் தாயிடம், தன் கை கால்கள் சரியாகி விட்டால் மூட்டை தூக்கியாவது அவளைக் காப்பாற்றி விடுவதாகக் கூறி இருக்கிறான்!

கதிர் வேலுவின் குணம் அப்படி அல்ல. எண்ணெய்க் கடையில் சம்பாதிக்கும் காசை நாளடைவில் செலவழித்து விட்டு, வெறுங்கையுடன் வந்து வீட்டில் நிற்பான். சில நாட்களில் வேலைக்கே போகமாட்டான்.

செல்லிக்கும் அந்த வாழ்க்கை அலுத்து வந்தது. காலையில் எழுந்தவுடன் ஐயர் வீட்டுக்குப் போய் சாணம் தெளிப்பதிலிருந்து, பத்து மணிக்கு அவர்கள் வீட்டுக் குழந்தையைப் பள்ளியில் கொண்டுவிட்டு வரும் வரை இடுப்பு நிமிர வேலை இருந்துகொண்டே இருக்கும். பகல் வேளைகளில் அரசமரத்தடியில் ஒரே விதமான வம்புப் பேச்சுகள். மறுபடியும் பகல் இரண்டு மணியிலிருந்து மாலை ஐந்துவரை ஐயர் வீட்டு வேலை; இரவு இருக்கவே இருக்கிறது தாய்க்கும் மகனுக்கும் நடக்கும் தினப்படி சண்டை சச்சரவு.

“அடியே செல்லி! நீ ரொம்பக் கெட்டுப் பூட்டே. அந்தக் கொயந்தையைக் கண்டா ஆவல்லே, உனக்கு” என்று செல்லியின் நாத்தி, கதிர்வேலுவுக்காகப் பரிந்து கொண்டு வந்தாள்.

“தே….. நீ சும்மாக் கெட? உனக்கென்னா தெரியும்? அவன் காலணா கொடுத்து மாசம் ஒண்ணாவுது. தண்டச் சோறு போட அவன் அப்பன் சேத்து வச்சுட்டா போயி ருக்கான்?”

“என்னடி சொன்னே மூதேவி, எங்க அண்ணனைப் பத்தி?” என்று நாத்தி பிலு பிலுவென்று செல்லியைப் பிடித்துக் கொண்டாள்.

சண்டை ஓய்ந்ததும் கதிர்வேலுவை அத்தைக்காரி தன் குடிசைக்கு இழுத்துக் கொண்டு போய்விட்டாள். அவள் பிள்ளையில்லாதவள். அண்ணன் மகனைப் பார்த்து ஆளாக்கி ஆதரவு தேடிக்கொள்ள முனைந்திருக்கலாம்.

தன்னந் தனியாகக் குடிசையில் உட்கார்ந்திருந்தாள் செல்லி. அன்று அடுப்பு பற்ற வைக்கவில்லை அவள். துக்கம் தீருமட்டும் அழுது தீர்த்தாள். கடைசியாகப் பானைத் தண்ணியை மொண்டு குடித்துவிட்டு குடிசைக்கு வெளியே வந்த போது வானத்தில் கிருஷ்ணபட்சத்து ஆறாம் நாள் நிலவு பூத்துவிட்டது. அந்த வட்டாரத்து மக்கள் எல்லோரும் தத்தம் குடிசை வாயிலில் படுத்து விட்டார்கள். செல்லி முழங்காலைக் கட்டியபடி வெளியே உட்கார்ந்திருந்தாள்.

சற்றுத் தொலைவில் இருந்த வேப்பமரத்தின் அடியில் முக்காடிட்ட உருவம் ஒன்று நின்றிருப்பதைக் கண்ட செல்லி அப்படி யொன்றும் பயந்து விடவில்லை. எலும்பும் தோலுமாக இருந்த தன் கணவனைப் பார்த்துப் பார்த்து உறுதி அடைந்தவள் அவள். மறுபடியும் உற்றுப் பார்த்தாள்.

அந்த உருவத்தை . உருவம் நகர்ந்து நகர்ந்து வந்தது.

“இந்தாப்பா ! இங்கே வா ……. நீ யாரு?” என்று கேட்டாள் செல்லி.

அந்த ஆள் பேசாமல் நின்றான்.

“நீ யாருன்னு கேக்கறேனே ! மரமாட்டம் நிக்கறியே, சொல்லேம்ப்பா.”

நான் ராசப்பன்” என்று முணு முணுத்தான் அவன். செல்லி சிரித்து விட்டாள்.

“இந்தாய்யா ! நான் ராசப்பன்னு சொல்லிட்டா எல்லாம் புரிஞ்சிடுமா?”

“கொஞ்சம் சோறு இருந்தாப் போடேன்”

கேட்டதற்குப் பதில் கூறாமல் வேறு ஏதோ கேட்டு வைத்தான் அவன். செல்லி குடிசைக்குள் அணைந்து கிடந்த காடா விளக்கை ஏற்றினாள். பழையதுப் பானையில் கை விட்டுப் பார்த்தாள். சோறு ‘நொச நொச’ வென்று இருந்தது.

உப்பிட்டுப் பிசைந்து அவன் கையில் உருட்டி உருட்டிப் போட்டாள். கடித்துக் கொள்ள கருவாட்டுத் துண்டுதான்.

“சோறு என்னவோ வாடை வீசுது. கண்டம் நல்லாருக்குது பொண்ணே …” என்றான் ராசப்பன். செல்லி அவனை முறைத்துப் பார்த்தாள்.

“பொண்ணாமே பொண்ணு! இன்னும் கொஞ்சம் போனால் கண்ணும்பான் …”

இருவரும் வெளியே வந்தார்கள். மங்கிய ஒளியில் செல்லி அவனை நன்றாகக் கவனித்தாள். கரணை கரணையாக வலுவேறிய கைகால்கள். புசுபுசுவென்று வளர்ந்திருந்த தாடி மீசை. ஆள் நன்றாக இருந்தான்.

அவன் செல்லியைக் கவனித்தான்.

அள்ளிச் செருகிட்ட கருங் கூந்தல் முத்துப்பல் வரிசை மின்ன வாளிப்பான பெண்ணாகத்தான் இருந்தாள் அவள். கழுத்து வெறிச்சென்று கிடந்தது.

தாலிக் கயிறு! அதைத்தான் காணோம். அவனுக்குப், புரிந்து விட்டது அவள் விதவை என்று.

வேப்பமரம் தாலாட்டுப் பாட, ராசப்பன் மேல் துண்டை விரித்துப் படுத்தான். கனவிலே ஒரே செல்லி மயம் தான்!

கோழி கூவும் போது செல்லி கண் விழித்தாள். விழித்தவள் வேப்பமரத்தடியைத் திரும்பிப் பார்த்தாள். ராசப்பன் மேல் துண்டை உதறி முண்டாசு கட்டிக்கொண்டிருந்தான். புது ஆள் ஒருவன் வந்திருப்பதை வட்டாரத்தினர் அனைவரும் பார்த்தார்கள். யாரோ பிழைக்க வந்தவன் என்று அவரவர் வழியே போய்விட்டார்கள்.

செல்லி, ஐயர் வீட்டுக்குப் போய் விட்டாள். கதிர்வேலு எண்ணெய்க் கடைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தான்.

“ஏண்டா ! பகல் சோத்துக்கு வூட்டுக்கு வருவியா. இல்லை, உங்க அத்தை வூட்டிலே போய்ப் பூந்துக்குவியா?” என்று கேட்டாள் செல்லி.

“ஆமாமாம்……. ஒன் வீட்டிலே எனக்கென்ன வேலை இனிமே? போ …….. போ…..” என்று கூறிவிட்டுப் போய் விட்டான் கதிர்வேலு.

ஒரு விநாடி செல்லி அதிர்ந்து தான் போனாள். ‘பெத்த பிள்ளையே எப்படிப் பேசுது பாரு’ என்று நினைத்துப் பெருமூச்செறிந்தவாறு, நடையைக் கட்டினாள் அவள்.

பகல் பன்னிரண்டு மணி வரையிலும் அவளுக்கு ஐயர் வீட்டிலே வேலை இருந்தது.

தினம் பகலில் செல்லி அடுப்பு பற்ற வைப்பதில்லை. அன்று ஐயர் அம்மாளிடம் ஒரு ரூபாய் கடன் வாங்கி, அரிசி, புளி, உப்பு வாங்கி வந்திருந்தாள். ஐந்து பலம் உருளைக் கிழங்கு வேறு.

கால்படி அரிசியைக் கழுவி அரித்துப் பானையில் இட்டு உலை ஏற்றிவிட்டு, உருளைக்கிழங்கை வேக வைத்து இறக் கினாள். அம்மியில் மிளகாய்க் கூட்டு அரைத்துக் கிழங்கில் பிசிறி மொரு மொருவென்று எண்ணெய் ஊற்றி வதக்கினாள். பூண்டு ரசம் வேறு கமகமவென்று மூக்கைத் துளைத்தது.

சமையல் முடிந்ததும் செல்லி தெருவில் சென்று பார்த்தாள்.

கதிர்வேலு வந்தான்.

“அம்மா! சோறாக்கி வச்சிட்டியா?” என்று ஆவலுடன் கேட்டான் பையன்.

“உம்… உம்… தொரக்கி சோறு வேணுமாமே சோறு! நேத்தி போய் உன் அத்தைகிட்டே பூந்துக்கினியேடா பயலே. அங்கேயே போடா…” சொல்லிக்கொண்டே கீழே கிடந்த குச்சி ஒன்றை எடுத்தாள் அவனை அடிக்க. கதிர்வேலு கண்ணைக் கசக்கிக் கொண்டு அத்தை வீட்டுக்குள் நுழைந்தான்.

தொலைவிலே முண்டாசு கட்டிய உருவம் வந்து கொண்டிருந்தது. அவன் தான், ராசப்பன்தான் என்று முணுமுணுத்தாள் செல்லி. ராசப்பன் வந்துவிட்டான். கந்தல் துணியில் வேர்க்கடலை, வாழை நாரில் கோத்த ஒரு சீப்பு வாழைப் பழங்கள், அப்புறம் வெற்றிலை, புகையிலை எல்லாம் வாங்கி வந்திருந்தான்.

“என்னாத்துக்கு இம்புட்டு?” என்று கேட்டாள் செல்லி.

“ஒனக்குத்தான் செல்லி” என்று சிரித்தான் ராசப்பன்.

“இந்தா ! இப்படி இருந்தியானா இங்கே உன்னைக் கட்டையாலே அடிப்பாங்க -” என்று கூறிச் சிரித்தாள் அவள்.

அவர்களின் நட்பு வளர்ந்தது. ராசப்பன் வந்து மூன்று அமாவாசைகள் போய் பௌர்ணமி வந்து கொண்டிருந்தது. அண்டை அசலில் கசமசவென்று பேசிக் கொண்டார்கள். சின்னச் சின்ன குழந்தைகள் கூட செல்லியை ஒரு தினுசாகப் பார்த்தன.

அன்று ராசப்பன் மாம்பழம் வாங்கி வந்தான். செல்லிக்கு அதைப் பார்த்ததும் நொண்டிப் பையன் நினைவு வந்தது. ஒரு நாள் மாம்பழத்துக்காக எத்தனை தரம் அவன் அழுதிருக்கிறான்? அப்படி வாங்கிக் கொடுத்தாலும் இந்தக் கதிர்வேலுப் பையன் அவனைத் திங்கவிட்டானா?

“ஏன்னா! அப்படிப் பாக்குறே பயத்தை!” என்று கேட்டான் ராசப்பன்.

“ஒண்ணுமில்லே!”

“சும்மாச் சொல்லு…..”

“இறந்து விட்டானே எம் பையன் ஒருத்தன், அவனை நெனச்சுக் கிட்டேன்-” செல்லி கண்ணீரைச் சுண்டி எறிந்துவிட்டு எழுந்து விளக்கேற்றினாள்.

“இப்பத்தான் இன்னொருத்தன் இருக்கிறானே, அவனைக் கூப்பிட்டு பயம் ஒன்னு கொடேன், திங்கறான்.”

“அதுவா? நீ வந்த அப்புறம் அது இந்த வூட்டுலே காலடி எடுத்து வச்சுப் பாத்தியா நீ?….”

“ஏன்?”

“ஏனா? அவன் கேக்குறான் கண்டபடி என்னை …”

“கேக்காம இருப்பானா பின்னே ! பேசாமே நீ இந்த எடத்தை விட்டுக் கிளம்பு ……”

செல்லிக்கும் அது தேவலை என்றுதான் பட்டது. நாலு பேர் பழிக்க , பெற்ற மகன் தூற்ற அங்கிருப்பதைவிட, வெளியில் போய்விடுவதும் நல்லதுதானே?

அன்றிரவு நிலவு உச்சியில் வரும்போது ராசப்பன் பின்னால் செல்லி, புடவையைச் சுருட்டிக்கொண்டு கிளம்பி விட்டாள். வேப்ப மரத்து நிழலில் படுத்திருந்த கதிர்வேலு வின் காலடியில் சிறிது நின்றாள் அவள். பத்து மாதம் சுமந்து பெற்று பத்து வயசு வளர்த்தவள் ஆயிற்றே! சொட்டு சொட்டு என்று கண்ணீர்த் துளிகள் அவன் மேல் விழுந்தன.

“கதிர்வேலு! நீ மாத்திரம் என்னை வெறுக்காம இருந்தியானா நான் ஏண்டா போப் போறேன்…”

இவ்விதம் மனம் அலற , ராசப்பன் பின்னாடி நடந்து விட்டாள் அவள்.

அடுத்த நாள் காலையில் செல்லி ஓடிவிட்ட செய்தியைக் கதிர்வேலு அமைதியுடன் தாங்கிக் கொண்டான். அவள் அத்தைக்காரி மட்டும் ஒரு பாட்டம் இரைந்து விட்டு ஓய்ந் தாள்.

காலச் சக்கரத்தின் சுழற்சியில் அகப்பட்டு நசுங்கும் மனிதர்களில் இவர்கள் மட்டும் எம்மாத்திரம்? வாலிபனான ராசப்பனுக்கும், நடுத்தர வயதைக் கடந்த செல்லிக்கும் சில வருஷங்களுக்கு அப்புறம் உடல், மனோ நிலை எதிலும் ஒத்துக் கொள்ள வில்லை. அள்ளிச் செருகிட்ட கூந்தல் செம்பட்டையாய்க் காற்றில் பறக்க, முன் பற்கள் இரண்டு தேய்ந்து விழுந்து விட, செல்லி கூனிக் குறுகி வண்டலூர் சாலை ஓரத்தில் இருந்த குடிசை வாசலில் உட்கார்ந்திருந் தாள். கால்கள் சூம்பிக் கிடந்தன. மூங்கில் குச்சிகளைப் போல் கைகள் சதைப் பிடிப்பற்றுக் காணப்பட்டன.

இப்போது அவள் உள்ளத்தில் ஓயாமல் ஒரு குரல் ஒலித்துக் கொண்டிருந்தது.

‘கதிர்வேலு!’ பார்த்து எத்தனை வருஷங்கள் ஆயின? பத்து வருஷங்கள் ! எப்படி இருக்கிறானோ? உடற் கட்டும் வனப்பும் கொண்ட வாலிபன் ஒருவனைக் கற்பனை செய்து பார்த்தாள் செல்லி. கதிர்வேலு எங்காவது வேலையில் இருப்பான். கல்யாணம் கூடக் கட்டிப்பான். அப்புறம் குஞ்சும் குளுவானுமாகக் குழந்தைகள் பிறக்கும்.

அவளுடைய பேரப் பிள்ளைகள், ‘ஆயா’ என்று அவள் தோள்களிலும், மடியிலும் விழுந்து புரள வேண்டிய குழந்தைகள்.

ஆனால், இந்த அறிவு, சிந்திக்கும் திறன் அப்பொழுது எங்கே போயிற்று? உடம்பிலே தெம்பிருந்தது; உலகத்தை எதிர்த்துக் கொண்டு புறப்பட்டு விட்டாள் அன்று.

‘அவன் மேலும் தான் தப்பு. ஒரு நாளாவது அவன் என்னை அம்மான்னு ஆசையாக் கூப்பிட்டிருப்பானா? கூடப் பொறந்தவனைக் காணாமக் கரிச்சுக் கொட்டினான். அவன் போனப்புறம் என்னைக் கண்டா ஆகலை. அன்பு ஒட்ட வேண்டிய வயசிலே ஒட்டவில்லை.’

வாயில் இருந்த வெற்றிலைச் சக்கையைத் தூவென்று துப்பிவிட்டுச் சாலையைப் பார்த்தாள்.

சாலை ஓரம் ஜீப்பு வண்டி ஒன்று வந்து நின்றது. அவள் வேலை செய்து வந்த ஐயரும் அந்த வீட்டு அம்மாளும் வண்டியை விட்டுக் கீழே இறங்கி வந்தார்கள்.

எதிர்பாராத சந்திப்புதான்!

“செல்லியாடி?” என்று கேட்டாள் அந்த அம்மாள்.

“நீங்களா அம்மா?” என்று குமுறிக் குமுறி அழுதாள் செல்லி.

பத்து வருஷங்களில் தேக்கி வைத்திருந்த துயரமனைத் தும் கரைந்து போவது போல் கண்ணீர் பெருகியது.

“தே …..ஏன் அழுவறே? வந்தவங்களோட நாலு பேச்சுப் பேசாம ….” என்று அங்கிருந்தவர்கள் அதட்டினார்கள்.

“யம்மா , ராஜாமணி எப்படி இருக்குது? பெரிய ஆம்புளை ஆயிடுச்சா?” என்று கேட்டாள் செல்லி அழுகையை நிறுத்தியவாறு.

“பெரியவனாகத்தான் ஆயிருக்கான். பம்பாயிலே படிக்கிறான். லீவுக்கு வருவான் செல்லி. நீ ஏன் இப்படி ஆயிட்டே ?”

செல்லி விரக்தியாகச் சிரித்தாள். கூனிக் குறுகிக் கொண்டு பக்கத்தில் கிடந்த மூங்கில் கம்பினால் முருங்கைக் கிளைகளைத் தட்டித் தட்டிக் காய் பறித்தாள்.

“ஐயருக்கு சாம்பார் வச்சுப் போடுயம்மாவ் ….” என்று கட்டு முருங்கைக் காய்களை அம்மாளிடம் நீட்டினாள்..

“செல்லி! உன் மகன் பெரிய ஆளா வளந்துட்டான். மாசம் நாப்பது ஐம்பது சம்பாதிக்கறான். சோடா கலர் வண்டி ஓட்டுகிறான் ……”

செல்லியின் பார்வை அந்தப் பெரிய சாலையை வெறித் துப் பார்த்த து.

“அவனை வரச் சொல்லவா?” என்று கேட்டாள் அம்மாள்.

“வாணாம் அம்மா ……..”

ஜீப் போய் விட்டது. அந்த அம்மாளிடம் வேண்டாம் என்று சொன்னாலும் அவளுக்குள் ஒரு நப்பாசை தோன்றி விட்டது. ‘நான் இருக்கிற இடம் இப்போ தெரிஞ்சிருக்கும். கதிர்வேலு வருவான்?’ தினம் இப்படிச் சொல்லிக்கொண்டு குடிசை வாசலில் கிழக்கே சூரியன் உதித்ததிலிருந்து, மேற்கே சென்று மறையும் வரையில் உட்கார்ந்து கிடப்பாள் செல்லி.

ராசப்பனைக் கவனிக்க இப்பொழுது வேறொருத்தி வந்து விட்டாள். செல்லி செய்த ஏற்பாடுதான் அது. ‘நான் பாட்டுக்கு குந்தி இருப்பேன். இனிமே உன் சங்காத்தமே வேணாம்…’ என்று ராசப்பனிடம் கூறி, அந்தப் புதியவளி டம் அவனை ஒப்படைத்து விட்டாள். ராசப்பன் ஏதோ ஒரு நியாயத்துக்கும், ஆணைக்கும் கட்டுப்பட்டவனைப் போல் செல்லியை அனுதாபத்துடன் கவனித்துக் கொண் டான். அறத்துக்குப் புறம்பாக அமைந்துவிட்ட அவர்கள் வாழ்க்கையில், மனிதப் பண்புகள் காணப்பட்டன.

ஒரு நாள் சாலையில் வந்து நின்ற பஸ்ஸிலிருந்து ஒரு வாலிபன் இறங்கினான். கையிலே பெரிய மூட்டை : கூர்ந்து கவனித்துக் கொண்டே வந்தவன், கூனிக் குறுகி உட்கார்ந்திருந்த செல்லியைக் கவனித்து விட்டான். பத்து வருஷங்களின் பிரிவு அவன் மனத்திலிருந்து தாயின் முகத்தை அடியோடு அழித்து விடவில்லை.

“யம்மோவ்” என்று அலறியவன் அப்படியே அவளைக் கட்டிக்கொண்டு கதறினான். அவன் ஒவ்வொரு நரம்பிலும் ஓடும் ரத்தம் பொங்கித் தணிந்தது. தசை நார்கள் கிடு கிடு வென்று நடுங்கின. என்னதான் இருந்தாலும், அவள் அவனுடைய தாய் அல்லவா?

“கண்ணு! என் ராசா!” என்று கூச்சல் போட்ட செல்லி அவன் முகத்தைத் தடவித் தடவிப் பார்த்தாள் ; வேதனை பொங்கச் சிரித்தாள் ; பைத்தியம் போல் குதித் தாள். கதிர்வேலு மூட்டையைப் பிரித்தான். புளியஞ்சோறு, மசால்வடை, லட்டு, பூந்தி என்று பலகாரங்களில் நாகரிக மும், அநாகரிகமும் கலந்த மூட்டை அது.

“துண்ணு அம்மா… உனக்குத்தாம்மா……”

“நீ துண்ணுடா ராசா?”

“நீ துண்ணு அம்மா …”

தாயும், மகனும் உண்டார்கள். மகனுக்குக் குருமாக் குழம்பும், புலவும் ஆக்கிப் படைத்தாள் அன்னை. கண்ணீர் பிழிய விடை கொடுத்து அனுப்பினாள். அவனைத் தன்னு டன் வைத்துக்கொள்ள அவளுக்கு ஆசைதான்.

“அவனை ஒருத்தி கட்டிக்கோணும். அவன் குடியும் குடித்தனமும் ஆகோணும். இங்கே இருந்தா ஒழுங்கான வாழ்க்கை அமையுமா?”

கதிர்வேலு கிளம்பி விட்டான்.

அதன் பிறகு செல்லிக்கு ராசப்பனைக் கண்டால் வெறுப்பு வளர்ந்தது. ‘என்னையும், எம் புள்ளையையும் பிரிச்ச பாவிப்பய’ என்று அவனை ஏசினாள்.

அவள் ஏச்சுக்களைப் பொறுத்துக் கொண்டான் ராசப்பன்.

“நான் அங்கே போயி அவனைப் பாக்கணும்” என்று ஆசைப்பட்டாள் அவள்.

“தே …. பைத்தியம் ! சும்மாக்கிட ! கல்லைப் போட்டு உன் மண்டையை நசுக்கிப் போடுவாங்க…” என்றான் ராசப்பன்.

“எம்மவன் அவங்களைச் சும்மா விடமாட்டான்” என்று சவால் விடுத்தாள் அவள்.

“அதையும் தான் பாக்கப் போறியே…” என்று வெறுப்புடன் கூறிவிட்டு வேலைக்குப் போய் விட்டான் ராசப்பன்.

அவன் சென்றதும் செல்லி அண்டை அயல் மூலமாகப் பணம் கொடுத்து பழங்கள் வாங்கினாள். பலகாரங்கள் வாங் கினாள். மூட்டை கட்டிக் கொண்டு பஸ் ஏறி, பழைய ஊருக்கு வந்து சேர்ந்தாள்.

அங்கேதான் எத்தனை மாறுதல்? வேம்புலி அம்மன் கோவில் மண்டபத்தில் உட்கார்ந்து, தெரிந்தவர்கள் யாராவது வருகிறார்களா என்று பார்த்தாள். சொல்லி வைத்தாற்போல் அவள் நாத்திதான் வந்தாள்.

“ம்மே பூங்காவனம்!” என்று அழைத்தாள் செல்லி. அது அவள் செவியில் பேய்க் குரலாக ஒலித்திருக்க வேண்டும். விக்கித்து மண்டபத்தைப் பார்த்தாள் பூங்கா வனம். அப்புறம் ஊரே கூடி விட்டது அவளைப் பார்க்க.

“எங்கே வந்தே?” என்று எல்லோரும் கேட்டார்கள்.

“எம் மவனைப் பார்க்க” என்றாள் செல்லி.

“அடி சக்கை ! இவ மகனாமே?…”

“ஏன்? அவன் என் மகன் இல்லையா? நான் பத்து மாசம் சுமந்து பெத்த மகன் தானே?”

“பெத்தே ! பெருமையைப் பாரு பெருமையை ! ஓடு காலிக்குப் பெருமை வேறே!”

சோடா வண்டி இழுத்துக்கொண்டு வந்த கதிர்வேலு கூட்டத்தைப் பார்த்து வண்டியை நிறுத்தி விட்டு வந்தான்.

“வாடா அப்பா! உன் ஆத்தாக்காரி வந்திருக்கா பாரு , உறவு கொண்டாடிக்கிட்டு” என்று வரவேற்றாள் அத்தைக்காரி.

“கண்ணு! என் ராசா , இங்கே வாடா மவனே!” என்று அழைத்தாள் செல்லி.

“நீ ஏன் இங்கே வந்தே? உன்னை யார் கூப்பிட்டாங்க?” என்று கத்தினான் கதிர்வேலு.

அன்று ‘யம்மோவ்’ என்று அலறியவன்தான் இன்று இப்படிப் பேசினான்.

“ஏண்டா கண்ணு அப்படிக் கேக்குறே? உன்னைப் பார்க்கத்தாண்டா வந்தேன்.”

“பாக்க வந்தியா? பாத்தாச்சுல்லே, போ… பின்னே …”

கதிர்வேலு எரிந்து விழுந்தான். செல்லி ஏறிட்டுப் பார்த்தாள் அவனை.

“யப்போவ் … இந்த மண்டபத்துலே பொங்கித் தின்னுக்கிட்டு விழுந்து கிடக்கிறேண்டா மவனே. சாகிற காலத்துலே உம் மூஞ்சியைப் பாத்துக்கிட்டே சாவ ஆசையா இருக்குடா ………”

“என்ன சொன்னே? உன் வாடை அடிச்சாக்கூட எனக்கு யாரும் பொண் தரமாட்டாங்க. பேசாம நடையைக் கட்டு ……..”

கூடியிருந்தவர்கள் கொல்லென்று சிரித்தார்கள்.

அன்று தனிமையில் தாயை அன்புடன் அரவணைத்த கதிர்வேலுவுக்கும், இந்தக் கதிர்வேலுவுக்கும் எத்தனை வேற்றுமை!

வானம் இருண்டு கிடந்தது. செல்லி அந்தப் பெரிய தெற்குச் சாலையில் நடந்து சென்றாள். பாவம், அப்புறம் அந்த அன்னை என்ன ஆனாளோ?

– சிறுகதைக் கோவை (பதின்மூன்று சிறந்த எழுத்தாளர்களின் உயர்ந்த ஓவியங்கள்), முதற்பதிப்பு: மே 1961, எஸ்.ஆர்.சுப்பிரமணிய பிள்ளை பதிப்பகம், திருநெல்வேலி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *