மேசை ட்ராயரில் போட்டு வைத்த பணம் இவள் மனதை இம்சை படுத்தி கொண்டிருக்கிறது. ஒரு இலட்சம் ரூபாய் ஒரே கட்டாக இரண்டாயிரம் ரூபாய் தாளாக சுகமாய் படுத்து உறங்கி கொண்டிருக்கிறது.
காலை பத்து மணி இருக்கலாம், இவள் அலுவலகத்தில் “கணிப்பொறியின்” முன்னால் உட்கார்ந்து எப்பொழுதோ வாங்கி போட்ட நிலத்தின் பழைய சரித்திரங்களை எடுத்து தொகுத்து வைத்து கொண்டிருந்தாள்.
இந்த நிலத்தின் உரிமையாளர் எங்கோ அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டு இவர்கள் அலுவலகத்தில் அதை பார்த்து எவனாவது மறு விற்பனை செய்து விட்டானா? என்ன விலை போகும்? அல்லது கட்டிடமாய் கட்டி வாடகைக்கு விட்டால் எப்படி வருமானம்? இப்படி எண்ணற்ற கேள்விகளுக்கு பதிலை தயார் செய்து அவர்களுக்கு கொடுக்கும் தகவல் நிறுவனம் இது.
இந்த நிறுவனத்தின் முதலாளி எனப்படுபவர் இது போல பல ஊர்களில், இது போன்று அலுவலகங்களை நிறுவி நடத்தி கொண்டிருப்பவர். இவள் மட்டுமே பணி புரிகிறாள். பெரும்பாலும் அவர் போனில்தான் இவளிடம் வேலை வாங்குவார்.
அவர் சொல்லும் விவரங்களை இவள் தேடி எடுத்து தயார் செய்து அதை இவரின் வலை முகவரிக்கு அனுப்பி வைப்பாள். அவர் மற்ற வேலைகளை கவனித்து கொள்வார்.
மாதம் ஒன்று அல்லது இரண்டில் இவளது ஊதியம் “டாணென்று” இவள் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும்.
அலுவலகம் என்றால் “பத்துக்கு எட்டு ஒரு அறை” இது போல் பல பல அறைகள் அந்த தளத்தில் இருக்கிறது. இப்படி பத்து தளங்கள் கொண்ட கட்டிட அடுக்குகள்.
இவளுக்கு அவ்வப்பொழுது உதவி செய்ய ஒரு பதினெட்டு வயது சிறுவன் வந்து பார்த்து கொள்வான்.
அவள் வேறு ஏதேனும் கடிதங்களோ, மற்றவைகளோ அவனிடம் கொடுத்தால் அது தலைமை அலுவலகம் இருக்குமிடத்துக்கு போய் சேர்ந்து விடும்.
கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக இப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கிறது இவளது பணி. வந்து சேர்ந்தது முதல் தன்னை “எம்.டி” என்று அறிமுகப்படுத்தி கொண்டவர் போனில் மூலமே தொடர்பு கொண்டிருக்கிறார்.
அதே போல் அவள் என்ன செய்ய வேண்டும் என்பவை எல்லாம் இவளின் வலை தள முகவரிக்கே வந்து விடும். அதில் எப்பொழுது முடித்து தர வேண்டும் என்றும் குறிப்பு வந்து விடும்.
அன்று இவளுக்கு ஒரு போன் கால் மிஸ்.கல்பனா.. நான் உங்க “எம்.டி” பேசறேன், இப்ப அங்க ஒருத்தர் நம்ம ஆபிசுக்கு வருவார். அவர் உங்க கிட்டே ஒரு லட்சம் ரூபாய் பணம் தருவாரு. நீங்க அதை வாங்கி பத்திரமா வச்சிருங்க, நான் வேணுங்கறபோது ஆளை அனுப்பிச்சு அதை வாங்கிக்கறேன். புரிஞ்சுதா?
குரலின் மென்மையுடனான கண்டிப்பு இவளை பதில் பேச விடாமல் செய்தது, “யெஸ் சார்” வாங்கி வச்சுடறேன் சார், இது மட்டுமே இவள் வாயில் வந்த வார்த்தைகள்.
மறுபடி சொல்றேன், நீங்க இதை யார்கிட்டேயும் சொல்ல வேணாம், எனக்கு தேவைப்படும்போது நானே நேரடியாவோ, ஆளை அனுப்பிச்சோ வாங்கிக்கறேன். வச்சுடட்டுமா?
போன் கீழே வைத்த நிமிடத்திலெல்லாம் ஒருவர் வந்தார். அவர் வரும்போதே அவர் உடலில் பூசியிருந்த செண்டின் மணம் அந்த அறை முழுக்க பரவியது.
சாரிம்மா,..நான் ஏர்போர்ட் போகணும், பிளைட்டுக்கு நேரமாச்சு, உங்க சாருக்கு பணம் கொடுக்க மறந்துட்டேன், அதனால இதை பத்திரமா வாங்கி வச்சு அவர்கிட்டே சேர்த்துடுங்க, சொன்னவர் ஒரு கட்டு பணத்தை இவள் மேசை மேல் போட்டு விட்டு சரிம்மா நான் வர்றேன், பறந்து விட்டார்.
மறு நாள் அந்த பணத்தை வாங்க “ஆள் வரும்” என்று எதிர்பார்த்தாள். யாரும் வரவில்லை. ஆனால் அன்று மதியம் ‘போனில்’ ஒரு செய்தி வந்தது, நம்ம ‘எம்.டி’ திடீருன்னு ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாரு, அதனால மதியத்தோட ஆபிசை நீங்க பூட்டிட்டு சாவிய கீழே ‘கண்ட்ரோல் ரூமுல’ கொடுத்துட்டு போயிடுங்க. நாளைக்கு காலையில வந்தா போதும்.
இவளுக்கு திக்கென்றது, ‘எம்.டி’ இறந்துட்டாரா? நேத்துதான எங்கிட்ட போசுனாரு, அவர் சொன்னமாதிரி பணம் வாங்கி வச்சிருக்கேன். இன்னைக்கு என்னடான்னா அவரு இறந்துட்டதா சொல்றாங்க..
பார்ப்போம், நாளை யாராவது வருகிறார்களா என்று..! மறு நாள் இவள் எதிர்பார்த்தது போல் யாரும் வரவில்லை. இப்படியே ஒரு வாரமாய் அந்த பணம் அசையாமல் கிடக்கிறது. இவள் மனம் மட்டும் புயலாய் அசைய ஆரம்பித்து விட்டது.
இன்னைக்கு சாயங்காலம் போகறபோது அதை எடுத்துட்டு போயிடணும். இனிமே அதை யாரும் கேட்டு வர்ற மாதிரி தெரியலை. அப்புறம் எதுக்கு அது இங்க இருக்கணும்?
மாலை அலுவலகத்தை மூடும்போது இவள் மனம் சுழன்று கொண்டிருந்தது. கைப்பையில் பதுங்கிய ஒரு லட்சம் ரூபாய் பண கட்டினால்.
மறு நாள் மனம் “பக் பக் கென” அடித்துக் கொள்ள போன் மணி சத்தம் கேட்டாலே போதும், ஏதோ வெடி விபத்து நடந்து விட்டது போல் இவள் மனம் பட படவென அடித்து கொள்ள ஆரம்பித்தது.
இவளுக்கு அவசரமாய் ஏதேனும் தகவல் தருவதாய் இருந்தால் அலுவலகம் ஒரு டெலிபோன் எண்ணை கொடுத்திருந்தது. மறு நாள் காலையில் அந்த எண்ணுக்கு போன் செய்தாள். தனக்கு உடல் நிலை சரியில்லாததால் இரண்டு நாள் விடுமுறை வேண்டுமென்று கேட்டாள்.
அந்த பக்கம் சற்று அமைதி, சரி..என்று போன் வைக்கப்பட இவள் “அப்பாடி” என்று மனம் நிம்மதியானாள்.
என்ன செய்யலாம்? இவளது எட்டு மாத சம்பளம் ஒரு லட்சம் ரூபாய். லட்டு போல தன் கையில் இருக்கிறது. சத்தமில்லாமல் வேறு எங்காவது கிளம்பி போய் விட வேண்டும்.
தனது ஊர், பேர், மற்றும் கல்வி தகுதி இவைகளை நிர்வாகத்திற்கு காண்பித்திருந்தாலும் எல்லாமே காண்பித்ததோடு சரி, மற்றபடி எல்லா ஒரிஜினல் சர்ட்டிபிகேட் எல்லாம் இவளிடம்தான். அது மட்டுமல்ல, மதுரை சொந்த ஊர் என்று சொல்லியிருந்தாலும் அங்கு இவளுக்கு யாருமே இல்லை. அப்புறம் என்ன பயம்? சத்தமில்லாமல் அடுத்த நகரத்துக்கு போய் விட வேண்டியதுதான்.
இருப்பது ஹாஸ்டல், ரூம் மேட்டாக ஒருத்தி, அவளிடம் எதுவும் சொன்னதில்லை. அப்புறம் என்ன கவலை. நாளை காலையில் சத்தமில்லாமல் எங்காவது கிளம்பி போய்விடலாம்.
மூன்றாம் நாள், நான்காம் நாள், தொடர்ந்த நாட்களில் அந்த அலுவலகம் திறக்கப்படவே யில்லை.
ஒரு வாரம் கழித்து புதிய பெண் அங்கு பணி செய்து கொண்டிருந்தாள். அதே வழக்கமான பணிதான்.
ஹலோ…அன்று பணம் கொடுத்து விமானத்துக்கு போவதாய் சொல்லியிருந்த ஆசாமி போன் செய்து கொண்டிருந்தார் இவர்கள் கம்பெனி “எம்.டி” யின் மகனிடம்.
தம்பி அப்பா இறந்துட்டதா கேள்விப்பட்டேன். ரொம்ப வருத்தம் தம்பி, அன்னைக்கு அவர் மட்டும் உதவி பண்ணலையின்னா இந்நேரம் கம்பி எண்ணிகிட்டிருப்பேன்.
என்ன சொல்றீங்க சார்?
அதை ஏன் கேட்கறீங்க, உங்கப்பா அடிக்கடி சொல்லுவாரு, இந்தமாதிரி “டபுளிங்க்” பண மோசடி தொழில் பண்ணாதேன்னு. நம்ம கெட்ட நேரம் அன்னைக்கு ஒரு லட்சம் ரூபாய் பள பளன்னு புதுசா, ஒரு கட்டு ஒரிஜினல் தோத்துடும், என் கைக்கு வந்து சேரவும், போலீஸ் கரெக்டா உங்க ஆபிஸ் பில்டிங்க் பக்கத்துல காரை நிறுத்தி செக் பண்ணிட்டு இருந்தாங்க.
இரண்டு கார் பின்னாடிதான் என் கார் நின்னுகிட்டிருந்துச்சு, என்ன பண்னறதுன்னு திகைச்சு நின்னப்ப, உங்கப்பா ஞாபகம் வந்துச்சு, உடனே அவருக்கு போன் போட, அவர் உடனே ஆபிசுக்கு கொண்டு போய் கொடுத்துடுன்னு ஐடியா கொடுத்தாரு.
நாயோட்டம், பேயோட்டம், உங்க ஆபிசுக்கு போய் அங்கிருந்த பொண்ணுகிட்ட கொடுத்துட்டு பறந்து கீழே வந்து காருக்குள்ள ஏறிட்டேன். நல்ல வேளை, செக் பண்ண அடுத்த காரு என்னோடதுதான்.
காருக்குள்ள எல்லா இடமும் செக் பண்ணி என்னையும் செக் பண்ணி, தப்பிச்சு அப்பப்பா.. இனி அந்த தொழிலே வேண்டாமுன்னு விட்டுட்டேன். உண்மை தம்பி , சத்தியமா அன்னைக்கு பட்ட பாடு போதும் போதும்னு ஆயிடுச்சு.
“எம்.டியின் மகனுக்கு” அந்த அலுவலகத்தில் வேலை செய்த பெண் ஏன் வேலையை விட்டு திடீரென்று நின்றுவிட்டாள் என்னும் காரணம் புரிந்தாலும் அவளுக்காக வருத்தப்படுவதை தவிர வேறொன்றும் செய்ய வழியில்லாமல் போய்விட்டது.