அந்தக் காலத்தில்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 21, 2020
பார்வையிட்டோர்: 4,156 
 
 

சிவராமன் எனக்குத் தூரத்து உறவினர். என்னைவிட எட்டு வயது பெரியவர். ஒரு விதத்தில் எனக்குச் சித்தப்பா முறை.

பரம்பரை பரம்பரையாக பெரும் செல்வந்தர்களாக இருந்த குடும்பத்தில் பிறந்தவர். அதன் மிடுக்கும் தோரணைகளும் அவரிடம் சிறிது தூக்கலாகவே இருக்கும். தடாலடியான ஆசாமி.

அவர் ஒருமுறை சம்சுதீன் கடையின் பின்புறத்தில் ரகசியமாக நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தபோது அதை நான் பார்த்துவிட்டேன். நான் யாரிடமும் அதை சொல்லிவிடாமல் இருப்பதற்காக, அப்போது தெருவில் தள்ளு வண்டியில் போய்க் கொண்டிருந்த பீம புஷ்டி அல்வாவை எனக்கு சாப்பிட வாங்கிக் கொடுத்தார். அல்வாவுக்குப் பக்கத்தில் புஜங்களை மடக்கியபடி ஒரு வஸ்தாதுவின் போட்டோ நிறுத்தப் பட்டிருந்தது.

சிவராமன் சித்தப்பாவிற்கு அவருடைய இருபத்தி இரண்டாம் வயதில் கல்யாணம் ஆனது. அவருக்கு மனைவியாக வந்த மதுரத்திற்கு கல்யாணத்தின் போது பதினாறு வயது.

என்னைவிட ஒரு வயது பெரியவர் மதுரம். மதுரத்திற்கு சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் கல்லிடைக்குறிச்சி. வசதியான பெரிய விவசாய குடும்பத்தில் பிறந்தவர். ரொம்பச் செல்லமாக வளர்க்கப்பட்டவர். பரிவோடும் மிகுந்த தோழமையோடும் வளர்க்கப் பட்டிருந்த இதமான சூழ்நிலையாலோ என்னவோ, மதுரம் என்ற என் சித்தி சாந்த சொரூபமும் மேன்மையான சுபாவமும் கொண்ட பவித்திரமான மனுஷியாய்த் திகழ்ந்தார்.

எப்போதும் புன்னகை மலர்ந்த முகத்துடனேயே இருக்கும் மதுரம் சித்திக்கு கனிவான சொற்களாலும், மென்மையான குரலிலும்தான் பேசத் தெரியும். கடுமையான குரலோ, சூடான வார்த்தைகளோ அவரிடம் இருந்து வெளிப்பட்டு ஒருபோதும் யாரும் பாத்ததில்லை.

மதுரம் சித்தி கல்யாணமாகி சிவராமன் சித்தப்பாவின் வீட்டிற்கு தனிக் குடித்தனம் வந்த காலத்தில், நான் அவர்கள் வீட்டுக்கு போய் வருவதற்கான காரணம் ஏதும் இல்லை. அதனால் நான் அவர்களுடைய வீட்டிற்குச் சென்றது கிடையாது.

பொதுவாகவே எங்கள் ஊரில் சொந்தக்காரர்கள் என்பவர்கள் ஒருத்தருக்கொருத்தர் பார்த்து பேசிக்கொள்ள வீடு வீடாகப் போய்த்தான் பார்த்து பேசிக்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. சொந்தக்காரர்கள் எல்லோரும் ஒருத்தரை ஒருத்தர் ஏதாவது ஒரு கல்யாணத்தில் பார்த்துக்கொண்டு விடலாம், அந்த ஆடி புரட்டாசி மார்கழி மாதங்கள் தவிர.

பொதுவாக அந்தக் காலகட்டத்தில் எல்லா குடும்பங்களிலும் ஒவ்வொருத்தருக்கும் குறைந்த பட்சம் ஆறு அல்லது ஏழு குழந்தைகளாவது இருக்கும். உதாரணத்திற்கு என் அப்பா வழித் தாத்தாவின் குடும்பத்தையே சொல்லலாம்.

இரண்டு மனைவிகளின் மூலமாக, என் தாத்தாவிற்கு பதினாறு பிள்ளைகள். நிறைய குடும்பங்களில் நிலைமை இதுதான். அதனால் ஒவ்வொரு குடும்பத்திலும் வருஷம் ஒரு கல்யாணம் நடப்பது என்பது ரொம்பச் சாதாரணம். பிறகு ஊரெல்லாம் ஓயாமல் அடுத்தடுத்து கல்யாணங்கள் நடந்து கொண்டிருப்பதற்கு கேட்பானேன்… வருஷம் பூராவும் தெருவிற்கு இரண்டு கல்யாணம் நடக்காமல் இருக்காது. அதனால் ஊரின் நிறைய தெருக்களில் முக்கால்வாசி நாட்கள் கல்யாண வீடுகளின் விருந்துச் சாப்பாட்டு வாசனை மூக்கைத் துளைக்கும், அதுவும் மேள தாளத்துடன்.

எங்கள் ஊருக்கு மட்டுமே உரிய தனித்தன்மை இது. இதனால், யாரும் யாரைப் பார்ப்பதற்கும் யாருடைய வீட்டுக்கும் மெனக்கெட்டு போய்க் கொண்டிருப்பது தேவையில்லை. எல்லோரும் எல்லோரையும் கல்யாண வீடுகளிலேயே பார்த்துக் கொள்ளலாம்.

இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், அந்தக் காலத்தில் கல்யாணங்கள் நடபதற்கு என்று எங்கள் ஊரில் தனியான கல்யாண மண்டபங்கள் எதுவும் கிடையாது. எல்லார் வீட்டுக் கல்யாணமும் அவரவர் வீடுகளில்தான் நடைபெற்றன. வீடுகளும் அதற்கு ஏற்ற மாதிரி பெரிது பெரிதாக இருந்தன.

இதற்கு உதாரணமாகவும் என் அப்பா வழித் தாத்தாதான் வருகிறார். அவருடைய வீட்டில் கீழேயும் மாடியிலுமாக மொத்தம் பன்னிரண்டு ரூம்கள் இருந்தன. அது தவிர, சமையலறை; சாப்பாட்டு அறை; குளியலறை; ரேழி; முன்புற வராந்தா… அவைகள் எல்லாம் சின்ன கால்பந்து மைதானம் என்று சொல்கிற விஸ்தாரம்.

கல்யாணமான புதிதில் என் அம்மாவிற்கு அந்த என் தாத்தாவின் வீட்டில் வழி தெரியாதாம். இது எப்படி இருக்கு? ஆனால் எங்கள் ஊரில் இது சாதாரணம். நிறைய வீடுகளில் இதுதான் நிலைமை.

சித்தப்பாவின் மனைவி மதுரம் சித்தியை, அவர் கல்யாணமாகி வந்த புதிதில், பல மாதங்கள் அவரை ஏதாவது கல்யாண வீடுகளில் மட்டுமே பார்த்து குசலம் விசாரித்து இரண்டொரு வார்த்தைகள் பேசிக் கொண்டிருந்தேன்.

மதுரம் சித்தி கல்யாணமாகி வந்த வருஷம் நான் எஸ்எஸ்எல்ஸி படித்துக் கொண்டிருந்தேன். சித்தி அதற்கு முந்தின வருஷம் எஸ்எஸ்எல்ஸி முடித்திருந்தார். அதனால் என்னுடைய ஆரம்ப சந்திப்புகளில் சித்தி என்னுடைய படிப்பு பற்றிதான் எதையாவது கேட்டு பேசிக் கொண்டிருப்பார்.

சித்திக்கு படிப்பதில் ஆர்வம் அதிகம். கல்லூரியில் சேர்த்து அவரைப் படிக்க வைத்திருந்தால் வேறு மாதிரி வந்திருப்பார். ஆனால் சித்தியின் அப்பா மேற்கொண்டு அவரை படிக்கவிடாமல் உடனே கல்யாணத்தைப் பண்ணிவிட்டார்.

அதனால் அந்த விசிகசிப்புக்கான அடையாளங்கள் அவருள் கடல் ஆழத்துத் தாவரங்களால் தழைத்தாடித் தெரிந்தன.

சொந்தக்காரர்கள் வீட்டுக் கல்யாணங்களில் பார்த்துக்கொண்ட போதெல்லாம் பள்ளிப்படிப்பு, கல்வி முறை, சிலபஸ் போன்றவை பற்றிய பேச்சுக்களில் மதுரம் சித்திக்கும் எனக்கும் இடையில் ஓர் வாத்ஸல்யமான புரிதலும் நட்பும் அரும்பத் தொடங்கியது.

இன்னொரு கல்யாண வீட்டுச் சந்திப்பின்போது, சித்திக்கு கதைகள் படிக்கும் ஆர்வம் நிறைய இருப்பது எனக்குத் தெரிய வந்தது. இது நான் சித்தியிடம் சிறிதும் எதிரே பாராதது.

கல்யாண வீடுகள் தவிர வேறு எங்கு செல்வதற்கும் அனுமதியோ, சுதந்திரமோ இல்லாதவர் சித்தி. சித்தப்பா அப்படி அடக்கி வைத்திருந்தார். சித்திக்கு கோயில்களுக்குச் செல்லும் ஆர்வமும் கிடையாது. ஒரு நாளின் இருபத்திநான்கு மணி நேரமும் வீட்டிற்குள்ளேயேதான் அடைந்து கிடப்பார். அதிலும் முக்கால்வாசி நேரம் சமையற்கட்டில்தான் இருப்பார்.

அப்படி இருந்தும், சித்தி கதைகள் படிப்பதில் அளவில்லாத ஆர்வம் வைத்திருந்தார் என்பது எனக்குத் தெரிய வந்தபோது ஆச்சரியமாக இருந்தது. எங்கள் ஊரிலும் பல வீடுகளில் பெண்கள் பத்திரிகைகளில் தொடர் கதைகள் வாசிப்பதை ஒரு பொழுது போக்காகக் கொண்டிருந்தார்கள். ஆனால் மதுரம் சித்தியின் தொடர்கதைகள் வாசிப்பு என்பது வெறும் பொழுது போக்கு இல்லை.

நான் தமிழில் கதைகள் வாசிக்கத் தொடங்கியிராத காலம் அது. ஆங்கிலத்திலும் கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு சார்லஸ் டிக்கன்ஸ்; ஹெமிங்வே வாசிக்கத் தொடங்கி இருந்த நேரம் அது. தமிழில் வாசிக்கத் தொடங்காமல் இருந்தாலும்கூட ‘கதை வாசித்தல்’ என்ற தனிமம் எனக்குள் விதையென புதைந்து கிடந்ததே, அந்தத் தனிமம் மதுரம் சித்தியின் கதை படித்தல்கள் என்ற பேச்சுக்களில் எனக்குள் சட்டென ஒரு அன்னியோன்னியத்தையும், அபிமானத்தையும் அவர்பால் கொண்டு வந்து விட்டது என்றால் அது மிகையல்ல.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *