மதிய நேர பயணம் மிகவும் சுகமாக இருந்தது. அதுவும் பொள்ளாச்சி பஸ் நிலையத்தின் எதிரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மதியம் சாப்பாட்டை முடித்துவிட்டு பஸ்ஏறியவன் பஸ் அந்த மலைப்பகுதியில் வளைந்து வளைந்து செலவது மனசுக்கு ஊஞ்சல் ஆட்டுவது போல் உணர்த்த அப்படியே கண்ணயர்ந்துவிட்டேன்.
திடீரெனகண்டக்டர் “வண்டிஅஞ்சுநிமிசம்நிக்கும்” டீ சாப்பிடறவங்க சாப்பிட்டுட்டு வந்துடலாம் “அறிவிப்பை கேட்டு சட்டென விழிப்பு வர எங்கிருக்கிறோம்? என்றேதெரியாமல்
இரண்டு நிமிடங்கள் நிதானித்தேன். பிறகுதான் பஸ் ஏறியதும், கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கிவிட்டு அப்படியே சீட்டில் சாய்ந்ததும் ஞாபகம் வந்தது. உடல் முழுவதும் வலித்தது.
மதியானம் தூங்கி எழுந்தாலே இப்படித்தான் உடல் வலி பத்துநிமிடம் பாடாய் படுத்து விடுகிறது. அப்புறம் தானாய் சரியாகி விடுகிறது.
நான் கொடுத்த கடிதத்தை படித்துவிட்டு நிமிர்ந்தவர் என்னை ஆழமாய் பார்த்துவிட்டு உங்களுக்கு தங்குவதற்கு ஏற்பாடு செய்து தரும்படி எழுதி இருக்கிறார். இந்த பங்களாவிலேயே உங்களை தங்க சொல்லலாம், ஆனால் அது உங்களுக்கு செளகர்யப்படாதுன்னு நினைக்கிறேன். பின்புறம் அவுட்ஹவுஸ் இருக்கிறது. ஒரு பெட்ரூம், அதுபோக பாத்ரூம்,வசதியோடஇருக்குது, அதுல தங்கிக்கிறீங்களா?
ரொம்ப சந்தோசம், என்னை மாதிரி எழுத்தாளனுக்கு இந்த வசதியே ஏதேஷ்டம். சொல்லியவன் கீழே வைத்திருந்த என்பெட்டியை எடுக்கப்போனேன்.
நில்லுங்க அவசரப்படாதீங்க, நீங்க முதல்ல காப்பி சாப்பிட்டுட்டு இங்கேயெ ரெஸ்ட் எடுங்க, வேலைக்காரங்களை அனுப்பி அந்த வீட்டை நல்லா சுத்தம் பண்ணிட்டு அப்புறமா அவங்களே உங்க பெட்டியை கொண்டு போய்வச்சிடுவாங்க. புன்னகையுடன்சொன்னவர்
வேலப்பா, வேலப்பா.. உள்ளிருந்து நாற்பது வயது மதிக்கத் தகுந்த ஆள் வெளியே வந்தான்
வேலப்பா, இவர் நம்ம ரமேஷ் ஐயாவோடபிரண்டு, கதைஎழுதறவராம், நம்ம கூட ஒரு மாசம் தங்கி எழுதப் போறாராம். நீ போய் நம்ம கெஸ்ட் ஹவுசை ரெடிபண்ணிட்டு கூப்பிடு. உன் சம்சாரத்தை கூப்பிட்டு காப்பி டிபன் செய்ய சொல்லு.
மடமடவென சொல்லிவிட்டு கிளம்ப நினைத்தவர் சட்டென ஞாபகம் வர பாத்தீங்களா
என்னை அறிமுகப்படுத்தவே இல்லை, என் பேர் ஆரோக்கியசாமி, இந்த எஸ்டேட்டுல மேனேஜரா இருக்கேன். ரமேஷ் ஐயாவோடஅப்பா காலத்துல இருந்து இந்த பங்களாவுல இருக்கேன். சாதாரண வேலையாளாத்தான் வந்தேன். பத்து வருசத்துல ரமேஷ் ஐயாவோட அப்பா இந்தபங்களாவை பாத்துக்கசொல்லி எங்கிட்ட ஒப்படைச்சாரு, அதுக்கப்புறமா
ரமேஷ் ஐயா வந்து இந்த அஞ்சுவருசமா என்னைய இங்கேயே தங்கவும் சொன்னாரு. நாந்தான் வேண்டாங்க ஐயா, அது நல்லாயிருக்காது அப்படீன்னு கொஞ்சம் தள்ளி இருக்கற வீட்டுல இருக்கேன். என் குடும்பமும்அங்கதான் இருக்கு. இரண்டு புள்ளைங்க படிச்சிகிட்டு
இருக்காங்க.
ரொம்ப சந்தோசம், அவங்களை எல்லாம் பாத்து பேசணும், அவர் கையை பற்றி குலுக்கினேன். அவர் கிளம்ப எத்தனிக்கும்போது
ஐயா பாத்ரூம் என்று நான் இழுக்க வேலப்பா பாத்ரூமை காட்டிட்டு அப்புறம் ரூமை ரெடி பண்ணபோ.
நான் வேலப்பனுடன்பாத்ரூம் செல்ல எழுந்தேன். சரிங்க சார், நான் எஸ்டேட்டுக்கு போய் ஆளுங்களை அனுப்பிச்சிட்டு வர்றேன். நீங்க அதுக்குள்ள காப்பி சாப்பிட்டு ரெடியாயிடுங்க. நான் தலையசைக்கஅவர்விடைபெற்றார்.
முகத்தை அடித்து கழுவினேன். ஐந்துமணி இருக்கலாம், அதுக்குள்ளாகவே தண்ணீர் சில்லென்றிருந்தது. குளிர் மெல்ல உடம்பை ஊடுருவியது. என் மனைவி ஸ்வெட்டர் எடுத்து வைத்தாளா? யோசித்தவன் பலமுறை சொல்லி இருந்ததால் கண்டிப்பாக வைத்திருப்பாள்.
மனம் சமாதானப்படுத்திக்கொண்டேன்.
அவுட் ஹவுசுக்குள் நுழையும் போது மணி ஏழாகிவிட்டது. உள்ளே நுழைந்தவன் அசந்துவிட்டேன். அவுட்ஹவுசா அது? .சுற்றிலும் மரத்தாலான கட்டிடம்தான் என்றாலும் உள்ளே அமைக்கப்பட்டிருந்த வசதிகள் அதை ஒரு பங்களாவாகவே நினைக்க வைத்தன. இவ்வளவு வசதிகள் எனக்கு மிகவும் அதிகம். குளிருக்கு ஹீட்டர் மாட்டி இருந்தது. அதனால் அந்த அறை வெப்பமாக இருந்தது. படுக்கை அறை பளீரென இருந்தது. அதைவிட உள்புறமாகவே பாத்ரூம் அமைக்கப்பட்டிருந்தது. மொசைக் தரை வழுக்கி விட்டுவிடுமோ என்று பயமுறுத்தியது.
எட்டரை இருக்கலாம், ஆரோக்கியசாமி உள்ளேவந்தார். சார் வசதி எல்லாம் எப்படி? எனக்கு ஒரே வருத்தம்தான், ரமேஷ் ஐயா உங்களை பங்களாவுலயே தங்க வைக்க சொல்லித்தான் லெட்டர் கொடுத்துருக்காரு. ஆனா நாந்தான் உங்களுக்கு தனியா பிரைவசி கிடைக்குமுன்னு இங்க தங்க சொல்லிட்டேன். காரணம் போக போக உங்களுக்கே புரியும்.
ஐயா கேட்டா நீங்க வேற எதுவும் சொல்லிடாதீங்க.
ஆரோக்கியசாமியின் பேச்சில் பயம் தெரிந்தது, நான்சிரித்துக்கொண்டே, ஐயா நான் ஒரு சாதாரண எழுத்தாளன். உங்க ஐயாவுக்கு என்னோட எழுத்துக்களை வாசிக்கறதுல ரொம்ப இஷ்டம். அவரேதான் நீங்க என் பங்களாவுல தங்கி அங்கிருக்கற எல்லா இடமும் உங்க கதையில வரணும், அப்பத்தான் அந்த இடமும் கதையும் காலம் காலமா பேசுவாங்க. அப்படீன்னு சொன்னாரு. நீங்க கவலைப்படாதீங்க. நானே தனியா எனக்கு எழுதறதுக்காக இந்த இடத்தை கேட்டு வாங்கிட்டேன்னு சொல்லிடறேன், போதுமா? இப்பொழுதுதான் ஆரோக்கியசாமியின் முகத்தில் மெல்லிய புன்னகை வந்தது டிபன் ரெடியாயிடுச்சு, வாங்க சாபிட்டுட்டு வந்துடலாம்.
இரவு மிக சாதாரண உணவே சாப்பிட்டேன். இரண்டு இட்லி, கொஞ்சம் உப்புமா, போதும் என்று எழுந்து விட்டேன். வேலப்பன் ஆச்சர்யத்துடன் ஐயா உங்களுக்காகத்தான் நிறைய செஞ்சிருந்தோம், நீங்க அதுக்குள்ள போதும்னு சொல்லிட்டீங்க. நான் தலையசைப்புடன் போதும், நான்கிளம்பறேன்
அரோக்கியசாமி மெளனமாய் என்னுடன் நடந்து வந்தவர் நான் உள்ளே சென்று திரும்பி பார்க்கும் போது அவர் வாசலிலே நின்று கொண்டு என்னை உற்றுப் பார்த்தார். என்ன ஆரோக்கியசாமி என்று கேட்டேன், சட்டென விழிப்பு வந்தவர் போல் ஒண்ணுமில்லை, ஐயா இன்னும் போன் பண்ணக் காணோம், செல்லுலயாவது கூப்பிடுவாரு, உங்களையும் அவரோட பேச வைச்சிடலாமுன்னு பார்த்தேன்.
ஆரோக்கியசாமி சந்தேகப்படுகிறானா? என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டே, ஒரு நிமிசம் உள்ளே வாங்க, என் செல்போனில் ரமேசுக்கு அழைப்பு விடுத்தேன். இரண்டு நிமிடம் ரிங்க் போய்கொண்டிருந்தது
. சட்டென சார் மன்னிச்சுங்குங்க, கொஞ்சம் வேலையா வெளியே இருந்தேன். அங்க நல்லபடியா போய் சேர்ந்துட்டீங்களா? நல்லா கவனிச்சாங்களா, ஆரோக்கியத்துக்கு போன் பண்ணனும்னு நினைச்சேன், அதுக்குள்ள மறந்துட்டேன். எப்படி இருக்குது எங்கஇடம்?
கொஞ்சம் இருங்க ஆரோக்கியசாமி பக்கத்துலதான் இருக்கறாரு, அவர்கிட்ட கொடுக்கறேன், காதில் வைத்த ஆரோக்கியசாமி அதற்கப்புறம் சரிங்கஐயா ,சரிங்கஐயா என்ற வார்த்தைகள் தவிர வேறு ஒன்றும் பேசவில்லை. பேசி முடித்தபின், ஐயா எல்லாம் சொன்னாருங்க. பணிவுடன் சொல்லிவிட்டு போனை கையில் கொடுத்தவன், ஐயா நீங்க தூங்குங்க, இராத்திரி யாராவது கதவை தட்டற மாதிரி இருந்தா திறந்துடாதீங்க.இங்க கரடி மனுசங்களை மாதிரியே கதவை தட்டும், இல்லையின்னா யானைங்க ஒண்ணு இரண்டு பங்களா பக்கம் நின்னுகிட்டு இருக்கும், அதனால வெளியே மட்டும் இராத்திரி தனியா வந்துடாதீங்க. சரி என்று தலையசைக்க ஆரோக்கியசாமி மனசில்லாமல் திரும்பி சென்றது போல் இருந்தது.
நல்ல உறக்கத்தில் இருந்தவனுக்கு சட்டென வெளியே கேட்ட சத்தத்தில் விழிப்பு வந்தது. வெளியே யாரோ நடப்பது போல கேட்டது. மனசுக்குள் ஆரோக்கியசாமி சொல்லி சென்றது ஞாபகம் வந்தது. மெல்ல கட்டிலை விட்டு எழுந்தவன் கதவு பக்கம் நடந்து வந்து கதவின் மேல் காதை வைத்து என்ன சத்தம் என்று கேட்டேன். யாரோ நடந்து செல்வது போல சத்தம் கேட்டது. அதைவிட அந்த இருளில் என் மார்பின் படபடப்பு சத்தம் என்காதுக்குள் டம்டம் என்று கேட்டது.
சர்ரக்..சர்ரக்..இது என்னவென்று தெரியவில்லை? ஆரோக்கியசாமி சொன்னது போல் யானையா? இல்லை கரடியா? கதவை திறந்து பார்க்க மனசு பரபரத்தாலும் நம்மை ஏதாவது செய்து விடுமோ என்ற பயத்தில் அப்படியே பத்துநிமிடம் நின்று கொண்டிருந்தேன். சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.
காலை தாமதமாகத்தான் எழுந்தேன். குளித்துவிட்டு உடைகளை மாற்றிக் கொண்டு பங்களாவுக்கு சென்ற பொழுது ஆச்சர்யமாக இருந்தது. அங்கு ஒரு நடுத்தர வயதுடைய பெண் எனக்காக காத்துக் கொண்டிருந்தாள். பக்கத்தில் ஆரோக்கியசாமி நின்று கொண்டிருந்தார். அந்த பெண்ணின் அழகு என்னை சற்று தடுமாற வைத்தது. வயது முப்பத்திஐந்து இருக்கலாம். ஆனால் தோற்றம் இருபதிலிருந்து இருபத்தைந்துதான் இருக்கும்.
பார்வையில் அவ்வளவு சிநேகமில்லை. ஆரோக்கியசாமிதான் அறிமுகப்படுத்தினார். ரமேஷ் ஐயா அனுப்பிச்சிருக்காரு. பெரிய எழுத்தாளராம், இங்க ஒரு மாசம் தங்கி கதை ஒண்ணு எழுத சொல்லியிருக்காரம்.
அவள் என்னிடம் அலட்சியமாகவே கேட்டாள், உங்களை சீனிவாசன்னு சொல்றாரு ஆரோக்கியசாமி, ஆனா சீனிவாசன்னு இதுவரைக்கும் எழுத்தாளர் பேரை கேள்விப்பட்டதில்லையே.
மன்னிக்கனும் நான் என் சொந்த பேர்ல எதையும் எழுதறதில்லை, வாசவன் அப்படீங்கற பேர்ல எழுதிகிட்டு இருக்கேன். அந்த பெண் சற்று புன்னகையை காட்டினாள். வாசவன் நான் கேள்விப்பட்டிருக்கேன், சரி வாங்க சாப்பிட்டுட்டே பேசலாம். அவள் என்னை கூட்டி சென்று உட்காரவைத்து அவளே பரிமாறினாள்
நான் கூச்சத்துடன் வேண்டாம், நீங்களும் உட்காருங்கள் ஒன்றாக சாப்பிடலாம், என் முகத்தை பார்த்தவள் அதுவும் சரிதான், பேசிக்கொண்டே சாப்பிடலாம்.
சுகுமாரி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவள், ரமேஷ் தனக்கு சித்தி மகன் ஆகிறது என்றாள். தான் குடும்பத்துடன் சற்று தள்ளி இருப்பதாக தெரிவித்தாள். தம்பி நேரடியாக வந்து எஸ்டேட்டை கவனிக்க முடியாததால் தன்னை நியமித்திருப்பதாக தெரிவித்தாள். கொஞ்சம் சுயபுராணமாகவே இருந்ததால் எனக்கு சீக்கிரம் சாப்பிட்டு விட்டு இடத்தை காலி செய்தால் போதும் என்றாகிவிட்டது.
ஆரோக்கியசாமியை கொஞ்சம் என்னுடன் வந்து இந்த எஸ்டேட்டை சுற்றி கண்பிக்கமுடியுமா என்று கேட்டேன். அவர் சுகுமாரியின் முகத்தை பார்த்தார். போய்ட்டு வா
என்று சொன்னவுடன்தான் என்னிடம் தலையைஆட்டினார்.
எனக்கு ஒன்று புரிந்தது. இங்கு எல்லாமே சுகுமாரிதான். அவள் இல்லாமல் ஒரு அசைவும் அசையாது. நல்ல வேளை நேற்று அவள் எங்கோ வெளியில் சென்றிருக்க வேண்டும், அதனால்ஆரோக்கியசாமிமுடிவெடுத்து எனக்கு அறை ஒதுக்கிவிட்டார்.
அமைதியாக என்னுடன் வந்தார் ஆரோக்கியசாமி.
நான் அப்படியே பச்சை போர்வை போர்த்தாற் போலிருக்கும் அந்த மலைத் தொடர்களை வியப்புடன் பார்த்துக் கொண்டே வந்தேன்.
எத்தனை ஏக்கரா இருக்கும் உங்க முதலாளிக்கு?
ஐயாவுக்கு ஆயிரம் ஏக்கராவுக்கு மேல இருக்கும்.
பறிக்கற டீ இலை எல்லாம் எப்படி டீத்தூள் ஆக்குவீங்க?
இப்பொழுது ஆரோக்கியசாமி கொஞ்சம் உற்சாகமாகி விட்டார். பக்கத்துலயே பேகடரி இருக்குது, அங்கே கொண்டு போய் தூளாக்குவோம்.. அந்த பேக்டரி சுகுமாரி அம்மாவுக்கு சொந்தம், அதுல கொஞ்சம் அய்யாவுக்கும் பங்கு இருக்குது அதனால் தினமும் எங்களோடது தூள் ஆயிகிட்டே இருக்கும். நாங்க அதை கோயமுத்தூர்ல இருக்கற எங்க குடோனுக்கு அனுப்பிச்சிடுவோம்.அங்கிருந்து வெளி நாடெல்லாம் போகும்.
சுகுமாரி அம்மாதான் இங்க எல்லாமா?
சுகுமாரியை பற்றி பேச்சு வந்ததும் மறுபடியும் அமைதியாகி விட்டார் ஆரோக்கியசாமி.
சுகுமாரியை பற்றி பேச இங்கு எவரும் விரும்புவதில்லை.
ஐயா எப்ப கதை எழுத ஆரம்பிப்பீங்க?
போன உடனே எழுத ஆரம்பிச்சிடுவேன், வெளியே உட்கார்ந்து எழுதறதுக்கு எங்கயாவது வசதி இருக்கா?
இருக்குங்க, நம்ம பங்களா தாண்டி கொஞ்சதூரம் மேற்கு பக்கமா போனா அங்க அமைதியா உட்கார்ந்து எழுதலாம். பக்கத்துல ஓடை ஒண்ணு ஓடும். நிறைய பூச்செடிகள் எல்லாம் இருக்கும்.
பார்க்கலாம், மீண்டும் திரும்பலானோம். அவுட்ஹவுசுக்குள் கதவை திறந்து நுழைந்தவன் அதிர்ந்து போனேன். எனது பெட்டி பிரிக்கப்பட்டு பேப்பர்களும் புத்தகங்களும், சிதறி இருந்தன. கொண்டு வந்திருந்த நான்கைந்து உடைகளும் கூட கலைத்து போடப்பட்டிருந்தது.
அங்கிருந்தே குரல் கொடுத்தேன் ஆரோக்கியசாமி !
நான்கைந்து முறை கூப்பிட்ட பின்னரே பின்பக்கமாக வந்தார், கூப்பிட்டீங்களா?
இங்க வந்து பாருங்க, என்னோட பெட்டியை யாரோ பிரிச்சி பார்த்திருக்காங்க !
உள்ளே வந்தவர் மெல்லிய திகைப்பை காட்டினார், ஐயா இந்த இடத்துல இந்தமாதிரி செய்யறவங்க யாரும் இல்லீங்களே, சுற்று முற்றும் பார்த்தவர் ஐயா இங்க பாருங்க. அங்கிருந்த பாத்ரூமில் மேற்புறம் காற்று வருவதற்காக சற்று பெரிதாக போடப்பட்டிருந்த கம்பிவலை பிரிந்துகிடந்தது. ஐயா இதுக்குள்ள ஆள்புகுந்து வர்றதுக்கு வாய்ப்பு இல்லீங்க, ஆனா குரங்குக உள்ளே வரதுக்கு வாய்ப்புஇருக்கு.
அப்பொழுது சமையல்காரன் வேலப்பன் அங்கு வந்தவன், ஐயா உங்க ரூமுல கீச்கீஸ்ன்னு சத்தம் கேட்டுட்டே இருந்துச்சு. நாங்க, வெளியே இருந்து சத்தம் போட்டுட்டு இருந்தோம். அப்புறம் பின்னாடி வழியா இரண்டு குரங்கு வெளியே வந்து ஓடுச்சு.
பார்த்தீங்களா? என்று என்னைப் பார்த்தவர், நேத்தே சொல்ல மறந்துட்டேன், இங்க குரங்குக தொல்லை ஜாஸ்தி இருக்கு. நான் அந்த வலையை அடைச்சு வைக்க சொல்றேன்.
நான் எதுவும் பேசாமல் என்னுடைய பேப்பர்களை அடுக்கிக் கொண்டிருந்தேன். மறுபடியும் எல்லா பொருட்களையும் எடுத்து பெட்டிக்குள் திணித்தேன்.
என்னுடைய மனநிலை உணர்ந்தாரோ என்னவோ, ஆரோக்கியசாமி ஐயா வேணா பங்களாவுக்கே வந்துடறீங்களா?
வேணாம், ஆரோக்கியம், நான்பாத்துக்கறேன்.
நான் போய் டீ அனுப்பறேன் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினர் இருவரும். ஐந்து நிமிடத்தில் ஒரு பெண் டீ கப்புடன் வந்தாள் இவள் வேலப்பனின் மனைவியாக இருக்கவேண்டும் அனுமானித்தேன்.
எனக்கு அந்தநேரத்தில் டீ தேவைப்பட்டது. மெல்ல அவளிடம் பேச்சு கொடுத்தேன். வேலப்பன் சம்சாரம்தானே நீ. உனக்கு கல்யாணம் ஆகி எத்தனை வருசம் ஆச்சு?
ஆமாங்க கல்யாணம் ஆகி ஆறு வருசம் ஆச்சுங்க,
நீ அதுக்கு முன்னாடி எங்க இருந்தே?
நாங்க வால்பாறை டவுனுல இருந்தோம். எங்க அப்பாவும், அம்மாவும் கூலி வேலைக்கு போயிட்டிருந்தாங்க. இவரு வந்து பொண்ணு கேட்டவுடனே எங்க அப்பா கட்டிக் கொடுத்துட்டாரு. அதற்குள் வேலப்பன் இவளை அழைக்கும் சத்தம் கேட்டவுடன் ஐயா நான் வர்றேன், குடித்து முடித்திருந்த கப்பை வாங்கிக் கொண்டு விரைந்தாள்
சரி எழுத ஆரம்பிக்கலாம் என்று பேப்பரையும் பேனாவையும் எடுத்து வைத்தேன், ஆனால்
என்ன எழுதுவது என்று புரியவில்லை. பேசாமல் எடுத்து வைத்துவிட்டு, ஆரோக்கியசாமி சொன்ன இடத்துக்கு போய் பார்க்கலாம்என்று நடக்க ஆரம்பித்தேன். யாரோ பின் தொடர்வது போல உள்ளுணர்வு சொன்னது. சற்று தொலைவு விரைவாக நடந்து சட்டென திரும்பிபார்த்தேன். நான் சடாரென திரும்பியதால் பின் தொடர்ந்தவர்கள் சட்டென மறையமுடியாமல் ஒருமரத்தில் மறைந்து கொள்ள முயற்சிக்க கைசட்டையின் பகுதி மட்டும் வெளியே தெரிய நான் கைதட்டி வெளியேவா என்று அழைத்தேன்.
இரண்டு நிமிடம் கழித்து மெல்ல வெளியே எட்டிபார்த்த உருவத்தை பார்த்தவன் ஆச்சர்யப்பட்டேன். எட்டு ஒன்பது வயது மதிக்கத்தகுந்த பெண் நின்று கொண்டிருந்தாள். அவளை கை தட்டி அருகில் அழைத்தேன். அவள் தயங்கி தயங்கி வந்தாள்.
உன் பேர் என்ன? அவள் பேசாமலே நின்று கொண்டிருந்தாள். விழிகளில் பயம் எட்டி பார்ப்பது தெரிந்தது. மெல்ல அவள் தோளை தொட்டவன் பயப்படாதே உன் பேர் என்ன?
அவள் தலையை மேலும் கீழும் ஆட்டினாள், பின் சைகையில் ஏதோ காட்டவும் இவள் ஊமையோ என்ற சந்தேகம் வந்தது. மறுபடியும் அவள் தோள்மீது கைவைத்து உன்னால பேசமுடியாதா? இதற்கு அவள் ஆம் என்பது போல தலையாட்டினாள். அதற்குள் சரசரவென சத்தம் திரும்பி பார்ப்பதற்குள் ஒரு பெண் வேகமாக வந்து இந்த சிறுமியை “உன்னை எங்க எல்லாம் தேடறது” சொல்லிக் கொண்டே இழுத்துச் சென்றாள். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
இங்கு எல்லோரும் அவசரமாகவே இருக்கிறார்கள். இல்லை இருப்பது போல நடிக்கிறார்களா?
நகரத்தின் பரபரப்பு இந்த இடத்தில் அவசியமே இல்லை. இருந்தாலும் இந்த பங்களாவுக்குள் நான் வந்தது அவர்களுக்கு ஒரு இடைஞ்சல் என்பது போல் நடந்துகொள்கிறார்கள்.
இரவு மீண்டும் சர்ரக்..சர்ரக்சத்தம்.
இந்த முறை இந்தசத்தம் வரும் என்றே எதிர்பார்த்து காத்திருந்தேன். அதனால் நடுஜாமத்திலேயே அறையை விட்டு வெளியே வந்தவன் பக்கத்தில் இருந்த மல்லிகை புதர் அருகில் இருந்த கல் ஒன்று பதுங்கி உட்காருவதற்குவதற்கு உபயோகமாயிருந்தது. நல்ல இருட்டு, நீண்ட நேரமாக அந்த இருட்டுக்கு கண்பழகி இருந்ததால் வருவது விலங்கு அல்ல மனிதன் என்பதை கண்டுகொண்டேன். அவன் என்ன செய்கிறான் என்பதை மட்டும் கண்கானிக்க ஆரம்பித்தேன்.
முக்காடிட்டு வந்த உருவம் நான் இருந்த அவுட்ஹவுஸ்ஸை தாண்டி மெல்ல நடந்தது. நான் எனது உடலை சுருக்கி அமைதியாய் என்ன நடக்கிறது என்பதை மட்டும் பார்த்தேன். அந்த உருவம் சுற்று முற்றும் பார்த்துவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தது. நான் அந்த உருவத்தை பின்தொடரலாமா? என்று நினைத்தவன் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டு அப்படியே உட்கார்ந்தேன். அப்படி உட்கார்ந்தது மிக்க நல்லதாக போயிற்று. இப்பொழுது மீண்டும் ஒரு உருவம் முன்னர் சென்ற உருவம் போலவே பதுங்கி நடந்தது.
நடையின் வித்தியாசத்திலேயே அது ஒருபெண் என்பதை கண்டு கொண்டேன். முதலில் சென்ற உருவத்தை போல் பயந்து பயந்து போகவில்லை. அது பாட்டுக்கு நடந்து சென்றது.
காத்திருந்தேன். போனவர்கள் எப்படியும் வரவேண்டும். ஒரு மணிநேரம் ஆயிற்று.
நல்ல வேளை காதுக்கும் தலைக்கும் குல்லாய் போட்டு உடல் முழுக்க அங்கிருந்த கம்பளியை போர்த்து இருந்ததால் குளிரை தாக்கு பிடிக்க முடிந்தது. இப்பொழுது நடந்து வரும் சத்தம் கேட்டது. மெல்ல உள் புறமாய் பதுங்கினேன். தனித்தனியாய் சென்ற இருவரும் இப்பொழுது ஒன்றாய் வருவதை கண்டேன்.முன்புறம் நடந்து வருவது பெண்தான் என்பது தெரிந்தது. பின்னால் சற்று தள்ளி நடந்துவருவது ஆண்என்பதும், முதலில் நடந்த உருவத்துக்கு மரியாதை கொடுத்து நடந்து வருவதும் புரிந்தது.
மீண்டும் ஒருமணி நேரம் காத்திருந்தேன். காத்திருப்பது என்பது எனக்கு புதிதல்ல. அதுவும் இந்த குளிரில் இருக்கும் இடத்தை விட்டு அசையாமல் உட்கார்ந்திருப்பது என்பது அனுபவப்பட்டவர்களால் மட்டுமே முடியும்.
அந்த இருளில்அவர்கள் சென்ற பாதை வழியே நடப்பது எனக்கு சிரமம் இல்லை. ஆனால் வழி கொஞ்சம் மேடு பள்ளமுமாய் இருந்தது. தடுமாறி நடந்தேன். பாதை ஒத்தை வழிபாதையாக இருந்தது. மணி இப்பொழுது என்ன இருக்கும்? யோசித்து பார்த்தவன் மூன்றுமணி இருக்கலாம், நானே முடிவு செய்துகொண்டேன். நடையை கொஞ்சம் துரிதப்படுத்தினேன். பதினைந்து நிமிட நடைக்கு பின் சற்று தொலைவில் ஒருவீடு இருப்பது புலப்பட்டது.
அருகில் சென்று பார்த்தபின் வீடு என்பதை விட ஒரு அறை மட்டுமே இருக்க முடியும் என்பதை கண்டுகொண்டேன். சுற்று முற்றும் பார்த்தேன். ஆள் நடமாட்டம் இருக்கிறதா என்று.
கண்களை நன்கு சுழலவிட்ட பின் மெல்ல அந்த வீட்டின் அருகில் சென்று கதவின் மீது காதை வைத்து உள்ளிருந்து ஏதாவது சத்தம் வருகிறதா என்று நோட்டம் விட்டேன். யாரோ மெல்ல முன்ங்கிக் கொண்டிருப்பதுபோல கேட்டது.
அந்த கதவில் தொங்கிக் கொண்டிருந்த பூட்டை உடைப்பது அப்படி ஒன்றும் பெரிய வேலையாக படவில்லை. பூட்டை உடைத்து சத்தமில்லாமல் கதவை திறந்தேன். அங்கு ஒரு உருவம் குப்புற படுத்திருப்பது தெரிந்தது. மெல்ல அதனருகில் சென்று தொட்டேன். மெல்ல தலையை மட்டும் திருப்பிய உருவம் “மறுபடிவந்துட்டியா” என்று வெறுப்புடன் கேட்டது.
நான் சட்டென அதன் வாயை பொத்தி ஸ்..ஸ் என்றவன் அந்த உருவத்தின் கைகளை பின்புறம் கட்டியிருந்த கயிற்றை மெல்ல அவிழ்த்தேன். கால்களில் கட்டியிருந்த கயிற்றையும் அவிழ்த்து மெல்ல எழுப்பி உட்கார வைத்தேன்.
உன்னால் நடக்கமுடியுமா? மெல்ல கேட்டேன். சற்று யோசித்த அந்த உருவம் மெல்ல எழ முயற்சித்தது. நான் அதன் இடுப்பில் கை கொடுத்து நிற்கவைத்தேன், ஐந்து நிமிடங்களில் கைகால்களை உதறிக் கொண்டஉருவம் இப்பொழுது தலையை ஆட்டியது. இருவரும் மெல்ல வெளியே வந்தோம்.
வந்த வழியே செல்ல முயன்ற என்னை வேண்டாம் என்பது போல தடுத்த உருவம் அந்தவீட்டு பின்புறம் உள்ள பாதையைகாட்டி அதுவழியாக பத்துநிமிடம் சென்றால் வால்பாறை நகரம் செல்லும் பாதையை அடையமுடியும் என்று சொன்னது.
இருவரும் நடக்க ஆரம்பித்தோம். நான் என் செல்போனை உயிர்ப்பித்து நம்பரை அழுத்தி கிசிகிசுவென பேசினேன்.
வால்பாறை செல்லும் பாதையை தொட்டு அங்கிருந்த கல்லில் உட்கார்ந்த பின்னும் அந்த உருவம் பயத்துடனே இருந்தது. நான் தட்டிக் கொடுத்து கொஞ்சம் பொறு, வண்டி வரும் அதில் ஏறி செல் என்று சொல்லிவிட்டு காத்திருந்தேன்.
பதினைந்து நிமிடங்களுக்குள் அந்த இருளில் சின்ன வெளிச்சத்தை மட்டும் பரப்பிக் கொண்டு வந்து நின்ற ஜீப்பிலிருந்து இருவர் குதித்தனர். என்னை கண்டவுடன் விரைப்பானவர்கள், கல்லில் உட்கார்ந்திருந்த அந்த உருவத்தை எழுப்பி ஜீப்பில் ஏற்றிக் கொண்டனர். மீண்டும் விரைப்பாகி விடை பெற்றனர்.
நான் வந்த வழியாக விரைவாக நடந்தேன். அந்த உருவம் அடைபட்டிருந்த வீட்டையும் தாண்டி பங்களாஹவுசை நோக்கி தடுமாறிக் கொண்டே விரைவாக நடந்தேன்.
நான் என் அறையை மெல்ல திறந்து உள்ளே வந்தவன் குல்லா, கம்பளி எல்லாவற்றையும் கழட்டி விட்டு அக்கடாவென கட்டிலில் படுத்து அப்படியே உறங்கிப் போனேன்..
காலை கதவை தட்டும் போதுதான் விழிப்பு வந்தது. மெல்ல எழுந்து சொம்பல் முறித்து கதவை திறந்தேன். ஆரோக்கியசாமி நின்று கொண்டிருந்தார். என்னசார் மணி ஒன்பதாகப் போகுது இன்னும் டிபனுக்கு காணோமேன்னு வந்தேன்.
சாரி பத்து நிமிசத்துல வந்துடறேன், நல்லா தூங்கிட்டேன். உள்ளே வந்தவன் மடமடவென குளியலறைக்குள் நுழைந்து தயாராக ஆரம்பித்தேன்.
வெளியே வந்தவன் அங்கேயே நின்றுகொண்டிருந்த ஆரோக்கியசாமியிடம் என்ன ஆரோக்கியம் உள்ளே வந்துஉட்காரலாமில்லை.
இல்லைங்க சார், சும்மா அப்படியே நின்று பார்த்துட்டு இருந்தேன்.
சுகுமாரி இவ்வளவு நேரம் காத்திருந்து விட்டு சாப்பிட்டுவிட்டு சென்று விட்டதாக வேலப்பன் சொன்னான். ஆரோக்கியத்திடம் நீயும் உட்கார் சாப்பிடலாம் என்றேன். வேண்டாம் சார் நீங்க சாப்பிடுங்க, சொல்லி விட்டு வெளியே சென்றுவிட்டார்.
சாப்பிட்டு முடித்து வெளியே வந்த நான் இன்னைக்கு நீ சொன்னஇ டத்துலஉட்கார்ந்து
கொஞ்சநேரம்எழுதலான்னு நினைக்கிறேன். முந்தா நேத்து அங்க போய் பாக்கறபோது ஒரு ஊமை பொண்ணு இருந்தா, அவகிட்ட பேசலாமுன்னு நினைச்சப்போ யாரோ ஒரு பொம்பளை அந்த பொண்ணை இழுத்துட்டு போயிடுச்சு.
அந்த பொம்பளை இங்கதான் வேலை செஞ்சுகிட்டு இருந்துச்சு, கொஞ்சம் கைசுத்தம் இல்லைன்னு சுகுமாரி அம்மா பொறுப்பு எடுத்த பின்னால வேலைய விட்டு நிறுத்திட்டாங்க,
அதுவேற எங்கேயும் போகவழி இல்லாம இங்கனயே சுத்திகிட்டு இருக்கும். எஸ்டேட்டு ஆளுக இருக்கற இடத்துலதான் அதோட வீடு இருக்கு. ஆனா பொழுதன்னிக்கும் இங்கேதான் சுத்திகிட்டு இருக்கும்.
மதியம் பங்களா பரபரப்பாய் இருந்தது. சுகுமாரி எப்பொழுதும் அந்த நேரத்துக்கு வராதவள் வந்தது மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்காக வந்த என்னை உறுத்து பார்த்தாள்.
ஏதோ என்னிடம் கேட்க வருவதுமாக பின் மீண்டும் திரும்பி செல்வதுமாக இருந்தாள். நான் அமைதியாக சோபாவில் உட்கார்ந்து அவளை கவனித்துக் கொண்டிருந்தேன்.. ஆரோக்கியசாமி கையை பிசைந்து கொண்டு சுகுமாரியின் நடவடிக்கைகளை பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். வேலப்பன் சுகுமாரியின் முகத்தை பார்க்க பயந்து தலை குனிந்து உட்கார்ந்திருந்தான்.
ஏதோ தீர்மானத்துக்கு வந்தவள் போல் என்னிடம் வந்து உங்களை அனுப்பியது ரமேசுதானா?
இந்த கேள்வியை எத்தனை பேர்தான் கேட்பது, உங்களுக்கு சந்தேகமா இருக்கா?
ஆமா, இல்லை என்று சொல்லாமல் அப்படியே நின்றாள்
சரி நான் ரமேசுக்கு போன் போட்டு அவனையே பேச சொல்றேன், ரமேசுக்கு என் செல்போனில் நம்பரை அழுத்தி ஸ்பீக்கரை ஆன் செய்துவைத்தேன்.
ரிங்க் செல்வது சத்தமாய் கேட்டது.
ஹலோசார் எப்படி இருக்கீங்க?
நல்லா இருக்கேன்,
உங்க கதை எல்லாம் எவ்வளவு தூரம் வந்திருக்கு சார்
முதல்ல உன்பங்களா, எஸ்டேட், அங்கிருக்கற மக்கள் இவங்களை ஸ்டடி பண்ணிட்டு இருக்கேன். நாளையில இருந்து எழுத உட்கார்ந்திடுவேன். கவலைப்படாதே, நீ சொன்ன ஒரு மாசம் டைமுல நான் கதைய முடிச்சி உன் கையிலே கொடுத்துடுவேன். இப்ப உங்க அக்கா சுகுமாரி பேசணும்னு கேட்டாங்க, செல்லை கொடுக்கறேன், அவங்களோட பேசறியா?
அட்டா சுகுமாரி அக்கா அங்கதான் இருக்காங்களா? கொடுங்க கொடுங்க?
ஹலோ அக்கா எப்படி இருக்கீங்க?
ம்.. நல்லா இருக்கேன்.. இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு என்னிடமே செல்போனை கொடுத்தவள் முகம் இருண்டிருந்தது.
மிஸ்டர் சீனிவாசன் உண்மையை சொல்லுங்க, இது ரமேசுதானா?
இதுல என்ன உங்களுக்கு சந்தேகம்? இங்க இருக்கறவங்களுக்கு இந்த குரலில் ஏதாவது சந்தேகமா? அனைவர் முகங்களையும் பார்த்தேன்.
அவங்களோட சந்தேகத்தைகத்தை பத்தி எனக்கு அக்கறைஇல்லை, எனக்கு இப்ப பேசுனது ரமேசுதானா அப்படீங்கறது சந்தேகமா இருக்கு.
எதைய வச்சுஅப்படி சொல்றீங்க? உங்க செல்போன்ல ரமேஷ்நம்பர் இருக்குமில்லை, அதுல கூப்பிட்டு பேசுங்க.
அவள் சட்டென தன்னுடைய செல்போனை எடுத்து ரமேசை தேடி எண்களைஅழுத்தினாள்.
ஹலோ..அக்கா, என்ன மறுபடி கூப்பிட்டிருக்கீங்க?
ஒண்ணுமில்லை, நம்பர் மாறிடுச்சு, தடுமாறி பதில் சொல்லிவிட்டு போனை அணைத்தாள்.
பின் தலையின் மேல் கைவைத்துக் கொண்டவள், மிஸ்டர் சீனிவாசன் நீங்க ஏதோ “சீட்டிங்க்” பண்ணறீங்க, இப்ப உண்மையை சொல்லலையின்னா நான் போலீசுகிட்ட போக வேண்டி வரும். வேலப்பன் மெல்ல என்னை நெருங்கினான்.
ஆரோக்கியசாமி புரியாமல் எங்கள் இருவரையும் பார்த்துக் கொண்டு நின்றார்.
தாராளமா போலீசுக்கு போகலாம், நானே போலீசை கூப்பிடறேன், நம்பரை அழுத்த முயற்சித்தேன்.
வேலப்பா அந்த ஆள்கிட்ட இருந்து செல்லை புடுங்கு, சுகுமாரி கத்தினாள். பாய்ந்து வந்த வேலப்பன் என் கையில் இருந்த செல்போனை பிடுங்க முயற்சிக்க..
பளார்… ஒரே அறைதான் விட்டேன், அப்படியே கிறுகிறுத்து உட்கார்ந்து விட்டான் வேலப்பன்.
அவ்வளவுதான் அந்த இடமே அமைதியாகிவிட்டது
சுகுமாரி பிரமை பிடித்தாற் போல் நின்றாள், ஆரோக்கியசாமி ஆச்சர்யமுடன் என்னை பார்த்து நின்றார். வேலப்பனின் மனைவி கீழே உட்கார்ந்துவிட்ட கணவனை எழுப்ப முயற்சிக்க ஆரம்பித்தாள்.
சொல்லுங்க சுகுமாரி ஏன் நம்பமாட்டேங்கறீங்க? பேசறது ரமேசுதான்னு, போலீசுக்கு போன் போட்டு வர சொல்லுங்க, நான் உங்களை ஏமாத்தறனான்னு அவங்களே விசாரிக்கட்டும்
இல்லை பேசறது ரமேசு இல்லை அப்படீன்னு எப்படி உறுதியா சொல்லுறீங்க? இதை விளக்கமா சொல்லுங்க.
ரமேசு எங்கிட்டதான் இருந்தான், மெல்லிய குரலில் சொன்னாள்.
அப்படீன்னா அவன்கிட்ட கேளுங்க? அவன்தான் என்னை இங்க அனுப்பிச்சானான்னு?
இப்ப அவன் தப்பிச்சுட்டு போயிட்டான்
தப்பிச்சுட்டு போயிட்டானா? அப்படீன்னா நீங்க அவனை பிடிச்சுவச்சிருந்தீங்களா?
இல்லையில்லை, அப்படி இல்லை, அவன் இந்த அக்கா சொன்னா மறுவார்த்தை பேசமாட்டான், ஆனா நேத்து இராத்திரி யாரோ அவனை தப்பிக்க வச்சிருக்காங்க.
அதற்குள் என்செல்லில் அழைப்ப்பு வர எடுத்து பேசி முடித்தவன், நீங்கஇப்படிசொல்றீங்க, ரமேசே இப்ப இங்க வர்றேங்கறான் அப்ப என்ன சொல்லப்போறீங்க.
சுகுமாரி திகைப்புடன் ரமேஷ் இங்க வரப்போறானா?
நான் எதுவும் பேசாமல் வேலப்பனை அறைவதற்காக எழுந்து நின்றவன் மீண்டும் சோபாவில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்தேன்.
இருபது நிமிட காத்திருப்பலுக்கு பிறகு ரமேஷ் உள்ளே வந்தான், அவனருகில் நான்கு பேர் உடன்வர வந்தவன் என்னை கட்டிப்பிடித்துக் கொண்டான்.
சார் எப்படி இருக்கீங்க? என்ன ஆரோக்கியம்? ஆரோக்கியம் குழைந்தான் ஐயா நல்லாயிருக்கீங்களா?
நல்லாயிருக்கேன், ஏன் வேலப்பன் கீழே உட்கார்ந்திருக்கான், கேட்டு விட்டு திரும்பி என்னக்கா இப்படி இடிஞ்சு போனமாதிரி உட்கார்ந்திருக்கே?
நான் சுகுமாரியிடம் திரும்பி சொல்லுங்க, நீங்க அடைச்சு வச்சிருந்ததா சொன்னீங்க இல்லை அது இவர்தானா?
தெரியலை, ஆனா இவர் ரமேஷ் இல்லை.
அதெப்படி இவ்வளவு உறுதியா சொல்றீங்க?
அவனை அடைச்சுவச்சிருந்தேன்.
அதுதான் எதுக்கு? சொல்லுங்க?
இந்த சொத்தை என் பேருக்கு மாத்தி கொடுன்னு கேட்டேன், அவனும், அவன் அம்மாவும் குடும்பமும் சென்னையில இருக்கறாங்க. அவங்களுக்கு எதுக்கு இந்த எஸ்டேட், பங்களா எல்லாம். அது தான் கேட்டேன், தரமாட்டேன்னுட்டான், போனமாசம் வந்தவனை பிடிச்சு அடைச்சுவச்சிட்டேன். பங்களாவுக்குள்லேயே உள்ளே ஒரு வீட்டுக்குள்ள கட்டிப் போட்டு வச்சேன், கையெழுத்து போட்டு கொடுக்கறவரைக்கும் விடமாட்டேன்னு சொல்லிட்டேன். வேலப்பன் மட்டும் போய் அவனை கவனிச்சுக்குவான். இது ஆரோக்கியத்துக்கூட தெரியாது. அப்படி இருக்கும் போது ரமேசு அனுப்பிச்சான்னு நீங்க வந்த போதே எனக்கு சந்தேகம். வந்துருச்சு. நீங்க வந்த நேரம் நான் இருந்திருந்தா உஷாரா உங்களை அனுப்பிச்சிருப்பேன். நான் இல்லாத நேரமா ஆரோக்கியத்து கிட்ட லெட்டர் கொடுத்துட்டு உள்ளேவந்துட்டீங்க? யாரோ ரமேசு அனுப்பிச்சாங்கன்னு சொல்லிகிட்டு ஒருத்தர் வந்திருக்காங்க அப்படீன்னு வேலப்பந்தான் எனக்கு தகவல் கொடுத்தான்.
இப்ப ரமேசு சொல்லிகிட்டு இவர் வந்தா என்னால எப்படி நம்பமுடியும்..
இதுபோதும், சொல்லி விட்டு மெல்ல எழுந்தவன், வந்தவர்களிடம் கண்ணை காட்டினேன்.
ரமேசும், உடன் வந்த இருவர் சுகுமாரியின் அருகில் வந்த தங்களது காவல்துறை அடையாள அட்டையை காட்டி உங்களை அரெஸ்ட் பண்ணறோம், எங்களோட வர்றீங்களா?
மற்ற இருவர் வேலப்பனை எழுப்பி கூட்டிக் கொண்டு விரைந்தனர்.
நான் ஆரோக்கியத்திடம் சொல்லிவிட்டு விடைபெற்றுக் கொண்டேன்.
கோயமுத்தூர் புலனாய்வு அலுவலகம்
தன் மகனை பத்திரமாய் மீட்டு கொடுத்ததற்கு, அம்மாவும், தன் கணவனை மீட்டுக் கொடுத்ததற்கு அவன் மனைவி, மற்றும் குழந்தைகள், இவர்களின் நன்றிகளை பெற்றுக்கொண்டோம்.
அவர்கள் எஸ்டேட்டுக்கு சென்ற தங்களின் மகனை காணவில்லை என்று புகார் கொடுத்து ஒருமாதம் அவர்களின் குடும்ப விவரங்களை தெரிந்து, அவர்கள் பையனை போலவே ஒருவரை ஏற்பாடு செய்து, அதற்கு முன்னரே அந்த பையன் இருந்த பங்களாவை
உளவு பார்த்து கடைசியில் ஒரு எழுத்தாளராய் என்னை அனுப்பி என்பின்னால் ஒருகுழுவை அனுப்பி, எப்படியோ எந்த இரத்த சேதாரமில்லாமல் பையனை கொண்டு வந்துவிட்டோம். அதற்கு சுகுமாரிக்கும் ஒரு நன்றி சொல்லவேண்டும். ஒரு மாதம் அவனை உயிரோடு வைத்திருந்தற்குத்தான்.
அதிகாரி என்னிடம் என்னயா அந்த எழுத்தாளர் வாசவன்கிட்ட ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டயா? அடுத்து உங்க குழுவுக்கு உடுமலையில வேலை வச்சிருக்கேன். அதுல நீ ஓவியனா நடிக்க வேண்டியிருக்குயா, யாராவது ஒரு ஓவியரை பத்தி தெரிஞ்சுக்கோ.