சுழலும் வீடுகள்

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: February 14, 2016
பார்வையிட்டோர்: 19,383 
 
 

கத்தியால் குத்தி பெண் படுகொலை / கணவனை கொல்ல தீட்டம் தீட்டிய பெண் கள்ள காதலர்களால் பலியான பயங்கரம்

என்ற தலைப்பிடப்பட்டு செய்தி ஒன்று பத்திரிக்கைகளில் வெளியானது

சென்னை கொசப்பாக்கம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருப்பவர் விநாயக மூர்த்தி. (வயது 42) இவரது மனைவி வசந்தா (வயது 28). விநாயக மூர்த்தி நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று நடந்த விபரம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது – விநாயக மூர்த்தி மதுரையைச் சேர்ந்தவர். அவரது மனைவி வசந்தா காரைக்குடி அருகே ஒரு சிற்றூரைச் சேர்ந்தவர். இரண்டு பேரும் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். அப்போது அவர்கள் இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு சிறிது நாட்கள் மதுரையில் இருவரும் குடித்தனம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு மங்கையர்க்கரசி என்ற 16 வயதில் பெண் குழந்தை உள்ளார். மதுரையில் வசித்து வந்த விநாயகமூர்த்தி, வசந்தா தம்பதியினருக்கு ஏற்பட்ட காதல் திருமண விரோதம் தொடர்பாக அங்கு அவர்களுக்கு உறவினர்கள் மத்தியில் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். எனவே இரண்டு பேரும் அங்கிருந்து சில வருடங்களுக்கு முன்பு சென்னை அருகே உள்ள கொசப்பாக்கத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து வசித்து வந்தனர். இந்நிலையில் அருகில் உள்ள பள்ளியில் மங்கையர்க்கரசி 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் அவரை அவரது தந்தை விநாயகமூர்த்தி தனது மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று விட்டு மாலை திரும்ப அழைத்து வருவது வழக்கம். விநாயக மூர்த்தி வீட்டிலிருந்து சிறிது தொலைவில் உள்ள காஞ்சிரங்குப்பத்தில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். நண்பகலில் உணவுக்கு வீடு திரும்பும் போது மனைவிக்கு போன் செய்து விட்டு வருவது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று மனைவிக்கு போன் செய்து உள்ளார். தொடர்ந்து பல முறை மணி ஒலித்தும் வசந்தா பேசவில்லை. எனவே மாலை தனது மகள் மங்கையர்க்கரசியை வழக்கம் போல் மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றார். பூட்டியிருந்த வீடு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கட்டிலில் வசந்தா கழுத்தறுக்கப்பட்டு பிணமாக்க் கிடப்பது தெரியவந்த்து. வீடு முழுவதும் துணிகள் இறைந்து கிடந்தன. அவரது கழுத்தில் இருந்த தாலி செயின் மட்டும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த சுமார் அம்பதினாயிரம் பணம் மற்றும் நகைகள் அப்படியே இருந்தன. போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். போலீசார் விசாரணையில் தனது கள்ளக் காதலர்களை கொண்டு கணவரை கொல்ல முயன்ற சம்பவத்தில் பணத்திற்கு ஆசைப்பட்டு அவர்கள் வசந்தாவை கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவரைத் தேடி பல ஆண் நண்பர்கள் அடிக்கடி வீட்டிற்கு வருவதும் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டிற்கு அருகிலேயே வேறொரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி நடைபெற்று வருகிறது, அதற்கு இந்த வீட்டின் பால்கனியின் வழியாகவே சென்று விட முடியும் என்பதால் வேறு காரணங்களுக்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்,

இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முடிந்த செய்தியின் இறுதி வரிகள் வழக்கமான நாளேடுகளின் சுவாரசியத்திற்கு ஏற்ப இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் இதனால் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் அச்சத்தில் உறைந்து போயிள்ளதாக தெரிவித்தனர் என்றும் சேர்க்கப்பட்டிருந்த்து.

மேற்கண்ட சம்பவத்தை வைத்து ஒரு நான்கு தினங்களுக்கு அனைத்து நாளேடுகளும் தங்கள் கற்பனை திறனுக்கு ஏற்ப கண், காது, மூக்கு வைத்து வரைந்து தள்ளிக் கொண்டிருந்தன. ஆனால் கடைசி வரை கொலையாளிகள் பிடிபட்டனரா? அவர்கள் ‘உண்மையாகவே‘ எதற்காக வசந்தாவை கொலை செய்தனர் என்ற விபரம் எதுவும் நாளேட்டை தொடர்ந்து படிக்கும் வாசகர்களுக்கும் தெரியாது, அதனை எழுதுவோருக்கும் தெரியாது. அதற்குள் மழை நாட்களும், அன்னா ஹசாரே போன்றோரின் உண்ணாவிரதங்களும் வந்து பக்கங்களை அடைத்துக் கொண்டதில் அனைவரும் அந்த சம்பவத்தை ஒரு சாதாரண செய்தியென மறந்து போயிருந்தனர். இதனை இவ்வாறு மறக்கடிக்கச் செய்ய வேண்டும் என்பதைப் போல இதுபோன்று தினமும் செய்திகளை நாளேடுகள் எழுதித் தள்ளி வருகின்றன. சரி சரி இந்த கதை இருக்கட்டும். இந்த செய்திக்கும் இந்த கதைக்கும் என்ன தொடர்பு? சற்று பொறுங்கள் விசயத்திற்கு வருவோம்.

நகரத்திற்கு புதிதாக வந்து சேர்ந்திருந்தனர் வினோதினியும், குமரனும். அவனுக்கு புதிதாக பணியிட மாற்றம் ஏற்பட்டு இருவரும் இங்கு புதிதாக குடியேறியிருந்தனர். ஆனால் உடனடியாக வேலையில் சேர வேண்டும் என்பதால் அவசர அவசரமாக வினோதியின் பள்ளித் தோழியின் ஒருவர் மூலம் போரூர் அருகே குன்றத்தூர் செல்லும் ஒரு இடத்தில் ஒரு ஒண்டு குடித்தனத்தில் இடம் கிடைத்தது. வாடகையாக சுளையாக ஐயாயிரம் தரவேண்டும், பராமரிப்பு செலவு நானூறு, தண்ணீர் இருநூறு, மின்கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ஐந்து (அது என்ன காந்தி கணக்கா?) அது போக கூடுதலாக உறவினர்கள் யாரும் வந்து விட்டால் தலைக்கு தண்ணீருக்கு நூறு என அந்த வீட்டின் மதிப்பை நாம் எண்ணால் எழுத முடியாத அளவுக்கு வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருந்தார் வீட்டு உரிமையாளர் எனப்படும் வசூல் ராஜா. இந்த வீட்டிற்கு வந்த கதையை எழுதினால் அது தனி நாவலாக ஆகிவிடும் என்பதால் நேராக நாம் விசயத்திற்கு வந்து விடுவோம். அம்மா, தங்கைகள், நாங்கள் என ஐந்து பேர் தலையைக் கண்டதும் வீட்டு அதிபருக்கு தலை கிறுகிறுக்க தொடங்கிவிடும் எப்படி வசூல் வேட்டை நடத்தலாம் என கணக்கு போட ஆரம்பித்து விடுவார். ஒரு நாள் மெதுவாக வந்து ஆட்கள் அதிகமாகிவிட்டதால் செப்டிக் டேங்க் சீக்கிரம் நிரம்பிவிடும் எனவே வாடகை கொஞ்சம் கூடுதலாக தர வேண்டும் என்றார். அதை கேட்டு எங்களுக்கு கோபம் வருவதற்கு பதிலாக அந்த வாரம் முழுக்க சிரித்துக் கொண்டே இருந்தோம். 500 என்ன ஆயிரம் கூட வாங்கிக்க ஆனா அதை கொடுக்கத்தான் நாங்க அடுத்த மாசம் இங்க இருக்க மாட்டோம் என வினோதினி ஒரு தருணத்தில் சட்டென்று அறைந்தாற் போல் சொல்லிவிட்டாள். அவர் பேயறைந்த மாதிரி வீட்டிற்குள் போய் கதவை அடைத்துக் கொண்டார். இந்த சூழலில் தான் வீடு தேடும் வேட்டை அவர்களுக்குத் தொடங்கியது.

ஒரு விளம்பர வார இதழ் மூலம் தொலைபேசிகளை தோண்டியெடுத்து நகர் முழுவதும் அவர்கள் வீடுகளை தேடத் தொடங்கினர். விதவிதமான வீடுகள் ஒரு பெட்டிகளை போல அடுக்கப்பட்டு அவற்றிற்கு விதவிதமான கட்டணங்கள் வசூலிப்பதைக் கண்டு இரண்டு பேரும் அதிர்ச்சியில் உறைந்தனர். தென்தமிழகத்தின் ஒரு சிற்றூரில் இருந்து தங்களது சொந்த வீடுகளை அசூயையாக பார்த்து நகரத்தின் மினுக்கும் வெளிச்சங்களை தேடி வந்த விட்டில் பூச்சிகளாய் வந்தவர்களுக்கு இங்கு தெரிவிக்கப்பட்ட கட்டணம் பெரும் பாரமாய் இறங்கியது. தங்களது வருமானத்திற்குள் இந்த வாடகையை கொடுத்து வாழ்க்கையை ஓட்ட முடியுமா என ஒரு நிமிட நேரம் அச்சம் ஏற்பட்டது. வாழ்க்கை அவர்கள் முன்வைத்த மகத்தான சவாலை எப்படி சமாளிப்பது என்று தெரியாவிட்டாலும் எப்படியும் தாங்கள் விரும்பும் கட்டணத்தில் தமக்கு பிடித்த மாதிரியான ஒரு வீட்டை கண்டடைந்து விடலாம் என்ற கனவு நாளுக்கு நாள் வலுப் பெற்றுக் கொண்டே வந்த்து. வீட்டு அதிபரிடம் வேறு சொல்லியாகிவிட்டது. கிட்டத்தட்ட ஓரிரு மாதங்களுக்குள் வீட்டை எப்படியாவது காலி செய்து விட வேண்டும். இந்த பெரிய நகரத்தில் உதவிக்கென்று ஒருவரும் கிடையாது.

ஆகையால் இருவரும் வீடுகளை தேடி சதா அலைந்தனர். பகல் நேரங்களில் அவன் பணிக்கு சென்ற சமயங்களில் வார, தின இதழ்களில் தொலைபேசிகளை தோண்டியெடுப்பது, அவற்றை பேசிப்பார்ப்பது, அதன் பிறகு அவன் திரும்பும் நேரம் தெரிவித்து அங்கு சென்று பார்ப்பது என தங்களது தினசரி நடவடிக்கைகளை மாற்றிக் கொண்டிருந்தனர். இதனால் சமையல் பணி பாதிக்கப்பட்டது. கால நேரம் சுழன்று சுழன்று மாயக் கம்பளமாய் உடல் ஓய்வை நோக்கி இறைஞ்சியது.

ஒருமுறை திருவல்லிக்கேணியில் ஒரு வீட்டை பார்ப்பதற்காக சென்றார்கள். அங்கே கொண்டம ரெட்டி தெருவில் 3 ஆம் மாடியில் ஒரு வீடும், தரைத் தளத்தில் ஒரு வீடும் என தொலைபேசியில் பேசியவன் தெரிவித்தான். அங்கு சென்று பார்த்த போது ஒரு படுக்கையறை கொண்ட தரைத்தளத்தில் இருந்த வீட்டை பார்த்த போது அது எலிவளையைவிட சற்று பெரியது என்று நம்பும் வகையில் இருந்தது. இரண்டு படுக்கையறைகளை கொண்ட மூன்றாம் தளத்தில் உள்ள வீட்டை பார்க்க என்னால் வர முடியாது மிகவும் களைப்பாக இருக்கிறது என்று அவள் சொன்னதை தொடர்ந்து மேலே சென்று பார்த்தான். போதுமான அளவு இருந்தது. அதற்குள்ளாக அவளும் பின்தொடர்ந்து வந்திருந்தாள். இருவரும் வீட்டை பார்த்து விட்டு மேலே சென்று மொட்டை மாடிப் பகுதியைப் பார்ப்பதற்காக சென்றனர். மொட்டை மாடியிலிருந்து பார்த்த போது திருவல்லிக்கேணி மெட்ரோ ரயில் நிலையமும், அதனைத் தொடர்ந்து மெரீனா பீச்சும், கடலும் அலையடித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. மொட்டை மாடியில் இருந்து கடலைப் பார்த்ததும் வீடு பிடித்து போயிற்று. மொட்டை மாடியில் இருந்து கடல் தெரிவது அவர்களுக்கு ஒரு வினோத வேடிக்கையாக இருந்தது. இந்த கடலைப் பார்ப்பதற்காகவாவது மூன்று மாடிகளை பொறுத்துக் கொண்டு வந்து விடலாம் என முடிவு செய்து வீட்டின் அதிபருக்கு தொலைபேசினான். அவர் வர சிறிது நேரமாகும் என தெரிந்தவுடன் கடலை பார்த்தபடியே சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். முன்பணமாக எவ்வளவு கொடுப்பது, அதற்கு என்ன செய்யலாம், வாடகையை குறைக்க சொல்லலாமா, மாலை அல்லது காலை நேரம் கடற்கரையில் நடைபயிற்சிக்கு போகலாமா என பலவாறும் யோசித்துக் கொண்டிருந்த போது அந்தி வந்தது வீட்டின் அதிபரை அழைத்துக் கொண்டு. பிறகு கீழிறிங்கி வந்தனர். தமிழ் சினிமாவின் நவீன வில்லனின் தோற்றத்தோடு வந்திறஙகிய அவர், இருவரிடமும் ஒரு உயர் போலீஸ் அதிகாரியின் தோரணையோடு தனது குறுக்கு விசாரணைகளை தொடர்ந்தார். நம்ப முடியாத அளவுக்கு ஒரு முன்பணத் தொகையை சொல்லிவிட்டு வாடகையை தற்போது நடைமுறையிலிருக்கும் விகிதத்தை விட கூடுதலாக சொன்னார். அப்படி நீங்கள் விளம்பரத்தில் போடவில்லையே, என்ற போது, வரிசையாக வீட்டை கேட்டு ஆட்கள் வந்துகிட்டே இருக்காங்க, முடியும்னா சொல்லுங்க, இல்லாட்டி இடத்தை காலிபண்ணுங்க என்றபடி பேசிவிட்டு தனது பைக்கில் விரைந்தார். அழகான வீட்டையும் இழக்க விரும்பாமல், பணப் பேய் பிடித்த அந்த கொடியவனின் அவமானமும் தாங்காமல் அன்றைக்கு வீடு திரும்ப வேண்டியதாயிற்று. அதனையும் தாண்டி அடுத்த இரு நாட்களில் அந்த வீட்டு அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் கேட்ட தொகையை தரத் தயாராக இருக்கிறோம் என தெரிவிக்க முயன்றால் சுவிட்ச்டு ஆஃப் என்றும் தொடர்பு கொள்ள முடியாது என்றும் இயந்திர பதில்களே வந்த வண்ணம் இருந்தது. அந்த வீடும் கைநழுவிப் போனது அதன்பிறகு தான் உறுதியானது. மொட்டை மாடியில் ததும்பும் கடல் நீண்ட நாட்களாக அவனது கனவுகளில் வந்து அலையடித்துக் கொண்டிருந்தது.

இதே போல் வடபழனி அருகே உள்ள வீட்டை காண தொலைபேசிய போது அதிபர் பாண்டிச்சேரியில் இருப்பதாகவும், வீட்டை பாருங்கள் மிச்சத்தை பிறகு பேசிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். அன்று மாலையே அந்த வீட்டைப் பார்க்க வினோதினியை வடபழனி வர சொல்லிவிட்டு அவன் நேராக அங்கு வந்தான். இருவரும் மெலிதாக பழரச பானங்களை அருந்திவிட்டு ஒரு ஆட்டோக்காரனிடம் முகவரியைச் சொல்லிகேட்டு பேரம் பேசி ஆட்டோவில் போக முடிவானது. ஆட்டோ புதிதாக பாலம் போடப்பட்டு வரும் நூறடி சாலை வழியாக சென்று மேடும், பள்ளமும், தூசியுமான சாலைகளை கடந்து, பெரியார் பாதை வழியே நீண்ட தூரம் சென்றது. அதன் பிறகு ஆட்டோ டிரைவர் அவர்களை ஓரிடத்தில் இறக்கிவிட்டு, பணத்தைப் பெற்றுக் கொண்டு திரும்பிச் சென்றார். அருகில் இருந்த ஒரு சிறிய சந்தின் வழியே சிறிது தூரம் சென்றதும் பாண்டிச்சேரி அதிபர் தெரிவித்த வீடு வந்தது. சுற்றிலும் காலியான மனைகள் சிலவற்றில் அடர்ந்து புதர்ச்செடிகள் வளர்ந்திருந்தன. சுற்றிலும் வீடுகள் நிறைந்திருந்தன. சந்து முழுவதும் அந்த பகுதி போர்ஷன்களின் இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. வீடு முதல் தளத்தில் இருந்தது. அவர்களை எதிர்கொண்ட ஒரு வயோதிகர் விபரம் கேட்டார். பிறகு, ‘தான் இந்த அடுக்குமாடி குடியிருப்பின் பொறுப்பாளர் எனவும் ஓனர் எப்பவாவதுதான் வருவார்‘ என்றும் தெரிவித்து வீட்டை பார்க்க சம்மதித்தார்.

வீட்டிற்குள் நுழைந்தவுடன் பிறந்து சில வாரங்களே ஆகியிருந்த குழந்தை ஒன்றை வயதான பெண் ஒருவர் பராமரித்துக் கொண்டிருந்தார். மிகச் சரியாக குமரனின் செல்போன் வேலை நிமித்தமாக அலறவே அவன் அடுக்குமாடி குடியிருப்பை விட்டு வெளியே சிக்னல் நன்றாக கிடைக்கும் ஒரு இடத்தை நோக்கி சென்றான். சைகையால் வினோதினியை பார்க்கச் சொல்லிவிட்டு வெளியே சென்று சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான். அவன் பேசி முடிக்கவும், அவள் வரவும் சரியாக இருந்தது. இருவரும் அந்த பெரியவரிடம் யோசித்து வந்து சொல்கிறோம் என்று மட்டும் பொதுவாக கூறிவிட்டு தெருவை நோக்கி நடந்தனர். அதன்பிறகு அவர்கள் பல கிமீ தொலைவுள்ள ஒரு பஸ் நிலையத்தை கண்டுபிடித்து, நடந்து வந்து, மாலை நேர கூட்ட நெரிசலில் சிக்கி, கோயம்பேடு பேருந்து நிலையம் சென்றனர். அங்கிருந்து இரண்டு பேருந்துகள் மாறி தற்போது இருக்கும் வீட்டிற்கு வந்து சேர்வதற்கு இரவு நீண்ட நேரம் ஆகிவிட்டது. வீடு பார்க்க சென்றது போதும் போதும் என்றாகிவிட்டது. வீடு நன்றாக இருந்தாலும் அருகில் பேருந்து நிறுத்தம் எதுவும் இல்லாததும், இரண்டு சக்கர வாகனம் எதுவும் இவர்கள் வைத்துக் கொள்ளாததும் இது போன்ற குடியிருப்புகளை தவிர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளியது. மோட்டார் சைக்கிள் வைத்துக் கொள்ளாதவர்கள் யாரும் இங்கே வசிக்க தகுதியற்றவர்கள் என நகரம் துரத்தியடிப்பது போல் தோன்றியது. ஆனாலும் என்ன தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்ய வேதாளம் போல மீண்டும் மீண்டும் வீடு தேடும் படலம் தொடர்ந்த்து. இப்போதுதான் விசயத்தை நெருங்கிவிட்டோம்.

இந்த வாழ்க்கையில் வினோத வீடு தேடும் வேட்டை என்னும் நாடகத்தில் இரண்டு பேருக்கும் வெவ்வேறு பாத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தன. அவள் இரையின் இருப்பிடத்தையும், அதனை வேட்டையாடுவதற்கான இலக்கையும் சொல்லிக் கொடுப்பாள். அவன் இரையின் இருப்பிடத்திற்கு சென்று இரையின் தன்மையைப் பரிசோதித்து வேட்டையாடிவிட்டு திரும்ப வேண்டும். சில நேரங்களில் இரண்டு பேரும் சேர்ந்தே வேட்டைக்குச் செல்வதும் உண்டு. ஆனாலும் இதுவரை இவர்களுக்கு ஏற்ற தோதான இரை இன்னும் சிக்கவில்லை. சிக்கலான புதிர் பாதைகள் நீண்டு செல்லும் கட்டிட வனங்களின் நடுவே இவர்களின் வீடு என்னும் இரை தேடும் படலம் தொடர்ந்தது.

இதேபோல் தி நகரில் ஒரு வீடு பார்க்க போயினர். பஸ் ஸ்டாண்டிற்கு பின்புறம் கழிவறையிலிருந்து தொடங்கும் சந்தின் வழியாக நீண்ட தூரம் நடந்து சென்றால் ஒரு பரபரப்பான குடியிருப்பு பகுதி வரும். அதிலிருந்து பத்திரகாளியம்மன் கோவில் தெருவை தாண்டி ஒரு பிள்ளையார் கோவிலை நோக்கி சென்றால் ஒரு சந்து வரும். அதன் உள்ளே சென்றால் நீளமான பாம்பு சட்டையை உரித்துப் போட்ட பாம்புக் கூடு போல ஒரு ஒண்டு குடித்தன நடைபாதை ஒரு நீண்ட தெரு நீளத்திற்கு வரும். அதையும் தாண்டி சென்றால் அங்கு உள்ள ஒரு கூட்டு குடியிருப்பின் மாடிப் பகுதியில் ஒரே அறை மற்றும் சமையல் அறை கொண்ட ஒரு வீட்டை பெண் ஒருவர் கட்டி காப்பாற்றி வருகிறார். வீட்டின் கீழ் தளத்தில் மாடிப்படியின் அடிப்பகுதியை கழிவறையாக மாற்றியிருந்தனர். அது தனி உபயோகத்திற்கு என்று சொல்லப்பட்டாலும் இரவெல்லாம் மாடிப்படியில் கழிவறைக்கு காவலா இருக்க முடியும்? மேலும் இரவில் அவசரமென்றால் உறக்க கலக்கத்தில் கீழே எப்படி வருவது போன்ற கேள்விகளை நீங்கள் மறந்து விட வேண்டும். அதைவிட இறுதி ஆச்சரியம் ஒன்று அவர்களுக்கு காத்திருந்த்து. நீங்கள் இருவர் மட்டும்தானா அப்படியே கையில் வைத்திருக்கும் கைப்பையுடன் குடியேறிவிடுவீர்களா என்று கேட்காத குறையாக, ஏதோ தமிழ் சினிமா காதலர்களைப் போல வந்து கேட்பவர்களுக்கு அபயம் அளிக்கும் தொனியில் கேட்டதும் இவர்களுக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

பெரும்பாலான வீட்டு அதிபர்கள் கையில் ஒரு கைப்பையுடன், இடுப்பில் ஒரு கைக்குழந்தையுடன் வரும் ஒரு தம்பதியர் போதும் என்ற பாவனையுடனும், எப்போது வேண்டுமானாலும் அப்படியே அவர்கள் சாமான்களை கட்டி எடுத்துக் கொண்டு காலி செய்து சென்று விட வேண்டும் என்ற தொனியிலும் பேசும் போது அவர்களை நோக்கி கோபம் கொள்வதா பரிதாபம் கொள்வதா என்ற சந்தேகம் வந்து விடும். கடந்த சில ஆண்டுகளில் சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றம் வீட்டு அதிபர்களின் கனவை பல மடங்காக்கி விட்டிருந்ததற்கு நாம் யாரை நோக்கி குற்றம் சொல்ல முடியும் என்று சமாதானம் செய்து கொள்வதைத் தவிர வேறு வழிதெரியவில்லை.

இதேபோல் இந்த கதையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட செய்தி வெளியாகி யாவரும் மறந்து போன ஒரு நாற்பதாவது நாளில் மீண்டும் ஒரு விளம்பர வார பத்திரிக்கையில் இருந்து வினோதினி ஒரு தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்தாள். வழக்கம் போல அவள் பகல் நேரத்தில் பணியிலிருந்த அவனை தொலைபேசியில் அழைத்து அந்த தொலைபேசி எண்ணை கொடுத்து ஒரு வீட்டை பேசியிருப்பதாகவும், அதனை பணி முடித்து திரும்பி வரும் போது பார்த்து விட்டு வரும்படியும் பணித்திருந்தாள். அவனும் சிரத்தையாக அந்த எண்ணை குறித்துக் கொண்டான்.

பிற்பகலில் சற்று முன்னதாகவே தனது பணியை முடித்துக் கொண்டான். அந்த எண்ணில் உள்ள வீட்டின் அதிபரை அழைத்துப் பேசினான். அவர் ஒருஇடத்தை குறிப்பிட்டு அங்கு வந்த பிறகு அழைத்தால் வந்து அழைத்து செல்வதாக வாக்குறுதி அளித்தார்.

இவனது ஓரே ஆபத்பாந்தவனாக நகரப் பேருந்துகள் மட்டுமே உள்ளன. நடத்துனர்களோ மிகவும் நல்ல உள்ளம் உள்ளவர்கள். அவர்கள் நமது உடல் நலனில் எப்போதும் அக்கறை கொண்டவர்கள். நாம் ஏதாவது ஒரு நிறுத்த்த்தைச் சொல்லி கேட்டால் சற்று தள்ளி இறக்கிவிட்டு நாம் சிறிது தூரம் நடந்து நமது ஆரோக்கியத்தை பேணிக் கொள்வதில் மிகுந்த அக்கறை காட்டுவர். நாம் வேண்டாம் என்று அறவே கெஞ்சினால் கூட மிகுந்த மரியாதையுடன் நம்மை கீழேபிடித்து தள்ளாத குறையாக இறக்கிவிட்டுத்தான் பேருந்தை நகர்த்தி செல்வர். என்ன செய்வது பொதுமக்களும் இது போன்ற நடத்துநர்களின் நற்செயல்களுக்கு பழகிப் போயிருந்தனர். இவனும் அதுபோல் அவர் குறிப்பிட்ட ஒரு இடத்தை கேட்டு பயணச்சீட்டு வாங்கினான். அந்த இடம் வந்த்தும் இறக்கிவிட கேட்டுக் கொண்டான். ஆனால் நடத்துனர் எதுவும் தெரிவிக்கவில்லை. இவனே யூகமாக ஒரு நிறுத்தம் வந்த்தும் இதுதானா அது என்றான்? ஆம் என்றார் நடத்துனர். அவன் இறங்கிக் கொண்டான். எதிரில் பட்ட ஒரு தேநீர் கடையில் ஒரு தேநீர் குடித்தான். விசாரித்த போது சில கிமி தூரம் நடந்து செல்ல வேண்டும் என்று தெரிந்த்து. வேறு வழியில்லை கால்நடையாக நடந்து அவர் தெரிவித்த முகவரியை தேடிச் சென்றான். நடத்துனர்களின் நல்ல எண்ணத்தை மனத்திற்குள் நினைத்தபடியே வாழ்த்திக் கொண்டே சென்றான்.

இனி ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது என்று இவன் களைப்படைந்து நின்ற இடத்தில் அந்த வீட்டின் அதிபர் வந்து இவனை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அடையாறு ஓடும் ஒரு ரகசிய இடத்தின் வளைவிற்கு அருகில் மிகவும் ரம்மியமாக கட்டப்பட்டிருந்த்து அந்த வீடு. ஏறக்குறைய அந்த அடுக்குமாடி குடியிருப்பில் மூன்று வீடுகள் காலியாக இருப்பது தெரிந்த்து. வீட்டின் அதிபரும் மிகவும் எளிமையாக நடந்து கொண்டார். ஒரு கட்டத்தில் இவனுக்கு சந்தேகம் ஏற்பட்டு நீங்கதான் உரிமையாளரா எனக் கேட்ட போது அவர் வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு ஒரு சிறிய நாக்ரீக புன்னகையுடன் ஆம் என்றார். இவனுக்கு ஆச்சரியம் தாளவில்லை. மொட்டை மாடிக்கு சென்றனர். அவர் இவனுக்கு நதியை அடையாளம் காண்பித்தார். எவ்வளவு அழகாக ஓடுகிறது என்று ரசித்தார். அவர் சுட்டிக் காட்டிய திசையில் நகரத்தின் சகல ரகசியங்களையும் தன்னுள் மறைத்தபடி அடையாறு ஒரு நிதானமான ஞானியைப் போல மெல்ல ஓடிக் கொண்டிருந்தது. இந்த நகரத்தின் அனைத்து அசிங்க வரலாறும், அற்புதங்களின் மறைவிடமும் இந்த ஆற்றிற்கு தெரிந்திருக்கும் என இவன் கற்பனை செய்து கொண்டான்.

அடிக்கடி இதழ்களில் வரும் இடைவெளிகளில் காணப்படும் புதுக்கவிதைகளை அவன் படிப்பதுண்டு. அதனால் அவனும் ஒரு சில கவிதைகளை எழுதிப் பார்க்க முனைந்திருக்கிறான். இன்றைய அந்தி வானமும், அருகில் சலனமற்று ஓடும் ஆறும் அவனுக்குள் ஒரு கவிதையை கற்பனை செய்து பார்க்க தூண்டியிருந்தன. அதனை அவன் மனதிற்குள்ளாக மனனம் செய்து கொண்டான்.

போக்குவரத்து நெரிசல்களின் துல்லிய தொலைவிலிருந்து தள்ளியிருந்த அந்த குடியிருப்பும், வீடும், அமைதியாக ரம்மியமாக காணப்பட்டன. அப்போது அவர்கள் சூரியன் நதியின் மறுபுறம் மறையும் வேளையில் நல்ல நண்பர்களைப் போல பல்வேறு சமகால அரசியல், சமூக விவகாரங்களை குறித்து விவாதித்துக் கொண்டனர். இவனுக்கு ஆச்சரியம் பெருகிக் கொண்டே வந்த்து. இப்படி ஒரு வீட்டு அதிபரா என? ஆனால் அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அதன் பிறகு அவர் நான் ஒரு உண்மையை சொல்லித்தான் ஆக வேண்டும் எனக் கூறி, இந்த கதையின் தொடக்கத்தில் வெளியாகியிருந்த செய்தியை வேறுவிதமாக கூறி அந்த சம்பவம் இந்த குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் உள்ள ஒரு வீட்டில் தான் நடந்த்து என்றார். ஒரு கணம் இவனுக்குள் உள்ளுக்குள் உதறல் எடுத்த்து. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. கீழே செல்லும் போது அந்த வீட்டை காண்பிக்கிறேன் என்றும், தந்தையும், மகளும் இன்னமும் அங்கேதான் வசிக்கின்றனர் என்றும், போலீஸ் விசாரணை முடியும் வரை காலிச் செய்யக் கூடாது என்று போலீசார் சொல்லியுள்ளதாகவும் நயமாகத் தெரிவித்தார். ஒரு கணம் உலகம் இவனை விட்டு கழன்று சென்றதைப் போலத் தோன்றியது. தான் தற்போது பார்த்து விட்டு வந்த வீட்டின் மேற்புறத்தில் ஒரு கொலைச் சம்பவம் நடந்துள்ளது என்பதை அவனால் கற்பனை செய்தும் பார்க்க முடியவில்லை. ஆனால் யதார்த்தம் அவன் முகத்தில் அறைந்தது. அவன் அத்தனை நாட்களாக நாளேடுகளில் பார்த்து வந்த பல்வேறு கோணங்களில் இறந்து கிடந்த பெண் உடல்களின் கோரப் புகைப்படங்கள் சம்பந்தமில்லாமல் அவன் மனதில் நிழலாடி நிழலாடி மறைந்து கொண்டிருந்தது. அவரிடம் சுய நினைவை விட்டு விடாமல் ஒவ்வொருவர் வாழ்க்கை ஒவ்வொரு மாதிரி இருக்கும், நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை என்று சமாளித்து விட்டு, வீட்டில் மனைவியை வந்து பார்க்க சொல்கிறேன் என்றபடி விடைபெற்றான். கீழே இறங்கி வந்த போது அவர் சுட்டிக் காட்டிய வீட்டின் வாசற் படியில் ஒரு பெண் தலைவேறு முண்டம் வேறாக கொல்லப்பட்டுக் கிடப்பதைப் போனற் காட்சி அவனுக்குள் ஒரு விநாடி வந்து போனது. அவனுக்குள் ஏதோ ஒரு உன்மத்தம் அதிகரிப்பதைப் போல உணர்ந்தான். மாடிப்படிகளில் இறங்கிச் செல்லும் போது தென்பட்ட இடைவெளிகளின் ஊடாக காணக் கிடைத்த நதியின் மௌனம் பயங்கரமானதாக அவனுக்குத் தென்பட்டது. அதன் பிறகு அவனை பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டு அந்த வீட்டின் அதிபர் சென்றார்.

வீடு திரும்பும் போது பேருந்தில் கிடைத்த அவகாசத்தில் அவன் கவிதையை நினைவு கூர்ந்தான். அது:

மனிதர்கள் வசிக்க முடியாத

நகரத்தின் வீதிகளில்

வசிப்பிடத்தை தேடுபவர்களாயிருக்கிறார்கள்

யாருக்கும் சொல்லிக் கொள்ளும்படிக்கு

உறவுகள் இல்லையென்றான

அத்துவான காங்ரீட் வனத்தில்

தங்களது குகைகளை தேடுவது

வனதேவதையின் அருள் என நம்பினர்

நிச்சயமற்ற பொழுதுகளாய்

நியான் விளக்குகள் ஒளிரும்

மஞ்சள் நிற தார்ச்சாலைகளில்

அனைவரும்

விரைந்தபடி யிருக்கிறார்கள்

பணத்தாட்களின் மிதக்கும் கனவுகளில்

வாழ்வதற்கும்

வாழாமல் இருப்பதற்குமான இடைவெளியில்

அழுக்கடைந்த ஆறுகள் ஓடியபடி

அதனை ஒட்டிய

பிரம்மாண்ட கட்டிடங்களின்

நிழல்களில் பதுங்குகின்றன

வசிப்பிடத்தை தொலைத்த

நோயுற்ற நாய்கள்

அவற்றின் வெறித்த கண்களில்

மினுங்குகிறது

உயிர் வாழ்தலுக்கான இறுதி வேட்கை

ரௌத்ரமாய்.

***

அதனை டைரியில் கிறுக்கலான கையெழுத்துடன் குறித்துக் கொண்டான்.

அவன் வந்து வினோதினியிடம் செய்தி முதற் கொண்டு இப்போது வீட்டை பார்த்தது வரையும், ஆற்றின் கரையில் ஒரு ரகசிய பயங்கரத்தோடு வீடு இருப்பது வரையிலும் அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தான். மெல்ல மெல்ல அந்த வீடும் அவர்கள் கையை விட்டு கழன்று செல்வதை அவனால் உணர முடிந்தது.

ஆனால் அவனுள் ஏறியிருந்த உன்மத்தம் அவனையுமறியாமல் பல்வேறு மாற்றங்களை செய்திருந்ததை அவன் உணரவில்லை. அவனது விசித்திர பேச்சுகள் அவன் தொடர்ந்து வீடு தேடி அலைவதால் ஏற்பட்ட களைப்பால் ஏற்பட்டதாக வினோதினி கருதினாள். அவன் சில நாட்களாக எப்படி பேருந்து பிடித்து எப்படி வீடு திரும்புகிறான் என்று அவனுக்குப் புலப்படவில்லை. நகரம் ஒரு சுழலும் மாய வினோத மாளிகை போல அவனுக்கு தோன்றியது. ஒரு குத்து மதிப்பாக அவன் எப்படியோ தினமும் பணி முடித்து திரும்பிக் கொண்டிருந்தான். அலுவலகத்தில் அவனுக்கு உடல் நலம் சரியில்லையோ என கருதினர். சமீபமாக வெளியில் யாருடனும் பேசுவதை அறவே நிறுத்தியிருந்தான். அவன் கண்களில் தேங்கியிருந்த துலக்கம் மறைந்து ஒரு வித நிலைத்த தன்மை கூடியிருந்தது. ஏற்கனவே நகரில் தனக்குத் தானே பேசியபடி பலர் வீடு திரும்புவதை ஆச்சரியத்துடன் முன்பு பார்த்திருக்கிறான். நகரம் மெல்ல மெல்ல அவனை தனது இரையாக மாற்றிக் கொண்டிருந்ததை அவன் அறியவில்லை.

அவர்கள் தொடர்ந்து தேடிய வேட்டையில் அவர்களுக்கு வீடு கிடைக்கவில்லை. இதனால் ஏற்பட்ட ஏமாற்றமும் சலிப்பும் ஒரு கசப்பான நஞ்சாக மாறி அவனது மூளைக்குள் இறங்கி ஆன்மாவை அரிக்கத் தொடங்கியது. ஆனால் இவனுக்குள் ஏராளமான வீடுகள் குடி புக தொடங்கின. ஒரு நாள் இரவு ஒரு வீட்டில் உறங்கினான். மறுநாள் வேறு வீட்டில் கண் விழித்தான். ஒரு வீட்டின் வழியாக புகுந்து மற்றொரு வீட்டின் வழியாக அவன் கடலை நோக்கி சென்றான். வேறொரு வீட்டின் வழியாக சென்று அவன் அடையாறு நதியில் படகு ஓட்டிக் களித்தான். அவனது கனவுகளை மாயவீடுகள் சூழ்ந்து கொண்டன. அவர்கள் வாரத்தில் பெரும்பாலான நாட்களின் பிற்பகல்களில் வீடு தேடி அலைந்தவர்களாக காணப்பட்டனர். அந்த நகரத்தின் அத்தனை பகுதிகளின் இண்டு இடுக்கும் அவர்களுக்கு அத்துபடியாக மாறியிருந்தன. ஆனால் இவனது நினைவிலும், கனவுகளிலும் பெருகும் வீடுகளின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே வந்தது.

அன்று மாலை அவள் அவனை நேராக கே கே நகர் என்ற பகுதிக்கு வரச் சொல்லியிருந்தாள். அங்கு அவர்கள் இரண்டு வீடுகளை பார்த்தனர். வழக்கத்திற்கு மாறாக அவன் மிகவும் விசித்திரமான நடத்தையுடையவனைப் போலக் காணப்பட்டான். அவன் சில நேரம் அவளை சிரிக்கச் செய்வதற்காக பொது இடத்தில் கூட இப்படி சேட்டைகளில் ஈடுபடுவான் என்பதை வினோதினி அறிந்து வைத்திருந்தாள். இருவரும் கைகளை கோர்த்தபடி பேசி நடந்தனர். எனவே அவன் அவளை சிரிக்க வைப்பதற்காகத் தான் அவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறான் என்று நினைத்தாள். அந்த தெரு மிகவும் மரங்கள் அடர்ந்து அழகாக காணப்பட்டது போல அவனுக்குத் தோன்றியது. உலகின் சொர்க்கம் இங்குதான் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என அவன் கற்பனைச் செய்யத் தொடங்கினான். தான் சொர்க்கத்திற்கு வந்து விட்டதாக கூறினான். மாலை நேரத்து சிவப்பு சூரியன் இவன் எண்ணத்தை பூர்த்தி செய்வது போல் அந்த சாலையை மேலும் பொன்னிறமாக மாற்றிக் கொண்டிருந்த்து. நடந்து சென்றவன் அந்த தெருவிலேயே மிகவும் அழகான ஒரு வீட்டைப் பார்த்தான். இவளது கையை உதறிவிட்டு நேராக அந்த வீட்டிற்கு சென்றான். இவன் ஏதோ டூலெட் போர்டை பார்த்து விட்டுத்தான் போகிறானோ என சந்தேகித்தாள். வேகமாக சென்றவன் கதவை தொடர்ந்து தட்டி பொறுமையிழந்தவனாக அழைப்பு மணியை அழைத்தான். ஒரு நடுத்தர வயது ஆண் ஒருவர் வெள்ளை கை வைத்த பனியனும், நீல நிற கைலியும் அணிந்தவராக வெளிப்பட்டார். என்ன என்று கேட்டார். இந்த வீடு வாடகைக்கா? இல்லையே என இயல்பாக சொன்னவர் முகவரி மாறி வந்து வீட்டீர்களா என்பதைப் போல இருவரையும் மாறி மாறிப் பார்த்தார். ஆனால் அவன் விடாப்பிடியாக இது வாடகைக்குத்தான், நீங்கள் வெளியே போங்கள், ம் நகருங்கள், இது எங்களுடைய வீடு என விடாமல் பிதற்றிக் கொண்டு வீட்டுக்குள் நுழைய முயன்று கொண்டிருந்தான். அவர் அதிர்ச்சியில் உறைந்து சிறிது நேரத்தில் கூச்சல் போடத் தொடங்கினார். நடக்கப் போகும் விபரீதத்தை எண்ணியபடி வினோதினி செய்வதறியாமல் சாலையில் நின்று அந்த வீட்டையும், அவனையும் விடாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். சூரியன் மறைந்து முழுமையாக அந்த சாலையில் இருள் வந்து இறங்கியிருந்தது.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கிளிமானூரில் 1970-ல் பிறந்தார். இவரது இயற்பெயர் ஹரிக்குமார். ஹவி, போதிபாலன் என்ற பெயரில் தொண்ணூறுகள் தொடங்கி, கடந்த முப்பதாண்டுகளாக கவிதை, கதை, கட்டுரை எழுதிவருகிறார். கணையாழி தொடங்கி இன்றைய நவீன இணைய இதழ்கள் வரை இவரது படைப்புகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. அப்பா - சுப்பிரமணியன், அம்மா – லட்சுமி. மனைவி – இந்திராகாந்தி. இடறல், தொரட்டி, புதியதடம் ஆகிய இலக்கிய இதழ்களின் ஆசிரியர்…மேலும் படிக்க...

3 thoughts on “சுழலும் வீடுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *