அன்னிக்கி வெள்ளிக்கிழமை. கிளம்பும்போதே அம்மா சொல்லி அனுப்பினாள்.
“வெயிட் பண்ற நேரத்துல ஆதித்திய ஹிருதயம் சொல்லிண்டு இரு! படபடப்பு இல்லாம இருக்கும்!”
பன்னிரெண்டு மணி இண்டர்வியூவுக்கு பத்தேகால் மணிக்கே ஹோட்டல் கன்னிமரா போய்ச்சேர்ந்துட்டேன். லவுஞ்சிலேயே குளிரிற்று. 49 கிலோ உடபில் ஒட்டின பாண்ட்டும் இன் செய்யப்பட்ட அந்த க்ரே கலர் சட்டை – பையின் ஓரத்தில் லேசாகத்தெரியும் பால் பாயிண்ட் இன்க் கறை – முழங்கால் வரை நீளும் சாக்ஸும் பாட்டா ஷூவுமாய்க்கிளம்பியிருந்தேன்.
“என்ன எப்பாபாரு இந்த கிரே கலர் சட்டை, தெவசமாட்டமா? போன மாசம் சாரங்க்புரில் வாங்கினமே அந்த எல்லிட்ரோப் சட்டை என்னாச்சுடா?”
“இல்லம்மா அது லக் இல்ல! போன வாரம் அதப்போட்டுண்டுதான் போனேன். பார்ட்னர் கிட்ட செம்ம திட்டு!”
“போடா! அவர் கேட்ட கெள்விக்கு முழிச்சுட்டு சட்டை மேல் பழியா?”
இன்னும் பேசினால் பழைய வண்டவாளங்கள்ளாம் எடுத்து விடுவாள். சட்டென்று கிளம்பி, இதோ கன்னிமரா.
ஒண்ணரை மணி நேரம் தேவுடு காத்து, இண்டர்வியூவில் நுழைந்தால் முதல் கேள்வியே கால் முட்டியில் ஜெல்லி தடவின மாதிரி தொளதொளக்க வைத்தது. இண்டர்வியூவில் நான் தேறினதும், ஹிந்துஸ்தான் லீவர் சேர்ந்ததும் பின்னாளைய சாகசங்களும் எழுதப்பட்டுவிட்டன. இப்போது சொல்ல வந்தது இந்த முழங்காலில் முட்டிக்கடியில் தொள தொள. அதென்னமோ தெரியவில்லை, முக்கியமான மீட்டிங்கிற்கென்றால் இந்த முட்டி தொள தொள எனக்கு வந்து விடுகிறது. சின்ன வயதில் கோரோஜனையும் பின்னாட்களில் வல்லரை லேகியமும் சாப்பிட்டு தத்தம் ஞாபகசக்தியை வெட்டுக்கத்தி போல கூர்மையாக வைத்திருக்கும் சிலர் என்னிடம் “அப்ப லதா உனக்கு சரி சொல்லும்போது இந்த தொள தொள வரவில்லையா” என்று கேட்பார்கள் என்று எனக்குத்தெரியும். அதற்கான பதிலை என் சுய சரிதத்தில் எழுதலாம் என்று இருக்கிறேன்.
கம்பெனி ப்ரெசெண்டேஷன், கமர்ஷியல் டைரக்டர் மீட்டிங், ஆடிட் ரிபோர்ட்டுக்கு பதில் என்று பல்வேறு முக்கியமான சந்தர்ப்பங்களில் இந்த தொள தொள என்னை விட்டதேயில்லை. ஒரு மாதிரி இதற்கு என்னைத்தயார்படுத்திக்கொண்டு விட்டேன் என்றுதான் சொல்லவேண்டும்.
நான் ஆரம்பித்த சாஃப்ட்வேர் கம்பெனியை விற்கும்போது அதற்கான வேலுயேஷன் மீட்டிங்கில் கூட தொள தொள தான்.
ஏழெட்டு முறை போய் வந்தாயிற்று. முன்பிருந்த வசீகரம் இப்போது இல்லை. நீண்ட விமானப்பயணம் ஆயாசமாகிவிட்ட வயது. பிஸினெஸ் க்ளாஸின் செயற்கைத்தனமான உபசரிப்பு, கொத்தமல்லி போல தட்டில் அரைக்கோனத்தில் படுக்க வைத்த கோல்ஸா சாலட், அளவுக்கு மிஞ்சின காரமாய் வர்ஜின் மேரி, தேங்காய் எண்ணை வாசனை வரும் அந்த சீஸ்…எல்லாம் அலுத்துச்சலித்துவிட்டது. அதனால் விசா கிடைக்காவிட்டாலும் சரிதான் என்னும் விட்டேத்தியான மனப்பாங்கில்தான் இன்று அமெரிக்க விசாவுக்குப்போனேன். வசீகர அனுபவங்கள்…
- “ப்ளேன்ல போகும்போது உனக்கு பெரிய சாக்லெட் வாங்கித்தர்ரேன்!” என்று சத்தியம் செய்த சிங்கிள் மதர்
- “நீ அக்டோபர்ல போனவுடனே எனக்கு மெயில் பண்ணிடு. நா என்னோட டிக்கட்டை ஒஹையோ வழியா ரூட் பண்ணிக்கிறேன். நாம் சின்சினாட்டியில சந்திப்போம்” என்று க்யூவின் அடுத்த ஆளுடன் ப்ரொகிராம் போட்ட அலுமினிய பட்டை பெல்ட் ஆசாமிக்கு விசா மறுப்பு! வருத்தம் இல்லாமல் கோபத்துடன் சிரித்தவாறே வெளியே போனார்.
- எண்பது வயது இருக்கும், தெலுங்கு சாயல் மடிசார் கட்டின பாட்டி பொக்கைப்பல் தெரிய சிரிப்புடன் வெளியே வந்ததும், அமெரிக்கத்தனமாக பாண்ட்டும் பிங்க்கில் மேற்சட்டையும் கறுப்பு கோட்டுமாய்ப்போன எக்ஸிக்யூடிவ் மாது கடுப்புடன் வெளியே வந்ததும் அமெரிக்க விசா வழங்கும் தன்மையின் ஜனநாயகமோ?
- உள்ளே டீவியில் விசா சம்மந்தமான செய்திகலை தமிழிலும் தெலுங்கிலும் போடுகிறார்கள். தமிழில் ஏகப்பட்ட “ல” ள” தவறுகள். பஸ்பர்ட், சட் பண்ணப்பட்டபிண், என்றெல்லாம் அபத்தமான தமிழில் எழுதியவர்கலை கண்டிக்க திராவிட கழகத்துக்கும் சுப வீரபாண்டியனுக்கும் கோரிக்கை வைக்கிறேன்
- எதேச்சையாக சந்தித்து, முகம் முற்றும் பழகாமல் சந்தேகத்தோடு ஒருவரை ஒருவர் பார்த்து பீன் அவர் விசா முடித்து, நான் க்யூவில் நிற்கும்போது “ஜேஆர்தானே, ஸ்ரிதரந்தானே” என்று ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு அவர் என் ஆட்காடி விரலலியும் நான் அவர் ஆட்காட்டி மற்றும் இன்ன்ரு விரலையும் நிரடின கைகுலுக்கல்லில் எரிச்சலாகை நடுவில் மாட்டிக்கொண்ட அந்த ஸ்லீவ்லெச்ச் பெண்மணி கண்ணில் காட்டிய நெருப்பில் ஸ்ரீதரனுக்கு கை சுட்டிருக்க வேண்டும்