“அட்டெண்டர்! இங்கே வா! இந்த ஃபைலை எல்லாம் கொண்டு போய் மேனேஜர் ரூம்ல வை!” என்று உரத்த குரலில் அழைத்தார் பரசுராமன். அந்த அலுவலகத்தின் ஹெட் கிளார்க்.
அவன் அதைச் செய்து முடித்ததும், “அட்டெண்டர்! பிரின்ட்டருக்கு டோனர் மாத்து!” என்று உத்தரவிட்டார். “சார்! அந்தப் பையன் கார்த்தி டிகிரி முடிச்சிருக்கான். வேற வாய்ப்பு இல்லாததால, தற்காலிகமா இங்கே அட்டெண்டரா வேலை பார்க்கிறான். அவனை வாய்க்கு வாய் அட்டெண்டர்னு கூப்பிடாம, அழகா பேர் சொல்லியே கூப்பிடலாமே?” என்றார் பக்கத்து ஸீட் கேசவன்.
“இதுல என்னய்யா இருக்கு? டிரைவரை டிரைவர்னுதான் சொல்றோம். ஓட்டலுக்குப் போனா, சர்வரை சர்வர்னுதான் கூப்பிடறோம். அவங்கவங்க பார்க்கிற தொழிலைச் சொல்லிக் கூப்பிடறதுல கௌரவக் குறைச்சல் என்ன? அப்படி கௌரவம் பார்க்கிறவனா இருந்தா, இங்கே வேலைக்கே வந்திருக்கக் கூடாது!” என்றார் பரசுராமன் சூடாக.
ரோஜா ஹாஸ்பிட்டல்!
மனைவி யசோதாவுக்கு திடீரென்று ஷ§கர் ஏறிப் போக, இங்கே கொண்டு வந்து அட்மிட் செய்துவிட்டு, பார்வையாளர் அறையில் காத்திருந்தார் பரசுராமன்.
சில நிமிடங்களுக்குப் பிறகு, அங்கே வந்த நர்ஸ் உரத்த குரலில் கேட்டாள்… “இங்கே யசோதா அட்டெண்டர் யாருங்க?”
– 28th நவம்பர் 2007