அதிர்ச்சி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 25, 2012
பார்வையிட்டோர்: 8,819 
 
 

பூஜையை முடித்துக் கொண்டு பூசனிக்காய் வயிறு தெரிய வெளியே வந்தார் புண்ணியக்கோட்டி. வந்தவரை பிரம்பு நாற்காலியில் உட்காரக்கூட அனுமதிக்கவில்லை. அனுசுயா அப்படியே அவர் கால்களில் விழுந்தாள். புண்ணியக்கோட்டி இதை எதிர்ப்பார்க்கவில்லை. “எழுந்திரும்மா . .. எழுந்திரு. நீ யாரு ? என்ன வேணும். ? ”

“என் புருசனை நீங்கதான் காப்பாத்தணும்,” அவள் இன்னும் எழுந்திருக்கவில்லை.

“எழுந்திரும்மா.. . யாரு உன் புருசன் ? ”

“கார் டைவர். .. பாண்டி. .. . ”

“அவனா? அவனை இனிமே திருத்தவே முடியாதும்மா. ”

“இல்லே, நீங்க அப்படிச் சொல்லக்கூடாது ”

“பொல்லாத ஆளும்மா அவன் . ..சீட்டைக் கிழிக்கச் சொல்லிட்டேன். ”

“சீட்டைக் கிழிச்சா அவரு சோத்துக்கு என்ன செய்வாரு ? ”

“அந்தக் கவலை இருந்தா வண்டிக்குப் பெட்ரோல். .. வண்டிக்குப் பெட்ரோல்-னு காசு வாங்கி சீட்டு ஆடுவானா ? ”

“இந்த சீட்டுப் பழக்கம் தான் அவர் குடியைக் கெடுக்குது. ”

“சீட்டு மட்டுமா ? குடிச்சுட்டு காரை ஓட்டி வாராவதியிலே மோதி வண்டியை ஓர்க் ஷாப்புக்கு அனுப்பிச் சிட்டான். ”

“ஐயா நீங்கதான் புண்ணியவான். .. இதோடு ஏழெட்டு கம்பெனி ஏறி ஏறங்கியாச்சு.. . ஒங்க பிள்ளை மாதிரி பார்த்துக்கற உங்ககிட்ட வேலை செய்யலைன்னா வேறே எங்கேயும் செய்ய முடியாது. ”

“வண்டிப் பெட்ரோலை வாயாலே உறிஞ்சி எடுத்து வெளியே விக்கிறானாம். ”

“செய்வாருங்க.. . அவரு நல்லவர், அவரை வேலையிலே விட்டு எடுத்தது தப்புன்னு சொல்லலை.. . வயிறு பொழைக்க வழியில்லே. மன்னிச்சுடுங்கன்னுதான் கேக்குறேன். ”

“நாய் வாலும்மா.. . நிமித்த முடியாது. வெட்டத்தான் வேணும் ! ”

“இந்த ஒரு தபா எனக்காக அவரை எச்சரிச்சு விட்டுடுங்க. .. அவரு எவ்வளவு ரூவா தரோணுமோ அதை மாசா மாசம் பிடிச்சுக்குங்க. .. முதுகிலே அடிங்க. .. வயித்திலே அடிச்சிடாதீங்க. ”

“இவ்வளவு நல்ல பொண்ணா இருக்குறே.. . உங்கிட்ட நல்லபடியா நடந்துக்குவானா ?”

“பெரியவங்க உங்ககிட்டே பொய் சொல்லக்கூடாது. அடி, உதை. .. வீட்டுக்கு காலணா கண்ணுலே காட்ட மாட்டாரு. ”

“வீட்டுக்கு ரெகுலரா வருவானா ? ”

“எப்பவாவது கையிலே காசில்லேன்னா. . வயித்துக்கு சோறில் லேன்னா. .. ”

“அப்படிப்பட்ட பாவிக்கு நீ ஏன் பரிஞ்சு பேசறே ? அவன் வேலை பார்த்தா என்ன, நடுத்தெருவிலே நின்னா என்ன ? ”

“அப்படி இல்லீங்க.. . அவரை ஒரேயடியா தலைமுழுகப் போறேன். ”

“அதிர்ந்து போனார் புண்ணியகோட்டி, என்னம்மா சொல்றே நீ ? அவனுக்காக எங்கிட்டே பரிஞ்சு பேசறே. . ஆனா நீ அவனை ஒரேயடியா விட்டுப் போகப் போறேங்கிறே ? ”

“ஆமாங்க.. . அவருக்கு வேலையில்லாதபோது விட்டுட்டுப் போனான புருஷன் சம்பாரிச்ச வரை கூட இருந்தா. .. காசு இல்லேன்னு ஆனவுடனே கட்டின புருசனை உட்டுட்டுப் பூட்டான்னு சொல்வாங்க. . ”

“அப்ப நீ. ..? ”

“கையிலே சித்தாள் வேலையிருக்கு. . மனசிலே தைரியமிருக்கு.. தனிமையிலே பழக்கமிருக்கு. ”

புண்ணியகோட்டிக்கு அதிர்ச்சியிலிருந்து மீளவே நெடு நேரமாயிற்று.

– ஜூன் 09, 2005

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *