மேடம்..! மேடம்…!! மர்டர்..!!!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: September 4, 2020
பார்வையிட்டோர்: 12,825 
 
 

அதிகாலை நேரம். கருப்பும் வெளுப்புமான காலம். சூரியக் குழந்தை பிறப்பதற்கான முன்னேற்பாடு. வானமகள் வலியால் வெளுத்துக் கொண்டிருந்தாள்.

மெரினாவின் கடற்கரை ஓரச் சாலையில்….கருப்பு கண்ணாடிகளை ஏற்றி விட்டுக் கொண்டு அந்த வெள்ளை நிற இன்னோவா கார் பத்துக் கிலோ மீட்டர் வேகத்திற்கும் குறைவான வேகத்தில் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது.

பலப்பல பெரிய மனிதர்களிருந்து சாமான்யர்கள் வரை வயது வித்தியாசமில்லாமல் ஓடிக்கொண்டும், நடந்துக் கொண்டும் , இன்னும் பலப்பல யுக்தி, வித்தியாசங்களில் உடற்பயிற்சிகள் செய்து கொண்டிருந்தார்கள்.

உணவே விஷமாகப் போய்விட்டதால்…எல்லோருக்கும் உடல் ஆரோக்கியத்தைப் பற்றி நிறைய அக்கறை.

‘ ஓடுதல், நடத்தல், யோகாசனம், கைகளைத் தூக்கி இறக்கி, கால்கள் நீட்டி , மடக்கி…அப்பா! உடலுக்குத்தான் எத்தனை விதமான பயிற்சிகள். !! ‘ – காரின் உள்ளே உட்கார்ந்து எல்லாவற்றையும் கவனித்து வந்தவளுக்குப் பிரமிப்பாக இருந்தது.

ரூபஸ்ரீக்கு வயது 35. வெளியே சொல்லப்படும் வயது இருபது ( ? ).!! சொல்லலாம்…! காரணம்… அந்த அளவிற்கு அவள் உடல் கட்டுக்கோப்பு., இளமை.

இந்தியா முழுவதும் பேசப்படும் முதல் தர நடிகை.

அந்த பிரபலம், புகழை வைத்துக் கொண்டு நாட்டில் உள்ள பெரிய கட்சி ஒன்றில் முக்கியமானவளாகிவிட்டாள். இன்னும் சில நாட்களில் மத்திய மந்திரி ஆகப்போகின்றாள் என்கிற பேச்சு அடிபட்டுக்கொண்டிருக்கிறது. கட்சியின் வலது கை பெரிய சக்தியல்லவா..? அவளுக்குத் தராமல் யாருக்குத் தரப்போகிறார்கள்.?!….

“ஒன்பது மணிக்குக் கட்சி கமிட்டிகே கூட்டம் இருக்கு மேடம். !”- முன்னிருக்கையில் ஓட்டனருக்கு அருகில் அமர்ந்திருந்த கிருஷ்ணராம் – இவளது அந்தரங்கச் செயலர் , வயது 50 . சொன்னார் .

இவள் தன் கவனத்தைக் கலைக்காமல்….

“ம்..”கொட்டினாள்.

“ஒன்பது முப்பதுக்கு நம்ம மாநில முதல்வரை சொந்த விசயமா சந்திக்கிறீங்க…”

“ம்ம்ம்…”

“பத்து மணிக்கு சூப்பர் ஸ்டார் படத்துக்குக் குத்துவிளக்கேத்தி வைக்கிறீங்க..”

”ம்ம்ம்”’

“மதியம் கட்சி பிரமுகர் உங்களைச் சந்திக்கிறார்.”

“ம்ம்..”

“மாலை ஒரு வரவேற்பு விழா..!”

“ம்ம்…”

சிறிது நேரம் மெளனமாக வந்த கிருஷ்ணராம்…

“மணி ஆறரை ஆகுதும்மா…”

“ஆகட்டும் ! டிரைவர் வண்டியை ஓரம் நிறுத்து. ! “மெல்ல சொன்னாள்.

ஐந்து நிமிடத்தில் வண்டி சாலை ஓரத்தில் நின்றது.

ரூபஸ்ரீயின் கண்கள் அந்த ஆறரை மணி பொன் வெயிலில் ஜாகிங் செய்துகொண்டிருந்தவன் மேல் லயித்தது.

கிருஷ்ணராமின் கண்களும் கவனித்தது.

புரிந்து போயிற்று. !!

“ராம் !”

“மேடம்..! ..”

“இன்னைக்கு அவன்..”

“சரி மேடம் !”

“வழக்கமா நம்ம வானகரம் பங்களாவுக்கு அழைச்சு வந்துடுங்க. !”

“சரி மேடம் !”

“சரி. இறங்குங்க ..”

அவர் இறங்கினார் .

இன்னோவா நகர்ந்தது.

சிறிது நேரத்தில் அவன் அருகில் சென்று நின்று…

“வணக்கம் !”

ஒற்றையாய் வேர்க்க விறுவிறுக்க ஜாகிங் செய்து கொண்டிருந்தவன்…

“வணக்கம்…! “சர்வசாதாரணமாக சொல்லிவிட்டு தொடர்ந்தான்.

“என் பேர் கிருஷ்ணராம். ரூபஸ்ரீ பி.ஏ.”

இது.. காதில் விழுந்ததும் ஜாகிங் செய்து கொண்டிருந்தவன் விழாத செய்தி கேட்டது போல் சட்டென்று நின்றான். கண்களில் பளிச் மின்னல், வெளிச்சம்.

“ரொம்ப நாளா ஜாகிங் பண்றீங்களா..?”

“ஆமாம் சார் !”

கட்டு கட்டாக இருக்கும் அவன் உடலை மேலிருந்து கீழ் வரை பார்த்துவிட்டு…

“நீங்க ஜாகிங் மட்டும் செய்யல போலிருக்கு…?!”

“ஆமாம் சார். மாலை ஆனா ஜிம்முக்கும் போறேன்.”

“மிஸ்டர் சென்னை ஆகனும்ன்னு ஆசையா..?”

“அப்படியெல்லாம் இல்லே சார். படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கலை. வீட்டுல சும்மா இருக்க முடியாம…இப்படி…”

“இன்னும் உங்களுக்கு வேலை கிடைக்கலையா..?”

“ஆமாம் சார்..!”

“பேரு…..? ”

“சந்தோஷ் !”

“வயசு…?”

“26 ..”

“படிப்பு..?”

“மெக்கானிக்கல் எஞ்சினியரிங்”

“என்ன சம்பளம் எதிர்பார்க்குறீங்க…?”

”.. 50…”

“போர்டு கார் கம்பெனியில வேலை இருக்கு போகமுடியுமா…?”

“சார்ர்ர்…!!”

“வாயைப் பிளக்காதீங்க. இன்னைக்கு ஏழு மணிக்கு இந்த முகவரிக்கு வாங்க. மேடத்தை விட்டு சிபாரிசு பண்ணாச் சொல்லி உடனே கிடைக்க ஏற்பாடு பண்றேன்.! “முகவரி அட்டையை அவன் கையில் திணித்து விட்டு கிருஷ்ணராம் ஆளைத் திரும்பிப் பார்க்காமல் வேகமாக நடந்தார் .

திடீர் மகிழ்ச்சி. சந்தோஷுக்குத் ததலை கால் புரியவில்லை. தற்போது நடந்தது கனவா, நனவா என் கிற தடுமாற்றத்தில் அப்படியே நின்றான்.

கிருஷ்ணராம் சரியாய் ஏழு மணிக்கெல்லாம் அவனை பங்களா வாசலிலேயே வரவேற்றார்.

சந்தோஷ் ஆச்சரியமாக அவருடன் சென்றான்.

“மேடம் இருக்காங்களா சார்..?”

”இருக்காங்க..”

அழைத்துக் கொண்டு நடுவீட்டில் மாடிப்படி ஏறினார்கள் .

அறை முன் நின்று அழைப்பு மணி அழுத்திவிட்டு காத்திருந்தார்கள்.

கதவு தானாகத் திறந்தது.

பெரிய ஆடம்பரக் கட்டிலில் , பளபள மெத்தை, தலையணைகளில் …. ஒய்யாரமாக சாய்ந்திருந்த ரூபஸ்ரீ ரிமோட் கண்ரோலைத் தலையணைக்கடியில் வைத்தாள்.

‘ பி.ஏ. மேடத்தின் படுக்கை அறைவரை அழைத்து வந்து விட்டாரே..! ‘ சந்தோஷுக்குள் சொல்லமுடியாத ஆச்சரியம். கிருஷ்ணராம் பின் பவ்வியமாக நின்றான்.

“மேடம்..!”

“எஸ்..”

“எனக்குத் தெரிஞ்ச பையன் இவன். வேலை இல்லாம கஷ்டப்படுறான்.”

“நான் யாருக்கும் அனாவசியமா சிபாரிசு பண்றதில்லே கிருஷ்ணராம் …”

“மனசு வைக்கணும். ரொம்ப கஷ்டப்படுற குடும்பம்…”

“வேலை….”சந்தோஷை மேலும் கீழுமாகப் பார்த்தாள்.

“போர்ட் கார் கம்பனியில இருக்கு மேடம்..”

“எல்லாம் முன்னேற்பாடாதான் ஆளை அழைச்சி வந்திருக்கீங்களா ராம்….?”

”…………………………….”

“சரி. நீங்க போங்க. நான் பையன் படிப்பு, மத்ததை நான் விசாரிச்சுக்கிறேன்.”

கிருஷ்ணராம் அறையை விட்டு வெளியேறினார் .

“படிப்பு என்ன..? என்ன பண்றே..? பேரு…?….”என்று பத்துப் பதினைந்து கேள்விகள் கேட்டு கடைசியாக…

“ஏன் பயப்படுறே..? வந்து உட்கார்..”சொன்னாள்.

அத்தனை பெரிய மனுஷிக்கு அருகில் எப்படி அமர்வது..? ‘ உட்காரச் சொன்னாலும் உட்காரலாமா..? – தயங்கி நின்றான்.

அவள் சகஜமாக எழுந்து அவன் அருகில் வந்து…

“பயப்படாதே..! “சொல்லி கையைத் தொட்டாள். வாயிலிருந்து பழவாசனை அடித்தது.

அழைத்துப் போய் மெத்தையில் அமர்ந்து அருகில் அமர்த்திக்கொண்டாள்.

“உனக்குக் கரும்பு தின்னக் கூலி தர்றேன் ! “சொல்லி அணைத்தாள்.

சந்தோஷுக்குச் சங்கடமாக இருந்தது. நெளிந்தான்.

“பயப்படாதே ! கண்டிப்பா உனக்கு வேலை”சொல்லி இறுக்கினாள்.

காலையில் கைபேசி அழைக்க .. எழுந்து மாடிக்குச் சென்றார் கிருஷ்ணராம்.

சந்தோஷ் படுக்கையில் துவண்டு கிடந்தான்.

எத்தனை முறையோ…??!! – மனதிற்குள் திகில் பரவியது அவருக்கு.

ரூபஸ்ரீயைப் பார்த்தார்.

அவள் அன்றலர்ந்த பூபோல குளித்து உடுத்திக் கொண்டு மலர்ச்சியாய் இருந்தாள்.

“பையனைக் கொண்டு வெளியில விடவா மேடம்..?”

“வேணாம். ! கதையை முடிச்சிடு..!”

“மேடம்…! “துணுக்குற்றார்.

“ஆமாம். இவன் உயிரோடு இருந்தால் விஷயத்தைச் சொல்வான். மார் தட்டுவான். பிரச்சனை . வேணாம் கொன்னுடு . !”

“பாவம் மேடம்..”

“பாவ புண்ணியம் பார்த்தால் என் இமேஜ் பாதிக்கப்படும் ராம் .”

கிருஷ்ணராமுக்கு மனமில்லை நின்றார்.

“என்ன யோசிக்கிறீங்க ..? மயக்க மருந்து கொடுத்திருக்கேன். ஒரு மணி நேரம் தாங்கும். அதுக்குள்ளே ஏதாவது ஒரு மலை உச்சிலிருந்து உருட்டி காணாப்பொணமாக்கி காரியத்தை முடிச்சிடுங்க…..”

தயங்கினார்.

“பயம் வேணாம். போலீஸ் கண்டுபிடிச்சாலும் தற்கொலை சொல்லி முடிச்சிடலாம்.”

இதற்கு மேல் எதிர்த்துப் பேசுவது தவறு. வேலைக்கு உளை ! – உணர்ந்த…கிருஷ்ணராம்…

“சரி மேடம் ! “அகன்றார்.

‘ மனிதனைப் புகழ், செல்வாக்கு எப்படி எல்லாம் செயல்பட வைக்கிறது..? இப்படி செய்வதைவிட தைரியமாகத் திருமணம் செய்து கொண்டு அனுபவிக்கலாம். திருமணம்… தொழிலுக்கு மட்டும் தடை கிடையாது. எல்லாவற்றிக்குமே ஒரு முட்டுக் கட்டை. தடைக் கல். கவர்ச்சி, புகழ் எல்லாமே பாழ். அதற்காக இப்படியா அனுபவித்து சக்கையாக்கி ஆளைத் தீர்ப்பது..? ‘ – இப்படி எல்லாம் நினைத்து ஒரு மணி நேரத்தில் ஒற்றை ஆளாக அந்த காரியத்தை முடித்தார்.

அன்றைக்கு.. மாலு என்கிற மாலதி தன் காதலனுடன் அதி நெருக்கமாக இழைந்து கொண்டு மெரினாவில் அமர்ந்திருந்தாள்.

“எப்போ சேகர் நம்ம திருமணம்..? ” கேட்டாள்.

“தங்கை முடியட்டும்…”

“வழக்கமா பழைய பதில். தங்கை தங்கைன்னு ரொம்ப தாமதப்படுத்துறீங்க.”

”இன்னும் மூணு மாசத்துல கண்டிப்பா முடிச்சுடுவேன்.”

“செல்லம்..”இறுக்கி அணைத்தாள்.

அக்கம் பக்கம் ஆளிருப்பது புரியாமல் கொஞ்சமாய் முத்தம் கொடுத்தாள்.

தேவை நாட்களில் காலை வேளையில் இரை கிடைக்கவில்லை என்றால் ரூபஸ்ரீ மாலை வேளையில் தான் மட்டும் தனியாக வருவது வழக்கம்.

இன்றும் அப்படித்தான் வந்திருந்தாள்.

சேகரின் அழகு, வசீகரம் அவளுக்குப் பிடித்திருந்தது.

‘ கிருஷ்ணராம் இல்லையே !’ – நினைத்து பெருமூச்சு விட்டாள்.

ஆள் பிரியனும் …! போட்டோ எடுக்கனும் ..’ நினைத்தாள்.

கண்ணாடியை இறக்கி கைபேசி எடுத்தாள்.

“ஒரு நிமிசம் இரு. உனக்கு ஐஸ் கிரீம் வாங்கி வர்றேன்.! “சொல்லி சேகர் எழுந்தான்.

பின் பக்க மணல் தட்டி நடந்தான்.

ரூபஸ்ரீ சத்தமில்லாமல் அவனை தன் கை பேசியில் பதிப்பித்தாள்.

மறுநாள்…

“கிருஷ்ணராம் ! “அழைத்தாள்.

“எஸ் மேடம் !”

“இன்னைக்கு பத்து முப்பதுக்கு நாம மத்திய மந்திரியைப் பார்க்கிறோமா…?”

“ஆமாம் மேடம். இவர் ரொம்ப முக்கியமான ஆள்..”

“எங்கே…சந்திப்பு..?”

சொன்னார்.

அந்த பயணியர் விடுதி அறையில் பல பிரமுகர்களுக்கு நடுவில் அவர் அமர்ந்திருந்தார். 50 வயசு. இளமையான தோற்றம். தொட்டால் சிவக்கும் நிறம்.

ரூபஸ்ரீ உள் நுழைந்ததுமே…எல்லா பிரமுகர்களும் இவளுக்கு வணக்கம் வைத்தார்கள்.

அந்த மத்திய அமைச்சரும் எழுந்து …

“நமஸ்காரம் ! “அவள் கையைப் பிடித்துக் குலுக்கி அமர்த்தினார்.

‘ இனி இங்கு நமக்கு வேலை இல்லை !’ என்று நினைத்த அனைவரும் சிறிது நேரத்தில் அகன்றார்கள்.

மிஞ்சியது ரூபஸ்ரீ, கிருஷ்ணராம்.

“கட்சி வேலையெல்லாம் எப்படி இருக்கு..? “அமைச்சர் அவளை ஒரு மாதியாகப் பார்த்தாள்.

“நல்லா இருக்கு சார்”

“அடுத்த மாசம் நீ… மந்திரி.”

“எல்லாம் உங்க ஆசீர்வாதம் சார் !”- சட்டென்று எழுந்து அவர் கால்களைத் தொட்டு வணங்கினாள்.

அமைச்சர் அவளைத் தொட்டுத் தூக்கி அணைத்து கிருஷ்ணராமைப் பார்த்தார்.

அவர் அகன்றார்.

மாலை ஐந்து மணிக்கு …

அந்த அறையை விட்டு மலர்ச்சியாகத்தான் அகன்று தன் காரில் ஏறிப் பயணப்பட்டாள் ரூபஸ்ரீ.

ஆனால் சிறிது நேரத்தில் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க…

“சொங்கிப்பயல் !!..”மனம் வெறுத்து வாய் முணுமுணுத்தது.

அந்த வெறுப்பிலேயே …

“மெரினா போப்பா..”கட்டளையிட்டாள்.

சென்றது.

வழியில் …

“டிரைவர் ! கொஞ்சம் ஓரம் கட்டு..?”

நின்றது.

“கிருஷ்ணராம் ! நீங்க பார்க்கனும்ன்னு சொன்ன சொந்தக்கார பையன் தனியா புல்லட்டுல வர்றான் இறங்கி, சந்திச்சுட்டு வாங்க …”

இறங்கிக் கொண்டார்.

கார் நகர்ந்தது.

நான்கு…நாட்களாய் வழக்கமாய் சந்திக்கும் இடத்தில் வந்து உட்கார்ந்து பார்த்தாள் மாலதி.

சேகர் வரவில்லை,.

முதல் நாள் கடுப்பு வந்தது. மறுநாள் ஆத்திரம் வந்தது. மூன்றாம் நாள் சந்தேகம் வந்தது.

இன்றைக்கும் சந்தேகம் வந்தது.

‘ ஆள் ஊரிலில்லையா..? எங்கிருந்தாலும் ஏழு மணிக்குள் வந்து விழுந்து விடுவாரே..? வரவில்லை என்றால் கைபேசியில் தொடர்பு கொண்டு சேதி சொல்லி விடுவாரே..? வெளியூருக்குச் செல்வதானாலும் சொல்லாமல் செல்ல மாட்டாரே. வேலை நெருக்கடி, மும்முரம் என்றாலும் மூன்று நாட்களாகவா டவர் கிடைக்கவில்லை, கைபேசியில் சார்ஜ் இல்லை..??! – அவளுக்குள் ஆயிரத்தெட்டு சிந்தனைகள், குழப்பங்கள்.

அவன் வீட்டிற்குச் சென்றாள்.

“வாம்மா மாலு . சேகர் எங்கே போயிருக்கான்..? “- அவன் அம்ம அலமேலு.

“என்ன சொல்லறீங்க…!!?”

“நாலு நாளைக்கு முன் அலுவலகம் போனவன்தான். இன்னும் வீடு திரும்பல. நீதான் உன் அப்பன் ஆத்தாளுக்குத் தெரிவிக்காம திருட்டுக்கு கலியாணம் செய்து தேன்நிலவுக்கு எங்காவது அழைச்சிப் போயிருக்கியான்னு நெனைச்சேன்.”

“ஐயோ அத்தை ! நானும் நாலு நாளாய்ப் பார்க்கலை. அதான் இங்கே தேடி வந்தேன்.”

“என்னம்மா சொல்றே..? “அவள் முகம் மாறியது.

“நிஜம்மா !”

“ஒரு வேளை அலுவலக ரகசிய வேலையாய் எங்காவது போயிருக்கானா ??!!…”அவள் சொல்லி வாய் மூடவில்லை.

மாலதி வெளியேறிவிட்டாள்.

அலுவலகத்தில் …..

எல்லோரும் சென்றுவிட்டாலும் நல்ல வேளையாக மானேஜர் மட்டும் தனியே அமர்ந்து பைல் பார்த்துக்கொண்டிருந்தார். முக்கிய வேலை போல.

தலைகாட்டினாள்.

“வாம்மா..”

“சார் சேகர் !”

“நாலு நாளாய் அவனை ஆளைக் காணோம். விடுப்பு பத்தி எந்த தகவலும் வரல. ஏன்ம்மா.. எங்கே..?”

மாலதிக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதயம் வெடித்து விடும் போலிருந்தது.

‘ எங்கே.. ?? ‘

குழப்பம், குமுறலுடன் வீட்டிற்குள் நுழைந்தாள்.

பொத்தென்று படுக்கையில் விழுந்தாள்.

“என்னம்மா மாலு ! ஏனிப்படி..? “அப்பா பதறினார்.

“ஒண்ணுமில்லே அப்பா. என் காதலரை நாலு நாளா காணோம்..”

“உன் காதலரா..? “அவருக்கு அதிர்ச்சி.

“ஆமாம் அப்பா. கால நேரம் வந்தால் உங்களிடம் சொல்லாம்ன்னு இருந்தேன். இப்போ காணோம்.”

“உளறாதே.! அவன் அயோக்கியனாய் இருப்பான். உன்னை விட்டுட்டு வீட்டுல பார்த்த பெண்ணைத் திருமணம் செய்திருப்பான்…”

“இல்லேப்பா. அவன் அந்த மாதிரி ஆள் இல்லே. அவன் வீட்டிலும் ஆள் இல்லே.”

“அப்படியா..??”

“ஆமாம் அப்பா. இவன்தான் அவன்.! “தன் கைபேசி திறந்து அவன் படத்தைக் காட்டினாள்.

பார்த்த அவருக்கு இடி.! தலையில் அடி.!! உடலும் உள்ளமும் சேர்ந்து ஆடியது.

சில மணித் துளிகளில் அவர்

பயங்கர தள்ளாட்டத்துடன் ரூபஸ்ரீ முன் நின்றார்.

“என்ன ராம் ஒரு மாதிரியா இருக்கீங்க..?”

“என் தலையில மண் மேடம்.”

“புரியல…?”

“நாலு நாளைக்கு முன் இங்கே வந்தவன் என் மகள் காதலன்..”

“உங்களுக்குத் தெரியாதா…?”

“தெரியாது..!”

“இப்போ என்ன பண்ணலாம்..?”

“மகள் அழுது அழுது துவண்டு கிடக்கா மேடம்.”

“ஆள் இல்லே என்கிற விசயம் தெரியுமா..?”

“தெ… தெரியாது !”

“ஒன்னும் கவலைப்படாதீங்க. நாலு நாளைக்கு அழுவாள். பத்து நாட்கள் சோகமா இருப்பாள். அப்புறம் அவளே சரியாகி.. வேறொருத்தனைக் காதலிப்பாள். இல்லே… நீங்களே ஒரு மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுத்து கட்டி வைக்கலாம்.”

“அப்படியெல்லாம் நடக்காது. அவள் ரொம்ப முரடு மேடம்.”

“சரி. நடந்தது நடந்து போச்சு.அடுத்து..?? .”

“இனி என்னால இங்கே வேலைக்கு வர முடியாது மேடம்.”

“ராம் !!”

“நான் என் மகளுக்குத் துணையாய் இருக்கனும்..”

“ராம் ! முடிவை மாத்துங்க..”

“இல்லே மேடம். எனக்கு என் மகள்தான் முக்கியம் ! “- திரும்பி தொய்வுடன் நடந்தார்.

ரூபஸ்ரீ அவர் பங்களா விட்டு வெளியேறும் வரை பொறுமையாய் இருந்தாள்.

அடுத்த நொடி..

கைபேசி எடுத்து …

“வடிவேலு ! உள்ளே வா..”அழைத்தாள்.

அடுத்த வினாடி…வாசலில் வண்டிக்கு அருகில் நின்ற ஓட்டுநர் வடிவேலு..

“என்னம்மா…? “அவள் முன் பவ்வியமாக நின்றான்.

“ராம் வேலையை விட்டு வீட்டுக்குப் போறார். அவர் உடலில் உயிர் இருக்கக் கூடாது.!”

“அம்மா.!! “அலறினான்.

“மானேஜர். என் மொத்த விசயங்களும் தெரிந்தவர். அவன் உயிரோட இருக்கிறது எனக்கு ஆபத்து. என் இன்னோவா காரை எடுக்காம வேற காரை எடுத்துப் போய் ஏத்தி கொன்னுட்டு போலீஸ்ல சரணடைஞ்சுடு. மீதியை நான் பார்த்துக்கிறேன். உன்னைக் காப்பாத்துறேன்.”

“பாவம்மேடம்…!”

“சொல்றதைச் செய் !”

அவன் அரைமனத்துடன் அகன்றான்.

சிறிது நேரத்தில் அம்பாசிடர் கார் இவள் பங்களாவை விட்டு வெளியேறியது.

வடிவேலு கண்களில் விலக்கெண்ணை விட்டுக் கொண்டு காரை ஓட்டினான்.

அரை மணி நேரத்தில் ராம் தன் மோட்டார் சைக்கிளில் கண்ணில் பட்டார்.

ஒட்டி நிறுத்தி அவரை அலறவிட்டான்.

அரண்டு நின்றார்.

“வண்டியை விட்டுட்டு கார்ல சீக்கிரம் ஏறுங்க..”

“ஏன்..?”

“உங்க உயிருக்கு ஆபத்து.!”

“வடிவேலு..!”

“பேச நேரம் இல்லே. சீக்கிரம்.”

வண்டியை அப்படியே விட்டுவிட்டு காரில் ஏறினார்.

அடுத்த வினாடி கார் சீறிப் பாய்ந்தது.

கண் மண் தெரியாத வேகத்தில் சந்து பொந்துகளில் புகுந்து பறந்தது.

“வடிவேலு ! எங்கே போறே..? “ராம் பதறினார்.

“போலீஸ் ஸ்டேஷனுக்கு”

“ஏன்…???…”.

“உன்னையும் என்னையும் போட்டுத்தள்ள பின்னால ஒரு கூலிப்படை கார்ல துரத்துது..”

“என்ன சொல்றே…?”

“மேடத்தோட மொத்த விசயத்தையும் தெரிஞ்ச நம்ம ரெண்டு பேரையும் அந்த அம்மா உயிரோட விட்டு வைக்க விருப்பமில்லே. அதனால உன்னைக் கொல்ல என்னை அனுப்பி. என்னையும் கொல்ல ஒரு கூலி ப் படையை அனுப்பி. அவளுக்கு உடலெல்லாம் மூளை. “சொல்லி வண்டியை காவல் நிலையத்தின் முன் நிறுத்தினான்.

பின்னால் வந்த கார்… திகைத்து அப்படியே தூரத்தில் நிற்க…

ராமும்,வடிவேலும் காவல் நிலையத்திற்குள் நுழைந்தார்கள்.

“என்ன சார் சொல்றீங்க…? “இருவர் வாக்குமூலத்தைக் கேட்ட இன்ஸ்பெக்டர் அதிர்ந்தார்.

“ஆமாம் சார். ஆறு கொலைகளுக்கும் ரூபஸ்ரீதான் காரணம். உப்பு தின்னவன் தண்ணி குடிப்பான். தப்பு செய்தவன் தப்ப முடியாது. மாட்டிப்பான்னு தெரிஞ்சுதான்… நான் மேடத்துக்குத் தெரியாம அவங்க படுக்கை அறையில் ரகசிய கேமரா பதிச்சிருக்கேன். கொலைக்கான ஆள், ஆதாரமெல்லாம் மொத்தமா அதுல இருக்கு. எங்களை சீக்கிரம் கைது செய்து அழைச்சிப் போங்க ! “கிருஷ்ணராம் சொல்லி கை நீட்ட, உடன் வடிவேலும் கை நீட்டினான்.

இன்ஸ்பெக்டர் கைவிலங்குடன் எழுந்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *