தோட்டத்து படுக்கை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: May 3, 2023
பார்வையிட்டோர்: 7,933 
 
 

முதுகில் ஏதோ உறுத்த சட்டென கண் விழித்த பாண்டியனுக்கு ஒன்றும் புரியவில்லை. தான் இப்பொழுது எங்கிருக்கிறோம் என்ற தடுமாற்றம் ? மெல்ல உடலை திருப்பினார். பின்புறம் சுள்..சுள் என்ற குத்தல் ! என்ன இது? விலுக்கென்று எழுந்து உட்கார்ந்தவர் அதிர்ந்து போய் விட்டார். நான்..நான்..எப்படி? இந்த அத்துவான காட்டுக்குள் ? ஐயோ அதுவும் மண் தரையில் படுத்துக்கொண்டிருக்கிறேன் ? கடவுளே இரவு என் அறையில் விலையுயர்ந்த மெத்தையில்தான் படுத்திருந்தேன் !. அவ்வளவுதான் விலுக்கென எழுந்து நின்று சுற்றும் முற்றும் பார்த்தவர் இது எந்த இடம் ? தன நினைவுக்கு கொண்டு வர முயன்றார்.

நல்ல இருளாய் இருந்தாலும் சுற்றிலும் நின்ற மரங்களை பார்க்கையில் அவருக்கு நன்கு பழகிய இடமாகத்தான் தெரிந்தது. அப்படியானால் இந்த இடம் தனக்குள் முணங்கியவர், ஓ நம் பங்களா பின்புறம் உள்ள தோட்டத்தில் வந்து படுத்திருக்கிறோம். எப்படி இங்கு வந்தோம்? நாமே இங்கு வந்தோமா? இல்லை யாராவது கொண்டு வந்து போட்டார்களா? பயத்தில் உடல் நடுங்க சுற்றும் முற்றும் பார்த்தவர் அந்த இருளை கண்டு திகிலடைந்து விறு விறுவென தன் பங்களாவை நோக்கி வேகமாக நடக்க (ஓட) ஆரம்பித்தார்.

பின்புறமாக இருந்த கதவை பார்த்தவருக்கு மேலும் அதிர்ச்சி ! கடவுளே பூட்டியிருக்கிறதே? அப்படியானால் நான் எப்படி இங்கு வந்தேன். இது என்ன அதிசயமாய் இருக்கிறது, மனதுக்குள் அரற்றியபடி வலது புறமாக சுற்றிக்கொண்டு முன் பக்கம் வந்தார். சற்று தொலைவில் காம்பவுண்ட் கேட்டில் வாட்ச்மேன் பீடி குடித்தபடி உட்கார்ந்திருந்தது, அவன் புகைத்த பீடியின் சிவப்பு நுனியின் மூலம் தெரிந்து கொண்டார். அப்படியானால், நான் பின்புறம் வந்தது அவனுக்கு தெரியவில்லை. அந்த இருளிலேயே முன் கதவருகே வந்து தள்ளிப்பார்த்தார். கதவு உள்புறம் தாழிடப்பட்டிருந்தது. பின்புறமும் பூட்டியிருக்க, முன்புறமும் தாளிடப்பட்டிருக்க உள்ளே படுத்திருந்த நான் மட்டும் வெளியே வந்து படுத்திருக்கிறேன். கடவுளே இது யார் செய்த வேலை? கதவை மெல்ல தட்டினார். உள்ளிருந்து எந்த பதிலும் வரவில்லை. பக்கத்திலிருந்த காலிங்க் பெல்லை அழுத்தினார். பத்து நிமிடங்கள் எந்த அசைவுமில்லை. பட்டென்று உள்ளிருந்து மின் வெளிச்சம் பரவ கதவு திறக்கப்பட்டது. வேலைக்காரன் பாலு கொட்டாவி விட்டபடி பார்த்தவன் “முதலாளி” வெளியே நின்று கொண்டிருப்பதை பார்த்து கொட்டாவிக்காக திறந்திருந்த வாயை அப்படியே அதிர்ச்சியில் மூடிக்கொண்டு முதலாளி, நீங்களா? நீங்க எப்ப வெளியே போனீங்க? அவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் சட்டென உள்ளே வந்தவர், சரி சரி பேசாம போய் படு வேகமாக மாடி ஏறி தன் அறைக்குள் நுழைந்து கொண்டார்.

உள்ளிருந்த குளியலறையில் போய் அப்படியே ஷவரை திறந்து குளித்தார். அவர் மனதுக்குள் குழப்ப ரேகைகள். எப்படி? எப்படி? இரவு இரண்டு லார்ஜ் அடித்து விட்டு தன் படுக்கையில் படுக்கும்போது இரவு பத்து மணி இருக்கலாம். இப்பொழுது மணி என்ன? குளியலறையை விட்டு வெளியே வந்தவர் உடலை துடைத்துக்கொண்டு மணி பார்த்தார். கடிகாரம் மணி மூன்றைக் காட்டியது. மேலும் யோசிக்க அவகாசம் தராமல், ஒட்டியிருந்த அலமாரியை திறந்து அடுக்கி வைத்திருந்த பாட்டிலில் இருந்து ஒன்றை எடுத்தவர் மூடியை திறந்து அப்படியே வாயில் ஊற்றிக்கொண்டார். ஐந்து நிமிடத்தில் அப்படியே கட்டிலில் சாய்ந்தார்.

காலை விழித்தவர் சுவற்றில் இருந்த கடிகாரத்தை பார்க்க எட்டு மணியை காட்டியது. “மை காட்” எட்டு மணி வரைக்குமா தூங்கியிருக்கிறோம். மட மடவென எழுந்து அறைக்கதவை திறந்து, பாலு, பாலு கூச்சலிட்டார். ஐயா கீழிலிருந்து சத்தம் வர இன்னும் பத்து நிமிசத்துல டிபனை ரெடி பண்ணி வை, நான் வந்துடறேன் அதற்கு பின் அவரது வேகம் பத்து நிமிடத்தில் டைனிங் டேபிள் முன்னால் உட்கார்ந்திருந்தார்..

சாப்பிட்டு வெளியே வர கார் தயாராய் இருந்தது, ஏறினார். தன்னுடைய கம்பெனியை நோக்கி கார் செல்ல ஆரம்பித்தது.

அடுத்து அடுத்து என்ற அலுவல்கள் காரணமாய் பரபரப்பாய் இருந்தவர் பதினோரு மணி வாக்கில் “அப்பாடி” என்று தனது நாற்காலியில் உட்கார்ந்து தலையை சாய்த்தார். கதவை நாசுக்காய் தட்டும் சத்தம் கேட்டதும் “யெஸ் கமின்” என்றார். அழகிய பெண் அவரது காரியதரிசி உடலை மெல்ல உள்ளே நுழைத்து சார் உங்க நண்பர் மோகனசுந்தரம் வந்திருக்கிறார். வரச்சொல் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டார்..

உள்ளே வந்த மோகனசுந்தரத்திற்கு வயது நாற்பதுக்குள் இருக்கலாம், உடலை கட்டுமஸ்தாய் வைத்திருப்பவர் என்று புரிந்தது. பார்த்தவுடனே தெரிந்து கொள்ளலாம். காவல்துறையை சார்ந்தவர் என்று. சாரி பாண்டி பிசியா இருந்தியா? உன்னை தொந்தரவு பண்ணிட்டேன். இல்லை இப்பத்தான் வேலை எல்லாம் முடிஞ்சு ரிலாக்ஸாய் இருந்தேன். அப்புறம் ஏதாவது துப்பு கிடைச்சுதா? ப்ச்..உதட்டை பிதுக்கி காட்டினார். முயற்சி பண்ணிகிட்டே இருக்கேன். உனக்கு ஏதாவது தகவல் கிடைச்சுதா? ஒண்ணுமில்லை, சரி போகுது விடுன்னு மனசை பிரீயாக்கிட்டேன். இருந்தாலும் அப்ப அப்ப நான் அவளை கல்யாணம் பண்ணுனது தப்போன்னு தோணுது. தள்ளியே வச்சிருந்துட்டு போயிருக்கலாம். ஆனா அவ என்னோட சொத்தை குறி வச்சு கல்யாணம் பண்ணியே ஆகணும்னு அடம் புடிச்சா.

அவளுக்கு “பிரண்ட்சுன்ன்னு ” சொன்ன மூணு பேருகிட்டேயும் நல்லா விசாரிச்சுட்டேன், உன் கிட்டே கோபிச்சுகிட்டு போன அன்னையிலயிருந்து அவ அவங்க கூட தொடர்புலயே இல்லையாமே !

சரி விடு என்ன சாப்பிடறே? ஹாட், இல்லை கூல்? மோகனசுந்தரம் கூர்மையாய் பாண்டியனை பார்த்தார். அந்த பொண்ணை அவசர அவசரமா கல்யாணம் பண்ணி ஒரு வருசத்துலயே அவ கோபிச்சுகிட்டு போயிட்டா, ஆனா அலட்டிக்காம இருக்கானே?

இல்லை ஒண்ணும் வேண்டாம், சரி நான் கிளம்பறேன், ஏதாவது விசேசம்னா கூப்பிடறேன். விடைபெற எழுந்தார். அவர் போன பின்னால் மோகனசுந்தரம் ஏன் சுரத்தில்லாம போறான், என்னையவே குறு குறுன்னு பார்த்துட்டிருந்தானே. நான் பேசாம இருந்திருக்கலாம், பொண்டாட்டியா இருந்தவ ஓடிப்போயிட்டா, அவளை கண்டு பிடிச்சு தண்டிக்கணும்னு நினைச்சு போலீஸ் ஆபிசர் இவன் கிட்டே உதவி கேட்டிருக்க கூடாது. இப்ப இவன் என்னயவே சந்தேகமா பாக்க ஆரம்பிச்சுட்டான். மனதுக்குள் அரற்றிக்கொண்டவருக்கு திடீரென தான் தோட்டத்தில் படுத்து எழுந்து வந்தது ஞாபகம் வந்தது. அட கடவுளே இதை மறந்துட்டமே ! உண்மையிலேயே நாம் தோட்டத்துல படுத்து கிடந்தமா? இல்லை அது வெறும் கனவா? இதை எப்படி நிச்சயம் பண்ணிக்கறது? பாலு கிட்டே கேட்காலமுன்னா எப்படி கேட்கறது? அதுவரை இருந்த மன்நிலை மாறி குழப்பமான மன நிலைக்கு சென்று விட்டார். மீண்டும் யாரோ அறைக்கதவை தட்டவும் சட்டென பழைய நிலைக்கு வந்தார்.

அன்று இரவும் நேற்றைய இரவு அனுபவத்தையே பாண்டியன் பெற்றார். இப்படியே தொடர்ந்து ஒரு வாரமாய்  விழிப்பு வர மண் தரையில் படுத்து கிடப்பதும், பின் எழுந்து அறைக்குள் வருவதும், இதை நினைத்து பார்த்து மன நிலை குழம்பி பைத்தியம் பிடிப்பது போனற உணர்வை அடைவதும்,. அதை விட இந்த இரண்டு நாட்களாக தான் மேல் சட்டையில்லாமல் இருந்தது அவரை நிலைகுலைய வைத்து விட்டது. தூங்க போகுமுன் படுக்கையில் படுக்கும்போது கூட கதவை இறுக்கி தாழ்போட்டு பூட்டு ஒன்றையும் பூட்டிவிட்டு படுத்தது ஞாபகம் வந்தது. அப்படி இருந்தும் இப்படி தோட்டத்து மண் தரையில் படுத்து சட்டையில்லாமல் கிடந்தது அவரது மன நிலையை ஆட்டம் காண வைத்தது.

காலை விழித்து எழுந்தவர் பாலுவை கூப்பிட்டு ஐயா இன்னைக்கு ஆபிசுக்கு வர மாட்டார்னு சொல்லிடு, அவன் அங்கிருந்து அகன்றதும் மோகன சுந்தரத்துக்கு போன் செய்தார்.

இவர் சொல்வதை உற்று கேட்டுக்கொண்டிருந்தார் மோகனசுந்தரம், முடிவில் இன்னைக்கு ராத்திரி நான் உன் கூட இருக்கேன். அதுக்கு முன்னாடி உன் வீட்டை சுத்தி பார்த்துடலாம், அந்த தோட்டத்தையும் பார்த்துடலாம். எழுந்தவர் பாண்டியனின் அறையை சுற்றிலும் நோட்டம் விட்டார். அந்த அறை முழுவதையும் சுற்றி சுற்றி வந்தார். அவரது அறையே அவ்வாவு அகலமாய் இருந்தது. சுற்றிலும் பல வண்ண ஓவியங்கள் மாட்டப்பட்டு, தளம் முழுவதும் நீல நிற கார்பெட் போடப்பட்டு இருந்தது. பாண்டியனை பார்த்து கேட்டார், உனக்கு நீல கலர்னா பிடிக்குமா? இல்லைப்பா, அதுதான் அவ இருக்கற போது நீல கலர்தான் வேணும்னு இந்த பாலு பயலை வச்சு ஒருக்கா மாத்துவாங்க.

வீட்டை சுற்றிப்பார்த்த மோகன சுந்தரம் வியந்து போனார். பழங்காலத்திய முறையில் பிரமாண்டமாய் கட்டப்பட்டிருந்தது. சுற்றி வர மரவேலைப்பாடுகள். எல்லாம் உயர்தர தேக்கு மரத்தில் செய்யப்பட்டிருந்தது. பாண்டியன் குடும்பம் தலைமுறை பணக்கார குடும்பம் என்பது மோகன சுந்தரத்திற்கு தெரியும். இப்பொழுது இவன் மட்டும் இங்கிருப்பதால் இதற்கு சோபை இழந்து விட்டது. சகோதரனும், சகோதரியும், வெளி நாட்டில் குடும்பத்துடன் தங்கி விட்டனர். இவனுக்கும் திருமணம் ஆகி அதுவும் இடையில் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதற்கு பின் இவனுக்கு ஒரு பெண் தொடர்பு ஏற்பட்டு இரண்டு வருடங்கள் மறைமுகமாய் இருந்து போன வருடத்தில்தான் திருமணம் செய்தான். அதுவும் பத்து நாளாய் காணாமல் போய் விட்டாள். அதை கண்டு பிடிக்க அணுகியவன் இப்பொழுது இப்படி ஒரு பிரச்சினையை சொல்லுகிறான். பார்ப்போம். வீட்டுக்குள் ஒவ்வொரு இடமாய் பார்த்து விட்டு பாண்டியன் தோட்டத்தில் படுத்து கிடந்த இடத்தையும் சோதனை செய்தார்.

அன்று இரவு மோகனசுந்தரம் பாண்டியனின் அறையில் இருந்ததால் இரண்டு பெக் அதிகமாக போட்டு விட்டே படுத்தார்.. இரவு நிம்மதியாய் தூங்கினார் பாண்டியன். காலை எழுந்ததும், மோகன சுந்தரம் சரி நீ கிளம்பி போ. நான் பத்து மணி வரை இங்கிருந்து விட்டு செல்கிறேன். பாண்டியன் பாலுவை கூப்பிட்டு சார் பத்து மணி வரைக்கும் இங்கிருப்பார். அவர் கேக்கறதை கொடு சொல்லி விட்டு விடை பெற்றார்.

முன் அறைக்கு வந்து உட்கார்ந்த மோகனசுந்தரம் பாலுவை அழைத்து நீ எத்தனை நாளாக இங்கே வேலை செய்யறே? ஐயா பத்து வருசமா வேலை செஞ்சுகிட்டு இருக்கேனுங்க, இங்க மத்த வேலைக்கெல்லாம்? துவைக்கறது, சமைக்கறது இதுக்கெல்லாம் காலையில் ஆளுக வந்துட்டு சாயங்காலம் போயிடுவாங்க. நான் மட்டும்தான் முழு நேரமும் இங்கிருப்பேனுங்க.. சரி இந்த வீட்டுல ஒரு அம்மா இருந்தாங்கில்ல, அவங்களை பத்தி. ஐயா சும்மா சொல்ல கூடாது, அவங்களும் ரொம்ப நல்லவங்கதான், ஐயாவுக்கும், அம்மாவுக்கும் சில நேரங்கல்ல ஒத்துக்காது சண்டை போட்டுக்குவாங்க, அப்புறமா சமாதானமாயிடுன்வாங்க. அன்னைக்கும் அப்படித்தான் சண்டை போட்டுகிட்டாங்க, அம்மா கோபிச்சுகிட்டு கைப்பை எடுத்து கிட்டு வெளியே போனாங்க, நான் பின்னாடியே போய் வாங்கம்மா வாங்கமா அப்படீன்னு கெஞ்சினேன், நான் இனிமேல் இந்த வீட்டுக்கே வர்மாட்டேன்னு சொல்லிட்டு காம்பவுண்ட் தாண்டி ஒரு டாக்சி பிடிச்சு போயிட்டாங்க.

சரி நான் கிளம்பறேன் மோகன சுந்தரம் பங்களாவை விட்டு வெளியே வந்தவர், காமப்வுண்ட் கேட்டை தாண்டும் வரை வந்து அவரை வழி அனுப்பி வைத்தான் பாலு. அதன் பின் வேகமாய் உள்ளே வந்தான். மோகனசுந்தரம் திரும்பி வந்தது தெரியாமல்

மாலை ஐந்து மணிக்கு மேல் இருக்கும். மோகனசுந்தரம் பாண்டியனை பார்க்க உள்ளே வந்தார். ஆச்சர்யமாய் இருந்தது. பாண்டியனுக்கு, வா மோகா, என்ன திடீருன்னு வந்திருக்கே?.

உன்னை கைது பண்ணலாமுன்னு யோசிச்சுட்டு இருக்கேன். அதை சொல்லிட்டு போகலாமுன்னு வந்திருக்கேன்.

என்ன சொல்றே ? அதிர்ச்சியாய் நின்று விட்டார், பாண்டியன். என்னைய கைது பண்ண போறியா? எதுக்கு?

உன் பொண்டாட்டிய கொன்னு உன் பங்களா தோட்டத்துல புதைச்சு வச்சிருக்கறதுக்கு.

உனக்கு என்ன பைத்தியாமா? பொண்டாட்டிய கொலை பண்னற அளவுக்கு நான் அவ்வளவு கேவலமானவனும், மன தைரியம் உள்ளவனும் இல்லை. அப்படி இருந்தா நான் ஏன் உன்னை விசாரிக்க சொல்லணும்?

உன் பேர்ல நல்ல அபிப்ராயம் வர்றதுக்குத்தான் வேற என்ன? பாண்டியனுக்கு குழப்பமாக இருந்தது, இவன் விளையாடுகிறானா? சரி நான் அவளை கொலை பண்ணிட்டேன்னு எப்படி உனக்கு தெரியும்.

அதை நிருபிச்சு காட்டறேன் இன்னைக்கு இராத்திரி. சொல்லிவிட்டு விர்ரென சென்று விட்டார்.

இரவு அறையில் குறுக்கும் நெடுக்குமாய் அலைந்து கொண்டிருந்தார் பாண்டியன். மோகனுக்கு என்ன பைத்தியமா? என் குடும்பத்து பெருமை தெரியாதவனா அவன். என்னைய பத்தி சின்ன வயசுல இருந்து தெரிஞ்சவன்னுதான் தனிப்பட்டு விசாரிக்க இவனை கூட்டிகிட்டு வந்தேன். இப்ப என்னையே “கொலைகாரன்” அப்படீங்கறான். மனசு ஆறாமல் பாட்டிலை தேடி சென்றார்.

சட்டென விழிப்பு வர அவரது முதுகில் முட்கள் குத்திக்கொண்டிருப்பதை உணர்ந்தவர் திடுக்கிட்டு எழ வழக்கம்போல் தான் மண் தரையில் கிடப்பதை பார்த்தார்.சட்டென எழப்போனவரை ஸ்..அப்படியே படுத்திரு..விழிச்ச மாதிரி காண்பிக்காதே..அருகில் கிசு கிசு குரல்.

அது மோகன சுந்தரத்தின் குரல்தான்..அப்படியே கண்ணை மூடி கிடந்தார். அரை மணி நேரமானது. தட்…தட்..யாரோ நடந்து வரும் ஓசை. வந்த உருவம் அவர் மூக்கில் கை வைத்து பார்ப்பது தெரிந்தது. கொஞ்சம் டோஸ் அதிகமாக கொடுத்துட்டான் போலிருக்கு. குரல்…ஆ…இது பழகிய குரலல்லவா.  இப்பொழுது அந்த உருவம் மெல்ல பங்களாவை நோக்கி நடப்பதை இவர் மெல்ல கண் திறந்து பார்த்தார். ஸ்..அப்படியே இரு.. மீண்டும் கிசு கிசு குரல்..மோகன சுந்தரம்தான். ஓ அருகில் எங்கோ ஒளிந்திருக்கிறான். சரி பார்க்கலாம். அப்படியே கிடந்தார்.

அரை மணி நேரத்தில் மீண்டும் தட்..தட்..என்ற சத்தம் ஆனால் இருவர் நடந்து வருவது தரை அதிர்வில் உணர முடிந்தது. ஏன் பாலு தூக்க மருந்தை அதிகமா கொடுத்திட்டியா? இல்லையேம்மா அளவாத்தான் கொடுத்தேன். சரி அப்படியே தூக்கு கொண்டு போய் பெட்டுல போட்டுடலாம்.

பாண்டியனை அள்ளி தோளில் போட்டு கொண்ட பாலு பங்களாவின் கீழ்ப்புறம் சுவரோடு ஒட்டி இருந்த கதவை திறந்து படி வழியாக ஏறுவது இவருக்கு உணர்த்தியது. இப்பொழுது இவர் உடல் தனது படுக்கையை ஸ்பரித்தது.

சரி நீ போ..நான் என் இடத்துக்கு போயிடறேன்.. அவரவர்கள் பிரிந்து சென்றதை உணர்ந்தவர் மெல்ல கண்ணை திறந்து பார்த்தார். ஆஹா..என்ன நடக்குது இங்கே? நான் நம்பிக்கையாய் நினைத்திருக்கும் பாலுவா இப்படி? சட்டென அறைக்குள் ஒரு உருவம் பிரவேசிக்க பயத்தில் கூச்சலிட போனவரை சட்டென வாயை பொத்தி ஸ்..சத்தம் போடாம இரு..மோகன சுந்தரத்தின் குரல்.. நீ எப்படி பூட்டுன அறைக்குள்ளே ?  நீ மட்டும் எப்படி வந்தியாம் அதே மாதிரி தான் நானும் வந்தேன். புன்னகையுடன் சொன்ன மோகன சுந்தரம், பாண்டியனை அழைத்து ஒரு மூலையில் நீல கலர் கார்பெட் விரிக்கப்பட்ட இடத்தை விலக்கி காண்பிக்க அது படியாக கீழே இறங்கி அவர் தோட்டத்துக்கு செல்லும் பாதையை காண்பித்தது.

மறு நாள் பங்களாவின் நிலவறையில் பதுங்கியிருந்த பாண்டியனின் மனைவியையும், பாலுவையும் பிடித்து விசாரித்தனர். பாண்டியனை இப்படி செய்து நாளடைவில் புத்தி பேதலிப்பது போல் சமூகத்திற்கு காட்டி விட்டால் சொத்துக்கள் அனைத்தையும் கவர்ந்து கொள்ள வசதியாய் இருக்கும் என்று இருவரும் திட்டம் தீட்டியுள்ளனர்.  

மோகன சுந்தரம் பாண்டியன் வேண்டிக்கொண்டதால் (தங்களது குடும்ப பெயர் கெட்டு விடும் என்று சொன்னதால்) அவர்களிடம் தாங்கள் செய்த குற்றங்களை ஒத்துக்கொண்டு கையெழுத்தும் பெற்றுக்கொண்டு (பாண்டியன் சொன்னபடி) கொஞ்சம் தொகையும் கொடுத்து வக்கீலையும் வைத்து மண விலக்கில் கையெழுத்தும் பெற்று, அவர்களை அனுப்பி விட்டனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *