(2001ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம்-1 | அத்தியாயம்-2
கருங்கல் சுவர் ஆள் உயரம் இருந்தது. வாசலில் காவல்காரன் என் காரை நிறுத்தினான். என் பெயர் கேட்டான். ‘கணேஷ்’ என்றேன். உடனே கதவைத் திறந்து என்னை அனுமதித்தான். காத்திருக்கிறார்கள் எனக்காக. திறந்த கதவின் கம்பிகளுக்கு நடுவில் ஆங்கில கே.எம். எழுத்துக்கள் சமீபத்திய பிராஸோவில் பளபளத் தன. ‘கிருஷ்ணா மிஷன் – உலக அமைதி’ என்று அதன் கீழ் எழுதியிருந்தது. உள்ளே அந்தக் கட்டடத்தை அடையும் பாதை கவிதையுடன் நெளிந்தது. இருபுறமும் வரிசையாக குல்மொஹர், டாலியா, செஸ்பானியா பூக்கள், கொடிகள் வர்ணங்கள், பச்சைப் புல் சதுர கஜங்கள். .
வெண்மையான கட்டடம். தந்தம் போல் மெலிதான மஞ்சள் கலந்த, பளபளக்கும் வெண்மை. வெள்ளை அடித்தவனை விசாரிக்க வேண்டும். ‘கில்லாடி வேலை வாத்யாரே!’
போர்ட்டிகோவில் என் கறுப்பு கார் உறுத்தி இருக்கும். எனக்காக அந்த மாது காத்திருந்தாள். ‘நீங்கள் பத்து நிமிஷம் லேட்’ என்றாள். நான் கதவைத் திறந்து என் தாமதத்தைப் புன்னகையில் மறைத்தேன். பின் குறிப்பாக, ‘ஸாரி’ என்றேன். அம்மாள் வெண்மை சாகரமாக இருந்தாள். அவளுக்கு வயது நாற்பத்து எட்டு இருக்கலாம். லேசாக மீசை இருந்தது. கண்களில் கண்ணாடி வட்டங்கள்; தலையில் நரை என்பதே இல்லை. விஸ்தாரமாக இருந்தாள்.
‘ரொம்ப அழகான இடம், அமைதியான இடம்’ என்றேன். அவள் பதில் சொல்லவில்லை.
நாங்கள் உள்ளே நுழைந்தோம். ‘பூட்ஸைக் கழற்றி விடுகிறீர் களா?’ என்றாள். உடன்பட்டேன். உள்ளே ‘ரொய்ங்’ என்று ஆர்மோனியம் வேட்டை நாய்போல் தொடர, என்னால் கிரகிக்க முடியாத பாஷையில் ஒரு கோஷ்டிகானம் கேட்டது. கானத்தில் இசையில் மோகனம் இருந்தது.
ஹால் எதிரே சுவரில் பெரும்பான்மையை அடைத்துக்கொண்டு ஒரு பெரிய கிருஷ்ணர் படம். நீலநிறத்தில் தவழும் கிருஷ்ணர். ஒரு கையில் புல்லாங்குழலும் மற்றொரு கையில் உலகத்தையும் வைத்திருந்தார். தவழ்ந்த காலால் மற்றொரு உலகத்தை உதைத்துத் தள்ளிக்கொண்டிருந்தார். உதைக்கப்பட்ட உலகத்தில் நிறைய பாபாத்மாக்கள் இருந்தார்கள். அவர்கள் சுகித்துக் கொண்டும், படுத்துக்கொண்டும், பொதுவாகக் கெட்ட காரியங்கள் செய்துகொண்டும் இருந்தார்கள். கிருஷ்ணனின் கையில் இருந்த சலுகை உலகத்தில் எல்லோரும் சிரித்துக் கொண்டும், சதா சந்தோஷமாக, திலகம் இட்டுக்கொண்டு, வெண்மையான உடைகள் அணிந்துகொண்டு ஏழாவது சொர்க்கத்தில் இருந்தார்கள். அதில் நான் இல்லை.
தரையில் கால் வைக்கக் கூசியது. அத்தனை சுத்தம். ‘என் அறைக்கு வருகிறீர்களா?’ என்றாள். நடந்து கடந்தபோது அந்த பஜனை அறையில் பெரும்பாலும் புஷ்டியான பெண்கள் உட்கார்ந்திருப்பதைக் கவனித்தேன்.
அந்த அறையில் தரையில் உட்காரச் சற்றுத் தயக்கமாக இருந்தது. என் பேண்ட் சில தப்பான இடங்களில் பிடித்தது. சையத் என்கிற ஸ்பெஷல் டெய்லர் நல்ல வலுவான தையல் நூல் உபயோகித் திருக்க வேண்டுமே என்ற கவலையுடன் உட்கார்ந்தேன். ஊது வத்தி வாசனையுடன் சற்று வாடிய சம்பங்கிப் பூக்களின் வாசனை என் மூக்கில் பரவியது. இன்னும் அரைமணிக்கு சிகரெட் குடிக்க முடியாது என்கிற ஏக்கம் என் சுவாசங்களில் புலப்பட்டது. அம்மாள் அழகாக உட்கார்ந்தாள். ‘நீங்கள் எங்கள் மிஷனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?’ என்றாள்.
என் மிகவும் சுறுசுறுப்பான வக்கீல் வாழ்க்கையில் இந்த மிஷனைப் பற்றிக் கேள்விப்பட அதிகம் அவகாசமில்லை. ‘கேள்விப்பட்டிருக்கிறேன்’ என்றேன்.
‘சமீபத்தில் பேப்பர் பார்த்தீர்களா?’
சமீபத்தில் நான் பம்பாய் சென்றிருந்தேன். செய்தித்தாள்களில் நான் கடைசிப் பக்கம் மட்டும்தான் பார்ப்பது வழக்கம். ‘பார்த்தேன், எதுவும் விசேஷமாக உண்டா?’ என்றேன்.
‘எங்கள் மிஷனைப் பற்றி சென்னைப் பத்திரிகைகளில் செய்தி வந்ததே,பார்த்தீர்களா?’
‘இல்லை. சொல்லுங்கள்’ என்றேன். எனக்குக் கொஞ்சம் புரிய ஆரம்பித்தது. அவர்களுக்கு ஏதோ சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அதற்குத்தான் என்னை அழைத்திருக்கிறார்கள்.
‘நல்லது மிஸ்டர் கணேஷ்! எங்கள் மிஷனுக்காக நீங்கள் கோர்ட்டில் ஒரு கேஸில் வாதாட வேண்டும்.’
‘என்ன கேஸ் சொல்லுங்கள்’ என்றேன்.
‘அதற்கு முன் எங்கள் மிஷனைப் பற்றிக் கொஞ்சம் சொல்கிறேன்’ என்றாள். நிறையச் சொன்னாள். சுருக்கம் வருமாறு:
கிருஷ்ணா மிஷன் என்பது சுவாமி கிருஷ்ணானந்த சன்மார்க்க பதா என்கிற சிக்கலான பெயரால், ‘சுவாமி’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் மகானின் தலைமையில் நடத்தப்படும் ஒரு சர்வதேச இயக்கம். இதற்கு கலிபோர்னியா, ம்யூனிக், மிலான், லங்காஷயர், டோக்கியோ போன்ற இடங்களில் கிளைகள் இருக்கின்றன. தன்னிச்சையாக அனுப்பப்பட்ட பணம் ஏராள மாகக் குவிகிறது. டாய்ஷ் மார்க், அமெரிக்க டாலர், பிரிட்டிஷ் பவுண்ட் என்று செல்வத்துக்குத் தங்குதடை இல்லை. இந்தியா விலும் மிஷனுக்கு ஏராளச் செல்வாக்கு. மிஷன் ஏழு கல்லூரி களை நடத்துகிறது. கோரக்பூர், சென்னை, மாசேர்லா, பம்பாய், மாண்ஸோர், மைசூர், கண்ணனூர் இவ்விடங்களில் கல்லூரிகள். கல்கத்தாவிலும் புது தில்லியிலும் இரண்டு இந்து சமய ஆராய்ச்சிக் கழகங்கள், ஏராளமான அனாதை இல்லங்கள், கண் தெரியாதவர் இல்லங்கள், புனர் வாழ்வு இல்லங்கள்.
தலைவர் சுவாமி கிருஷ்ணானந்த சன்மார்க்க பதா அவர்கள் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் மறு அவதாரம் என்று அவருடைய பக்தர்கள் நம்புகிறார்கள். ‘அவரால் பகலில் இரவை உண்டாக்க முடியும். நீரில் தேன் எடுக்க முடியும். ஒரே சமயத்தில் கலிபோர்னியாவிலும் கண்ணனூரிலும் தரிசனம் தரமுடியும்.’ அவர் பக்தர்களில் ஒரு மத்திய மந்திரி, ஒரு கிழக்காசிய நாட்டின் மன்னர், ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரர், நோபல் பரிசு பெற்ற ஓர் அணுசக்தி விஞ்ஞானி என்று பல பிரபல மனிதர்கள் இருக் கிறார்கள். உலகம் முழுவதும் அவரை நேசிக்கிறது. அவரைத் தங்கத்தால் நிறுக்கிறார்கள். அவர் பாதங்களை முத்தமிடு கிறார்கள். எத்தனையோ போலிச் சாமியார்களின் மத்தியில் ஒரு உண்மையான கடவுள். அவர் இந்த யுகத்தின்… சுவாமியின் பிரதாபங்களைக் கொஞ்சம் கத்திரிக்கிறேன், கதை, வசனம் உங்களுக்குக் கிடைத்திருக்கும் என நம்புகிறேன். மூன்று வார்த்தைகளில், சுவாமி இஸ் கிரேட்!
பகவானுக்கு என் போன்ற ஒரு சாதாரண வக்கீலின் சகாயம் எதற்குத் தேவை என்று எனக்குள் கேள்வி பிறந்தது. அம்மாள் விஷயத்துக்கு வரட்டும் என்று காத்திருந்தேன். நான் இரண்டு கொட்டாவிகளை மென்று தின்றவுடன் அம்மாள் விஷயத்துக்கு வந்தாள். வாவ்! – விஷயம் மிகவும் சுவாரசியமான விஷயம்.
‘உலகெங்கும் புகழ்பெற்ற எங்கள் மிஷன்மேல் ஏனோ களங் களம் ஏற்படுத்தச் சிலர் முனைந்திருக்கிறார்கள். இந்தச் சிலர் யார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால், மிஸ்டர் கணேஷ்! எங்கள் மிஷனின் மேல்’ – அந்த அம்மாளின் கண்களில் லேசாகக் கண்ணீர் தெரிந்தது. ‘அவதூறு ஏற்படுத்தி இருக்கிறார்கள். ஒரு வழக்கு தாக்கல் ஆகி இருக்கிறது. பிரஸிடன்ஸி மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் ஒரு பெண், சுவாமி அவர்களின் மேல் புகார் செய் திருக்கிறார்கள். எப்படிப்பட்ட புகார்… கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாது. அப்பப்பா…’
‘பெண்ணா?’
‘ஆம்! அவள் பெயர் மாயா!’
‘புகார் என்ன?’
‘அதை விவரிக்க என்னால் முடியாது. அந்த விஷ வார்த்தைகள் இந்த இடத்தின் அமைதியை, சுத்தத்தை, உண்மையைக் களங்கப் படுத்திவிடும்’.
‘புகார் என்ன என்பது எனக்குத் தெரியவேண்டும்.’
அம்மாள் எழுந்தாள். அலமாரியைத் திறந்து தன் துணி மூலம் சில காகிதங்களை நுனி விரலால் எடுத்து என்னிடம் தந்தாள். ‘சென்ற வாரம் இந்தக் கேஸ் கோர்ட்டுக்கு வந்தது. அதை ஒத்திப்போட விண்ணப்பம் கொடுத்தோம். மூன்றாம் தேதிவரை ஒத்திப் போட்டிருக்கிறார்கள். நீங்கள் படித்துப் பாருங்கள்.’
அது ஒரு அஃபிடவிட். மாயா என்கிற இருபத்தி இரண்டு வயதுப் பெண் தாக்கல் செய்த புகார். ‘நான் மாயா ராஜேஸ்வரன். ஒன்பது, கிராமணித் தெரு, சென்னை முப்பத்து ஒன்றில் வசிக்கும்…’ என்று சட்ட சம்பந்தமான டாக்குமெண்டுகளுக்கே உரித்தான பழங்காலத்து இங்கிலீஷில் நெருக்கமாக ‘டைப்’ அடிக்கப் பட்டிருந்த புகார். எப்படிப்பட்ட புகார்! வாசிக்க வாசிக்கச் சூடேறிய புகார்.
‘இன்ன தேதி, இன்ன இடத்தில் நான் (மாயா) ஒரு நண்பர் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு கிருஷ்ணா மிஷனுக்கு அழைக்கப் பட்டேன். அங்கே நூலகத்தில் இருக்கும் இந்துமத சம்பந்தப் பட்ட புத்தகங்களை வரிசைப்படுத்தி அடுக்கும் வேலை எனக்குத் தரப்பட்டது. அந்த இடத்தின் அமைதியும் பக்தியும் என்னை முதலில் கவர்ந்தது. பின்புதான் இவை அத்தனையும் போலி என எனக்குத் தெரிந்தது. முதலில் நான் அவர்கள் பஜனையிலும் பூஜைகளிலும் கலந்துகொண்டேன்.
‘சென்ற செப்டம்பர் மாதம் பதினெட்டாம் தேதி மாதா என்று அழைக்கப்படுகிற அந்த இடத்து மேட்ரன் போன்ற அம்மாள் என்னிடம் வந்து அன்று இரவு நடக்கப்போகும் ஹேவஜ்ர சக்தி பூஜைக்கு கன்னிகைப் பெண்கள் தேவைப்படுகிறார்கள் என்றும், என்னை வர முடியுமா என்றும் கேட்டாள். நான் சம்மதித்தேன். நான் நிஜமாகவே கன்னிகையா எனக் கேட்டாள். நான் ஆம் என்றேன். இரவு முழுவதும் ஆசிரமத்தில் தங்கவேண்டி வரும் என்று சொன்னாள். நான் எதுவும் சந்தேகப்படாமல் உடன் பட்டேன். என்னைத் தனியே அழைத்துச்சென்று குளிர்ந்த நீரில் நீராடச் சொன்னார்கள். பின்பு வெண்மையான உடை தந்தார்கள். அந்த அம்மாளே அந்த உடைகளை அணிவித்தாள். பின்பு என்னையும் மற்ற சில பெண்களையும் உட்காரவைத்து மஞ்சள் நிறப் பூக்களால் மாலை அணிவித்து நெற்றிக்குத் திலகமிட்டார்கள். நான் ஒரு அறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கே எனக்கு மிக இனிமையான பானம் பருகக் கொடுக்கப் பட்டது. அந்தப் பானம் மெலிதான மயக்கத்தையும், பிறகு அவர்கள் என்னைச் செய்யச் சொன்ன காரியங்களுக்கு இசைவை யும் கொடுத்தது. ஒரு பால்கனி போல் இருந்த டத்தில் பௌர்ணமி நிலவைப் பார்க்கச் சொன்னார்கள். அங்கே வைத்திருந்த துளசிச் செடியின் வடக்குப்புற வேரை எடுக்கச் சொன்னார்கள். பிறகு…’
எனக்கே படிக்கத் தயக்கமாக இருந்தது.
நான் இனித் தரப்போவது கதையின் பூர்ணத்தை முன்னிட்டு, அந்த வாக்கியங்கள் பிற்பாடு கோர்ட்டில் எனக்கு உபயோகப் பட்டன என்கிற ஒரே காரணத்துக்காக மட்டுமே.
‘பிறகு என் அந்தரங்கத்திலிருந்து ரோமம் எடுத்து அதைப் பொசுக்கி நெற்றியில் அணிந்துகொள்ளச் சொன்னார்கள்.
‘மிஷனின் தலைவர் சுவாமி கிருஷ்ணானந்தா என்பவரும் உள்ளே வீற்றிருந்தார். அவர் என்னை அழைத்தார். நான் எனக்குத் தரப்பட்ட போதைப் பொருளின் ஆதிக்கத்தில் அவரிடம் சென்றேன். அவர் என்னை ஒரு சிறு குழந்தைபோல் கையாண் டார். அவர் என் உடைகளைக் களைந்து தன்முன் என்னைப் படுக்க வைத்து என் நாபியில் ஒரு மலரை சிரத்தையுடன் அமைத் தார். பிறகு மற்றொரு மலரை…’
என் கண்கள் ஏறக்குறைய ஒரு சாஸர் அளவுக்கு விரிய மேலே படித்தேன். விநோதமான மத சம்பிரதாயங்களும் பெண் அந்தரங்கங்களும் கலந்த ஒரு ரகசிய நடைமுறை அதில் துல்லியமாக விவரிக்கப்பட்டிருந்தது. மாயா பிற்பாடு மயக்கமுற்றதையும் சொல்லி இருந்தாள். மறுநாள் காலை அவள் உடலில் ஒவ்வொரு பாகத்திலும் வலி ஏற்பட்டதையும் சில இடங்களில் காயம் இருந்ததையும் சொல்லி இருந்தாள்.
‘மறுதினம் நான் மிஷனை விட்டு வெளியே வந்துவிட்டேன். அன்று மாலை டாக்டர் சரஸ்வதி என்பவரிடம் சென்றேன். அவர் பரிசோதித்துப் பார்த்ததில் நான் தூக்கத்தில் பலாத்காரப் படுத்தப்பட்டிருக்கிறேன் என்பதை அறிந்து கொண்டேன். என்னை ஏமாற்றி என் மானத்துக்குக் களங்கம் விளைவித்த சுவாமி கிருஷ்ணானந்தாவையும் அவருடைய போலி மிஷனையும் அரசாங்கம் உரிய முறையில் தண்டிக்கவேண்டும் என்று விண்ணப்பித்துக்கொள்கிறேன். எனக்கு ஏற்பட்ட களங்கத்துக்கு உரிய முறையில் நஷ்ட ஈடு கொடுப்பதற்கு கிருஷ்ணா மிஷனைப் பணிக்குமாறு விண்ணப்பம் செய்து கொள்கிறேன். ஒப்பம்: மாயா.
நான் அம்மாளை நிமிர்ந்து பார்த்தேன்.
‘அத்தனையும் பொய்’ என்றாள்.
‘சம்மன் வந்திருக்கிறதா?’ என்று கேட்டேன்.
‘ஆம். சுவாமி அவர்கள் கோர்ட்டுக்கு ஆஜராகும்படி வந்தது.’
‘ம்ஹூம்’ என்றேன் யோசனையுடன்.
‘இந்தக் கேஸை நீங்கள் எங்கள் சார்பில் எடுத்து நடத்த வேண்டும்.’
‘இந்தப் பெண் சொல்வது முழுவதும் பொய் என்கிறீர்கள்.’
‘முழுவதும்.’
‘இந்த மிஷனுக்கு வந்தாளா? அதாவது நிஜமா?’
‘இவள் வேலை தேடி வரவில்லை. தனக்கு ஒருவரும் இல்லை; தான் நிர்கதியானவள் என்று ஒரு தினம் சரணாக வந்தாள். நாங்கள் ஏற்றுக்கொண்டோம். அவளுக்கு ஆலயத்தைச் சுத்தம் செய்வது, பூப்பறிப்பது போன்ற வேலைகள் கொடுத்தோம். சுவாமி இவளைப் பார்த்ததுகூட இல்லை.’
‘எவ்வளவு நாள் இருந்தாள்?’
‘ஒரு மாதம் இருந்திருப்பாள். அப்புறம் ஒரு நாள் அவளைக் காணவில்லை.’
‘அவள் காணாமல் போனதை நீங்கள் போலீசிடம் சொன்னீர்களா?’
‘இல்லை!’
நான் யோசித்தேன். ‘இந்த மாதிரி பூஜைகள் இந்த இடத்தில்…’
‘சே! கணேஷ்! முதலில் உங்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும். இது கடவுளின் இடம். மனத்தில், உடலில், ஆத்மாவில் பரிபூரண சுத்தம் உள்ள இடம். உண்மை அரசாளும் இடம்…’
நான் குறுக்கிட்டு, ‘நான் சுவாமி அவர்களைப் பார்க்க முடியுமா?’ என்றேன்.
‘தியானத்தில் இருக்கிறார்’ என்றாள்.
‘தியானம் எப்போது முடியும்?’
‘சொல்ல முடியாது. உங்களுக்குப் பாக்கியமிருந்தால் தரிசனம் கிட்டும்’ என்றாள்.
‘சுவாமி கோர்ட்டுக்கு வருவாரா? வரத் தயாராக இருக்கிறாரா?’
‘வருவார். நாங்கள் – பக்தர்கள் – அதை முடிந்தால் தவிர்த்து விடலாம் என்று எதிர்பார்க்கிறோம்.’
‘தவிர்க்க முடியாது. அவருக்கு இந்த விஷயம் தெரியுமா?’
‘அவர் திரிகால ஞானி. அவருக்கு எல்லாம் தெரியும்.’
‘அவர் என்ன சொன்னார்?’
‘புன்னகைத்தார்’ என்றாள்.
கோர்ட்டில் புன்னகைக்க முடியாது என எண்ணிக்கொண்டேன்.
‘இந்தக் கேஸை மேலே தொடர்வதற்குமுன் நான் சுவாமி அவர்களைப் பார்த்தாக வேண்டும்.’
மறுபடி ‘உங்களுக்கு பாக்கியமிருந்தால் தரிசனம் கிடைக்கும்’ என்றாள்.
எனக்குக் கோபம் வந்தது. ‘எனக்கு தரிசனம் வேண்டாம். அவரைப் பார்த்துப் பேசவேண்டும். அவரிடம் சில கேள்விகள் கேட்கவேண்டும்.’
‘என்னிடம் கேளுங்கள். அவர் இந்த மாதிரி அற்ப விஷயங்களுக்கு அப்பாற்பட்டவர். அவர் கடவுள்.’
‘சரிதான்! கடவுளுக்கு வக்கீல் எதற்கு?’ என்றேன்.
‘நீதான் கணேஷா?’ என்று துல்லியமான குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். அவர்தான்!
‘சுவாமி கிருஷ்ணானந்த சன்மார்க்க பதா!’
– தொடரும்…
– மாயா (குறுநாவல்), வெளிவந்த ஆண்டு: 2001, தினமணி கதிர்