பொம்மலாட்டம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: July 8, 2012
பார்வையிட்டோர்: 16,472 
 
 

(பார்வையாளர்களின் கோணத்திலிருந்து பார்க்கையில், மேடையிலிருந்து இடது வலது ஆக ஒரு வீதியிருக்கும். இந்த வீதி மேடையில் சற்று பின்தள்ளி இருக்கும். வீதிக்கும் மேடை விளிம்பிற்குமிடையில் ஒரு “பள்ளம்” இருந்தாக வேண்டும். பார்வையாளர்களிற்கு இந்தப் பள்ளம் தெரியத் தேவையில்லை. பள்ளத்திற்கும், பார்வையாளர்களிற்குமிடையில் ஒரிரு செடிகளை புதர்மாதிரி வைக்கலாம். பார்வையாளர்களிற்குத் தெரிய வேண்டியது ஒரு கை மட்டுமே. உடம்பு பள்ளத்திற்குள் இருப்பது போலவும், கை வெளியே நீட்டிக் கொண்டிருப்பது போலவும் இருக்க வேண்டும்.)

இருவர் பள்ளத்தின் விளிம்பில் நின்று கொண்டு, உற்று பார்க்கிறார்கள்.

சிவலிங்கம்: சுட்டிருக்கிறாங்களோ அல்லது அடித்துக் கொன்றிருக்கிறாங்களோ. முகமெல்லாம் வீங்கி இரத்தமாக இருக்குது.

பொன்னை: அடித்திட்டும் சுடலாம்தானே. என்ன குற்றமாம்?

சிவலிங்கம்: யாரிற்குத் தெரியும்? யார் சுட்டது என்றே தெரியேலை . . .

பொன்னையா: யார் சுட்டதென்றே தெரியேலையோ? அது சரி. இப்படி விளம்பரமில்லாமல் சுட்டுப் போட்டிருக்காங்கள் என்றால்; ஒன்றும் இப்போதைக்குத் தெரியப் போகிறதில்லை.

சிவலிங்கம்: ஆள் சிங்களவனாம். சந்திரிகா கிட்டடியிலே ஆட்சிக்கு வந்ததிலேயிலிருந்து யாழ்ப்பாணத்தை பிடிக்க போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றாளில்லே. அதான் இப்படிச் சிங்கள ஆக்களை உளவு பார்க்க ஆமிக்காரங்கள் விட்டிருக்கிறாங்களாம்?

பொன்னையா: என்டு யார் சொன்னது?

சிவலிங்கம்: யார் சொன்னது என்று யாருக்குத் தெரியும். சந்தியிலே கதைத்துக் கொண்டாங்கள். போன கிழமை, தண்டவாளப் பக்கம் யாரோ ஒரு பெடியனை சுட்டுப் போட்டிருந்ததல்லோ? . . . . இவன்தான் சுட்டவனாம். இவனோடு இன்னும் இரண்டு பேர் ஊருக்குள் அலைந்து கொண்டிருந்தவர்களாம். (ரகசியமாக) கவனம்! பார்த்துக் கதையும். இரண்டு சிங்களங்களும் இன்னும் இங்கேயோ எங்கேயோதான் அலைகிறாங்கள்.

பொன்னையா: எல்லோரும் ஏதேதோ சொல்லுவாங்கள், அண்ணை யாருக்குத் தெரியும். எது உண்மை, எது பொய் என்று.

(இருவரும் பள்ளத்தை நோக்கியபடி, சத்தமில்லாமால் கதைத்துக் கொண்டிருக்க, புதிதாக இரண்டு பேர் மெதுவாக நடந்து மேடைக்கு வருகிறார்கள். புதியவர்களை இடைக்கிடை சந்தேகமாக பார்க்கிறார்கள்.)

மணி: இல்லையடா. முந்தியெல்லாம் ஒரு கவலை, யோசனையென்றால், கள்ளுக்கடை போய் . . . பேந்து ஒரு “செகண்ட் சோ” போய் வாத்தியார் படம் பார்த்து, “புதிய வானம் புதிய ப+மி” என்று பாடியபடி, நடுச்சாமத்தில் திரும்ப வீட்டை போக நாய்கள் குரைக்க . . . கவலையெல்லாம் போய்விடும். இப்ப எங்கே, மச்சான்? பிரச்சாரப்படம் மட்டும் காட்டுகிறாங்கள். எங்களுடைய வாழ்க்கையே சோகம். அதற்குள்ளே அங்கே போய் யார் இன்னும் சோகத்தைப் பார்ப்பான், சொல்லு பார்ப்போம்?

அன்ரன்: அதான் தியேட்டருக்கு வெளியேயே இப்பல்லாம் படம் போடுகிறாங்கள்தானே. ய+னிபார்ம்கள், சட்டங்கள், அறிவிப்புக்கள் என்று . . .

மணி: உனக்கெல்லாம் பகிடி, மச்சான். எனக்கென்னவோ முந்தி மாதிரி எப்ப சுதந்திரமாக நான் விரும்புகிறதெல்லாம் செய்ய முடியும் என்று இருக்குது.

அன்ரன்: (ரகசியமாக) டேய்! அங்கு நிற்கிற, அந்த இரண்டு பேரையும் பார்! எங்களைப் பார்த்தேதோ கதைக்கிறாங்கள் போல் இருக்கிறது. உனக்குத் தெரிந்த ஆக்களோ?

மணி: இல்லையடா. யாரோ சொன்னாங்கள், சின்னவங்கள் இரண்டு மூணன்டு பேர் ரவுனுக்கே திரிகிறாங்களாம். இவங்களை முன்னே பின்னே பார்த்த மாதிரித் தெரியேலை. வா, விசாரித்துப் பார்ப்போம்.

(பள்ளத்திற்கு அருகிலிருக்கும் இருவரையும் நோக்கி போகிறார்கள்.)

மணி: அண்ணை, இந்தக் கந்தையாண்ணை வீடு இந்தப் பக்கம் எங்கோயோ இருக்குதாம். எந்த வீடு என்று உங்களுக்குத் தெரியுமோ?

சிவலிங்கம்: கந்தையாண்ணையோ? எந்தக் கந்தையா?

மணி: சந்தையிலே கோழி விற்பார், அண்ணை. அந்தக் கந்தையாண்ணை.

சிவலிங்கம்: சந்தையிலே கோழிவிக்கிறவரோ, அப்பிடி யாரையும் எனக்குத் தெரியாது, தம்பி . . .

மணி: (பொன்னையாவை நோக்கி) அண்ணை, உங்களுக்குத் தெரியுமோ?

பொன்னையா: (முதலில் சிவலிங்கத்தைப் பார்க்கிறார். பின்னர், தெரியாதென்று தலையாட்டுகிறார்.)

மணி: உங்களுக்கும் தெரியாதோ?

பொன்னையா: (ஓம் என்று தலையாட்டுகிறார்)

அன்ரன்: மணி, அங்கே பார் கையொன்று . . .

சிவலிங்கம்: யாரையோ சுட்டுப் போட்டிருக்கிறாங்கள்.

(இருவரும் பள்ளத்திற்குக் கிட்டப் போய்ப் பார்க்கிறார்கள்.)

மணி: தெரிஞ்ச முகம் மாதிரி இல்லையோயடா?

அன்ரன்: எனக்குத் தெரியலே, மச்சான். கைவிரலைப் பார். நிகங்களைப் பிச்சிருக்காங்கள் போல இருக்குது . . .

சிவலிங்கம்: உங்களுக்கு ஆளைத் தெரியுமோ?

மணி: தெரிஞ்ச முகம் போலத்தான் இருக்குது. எங்கேயாவது றோட்டிலே கண்டிருப்பேன்.

சிவலிங்கம்: நீங்கள் யாரென்று . . .

மணி: நாங்கள் யாரென்பது இருக்கட்டும். நீங்கள் இரண்டு பேரும் யார்? இங்கே பிணம் கிடக்குது என்று யாருக்கும் சொன்னீர்களா?

சிவலிங்கம்: நான் . . . இந்த சிவன் கோவிலடியில் இருக்கிறனான். பெயர் சிவலிங்கம். சந்தியிலே கேள்விப்பட்டன். இப்படி யாரையோ சுட்டுப் போட்டிருக்கிறாங்கள் என்று. அதுதான் . . .

மணி: (இரண்டாமவரை நோக்கி) இவர் ஏன் கதைக்காமல் இருக்கிறார்? தமிழ் கதைக்க மாட்டாரோ?

பொன்னையா: (சிவலிங்கத்தை நோக்கியபடி) சீச்;சீ . . . நான் . . . நான் தமிழ் நல்லாக் கதைப்பேன். நல்லாக் கதைப்பேன். நன்றாகக் கதைப்பேன்.

மணி: நீங்கள் எவ்விடம்?

பொன்னையா: நானும் கோவிலடிதான்

மணி: ஆ, இங்கே சுட்டுப் போட்டிருக்கிறாங்கள் என்று காவற்படையிலே சொன்னீங்களோ?

சிவலிங்கம்: நாங்கள் சொல்லேலை. ஆனால். சந்தியிலே கதைத்துக் கொண்டிருந்தாங்கள். அவங்கள் சொல்லியிருப்பாங்கள்.

மணி: சொல்லியிருப்பாங்கள் என்று சொல்லக் கூடாது. அதிலே போய் கட்டாயம் ஒருக்கா சொல்லுங்கோ சரியோ?

சிவலிங்கம்: என்னத்திற்குத் தம்பி சொல்ல வேண்டும்?

மணி: என்ன இப்படிக் கேட்கிறீங்கள். அப்பதானே, அவங்கள் வந்து, விசாரணை செய்து யார், என்ன நடந்தது என்று கண்டுபிடித்து உண்மையான, ஊர்ஜிதப்படுத்தப்பட்ட செய்தி வெளியிடடலாம். அதைத் தவிர, பிணத்தையும் எடுத்தெரிக்க வேண்டுமில்லையோ?

சிவலிங்கம்: இவன் ஒரு சிங்கள நாய் (பிணத்தை நோக்கித் துப்புகிறார்) பிறகென்னத்திற்கு விசாரணை மண்ணாங்கட்டி எல்லாம்?

மணி: என்று அவங்கள் சொல்லவில்லையே? அவங்கள் அடிக்கடி சொல்கிறாங்கள்தானே, வதந்திகளை நம்ப வேண்டாம். ஊர்ஜிதப்படுத்தப்பட்ட செய்திகளை மட்டும் நம்புங்கள் என்று. நீங்கள் செய்கிறது ஒருவிதத்திலே பெரிய குற்றம். இவன் சிங்கள நாயாகவும் இருக்கலாம். தமிழ் நாயாகவும் இருக்கலாம். அல்லது, தமிழ்த் தியாகியாகவும் இருக்கலாம். எதற்கும் போகிற வழியில் சொல்லி விடுங்போ, சரியோ? பிறகு, சொல்லேலை என்று உங்களிற்குத்தான் பிரச்சினை வரும் . . .

சிவலிங்கம்: சரி, சொல்லி விடுகிறோம், தம்பி.

(சிவலிங்கமும் பொன்னையாவும் போகிறார்கள்.)

அன்ரன்: டேய், உனக்கு என்ன விசரே?

மணி: எல்லாத்திற்கும் காரணம் இருக்குதடா?

அன்ரன்: என்ன காரணம்?

மணி: சொல்லுகிறேன். நீ முதலிலே அங்கே ரோட்டிலே யாராவது வாறாங்களா என்று பார்த்துக் கொண்டிரு.

அன்ரன்: என்னடா, என்ன செய்யப் போகிறாய்?

மணி: முதலிலே, போய்ப் பாராடா? பிறகு சொல்லுகிறேன்.

(அன்ரன், மேடையின் நடுவில் நின்று இடதும் வலதுமாக பார்த்துக் கொண்டு நிற்க, மணி குனிந்து பள்ளத்தாக்குள்ளிருந்து எதையோ எடுக்கிறான்.)

அன்ரன்: டேய், மணி யாரோ வருகினம்!

(மணி எழும்பி, எடுத்ததை பொக்கட்டுக்குள் வைக்கிறான். புதிதாக வந்தவர் சற்று போதையில் இருக்கிறார்.)

செங்கீரன்: (அன்ரனிடம்) தம்பி, இங்கே சிங்களவனொருவனை சுட்டுப் போட்டிருக்காங்களாம். எங்கே, தம்பி?

அன்ரன்: இங்கேதான் அண்ணை. இந்தா சுட்டுக் கிடக்குது

செங்கீரன்: ஆ, இங்கேயே. (எட்டிப் பார்க்கிறார்) சிங்களப் பண்டிக்கு இங்கே வந்துதான் சாகவேண்டும் என்றிருக்குது. என்டாலும் ஆள் விசயகாரன், தெரியுமோ. முந்தநாள் இரவு, கோவிலடியில் சிவபாக்கிய அக்கா இருக்கா, தெரியுமோ? சிவபாக்கிய அக்காளின்டை தங்கச்சியின்டை மோன் . . . இல்லை மோளின்டை வீட்டுக்குள்ளே போய் யாரையோ கற்பழிச்சிட்டானாம். யாரைக் கற்பழிச்சான் என்று ஒருத்தருக்கும் தெரியாதாம். சத்தம் போடாமல் வந்து காரியத்தை முடித்து விட்டு போய்விட்டானம் வேசை மகன்!

மணி: எண்டு உங்களிற்கு யாரண்ணை சொன்னது?

செங்கீரன்: சிவபாக்கிய அக்கா இருக்காவில்லோ? அவாவின்டை வீட்டுக்குப் பக்கத்திலே இருக்கிற ஒருத்தர் சொந்தக் கண்ணாலே கண்டவர். அவர்தான் சொன்னவர்.

மணி: சொந்தக் கண்ணாலே காணாமல் இரவல் கண்ணாலேயே காணுகிறது? அவர் இவனைக் கண்டவரோ? அவர் பெயர் என்ன?

செங்கீரன்: பெயர் என்னத்திற்குத் தம்பி. ரெண்டு கண்காளாலும் கண்டவராம். தன்டை காணிக்குள்ளாலேதான் திரும்பி வரேக்கை போனவனாம். இவனைக் கண்டவுடனே அவர் கத்த முயற்சித்தவராம். ஆனால் இவன் ஏதோ மாயம் செய்து வாயைத் திறக்க முடியாமல் பண்ணி விட்டானாம். பிறகு, அப்பிடியே வேலிக்குள்ளாலே காற்று மாதிரிப் போய்விட்டானாம். தம்பி, கனவிசயம் தெரிந்தவன். இப்பிடிப்பட்டவனை சுட்டவங்கள், ஏன் இங்கே போட்டிருக்கிறாங்கள்? வழமைபோல் சந்தியில் கட்ட வேண்டியதுதானே?

அன்ரன்: கற்பழிச்சவன் என்று சொன்னீங்கள். அதை யார் கண்டது.

செங்கீரன்: அதை யார் பார்ப்பான், தம்பி? பார்த்தால் ஏன் இவனை காரியத்தை முடிக்க விடுகிறாங்கள். கற்பழிப்பு என்றவுடனே அங்கே கற்பு இருந்தது என்று மட்டும் நினைத்து கொள்ளாதீங்கோ. அந்தக் குடும்பம் முழுக்க வேசிகள்! கெட்ட சனியன்கள்! உதுகளிற்கு எல்லாம் ஏன் வாழ்க்கை சொல்லுங்கோ பார்ப்போம். உதுகள் எல்லாத்தையும் சுடணும் தம்பி. முதலிலே தாய்க்காரியைச் சுடணும். பிறகு அவளின்டை மோள்மாரைச் சுடனும். இந்தப் பெடியன்களிட்டை சொல்லி நான் யார் என்று காட்டுகிறேன்! என்ன நினைத்துக் கொண்டாளவை? ஒரு ஆம்பளைக்கு மரியாதை கொடுக்கத் தெரிய வேண்டும். முதலிலே, மரியாதை கொடுக்கத் தெரியாத பெட்டைகள் எல்லாம் வேசிகள்! எல்லாம்? வேசிகள்! கூடவேண்டும். சின்னச் சின்ன குற்றத்திற்கெல்லாம் கேள்வி கேக்காமல் சுடவேண்டும். அப்பத்தான் நாடு திருந்தும். அப்பத்தான் நாடு திருந்தும். சொல்ல மறந்திட்டேன். போன கிழமை, தோட்டத்து ரோட்டிலே இன்னுமொரு பெட்டையையும் கற்பழித்திருக்கிறானாம். அங்கே கட்டியிருந்த ஆட்டையும் கழுத்திலே கடித்துக் கொன்றிருக்கிறானாம், தம்பி. இப்பிடி எத்தினை குற்றங்கள் செய்தானோ யார் கண்டது.

மணி: இவன் இங்கே உளவு பார்க்க வந்தவன் என்றால் . . . ஏன் இப்படி வேலையெல்லாம் செய்கிறான்?

செங்கீரன்: தம்பி, உனக்குத் தெரியாது. சிங்களவங்களே இப்படித்தான். அவங்கள் மிருகங்கள், தம்பி. ஆசையைக் கட்டுப்படுத்தத் தெரியாது. இங்கேயும் கடிச்சு அங்கேயும் கடிச்சுக் கொண்டிருப்பான். அண்டைக்கு இப்படித்தான் என்டை சொந்தக்காரப் பெடியனொருவனுடைய சைக்கிளை யாரோ அடித்திட்டாங்கள். இப்ப யோசிக்கத்தான் தெரியுது. அதையும் இவன்தான் களவெடுத்திருக்கிறான் என்று. இப்படி எத்தனை செய்திருப்பான். சொல்லு பார்ப்போம். யாரை நம்பினாலும் சிங்களவனை நம்பக் கூடாது தம்பி, எல்லோரும் கள்ள நாய்கள். கள்ள நாய்கள்.

(என்று கூறியபடி போகிறார். இவர் போக, மறுதிசையிலிருந்து இன்னொருவர் வருகிறார்.)

மாஸ்ரர்: யாரு, மணியோ?

மணி: ஓம், மாஸ்டர் எப்படி இருக்கிறீங்கள்?

மாஸ்ரர்: அவன் தயவில் இருக்கிறன். என்ன, அவன் யாரை நாய் என்று சொல்லிக் கொண்டு போகிறான்?

மணி: இங்கே யாரையே சுட்டுப் போட்டிருக்கிறாங்கள். அவனைத்தான்.

மாஸ்ரர்: என்ன தேசத் துரோகியா?

மணி: யாரோ சிங்களவனாம்.

மாஸ்ரர்: சிங்களவனோ? புதுக்கதையாக இருக்குது. சிங்களவனையேன் இங்கே ஒருத்தருக்கும் தெரியாத இடத்தில் சுட்டுப் போட்டிருக்கிறாங்கள். அண்டைக்கும் வயலடியிலே தண்டவாளத்திற்குப் பக்கத்தில் ஒருத்தனை சுட்டுப் போட்டிருந்தாங்கள். முதலிலே, இதைச் செய்தான், அதைச் செய்தான் என்றாங்கள். பிறகு, பார்த்தால், யாரோ படிக்கிற பெடியன். ஏதோ கூட்டத்தில் பேசினவனாம்.

மணி: ஓமோம். கேள்விப்பட்டனான். இவர்களிற்கெல்லாம் ஏன் மாஸ்ரர் தேவையில்லாத வேலை. படிக்கப் போனால் படித்துப் போட்டு வராமல், சும்மா கவிதை, கூட்டம், உரிமை என்று . . . பிழைக்கத் தெரியாதவர்கள்.

மாஸ்ரர்: நீ சொல்கிறதும் சரிதான். இப்பத்தையப் பொடியன்களிற்கெல்லாம் துணிச்சல் கூடிப் போய்விட்டுது. பயபக்தியில்லை பார். முதலில், அந்த எல்லாம் வல்லவனைக் கும்பிடத் தெரிய வேண்டும். அவனின் சக்தி மீது பயம் வேண்டும். நம்பிக்கை வேண்டும்.

மணி: ஆனால், இவங்கள் கேள்வியல்லோ கேட்கிறாங்கள், மாஸ்ரர்

மாஸ்ரர்: அதான்! கேள்வி கேட்கிறாங்கள்.! மூட நம்பிக்கையென்றாங்கள். இதுகள் திருந்தாதுகள், மணி. நானும் ஒரு காலத்திலே கேள்விகள் கேட்டனான்தான். இதெல்லாம் தேவையா என்றெல்லாம் கேட்டனான் . . . ஒரு தலைமுறையே அழிந்து போய்விட்டது! அழித்திட்டாங்கள். துவக்குகள். குண்டுகள். கொலைகள். தண்டனைகள்.. . . . . கப்பங்கள் . . . இந்த இன உரிமை, தேச உரிமை எல்லாம் என்னத்திற்கு? முதலில் தனிமனித உரிமை. இரண்டாவது பத்திரிகை சுதந்திரம். இதிரண்டும் இல்லாமல் இந்தக் கதையெல்லாம் வெறும் சுத்துமாத்துதான். இந்த இரண்டும் இப்ப எங்கே சொல்லு, பார்ப்பம். இதெல்லாம் வரலாறு கண்டதுதான். இந்த பொல்பொட், ஸ்டாலின், மாஓ எல்லாம் என்ன செய்தாங்கள். தங்களுடைய சொந்த மக்களையே கொன்று குவித்தாங்கள். உரிமைகளை எல்லாம் எடுத்து, செம்மறி ஆட்டுக் கூட்டம் போல எல்லாரையும் மாற்றினாங்கள். . . . ஆனால் தம்பி, இப்பிடி என்னாலே வாழேலாது. அமைதியாக்கிடுவாங்கள். எனக்கு வாழ ஆசையாக இருக்குது. இப்படி (பிணத்தைச் சுட்டிக் காட்டி) அனாதையாகக் கிடக்கும் துரோகியாக விரும்பவில்லை. . . அவன் ஆட்டுவான், மணி நாங்கள் ஆட வேண்டியதுதான். இதை எல்லாம் பார்க்க எனக்குப் பயம் கூடுது. பக்தி கூடுது. நம்பிக்கை வருது! எல்லாத்தையும் நம்ப வேண்டும் போல இருக்குது. . . சரி மணி வாறன். தம்பி வாறன்.

அன்ரன்: என்னடா, மாஸ்டருக்கு கழண்டு போட்டுதோ?

மணி: நல்லாக் கழண்டு போட்டுது. வீட்டிலேயே சொல்லிப் போட்டு வந்திருக்கிறார் போல இருக்குது. இப்படி எல்லோருடனும் கதைப்பார் என்றால், அடுத்தது இவர்தான். பிழைக்கத் தெரியாத மனிசன்.

அன்ரன்: அது சரி. நீ என்ன அந்தப் பள்ளத்திலிருந்து எடுத்தனி . . . என்னை ரோட்டில் நின்று ஆட்கள் வருகினமா என்று பார்க்கச் சொல்லிப் போட்டு?

மணி: ஆ! அது வந்து . . . (பொக்கெட்டில் இருந்து ஒரு நூறு ருபா நோட்டை எடுக்கிறான்.) இந்தா நூறு ருபா மச்சான்! நீ அவனுடைய நிகத்தை பிடுங்கியிருக்கிறாங்கள் என்று சொன்னியல்லோ? அப்ப, இந்த நூறு ருபாய்; தாள் இலேசாக அவனுடைய கைக்குள் இருந்தது தெரிந்தது. பள்ளத்திற்குள்ளே இருந்த கை கொஞ்சம் மறைந்திருந்ததிலே ஒருத்தரும்; கவனிக்கவில்லை. அதான், அந்த ரெண்டு வெங்காயங்களையும் வெட்டிப் போட்டு இதை எடுப்பம் என்று . . . (நூறு ருபாய் நோட்டை எடுத்து விரித்துப் பார்க்கிறான்.) கொஞ்சம் இரத்தம் ஒரு பக்கம் பிரண்டிருக்குது . . . இல்லையடா? ஏதோ எழுதியிருக்குது! இரத்தத்தாலே எழுதியிருக்குது!

அன்ரன்: என்ன சிங்களத்திலே எழுதியிருக்கிறானோ?

மணி: இல்லையடா? தமிழ் போல இருக்குது. நீயும் பொம்மை, நானும் பொம்மை, நினைத்துப் பார்த்தால் எல்லாம் பொம்மை

அன்ரன்: கவிதை எழுதியிருக்கிறேனா?

மணி: கவிதை இல்லையடா, சினிமாப்பட்டு. ஜேசுதாஸ் பாடிய பாட்டு ஒன்று. இரத்தத்தில் எழுதியிருக்கிறான். நான் நினைக்கிறேன், இவன் சுட்டவுடனே நினைவிழந்திருக்க வேணும். அவர்கள் இவன் செத்திட்டான் என்று விட்டுட்டுப் போயிருக்கிறார்கள் போலிருக்குது. அவன் பிறகு நினைவு வந்து இதனை எழுதியிருக்கான்.

அன்ரன்: நீயும் பொம்மை

நானும் பொம்டை

நினைத்துப் பார்த்தால் எல்லாம் பொம்மை? . . . என்னடா அர்த்தம்?

மணி: யாருக்குத் தெரியும்? இதைத் தெரிந்து இப்ப என்னத்தைக் காணப் போகிறோம். வா, இதைக் கழுவிக் காய வைத்துவிட்டு கள்ளுக் கடைக்கு போய்க் கொஞ்சம் நிம்மதியாக இருப்பம். பிறகு, கொத்து ரொட்டி சாப்பிட வேண்டும் மச்சான். கனநாளாச்சு, மச்சான் கொஞ்ச நேரமாவது சந்தோஷமாய் இருப்பம்.

அன்ரன்: காணுமோடா காசு?

மணி: பார்ப்போம் வா.

(இருவரும் மேடையிலிருந்து போகிறார்கள். மேடையில் வெளிச்சம் குறைகிறது. இப்பொது பார்வையாளர்களிற்குத் தெரியும் கை – இந்தக் கை மூடி இருக்க வேண்டும் (எழுச்சிக்கை வடிவத்தில்) – மீது மட்டும் வெளிச்சம் பரவி இருக்க . . .

நீயும் பொம்மை

நானும் பொம்மை

நினைத்துப் பார்த்தா எல்லாம் பொம்மை (நீயும்)

தாயின் மடியில் பிள்ளையும் பொம்மை

தலைவன் முன்னே தொண்டனும் பொம்மை

கோவிலில் வாழும் தெய்வமும் பொம்மை

அதைக் கும்பிடும் மனிதர் யாவும் பொம்மை (நீயும்)

வல்லவன் கையில் நல்லவன் பொம்மை

உள்ளவன் முன் இல்லாதவன் பொம்மை (வல்லவன்)

அல்லும் பகலும் உழைப்பவன் பொம்மை

தினம் அல்லல் பட்டு அலைபவன் பொம்மை (நீயும்)

. . .

. . .

(என்ற பாடல் ஒலி பரப்பாகிறது. முடிந்தவரை பாட்டை ஒலிபரப்பவும். நாடகத்தின் கருத்தை பாட்டின் வரிகள் வலியுறுத்துவதால், பாட்டை முழுமையாக ஒலிபரப்புவது நல்லது)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *