சுமைதாங்கி

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: January 5, 2012
பார்வையிட்டோர்: 18,734 
 
 

காலனின் தூதுவன்போல் ஒரு போலீஸ்காரன் அந்தக் காலனிக்குள் வந்து ஒவ்வொரு வீடாகக் கேட்டான். கேட்டான்… கேட்டானா?… அவன் தன் நெஞ்சும் உடலும் பதைபதைக்க ஒவ்வொரு வீட்டின் முன்பும் நின்று, “அம்மா! உங்க வீட்டிலே ஏதாவது கொழந்தை, ஆம்பளைக் கொழந்தை, பத்து வயசு இருக்கும், காக்கி நிசாரும் வெள்ளைச் சட்டையும் போட்டுக்கிட்டு… உண்டுங்களா?” என்று திணறினான் போலீஸ்காரன்.

வீட்டுக் கொடியில் துணி உலர்த்திக் கொண்டிருந்த அந்த அம்மாளைப் பார்க்கும்போது, அவன் கண்கள் கலங்கின. அவள் போலீஸ்காரனைப் பார்த்து, “ஏன்.. இருக்கான்; என்ன விஷயம்? ஏலே ஐயா! இங்கே வா” என்றதும் உள்ளிருந்து ஒரு பையன் ஓடி வந்து, போலீஸ்காரனின் தலையைக் கண்டதும், “நான் வரமாட்டேன்” என்று பயந்து உள்ளே ஒளிந்து கொண்டான்.

“எதுக்குடாய்யா பயப்படறே? ஒண்ணும் பண்ண மாட்டாரு, வா” என்று பையனை அழைத்தாள் தாயார்.

போலீஸ்காரன் பெருமூச்சுவிட்டான்: “கூப்பிடாதீங்கம்மா… இருக்கட்டும். தோ, அங்கே ஓவர் பிரிட்ஜீகிட்ட, லாரியிலே சிக்கி ஒரு பையன் போயிட்டாம்மா… அப்படியே மண்டெ செதறிப்போச்சம்மா… ஸ்” என்று சொல்ல முடியாமல், சற்று நேரத்துக்கு முன் தன் பாபம் செய்த விழிகளால் கண்டதை எண்ணும்போதே போலீஸ்காரனின் உடம்பு சிலிர்த்தது.

“ஐயோ தெய்வமே! அப்புறம் என்ன ஆச்சு? புள்ளை உசிருக்கு…” என்று அவள் கேட்டு முடிக்குமுன் மற்றொரு பெருமூச்சையே பதிலாகச் சொல்லிவிட்டு நகர்ந்தான் போலீஸ்காரன். அங்கிருந்து போகும்போது, “இந்தக் காலனியிலே இருக்கற புள்ளைதான்னு சொன்னாங்க… புள்ளைங்களை ஜாக்கிரதையாகப் பார்த்துக்குங்கம்மா” என்று சொல்லிவிட்டு அடுத்த வீட்டின் முன் நின்று, ஒரு பெரிய சோகத்தை எதிர்நோக்கித் தவிக்கும் தனது நெஞ்சை இறுக்கிப் பிடித்துக் கொண்டே, “அம்மா! உங்க வீட்டிலே ஏதாவது கொழந்தை…” என்று ஆரம்பித்தான் போலீஸ்காரன்.

“எங்க வீட்டிலே கொழந்தையே கெடையாதே” என்றாள் வீட்டுக்குள்ளிருந்து வந்தவன்.

“அம்மா! நீ புண்ணியவதி!” என்று அந்தப் பெறாதவளை எண்ணி மனத்துள் பெருமைப்பட்டவாறே பெற்று வளர்த்து இன்று தெருவிலே ரத்தமும் சதையுமாய்த் தன் செல்வத்தைச் சூறையிட்டுவிட்ட குழந்தைக்குரிய “பாவி”யைத் தேடிச் சென்றான் போலீஸ்காரன்.

2

ஒவ்வொரு வீட்டின் முன் நிற்கும்போதும், ‘அது அந்த வீடாய் இருக்கக் கூடாதே’ என்று அவன் மனம் பிரார்த்தித்தது. ஒவ்வொரு பெண்ணைப் பார்க்கும்போதும், ‘ஐயோ! இவள் அந்தத் தாயாய் இருக்க வேண்டாமே’ என்று அவன் இதயம் கெஞ்சியது. ‘எப்படி இருந்த போதிலும் இந்தக் காலனிக்குள் ஏதோ ஒரு வீட்டில் யாரோ ஒரு தாயின் இதயத்தில் அந்த ‘டைம்பாம்’ நேரம் வந்ததும், வெடித்துச் சிதறத்தான் போகிறது’ என்ற நினைப்பு வந்ததும் போலீஸ்காரன் தயங்கி நின்று திரும்பிப் போய்விடலாமா என்று யோசித்தான். அந்தச் சோகத்தைத் தன்னால் தாங்க இயலாது என்ற நினைப்பிலேயே அந்தக் காட்சி அவன் மனத்தில் உருவாகி உடம்பும் முகமும் வேர்த்து, நாக்கு உலர்ந்தது.

ஒரு வீட்டின் திண்ணைமேல் ‘உஸ்’ என்ற ஆஸ்வாசப் பெருமூச்சுடன் உட்கார்ந்து, தொப்பியைக் கழற்றி, கர்ச்சிப்பால் முகத்தையும் கழுத்தையும் துடைத்துக் கொண்டான்.

‘திரும்பிப் போய்விட்டால் என்ன?’ என்று மனசு மீண்டும் உறுதியற்றுக் குழம்பியது.

‘நான் போய்விட்டால், அதனால் அந்தக் குழந்தைக்கு ஒரு தாய் இல்லாமல் போய்விடுவாளா? ஐயோ! அது தாயில்லாக் குழந்தையாய் இருக்கக் கூடாதா! ஒருத்தி பத்து மாசம் சுமந்து பெத்த குழந்தையை இப்படிக் கேள்வி முறையில்லாம எடுத்துக்கக் கடவுளுக்குத்தான் என்ன நியாயம்?.. சீசீ! கடவுள்தான் உயிருங்களை உண்டாக்கறார் – இந்த யமன் தான்… யமனை உண்டாக்கினது யாரு? அவன் இப்படி அக்குரும்பு பண்ண இந்தக் கடவுள் எப்படிச் சம்மதிக்கிறாரு? அந்தக் கடவுளே பத்து மாசம் சொமந்து பெத்திருந்தாத் தெரியும்… எப்படித்தான் தாங்கப் போவுதோ அந்தப் பெத்த வயிறு… மனுசன் சாகறது பெரிய சோகமில்லே; அதைப் பாத்து மத்தவங்க துடிக்கிற கோலமிருக்கே… அட கடவுளே!’

‘ஊரிலே தான் ஒவ்வொருத்தியும் ஒண்ணுக்குப் பத்து பெத்து வெச்சி இருக்காளே, ஒண்ணு போனாத்தான் என்ன? ஐயோ! அப்படியும் நினைக்க முடியுமா?… முடியாது, முடியாது. பெறாத என்னாலேயே – பிள்ளைப் பாசம்ன்னா என்னான்னு தெரியாத என்னாலேயே – யாருதோ போச்சி, நமக்கென்னான்னு இருக்க முடியாத மனுஷ மனசுக்கு, தன்னோடதே போச்சின்னா? – நேரமும் காலமும் வந்து கெடப்பாக் கெடந்து போனாலும் பரவாயில்லே… இப்படித் திடீர்க் கொள்ளையிலே அள்ளிக் குடுக்கப் பெத்த மனசு தாங்குமா? ‘ஐயோ’ன்னு ஒரே அலறல்லே அவ உசிரே போயிடுமே! அடத் தெய்வமே! சாவுன்னு ஒண்ணு இருக்கும்போது பாசம்னு ஒண்ணையும் ஏன்டாப்பா உண்டாக்கினே?… கொஞ்ச நாழிக்கு முன்னே, சிட்டுக்குருவி மாதிரி ஒரே சந்தோஷமா பறந்து திரிஞ்சி ஓடிக்கிட்டிருந்தானே!…’

‘கையிலே ஐஸ்கிரீம் குச்சியைப் புடிச்சுக்கிட்டு ஓடியாந்தான். நான் தான் பாவி பாத்துகிட்டு நிக்கறனே… அது நடக்கப்போவுதுன்னு தெரியுது… விதிதான் என் கையைக் காலை வாயையெல்லாம் கட்டிக் கண்ணை மட்டும் தெறக்கவச்சி எவ்வளவு கோரமான விளையாட்டை நடத்திக் காட்டிடுச்சி?… பையன் கத்தினானா? ஊஹீம்! அதுக்குள்ளே வந்திடுச்சே சாவு! போற உசிரு ஐஸ்கிரீமுக்காக இல்லே தவியா தவிச்சிருக்கும்! சாவுலே இருக்கற கோரமே அதுதான். திடீர்னு வந்து சாதாரண அல்ப ஆசையைப் பெரிசாக்கி ஏமாத்திடும். இன்னும் இவ்வளவு நாழிதான்னு முன்னெச்சரிக்கை கொடுத்து வந்திச்சின்னா மனுசன் சந்தோஷமாச் செத்திடுவானே – அது பொறுக்குமா அந்தக் கொலைகாரத் தெய்வத்துக்கு?’

‘சாவும் போது எல்லா உசிருங்களுக்கும் ஒரு ஏமாத்தம் தான் மிஞ்சி நிக்கும் போல இருக்கு. ஆமா… இருக்கும்போது எவ்வளவு அனுபவிச்சாலும் சாகும்போது கெடைக்கப் போறது ஒரு ஏமாத்தம் தான்… ஐயோ.. என்ன வாழ்க்கை!’

‘அந்த மாதிரி தான் அன்னிக்கி ஒரு நாளு, டேசன்லே, ஒரு சிட்டுக்குருவி ‘கீச்கீச்’னு கத்திக்கிட்டு, பொட்டையோட ஒரே சேட்டை பண்ணிக்கிட்டுத் திரியறப்பெல்லாம் இனிஸீபெக்டரு ஐயா கூட வேடிக்கை பாத்துக்கிட்டு இருப்பாரு… பொட்டைமேலே ஆண் குருவி திடீர்னு எங்கிருந்தோ விசுக்குனு பறந்து வந்து தாவி ஏறினப்போ, அந்தக் கழுதை ‘காச்மூச்’னு கத்திக்கிட்டு எதிர்ச் சுவத்திலே இருந்த ஒரு பொந்திலே போயி உக்காந்துக்கிட்டுக் ‘கிரீச்’ ‘கிரீச்’னு ஏக்கம் காட்டிச்சி… அந்த ஆணுக்கு ஏமாந்த வெறியிலே படபடன்னு நெஞ்சி அடிச்சிக்குது. உடம்பைச் சிலிப்பிக்கிட்டு ஒரு நிமிஷம் பொட்டையை மொறைச்சிப் பார்த்தது. அந்தப் பார்வையிலேயே பொட்டைக்கு மனசு மாறிப்போச்சி. மனசு மாறினப்புறம் இந்தச் சனியனே ஆண் குருவிக்கிட்டப் போயிருக்கக் கூடாதா? பொல்லாக் கழுதை மவளுது… இந்தப் பொந்திலேயே, வெக்கப்பட்டுக்கிட்டுத் திரும்பி உக்காந்துக்கிடுச்சி. அது திரும்பினதுதான் தாமஸம். விருட்னு ஒரு பாய்ச்சல் பாஞ்சுது ஆணு… நானும், இனிஸீபெக்டரும் நடக்கப் போற காரியத்தைப் பாக்கறதுக்குத் தயாராத் திரும்பினோம்; இனிஸீபெக்டரு என்னைப் பாத்துக் கண்ணைச் சிமிட்டினாரு.’

“அதுக்கென்னாங்க, எல்லா உசிருங்களுக்கும் உள்ளதுதானே”ன்னேன். நான் சொல்லி வாய் மூடல்லே… ‘கிரீச்’சினு ஒரு சத்தம்! ஆண் குருவி ‘பொட்’டுனு என் காலடியிலே வந்து விழுந்தது. தலை பூரா ‘செவ செவ’ன்னு ஒரே ரத்தக் களறி! ஐயோ கடவுளேன்னு அண்ணாந்தேன். ‘கடகட… கடகட’ன்னு சாவோட சிரிப்பு மாதிரி அந்தப் பழைய காலத்து ‘பேன்’ சுத்திக்கிட்டு இருக்குது…

இனிஸீபெக்டரு எந்திரிச்சி ஓடியாந்து அதைக் கையிலே எடுத்தாரு…

“ம்… போயிடுச்சு ஐயா!… நீ சொன்னியே இப்ப, ‘எல்லா உசிருங்களூக்கும் உள்ளதுதான்’னு… சாவைப் பத்தி தானே சொன்னே?” ன்னு கேட்டுக்கிட்டே சன்னல் வழியா அதைத் தூக்கி வெளியே போட்டார்.

‘அந்த ஆண் குருவி ‘பேன்’லே அடிபட்டுச் செத்தது ஒண்ணும் பெரிய விஷயமில்லே. ஆனா, அந்தப் பொட்டை – எதையோ எதிர்பார்த்துக் காத்திருந்த அந்தப் பொட்டைக் குருவி தவிச்ச தவிப்பு இருக்கே… ஐயோ! ஐயோ!.. அப்பத்தான் தோணிச்சு – கடவுள் ரொம்பக் கேவலமான கொலைகாரன். கடை கெட்ட அரக்கனுக்குமில்லாத, சித்திரவதையை ரசிக்கிற குரூர மனசு படைச்சவன்னு. இல்லேன்னா, சாவுன்னு ஒண்ணு இருக்கும்போது பாசம்னும் ஒண்ணை உண்டாக்குவானா?…’

‘வாங்கின ஐஸ்கிரீமைத் தின்னு முடிக்கறதுக்குள்ளே ஒரு கொழந்தைக்குச் சாவு வரலாமா? அட, இரக்கமில்லாத தெய்வமே! உன்னைத்தான் கேக்கறேன்; வரலாமா சாவு? – அவ்வளவு அவசரமா? குழந்தை கையிலேருந்து விழுந்த ஐஸ்கிரீம் கரையறதுக்குள்ளே உசிர் கரைஞ்சு போயிடுச்சே…’ – மனசு என்னென்னவோ எண்ணியெண்ணித் தவிக்கத் திண்ணையிலேயே வெகு நேரம் உட்கார்ந்திருந்த போலீஸ்காரன் ஒரு பெருமூச்சுடன் எழுந்தான்.

கழற்றி வைத்திருந்த தொப்பியைத் தலையில் வைத்துக் கொண்டு நிமிரும்போது பார்வை அகஸ்மாத்தாக அந்த வீட்டுக்குள் திரும்பியபோது ஒரு பெண் – இளம் பெண் குழந்தைக்குப் பால் கொடுத்தவாறே உட்கார்ந்திருந்தாள்.

அது ஓர் அற்புதமான காட்சிதான்.

“அம்மா! குடிக்கக் கொஞ்சம் தண்ணி தர்ரியா?” என்று கேட்டவாறு மீண்டும் திண்ணைமேல் உட்கார்ந்தான் போலீஸ்காரன்.

குழந்தையை மார்போடு அணைத்தவாறே எழுந்து உள்ளே சென்று கையில் ஒரு செம்பில் தண்ணீரோடு வெளியே வந்தாள் அந்த இளம்பெண். குழந்தை மார்பில் முகம் புதைத்துப் பாலருந்தும் சத்தம் ‘மொச் மொச்’ சென்று ஒலித்தது.

போலீஸ்காரன் தண்ணீர்ச் செம்பை வாங்கிக் கொண்டதும் தாய்மைச் சுகத்தோடு குழந்தையின் தலைமுடியை மிருதுவாகத் தடவினாள் அவள்.

திடீரெனப் போலீஸ்காரனின் கண்கள் மிரண்டன.

‘ஒருவேளை இவள் அந்தத் தாயாக இருக்க முடியுமோ? சீ, இருக்காது. சின்ன வயசா இருக்காளே!’

“ஏம்மா! இதுதான் தலைச்சன் குழந்தையா?” என்று ஆரம்பித்தான்.

“இல்லே… பெரிய பையன் இருக்கான். அவனுக்கு அப்புறம் ரெண்டு பொறந்து செத்துப் போச்சு… இது நாலாம் பேறு…”

“இப்ப பெரிய பையன் எங்கே?”

“பள்ளிக்கூடம் போயிருக்கான்.”

“பள்ளிக்கூடமா… என்ன சட்டை போட்டிருந்தான்?”

“பள்ளிக் கூடத்திலே காக்கி நிசாரும் வெள்ளைச் சட்டையும் போடணும்னு சொல்லி இருக்காங்கன்னு உசிரை வாங்கி நேத்திக்குத் தச்சிக் குடுத்தப்பறம்தான் ரெண்டு நாளாப் பள்ளிக்கூடத்துக்குப் போறான்… எதுக்கு இதெல்லாம் கேக்கிறீங்க…?”

போலீஸ்காரன் ஒரு நிமிஷம் மெளனமாய் நின்றுவிட்டு, “பையனுக்குப் பள்ளிக்கூடம் ஓவர்பிரிட்ஜ் பக்கமா இருக்குதா?” என்று சாதாரணமான குரலில் கேட்டான்.

“இல்லே. இந்தப் பக்கம் இருக்கு… ஆனா, அது ஊரெல்லாம் சுத்தும். வாலுத்தனம் அதிகமாப் போச்சு… சொன்ன பேச்சைக் கேக்கறதில்லே… காத்தாலே ‘ஐஸ்கிரீம் வாங்க அரையணா குடு’ன்னு உசிரை வாங்கினான். நான் தரமாட்டேன்னுட்டேன். அப்புறம் எனக்குத் தெரியாமப் பொட்டியெத் தொறந்து அரையணா எடுத்துக்கிட்டுப் போகும்போது நான் பாத்துட்டு ஓடியாந்தேன். அவன் ஓட்டத்தை நான் புடிக்க முடியுதா? விரட்டிக்கிட்டே வந்தேன். ஓடிட்டான். என்ன கொட்டம்! என்ன கொட்டம்! எனக்கு வெச்சிச் சமாளிக்க முடியல்லே… வந்த ஆத்திரத்திலே ‘அப்படியே ஒழிஞ்சு போ, திரும்பி வராதே’ன்னு திட்டினேன்…”

போலீஸ்காரன் இடைமறித்து, ‘ஐயையோ! அப்படி நீ சொல்லி இருக்கக் கூடாதும்மா… கூடாது’ என்று தலையைக் குனிந்து கண்ணீரை மறைத்துக் கொண்டான். பிறகு சற்றே மெளனத்துக்குப் பின் ஒரு செருமலுடன் ‘எனக்கென்ன, என் கடமையைச் செய்கிறேன்’ என்ற தீர்மானத்தோடு, தலையை நிமிர்த்தி, கலங்குகின்ற கண்களை இறுக மூடிக் கொண்டு இமை விளிம்பில் கண்ணீர் கசியச் சிலைபோல் ஒரு வினாடி நின்றான். அவன் இதயமே இறுகி, துருவேறிய உணர்ச்சிக் கரகரப்புடன் உதட்டிலிருந்து வார்த்தைகள் வெளிவந்தன: “ஓவர் பிரிட்ஜீகிட்டே லாரியிலே அடிபட்டு ஒரு பையன் செத்துக் கிடக்கான். போ! போயி, உம் புள்ளைதானான்னு.”

‘ஐயோ ராசா!’ என்ற அலறலில் அந்த வீடே – அந்தக் காலனியே அதிர்ந்தது. அந்த அதிர்ச்சியில் போலீஸ்காரன் செயலற்றுத் திண்ணையின் மீது சோர்ந்து விழுந்தான்.

பாலருந்தும் குழந்தையை மார்புற இறுகத் தழுவிக்கொண்டு வெறிகொண்டவள்போல் அந்தத் தாயார் வீதியில் ஓடிக் கொண்டிருக்கிறாள்…

3

“இன்னும் ஒரு தெருவு தாண்டிப் போகணுமே… என்ற பதைபதைப்புடன் கைக்குழந்தையை இடுப்பில் இடுக்கிக் கொண்டு, மேல் துகில் விலகி ஒற்றை முலை வெளித்தெரிய தன் உணர்வு இழந்து, தாய்மை உணர்வின் வெறிகொண்டு பாய்ந்து பாய்ந்து ஓடி வருகிறாள் அவள்.

விபத்து நடந்த இடத்தை வேடிக்கை பார்த்துவிட்டு எதிரில் வரும் கூட்டம் தாய்மையின் சொரூபமாக இவள் வருவதைக் கண்டு, திரும்பி இவளைப்பின் தொடர்ந்து செல்கிறது…

– கும்பலுக்கு எல்லாமே ஒரு வேடிக்கைதான்!

‘என்னா ஆச்சு?’ – செய்தித்தாள் விவகாரம்போல் ஒருவர் கேட்ட கேள்விக்கு மேம்போக்காய் ஒருவர் பதில் சொல்கிறார்:

“ஒரு பையன் லாரியிலே மாட்டிக்கிட்டான்…”

“அப்புறம்?”

“அப்புறம் என்ன? ஹேஹே… குளோஸ்…” என்று ஒரு ஹிஸ்டிரியாச் சிரிப்புடன் கை விரிக்கிறான் ஒருவன்.

“லாரிக்காரனுங்களுக்குக் கண்ணுமண்ணு தெரியுதா?… அவனுங்களை வெச்சி மேலே ஏத்தணும் லாரியை” என்கிறார் ஒரு மனுநீதிச் சோழன் பரம்பரை!

– அவர்களுக்கு ஆத்திரப்படுவதே ஒரு சுவாரஸ்யம்!

வீதியின் மறுகோடியில் அந்தப் போலீஸ்காரன் ஓடி வருகிறான். திருடனைத் துரத்திப் பிடிக்கும் திறனுள்ளவன்தான். பாசத்தின் வேகத்தைத் தொடர முடியாமல் பின்தங்கி விட்டான்.

இடுப்புப் பிள்ளையுடன் ஓடோ டி வந்து கடைசித் தெருவையும் தாண்டி விபத்து நடந்த தெருவுக்குள் நுழைந்தபோது கூட்டத்தின் நடுவே இருந்து ஒருத்தி, தரையில் விழுந்து புரண்ட கோலத்துடன் இரு கைகளையும் வானத்தை நோக்கி உயர்த்தி, ‘அட கடவுளே!.. உனக்குக் கண்ணில்லையா?’ என்று கதறி அழுவதைக் கண்டதும் இந்தத் தாய் நின்றாள்.

கண்களில் தாரை தாரையாய்க் கண்ணீர் வழிய இவள் சிரித்தாள். ‘அது நம்ம ராசா இல்லேடி, நம்ம ராசா இல்லே’ என்று கைக்குழந்தையை முகத்தோடு அணைத்துக்கொண்டு சிரித்தாள். ஹிருதயம் மட்டும் இன்னும் தேம்பித் தேம்பி விம்மிக் கொண்டிருந்தது. இப்பொழுதுதான் தாய்மை உணர்வின் வெறி அடங்கி, தன்னுணர்வு கொண்டாள். மார்புத் துணியை இழுத்துவிட்டுக் கொண்டாள். அருகில் வந்து நின்ற போலீஸ்காரனிடம், ‘ஐயா, அது எம் பையன் இல்லே… வேற யாரோ ஐயா.. அது என் பையன் இல்லே…’ என்று கண்களை மூடித் தெய்வத்தை நினைத்துக் கரம் கூப்பினாள்.

‘சீ… இவ்வளவுதானா! தாய்ப் பாசம்ங்கிறது இவ்வளவு அல்பமா! ஒரு சின்ன வட்டத்துக்குள்ளே மொடங்கிப் போறதுதானா?’ என்று முகம் சுளித்த போலீஸ்காரன் விபத்து நடந்த இடத்தை நோக்கி நடந்தான்.

கும்பலின் நடுவே வீழ்ந்து கதறிக் கொண்டிருப்பவளைப் பார்த்ததும் போலீஸ்காரன் திடுக்கிட்டான்.

அங்கே அவன் மனைவி – மார்க்கெட்டுக்குப் போய்விட்டு வரும் வழியில் இந்தக் கோரத்தைப் பார்த்து விட்டாளோ?… அதோ, காய்கறிப் பை கீழே விழுந்து சிதறிக் கிடக்கிறதே!

‘அடிப் பாவி!… உனக்கேன்டி தலையெழுத்து!’ என்று முனகினாலும் போலீஸ்காரனால் பொங்கிவரும் அழுகையை அடக்கமுடியாமல் குழந்தை மாதிரி விம்மி விம்மி அழுதான்.

‘தங்கம்… இதெல்லாம் என்னாடி?’ என்று அவளைத் தூக்கப் போனான். புருஷனைப் பார்த்ததும் அவள் குமுறிக் குமுறி அழுதாள்.

‘ஐயோ! பாத்தீங்களா இந்த அநியாயத்தை? இதைக் கேக்க ஒரு போலீசு இல்லியா? ஒரு சட்டம் இல்லியா…? இருவது வருசமா நாம்ப எவ்வளவு தவமாத்தமிருந்து வரமா வரங் கேட்டும் குடுக்காத அந்தக் கண்ணவிஞ்ச தெய்வம் இப்படி அநியாயமா ஒரு வைரப் பொதையலே வாரி எறைச்சு இருக்கே!…’ என்று கதறினாள்.

‘தங்கம்!… அவுங்க அவுங்க விதிக்கு நாம்ப அழுதாப் போறுமா?… எந்திரி… பைத்தியம் மாதிரிப் புலம்பறியே! வீட்டுக்குப் போகலாம் வா…!’ என்று மனைவியின் கையைப் பிடித்துத் தூக்கினான் போலீஸ்காரன். அவள் அவனைத் திமிறிக் கொண்டு விலகி நின்றாள். அழுத கண்கள் அவன் முகத்தை வெறிக்க, ‘இது என் குழந்தை! ஆமா, இது என் குழந்தைதான்’ என்று பிதற்றினாள்.

போலீஸ்காரனின் கண்கள், ‘இறந்தது தன் குழந்தையல்ல’ என்று தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு, அதோ வேடிக்கை பார்க்கும் உணர்ச்சியில் வருகிறாளே, அந்தப் பரிதாபகரமான தாயை வெறித்தன.

ஐயோ, பாவம் அவள்!…

அடுத்து அங்கே நிகழப்போகும் ஒரு கொடிய சோகத்தைக் காண விரும்பாமல், தன் மனைவிக்கும் அதைக் காட்ட விரும்பாமல், அவளை வீட்டுக்கு அழைத்துப் போக அவன் கரத்தைப் பற்றித் தூக்கினான். அவள் அவனோடு புலம்பிப் புலம்பி அழுதவாறு தளர்ந்து நடந்தாள்.

கும்பல் இரண்டாகப் பிரிந்து இந்தப் போலீஸ்காரத் தம்பதிகளின் சோக நாடகத்தை வேடிக்கை பார்த்தவாறு அவர்களின் பின்னே வந்தது.

“பாவி! ஒரு குழந்தையைப் பெத்துக் கொஞ்சறத்துக்குத்தான் பாக்கியம் செய்யாத மலடி ஆயிட்டேன், செத்துப்போன ஒரு குழந்தைக்கு அழக்கூட எனக்குச் சொந்தமில்லையா?” என்று திமிறிய அவளை வலுக்கட்டாயமாய் இழுத்துச் சென்றான் போலீஸ்காரன்.

அந்தத் தெருக்கோடியில் உள்ள தன் வீட்டருகே மனைவியை அழைத்து வரும்போது, தூரத்தில் விபத்து நடந்த இடத்திலிருந்து அந்த ‘டைம்பாம்’ வெடித்தது! போலீஸ்காரன் காதுகளை மூடிக் கொண்டான். “ஐயோ! என் ராசா!” என்று காலனியில் ஒலித்த அதே குரல் வீதியே அதிர வெடித்தெழுந்தபோது, தன் பிடியிலிருந்து திமிறியோட முயன்ற மனைவியை இரு கைகளிலும் ஏந்தித் தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான் போலீஸ்காரன்.

4

போலீஸ்காரனது ஏந்திய கரங்களில் மனைவியின் உடல் பாரம் மட்டுமா கனத்தது?

அவள் தன் இதயத்தில் தாங்கும் உலகத்தின் சுமை – தாய்மையின் சோகம் – அதன் அவனால் தாங்க முடியவில்லை.

உள்ளே போனதும் இருவரும் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டு ‘ஓ’வென்று கதறியழுதனர். திடீரெனத் திரும்பிப் பார்த்த போலீஸ்காரன் வாசலிலும் சன்னல் புறத்திலிருந்தும் கும்பல் கூடி நிற்பதைப் பார்த்து எழுந்து போய்க் கதவைப் ‘படீர் படீர்’ என்று அறைந்து சாத்தினான்.

போலீஸ்காரன் வீட்டு முன்னே கூடியிருந்த கும்பல் மீண்டும் விபத்து நடந்த இடத்துக்கே ஓடியது.

– ஆமாம்; கும்பலுக்கு எல்லாமே ஒரு வேடிக்கைதான்.

(எழுதப்பட்ட காலம்: ஜனவரி 1962)

நன்றி: சுமைதாங்கி (சிறுகதைத் தொகுப்பு) – ஜெயகாந்தன்

Print Friendly, PDF & Email

2 thoughts on “சுமைதாங்கி

  1. ஜெயகாந்தன் என்றும் ஜெயகாந்தன் தான

  2. அருமையான கதை
    “கும்பலுக்கு எல்லாமே ஒரு வேடிக்கைதானே”
    உண்மையான வாக்கியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *