மனச்சிதைவு மனிதர்கள்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: June 21, 2019
பார்வையிட்டோர்: 40,709 
 
 

அவன் இருப்பது சைதாப்பேட்டையில். அவன் இந்தத் தெரு வழியாக அடிக்கடி போகிறவன்தான். வயது இருபத்திநான்கு. சிறிய வயதிலிருந்தே அவன் வளர்ப்பு சரியில்லை. சாலை ஓரங்களில் படுத்துத் தூங்குபவன்.

பல நாட்கள் மேலே சட்டை இல்லாமல் வெறும் உடம்போடு தெருக்களில் டிரவுசர் மட்டும் அணிந்து போவான். பெண்களை வெறித்துப் பார்ப்பான். வாயில் எப்போதும் பீடி புகைந்து கொண்டிருக்கும். எப்போதுமே கொஞ்சம் வேகமாகத்தான் நடந்து செல்வான். தெருவில் நின்று யாரோடும் பேசுவதில்லை. அவன் பாட்டுக்கு இயல்பாகப் போவான் வருவான்.

யாரிடமும் பேசவே மாட்டான் என்பது போலவும் அவனுடைய தோற்றம் இருக்காது. சாதாரணமாகத்தான் இருப்பான். ஆனால் சுத்தமாக இருக்க மாட்டான். அவனின் அசுத்தமே அவனை மேலும் கறுப்பாகக் காட்டியது. சில சமயங்களில் தெருவின் மறுபுறம் இருக்கிற கால்வாயை நோக்கிப் போவான். உயர்ந்த செடிகளின் மறைவில் மலம் கழிக்க அமர்வான். அப்போதும் கூட பீடிப் புகை அவன் மேலே மிதந்து சென்று கொண்டிருக்கும். கால்வாயில் அலைந்து திரியும் பன்றிகள் அவனை நிம்மதியாக மலம் கழிக்க விடாமல் அவனைச் சுற்றி சுற்றி வரும்.

அன்றைக்கும் ஒருநாள் எப்போதும் போல நீண்ட தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தான். அப்போது ஒரு வீட்டின் காம்பவுண்டுச் சுவர் வழியாகச் சில எச்சில் இலைகள் வெளியில் போடப்பட்டன. உடனே இரண்டு ஆடுகள் ஆர்வத்துடன் இலைகளை நோக்கி ஓடிவந்து சுவைக்கத் துவங்கின. தெருநாய் ஒன்றும் வேகமாக ஓடி இலைகளை ஆடுகள் தின்றுவிடாதபடி குறுக்கிட்டு வேகமாக உறுமியது. ஆடுகள் பயத்தில் தயங்கி நின்றன. இலைகள் வேண்டாம் என நகர்ந்து போய்விடவும் அவைகளால் முடியவில்லை. நாயிடமிருந்து இலைகளை மீட்கவும் வழி தெரியவில்லை.

நாயும் இலைகளை ஆடுகள் பறித்து விடாமல் மிகக் கவனமாய் மீதி இருந்த உணவுகளை அவசர அவசரமாக நக்கிக் கொண்டிருந்தது. அந்தக் காட்சியை பீடி புகைத்தபடி பார்த்துக்கொண்டே வந்தவன் சட்டென நின்றான். வலது கையால் மார்பைத் தடவியபடியே கவனித்தான். பின் சுற்றிலும் தேடலுடன் பார்த்தான்.

பலாப்பழம் அளவுள்ள ஒரு பெரிய கல் ஒன்று தெருவின் மறு ஓரத்தில் கிடந்தது. அவன் எந்த வேகமும் காட்டாமல் நிதானமாய் நடந்துபோய் குனிந்து இரண்டு கைகளாலும் கல்லை எடுத்தான். பீடி அவனுடைய வாயில் புகைந்து கொண்டிருந்தது. கல்லைத் தலைக்குமேல் தூக்கி உயர்த்தியபடி அவன் அந்த நாயை நோக்கிப் போனான்.

நாயின் கவனம் முழுதும் எச்சில் இலைகளில் கிடைத்த உணவுகளிலேயே இருந்தது. அவன் நாயின் பின்னால் போய் நின்றான். அப்போதும் நாய் அவனைக் கவனிக்கவில்லை. அவசரப் படாமல், நிதானமாக குறி பார்த்து நாயின் தலையின் மேல் அந்தக் கல்லைப் போட்டான். ஆடுகள் சிதறி ஓடின. நாய் கொஞ்சங்கூட ஓசை எழுப்பவில்லை. அதே இடத்தில் விழுந்து பரிதாபமாய் கால்களை உதைத்தது. அவன் குனிந்து கல்லை எடுத்தான். மறுபடியும் நாயின் தலையில் ஓங்கிப் போட்டான். நாயிடம் இருந்து சப்தமே வரவில்லை. உதைத்து இழுத்துக் கொண்டிருந்த அதன் கால்கள் ஓய்ந்தன. அவன் மறுபடியும் மறுபடியும் அதே கல்லைத் தூக்கி தூக்கி நாயின் தலையில் போட்டான்.

தெருவில் நின்றோர் போனோர் யாரும் குறுக்கிடாமல் அதிர்வுடன் அவனுடைய செய்கையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவன் கல்லைத் தூக்கி சுவர் ஓரமாய் எறிந்தான். கீழே கிடந்த நாயை வாலைப் பிடித்துத் தூக்கி துணி துவைப்பது மாதிரி தரையில் பொத் பொத்தென்று போட்டு அடித்தான். பின் அதன் வாலைப் பிடித்து இழுத்தபடி கால்வாய் ஓரமாய் போனான்.

கவண்கல் சுழற்றுவது போல நாயின் உடலை அதன் வாலைப் பிடித்துப் பலமுறை சுற்றியபடியே அதை கால்வாயில் தேங்கியிருந்த சாக்கடையில் வீசி எறிந்தான். நாயின் உடல் சாக்கடை நீரில் மூழ்கி மறைந்தது. அவன் பீடி புகைத்தபடி சிறிது நேரம் அங்கேயே நின்றான். இரண்டு உள்ளங் கைகளிலும் படிந்திருந்த தூசியைத் தட்டி உதறிவிட்டு மெதுவாக நடக்கத் தொடங்கினான்.

அங்கிருந்த தெருச் சிறுவன், “அண்ணா இன்னிக்கி ராத்திரி ஒன் கனவுல அந்த நாய்தான் வரப்போகுது…” என்றான். இது அவனுடைய காதில் விழுந்ததோ இல்லையோ தெரியாது; ஒன்றும் சொல்லாமல் இறுகிய முகத்தோடு சட்டை அணியாத மார்பைத் தடவிக்கொண்டு மெளனமாய் நடந்தான். இப்போதும் அதே தெரு வழியாக அடிக்கடி அவன் பீடியை புகைத்தபடி போகிறான் வருகிறான்.

அன்று பிற்பகல் பொழுதில், தெருவில் வழிமறித்து அவனிடம் நடுத்தர வயதுத் தோற்றமுடைய ஒருவர் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார்.

அன்று மாலையே அவனை அந்த ஊரின் வெளிப்புறத்தில் இருந்த ஒரு ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார். தனிமையில் இருந்த அந்த ஆசிரமம் ஒரு அமானுஷத் தோற்றத்தோடு காணப்பட்டது.

காவி உடையில் அங்கிருந்த சாமியாருக்கு அறுபது வயது இருக்கலாம். அவனை அன்புடன் தோளில் தட்டிக்கொடுத்து அவனை அங்கேயே தங்கிக்கொண்டு அவருக்கு சேவை செய்யச் சொன்னார். அவனை உடனே பாத்ரூமில் அழுக்கு போகக் குளிக்கச் சொன்னார். குளித்த பிறகு சற்று சிவப்பான நிறத்தில் அவன் தோற்றமளித்தான். மாற்றுடை கொடுக்கப் பட்டு அவனுக்கு வயிறு நிறைய உணவு தரப்பட்டது.

அன்று இரவு சாமியாரைப் பார்க்க சில பெண்கள் காரில் வந்து போனார்கள். சாமியார் அவர்களுடன் ஏராளமான மப்பில் இருந்தார். அவர்களுடன் கஞ்சா புகைத்தார். நிழலான நடவடிக்கைகள் ஏராளமாக ஆசிரமத்தில் அரங்கேறின. ஹவாலா பணம் அபரிதமாகப் புழங்கியது.

அன்று இரவு அங்கு இவன் தரையில் படுத்துத் தூங்கினான்.

நல்ல உறக்கத்தில் இருந்தபோது, அவன் தொடையை யாரோ மெல்ல வருடிக் கொடுத்தார்கள். அவன் திடுக்கென முழித்துப் பார்த்தான். அருகே சாமியார் படுத்திருந்தார். சற்று நேரத்தில் அவன் சம்மதம் இல்லாமலேயே சாமியார் அவன் மீது படர்ந்தார்.

மறுநாள் பகல் நேரத்தில் ஆசிரமத்தில் சாமியார் தனியாகத் தரையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். இருந்த சில சீடர்களும் டவுனுக்குச் சினிமா பார்க்கச் சென்று விட்டனர். வெளியே வெயில் உக்கிரமாக தகித்துக் கொண்டிருந்தது. ஒற்றைக் காக்காய் ஒன்று வரட்டுக் குரலில் கரைந்தது.

அவன் நிதானமாக சுற்றிப் பார்த்தான். மூலையில் ஒரு பெரிய ஹோமகுண்டம் கழுவி சுத்தமாக வைக்கப் பட்டிருந்தது. அதனை அவன் மிகவும் கஷ்டப் பட்டுத் தூக்கினான்.

சாமியாருக்கு அருகில் சென்று நின்றான். சாமியாரை சற்று நேரம் உற்றுப் பார்த்தான். பிறகு அவரின் தலையை குறி பார்த்து, பலம் கொண்ட மட்டும் ஹோமகுண்டத்தை தூக்கி நிதானமாக சாமியாரின் தலைமீது நச்சென போட்டான்.

சாமியாரின் தலை, முகம் ஒருசேர பிதுங்கி ரத்தக் கூழாகியது.

அவன் ஒரு பீடியைப் பற்றவைத்து புகையை வெளியே கக்கினான்.

பிறகு நிதானமாக கதவைத் திறந்துகொண்டு வெளியேறி வேகமாக நடந்து சென்றான்.

அமைதியான அந்தச் சூழலில் அந்த ஒற்றைக் காக்கா மட்டும் விடாமல் கரைந்து கொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

1 thought on “மனச்சிதைவு மனிதர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *