அண்ணன் மனம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 1, 2022
பார்வையிட்டோர்: 4,100 
 
 

” அண்ணனைப் பார்க்க வந்தேன் அண்ணி ! ” என்றவாறு கிராமத்திலிருந்து வந்து வீட்டுக்குள் நுழைந்த குமரேசனிடம் அந்த கை பேசியைக் காட்டவே மனசில்லை லதாவிற்கு.

என்றாலும்… ஏதோ எல்லோருக்குள்ளும் உழலும் ஒரு மனுச மன உந்துதல் வீட்டில் ஒரு புதுப் பொருள் வாங்கி வந்து விட்டால் எல்லோருக்கும் காட்டி மகிழவேண்டும் என்கின்ற இயல்பான ஆசை.

“இதோ பார்த்தீங்களா தம்பி. நேத்திக்கு ஆன் லைனில் வாங்கியது.!” என்று அந்த புத்தம் புது கைபேசியை எடுத்துக் காட்டினாள்.

வாங்கிப் பார்த்த குமரேசன் முகத்தில் கொஞ்சமாய் இருள், அடுத்து பரவசம்.

அப்படி இப்படி திருப்பிப் பார்த்து…

“எவ்வளவு அண்ணி..?” கேட்டான்.

“நாப்பதாயிரம்!” சொன்னாள்.

“நல்லா இருக்கு அண்ணி !” என்று சொல்லி அரைமனதாகத் திருப்பிக் கொடுத்தான்.

வாங்கி மேசை மேல் வைத்த லதா…

“எதுக்கு அண்ணனைத் தேடி வந்தீங்க..?” கேட்டாள்.

“நாளைக்கு அண்ணன் நிலம் அறுவடைன்னு அப்பா சொன்னாங்க. உங்க சாப்பாட்டுக்குப் போக மீதி நெல்லை எங்கே வித்து காசாக்கலாம். இல்லே… இருப்புல வச்சி பின்னால நல்ல விலைக்கு விக்கிலாமான்னு அப்பா கேட்டுட்டு வரச் சொன்னாங்க அண்ணி !” அவன் வந்த விசயத்தைச் சொன்னான்.

“சரி. அண்ணன் வந்ததும் சேதி சொல்றேன்.”என்றாள்.

“வர்றேன் அண்ணி!” என்று அமர்ந்திருந்த குமரேசன் எழுந்தான்.

“இரு. உட்காரு. காபி எடுத்து வர்றேன். அதுக்குள்ளே அண்ணன் வந்தாலும் நீங்க நேரடியா சேதியை சொல்லி முடிவைத் தெரிந்து போகலாம்.”சொல்லி அடுப்படிக்குள் சென்றாள்.

எழுந்த குமரேசன் நாற்காலியில் அமர்ந்தான்.

மேசையிலிருக்கும் அந்த புத்தம் புது கைப்பேசியைப் பார்த்துக் கொண்டே இருந்தான்.

அடுப்படியிலிருந்து கவனித்த லதாவிற்கு மனசே சரி இல்லை.

இவன் ராணுவத்தை விட்டு வராமலிருந்திருந்தால் அண்ணனை விட அதிகமாக சம்பாதித்து இந்த விலையை விட அதிக விலையில் இந்த கைபேசி என்ன… என்னன்னவோ வாங்கி சொகுசாக வாழலாம் எல்லாம் விதி ! நொந்து பெருமூச்சு விட்டாள்.

வீட்டில் இரண்டு வேலி நிலமிருக்கிறது. அண்ணன், அண்ணி இருவரும் அரசு அதிகாரிகள். கை நிறைய சம்பா த்தியம் என்கிற நினைப்பு….. மத்திய பிரதேச தலைநகர் போபால் மொழி தெரியாத இடத்தில், கெடுபிடிகள் நிறைந்த ராணுவத்தில் உயிருக்கு உத்திரவாதமில்லா த வேலையில் தினம் பயந்து கொண்டு சம்பாதிக்க நமக்கென்னத் தலையெழுத்தா…? – என்கிற எண்ணம் தலைதூக்கி தாக்க…. தீராத வயிற்றுவலி என்று நடித்து ஓடி வரழைத்து விட்டது. மேலும் அங்கு சேர்ந்த சேர்மானம், நண்பர்களும் சரி இல்லை. இங்கிருந்து கஷ்டப்படுவதை விட உள்ளூரில் சொகுசு வாழ்க்கை வாழலாம் என்று உசுப்பேத்தி அனுப்பி விட்டார்கள்.

குடும்பத்தில் உள்ள அம்மா, அப்பா, அண்ணன் அனைவருக்கும் அதிர்ச்சி.

வேலை வேண்டாமென்று உதறித் தள்ளிவிட்டு வந்த பிள்ளையைத் திருப்பி அனுப்ப முடியுமா..? அப்படியே அனுப்பினாலும் சீட்டை கிழித்து அனுப்பிய ராணுவம் ஏற்றுக்கொள்ளுமா..?

“சரி. திருமணத்தை முடி. விவசாயத்தைப் பார்!” என்று விட்டார்கள்.

தம்பி அதற்கும் பொறுப்பில்லாமல் திருமணத்தை முடித்துக் கொண்டு ஒன்றுக்கு இரண்டு சோற்றிற்குத் தண்டமாய் மனைவியோடு ஊர் சுற்றினான்.

எவருக்குப் பொறுக்கும்..?

தம்பி வேலையை விட்டு வந்ததுமில்லாமல் இப்போது வீட்டையும் விவசாயத்தையும் கவனிக்காமல் பொறுப்பற்றுச் சுற்றுகிறானே என்கிற வெறுப்பு. குமரேசன் ஒரு குழந்தை, இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பனானதும் பொறுக்க முடியாமல்…

“இதோ பார்! எனக்குச் சாப்பாட்டுக்கு பத்து மா – மூணு ஏக்கர் நிலம் போதும். மீதி நிலம் நீச்சு, இந்த வீடெல்லாம் உன்னுது. பொறுப்பா இருந்து கவனி. நான் நகரத்துப் பக்கம் வீட்டு மனை வாங்கி வீடு கட் டி தனிக்குடித்தனம் போறேன். !” சொல்லி ஆறே மாதத்தில் அண்ணன் தனிக்குடித்தனம் வந்துவிட்டார்.

தம்பிக்கு அப்படியும் பொறுப்பு வராமல்…அப்பா விவசாயத்தைப் பார்க்க…குந்தி தின்றால் குன்றும் கரையும் ! கதையாய்….இருப்பது குறையவில்லை என்றாலும்… முன்னேற்றமில்லை.

இன்னும்…. அண்ணன் வீட்டில் வீட்டு வந்த பழைய ஸ்கூட்டர் கையிருப்பு. அப்புறம்… வீட்டில் எல்.ஈ.டி தொலைக்காட்சிப் பெட்டி இல்லை. பழைய காலத்து சாலிடார். இன்னும் சுத்துக்கட்டு ஓட்டு வீடு ஒட்டு வீடாக மாறாமல் அதே இருப்பு. கை பேசியிலும் தொடுதிரை இல்லை. எல்லாவற்றிற்கும் காரணம்… தம்பி பொறுப்பின்மை. தண்ணீர் தட்டுப்பாடு, உர விலையேற்றம், ஆட்கள் கூலி, தட்டுப்பாடு போன்றவற்றால் விவசாயப் பாதிப்பு. குடும்பம் புதிது பார்க்க முடியாமல் கஷ்டம்.

இப்போது தம்பி புதிது பார்த்ததும்… ஏங்குகின்றது. – லதாவிற்கு நினைக்கவே கஷ்டமாக இருந்தது.

ஒரு முடிவுடன் காபியைக் கலந்து எடுத்துக் கொண்டு வந்து குமரேசனிடம் நீட்டினாள்.

வாங்கி குடித்து முடித்த குமரேசன்…

“அண்ணி! கடைத் தெரு வரை போய் கால் மணி நேரத்துல திரும்பி வர்றேன்” சொல்லி எழுந்தான்.

இவளும் சரி என்று தலையசைக்க எழுந்து சென்றான்.

சிறிது நேரத்தில் லதா கணவன் கண்ணன் உள்ளே வந்தான்.

“என்னங்க. கிராமத்திலிருந்து தம்பி வந்திருக்கு..?” சொன்னாள்.

“ஏன்..?”

சேதி சொன்னாள்.

“ஆள் எங்கே…?” கேட்டான்.

“கடைத்தெரு வரை போயிருக்கு.”

”சரி.”

“ஒரு விசயம்..? ”

“என்ன..?”

“தம்பிகிட்ட புது கைபேசி காட்டினேன்.”

“சந்தோசம். அதுக்கென்ன..? ”

“தன்னால வாங்கமுடியலையே என்கிற ஏக்கம் அது கண்ணுல தெரிஞ்சிது.”

“அதுக்கு என்ன பண்றது. ?! வசதியாய் வாழ வக்கிருக்கு. வச்சி ஆள துப்பில்லையே !!” கண்ணன் குரல் கரகரப்பாக வெளி வந்தது.

“சரி விடுங்க. இது மாதிரி ஒரு கைபேசி வாங்கி கொடுத்து அது ஏக்கத்தைப் போக்கலாம்.” சொன்னாள்.

“வேணாம் லதா. கூடாது. ! ”

“ஏன்..? காரணம்…? ”

“லதா ! நாம என்ன நினைச்சி தனிக்குடித்தனம் வந்தோமோ அது நடக்கலை. இன்னும் என் தம்பி குமரேசன் வீட்டையும் கவனிக்கலை. விவசாயத்தையும் கவனிக்கலை. இன்னைக்கும் என் அப்பாதான் ரெண்டையும் கவனிக்கிறார். இவன் இன்னும்…தான் மிராசு, பணக்காரன் எண்ணத்திலேயே…. உழைக்கிறது பாவம், வயலில் வேலை செய்து விவசாயம் செய்யிறது கேவலம் அவமானம்ன்னு நினைச்சி… வேலை தேடுறேன் வேலை தேடுறேன்னு ஊரைச் சுத்தி வர்றான்.

இரண்டு பிள்ளை பெத்தும் அவன் தன் மனைவிக்கு தன் சம்பாத்தியத்தால் ஒரு முழம் பூ வாங்கி கொடுக்க வக்கில்லாமலே திரியறான்.

‘நெனப்பு பொழைப்பைக் கெடுக்கும்!’ லதா. அதுக்குச் சரியான உதாரணம் இவன்.

நாம விட்டு வந்த ஒன்னரை வேலி நெலத்துல இவன் மட்டும் ஒழுங்கா பாடுபட்டான்னா…நம்மைவிட உசந்த நிலையில ஓகோன்னு வாழலாம். இவன் ஒழுங்கா பாடுபடவேணாம். அப்பாவுக்கு கூடமாட ஒத்தாசையாய் இருந்தாலே போதும். சிறக்க வாழலாம்.

நான், அப்பா படும் கஷ்டத்தைப் பார்த்து அப்பப்ப போய் உதவிகள் செய்து அவரைத் துவளவிடாமல் தூண்டி வர்றேன். இவன் கஷ்டத்தைப் பார்த்து உதவிகள் செய்தால் அவன் இன்னும் தன் பொறுப்பு, சுமைகள் தெரியாமல்தான் உழல்வான்.

நீ இந்த கை பேசியை அவனுக்குக் காட்டாமல் இருந்தால்கூட நான் காட்டி இருப்பேன். ‘ பார், வருத்தப்படு, வயிறெரி, அண்ணலால நம்மால முடியாதான்னு ஆவேசம் கொள்ளுன்னு காட்டி இருப்பேன்.’ ஏன்…? இதெல்லாம் அவனை பொறுப்பாளியாய் ஆக்கனும், உழைப்பாளியாக்கனும் என்கிறதுதான் இந்த பாசமான அண்ணனோட உண்மையான ஆசை.” நிறுத்தினான்.

லதா கணவன் மனசு தெரிய தலை கவிழ்ந்தாள்.

அதே சமயம் வெளியில் நின்று இவர்கள் உரையாடல்கள் அனைத்தையும் கேட்ட குமரேசனுக்கும் தன் உண்மை நிலை, குறைகள் தெரிந்தது.

உள்ளே வந்த அவன்…

“நன்றிண்ணா. கூடிய சீக்கிரம் நான் நல்ல பொறுப்பாளி, உழைப்பாளியாகி உன் முன்னால் வந்து நிக்கிறேன்..!” என்று மலர்ச்சியாய்ச் சொல்லி சென்றான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *