ஹலோ, போலீஸ் ஸ்டேஷனா?

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: May 12, 2022
பார்வையிட்டோர்: 15,617 
 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 3 | அத்தியாயம் 4 | அத்தியாயம் 5

இன்ஸ்பெக்டர் சங்கரன் சில முக்கிய விஷயங்களைச் சேகரித்து வைத்துக்கொண்டு துளசிங்கத்தின் வருகையை எதிர் பார்த்த வண்ணம் இருந்தார். துளசிங்கத்தைக் கண்டவுடன் அவருடைய முகம் மலர்ந்தது.

“விஜயவல்லியின் கடிதத்தைப் பற்றிய செய்தி நேற்று இரவே எனக்குத் தெரிந்துவிட்டது. உடனே அவளைப்பற்றி விசாரிக்க ஏற்பாடு செய்தேன், காஞ்சீபுரத்திலிருக்கும் ஸி. ஐ.டி. இலாகாவிலிருந்து எனக்குச் சில விஷயங்கள் தெரியவந்திருக் கின்றன. அதை உங்களிடம் கூறுவதற்காகத்தான் காத்துக் கொண்டிருந்தேன். தில்லைநாயகத்தின் மனைவி விஜயவல்லி காஞ்சீபுரத்தில் இருக்கும் பரிமளபவனம் ஓட்டலில் ஓர் அறையை ஏற்பாடு செய்துகொண்டு ஒரு மாத காலமாக அங்கு வசித்து வந்தாளாம்! அடிக்கடி அவள் வெளியே போய் வந்துகொண்டிருந்தாளாம். அவளைப் பார்க்கவும் பலர் அடிக்கடி அந்த ஓட்டலுக்கு வந்து கொண்டிருந்தனராம். இதிலிருந்து காஞ்சீபுரத்தில் அவளுக்குத் தெரிந்தவர்கள் பலர் இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறதல்லவா? இன்று காலை ஒரு வாலிபன் அவளைப் பார்க்க பரிமளபவனத்திற்கு வந்தானாம். இருவரும் சற்று நேரம் தனிமையில் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்களாம். கால்மணி நேரத்திற்குப் பிறகு அந்த வாலிபன் சென்றுவிட்டானாம். அரை மணி நேரத்திற்குப் பிறகு அவளும் அவசர அவசரமாய்த் தன் அறையைக் காலி செய்துகொண்டு, ஒரு டாக்ஸியில் காஞ்சீபுரம் ஸ்டேஷனுக்குப் புறப்பட்டு விட்டாளாம். இதிலிருந்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்.

“நினைப்பதற்கு என்ன இருக்கிறது? விஜயவல்லியைச் சந்தித்த வாலிபன் நேற்று தில்லைநாயகத்தைப் பின் தொடர்ந்து பேசியவனாகத்தான் இருக்க வேண்டும்! தில்லைநாயகத்தைக் கொலை செய்ய அவன் ஏதோ ஒரு தந்திரத்தைக் கையாண்டு இருக்கிறான். அவன் முயற்சி பலித்துவிட்டது. தில்லைநாயகம் அவனுடைய சூழ்ச்சி வலையில் சிக்குண்டு பலியாகிவிட்டார். தன் வெற்றியைத் தெரிவிக்கத்தான் அந்த வாலிபன் காஞ்சீபுரத் திற்குச் சென்று இருக்கிறான். ஏற்கெனவே கணவன்மீது விரோதமும் பகையையும் கொண்டிருந்த அவள் தில்லைநாயகத்தின் மரணச் செய்தியைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்திருக்கிறாள். அடுத்தபடியாக நடக்கவேண்டியவைகளைக் கவனிப்பதற்காகத்தான் அத்துணை அவசரமாய் அவள் புறப்பட்டிருக்கிறாள்!” என்று ஆணித் தரமான குரலில் கூறி முடித்தார் துளசிங்கம்.

“அவ்வளவு சுலபமாக நீங்கள் ஒரு தீர்மானத்திற்கு வந்து விட்டீர்களே? ஆனால் ஒரு பெண் எவ்வளவுதான் தன் கணவரை வெறுத்து வந்தபோதிலும், அவருடைய மரணச்செய்தியைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்திருப்பாள் என்று என்னால் நினைக்கக்கூட முடியவில்லை!” என்று சற்று வியப்புடன் கூறினார் இன்ஸ்பெக்டர்.

“இந்தக் காலத்தில் நினைக்கமுடியாத விஷயங்கள் எத் தனையோ நடந்துவிடுகின்றன! கொலை செய்வாள் பத்தினி என்று அந்தக் காலத்திலேயே சொல்லியிருக்கிறார்கள். அவ்வாறு இருக்கும்போது வேண்டாத புருஷன் மரணமடைந்த செய்தி யைக் கேட்டு அவள் மகிழ்ச்சி அடைந்ததில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? மேலும் பெண்களின் நாகரிக மோகமும் முற்போக்குக் கொள்கையும் ரொம்பதூரம் வளர்ந்துவிட்டன. இந்த நிலையில் விஜயவல்லியின் மனப்போக்கைக் கண்டு நாம் ஆச்சரியமடைவதற்கு ஒன்றுமில்லை.”

அப்படியானால் நேற்று தில்லைநாயகத்தைப் பின்தொடர்ந்த வாலிபனுக்கும் விஜயவல்லிக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று நீங்கள் சொல்லுகிறீர்களா?”

“ஆமாம்!”

“சரி! அப்படியே வைத்துக்கொள்வோம். நீங்கள் குறிப்பிடும் அந்த வாலிபனை ‘வாசகன்’ என்று குறிப்பிடுவோம். அவனுக்கும் அவளுக்கும் எந்தவிதத்தில் தொடர்பு இருந்திருக்கும் என்று சொல்கிறீர்கள்?”

“இதுவரை நான் கேட்டறிந்த விஷயங்களையும் இப்பொழுது நீங்கள் குறிப்பிடும் விஷயத்தையும் ஒன்று சேர்த்துப் பார்த்தால் உண்மை விளங்கிவிடும், வக்கீலின் வாக்குமூலத்தின்படி விஜய வல்லி தன்னைக் கலியாண பந்தத்திலிருந்து விடுதலை செய்யும்படி தன் கணவனை வற்புறுத்தி வந்திருக்கிறாள் என்பது விளங்கு கிறது. நாகரிக மோகமும் முற்போக்குக் கொள்கைகளும் மிகுந்த அவள் வேறு ஒருவனை மணம் செய்து கொள்ளவேண்டும் என்பதே அதற்குக் காரணமாய் இருக்கவேண்டும். நம் நாட்டுக் கலாசாரத்திற்கு முற்றிலும் புறம்பானதுதான். ஆயினும் விஜயவல்லியிடம் அவ்வித எண்ணம் ஏற்பட்டிருக்கலாம் என்று நினைக்க இடமிருக்கிறதல்லவா? அந்த ஆசாமி நாம் சந்தேகிக்கும் வாசகனாகத்தான் இருக்கவேண்டும். விஜயவல்லி தன் கணவனின் பிடிவாதத்தைப் போக்க முயன்று தோல்வி அடைந்த தால் அவனை ஒழித்துவிட அவள் திட்டமிட்டிருக்கிறாள். வாசகன் அந்த விஷயத்தில் அவளுக்கு உதவி செய்யத் தீர்மானித்திருக் கிறான். அவன் காஞ்சீபுரத்திலிருந்து புறப்பட்டு நேற்று மாலை மாம்பலத்திற்கு வந்து தில்லை நாயகத்தைக் காணக் காத்துக் கொண்டிருந்திருக்கிறான். தில்லைநாயகம், ஆதிகேசவனுடன் ஆராய்ச்சிச்சாலையைவிட்டு வெளியே வந்தபடியால் அவ்வளவு சுலபத்தில் அவரைச் சந்தித்துப் பேசமுடியாமல் போய்விட்டது. அதனால்தான் அவன் அவரைப் பின்பற்றிச் சென்றிருக் கிறான்! இருவரும் ஒன்றாகச் சேர்ந்து சென்றுகொண்டிருந்தபடியால் தில்லைநாயகத்தைத் தனிமையில் சந்திக்க சமயம் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறான். வேறுவழி தோன்றாததால்தான் ஐஸ்கிரீம் பாரில் அவரைக் கண்டு தனிமையில் அழைத்துவந்து அவ ருடன் பேசியிருக்கிறான். அப்பொழுதும் அவர் தன் மனைவி யைக் கலியாண பந்தத்திலிருந்து விடுதலை செய்யக் கண்டிப்பாக முடியாது என்று கூறியிருக்கிறார். அவருடைய முடிவான பதிலைக் கேட்பதற்காகத்தான் அவன் வாசலில் காத்துக் கொண்டிருக்கவேண்டும். அவர் வெளியே வந்து டாக்ஸியில் புறப்பட்டவுடன் வாசகனும் மற்றொரு டாக்ஸியில் அவரைப் பின் தொடர்ந்து இருக்கிறான். தில்லைநாயகம் உடல் நிலை பாதிக் கப்பட்டு நேராக அவர் ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்குச் சென்றது நமக்குத் தெரியும். வாசகன் ஆஸ்பத்திரியை அடைந் திருக்கிறான். தில்லைநாயகம் இறந்துவிட்ட செய்தியைக் கேட்டுக் கொண்டு அங்கிருந்து காஞ்சீபுரத்திற்குத் திரும்பி யிருக்க வேண்டும். அந்த வாசகனின் மூலம் விஷயத்தை அறிந்து கொண்டு தன்னுடைய காதலனுடன் வாழ்க்கையை நடத்த அவனுடன் புறப்பட்டுவிட்டாள் அந்தக் காரிகை!” என்று கூறி விட்டுக் கம்பீரமாக இன்ஸ்பெக்டரைப் பார்த்தார் துளசிங்கம்.

“உங்கள் காதில் விழுந்த விஷயங்களை ஒன்று சேர்த்து பிரமாதமாக வர்ணித்து விட்டீர்கள். ஆனால் இரண்டு முக்கிய விஷயங்களை மறந்துவிட்டீர்கள். தில்லைநாயகத்தின் அறையினுள் குற்றவாளி புகுந்திருக்கவேண்டும் என்று சந்தேகிப்பதற்கான ஆதாரம் இருக்கிறது. அத்துடன் ஓட்டலில் தில்லைநாயகம் புசித்த சிற்றுண்டியில் விஷம் கலக்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு குற்றங்களிலும் வாசகனுக்கு சம்பந்தம் இல்லை என்று எண்ணத் தோன்றுகிறதே!”

“நன்கு யோசித்துப் பார்த்தால் அந்தச் சந்தேகமும் நீங்கி விடும். தில்லைநாயகத்தை நேரில் சந்தித்து அவருடைய பிடிவாதத்தைப் போக்கிவிடலாம் என்று எண்ணியிருக்கிறான் அந்த வாசகன். ஆனால் அவர் கண்டிப்பாக மறுத்துவிட்டது, அவ னுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது. அவர்கள் சிற்றுண்டி புசிக்கத்தான் எங்கோ சென்றிருக்கிறார்கள் என்று தீர்மானித்துக் கொண்டு அவன் ஆராய்ச்சிச்சாலைக்குத் திரும்பிச் சென்று பின் புறக் கண்ணாடி ஜன்னலை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந் திருக்கிறான். ஒருவேளை தில்லைநாயகம், ஆதிகேசவனின் தூண்டு தலின் பேரில் அத்தனை பிடிவாதமாய் இருக்கிறாரோ என்று எண்ணிக்கொண்டு அவருடைய ஆராய்ச்சிக் கருவிகளை உடைத் திருக்கிறான். பிறகு தில்லைநாயகத்தின் அறையினுள் சென்று விஜயவல்லியின் வேண்டுகோளுக்குச் சாதகமாய் கடிதம் ஏதாவது கிடைக்கிறதா என்று பார்த்திருக்கிறான். அந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. ஆகவே, ஏமாற்றத்துடன் அங்கிருந்து வெளியேறி பாண்டி பஜாரின் பக்கம் வந்திருக்கிறான். அந்த சமயத்தில் அவனுக்கு அவர்கள் இருவரும் ஓட்டலுக்குள் இருப்பது தெரியவந்திருக்கிறது. தில்லைநாயகம் உயிருடன் இருக்கும்வரை விஜயவல்லி இன்பமாய் வாழமுடியாது என்று தீர்மானித்து அவர்கள் அமர்ந்திருந்த மேசையைக் கவனித்துக்கொள்ளும் ஓட்டல் சிப்பந்தியைச் சரிப்படுத்திக்கொண்டு இருவருடைய சிற்றுண்டியிலும் விஷம் கலந்துவிட ஏற்பாடு செய்திருக் கிறான்! ஆதிகேசவன் ஆரோக்கியமாய் இருந்தபடியால் அந்த விஷம் அவரை அவ்வளவாகப் பாதிக்கவில்லை. தில்லைநாயகம் ஏற்கனவே நோய் வாய்ப்பட்டிருந்தபடியால்தான் அவர் இறந்துவிட்டார். இதுதான் என்னுடைய ஊகம். இதற்கு நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?”

“சரியான ஆதாரம் இல்லாமல் நீங்கள் இவ்வாறு முடிவு செய்துவிட்டீர்கள்! வாசகன் தான் ஆராய்ச்சிச்சாலையினுள் புகுந்தான் என்பதற்கு என்ன சாட்சியிருக்கிறது? தில்லைநாயகம் ஓட்டலில் இருந்தது அவனுக்கு எவ்வாறு தெரியவந்தது? சிறந்த ஓட்டல் முதலாளியான ரகுராமன் அவ்வாறு பொறுப் பற்ற சிப்பந்தியைத்தான் ஓட்டலில் வேலைக்கு வைத்துக்கொண் டிருந்திருப்பாரா? மேலும் நீங்கள் இதுபற்றி ஓட்டல் முதலாளியையும் சிப்பந்திகளையும் விசாரித்திருந்திருக்கிறீர்களே! அவ்வாறு ஏதாவது இருந்தால் கொஞ்சமாவது உண்மை வெளி வந்திருக்குமல்லவா? அந்தக் கேள்விகளை எண்ணிப் பார்க்கும் போது எனக்கு ஒரே குழப்பமாய் இருக்கிறது!”

“இந்த வழக்கில் கொலை, கொள்ளை ஆகிய இரண்டு குற்றங்களும் நடந்திருக்கின்றன. அதனால்தான் இத்தனை குழப்பங்கள் தோன்றியிருக்கின்றன. இவ்வாறு பலவிதமாக சிந்தித்தால் தான் நாம் ஒருவித முடிவிற்கு வரமுடியும். வாசகனின்மீது குற்றம் சாட்டத் தகுந்த ஆதாரங்களைத்தான் நான் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன். முதல் முதலாக வாசகனின் நட வடிக்கைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். ஐஸ்கிரீம் பாருக்குச் சென்றால் ஓரளவு உண்மை கிடைக்கும். அடுத்தபடியாக காஞ்சீபுரம் பரிமள பவனத்திற்குச் சென்றால் அங்கு விஜயவல்லியைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்ளலாம். பிறகுதான் அவ்விருவரின் இருப்பிடத்தையும் கண்டுபிடிக்க முயற்சி செய்ய வேண்டும்” என்று கூறிவிட்டு இன்ஸ்பெக்டரிடம் விடை பெற்றுக்கொண்டு ஐஸ்கிரீம் பாருக்குப் புறப்பட்டார் துளசிங்கம்.

அப்பொழுது மாலை ஐந்து மணி இருக்கும். ஐஸ்கிரீம் பாரில் கூட்டம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது, துளசிங்கம் உயர்ந்தரக சாக்லேட்டு ஒன்றைக் கொண்டுவரச் சொல்லிவிட்டு அங்கு வேலை பார்த்துவந்த ஒவ்வொருவரையும் கவனித்துக் கொண்டே இருந்தார். முதலாளி ஒரு பீங்கான் தட்டில் துளசிங்கம் கேட்ட சாக்லேட்டைக் கொண்டுவந்து வைத்தார். துளசிங்கம் அவருடன் பேச்சுக் கொடுத்து விஷயத்தை ஆரம்பித் தார். தில்லைநாயகத்தை அவருக்குப் புரியவில்லை. ஆனால் ஆதிகேசவனின் பெயரைக் கேட்டவுடன் அவர் புரிந்து கொண்டு விட்டார்.

“அவரை எனக்கு நன்றாய்த் தெரியும். சிற்சில சமயங்களில் காலை வேளைகளில்கூட ரொட்டி, பிஸ்கேட்டு முதலியவைகளைச் சாப்பிட இங்கு வருவார். ஆனால் இன்று காலையிலிருந்து அவரைக் காணவில்லை” என்றார் முதலாளி.

“அவருக்கு உடம்பு சரியாக இல்லை. இரண்டு மூன்று தினங்களில் சரியாகிவிடும். அது சரி, நீங்கள் அவரைக் கடைசியாக எப்போழுது பார்த்தீர்கள் என்று சொல்லமுடியுமா?”

“ஏன், நேற்று மாலைகூட அவரைப் பார்த்தேன். அவர் தன்னுடன் வேறு ஒருவரையும் அழைத்துக்கொண்டு வந்திருந் ததும் எனக்கு நினைவு இருக்கிறதே!”

“இவர்கள் இருவரும் என்ன அருந்தினார்கள் என்று சொல்ல முடியுமா?”

“நேற்று நாங்கள் பாதாம் எஸென்ஸினால் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம்தான் செய்திருந்தோம். அதைத்தான் அவர்கள் கொண்டு வரச் சொன்னார்கள்.”

“அவர்களைப் பார்க்க வேறு யாராவது வந்திருந்தார்களா?”

“நான் வேலை செய்துக்கொண்டிருந்த போதிலும் யார் வருகிறார்கள், யார் போகிறார்கள் என்பதை என் கண்கள் எப்பொழுதும் கவனித்துக்கொண்டுதான் இருக்கும். அதனால்தான் வாசல் பக்கத்துப் படிக்கட்டில் ஆதிகேசவனுடன் வந்திருந்த ஆசாமி வேறு ஒரு வாலிபனுடன் பேசிக் கொண்டிருந்ததை நான் கவனித்தேன். ஆனால் அவர்கள் என்ன பேசிக்கொண்டிருந்தார்கள் என்பது எனக்குத் தெரியாது.”

“அவர்கள் இருவரும் எவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள் என்று சொல்ல முடியுமா?”

“இரண்டு மூன்று நிமிடங்கள் தான் இருக்கும், ஆதிகேசனின் நண்பரைப் பார்க்க வந்திருந்த ஆசாமி பலமாகக் கரங்களையும் தலையையும் அசைத்த வண்ணம் பேசிக்கொண்டு இருந்தான். ஆனால் அவனுடைய பேச்சு, என் காதில் விழவில்லை, கடைசியாக அவர், ‘முடியாது! கண்டிப்பாக முடியாது!’ என்று கூறிய வார்த்தைகள் தான் என் செவிகளில் விழுந்தன; மறுகணம் அவர் உள்ளே வந்துவிட்டார், அந்த வாலிபனும் வெளியே சென்றுவிட்டான்.”

“அந்த வாலிபனை உங்களால் அடையாளம் கூற முடியுமா?”

“அவனை எனக்கு நன்றாய் நினைவு இருக்கிறது, சற்று மாநிறம் ; நல்ல உயரம்; உயரத்திற்கேற்ற உடலமைப்பு. வட்ட வடிவமான முகம்; அலை அலையாக வாரி விடப்பட்டிருந்த கிராப்பு. அவனை மறுபடியும் பார்த்தால் அடையாளம் கூறிவிடுவேன்!”

இந்த விசாரணை துப்பறியும் துளசிங்கத்திற்கு மிகுந்த திருப்தியை அளித்தது. வாசகனை – அதாவது குற்றவாளியை அடையாளம் கண்டுபிடிக்க இப்பொழுது இரண்டு ஆசாமிகள் இருக்கிறார்கள்! காஞ்சீபுரத்திற்குச் சென்றால் குற்றவாளியைப் பற்றி மேலும் சில உண்மைகளும் கிடைக்கும் என்ற நம்பிக்கை யும் ஏற்பட்டது. ஐஸ்கிரீம் பாரில் விசாரணை செய்த பிறகு, அவர்கள் புசித்த ஐஸ்கிரீமில் விஷம் கலக்கப்பட்டிருந்ததா அல்லது சிற்றுண்டியில் விஷக் கலப்பு ஏற்பட்டதா என்ற குழப்பம் ஏற் பட்டது. துளசிங்கம் அந்தக் குழப்பத்தோடு இன்ஸ்பெக்டரைக் காணப் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றார்.

முதல் நாள் இரவு போலவே அவர். அப்பொழுது அங்கு இல்லை! இன்ஸ்பெக்டர் தனக்குத் தெரியாமல் அதே வழக்கில் வேலை செய்வது துளசிங்கத்திற்குப் புரிந்துவிட்டது. ஆனால் அதைப்பற்றி அவர் கவலைப்படவில்லை! எப்படியாவது குற்ற வாளியைக் கண்டு பிடிக்கவேண்டும் என்று தான் எண்ணம் கொண்டிருந்தார் அவர். தன்னுடைய இருப்பிடத்திற்குச் செல்ல வேண்டும் என்று நாற்காலியிலிருந்து எழுந்த சமயத்தில் இன்ஸ் பெக்டரின் மேசையின் மீதிருந்த டெலிபோன் மணி ஒலித்தது.

துளசிங்கம் ரிஸீவரைக் கையில் எடுத்தார்.

“ஹலோ, போலீஸ் ஸ்டேஷனா?” என்று கேட்டது ஒரு பெண் குரல். அது மிகவும் பழக்கமான குரலாக இருந்தது.

“ஆமாம்! நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார் துளசிங்கம்.

“நான் அடையாறில் இருக்கும் தில்லைநாயகத்தின் வீட்டிலிருந்து பேசுகிறேன்…”

“ஓ! காந்திமதியா பேசுவது?”

“ஆமாம்! நீங்கள் யார்?”

“துப்பறியும் துளசிங்கம் பேசுகிறேன். இன்ஸ்பெக்டர் இப்பொழுது ஸ்டேஷனில் இல்லை. என்ன விசேஷம்?”

“உங்களை வரவழைக்க வேண்டும் என்பதற்காகத்தான் போன் செய்தேன்.”

“என்ன சமாச்சாரம்?”

“இங்கு ஒரு பெரிய விபத்து நேர்ந்திருக்கிறது. உங்களுக்காக வக்கீலும் இங்கு காத்துக்கொண்டிருக்கிறார். உடனே புறப்பட்டு வருகிறீர்களா?”

“விபத்தா? என்ன விபத்து? யாருக்கு என்ன நேர்ந்து விட்டது.?”

“நான் இவைகளை டெலிபோன் மூலம் சொல்ல முடியாது. உடனே புறப்பட்டு வாருங்கள். எல்லா விஷயங்களையும் நேரில் சொல்லுகிறேன்” என்று கூறிவிட்டு ரிஸீவரைக் கீழே வைத்து விட்டாள் அந்தப் பெண்.

அன்று இரவு வண்டியிலேயே காஞ்சீபுரம் செல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தார் அவர், ஆனால் காந்திமதியின் டெலி போன் செய்தி அந்த தீர்மானத்தை மாற்றிவிட்டது, அடையாறில் என்ன நடந்திருக்கிறது என்று அவருக்குப் புரியவில்லை. அத்துடன் காந்திமதியின் மூலம் விஜயவல்லியின் குணாதிசயங்களை அறிந்து கொண்டால் பரிமள பவனத்தில் அவளைப்பற்றி விசாரித்தறிய சுலபமாய் இருக்கும் என்றும் தோன்றியது. ஆகவே மறுநாள் காலை வண்டியில் காஞ்சீபுரத்திற்குப் போகலாம் என்ற எண்ணத்துடன் ஒரு டாக்ஸியை ஏற்பாடு செய்துகொண்டு அடையாறுக்கு விரைந்தார் துப்பறியும் துளசிங்கம்.

– தொடரும்…

– ஹலோ, போலீஸ் ஸ்டேஷனா?, முதற் பதிப்பு: பெப்ரவரி 1957, தி லிட்டில் ப்ளவர் கம்பெனி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *