ஹலோ, போலீஸ் ஸ்டேஷனா?

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: May 18, 2022
பார்வையிட்டோர்: 14,818 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 4 | அத்தியாயம் 5 | அத்தியாயம் 6

அடையாறில் இருந்த தில்லைநாயகத்தின் வீட்டிற்கு துப்பறியும் துளசிங்கம் சென்றது அதுதான் முதல் தடவை. ஆகவே சுற்றுமுற்றும் கண்ணோட்டம் செலுத்திய வண்ணம் வீட்டின் வாசலில் வந்து நின்றார் அவர். ஒருமுறை லேசாகக் கதவைத் தட்டினார். மறுகணம் கதவு திறந்துகொண்டது. கலவரமடைந்த முகத் தோற்றத்துடன் கதவினருகில் நின்று கொண்டிருந்தாள் காந்திமதி. அவளுடைய முகம் வெகுவாக மாறி இருந்தது. எஜமானரின் திடீர் மரணத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியின் கார ணமாக அவ்வாறு குழப்பமடைந்திருப்பாளோ என்று எண்ணினார் துளசிங்கம்.

“நீங்கள் உடனே வந்ததற்கு என்னுடைய மனமார்ந்த வந் தனம். உள்ளே வாருங்கள்; உங்களுக்காக வக்கீல் காத்துக் கொண்டிருக்கிறார்” என்று அழைத்தாள் காந்திமதி.

“என்ன விபத்து? வக்கீல் எதற்காக இங்கு வந்திருக்கிறார்?” என்று ஆவலுடன் கேட்டார் அவர்.

“சற்று நேரத்திற்கு முன்பு இங்கு நடந்தவைகளை நினைத்துப் பார்க்கும்போது என்னுடைய உடல் நடுங்குகிறது. வக்கீல் எல்லாவற்றையும் உங்களுக்கு விவரமாகச் சொல்லுவார்” என்று கூறியவண்ணம் ஹாலுக்குப் பக்கத்தில் இருந்த அறைக்கு அழைத்துச் சென்றாள் காந்திமதி.

வக்கீல் பஞ்சநாதன் நெற்றியில் பலமான கட்டுடன் அவ் வறையில் இருந்த பிரம்பு நாற்காலியில் அமர்ந்து சில குறிப்புகளைத் தயாரித்துக் கொண்டிருந்தார். அவரது கன்னத்திலும் முகவாய்க் கட்டையிலும் ரத்தக் கறைகள் தென்பட்டன. காந்திமதி கூறியது உண்மை! அவருக்குத்தான் ஏதோ பயங்கர விபத்து!

“மிஸ்டர் பஞ்சநாதன்! ஏன் ஒருமாதிரியாய் இருக்கிறீர்கள்? என்ன நடந்தது?” என்று பரபரப்புடன் கேட்ட வண்ணம் அவருக்கு எதிரில் வந்து நின்றார் துளசிங்கம்.

வக்கீல் தலையை உயர்த்தி ஒரு முறை அவரைப் பார்த்தார் துப்பறிபவரின் வருகையை அவர் எதிர்பார்க்கவில்லை என்று அவருடைய விழிகள் வெளிப்படுத்தின! ஒரு வினாடி நேரம் வைத்த விழி வாங்காமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்து விட்டுப் பிறகு பேச ஆரம்பித்தார் வக்கீல்:

“என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது! எவ்வாறு அந்த விபத்து ஏற்பட்டது என்றும் என்னால் நிச்சயமாய்க் கூறமுடியாது. அவைகளை நீங்கள் தான் கண்டு பிடிக்க வேண்டும்! முதலில் தில்லைநாயகத்தின் ஆபீஸ் அறையைப் பரிசோதனை செய்யுங்கள். பிறகு நடந்தவைகளை நான் நாளை கூறுகிறேன்” என்று கூறிவிட்டு நாற்காலியை விட்டெழுந்து மெல்ல நடந்தார். துளசிங்கம் அவரை ஆவலுடன் பின்பற்றிச் சென்றார். அந்த ஹாலின் மறுபுறமிருந்த அறையினுள் பிரவேசித்து, கரத்திலிருந்த டார்ச் விளக்கைப் பொருத்தினார். இருள் சூழ்ந்திருந்த அந்த அறை இப்பொழுது பிரகாசமாகியது. அந்த அறையிலிருந்த பொருள்கள் அலங்கோலமாய்க் கிடந்தன. கண்ணாடித் துண்டுகள் தரையில் சிதறிக் கிடந்தன. நாற்காலி ஒன்று தலைகுப்புற விழுந்திருந்தது. சுவரில் மாட்டப்பட்டிருந்த படம் ஒன்று ஆணியுடன் பெயர்த்துக்கொண்டு தரையில் விழுந்து நூறு சுக்கலாகிக் கிடந்தது; அந்த அறையைப் பார்த்தவுடன் மாம் பலம் ஆராய்ச்சிச்சாலையில் பாழாக்கப்பட்டிருந்த ஆதிகேசவனின் அறையின் நினைவுதான் அவருக்கு வந்தது. ஏறக்குறைய இரண்டும் ஒன்றுபோல் தோன்றியது. வக்கீல் அவ்வறையில் நடந்திருக்கும் விபத்தில் சிக்கிக்கொண்டுதான் படுகாயமடைந் திருக்க வேண்டும் என்று துளசிங்கத்திற்குப் புரிந்துவிட்டது!

வக்கீல் அவரை அழைத்துக்கொண்டு ஹாலுக்கு வந்து அங் கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டார். துளசிங்கம் டைரியை எடுத்து வைத்துக்கொண்டார், வக்கீல் நடந்த விஷயங்களைக் கூற ஆரம்பித்தார்:

“தில்லைநாயகத்தின் சொத்து சம்பந்தமான ஜாபிதாவைத் தயாரிப்பதற்காக நான் இன்று மாலை ஐந்து மணிசுமாருக்கு இங்கு வந்து சேர்ந்தேன். அப்பொழுது காந்திமதிமட்டும் தான் இந்த வீட்டில் இருந்தாள். தில்லைநாயகத்தின் மனைவிக்கு விஷயம் தெரிந்து அவள் வந்திருப்பாளோ என்று நினைத்தேன். ஆனால் அவளிடமிருந்து எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை. அவளுடைய விலாசம் எனக்குத் தெரியாததினால் அவளுக்கு விஷயத்தைத் தெரிவிக்க முடியவில்லை! நான் இந்த வீட்டில் இருக்கும் பொருள்களின் ஜாபிதாவைத் தயாரிக்க முற்பட்டேன். சிறிது நேரத்தில் என் வேலை முடிந்துவிட்டது. கடைசியாக தில்லைநாயகத்தின் ஆபீஸ் அறைதான் பாக்கி இருந்தது. அவ்வறையினுள் சென்று தில்லைநாயகத்தின் மேசை, பீரோ முதலியவைகளைப் பரிசோதனை செய்ய ஆரம்பித்தேன். சிறிது நேரத்திற்குள் இருட்டிவிட்டது. ஆகவே, மின்சார விசையை அழுத்தினேன். மறுகணம் ‘டுமீல்’ என்று துப்பாக்கி வெடிப்பதுபோல் பயங்கரச் சப்தம் ஒன்று கேட்டது! அந்த வெடி சப்தத்தினால் அவ்வறையே அதிர்ந்து போய்விட்டது போன்ற உணர்ச்சி ஏற்பட் டது. மறுகணம் கண்ணாடித் துண்டுகள் சிதறி என் முகத்தின் மீது விழுந்தன! நான் நிதானம் இழந்து நிலை தடுமாறி தரையில் விழுந்து விட்டேன்! ஓசை கேட்டு காந்திமதி அவ்வறையினுள் ஓடிவந்தாள். ‘என்ன சப்தம்? என்ன நடந்து விட்டது?’ என்று பதட்டத்துடன் கேட்டாள். என்னால் உடனே பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை. காந்திமதியின் உதவியின் பேரில் அறையைவிட்டு வெளியே வந்தேன். என் முகத்தில் இருந்த ரத்தக் கறைகளைத் துடைத்துக் கட்டுப்போட்டாள். உடனே பக்கத்து வீட்டில் இருக்கும் டாக்டரையும் வரவழைத்து எனக்குச் சிகிச்சை செய்தாள். அவள் தான் உங்களுக்கு விஷயத்தைத் தெரியப்படுத்தி இருக்கவேண்டும் என்று எண்ணுகிறேன்.”

“ஆமாம்! அதனால்தான் உடனே புறப்பட்டு வந்தேன். இந்த விபத்து எதனால் ஏற்பட்டது என்று உங்களால் சொல்ல முடியுமா?”

“தரையில் பட்டவுடன் வெடிக்கக்கூடிய பொருளை யாரோ ஜன்னல் வழியாக அந்த அறையினுள் வீசியிருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். அந்தப் பொருள் மின்சார பல்பின் மீதுபட்டு வெடித்துச் சிதறி இந்த விபத்தை உண்டாக்கி இருக்க வேண்டும்.”

“இந்த விபத்து சம்பந்தமாக யார் மீதாவது உங்களுக்குச் சந்தேகம் உண்டா ?”

“நான் ஒரு வக்கீலாகையினால் தொழில் முறையில் எனக்கு விரோதிகள் இல்லாமல் இல்லை. ஆனால் ஒருவருக்கும் என்னைக் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்காது. அவ்வளவு தூரத்திற்கு நான் ஒருவரையும் பகைத்துக் கொள்ள வில்லை. தில்லைநாயகத்தின் மீது பகைமை கொண்ட யாரோ தான் இதைச் செய்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். நான் தில்லைநாயகம் அமரும் நாற்காலியில் அமர்ந்து ஜாபிதா தயாரித்துக் கொண்டிருந்தபடியால் நான் தான் அவர் என்று நினைத்து அந்தக் குண்டை வீசி எறிந்திருக்கலாம்!”

“தில்லைநாயகம் முக்கிய ஆராய்ச்சி ஒன்றில் மும்முரமாய் வேலை செய்து கொண்டிருப்பதாய் எனக்குத் தெரிய வருகிறது. அது விஷயமாகப் பொறாமை ஏற்பட்டு இந்த விபத்து நடந்திருக்குமோ?”

“தில்லைநாயகத்துடன் நான் பழகி இருந்தபோதிலும் ரசா யனம், ஆராய்ச்சி முதலியவைகளைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. அதனால் அவர் அவைகளைப்பற்றி என்னிடம் ஒரு போதும் பேசியதில்லை. அவருடைய ஆராய்ச்சிகளைப்பற்றி அறியவும் நான் ஆசைப்பட்டதில்லை. ஆனால் ஒருவித விசேஷ மரப்பட்டையிலிருந்து பஞ்சு தயாரிக்க பெருமுயற்சி செய்து வருவதாக மட்டும் ஒருமுறை என் காதில் விழுந்தது! அந்த அராய்ச்சி வெற்றி கரமாக முடிந்தால் தங்களுக்குப் பெருத்த லாபமும், பெயரும் புகழும் கிடைக்கும் என்று அவர் சொல்லி இருக்கிறார். அவர்களின் ஆராய்ச்சியின்போது யார் மரணமடைய நேர்ந்த போதிலும் உயிருடன் இருப்பவரே அதனால் ஏற்படும் பலன்களை அனுபவித்துக் கொள்ளவேண்டும் என்று அவர்கள் இருவரும் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தபடியால், அந்த ஆராய்ச்சிச் சாலையை ஆதிகேசவனிடமே ஒப்படைத்துவிடப் போகிறேன்” என்றார் வக்கீல்.

“இன்று மாலை ஆதிகேசவனைப் பார்த்தபோது தில்லைநாயகத்தின் ஆராய்ச்சிக் குறிப்புகளைப்பற்றி அவர் விசாரித்தார். விரோதிகளின் கரத்தில் சிக்கிவிடப் போகிறதே என்று மிகவும் கவலைப்பட்டார்.”

“அதைப்பற்றி அவர் கவலைப்பட வேண்டாம். அவருடைய குறிப்புகள் அனைத்தும் என்னிடம் பத்திரமாய் இருக்கின்றன. அந்தக் குறிப்புகளில் என்ன எழுதி இருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது” என்றார் வக்கீல்.

அந்தச் சமயத்தில் காந்திமதி தேனீர் நிரம்பிய இரண்டு பீங்கான் கோப்பைகளைக் கொண்டு வந்து அவர்களின் முன்னால் வைத்தாள். மின்சார விசையில் ஏதாவது பழுது ஏற்பட்டு அந்த விபத்து நேர்ந்திருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்ட படியால், “மின்சார அமைப்பில் சமீபத்தில் ஏதாவது பழுது ஏற்பட்டதா?” என்று கேட்டார்.

“அப்படி ஒன்றும் இல்லை. நேற்றுக்கூட எலெக்டிரிக் ஆபீஸி லிருந்து விளக்குகளைப் பரிசோதனை செய்ய ஒருவன் வந்து விட்டுப் போனான்.”

“நேற்று வந்திருந்தானா?”

“ஆமாம், எஜமானர் வழக்கமாக ஏழு மணிக்கு வந்து விடுவார். அவருடைய வருகையை எதிர்பார்த்த வண்ண ம் வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது டெலிபோன் மணி ஒலித்தது. எஜமானரிடமிருந்து ஏதாவது செய்தி வந்திருக்கிறதோ என்று அதைக் கவனித்தேன். அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாய் அறிந்து அங்கு கிளம்ப முயற்சித்துக் கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் தான் எலெக்டிரிக் கம்பெனியிலிருந்து அந்த ஆசாமி வந்திருந்தான். இந்த வட்டா ரத்தில் அடிக்கடி மின்சாரப் பழுது ஏற்படுவதாகவும் அதனால் ஒவ்வொரு இடமாகப் பரிசோதனை செய்துகொண்டு வருவதாக வும் சொன்னான். என்னுடைய அவசரத்தையும் அவன் பொருட் படுத்தவில்லை. ஒவ்வொரு விளக்குகளாகப் பார்த்துக்கொண்டே வந்தான். ஒன்றிரண்டு பல்புகளையும் மாற்றினான்.”

“அப்படியா? அவன் தில்லைநாயகத்தின் அறையினுள் சென்றானா?”

“அவன் அந்த அறைக்குள்ளும் சென்றான். ஆனால் அங்கு என்ன செய்தான் என்பது எனக்குத் தெரியாது. ஒரு வேளை அந்த அறையின் பல்பையும் அவன் மாற்றி வைத்தாலும் வைத்திருக்கலாம்.”

“அந்த ஆசாமி வந்துபோன பிறகு நீங்கள் தில்லைநாயகத் தின் அறையினுள் சென்றீர்களா?”

“இல்லை. அங்கு செல்ல வேண்டிய அவசியம் எனக்கு ஏற் படவில்லை. அவர் இறந்துவிட்ட செய்தி எனக்குக் குழப்பத்தை உண்டாக்கி விட்டபடியால் அந்த அறைக்குள் செல்லவில்லை. எலெக்டிரிக் கம்பெனியிலிருந்து அந்த ஆசாமி வந்துபோன பிறகு முதல் முதலாக வக்கீல்தான் அந்த அறையினுள் சென்றார்.”

“நீங்கள் அந்த ஆசாமியின் அடையாளம் கூறமுடியுமா?”

“அவனுக்கு அதிக வயதாகவில்லை. நல்ல உயரமும் உயரத் திற்கேற்ற உடலமைப்புடனும் இருந்தான்.”

“மறுபடியும் அவனைப் பார்த்தால் அடையாளம் கூற முடியுமா?”

“அவனை எனக்கு நன்றாய் நினைவு இருக்கிறது. பார்த்தால் உடனே சொல்லிவிடுவேன்.”

குற்றுவாளி தான் மின்சாரக் கம்பெனியைச் சேர்ந்த ஆசாமி என்று சொல்லிக்கொண்டு காந்திமதியை ஏமாற்றி இருக் கிறான் என்பது விளங்கிவிட்டது. அத்துடன் அவன் தான் மின் சாரம் பாயும்போது வெடிக்கக்கூடிய விசேஷ பல்பைப் பொறுத்தி விட்டுப் போயிருக்கிறான் என்பதும் விளங்கியது. தில்லைநாயகம் ஆபீஸ் அறையினுள் பிரவேசித்து மின்சார விசையை அழுத்துவார், மறுகணம் அந்த பல்பு வெடித்து அவர் விபத்திற்குள் ளாகி விடுவார் என்று குற்றவாளி எண்ணியிருக்க வேண்டும். ஆனால் அது வேறு விதமாக முடிந்துவிட்டது!”

“அது சரி! விஜயவல்லியை உங்களுக்குத் தெரியுமா?” என்று விசாரணையை வேறு பக்கம் திருப்பினார் துளசிங்கம்.

நன்றாகத் தெரியும். அவள் இந்த வீட்டில் இருந்தபோது தான் நான் இங்கு வேலைக்கு வந்து அமர்ந்தேன்.”

“விஜயவல்லி வீட்டைவிட்டு வெளியே போவதற்கு என்ன காரணம் என்று சொல்ல முடியுமா?”

“அவள் நாகரிக மோகம் கொண்டவள். குடும்பத்தின் மீது அவளுக்குக் கொஞ்சம்கூட அக்கறை கிடையாது.”

“கணவனுக்கும் மனைவிக்கும் ஏன் மனஸ்தாபம் ஏற்பட்டது ?”

“விஜயவல்லி நினைத்தபோது வீட்டைவிட்டு வெளியேறுவாள். நினைத்த சமயத்தில் திரும்பி வருவாள். எஜமானரின் வார்த்தைகளுக்குச் சற்றும் மதிப்பு கொடுக்க மாட்டாள். எதிர்த்துப் பேசுவாள். என்ன தான் ஒரு பெண்ணுக்குச் சுதந்திர உணர்ச்சி இருந்தபோதிலும் இவ்வாறு அலட்சிய மனோபாவத் துடன் நடந்துகொண்டால் கணவனுக்குக் கோபம் உண்டாவது இயற்கைதானே? அதன் விளைவாக எழுந்த மனஸ்தாபம் வளர்ந்து பெரும்புயலாகிவிட்டது.”

“அவள் யாருடன் அதிகத் தொடர்பு கொண்டிருந்தாள் என்று சொல்லமுடியுமா?”

“நான் இங்கு வேலைக்கு வந்தது முதல் என்னை வெறுத்து வந்தாள் அவள். நான் அவளுடைய கணவரின் கட்சியைச் சேர்ந்தவள் என்று என்னிடம் அதிகம் பழகாமல் இருந்து வந்தாள். நானும் அவளுடைய விஷயங்களில் தலையிடாமல் தான் இருந்துவந்தேன். ஆயினும் அவளுக்கு நிறைய சிநேகிதர் கள் உண்டு என்பது எனக்குத் தெரியும். வாலிபர்கள் பலர் அடிக்கடி அவளைப் பார்க்க இங்கு வருவது உண்டு. எல்லோரிடமும் சகஜமாகப் பேசிப் பழகிவந்தாள் அவள். ஆனால் யாருட னும் விசேஷ அபிமானத்துடன் நடந்து கொண்டதில்லை. கணவனின் கொள்கையும் அடக்கு முறையும் தனக்குப் பிடிக்கவில்லை என்ற காரணத்தினால் தான் அவள் வீட்டைவிட்டு சென்றாளே தவிர, வேறு விதமாக அவள் மீது சந்தேகம் கொள்வற்கில்லை” என்று பதிலுரைத்தாள் காந்திமதி.

துப்பறியும் துளசிங்கம் அவளை அனுப்பிவிட்டு வக்கீலின் பக்கம் தலையைத் திருப்பினார். விஜயவல்லியின் குணாதிசயங் களைப்பற்றி அவர் ஏற்கனவே அறிந்திருந்தபடியால் காந்திமதியின் வார்த்தைகளைக் கேட்டு ஆச்சரியப்படவில்லை. ஆனால் மின் சார பல்பைப்பற்றி அவள் கூறிய செய்திதான் அவருக்குத் திகைப்பை உண்டாக்கியது. ‘முதல் நாள் மின்சாரத்தைப் பரிசோதனை செய்யவந்தவன் உண்மையானவன் தானா என்று அறிய காந்திமதி ஏன் முயற்சி செய்யவில்லை? இருட்டிய பிறகு எலெக் டிரிக் கம்பெனியிலிருந்து பரிசோதனை செய்ய யாராவது வருவார் களா என்ற சந்தேகம் ஏன் அவளுக்கு எழவில்லை? ஒருவேளை அவளும் இந்த விபத்திற்குக் காரணமாய் இருப்பாளோ? இவ்வாறு பல வினாக்கள் எழுந்து வக்கீலைக் குழப்பின. காந்திமதியை விசாரித்ததிலிருந்து அறிந்த உண்மைகளை டைரியில் குறித்துக் கொண்டு, “தில்லைநாயகத்தின் உயிரைப் போக்குவதற்காகத்தான் இந்தத் தந்திரம் கையாளப்பட்டிருக்கிறது, ஆனால் அவர் தப்பி விட்டார், இதிலிருந்து குற்றவாளிக்கு இரண்டு முக்கிய விஷயங்கள் தெரிய வந்திருக்கின்றன என்ற உண்மை விளங்குகிறது. குற்ற வாளி, தில்லைநாயகத்தின் அன்றாட அலுவல்களையும், அவர் வீட்டில் இல்லாத சமயங்களில் வேறு எவரும் ஆபீஸ் அறையினுள் செல்ல மாட்டார்கள் என்ற விஷயமும் தெரிந்திருக்கிறது என்பது ஒன்று. அத்துடன் அவனுக்கு தில்லைநாயகம் அன்று இரவு ரத்தத்தில் விஷக்கலப்பு ஏற்பட்டு அதனால் பாதிக்கப்படுவார் என்பது தெரியாமல் இருந்திருக்கிறது என்பது மற்றொன்று” என்றார் துளசிங்கம்.

“இந்த இரண்டு குற்றங்களையும் ஒரே ஆசாமி செய்திருக்க முடியாது என்றே எனக்குத் தோன்றுகிறது. தில்லைநாயகத்தின் உணவில் விஷத்தைக் கலக்க ஏற்பாடு செய்தவன் மறுபடியும் அவ ருடைய ஆபீஸ் அறையில் மின்சார பல்பை மாற்றி அமைத்து இவ்வித விபத்தை உண்டாக்க ஏன் சூழ்ச்சி செய்ய வேண்டும்? இரண்டும் வெவ்வேறு ஆசாமிகளினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் என்றுதான் நான் எண்ணுகிறேன்” என்றார் வக்கீல்.

“நீங்கள் நினைப்பதுபோல் இரண்டு வெவ்வேறு. ஆசாமி கள் இவைகளைச் செய்திருக்கலாம். ஆனால் விஜயவல்லி தான் இவைகளுக்கு அடிப்படையான காரணம் என்று நான் நிச்சய மாய்க் கூறுவேன். அவள் தன் கணவனைப் பயமுறுத்திக் கடிதம் எழுதி இருக்கிறாள். அவளுடைய ஆசாமி ஒருவன் தில்லைநாய கத்தைப் பின்பற்றிச் சென்று இருக்கிறான். அத்துடன் ஆபீஸ் அறையில் மின்சார பல்பை மாற்றி அமைத்தவன், விஜயவல்லி யின் ஆசாமி என்றும் எண்ணத் தோன்றுகிறது. விஜயவல்லி தன் கணவனை ஒழிக்க இரண்டு பேரை நியமித்திருக்கிறாள் என்று எண்ணுகிறேன். அவருடைய உணவில் விஷம் கலக்கும் பொறுப்பை ஒருவனிடம் ஒப்படைத்திருக்கிறாள். அது ஒரு வேளை தவறி விடப்போகிறதே என்று தான் வீட்டினுள் அவரை விபத்திற்குள்ளாக்க மற்றொருவனை நியமித்திருக்கிறாள், தில்லை நாயகம் தற்செயலாக இறக்கவில்லை. மனைவியினால் தந்திரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். விஜயவல்லியைச் சந்தித்து விசா ரித்தால் உண்மை விளங்கும்” என்று கூறிவிட்டு அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டார் துளசிங்கம்.

– தொடரும்…

– ஹலோ, போலீஸ் ஸ்டேஷனா?, முதற் பதிப்பு: பெப்ரவரி 1957, தி லிட்டில் ப்ளவர் கம்பெனி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *