நியூயார்க்கில் சங்கர்லால்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: April 3, 2024
பார்வையிட்டோர்: 4,498 
 
 

(1983ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

அத்தியாயம்-1

உலகத்திலேயே மிக மிகுதியான மக்கள் தொகையைக் கொண்ட நகரம் நியூயார்க்கா? டோக்கியோவா? விவாதத்துக்கு உரியது.

நியூயார்க் நகரில் வாழ்பவர்களைவிட நியூயார்க்கைச் சுற்றிலும் வாழ்ந்து கொண்டு, நாள்தோறும் நியூயார்க்குக்கு வேலைக்கு வந்து போகிறவர்கள் மிக மிகுதி. இப்படிச் சுற்றுப்புறத்தில் வாழ்பவர்களையும் சேர்த்துக் கொண்டால் நியூயார்க்கின் மக்கள் தொகைதான் மிக மிகுதியாக இருக்கும். நியூயார்க்கில் அமெரிக்கர்கள் குறைவு. மற்ற நாட்டவர்கள் மிகுதி. இதனால் நியூயார்க் நகரில் எப்போதும் எல்லா நாட்டவர்களையும் பார்க்கலாம். இந்தியர்கள், பிரிட்டிஷ்காரர்கள், ஐரோப்பியர்கள், ஜப்பானியர்கள், சீனர்கள், ரஷ்யர்கள், அரபுக்கள், நீக்ரோக்கள், எல்லோரையும் பார்க்க முடிகிறது!

நியூயார்க், ஒரு குட்டி உலகம். அமெரிக்காவுக்குப் போகிறவர்கள் முதலில் நியூயார்க்கைப் பார்க்கவே விரும்புகிறார்கள். அமெரிக்காவிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறவர்கள் கூட நியூயார்க்கைப் பார்க்க விரும்புகிறார்கள்!

இதனால்,

நியூயார்க்கில் எப்போதும் கூட்டம் மிகுதி. வானையளாவிய ‘ஸ்கை ஸ்கிரேப்பர்கள்’ எனப்படும் அடுக்கு மாடிக் கட்டடங்கள் இங்கேதான் மிக மிகுதி. உலகத்திலேயே மிக உயரமான கட்டடங்கள் இங்கேதான் இருக்கின்றன. இந்த வியப்புக்குரிய நியூயார்க் நகரில் ஒரு நாள் –

நைட்கிளப் ஒன்றில் இரண்டு பேர்கள் மதுவை அருந்திக் கொண்டே பேசிக் கொண்டிருந்தார்கள். இந்த நைட் கிளப்பின் பெயர் மிக வேடிக்கையானது. ’21 கிளப்’ என்று இதற்குப் பெயர். புகழ்பெற்ற கிளப். கொஞ்சம் மிகுதியாகவே பணம் வைத்திருப்பவர்கள் தாம் இந்தக் கிளப்பில் போய் உட்கார முடியும். சாப்பிட முடியும். நடனங்களையும் பார்க்க முடியும். டாலர் நோட்டுகளை அள்ளி வீச வேண்டும். இல்லாவிட்டால் இந்த நைட் கிளப்பில் வேலை செய்யும் பையன்கள்கூட கொஞ்சமும் மதிக்க மாட்டார்கள்.

மதுவைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிப் பருகிய படியே, இந்த இரண்டு பேரும் மெல்லப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

வழக்கப்படி கிளப்பின் மேடையில் இரண்டு அழகிகள் ஏறக்குறைய நிர்வாணமாக நடனம் ஆடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஆடிய நடனத்துக்கு ஏற்றபடி சில நீக்ரோக்கள் பின்னணி இசையை எழுப்பினார்கள். விரைந்த ஓசை. ஓசை மிகுதியாகவே இருந்தது. நடனத்தைப் பார்த்தவர்கள், இசையின் விரைவினால் மேலும் மேலும் அழகிகளின் ஆட்டத்தைப் பார்த்துக் கைதட்டிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் –

இந்த இருவர்மட்டும் மதுவைப் பருகியபடி ஆட்டத்தையும் பாட்டத்தையும் பார்க்காமல் கேட்காமல் மிகவும் சுவையாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பார்வை அடிக்கடி நடனக்காரிகளின் பக்கம் சென்றது என்ற போதிலும், அவர்கள் மனமும் பேச்சும் வேறு எங்கேயோ இருந்தன!

இசையின் ஓசையிலும், மற்றவர்கள் அடிக்கடி கைதட்டி எழுப்பிய ஆரவாரத்திலும், அவர்கள் பேசிக் கொண்டது மற்றவர்கள் காதில் வீழவில்லை.

அவர்களில் ஒருவன் உயரமாக இருந்தான். பருமனாக இருந்தான்.

அவன் பெயர் ஆல்பர்ட்.

மற்றொருவன் உயரமாக இருந்தான். ஒல்லியாக இருந்தான்.

அவன் பெயர் அந்தோணி.

இருவரும் அமெரிக்கர்கள். ஆல்பர்ட், மலைப்பாம்பு. அந்தோணி, கருநாகம். இருவரும் மெய்யாகப் பாம்பைவிட நஞ்சுடையவர்கள். பாம்பு கடித்தால்தான் நஞ்சு. இவர்கள் பேசினாலே நஞ்சு!

இப்போது இவர்கள் பேசிய பேச்சிலே நஞ்சு பரவிக் கொண்டிருந்தது.

ஆல்பர்ட், சுருட்டு ஒன்றைப் பற்ற வைத்தான். அடிக்கடி அதை இழுத்துக் கொண்டிருந்தான். இடை இடையே மது. அந்தோணி, சுருட்டுக்கு இணையாக லக்கி ஸ்டிரைக் எனப்படும் புகழ்பெற்ற அமெரிக்க சிகரெட்டைப் பற்ற வைத்தான். அதை இழுத்துக் கொண்டிருந்தான். இடை இடையே மது!

ஆல்பர்ட், அந்தோணியைப் பார்த்து, அந்தோணி சங்கர்லாலைப், பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா?” என்றான்.

“கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போதுதான் அவரைப் பற்றி டெலிவிஷனில் கூட அடிக்கடி காட்டுகிறார்களே! ஹாங்காங்கிலும், பெர்லினிலும், நேப்பிள்ஸிலும் சில குற்றவாளிகளைக் கண்டு பிடித்ததால் திடீரென்று அவர் உலகப் புகழ் பெற்றுவிட்டார். இப்படிப்பட்டவர் அமெரிக்காவுக்கு வந்தால், அவர் இருக்கும் இடம் தெரியாது!”

“உனக்கு அறிவு மிகக் குறைவு” என்றான் ஆல்பர்ட்.

“என்ன அப்படிச் சொல்லிவிட்டாய்?”

“சங்கர்லாலின் மெய்யான திறமை என்ன என்பதை உன்னால் உணர முடியவில்லை. புரிந்து கொள்ள முடியவில்லை!”

”நீ அளவுக்குமேல் அஞ்சுகிறாய். சங்கர்லால் திறமையெல்லாம் இங்கே அமெரிக்காவிலே நடக்காது!”

“அப்படியானால் சங்கர்லாலைக் கண்டு நீ அஞ்சவில்லையா?”

“இல்லை, சங்கர்லால் ஒரு கொசு. அவரை நேருக்கு நேர் கண்டு அவரைப் பார்த்து ஓர் ஏளனச் சிரிப்புச் சிரிக்க நான் முன்னேற்பாடுடன் இருக்கிறேன்.”

ஆல்பர்ட், சிந்தனையுள் ஆழ்ந்தான்.

“என்ன ஆல்பர்ட்? அப்படியே சிலையைப் போல உட்கார்ந்து விட்டாயே?”

“ஒரு சிறிய திட்டம். உன்னால் அதை வெற்றிகரமாகச் செய்ய முடியுமா என்று சிந்திக்கிறேன்”.

“சொல்லு, இதுவரையில் நான் தவறு செய்திருக்கிறேனா?”

“ஆனால் இந்தத் தடவை தவறு செய்யலாம். அது பற்றி எனக்கு ஐயமாக இருக்கிறது!”

“ஐயா வேண்டாம், உடனே சொல்லு.”

“சங்கர்லால் நியூயார்க் வருகிறார். அவரைக் கொல்ல வேண்டும்! முடியுமா உன்னால்?”

“வீணாக நான் ஏன் அவரைக் கொல்ல வேண்டும்!”

“வீணாக ஒன்றும் இல்லை. இதில் உனக்குப் பெரும் பணம் கிடைக்கும்”

ஆல்பர்ட், மௌனமாக இருந்தான். அமைதியாக இருந்தான். கொஞ்சம் மதுவைப் பருகினான். சுருட்டை இழுத்தான். புகையை விட்டான். சுற்றும் முற்றும் பார்த்தான்.

நடனக்காரிகள் இருவரும் இப்போது நிர்வாணமாக கேபரே நடனம் ஆடிக் கொண்டிருந்தார்கள். ஒரே கை தட்டல் ஆரவாரம்!

திடீரென்று விளக்குகள் அணைந்தன. அப்புறம் எரிந்தன. மேடையில் இறுதியாக முழு நிர்வாணமாக நடனம் ஆடிய அழகிகள் மறைந்து விட்டார்கள்!

அறிவிப்பாளர் ஒருவர் மேடையில் தோன்றினார். தோன்றி, “அடுத்த படியாக, இரண்டு நீக்ரோக்கள் தோன்றுவார்கள். தோன்றிக் காங்கோ நடனம் ஆடுவார்கள்” என்று அறிவித்தார். உடனே கைதட்டல்!

கொஞ்ச நேரத்தில் ஒரு நீக்ரோ ஆண் வந்தான். ஒரு நீக்ரோ பெண் வந்தாள். இருவரும் ஆப்பிரிக்க நாட்டு இசைக்கு ஏற்ப நடனம் ஆடத் தொடங்கினார்கள். அவர்கள் இருவரும் வெறி கொண்டவர்களைப் போல் ஆடினார்கள். அவர்கள் அப்படி ஆடியபோது நடனத்தைப் பார்க்கவே கொஞ்சம் அச்சமாக இருந்தது!

இதனால் மற்றவர்கள் இப்போது முழுக் கவனத்துடன் நடனத்தைப் பார்க்கவில்லை. ஆகையால் ஆல்பர்ட், தான் பேசுவது எவர் காதிலாவது விழுந்துவிடப் போகிறது என்று அஞ்சினான்.

ஆப்பிரிக்க நடனத்தைப் பார்க்க விரும்பாத சில பெண்கள், தங்களது காதலர்களுடன் கிளப்பை விட்டு மெல்ல வெளியே நழுவிக் கொண்டிருந்தார்கள்.

“அந்தோணி, வெளியில் போய்ப் பேசலாம் வா” என்று சொல்லிவிட்டு ஆல்பர்ட், பேரரைக் கூப்பிட்டான். பேரர் வந்தான். பில்லுக்குப் பணத்தைக் கொடுத்தான், கொடுத்து விட்டு எழுந்தான். அவன் பின்னாலேயே அந்தோணி நடந்தான்.

இருவரும் ’21 கிளப்’பை விட்டு வெளியே வந்தார்கள். கொஞ்ச நேரத்தில் இருவரும் ஆல்பர்ட்டின் காரில் ஏறினார்கள். புறப்பட்டார்கள். ஆல்பர்ட், காரைச் செலுத்தினான்.

கார், பரபரப்பான இடத்தைவிட்டு போக்குவரத்து மிகுதியாக இல்லாத ஒரு பகுதியில் வந்து ஓரமாக நின்றது.

இருவரும் இருளில் காரில் உட்கார்ந்தபடியே பேசினார்கள்.

“அந்தோணி, சங்கர்லால், விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் சுடக்கூடாது. விமான நிலையத்தைச் சுற்றிலும் எப்போதும் போலீஸார் சுற்றிக் கொண்டிருப்பார்கள். அதனால் உன் முயற்சி தோல்வி அடையும். ஆகையால் நான் சொல்லுகிறபடி கேள்.”

“சொல்லு.’’

“சங்கர்லால் ஒரு ரோல்ஸ்ராய்ஸ் காரில் ஏறி வருவார். அப்போது அவரைத் தொடர்வது எளிது. மிக எளிது. விமான நிலையத்திலிருந்து ரோல்ஸ்ராய்ஸ் காரைத் தொடர்ந்து போ. போய், திருப்பத்திற்கு வந்ததும், அவர் காரின் பக்கத்தில் உன் காரைக் கொண்டு வந்து நெருங்கி கண்ணிமைக்கும் அந்த நேரத்தில் துப்பாக்கியால் சங்கர்லாலைச் சுட்டுவிட்டு வேறு ஒரு பக்கமாகச் சென்று நீ தப்பிவிட வேண்டும். கண் இமைக்கும் நேரத்தில் இது நடக்க வேண்டும். புரிகிறதா?” என்றான் ஆல்பர்ட்.

“புரிகிறது. ரோல்ஸ்ராய்ஸ் கார் எங்கிருந்து எப்படிப் புறப்பட்டு எப்படி வரும் என்பது திட்டமாக உனக்குத் தெரியும் என்று சொல்லு.”

“ஆமாம். தெரியும்” என்று விவரத்தை விளக்கமாகச் சொன்னான் ஆல்பர்ட்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டான் அந்தோணி.

பிறகு “எனக்கு எவ்வளவு பணம் கிடைக்கும்?” என்று கேட்டான்.

“ஐம்பதாயிரம் டாலர்?”

இதைக் கேட்டதும் அந்தோணி விசில் அடித்தான்.

“உண்மையாகவா?”

“உண்மையாகத்தான். மிக உண்மையாகத்தான். இதோ இருபத்தைந்தாயிரம் டாலர். உன்னை நம்பி முதலிலேயே இந்தப் பாதிப் பணத்தைக் கொடுக்கிறேன். வேலை முடிந்ததும் மீதிப் பணம் உனக்குக் கிடைக்கும்” என்று சொல்லிவிட்டு ஆல்பர்ட், அவனிடம் ஒரு சிறிய கைப்பெட்டியை நீட்டினான்.

அந்தோணி, அந்தக் கைப்பெட்டியை வாங்கி மெல்லத் திறந்தான். திறந்து மின்பொறி விளக்கை அடித்தான். பார்த்தான். புத்தம் புதிய டாலர் நோட்டுகள்! கற்றை கற்றையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன!

“எப்போது சங்கர்லால் வருகிறார்?”

“இன்னும் இரண்டு மணி நேரத்தில். இப்போது மணி என்ன? பன்னிரண்டு, இரண்டு மணி விமானத்தில் வந்து அவர் இறங்குகிறார். இதே காரில் புறப்படு.’

‘இது உன் கார் அல்லவா?”

“இல்லை”

“யாருடைய கார்?”

“திருடப்பட்ட கார். காரின் நம்பர் பிளேட்டுகள் மாற்றப்பட்டிருக்கின்றன. போலீஸார் இதைத் திருட்டுக் கார் என்பதைக் கண்டு பிடிப்பதற்குள் உன் வேலையை நீ முடித்துவிட வேண்டும்.”

“ஆகட்டும்.”

“நான் வாடகைக் காரில் போகிறேன். திட்டம் வெற்றிகரமாக முடிந்ததும் என்னை வந்து பார்.”

“ஆகட்டும்.”

ஆல்பர்ட். காரைவிட்டு இறங்கினான். அவன் விரைந்து நடந்தான். நடந்து போய் வாடகைக்கார் ஒன்றைப் பிடித்தான். பிடித்துப் புறப்பட்டான்.

அந்தோணி, காரைக் கிளப்பினான். ஆல்பர்ட் அவனிடம் விட்டுச் சென்றது புகழ்பெற்ற வோல்கா கார். விரைந்து செல்லக் கூடியது. பறக்கக் கூடியது. இதை எப்படி? எங்கிருந்து? ஆல்பர்ட் கிளப்பி வந்தான் என்பது அவனுக்குத் தெரியாது!

அந்தோணி, சங்கர்லாலைக் கண்டு பிடித்து, அவரைத் தொடருவதற்குமுன் தன்னிடமிருந்த பணப் பெட்டியை ஒளித்து வைக்க விரும்பினான். அதனால் அவன், காரைப் புகைவண்டி நிலையத்திற்குச் செலுத்தினான்.

புகைவண்டி நிலையத்தில் வெளியூரிலிருந்து வரும் பயணிகள் தங்களது பெட்டிகளை வைத்துக் கொள்ள அங்கே இரும்புப் பெட்டிகள் இருந்தன. ஒரு சிறிய கட்டணம் கட்டினால், லாக்கர் ஒன்றைக் கொடுப்பார்கள். அந்தோணி, ஒரு லாக்காரைப் பிடித்து அதில் பெட்டியை வைத்தான். பூட்டினான். பிறகு காரை நோக்கி நடந்தான். வந்தான்.

இன்னும் சங்கர்லால் வர ஒருமணி நேரமே இருந்தது. அவன் காரை விமான நிலையத்தை நோக்கி விரைவாகச் செலுத்தினான். பின்னிரவை நெருங்கிவிட்டதால், சாலையிலே வண்டிகளின் போக்குவரத்துக் கொஞ்சம் குறைந்திருந்தது. ஆனாலும் சாலைகளில் பட்டப்பகலைப் போல் வெளிச்சம் கொடுக்க ஆற்றல் மிகுந்த விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.

அந்தோணி, விமான நிலையத்துக்கு வந்தான். காரை விமான நிலையத்திலே ஒரு பக்கமாகக் கொண்டு போய் நிறுத்தினான்.

சங்கர்லால் வரவேண்டிய விமானம் மிகச் சரியான நேரத்தில் வந்து இறங்கியது. அதிலிருந்து இறங்கியவர்களை அந்தோணி பார்க்கவில்லை. அதற்குப் பதிலாகச் சங்கர்லாலுக்காகக் காத்திருந்த ரோல்ஸ்ராய்ஸ் காரையே அவன் பார்த்துக் கொண்டிருந்தான்!

ரோல்ஸ்ராய்ஸ் காரின் பக்கத்தில் வெள்ளை உடை அணிந்த காரோட்டி ஒருவன் நின்றிருந்தான். அவன் கறுப்புத் தொப்பி அணிந்திருந்தான். அவன் சங்கர்லாலின் வருகைக்காகக் காத்திருந்தான்.

‘சங்கர்லால் ஏதோ ஒரு வழக்குத் தொடர்பாக வருகிறார். என்ன வழக்கு என்பது தெரியவில்லை. வழக்கில் தொடர்பு கொண்ட குற்றவாளிகள் சங்கர்லால் நியூயார்க்கில் இறங்கியதும் அவரைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்திருக்கிறார்கள். உண்மையான விவரங்கள் ஆல்பர்ட்டுக்குத் தெரியும். ஆனால் அவன் சொல்ல மாட்டான். சங்கர்லாலை ஒழிக்க எனக்கே அவர்கள் ஐம்பதாயிரம் டாலர் பணம் கொடுக்கிறார்கள் என்றால், மொத்தத்தில் அந்தக் குற்றவாளிகளுக்கு எவ்வளவு பணம் கிடைத்திருக்கும்!” என்று எண்ணியது அந்தோணியின் மனம்.

அந்தோணி, காரில் உட்கார்ந்தபடியே ரோல்ஸ்ராய்ஸ் காரைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

விமானத்தில் வந்தவர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தார்கள். அந்தோணியின் பார்வை சங்கர்லால் வருகிறாரா என்பதிலேயே பதிந்திருந்தது.

திடீரென்று சங்கர்லால் அங்கே தோன்றினார்!

கலைந்த கிராப்பு, முன் நெற்றியில் வளைந்து சுருண்ட முடி, தளர்ந்த கழுத்துப் பட்டை, கைகளில் மடித்துவிடப் பட்ட முழுக்கைச் சட்டை, கையில் ஒரு பெட்டி.

சங்கர்லால், விரைந்து வந்தார். நின்றார். ரோல்ஸ்ராய்ஸ் காரைப் பார்த்தார். அந்தக் காரைப் பார்த்ததும் அவர் அதை நோக்கி நடந்தார்.

காரோட்டி, சங்கர்லாலைக் கண்டதும் ஒரு சல்யூட் அடித்தான்.

காரின் கதவைத் திறந்து விட்டான். சங்கர்லால் காரில் ஏறிக் கொண்டார். அவர் காரில் ஏறிக் கொண்டதும், அவன் முன்னால் போய் உட்கார்ந்தான். உட்கார்ந்து காரைக் கிளப்பினான்.

கார் சென்றது.

விரைந்து சென்றது.

அந்தோணி, ரோல்ஸ்ராய்ஸ் காரைத் தொடர்ந்தான். தொடர்ந்து தன் வோல்கா காரைச் செலுத்தினான். பறத்தினான். விமான நிலையத்திலிருந்து பல கார்கள் புறப்பட்டன. புறப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாகச் சென்றன. கார்கள் ஒன்றன்பின் ஒன்றாகச் சென்றதால் வோல்கா காரைச் சங்கர்லால் பார்த்தார். ஆனால் ஐயத்துடன் பார்க்கவில்லை!

இதுவரையில் எல்லாம் திட்டப்படி நடந்து கொண்டிருந்தன. அந்தோணி தன் கைக்கெடிகாரத்தைப் பார்த்தான்.

மணி 2.05

இன்னும் பத்து நிமிடங்களில் சங்கர்லால் கொலை செய்யப்பட வேண்டும். ஆல்பர்ட்டின் திட்டப்படி அவன் செயலாற்ற வேண்டும். இல்லாவிட்டால் அந்தோணியின் உயிருக்கே ஆபத்து!

முன்னால் ரோல்ஸ்ராய்ஸ் கார் பறந்து கொண்டிருந்தது. பின்னால் கொஞ்சத் தொல்லைவில் வோல்கா கார் பறந்து கொண்டிருந்தது. வேறு பல கார்கள் அவர்களுக்கு முன்னாலும் பின்னாலும் வழக்கப்படி பறந்து கொண்டிருந்தன. நியூயார்க் நகரச் சாலைகளில் இரவு பகலாக எப்போதும் கார்கள் விரைந்து ஓடிக் கொண்டிருந்தன.

ஒரு திருப்பம். அங்கே வந்ததும் ரோல்ஸ்ராய்ஸ் கார் நின்றது. திருப்பத்தில் சிவப்பு விளக்கு எரிந்தது. மீண்டும் பச்சை விளக்கு எரிய ஒரு நிமிடம் ஆகும்.

அதற்குள் –

சங்கர்லாலைத் தீர்த்து விட வேண்டும்!

அந்தோணி, கைத்துப்பாக்கியை எடுத்தான். எடுத்து மடியில் வைத்துக் கொண்டான். ஸைலன்ஸர் பொருத்தப்பட்ட கைத்துப்பாக்கி! அவன், வோல்கா காரைச் சங்கர்லாலின் காருக்குப் பக்கத்தில் கொண்டு போனான். போய் நிறுத்தினான். இப்போது அவனுக்கு மிகப் பக்கத்தில் சங்கர்லால் உட்கார்ந்திருப்பதைப் போல் இருந்தது. பச்சை விளக்கு எரிய ஒரு சில வினாடிகளே இருந்தன. திடீரென்று அவன் துப்பாக்கியை எடுத்தான். அவன் துப்பாக்கியை எடுத்ததும், சங்கர்லாலும் ஏதோ ஒரு கனவிலிருந்து மீண்டவரைப் போல் தன் துப்பாக்கியை எடுத்தார். ஆனால் அந்தோணி, மின்னல் விரைவில் மூன்று தடவைகள் சுட்டான்! சுட்டுவிட்டான்!

சங்கர்லாலின் மார்பிலிருந்து மூன்று இடங்களில் வட்டமாகச் சட்டை இரத்தத்தால் நனைந்தது! அவர் அப்படியே சாய்ந்தார்!

மீண்டும் பச்சை விளக்கு!

வோல்கா பறந்தது!

ரோல்ஸ்ராய்ஸ் காரை ஓட்டி வந்தவன், இப்போது அவனைத் துரத்தி வந்தான். ரோல்ஸ்ராய்ஸ் கார், எப்படியாவது வோல்கா காரைப் பிடித்துவிட வேண்டும் என்று பறந்து வந்தது!

ஆனால் –

வோல்காவின் விரைவுடன் ரோல்ஸ்ராய்ஸ் காரால் ஆற்றல் மிகுந்த இஞ்சினை போட்டியிட முடியவில்லை.

வோல்காவில் பொருத்தியிருந்தார்கள். ஆகையால், அது ஒரு ஜெட் விமானத்தைப் போல் பறந்தது!

சங்கர்லால் இறந்து விட்டார் என்பது அந்தோணிக்கு மிக உறுதியுடன் தெரிந்துவிட்டது. அவன், காரைப் பேயைப் போல் செலுத்தினான். அவனுடைய கார், இப்போது சந்து பொந்துகளிலெல்லாம் பாய்ந்தது. பாய்ந்து ஓடியது. இப்போது பின்னால் வந்து கொண்டிருந்த ரோல்ஸ்ராய்ஸ் கார் எங்கே மறைந்தது என்பதை தெரியவில்லை!

ஒரு வேளை சங்கர்லாலைப் பிழைக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையுடன், காரோட்டி, ரோல்ஸ்ராய்ஸ் காரை மருத்துவ விடுதிக்குக் கொண்டு போய்விட்டானா?

அத்தியாயம்-2

மணி மூன்று.

பின்னிரவு.

நியூயார்க் நகரம் கொஞ்சம் அமைதியாக இருந்த நேரம். மீண்டும் ஒரு மணி நேரத்தில் மறுபடியும் அது சுறுசுறுப்பாகிவிடும்!

அந்தோணி, மெல்ல நடந்து கொண்டிருந்தான்.

எல்லாமே அவனுக்குக் கனவில் நடந்ததைப் போல் இருந்தன. ஆனால் நடந்ததெல்லாம் மெய். அவன், சங்கர்லாலை எவ்வளவு எளிதில் சுட்டுக் கொன்றுவிட்டான்! கொலை செய்வதற்கு முன்பே அவனுக்கு ஆல்பர்ட் இருபத்தையாயிரம் டாலர் கொடுத்து விட்டான். இப்போது மீண்டும் இருபத்தையாயிரம் டாலர் கிடைக்கும். அதையும் அவன் வாங்கிக் கொண்டு கொஞ்ச நாள்களுக்கு அமைதியுடன் எங்கேயாவது பதுங்கி இருக்கலாம். பணம் கையில் நிறைய இருக்கும்போது மனத்தில் ஏற்படும் உற்சாகத்துக்கு அளவு எது? எவளாவது ஓர் அழகிய பெண்ணுடன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்துக்குப் போய்த் தங்கிவிடலாம். மதுவும் மங்கையும் லக்கிஸ்டிரைக் சிகரெட்டும் இருந்தால் போதுமே!

அவன், வாடகைக் கார் ஏதாவது வருகிறதா என்று பார்த்தான். அந்த நேரத்தில் வாடகைக் கார் கிடைப்பது கொஞ்சம் கடினமாக இருந்தது.

அவன் நடந்தான். நடந்து கொண்டே இருந்தான்.

திட்டப்படி அவன் வோல்கா காரை நியூயார்க் நகரின் ஒரு பக்கம் ஓடிய நதியில் இறக்கி விட்டான். கார் நதியினுள் மூழ்கிவிட்டது. நதி விரைவாக ஓடியது. விரைவில் அது காரை அடித்துக் கொண்டு போய்விடும். போலீசாரால் அதைக் கண்டுபிடிக்க முடியாது. கண்டுபிடிக்க முடிந்தாலும் அதற்கு நாளாகும்!

சிந்தனையுடன் அவன் நடந்து கொண்டிருந்தான். நடந்து கொண்டிருந்த போது ஒரு வாடகைக் கார் வந்தது. கை தட்டினான். அதைக் கூப்பிட்டான். வாடகைக் கார் வந்தது. அவன் பக்கத்தில் வந்தது. நின்றது, அவன் காரில் ஏறினான். ஏறிக்கொண்டு, “64ஆவது தெருவுக்குப் போ” என்றான்.

நியூயார்க் நகரில் தெருக்களுக்குக் கண்ட கண்ட பெயர்களையெல்லாம் வைக்காமல் வெறும் எண்களை மட்டும் வைத்திருந்தார்கள். ஆகையால் எப்படிப்பட்ட தெருவையும் மிக எளிதில் கண்டுபிடித்து விடலாம்!

வாடகைக் கார் விரைந்தது. விரைந்து சென்று, 64ஆவது தெருவில் அந்தோணி சுட்டிக் காட்டிய இடத்திற்கு வந்தது. நின்றது. அந்தோணி, இறங்கிக் கொண்டு வாடகைக் காரை உடனே அனுப்பிவிட்டான். அனுப்பிவிட்டு ஒரு பெரிய கட்டடத்தின் அடியில் வந்தான். நின்றான். கட்டடத்தின் அடியில் கார்க்கூடம் ஒன்று தெரிந்தது. அதன் கதவுகள் மூடப்பட்டிருந்தன. அந்தோணி, கதவைத் தட்டினான். கொஞ்ச நேரத்தில் கதவுகள் திறந்தன. அவன் உள்ளே சென்றதும் மீண்டும் கதவுகள் மூடிக் கொண்டன!

அந்தோணி, அங்கே கண்ட காட்சி அவனை உலுக்கியது! உலுக்கு உலுக்கென்று உலுக்கியது!

சங்கர்லால் பயணம் செய்த ரோல்ஸ்ராய்ஸ் கார் அங்கே நின்றது! அதை ஓட்டி வந்த காரோட்டி, காரின் பக்கத்திலே நின்றிருந்தான். ஆல்பர்ட் வெற்றிப் புன்னகையுடன் அந்தக் காரோட்டியுடன் பேசியபடி நின்று கொண்டிருந்தான்!

அந்தோணி ஆல்பர்ட்டின் அருகில் போய், “என்ன ஆயிற்று? ரோல்ஸ்ராய்ஸ் மருத்துவ விடுதிக்குப் போய் விட்டது என்றல்லவா நான் எண்ணினேன்? சங்கர்லால் என்ன ஆனார்?” என்று பதறிக் கொண்டே காருக்குள் எட்டிப் பார்த்தான்.

உள்ளே –

சங்கர்லால். பிணம் கிடந்தது!

ஆல்பர்ட், காரோட்டியிடம் சாடை காட்டினான். காரோட்டி, காரின் உன் விளக்குகளைப் போட்டான்.

மூன்று குண்டுகள் பாய்ந்து சங்கர்லால் இறந்து கிடந்தார்! அந்தோணி, ஒன்றும் புரியாமல் ஆல்பர்ட்டையும் காரோட்டியையும் பார்த்தான்.

“காரோட்டி நமது ஆளா?” என்று கேட்டான் அந்தோணி.

“ஆமாம்” என்றான் ஆல்பர்ட்!

“இந்தக் கார் இங்கே வந்ததை எவரும் பார்க்கவில்லையே!”

“இல்லை.”

“இப்போது என்ன செய்யப் போகிறாய்? சங்கர்லாலின் பிணத்தை உடனே ஒழிக்க வேண்டும். இரண்டாவதாகக் காரையும் உடனே கொண்டு போய் எங்கேயாவது விடவேண்டுமே!”

“கொஞ்சம் பொறு” என்றான் ஆல்பர்ட்.

பிறகு திரும்பிக் காரோட்டியிடம் ஏதோ சாடை காட்டினான்.

காரோட்டி விரைந்து காருக்குள் சென்று சங்கர்லாலின் முகத்தை மேல்பக்கம் திருப்பி, முகத்திரையைக் கிழித்தான்!

இறந்து கிடந்தது சங்கர்லால் அல்லர்! சங்கர்லாலைப் போலவே முகத்திரை அணிந்திருந்த வேறொரு மனிதன்!

“என்ன இது? போலிச் சங்கர்லாலா?” என்று கத்தினான் அந்தோணி!

ஆல்பர்ட் உடனே ஒன்றும் சொல்லாமல் உள்ளே இருந்த ஓர் அறைக்குள் போனான். போய்த் திரும்பினான். அவனிடம் இப்போது ஒரு கைப்பெட்டி இருந்தது. முன்பு அவன் கொடுத்த கைப்பெட்டியைப் போலவே அதுவும் இருந்தது. அதை அவன் அந்தோணியிடம் கொடுத்தான்.

“இதோ மீதி இருபத்தைந்தாயிரம் டாலர். உன் திறமைக்கு என் பாராட்டுகள். உன்னால் உண்மையிலேயே சங்கர்லாலைக் கொல்லமுடியும் என்று நீ உறுதி செய்து விட்டாய்! இந்த இறந்துகிடக்கும் மனிதன் துப்பாக்கியால் சுடுவதில் ஏறக்குறையச் சங்கர்லாலுக்கு இணையானவன். சங்கர்லாலைச் சுடுவதற்கு முன் உனக்கு ஓர் ஒத்திகை கொடுக்க விரும்பினேன்! நீ அதிலே முழு வெற்றி பெற்று விட்டாய். இது ஓர் ஒத்திகை. நாளை இரவுதான் உண்மையாகவே சங்கர்லால் வரப் போகிறார். அவரை இவனைச் சுட்டதைப் போல் சுட்டுத்தள்ள வேண்டும். பிறகு, இன்று செய்ததைப் போலவே வோல்கா காரை நதியில் தள்ளிவிட்டு மறைந்து விடவேண்டும். புரிகிறதா?” என்றான் ஆல்பர்ட்!

அந்தோணியால் நம்ப முடியவில்லை. எதையும் நம்ப முடியவில்லை!

“சங்கர்லாலைக் கொல்ல முடிகிறதா இல்லையா என்பதனை சோதித்துப் பார்க்க ஒரு மனிதனையே கொன்று விட்டாயே!” என்றான் அந்தோணி.

“நீ கொஞ்சம் தவறியிருந்தாலும் அவன் உன்னைச் சுட்டுக் கொன்றிருப்பான்! தெரிகிறதா? ஒத்திகை நடத்த வேண்டும் என்று சொன்னபோது அவன் துணிந்து ஒப்புக் கொண்டான். ஆனால் துப்பாக்கியிலே போலி வேட்டுகள் இருக்கும் என்று எண்ணிவிட்டான்!”

“இப்போது இவனை என்ன செய்யப் போகிறாய்?”

“இவனைப் பற்றி நீ துன்பம் கொள்ளாதே. இவனை என்ன செய்ய வேண்டும் என்பது காரோட்டிக்குத் தெரியும். நாளை இரவு நடக்கப் போவதைப் பற்றிப் பேசுவோம்.”

“சங்கர்லாலைக் கொல்ல வேண்டும் என்ற ஒத்திகையை நான் சிறப்பாக நடத்தி விட்டதால், நான் மேலும் மிகுதியாகப் பணம் கேட்கலாம்.”

“மெய்யாகவே உனக்கு மேலும் மிகுதியாகப் பணம் கிடைக்கும். சங்கர்லாலை வீழ்த்திய பிறகு உனக்கு ஓர் இலட்சம் டாலர் கொடுக்கிறேன்!”

அந்தோணி அசைவற்று நின்றான்!

ஆல்பர்ட், அசைவற்று நின்ற அந்தோணியிடம் சொன்னான். சங்கர்லாலைக் கொல்லுவதில் தவறு செய்யக் கூடாது. ஏதாவது தவறு நேர்ந்தால் உனக்குப் பணம் கிடைக்காது என்பது மட்டுமல்ல. இந்த உலகத்தில் நீ ஏன் பிறந்தாய் என்று துன்பம் கொள்ளும்படி உன் நிலை ஆகி விடும்!”

“புரிகிறது.”

“நீ போகலாம். நாளை இரவு விமான நிலையத்துக்கு மற்றொரு வோல்கா காரில் போக முன்னேற்பாடுடன் இரு. வோல்கா கார் உனக்கு நேரப்படி கிடைக்க நான் ஏற்பாடு செய்கிறேன்”

“ஆகட்டும்” என்றான் அந்தோணி.

அவன் புறப்பட்ட போது, கார்க் கூடத்தில் இருந்த கார்களில் ஒன்றை எடுத்துப் போகும்படி சொன்னான் ஆல்பர்ட்.

அந்தோணி, சிறிய கார் ஒன்றை எடுத்துக் கொண்டு பணப்பெட்டியுடன் புறப்பட்டான்.

‘சங்கர்லாலைக் கொல்லுவதற்கு ஓர் ஒத்திகையா? அதற்கு இவ்வளவு செலவா?’ என்பதை எண்ணியபோது, அந்தோணிக்கு வேடிக்கையாக இருந்தது. வியப்பாக இருந்தது. அச்சமாக இருந்தது!

அத்தியாயம்-3

மீண்டும் கார்க் கூடத்தின் கதவுகள் மூடிக் கொள்ளும் வரையில் ஆல்பர்ட்டும் காரோட்டியும் பேசாமல் நின்றார்கள். கதவை மூடிவிட்டு வந்த வழியில் காரோட்டிக்கு எதிரில் வந்து ஆல்பர்ட் நின்றான்.

ஆல்பர்ட், காரோட்டியையும் பணியாளையும் மாறி மாறிப்பார்த்தான். பிறகு காரோட்டியைப் பார்த்து “இந்தப் பிணத்தைக் கடலில் போட வேண்டும். நீங்கள் இருவரும் உடனே அந்த வேலையைச் செய்யுங்கள்” என்றான்.

“ஆகட்டும்” என்றான் காரோட்டி.

ஆல்பர்ட். மேலும் அங்கே நிற்காமல் கார்க்கூடத்தின் உள்பக்கமாக இருந்த வழியாக லிப்ட் இருக்குமிடத்தை அடைந்தான். 51 அடுக்குக் கொண்ட கட்டடம் அது. அந்தத் தெருவில் அதுதான் பெரியது. லிப்ட் இயங்க ஒரு பொத்தானை அமுக்கினான். லிப்ட் கொஞ்ச நேரத்தில் வந்து இறங்கியது. 41ஆவது மாடிக்குப் போகப் பொத்தானை அமுக்கினான். அமுக்கி விட்டுச் சிந்தனையுடன் லிப்டில் நின்றான். லிப்ட் மேலே எழும்பியது.

ஆல்பர்ட் சென்றதும், காரோட்டி பணியாளைப் பார்த்தான். “டோனி, ஒரு பெரிய கூடையைக் கொண்டு வா. யார் கண்ணிலும் படாமல் பிணத்தைக் கொண்டு போய்க் கடலில் போட வேண்டும்” என்று சொன்னான்.

“கொஞ்சம் இரு, வருகிறேன்” என்று சொல்லிவிட்டு டோனி உள்ளே சென்றான். கொஞ்சம் உயரமான கூடை ஒன்றைக் கொண்டு வந்தான். இருவருமாகச் சேர்ந்து பிணத்தைக் கூடைக்குள் போட்டார்கள். பிறகு கூடையை மூடினார்கள். மூடிவிட்டு, அதைத் தூக்கினார்கள். தூக்கிக் கொண்டு போய் ஒரு காரில் வைத்தார்கள்.

காரோட்டி இப்போது அந்தப் பழைய காரை ஓட்டிச் சென்றான். அவனுடன் டோனியும் சென்றான். கார் விரைந்து சென்றது.

காரோட்டி, டோனியிடம் சொன்னான்: “திரும்பி வந்ததும் முதலில் அந்த ரோல்ஸ்ராய்ஸ் காரைச் சுத்தம் செய். இரத்தக்கறை கொஞ்சங்கூடத் தெரியக்கூடாது.

“ஆகட்டும்.”

“ரோல்ஸ்ராய்ஸ் காரில் வந்த போலிச் சங்கர்லாலை அந்தோணி சுட்டபோது, அதைப் பக்கத்தில் போய்க் கொண்டிருந்த சில கார்களிலிருந்த சிலர் பார்த்து விடடார்கள். அவர்களில் எவராவது காரின் எண்ணைக் குறித்துப் போலீசாரிடம் தெரிவிப்பார்களோ என்று எனக்கு ஐயமாக இருக்கிறது.”

“துன்பம் வேண்டாம். காரின் நம்பர் பிளேட்டுகளை உடனே மாற்றி விடுகிறேன். நம் கார்க்கூடத்திலே இருப்பவற்றில் பெரும்பாலானவை திருட்டுப் போன, திருடப்பட்ட கார்கள்தாம். என்றாலும், போலீசார் இதுவரையில் எதுவும் கண்டுபிடிக்கவில்லை!”

“ஆல்பர்ட்டின் திறமைதான் இதற்குக் காரணம். காரின் எண்களை மாற்றி, கார்களுக்கான போலி சர்டிபிகேட்டுகளையும் உடனுக்கு உடன் தயார் செய்து விடுகிறார்!”

“சங்கர்லாலைப் போல் முகமூடி அணிந்து வந்த இந்த மனிதன் யார்?”

காரோட்டி காரை ஓட்டியபடி பேசினான்: “உண்மையில் இவன் யார் என்று கேள்விப்பட்டால் நீ வியப்படைவாய். ஜங்கிள்ஜன் என்பது இவன் பெயர். சான்றுகள் இல்லாததால் இவனைத் தூக்குப் போடாமல், ஆயுள் தண்டனை விதித்துச் சிறையில் போட்டிருந்தார்கள். நேற்றுத்தான் தப்பி வந்தான். இந்த மாதிரி ஒத்திகையில் பங்கு கொண்டால் இவனுக்குப் பெரும் பணம் கொடுப்பதாக ஆல்பர்ட் ஆசை காட்டினார். அவனும் ஒப்புக் கொண்டான். இறுதியில்…”

“விளங்குகிறது. அந்தோணி இவனையே சுட்டுவிட்டான் என்பதால் சங்கர்லாலை மிக எளிதில் அவன் சுட்டுவிடுவான் என்பது தெளிவாகிறது! இல்லையா?”

“மெய்தான். பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.”

கார் ஓடியது. கடற்கரை ஓரமாக ஓடியது. எங்கே பார்த்தாலும் பட்டப் பகலைப் போல் மிகப் பளிச்சென்று எரியும் விளக்குகள். துறைமுகத்தில் வேலை செய்யும் கூலியாள்கள் சிலர் திரும்பிக் கொண்டிருந்தார்கள். சிலர் வேலைக்குப் போய்க் கொண்டிருந்தார்கள்.

காரோட்டி, காரைக் கடல் ஓரமாகவே கொஞ்சத் தொலைவு செலுத்தினான். ஒரு திருப்பத்தை அடைந்ததும் மனித அரவம் இல்லாத இடமாக அது காணப்பட்டது. காரை அவன் ஓர் ஓரமாக நிறுத்தினான்.

இருவரும் விரைந்தார்கள். இறங்கினார்கள். கூடையைத் தூக்கிக் கொண்டு போய்க் கடலில் போட்டார்கள். போட்டுவிட்டுத் திரும்பினார்கள்.

கொஞ்ச நேரத்திற்குள் கூடை கடலுக்குள்ளே மூழ்கியது மறைந்து விட்டது!

இப்போது இருவரும் காரை நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்தார்கள்.

திடீரென்று –

ஒரு போலீஸ் கார் வந்தது. நின்றது. அதிலிருந்து இரண்டு கான்ஸ்டபிள்கள் இறங்கினார்கள். அவர்கள் இருவரும் காரோட்டியையும் டோனியையும் பார்த்தார்கள். ஐயத்துடன் பார்த்தார்கள். உடனே அவர்களிடம் ஏதோ கேட்க வேண்டும் என்று எண்ணி அவர்களைப் பார்த்துக் கூப்பிட்டார்கள்.

காரோட்டியும் டோனியும் விரைந்து ஓடினார்கள். ஓடிப் போய்க் காரில் உட்கார்ந்தார்கள். காரோட்டி விரைந்து காரைக் கிளப்பினான். அது பறந்தது! காற்றாய்ப் பறந்தது!

போலீஸ்காரர்கள் இருவரும் ஓடிப் போய்த் தங்கள் காரில் ஏறி உட்கார்ந்தார்கள். உட்கார்ந்து முன்னால் சென்ற காரைத் துரத்தினார்கள். ஆனால் ஆல்பர்ட் கூட்டத்தைச் சேர்ந்த காரோட்டி, .கார் ஓட்டுவதில் திறமை பெற்றிருந்ததால் அந்தக் கார் சந்து பொந்துகளிலெல்லாம் புகுந்து புறப்பட்டு எங்கேயோ போய் மறைந்துவிட்டது!

போலீஸ்காரர்களால் அவர்களைப் பிடிக்க முடியவில்லை!

– தொடரும்…

– நியூயார்க்கில் சங்கர்லால் (நாவல்), முதல் பதிப்பு: 1983, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *