மர்மத்தின் மறு பக்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: October 29, 2020
பார்வையிட்டோர்: 12,406 
 
 

இந்த விளம்பரத்தைப் பார்த்தாயா மீனா? அன்றைய செய்தித் தாளில் வந்திருந்த விளம்பரத்தை என் மனைவியைக் கூப்பிட்டுக் காண்பித்தேன். அதில் வந்திருந்த செய்தி இதுதான்.

“நன்றி.மிகவும் நன்றி. இந்த போட்டோவில் இருப்பவர், எங்கள் உறவினர் ஆவார்கள். எழும்பூர் ரயில் நிலயத்தில் அவர், மாரடைப்பினால் கீழே விழும் தருவாயில்; அவரைத் தாங்கி, தன் மடியில் கிடத்தி முதலுதவி செய்த நபருக்கு எங்கள் குடும்பம் கடமைப் பட்டிருக்கிறது. நன்றி விசுவாசத்துடன் நாங்கள் அந்நபரைப் பார்க்கவும், அவருக்கு எங்கள் காணிக்கைகளைச் செலுத்தவும் விரும்புகிறோம். இது குறித்து விவரம் தெரிந்தவர்கள் எங்களுக்கு தகவல் தருமாறு வேண்டுகிறோம். எங்கள் முகவரியும் போன் எண்ணும் கொடுத்திருக்கிறொம்.”

இதனைப் படித்த மீனா அர்த்தத்துடன் என்னைப் பார்த்தாள். காரணம், புதிதாக நான் வாங்கியிருந்த செல்போனில் சம்பவம் நடந்த அன்று, ரயில் நிலையத்தில் விளையாட்டாக எடுத்த வீடியோ காட்சிகள், இந்த விளம்பரத்தோடு சம்பந்தப் பட்டது.

என் போனில் அந்த காட்சியை மீண்டும் முதலிலிருந்து பார்த்தேன். காவி வேஷ்டிக்காரர் ஒருவர் தண்ணீர் பாட்டிலுடன் அந்த பெரியவர் அருகே வேகமாக ஓடிவருகிறார். அதன் பிறகே பெரியவர் துவண்டு சரிகிறார்.

இதைப் பார்த்ததும் எனக்கு என்ன தோன்றியது என்றால், தாகமாக இருக்கவே அவர் தண்ணீர் கேட்டிருக்க வேண்டும். அதனால்தான் காவி. வே. நபர் வேகமாகப் போய்த் தண்ணீர் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆக இருவரும் முன்னதாகவே பேசிக் கொண்டிருந்திருக்க வேண்டும். இருவரும்

அறிமுகமானவர்களாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

மீண்டும் தொடர்ந்து பார்த்தேன். துவண்டு சரிந்த பெரியவரை கா.வே தாங்கிப்பிடித்து தன் மடியில் கிடத்திக் கொண்டு, தண்ணீரை பெரியவர் வாயில் புகட்ட எத்தனிகிறார். முடியாது போகவே, பாட்டிலைக் கீழே வைத்துவிட்டு மூக்கில் கைவைத்துப் பார்கிறார். அப்புறம், பெரியவரின் ஜிப்பா பாக்கெட்டிலிருந்து கைபேசியை எடுத்து, யாருக்கோ போன் செய்கிறர். திரும்பவும் அவருடைய பாக்கெட்டிலேயே கைபேசியை வைத்துவிட்டு, அங்கு பக்கத்தில் நின்றிருந்த ஒருவனுடன் பேசியபடி இருவருமாக; “அதற்கிடையில் அங்கு குழுமிவிட்டிருந்த கூட்டத்தில்” புகுந்து சென்று மறைந்து விடுகிறார்கள்.

“இந்த வீடியோ க்ளிப்பை விளம்பரத்தில் கொடுக்கப்பட்டிருந்த முகவரியில் கொண்டு போய் கொடுத்து விடட்டுமா மீனா?” என என் மனைவியிடம் கேட்க, அவள், “அவசரப் படாதீர்கள் என்ன ஏது என்று விசாரிக்காமல், முட்டாள் தனமாக ஏதாவது செய்து வம்பில் மாட்டிக் கொள்வதுதான் உங்கள் வேலை” என எனக்கு முட்டாள் பட்டம் சூட்டினாள். “முதலில் அந்த வீட்டிற்குப் போய் வெளியில் நின்றபடி என்ன நடக்கிறது என பார்த்துவிட்டு வாருங்கள். காரில் போக வேண்டாம்” என்று எனக்கு உத்தரவும் போட்டாள்.

சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவள் எனக்கு எப்போதும் மதிமந்திரிதான். ஆகவே அவள் சொல்படி கிளம்பிவிட்டேன்.

போகும் வழியில், என் நண்பன்,மணியின் வீட்டிற்குச் சென்றேன்.

மணியும், விவரங்கள் தெரிந்து கொண்டதுமே, ஆர்வத்துடன் தானும், என்னுடன் வருவதாகச் சொன்னான். அவன் மனைவி, கலாவிடம் “ஒருமுக்கிய வேலையாகப் போய்விட்டு சீக்கிரமாகத் திரும்பிவிடுவேன்” என சொல்லி என்னுடன் நடக்கத் துவங்கினான்.

அந்த முகவரியைச் சென்றடைந்தோம். அது மிகப் பெரிய விஸ்தாரமான பங்களா. அதன் பெரிய கேட் அகலத் திறந்துவிடப் பட்டிருந்தது. மக்கள், உள்ளே போவதும் வருவதுமாக இருந்தார்கள். கொஞ்சம் தள்ளி எதிராக ஒரு பெட்டிக்கடை இருக்கவே; அங்கு சென்று இரண்டு ‘டீ’ க்கு சொல்லிவிட்டு அங்கிருந்த பென்ஞ்சில் அமர்ந்து கொண்டோம். அங்கு டீ குடித்துக் கொண்டிருந்த ஓரிருவரிடம் பேச்சு கொடுத்ததில், அந்த பங்களாக்காரர், ‘முருகேசன்’, பெரும் செல்வந்தர், நேற்றிரவு இறந்து போனதால், துக்கம் விசாரிக்க சொந்தங்களும் பந்தங்களூம் வந்து போய்க் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். போன வாரம் எழும்பூரில், மாரடைப்பு ஏற்பட்டு, யாரோ முதலுதவி செய்தவர், போன் போட்டு சொன்னதால், மருத்துவமனையில் சேர்த்து ஒரு வாரம் சிகிச்சை செய்தும் பலனின்றி நேற்றிரவு இறந்து போனதாகச் சொன்னார்கள். அன்றைய நாளிதழில் ’உதவி செய்தவர்’ யார் எனத் தெரிந்தால், நன்றிக்கடனாக பெருந் தொகையை அளிக்க அந்த குடும்பம் காத்திருக்கிறது எனவும் சொன்னார்கள்

பிறகென்ன மணி? யாருக்கோ பெரும் தொகை கிடைக்கப் போவதை நாம் ஏன் காலதாமதம் செய்ய வேண்டும்? வீடியோவைக் காண்பித்துவிட்டுப் போய்விடலாம்.” என்றேன்.

“நீ மீனாவிடம் வாங்கிக் கட்டிக்கொள்ளத்தான் போகிறாய்” என அவன் எச்சரித்ததும்

“இப்ப என்னதான் செய்ய வேண்டும் என்கிறாய்” எனக் கேட்டேன்.

அவன் ஏதோ சைகை காண்பித்துவிட்டு, அந்த வீட்டை நோக்கிச் சென்றான். அவனுடைய சைகையின் பொருள் சத்தியமாக எனக்கு விளங்கவே இல்லை. அதனால், அவன் வீட்டின் உள்ளே சென்ற சிறிது நேரம் கழித்தே நானும் தயங்கியவாறே பின் தொடர்ந்தேன். உள்ளே சென்ற அவனை எங்கு தேடியும் காணாமல் திகைத்தேன். அங்குமிங்குமாக அக்கூட்டத்தில் தேடிப் பார்த்தும், அவன் அகப்படவில்லை. ஆனால், வீடியோவில் காணப்பட்ட அந்த இருவரும், அங்கு ஸ்வாதீனமாக நடமாடிக் கொண்டிருந்தனர்.

ஏதோ தவறு நடக்கிறது என எனக்குப் பட்டதால், மெதுவாக அவ்விடம் விட்டு வெளியேறினேன். நண்பனைக் குறித்த கவலையில் கால்கள் போன போக்கில் நடந்தேன். கலாவுக்கு நான் என்ன பதில் சொல்லப் போகிறேன்?

அந்த தெருவின் கடைக்கோடியிலிருந்த ‘அங்காளபரமேஸ்வரி’ கோவிலின் உள்ளே சென்றேன். “தாயே பரமேஸ்வரி! சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தது நானேதான்!. அம்மா! என்னை மன்னித்து இதிலிருந்து எங்களைக் காப்பற்றிவிடு தாயே! என மனமுருக வாய்விட்டு வேண்டி நின்றேன்.

அப்பொழுது அசரீரி கணக்காக அருகிலிருந்து “முட்டாளே! தலையை என் பக்கம் திருப்பாமல், கவனமாகக் கேள்.”என்ற என் ஆருயிர் நண்பனின் குரல் மெள்ளமாகக் கேட்டது. உஷார் ஆனேன். “ஆபத்து. இப்போதைக்கு நான் வீட்டிற்கு வர முடியாது. இதை கலாவிடம் எப்படியாவது சொல்லி சமாளித்துவிடு” என்றான். ஜாடை மாடையாக எங்கோ பார்ப்பது போல அவனைக் கவனித்தேன். முழுக்க முக்காடு போட்டிருந்தான். “ஐயோ பாவம் .என் பொருட்டு இப்படி இக்கட்டில் மாட்டிக் கொண்டானே! கலாவுக்கு நான் என்னத்தைச் சொல்வேன். இவன் வரமுடியாமல் போனதற்கு இவன் சொன்ன ‘ஆபத்து’தான் காரணம் என்றா?. கோவிலுக்கு வெளியில் மணிக்காக மணிக்கணக்காக காத்து இருந்துவிட்டு, அவன் வராமல் போகவே, சோர்வுடன் வீட்டை நோக்கிச் செல்ல ஆரம்பித்தேன். நடந்துகொண்டே மீனாவுக்கு நடந்தனவற்றை விளக்கிச் சொன்னேன். அமைதியுடன் கேட்ட அவள், “பதற்றப்படாமல், மெதுவாக பின்னால் திரும்பிப் பாருங்கள். யாரவது உங்களைத் தொடர்ந்து வரக்கூடும்.” என சொல்லிக் கொண்டிருந்த போதே, பின்னால் வந்த ஒருவன், என்னுடைய போனை பிடுங்கிக் கொண்டு வேகமாகச் சென்றான். அவனைத் துரத்திச் சென்ற மற்றொருவன் அதைப் பிடுங்கிக் கொண்டு வேறு திசையில் சென்று மறைந்துவிட்டான். ஏதேனும் படக்காட்சி ஷூட்டிங்க் நடக்கிறதா என்ன?

மலைத்துப் போய் நின்றுகொண்டிருந்த என் நெற்றியில் ஒரு ‘கல்’ போல ஏதோ ஒன்று வந்து தாக்கவே; எங்கிருந்து வந்தது என சுற்றும் முற்றும் பார்த்தேன். யாரையும் காணோம்.

நெற்றியில் ரத்தம் வழிய, கீழே விழுந்திருந்த பொருளை எடுத்துப் பார்த்தேன். ஒரு கல்,காகிதத்தால் சுற்றப் பட்டிருந்தது. அதில் ஏதோ கிறுக்கலாக எழுதப்பட்டிருந்தது. அந்த எழுத்தைப் பாத்தால், எனது அருமை நண்பனின் கிறுக்கலே என்பது எனக்குத் தெரியாதா என்ன? “நீ எங்கேயாவது லாட்ஜில் போய் இரண்டு தினங்கள் தங்கவும். உன்னைத் தொடர்ந்து வந்து நம் வீடுகளைக் கண்டுபிடிப்பார்கள்.” என்று கிறுக்கன் எழுதி யிருந்தான். கையில் பைசா இல்லாமல் எப்படி லாட்ஜில் போய்த் தங்குவது? முன் பணம் கொடுக்காமல்? போன்கூட இல்லை. அதைக்கூட விட்டு வைக்காமல் ஆளுக்கு ஆள் நரியே நரியே விளையாட்டு விளையாடுகிறார்கள். பாவிகள். ’பாவிகள்’ என்ற வார்த்தையைக் கொஞ்சம் சத்தமாக சொல்லி விட்டேன் போலும். பக்கத்தில் சென்று கொண்டிருந்த இரண்டு பெண்கள் சண்டைக்கு வந்து விட்டார்கள். ஒரு பெண் என் சட்டையைப் பிடித்தபடி அடிக்க கையை ஓங்கினாள். ஒரு ஆண் மகன் அழக்கூடாது என்ற காரணத்தால், நான் அழுகையை அடக்கிக் கொண்டேன். இனி, இந்த என் ஜன்மத்தில் வீடியோ எடுப்பேனா என்ன? அந்த பெண்கள் போய்விட்ட பிறகுதான் கவனித்தேன் என் சட்டைப் பை கனத்திருப்பதை. பையில் ஒரு லாட்ஜின் ரூம் சாவியும், என் பெயரில் பணம் கட்டப் பட்ட ரசீதும் இருந்தது,

அங்கே போய்த் தங்கினேன். புது இடம், மற்றும் அன்றைய நிகழ்ச்சிகளின் தாக்கத்தால் என் தூக்கம் பறி போனது. எனக்கு ஒதுக்கப்பட்ட அறை முதல் மாடியில் இருந்தது.. புரண்டு புரண்டு படுத்தபடி என்னுடைய நினைவுகள், என் வாழ்க்கைப் பயணத்தின் ஆரம்ப காலதின் சுவடுகளைத் தேடியது. ஐந்து வயது. அப்போது. நான் ஒரு தலை சிறந்த பள்ளியில் விடுதியில் தங்கி, ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு கார்டியன் எனப்பட்ட ஒரு ஒண்டிக்கட்டைத் தாத்தா, அவ்வப்போது வந்து பணம் கட்டிவிட்டுப் போவதும் ,என்னை நாள் கிழமைகளில் வந்து பார்த்து; விலை உயர்ந்த ஆடைகளை அன்பளிப்பாகக் கொடுத்துச் செல்வதும், கல்லூரியிலும் அதுவே தொடர்ந்து நடந்து கொண்டிருந்ததும் இப்பொழுது நினைத்தாலும் மர்மக்கதை மாதிரி இருக்கும். மர்மத்தின் மறுபக்கம் எப்பொழுது தெரியவரும்?

என் சான்றிதழ்களில் தகப்பனாரின் பெயர் ‘முருகேசன்’ என்று குறிப்பிடப் பட்டிருக்கும். (முருகேசன் என்ற பெயர் என் மூளையில் மின்னல் மாதிரி எதையோ சொல்லியது. அதெல்லாம் சும்மா கற்பனை என மூளையின் மற்றொரு பாகம் ஒதுக்கித் தள்ளிவிட்டது). அவர் யார்? எங்கே இருக்கிறார்? என்ற கேள்விகளுக்கெல்லாம் தாத்தா பதில் சொன்னதே கிடையாது. என்னிடம் மிகவும் அன்பாகவே இருப்பார். விடுமுறைகளில் அவர் என்னை வீட்டிற்கு அழைத்துச் செல்வார். பல சுற்றுலா ஸ்தலங்களுக்கும் அழைத்துப் போவார். எனக்காக நன்றாக செலவுகள் செய்வார். எனக்கே எனக்கு என்று சொல்லிக் கொள்ள தாத்தா ஒருவர்தான். அவர் மேல் அவ்வளவு அன்பு வைத்திருந்தேன். என் படிப்பு முடிந்து ஒரு பெரிய நிறுவனத்தில் மேனேஜர் வேலையும் கிடைத்தது. தாத்தாவை என்னுடன் வந்து வசிக்கும்படிக் கேட்டுக் கொண்டும் அவர் மறுத்துவிட்டார். மீனாவை நான் விரும்பி மணம் செய்து கொண்டேன். அந்த மண விழாவுக்கு வந்து வாழ்த்திவிட்டு, திருமணப் பரிசாக என் பெயரில் பெரும் பணத்தை டெப்பாசிட்டாகப் போடப்பட்ட பேங்க் புத்தகத்தையும் கொடுத்தார். நான் இப்பொழுது குடியிருக்கும் வீடு கூட அவர் என் மனைவிக்கு திருமணப் பரிசாகக் கொடுத்ததே.

மீனா என் நினைவுக்குள் வந்தாள். படிப்பில் மெடல்களும் கோப்பைகளும் வாங்கிய என் கெட்டிக்காரத் தனத்தை அவள் ஏட்டுச் சுரைக்காய் என வர்ணிப்பாள். இவ்விதம் எண்ணிக்கொண்டிருந்த பொழுது “முருகேசன்” என்ற பெயர் என் மண்டைக்குள் மறுபடி மின்னலைத் தோற்றுவித்தது. அப்படியும் இருக்குமோ? வீடியோ! இறந்து போன முருகேசன்? என் அப்பாவாக இருக்குமோ? சுத்தமாக என் தூகம் கலைந்தே போனது. சுவரில் மாட்டி இருந்த கடிகாரம், மணி பதினொன்றைக் காட்டியது. எழுந்து பால்கனிக்குச் சென்றேன். கீழிருந்து ஏதோ பேச்சுக் குரல் கேட்கவே, கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு, கீழே குனிந்து பார்த்தேன். அதே சமயம் ஒருவன், என் பக்கவாட்டிலிருந்த அறையின் பால்கனியிலிருந்து தாவிய வேகத்தில் என் மூக்கில் மயக்க மருந்து தடவிய கைக்குட்டையை வைத்து அழுத்தினான். நான் செயலற்றுப் போனேன். என்ன நடக்கிறது என்றெல்லாம், தெரிந்தாலும், ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலை. தோள் மேல் கை போட்டவாறு, என்னை ஏறக்குறைய இழுத்துக் கொண்டு, நடத்தி அழைத்துக்கொண்டு போனான். எதிரே வந்த மானேஜரிடம், ”ஒவர் குடி. பக்கத்து அறையிலிருந்த எனக்கு வயிற்றை வலிக்கிறது என்று போன் பண்ணினான். அவனை டாக்டரிடம் கூட்டிக்கொண்டு போகிறேன்.” என்றவன், என்னை மேலும் வேகமாக இழுத்துக் கொண்டு போனான். வாசலில் தயாராக நிறுத்தி வைக்கப்படிருந்த காரில் ‘இவனுடன் முன்பே அங்கு நின்று பேசிக்கொண்டிருந்த இருவரும்’ சேர்ந்து என்னை ஏற்றினார்கள். கார் வந்து நின்ற இடம், முருகேசனின் பங்களாவின் பின்புறம் என்று யூகித்தேன். உள்ளிருந்து வந்து கதவைத் திறந்தவர்கள் இருவரும் அந்த எழும்பூர் ஆட்களே. .எனக்கு இப்பொழுது கொஞ்சம் பேச முடிந்தது. “கட்டிக் கொண்டிருப்பது காவி, செய்வதோ பாவங்கள்” என்று சொல்லிய என்னைப் பார்த்து புன்னகை புரிந்த இருவரும் என்னைத் தள்ளியபடி மாடி அறை ஒன்றிற்கு இட்டுச் சென்றனர்.

அந்த அறை விசாலமாக இருந்தது. அறையின் ஒரு கோடியில் அகண்ட கட்டில் ஒன்றில் அமர்ந்திருந்த வயது முதிர்ந்த பாட்டி ஒருவர் எழுந்து வந்து என் கைகளைப் பற்றிக்கொண்டு கண்ணீருடன் என் முகத்தைத் தடவி நன்றாக இருக்கிறாயா தங்கமே! என்றார்கள். அவர்களுடைய பாசம் மிக்க வார்த்தைகளும், அன்பான வருடல்களும், இப்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்பங்களும், அனாதையாக வாழ்ந்து வந்த எனக்குள் கண்ணீரை வரவழைத்தது.

என் நண்பன் மணி; அங்கிருந்த இருக்கை ஒன்றில் உட்கார்ந்து கொண்டிருப்பதை அப்போதுதான் பார்த்தேன். கையில் எலும்புமுறிவு கட்டும், முகத்தில் ரத்தகாயங்களுக்கு கட்டும் போட்டுக் கொண்டிருந்த அவன் என் அருகே வந்து “இதைவிட பாதுகாப்பான இடம் உனக்கு வேறு இல்லை. மாதவா”. என்றான். “உன்னுடைய அனுபவமா?” என்றேன் கடுப்புடன். ஒரு பெண்மணி அப்போது எனக்கு ஏலக்காய் டீ கொண்டு வந்தார்கள். “மாதவா! இவள் உன் அத்தை கோதை” என்ற பாட்டியிடம்; “நீங்கள்?” என்று வினவினேன் “பாட்டிடா கண்ணா!”

எனக்கு கோபமான கோபமாக வந்தது. இது நாள் வரை என் பிறப்பு, உறவு, பற்றிய எந்த ஒன்றும், எனக்குத் தெரியாமல் மறைத்துவிட்ட இந்த கூட்டத்தை நான் வெறுக்கலானேன்.

என் உயிருக்கும் மீனா உயிருக்கும் ஆபத்து என்று சொன்னார்கள்.

எனக்கு அன்றிரவே மர்மத்தின் மறுபக்கம் விளக்கமாகியது. பாட்டி என்னிடம் என் சின்ன வயது புகைப் படத்தைக் காட்டினார்கள். நான் என் அம்மாவுடன் இருக்கும் படத்தைப் பார்த்த போது கலங்கித்தான் போனேன். அடிக்கடி நினைவில் வரும் அந்த முகம், யாருடையது என அறிந்து கொள்ளத் துடியாய்த் துடித்த பொழுதுகளை வலியுடன் எண்ணிப் பார்க்கிறேன். இதோ என் நாலு வயது வரை அன்பின் அடையாளத்தை, அன்பு இப்படிதான் உருக வைக்கும் என்று உணர்த்திய அம்மா! இந்த கணத்தில் கூட என்னால் அவர்களின் பாசப் பிணைப்பை உணரமுடிகிறதே.

அன்றிரவு நெடுநேரம் பாட்டியுடனும் அத்தையுடனும் என் நண்பன் மணியுடனும் உரையாடிக்கொண்டிருந்ததில் நான் தெரிந்து கொண்டவை யாவுமே அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.

என்னையும், என் அம்மாவையும் கொல்ல வந்தவன், முதலில் அம்மாவைக் கத்தியால் குத்தியிருக்கிறான். அம்மா இறந்து போய்விட்டதாக நினைத்த அவன், என்னைத் தாக்க முற்பட்டபோது, அம்மா தன் மார்பில் சொருகியிருந்த கத்தியை உருவி அவனுடைய முதுகில் குத்திவிட்டு, என்னைத் தூக்கிக் கொண்டு, பாட்டியின் அறைக்குத் தடுமாறியபடி வந்தார்களாம். பாட்டியிடம் என்னை ஒப்புவித்தவர்கள், நடந்தவற்றைக்கூறி, இவனை மறைத்தே வளர்க்க வேண்டும். என்று கேட்டபடியே உயிர் துறந்தார்களாம்.

கொலைகாரனும் இறந்து போய்விடவே, போலீஸ் விசாரணையில் யார் கொலைகாரனை ஏவிவிட்டது, எதற்காக என்பதெல்லாம் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது.

ஆனால், சந்தேகம் ஒருவர் மீது வலுத்த போது எல்லாமே கைமீறிப் போயிருந்தது.. அவர், சித்தியின் அப்பா என்பது தெளிவானாலும், அப்பாவிற்காக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் போனது. தன் முதல் மனைவியைக் கொன்ற கொலைகாரனின் மகள் என்பது தெரியாமல்தான், கார்மேகத்தின் மகளை இரண்டாம் தாரமாக என் அப்பா முருகேசன் மணம்செய்து கொண்டார்.

கார்மேகம் கொடிய எண்ணம் கொண்டு பழய பகையின் காரணத்தால் என் அம்மாவைக் கொன்றதை ஒருமுறை பாட்டியிடமே தெரிவித்து, தான் எதற்கும் துணிந்தவன் என்பதைக் காட்டிக் கொண்டாராம்.

என் அத்தை கோதை, சிறுவயதிலேயே கணவனை இழந்து வீட்டோடு வந்துவிட்ட காரணத்தால், என் பாட்டிக்குத் துணையாக இன்றுவரை இருந்து வருகிறார். அவர் கைம்பெண்ணானதும் அவருடைய எதிர்காலம் கருதி பாட்டியின் பெயரில் இருந்த சொத்துக்களில் பாதியையும், அனேக ஸ்தாபனங்களையும், அத்தையின் பெயருக்கு மாற்றி அவற்றை எல்லாம் அவரே கவனித்து வருமாறு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதில் வரும் வருமானத்தைதான் எனக்கு செலவு செய்திருகிறர்கள். எனக்கு பாதுகாப்பாக இருந்துவரும் என் அன்பான தாத்தா ஈஸ்வரன், அத்தையின் மாமனார் ஆவார். ரொம்ப நாட்களாக, போக்கு வரத்து இல்லாமல் இருந்தும், அத்தை வந்து இந்த உதவியைக் கேட்ட போது, மறுக்காமல், ஒப்புக் கொண்டாராம். போக்குவரத்து இல்லாத உறவானதால், கார்மேகம், அந்த தாத்தாவிடம் நான் வளர்ந்து வருவதை, சந்தேகப் படவில்லையாம். ஈஸ்வரன் தாத்தா, மகனும் மறைந்து போனதால், இன்று வரை எனக்காகவே வாழ்வதை அவர் சுமையாகக் கருதாமல் கடமையாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். பாட்டியின், மீதி பாதி சொத்துக்களை என் அப்பா முருகேசன் பெயரை நாமினியாகப் போட்டு அதையும், அப்பாவும், அத்தையுமாக கவனித்து வந்திருக்கிறர்கள். அப்பாவுக்கு, சித்தியிடம் குழந்தை ஏதும் பிறக்கவில்லை.

என்னைத் தேடித் திரிந்த கார்மேகம், அப்பாவின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வந்ததோடு, மொத்த சொத்துக்களையும்; சித்தியின் தம்பிக்கு மாற்ற முயற்சிகள் நடத்திவந்தார். அத்தை சிறந்த நிர்வாகியும், கெட்டிக்காரத்தனமும், முன்எச்சரிக்கையும் கொண்டவர். அதனால், சமையலுக்கும் கார் ஓட்டுவதற்கும் தனக்கு விஸ்வாசமான, ஆட்களை நியமித்தார். அவர்களைத்தான் அப்பா எக்மோர் வரவழைத்து முக்கியமான பத்திரங்களை, ஈஸ்வரன் தாத்தாவிடம் கொடுக்கும்படி சொன்னார். மாரடைப்பு ஏற்பட்டதை போன் மூலம் பாட்டிக்குத் தெரிவித்தவர்கள், தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்ததற்கு காரணம் விளங்கியது. அத்தையின் நிறுவனங்களிலும், அத்தை, தனக்கு விஸ்வாசமனவர்களை நியமித்து அவற்றை பாதுகாத்து வந்திருக்கிறர்கள். என்னை லாட்ஜிலிருந்து,கடத்தி, இங்கு கொண்டு வந்தவர்கள் அவர்களே.

அப்பா இறந்து இரண்டு நாட்களே ஆன நிலையில் பாட்டியும், அத்தையும், அது குறித்து, விசனப் பட்டுக்கொண்டே, அவர் வாரிசையாவது காப்பற்ற பெரு முயற்சி எடுத்திருப்பதை எண்ணும் போது வியப்பாக இருந்தது. நாளேட்டில், விளம்பரம் கொடுத்தவர், கார்மேகம் என்பதால் எந்த அடிப்படையில் என்றும் விளங்கிற்று. அப்பாவின் உடல், ஹாலில் கிடத்தப்பட்டு, உறவினர்களும், நண்பர்களும், அலுவலக ஊழியர்களும் வந்து போய்க் கொண்டிருந்த வேளையில், எனதருமை நண்பன் மணி; கார்மேகத்திடம் போய், வீடியோ தன்னிடம் இருப்பதாகச் சொல்லவே; அவனை ஒரு அறைக்கு அழைத்துப் போய் விசாரித் திருக்கிரார். அவனுக்கு சந்தேகம் ஏற்படவே, மேற்கொண்டு ஒன்றும் சொல்லாமல் சமாளிதிருக்கிறான்.

“அதனால் என் கையை முறுக்கி முறித்து விட்டான். மாதவா!. முகத்தில் கத்தியால் கீரி காயங்களை ஏற்படுத்தி பயமுறுத்தினானே. அதுக்கெல்லாம் நான் அசைந்து கொடுக்கவேயில்லை தெரியுமா மாதவா? அப்பொழுது, முக்கியமான பெரிய மனிதர் ஒருவர், இறப்புக்கு வருகை தந்திருப்பதாக அவரது உதவியாளர் வந்து அறிவிக்கவே, அந்த அறையை வெளியே தாளிட்டு விட்டு சென்றுவிட்டான். அந்த சமயம், இவற்றை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அத்தையின் கார் ஓட்டுனர் வந்து, கதவைத் திறந்துவிட்டு , பாட்டியின் அறையில் கொண்டுபோய் விட்டார்.” என்று சொன்ன என் நண்பனை நான் அணைத்துக்கொண்டேன். அவன் கண்ணீரைத் துடைத்துவிட்டேன்.

என் போனைப் பிடுங்கிக் கொண்டு ஓடியவர்கள் கார்மேகத்தின் ஆட்கள். அதைத் தட்டிப் பறித்து மீட்டவர்கள், பாட்டியின் ஆட்கள். அவர்கள் கூடவே வந்து என்னை அடையாளம் காட்டியவன், என் ஆருயிர் நண்பன். இதை எல்லாம் தெரிந்து கொண்ட போது, க்ரைம் நாவல் படித்து முடித்த உணர்வு எனக்கு ஏற்பட்டது.

அப்பொழுது, அத்தைக்கு ஒரு போன் கால் வரவே, அவர்கள், “அண்ணி வந்து கொண்டிருக்கிறார்கள்.” என்று அறிவித்தார்கள். கணவன் இறந்துபோனதும்; மனைவி கருமாதி செய்வதற்கு முன் தந்தையின் வீட்டிற்குச் சென்றுவிட்டு அன்றிரவே வீட்டிற்கு வந்துவிட வேண்டும் என்பது சாங்கியம். அதன்படி விமானத்தில் கோயம்புத்தூரில் இருந்த கார்மேகத்தின் வீடு சென்ற என் சித்தி, இரவே திரும்ப வீட்டிற்கு வந்துகொண்டிருக்கிறார்கள் என்று, கார்மேகத்தின் உதவியாளராக இருக்கும் சந்தானம் தெரிவித்தார். வீட்டின் கீழ் கட்டில் சித்தியின் பேச்சரவம் கேட்கவே, அனைவரும் மௌனமாக இருந்தோம். மாடிக்கு வந்த சித்தி, கதவைத் தட்டவே நானும் மணியும் அந்த அறையின் மறுகோடியில் இருந்த பால்கனிக்கு அனுப்பப்பட்டோம்.

பாட்டியை நமஸ்கரித்த சித்தி, தேம்பித் தேம்பி அழவே, பாட்டி; அவர்களை அணைத்தபடி “இறப்பு அனைவருக்கும் வரக்கூடிய ஒன்று. என் மகனை நானும் உன் கணவனை நீயும் பறி கொடுத்திருக்கிறோம் அம்மா. துக்கங்களைத் தாங்கிக்கொண்டு வாழ வேண்டும் என்பது கடவுளின் கட்டளை போல என்ன செய்வது” என்று தன் வருத்தத்தையும் பகிர்ந்துகொண்டு, ஆறுதலாகவும் பேசினார்கள். “என் கணவரைக் கொன்ற குற்றத்திற்காக அப்பாவைப்; போலீசில் பிடித்துக் கொடுத்து விட்டேன் அத்தை.” என்று சித்தி சொல்ல, பாட்டியும், அத்தையும் மிரண்டு போனார்கள் என்றுதான் சொல்லவேண்டும். “ஆமாம். அத்தை. அவரே ஒப்புக் கொண்டதும் நான் செய்த முதல் வேலை போலீசிடம் அவரை ஒப்புவித்ததுதான். நான் உங்களோடு இருந்துகொள்ள அனுமதி தந்தீர்களானால் மிகவும் நன்றியுடன், என் கணவரது நினைவுகளோடு என் மீதமுள்ள நாட்களை கழிப்பேன்.” அப்போ என் மகனையுமா? என்றபடி பாட்டி தள்ளாடி, கீழேவிழ இருந்தார்கள் நான் ஓடிச் சென்று அவர்களைத் தாங்கிப்பிடித்தேன்.

நான் அனாதை இல்லை. என் கடமையை நான் உணர்ந்தே இருந்தேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *