பிள்ளை கடத்தல்காரன்

2
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: August 28, 2016
பார்வையிட்டோர்: 20,902 
 

இந்தக் கதையை, ரொறொன்ரோவில் வார்டன் வீதியில் அமைந்துள்ள பல்கடை அங்காடியில் வேலைசெய்யும் சோமாலியக் காவலாளியுடன் ஆரம்பிக்கலாம். வெள்ளைச் சீருடை, தோள்களில் தரித்த கறுப்புப் பட்டைகள், கணுக்காலுக்கு மேல் உயர்ந்த பூட்ஸ், இடுப்பிலே பெல்ட்டில் குத்தியிருக்கும் ரேடியோ… எனக் கம்பீரமாக இருந்தார். சாய்த்து அணிந்திருந்த தொப்பி, பாதிக் கண்களை மறைக்க உலா வந்து, அவ்வப்போது உயரமான ஸ்டூலில் அமர்ந்து தன் கடமையைச் செய்யும் கறாரான காவலாளி அவர். கதையைத் தொடங்க மிகவும் பொருத்தமானவர்.

அல்லது இந்தக் கதை ஓர் அகதியுடன் ஆரம்பமானது எனக்கூடச் சொல்லலாம். அவன் பெயர் லோகநாதன். நேற்று அவனுக்கு 24-வது பிறந்த நாள். அவன் பிறந்த தேதி அவனுக்கு நினைவு இருக்கிறது. அவனைப் பெற்ற அம்மாவுக்கு அந்தத் தேதி ஞாபகத்தில் வந்ததே கிடையாது. கனடாவுக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. ஒரு படுக்கை போட்டால் நிரம்பிவிடும் சின்ன அறையில் தனியாக வசித்தான்.

காலையில் அவனை எழுப்பிவிட யாரும் இல்லை. அவனை எழுப்புவதற்கும் யாரும் கிடையாது. அது மிகப் பெரிய துக்கம். அகதியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பிறகு, மேல்முறையீடு செய்துவிட்டுக் காத்திருந்தான். தொழிற்சாலையில் காலை 7 மணியில் இருந்து மாலை 4 மணி மட்டும் வேலை; பின்னர், சூப்பர் மார்க்கெட்டில் மாலை 5 மணியில் இருந்து இரவு 9 மணி மட்டும் வேலை. இரண்டு வேலைகள் செய்தாலும், கனடா வருவதற்கு வாங்கிய கடனில் பாதியைக்கூட இன்னும் அழிக்கவில்லை.

தொழிற்சாலை வேலையை முடித்துவிட்டு, சூப்பர் மார்க்கெட் வேலைக்கு அவசரமாக நடந்துகொண்டிருந்தான். சில நாட்களாக அவனுக்கு முதுகு வலி. அவனுடைய ஆங்கிலம்போல கொஞ்சம் விந்தி விந்தி நடந்தான். அவன் வாழ்க்கையில் அனுபவிக்கப்போகும் மிக மோசமான தருணத்துக்கு, இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது.

பனிக்காலம், அவனுக்குக் கொடுமையானது. மார்ச் மாதம் நீண்டுபோய் வசந்தத்தைப் பிறக்கவிடாமல் இழுத்தடித்தது. எலும்புகள், வேலைசெய்ய மறுத்தன. முதுகு எலும்பு வைத்தியரிடம் உடம்பைக் காட்டச் சென்றபோது, அவர் கீழ் எலும்பு எல் 2-ம், எல் 3-ம் பிசகிவிட்டதாகச் சொன்னார். ‘1 முதல் 10 எண்கள் வரிசையில், வலி எந்த எண்?’ எனக் கேட்டார். ‘வலிக்குக்கூட ஓர் எண் இருக்கிறதா?!’ என வியப்படைந்த அவன், ‘6’ எனச் சொன்னான். ’10 எண் வலி, எப்படி இருக்கும்?’ எனக் கற்பனை செய்தான். அந்த மருத்துவரிடம் வேலை செய்த தாதிப் பெண் லட்சணமாக இருந்தாள். ஐந்து டாலர் நோட்டில் இருக்கவேண்டிய முகம். அவளுக்கு அழகு எண் 8 கொடுக்கலாம் எனத் தீர்மானித்தான். அவனுடைய சூப்பர் மார்க்கெட் மேனேஜரின் செயல்திறனுக்கு 4 எண் போதும். வேகமாக நடக்க முடியவில்லை. அவனைத் தாண்டி இரண்டு சிறுவர்கள், ஓர் ஆப்பிளை இரு பக்கங்களும் பிடித்தபடி நடந்துபோனார்கள். பார்க்கச் சிரிப்பாக இருந்தது.

பிள்ளை கடத்தல்காரன்கதை உண்மையில் தொடங்கியது, மூன்று வயதை மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தையில் இருந்துதான். அது, சூப்பர் மார்க்கெட்டில் சிறுவர்கள் விளையாட்டு மையத்தில் சற்று வயது கூடிய பெண் குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்தது. திடீரென அந்தப் பெரிய பெண்ணை பெற்றோர் வந்து அழைக்க, புறப்பட்டுப் போய்விட்டது.

தனித்துவிடப்பட்ட குழந்தை அங்கும் இங்கும் பார்த்தது. காசு போட்டால் ஆடும் குதிரையுடன் விளையாடிவிட்டு மெள்ளச் சிணுங்கத் தொடங்கியது. சிணுங்கல் பெரிதாகிக்கொண்டு வந்ததை ஒருவரும் கண்டுகொள்ளவில்லை. ‘ம்மா… ம்மா..!’ எனக் கத்தி அழத் தொடங்கியபோது அந்தப் பாதையில் போன ஒரு மூதாட்டி, குழந்தையைப் பார்த்தார். பரிதாபமாக இருந்தது. குழந்தையின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று, வாசலில் உயரமான ஸ்டூலில் அமர்ந்து அன்றைய லொத்தர் டிக்கெட்டுகளை வரிசைப்படுத்தி சரிபார்த்துக்கொண்டிருந்த சோமாலியக் காவலாளியிடம் ஒப்படைத்துவிட்டு தன்பாட்டுக்குச் சென்றார்.

காவலாளியின் பெயர் அப்துல் ஆஹ்ட்டி; வாட்டசாட்டமானவர். மீனின் உடலில் தலை இருப்பதுபோல கழுத்தே தெரியாமல் இருந்தார். சோமாலியாவில் ஒருகாலத்தில் அவர் மந்திரியாகக் கடமையாற்றியவர். அழகான ஆங்கிலம் பேசுவார். வார்த்தைகள் அவர் வாயில் இருந்து புறப்படும்போது, பல் கூசுவதுபோல முகத்தைப் பிடிப்பார். அவருடைய உச்சரிப்பு பலருக்கும் புரியாது. மந்திரி பதவி வகித்ததை அவர் ஒருவருக்கும் சொல்வது கிடையாது. நம்ப மாட்டார்கள். சோமாலியாவில் மந்திரியாக இருந்தவர்களின் தொகை ஏறக்குறைய சோமாலியாவின் சனத்தொகையில் பாதியாக இருக்கும்.

அப்துல் ஆஹ்ட்டி, குழந்தையின் சிறு கையைப் பிடித்துக்கொண்டார். அது குழந்தைக்குக் கொஞ்சம் ஆறுதலாகப் பட்டிருக்கலாம். இடுப்பில் குத்தியிருந்த ரேடியோவை எடுத்து அவருடைய மேலாளரிடம், தன்னிடம் ஒரு குழந்தை ஒப்படைக்கப்பட்டு இருப்பதைச் சொன்னார். பின்னர், தன் குறிப்புப் புத்தகத்தைத் திறந்து, பேனாவினால் காற்றிலே மூன்று வட்டம் போட்டுவிட்டு நேரத்தைக் குறித்துவைத்தார். மந்திரியாக இருந்தவராதலால் சட்ட நுணுக்கம் தெரிந்தவராகவும் விவரமானவராகவும் காணப்பட்டார்.

சும்மா இருந்த குழந்தையிடம் அதன் பெயர் என்ன எனக் கேட்டார். மீசை வைத்த அந்த முகத்தை அத்தனை கிட்டடியில் பார்த்த குழந்தை, பயத்தில் அலறத் தொடங்கியது. சற்று தூரத்தில் தானியங்கி விற்பனை மெஷின் ஒன்று நின்றது. அதற்கு முன் நின்ற 14 வயதுப் பையன் குடித்து முடித்த கோக் டின்னை, கக்கத்தில் வைத்து நசுக்கி எறிந்துவிட்டுப் போனான். அப்துல் ஆஹ்ட்டி பக்கவாட்டில் வளைந்து மெஷினில் எழுதியிருந்ததைப் படித்தார். ஒரு டாலரைப் போட்டு, சாக்லேட் ஒன்றை எடுத்து, உறையைப் பிரித்து குழந்தையிடம் கொடுத்தார். அது தண்ணீரை ஏந்துவதுபோல இரண்டு கைகளையும் குவித்துப் பிடித்து வாங்கி, சாக்லேட்டைக் கடித்து உண்ணத் தொடங்கியது. சற்று நேரத்தில் அதன் கைவிரல்கள், கன்னம், அது அணிந்து இருந்த வசந்தகால உடை, சகலதும் சாக்லேட் கலருக்கு மாறிவிட்டன.

அடுத்து என்ன செய்யலாம் என சோமாலிய மந்திரி யோசித்தபோது, லோகநாதன் அங்கு வந்து சேர்ந்தான்.

லோகநாதன், இரக்க சுபாவம் உள்ளவன். ஒரு குழந்தை அழுதுகொண்டு, அதன் கன்னத்தில் கண்ணீரும் சாக்லேட்டும் சரிபாதி விகிதத்தில் வழிய, காவலாளியுடன் நின்ற காட்சியைப் பார்த்த பின், அவனால் அமைதியாகப் போக முடியவில்லை. அவனுக்கு சூப்பர் மார்க்கெட் வேலை நேரம் நெருக்கியது. ஆனால், எந்த ஒரு குழந்தையும் அழும் காட்சி அவனை உருக்கிவிடும். அவனுடைய அப்பா பூவரசம், கம்பியினால் அவனை அடிக்கும்போதே கேட்பார், ‘உன்னை எதற்காக அடிக்கிறேன் தெரியுமா?’ அவன் பதில் சொல்ல வேண்டும். ‘நான் திருந்துவதற்கு…’ மறுபடியும் அடிப்பார். ‘உன்னை எதற்காக அடிக்கிறேன் தெரியுமா?’ ‘தெரியும் அப்பா. நான் திருந்துவதற்கு!’ அவன் வாழ்க்கை முழுக்க நிறைந்திருந்தது அழுகையும் வலியும்தான். அழும்போது சிலவேளை மூச்சு திணறும். ‘ஆ… ஆ…’ என வாய் திறக்கும். ஆனால், உள்ளே போன மூச்சு வெளியே வராது. மறுபடியும் அப்பா அடிப்பார். ‘உன்னை எதற்காக அடிக்கிறேன் தெரியுமா?’ ‘என் சுவாசப்பையை வெடிக்கவைப்பதற்கு அப்பா.’

பிள்ளை கடத்தல்காரன்2லோகநாதனின் மனம் உருகியது. பார்த்தவுடன் தமிழ்க் குழந்தை என்றே தோன்றியது. இரண்டு குட்டிப் பின்னல்களைப் பின்னி, நுனியில் ரிப்பன் கட்டியிருந்தன. வெள்ளைச் சப்பாத்து. வெள்ளைச் சாக்ஸ். நெஞ்சிலே டோரா படம் வரைந்த வெள்ளை கவுன். கச்சிதமாக உடை அணிந்திருந்த குழந்தை, வசதியான குடும்பத்தில் இருந்து வந்திருக்க வேண்டும். மழலைப் பள்ளியில் இருந்து கூட்டிப்போன இடத்தில் யாரோ தவறவிட்டுவிட்டார்கள். காவலாளிக்கு வணக்கம் கூறிவிட்டு, குழந்தையிடம் பேச அனுமதி கேட்டான் லோகநாதன்.

”உன் பெயர் என்ன?”

”ஷிவானி.”

”ஓ..! நல்ல பெயர். அம்மாவுடன் வந்தனீங்களா?” – குழந்தை தலையை ஆட்டியது.

”அம்மாவின் பெயர் என்ன?”

அது ”லளிதகுமாளி” என்றது. லலிதகுமாரி என ஊகித்துக்கொண்டான்.

”உன் அம்மாவின் செல்போன் நம்பர் தெரியுமா?”

சும்மாதான் கேட்டான். அவன் எதிர்பார்க்கவில்லை. காவலாளியையும் அவனையும் ஆச்சர்யப்படுத்தும்விதமாக குழந்தை முன்னுக்கும் பின்னுக்கும் ஆடியபடி நம்பரை பாட்டாகப் பாடியது.

காவலாளியை, லோகநாதன் பார்த்தான். அவர் தலையாட்டினார். அந்தக் குழந்தை பாடிய நம்பரை செல்பேசியில் அழைத்தான். ‘நீங்கள் அழைத்த நம்பர் தற்போது செயல்பாட்டில் இல்லை. மீண்டும் அழைக்கவும்!’ என்றது. மறுபடியும் அழைத்தான். மறுபடியும் அதே செய்தி. 15 நிமிடங்கள் கழித்து ஒரு பெண்ணின் குரல் கேட்டது.

”நீங்கள் லலிதகுமாரியா?”

”ஆமாம். நீங்கள்?”

”உங்களுக்கு ஷிவானி என்கிற மகள் இருக்கிறாளா?”

”ஆமாம். நீங்கள் யார்… என்ன வேண்டும்?” குரலில் பதற்றம் இல்லை; எரிச்சல்தான் இருந்தது.

”உங்கள் குழந்தை இங்கே அழுதுகொண்டிருக்கிறாள். அங்காடியின் வடகிழக்கு மூலையில் காவலாளியுடன் காத்திருக்கிறாள். உடனே வாருங்கள்.”

‘சரி’ எனச் சொல்லி, போன் வைக்கப்பட்டது. ஆனால் பெண் வரவில்லை. 15 நிமிடங்கள் கழிந்தும் அவர் வந்தபாடு இல்லை. மறுபடியும் லோகநாதன் அழைத்தான். அவன் பேசும் முன்னரே குரல் வந்தது.

”வருகிறேன் எனச் சொன்னேன் அல்லவா!”

மறுபடியும் வைக்கப்பட்டது. குரலில் கொஞ்சம் கோபம் இருந்தது.

என்ன பெண் இவர்? அவனுக்கு வேலைக்குப் போகவேண்டிய நேரம் தாண்டிவிட்டது. மேனேஜர் கண்டிப்பானவர். அவனை வீட்டுக்குத் திருப்பி அனுப்பலாம்; அல்லது வேலை நிரந்தரமாகப் பறிபோகலாம். குழந்தையை, காவலாளியிடம் ஒப்படைத்துவிட்டு போகவும் மனம் வரவில்லை. குழந்தையின் தாயாரை மறுபடியும் அழைத்தபோது, அழைப்பு துண்டிக்கப்பட்டது. ஒரு மணி நேரம் கழிந்தபோது சந்தேகம் வலுத்தது.

லோகநாதன் ”கொஞ்சம் பொறுங்கள்” எனக் கெஞ்சினான்.

முன்னாள் மந்திரிக்கு சங்கடமாக இருந்தது. ”தெருவைக் கண்டுபிடித்துப் பயன் இல்லை. சரியான திசையிலும் போகவேண்டும். எனக்கு ஏதோ சரியில்லை எனப் படுகிறது. நான் கடமையைச் செய்யவேண்டும்” என்றார்.

குழந்தைகள் நலன் காப்பு மையத்தை அழைத்தபோது, அவர்கள் உடனே ஒரு பெண் பணியாளரை அனுப்பிவைத்தார்கள். அந்தப் பெண் கேட்ட கேள்விகளுக்கு, காவலாளியும் லோகநாதனும் பதில் சொன்னார்கள். அவர் சின்ன நோட்டுப் புத்தகத்தில் விவரங்களைப் பதிந்தார்.

காவலாளி சொன்னார். ”மிக மோசமான தாயாராக இருக்கிறார். ‘வருகிறேன்’ எனச் சொன்னாரே ஒழிய, வரவே இல்லை. அவருக்கு இது எத்தனை பாரதூரமான குற்றம் என்பது தெரியவில்லை. என் அனுபவத்தில் இப்படி நடந்ததே கிடையாது.”

ஒரு பெண், சூயிங்கம் மென்றுகொண்டு சூப்பர் மார்க்கெட் தள்ளுவண்டியைத் தள்ளியபடி அவர்களை நோக்கி நடந்து வந்தார். தள்ளுவண்டியின் மேல்தட்டிலும் கீழ்தட்டிலும் சாமான்கள் நிறைந்துகிடந்தன. நாகரிகமாக உடை அணிந்திருந்த அவர், ஒரு வங்கி அதிகாரியைப்போல காணப்பட்டார். மெல்லிய மேலங்கி, அதனிலும் மெல்லிய கழுத்துச் சால்வை. நீண்ட வாரில் கைப்பை அவரது இடது தோளில் தொங்கியது. குற்றவாளிகளைப் பார்ப்பதுபோல இவர்களை அசட்டையாகப் பார்த்துக்கொண்டு அணுகினார். குழந்தை, அதுபாட்டுக்கு சாக்லேட்டை நக்கியது.

லோகநாதனால் தன் கண்களை நம்ப முடியவில்லை.

”நீங்கள்தானா லலிதகுமாரி?”

அவர் பதில் பேசவில்லை. ”ஒரு மணி நேரமாக நான் உங்கள் குழந்தைக்குக் காவலாக இங்கே நிற்கிறேன். நீங்கள் சூப்பர் மார்க்கெட்டில் சாமான்கள் வாங்கினீர்களா? மிச்சம் நல்லது” என்றான்.

”நான் சொன்னேனே… வருகிறேன் என்று. பாதியில் எப்படி வர முடியும்?”

பணியாளர் குறுக்கிட்டார், ”மூன்று வயதுக் குழந்தையைத் தனியாக விட்டுவிட்டுச் சென்றது தவறு என்பது உங்களுக்குத் தெரியாதா?”

”இவர் யார்? எல்லோரும் மாறி மாறி என்னைக் கேள்வி கேட்கிறீர்களே! முதலில் குழந்தையை என்னிடம் ஒப்படையுங்கள்.”

”அம்மா, இவர் குழந்தைகள் நலன் காப்பு மையத்தில் இருந்து வந்திருக்கிறார். நான்தான் அவரை அழைத்தேன். ஒரு மணி நேரம் காத்திருந்தும் உங்களைக் காணவில்லையே” என்றார் காவலாளி.

எரிச்சல்தான் அவருடைய முகத்தின் இயல்பு நிலை. லலிதகுமாரி கோபாவேசத்தோடு லோகநாதன் மேல் பாய்ந்தார்.

”உங்களிடம் நான் சொன்னேனே. அவசரபுத்தியில் இப்படிச் செய்துவிட்டீர்களே. இவர்களுடைய மோட்டுக் கேள்விகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டுமா?”

”அம்மா, பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். குழந்தையை, பாதுகாப்பு இல்லாத இடத்தில் தனியாக விட்டுவிட்டுப் போயிருக்கிறீர்கள். இது தண்டனைக்குரிய குற்றம். குழந்தை அழுதுகொண்டே இருந்திருக்கிறது” என்றார் பணியாளர்.

லலிதகுமாரி சத்தமிடத் தொடங்கினார். ”ஓ… கடவுளே! இத்தனை மூளைசாலிகளை நான் ஒரே இடத்தில் சந்தித்தது கிடையாது. குழந்தை அழுவது என்ன புதினமா? இப்படிப் பொறுப்பு இல்லாமல் நடப்பதை எப்படி அனுமதிக்கலாம்?”

இரண்டு போலீஸ்காரர்கள், இடுப்பில் வைத்த கையை எடுக்காமல் பக்கத்து பக்கத்தில் நடந்துவந்தார்கள். பணியாளர் அழைத்திருக்க வேண்டும். போலீஸ், லலிதகுமாரியிடம் விசாரணையை ஆரம்பித்தபோது, அவர் திகைப்புடன் அவர்களைப் பார்த்தார். நிலைமையின் தீவிரம் இன்னும் அவருடைய மூளைக்குள் இறங்கவில்லை.

”நான் குழந்தையின் தாய். நீங்கள் இங்கே வந்ததே தவறு. ஏதோ சதி நடக்கிறது… அதை முதலில் விசாரியுங்கள்” என்றார்.

காவலாளி, லோகநாதனைப் பார்த்துச் சொன்னார்… ”இந்தப் பெண் என்ன பைத்தியமா? நீங்கள் செய்த உதவிக்கு அவர் நன்றி அல்லவா சொல்லியிருக்க வேண்டும்!”

”நன்றியா? அவர் என்னைத் திட்டாமல் விட்டாலே போதும்!”

”கோழிக்குஞ்சின் வசவு, பருந்தை ஒன்றுமே செய்யாது. பாருங்கள், எத்தனை மடத்தனமாக அவர் நடந்துகொள்கிறார். பணியாளர், குழந்தையைக் கூட்டிப்போனால், வழக்காடி அதை மீட்பதற்கு நான்கைந்து மாதங்கள் எடுக்கும். சிலவேளை குழந்தை கிடைக்காமல்கூட போகலாம். வழக்குரைஞர் செலவு வேறு 10,000 டாலரைத் தாண்டிவிடும்!” என்றார் காவலாளி.

வட்டமான சனங்களின் கூட்டம் வரவர அதிகரித்தது. லலிதகுமாரி, லோகநாதனை ஒருவித வன்மத்துடனும் வெறுப்புடனும் பார்த்தார். அவருடைய உடைக்கும் நாகரிகத்துக்கும் முற்றிலும் பொருந்தாவிதமாக அவனைத் திட்டினார்.

”நான் இதோ வருகிறேன் எனச் சொல்லியும் இப்படித் துரோகம் செய்தாயே! சும்மா தன்பாட்டுக்கு விளையாடிய பிள்ளையைக் கடத்திப்போன உன் சேவைக்கு கனடிய அரசு உனக்கு சிலை வைக்கப்போகிறதா?” என்று வாய் கூசாமல் கத்தினார்.

உடலுடன் சேர்த்து தலையைத் திருப்பிய காவலாளி, ”கடத்தினாரா?! அந்தக் குழந்தையைக் காப்பாற்றியது அவர் அல்லவா?” என்றார்.

போலீஸ், ”அம்மா மன்னியுங்கள். உங்கள் தரப்பு நியாயத்தை நீங்கள் கோர்ட்டில் சொல்லலாம்” என விளக்கியபடியே அவருக்கு விலங்கு மாட்டி அழைத்துச் சென்றது. குழந்தை, பணியாளருடன் போனது. தள்ளுவண்டி, காவலாளியுடன் நின்றது.

”என்னைப் பிடித்துப்போகிறீர்களா? மூடர்களே, நான் குழந்தையின் தாய். அவன்தான் பிள்ளைப்பிடிகாரன். அவன்தான் குற்றவாளி. அவனைக் கைதுசெய்யுங்கள். என் குழந்தையை என்னிடம் ஒப்படையுங்கள்” – அவர் கண்களில் வெளிப்பட்ட குரோதம் விபரீதமாகப்பட்டது.

உடம்பை வளைத்து, முகத்தைத் திருப்பி அவனைப் பார்த்து கால்கள் தரையில் இழுபட கத்தினார். ‘மி ஷ்வீறீறீ ஜீவீஸீ ஹ்ஷீu… மி ஷ்வீறீறீ ஜீவீஸீ ஹ்ஷீu.’ ‘பின்’ என்றால் ஊசி என்பது லோகநாதனுக்குத் தெரியும். ‘உன்னை மாட்டிவிடுவேன்’ என்ற அர்த்தத்தில் அவர் கத்தினார் என்பது பின்னால் புரிந்தது. அவன் இரண்டு வேலைகள் செய்ததுபோல அந்த வார்த்தைகளும் இரண்டு வேலைகள் செய்தன.

லோகநாதன், காயப்போட்ட துணி ஆடுவதுபோல சூப்பர் மார்க்கெட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான். வேலைக்கு ஒரு மணி நேரம் தாமதமாகிவிட்டது. பறக்கும் பறவை, உதிரும் சிறகைத் திரும்பிப் பார்ப்பது இல்லை. அவன் கடமையைச் சரியாகத்தான் செய்தான். ஆனால், மனம் லேசாவதற்கு பதில் கனமாகிவிட்டது.

‘மகனே, என்னை காலை மூன்று மணிக்கு எழுப்பி, இந்த மருந்தைத் தா’ எனச் சொல்லிவிட்டு, அவன் அம்மா தூங்கப் போனார்.

அவன் நீண்ட நித்திரையில் ஆழ்ந்துபோனான். காலையில் எழுந்து பார்த்தபோது, அவர் இறந்துபோய் கிடந்தார். அப்போதுகூட அவனுக்கு இத்தனை வேதனை ஏற்படவில்லை. ‘என் பிள்ளையை நீ கடத்தினாய்’ என அவர் கத்தியபோது, அது எத்தனை நோவை நெஞ்சில் கிளப்பியது!

இன்னும் இரண்டு நிமிடங்களில் அவன் சூப்பர் மார்க்கெட்டை அடைந்துவிடுவான். திடீரென முதுகு வலி ஆரம்பித்தது. ஓர் அடி எடுத்துவைப்பதே பெரும் பிரயத்தனமாக இருந்தது. சுரீர் எனத் தொடங்கிய வலி, இடது கால் மூலம் நிலத்தை வந்து அடைந்தது. அவன் முகம் அருவருக்கத்தக்க முறையில் மாறி எதிரில் வருபவர்களை வேறு பக்கம் திரும்பிப் பார்க்கவைத்தது. வலி எண் எத்தனையாக இருக்கும் என யோசித்தவாறே, மற்ற காலைத் தூக்கி முன்னுக்கு வைத்தான்!

– மே 2015

Print Friendly, PDF & Email

2 thoughts on “பிள்ளை கடத்தல்காரன்

  1. கதை ஆரம்பித்த விதம்,..லோகனாதனின் அறிமுகம்,..
    ஆசிரியரிடம் எனக்கு பிடித்த அவருக்கே உரிய தனித்துவமான சொல்லாடல்….முத்தாய்ப்பாய் கதையின் முடிவு…..

    ஆசிரியர் அய்யாவுக்கு அன்பு வணக்கத்துடன்….

    ஞாலன்.,
    சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *