கடவுள் நம் குற்றங்களை மன்னிக்கலாம் – ஆனால்,
மனிதர்கள் உருவாக்கிய சில நியதிகள்
அவ்வாறு மன்னிப்பதில்லை
-வில்லியம் ஜேம்ஸ் (1842 – 1910)
சாவதற்கு அஞ்சேல்
‘குணா எங்கேடா இருக்க. அண்ணன போட்டுட்டாங்கடா’
மறுமுனையிலிருந்து பதட்டத்துடன் வந்தது கோபியின் குரல்.
‘நீ வீட்டுக்குப் போகாத. வேற எங்காவது போயி தங்கிக்க. உன்னத்தா தேடிக்கிட்டு இருக்கானுங்க. அண்ணன என்யூஎச்ல சேத்திருக்கோம். அண்ணிக்கு தகவல் சொல்லிட்டோம். நீ இங்கயும் வந்துடாத. பாத்து இருடா’
கோபி சொன்னது நினைவில் நின்றது. அவனின் மார்போடு கைபோட்டு ஆடையில்லாமல் படுத்திருந்த சீனநாட்டுப் பெண் அவனை மழுங்க மழுங்கப் பார்த்தாள். அவளை விலக்கியவன் தன் ஆடைக்குள் புகுந்துகொண்டு இரண்டு ஐம்பது வெள்ளி நோட்டுகளை அருகேயிருந்த பழுப்பேறிய சின்ன மேசையின்மேல் வைத்துவிட்டு விறுவிறுவென்று கதவைத் திறந்தான். தலையை எட்டிப் பார்த்தான். ஏதோ நிழலாடுவதுபோல் தெரிந்தது. ஆமையைப்போல் உடனேயே தலையை உள்ளுக்குள் இழுத்துக்கொண்டான். அவனுக்குள் அவனையறியாமலேயே ஏதோ ஒன்று புகுந்துகொண்டது.
இத்தனை நாள் இல்லாத ஒரு பதட்டம். ஓர் உதறல். அவனுக்குள்.
அந்தச் சீனப்பெண்ணுக்கு மீண்டும் அவன் உள்ளே வந்து கதவைச் சாத்திக்கொண்டது அந்நியமாகப் பட்டது. யாருக்கோ செய்தியை அனுப்ப எழுத்துகளைத் தட்டிக் கொண்டிருந்தவள் அவன் அறியாவண்ணம் தன் கைத்தொலைபேசியைத் தலையணைக்குக் கீழே சொருகி வைத்தாள். இடுப்புவரை நழுவியிருந்த போர்வையை இழுத்து தன் மார்போடு போர்த்திக்கொண்டு,
‘யா டார்லிங், வாட் ஹெப்பன்’, என்றாள்.
அவன் அவளிடம் எதுவும் பேசவில்லை. அவளின் கண்களை மட்டும் பார்த்தான். அந்தக் கண்கள்,
‘அதா காசு கொடுத்துட்டல இன்னு ஏன்டா இங்கய இருக்க’ என்று கேட்பதுபோல அவனுக்குப்பட்டது. தன் பார்வை அவனுக்கு எதையோ சொல்லிவிட்டது என்பதைத் தெரிந்துகொண்டவள் தன் தலையைத் தாழ்த்திக் கொண்டாள். அவன் தன் கைத்தொலைபேசியைப் பார்த்தான்.
மணி விடியற்காலை 2.10.
ஜன்னலைத் திறந்தான். ஜில்லென்ற குளிர்க் காற்று. முகத்தை அறைந்து சென்றது. மஞ்சள் விளக்குகளின் ஒளிச்சாரல். சாலை ஒரு மயக்க உணர்வைக் கொடுத்துக் கொண்டிருந்தது. ஒன்றிரண்டு கார்கள் சமிஞ்சை விளக்குகளின் பச்சை வண்ணத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தன. தன் சட்டைப் பாக்கெட்டிலிருந்து சிகரெட் ஒன்றை எடுத்தான். என்றுமில்லாமல் அவன் விரல்கள் இலேசாக நடுக்கம் கண்டன. விரல்களை அழுத்திப் பிடித்து உதட்டில் வைத்துக்கொண்டான். நெஞ்சம் படபடக்க தன் சிலுவாரின் முன் பாக்கெட்டில் விரல்களை விட்டு அலசினான். லைட்டர்.
அவனைச் சுற்றி வெள்ளை வெள்ளை வளையங்களாக அவன் உருவாக்கிய வெண்புகைகள் காற்றோடு கலந்துகொண்டு அவனைச் சுற்றி வேறொரு வண்ணத்தைத் தெளித்துக் கொண்டிருந்தன. அதே சமயத்தில் மெத்தையில் படுத்துக்கிடந்த அந்தச் சீனப்பெண் யாருக்கோ செய்தி ஒன்றை அனுப்புவதில் மும்முரமாக இருந்தாள்.
சிதையா நெஞ்சு கொள்
என் யூ எச் அவசரப்பிரிவுக்கு ஓட்டமும் நடையுமாய் நுழைந்தாள் கீர்த்தி. ஒரு கணினியோடு அமர்ந்திருந்த ஒரு தாதியிடம் விக்னேஷ் பெயரைச்சொல்லி விசாரித்தாள்.
‘நீங்கள் யார்?’
‘மனைவி’
‘மேடம், அவர் இன்னும் ஆப்பரேஷன் ரூமிலிருந்து வரல. கொஞ்சம் அங்க ஒக்காருங்க. வந்ததும் சொல்றோம்’
‘நா அங்க போகலாமா’
‘இல்ல மேடம். ஏற்கனவே அவர கொண்டுவந்த ரேண்டு பேரு கூட போயிருக்காங்க. உங்களயும் உள்ள விட்டா டாக்டர் திட்டுவாரு. வேணுன்னா நீங்க ஒன்னு பண்ணலாம். அங்க இருக்கறவங்கல்ல ஒருத்தர இங்க வரச்சொல்லிட்டு நீங்க அங்க போகலாம்.’
கைத்தொலைபேசியில் பதிவாயிருந்த அந்த எண்ணுடன் தொடர்பு கொண்டாள். சில விநாடிகளுக்குள் மறுமுனையிலிருந்து,
‘சொல்லுங்க அண்ணி’
‘நா இங்கத்தான் அவசரப்பிரிவுல. அண்ண…….’
‘டாக்டர் கிரிட்டிகல்னுதான் சொன்னாரு. ஆப்ரேஷன் ரூம்ல இருந்து யாரும் இன்னும் வெளிய வரல. அங்கேயே இருங்கண்ணி. இதோ வந்துடறேன்’
கீர்த்தி அங்கே வரிசைப்பிடித்து இருந்த நீல நிற நாற்காலியில் இடுப்பில் கை வைத்து அழுத்தி மிகக் கவனமாக உட்கார்ந்தாள். இது அவளுக்கு ஏழாவது மாதம். இவள் பிடிவாதமாக மறுத்தும் விக்னேஷின் வற்புறுத்தலால் சென்ற மாதம் ஸ்கேன் செய்து பார்த்தபோது ஆண் குழந்தை என உறுதியாகச் சொன்னார்கள். விக்கி ரொம்பவும் சந்தோஷப்பட்டான்.
‘எனக்கொரு மகன் பிறப்பான், அவன் என்னைப்போலவே இருப்பான்’ எனப் பாட்டுக்கூடப் பாடினான்.
தொடர் ரயிலைப்போல ஓடிக்கொண்டிருந்த அந்தப் பச்சை வண்ண ஸ்கிரீன் விடியற்காலை மணி 2.15 என்பதைச் சுமந்துகொண்டு இவ்வுலகில் எதுவுமே நடக்காததுபோல தன் கடமையைச் செய்துகொண்டிருந்தது.
அவசரப் பிரிவின் ரெஜிஸ்டர் கவுண்டரின் முன் ஒரு சக்கர நாற்காலியில் வடநாட்டுப் பெண்ணொருத்தி தன் இடுப்பைப் பிடித்துக் கொண்டு துடித்துக் கொண்டிருந்தாள். பிரவசவலி போல. கவுண்டரில் இருப்பவன் அவள் கணவனாகத்தான் இருக்கவேண்டும். அவன் முகத்தில் கலவரம் தெரிந்தது. அந்தப் பெண்ணைப் பார்த்தவாறே கவுண்டரில் இருக்கும் அந்தத் தடித்த பெண் ஆற அமர கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டிருந்தான். கேள்விகளைக் கேட்டுக்கொண்டு கணினியில் எதை எதையோ பதிந்துகொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் சக்கர நாற்காலியின் கைப்பிடியைப் பிடித்துக்கொண்டிருந்த தாதி, ஏதோ சொல்ல,
‘எனக்குத் தெரியும். உன் வேலையை மட்டும் பார்’
என்றுச் சொல்லிவிட்டு மீண்டும் கணினியோடு ஐக்கியமானாள் கவுண்டரில் உள்ள அந்தப் பெண். அந்தத் தாதிப்பெண் என்ன செய்வதென்று தெரியாமல் வலியால் துடித்துக்கொண்டிருந்த வடநாட்டுப் பெண்ணிடம் கொஞ்சம் வலியைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டிருந்தாள். அச்சமயம் ஒரு மருத்துவர் அவ்வழியே வருவதைக் கவனித்துவிட்ட அந்தக் கவுண்டரில் உள்ள பெண்,
‘அவங்கல லேபர் வார்ட்டுக்குக் கொண்டு போகாமல் இன்னும் என்ன செஞ்சிகிட்டு இருக்க?’
என அதட்டுவதற்கும் கோபி அங்கே அவசர அவசரமாக வருவற்கும் சரியாக இருந்தது.
அவன் சட்டையெல்லாம் ரத்தக்கறை.
அந்த ரத்தத்தின் நெடி விக்கியினுடையதுதான். அதைக் கீர்த்தியால் உணரமுடிந்தது. அந்த ரத்த நெடியை முழுமையாக தனக்குள் இழுத்துக்கொண்டு அவனைத் தனக்குள் நிறைத்துக்கொண்டாள்.
விக்னேஷை அனைவரும் விக்கி என்றுதான் அழைப்பார்கள். அவளுக்கும் அவன் விக்கி என்றே அறிமுகமானான். இன்னும் சொல்லப்போனால் அவனின் பெயருக்கு முன் இருந்த விக்டர் விக்கி என்ற அடைமொழியோடு கூடிய பெயரே அவளைப் பெரிதும் கவர்ந்தது. ஐடிஈ செண்டரில் அவள் சேர்ந்த புதிதில் சில மலாய், சீன மாணவர்களை விக்கி விரட்டி விரட்டி திடலில் அடித்த அந்தக் காட்சியில் அவன் அவளுக்குள் ஹீரோவாகிப் போனான். ஐடிஈ முடிந்தபிறகு, பிடிவாதமாக இருந்து அவனையே கட்டிக்கொண்டாள். காதலிக்கும்போது அவளுக்குப் பிடித்திருந்த அவனின் ஹீரோயிசம் கல்யாணம் ஆன பிறகு, பயத்தை மட்டுமே அவளுக்குக் கொடுக்கத் தொடங்கியது. ஒரு நகரத்தையே முழுமையாக விழுங்கிய நிலைக்கண்ணாடியைப்போல் அவனின் இந்த அடிதடிகள் அவனை எந்நேரத்திலும் விழுங்கிவிடத் தயாராகக் காத்திருப்பதை அவள் உணர்ந்துகொண்டாள். ஆனால், எல்லாமும் அவளால் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்டதால் அவள் குடும்பத்தின் பக்கம் அவளால் செல்ல இயலாத இதைப்பற்றி பேச இயலாத ஒரு சூழல் உருவாகிப்போனது. வாழ்வில் தனிமை அவளை ஒவ்வொரு நாளும் அழவைத்துக்கொண்டிருந்தது. தனக்காகத் தன் உணர்வுகளைப் புரிந்துகொள்ள யாரும் இல்லாத சூழலில் அன்புக்காகவும் பாசத்திற்காகவும் ஏங்கித் தவித்துக்கொண்டிருந்தாள்.
அவள் பயந்தபடியே இன்று அப்படியே நிகழ்ந்துவிட்டது.
அச்சம் தவிர்
உடல் முழுக்கப் பதினாறு இடங்களில் வெட்டுக் காயங்கள். தலையில் வெட்டுக்காயங்கள் ஆழமாகப் பாய்ந்திருந்ததால் தலைமுடி முழுவதும் முழுமையாக மழிக்கப்பட்டுத் தையல் போடப்பட்டிருந்தது. விக்டர் விக்கிக்குச் செயற்கைச் சுவாசக் குழாயின் மூலம் சுவாசம் மட்டும் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது. விழிகள் மட்டும் இலேசாகத் திறந்திருந்த நிலையில் எதுவும் புலப்படாத ஒரு மயக்கத்தில் அவனிருந்தான்.
அப்போது விக்னேஷ் உயர்நிலை ஒன்றில் படித்துக்கொண்டிருந்தான். ஒருநாள் பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தான். அப்போது வழியில் முத்தலீப் என்ற இந்தியர்களின் குண்டர் கும்பலைச் சேர்ந்த அறுவர் அவனை வழி மறித்தனர். அவனிடமிருந்த பணத்தைப் பறிக்க முயன்றனர். அவனிடம் பணம் இல்லாததைக் கண்டு அக்குழுவின் தலைவனாகச் செயல்பட்டவன் அவனை அறைந்து கீழே தள்ளினான். அதனைத் தொடர்ந்து மற்றவர்களும் அவனை இஷ்டத்துக்கு உதைத்தனர். இது அன்றோடு முடியவில்லை. ஒவ்வொரு நாளும் பள்ளிமுடிந்து வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம் அவர்களின் கேலிப் பேச்சு, கிண்டல், கெட்ட வார்த்தைகளில் திட்டல்கள், அறை, அடி, உதை, வதை என அந்த வேதனையைச் சுமந்துகொண்டே வீட்டைப் போய் சேர்வான். பல சமயங்களில் அவர்களின் அத்துமீறல்கள் எல்லையை மீறி அவனை நிர்வாணமாக்கி, அவனது ஆண்குறியை சீண்டவும் வைத்தது. பள்ளி என்றாலே வெறுப்பு, பயம், அவமானம் அவனைப் பிடித்துக்கொண்டது. பள்ளியிலும் வகுப்பறையிலும் அனைத்து மாணவர்களும் தன்னைப் பகடிவதைச் செய்வதுபோன்ற ஒரு மனநிலையில் ஆழ்ந்து கிடந்தான்.
இந்தத் தொடர் வன்செயல்களினால் ஒவ்வொரு நாளும் பள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்வதற்கே பயந்துகொண்டிருப்பான். எதேச்சையாக ஒருநாள் அவனைப் பக்கத்து புளோக்கில் இருக்கும் அவனுடன் லேக் சைட் தொடக்கப்பள்ளியில் படித்த சீனியர் புலேந்திரன் பார்த்துவிட்டான். அவன் சட்டைக் கசங்கி கண்கள் கலங்கியிருந்ததைப் பார்த்தவன், ‘ என்னடா?’ என்றான். விக்னேஷ், முத்தலீப் குண்டர் கும்பலால் தனக்கு ஏற்படும் இன்னல்களைச் சொன்னான்.
‘வீட்ல அப்பா அம்மா கிட்ட சொல்லலையா?’
‘இல்ல’
‘ஏன்’
‘சொன்னா அம்மா என்னதான் திட்டுவாங்க’
‘என்னடா சொல்ற?’
‘ஆமா, அப்பா கேங்ஷ்டரா இருந்து ஒரு கொல கேசுல ஜெயில்ல இருக்காரு. இப்பபோயி அம்மாகிட்ட சொன்னா, என்னதான் திட்டுவாங்க. அப்பா மாறிதான நீயும் இருப்ப, நீ ஒழுங்கா இருந்தா, மத்தவங்க ஏண்டா உன்ன அடிக்க வராங்கன்னுவாங்க?’
‘சரி நீ பாத்து வீட்டுக்கு போ’
வழக்கம்போலவே, அன்றும் விக்னேஷை வழிமறித்து அறைய வந்த முத்தலீப் சட்டென்று கையைக் கீழே இறக்கிக்கொண்டான். அவன் கைகளில் நடுக்கமும் கண்களில் ஒரு வித பயமும் தெரிந்தது. முத்தலீப் பார்த்த திசையில் அவனும் பார்த்தான். அங்கே ஏழெட்டுப் பேர் கையில் பேனாக்கத்தியுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களின் மத்தியில் அக்கும்பலின் தலைவன் ஹோ தூன் ஹாய் நின்றுகொண்டிருந்தான். பள்ளியில் இரண்டாவது ஆண்டாக உயர்நிலை மூன்றில் படிக்கும் மாணவன். அவனுக்குப் பக்கத்தில் புலேந்திரன் நின்றுகொண்டிருந்தான்.
தூன் ஹாய் அவனை மூத்தலீப்பை அறையுமாறு கட்டளையிட்டான். இத்தனை நாள் பட்ட வேதனையும் வலியும் விக்னேஷுக்குள் விஸ்வரூபம் எடுத்தது. ஓங்கி அறைந்தான். ஓர் அறையிலேயே முத்தலீப் தடுமாறினான். அவன்கூட இருந்தவர்கள் ஆளுக்கொரு பக்கமாக ஓடினர். விக்னேஷூக்கு அன்றுதான் தன் வலிமை தெரிய வந்தது. தூன் ஹாய் அவன் தோளில் கையை வைத்துப் புலனேந்திரனிடம் சீன மொழியில் ஏதோ சொன்னான். புலேந்திரன் தொடக்கப்பள்ளியிலிருந்து தாய்மொழிப் பாடமாகச் சீன மொழியைக் கற்றுக்கொண்டிருப்பவன்.
புலேந்திரன் அவனை வீட்டிற்குப் போகச் சொன்னான். மறுநாள் காலை, தூன் ஹாய் பள்ளியின் ஓய்வு நேரத்தின்போது சிற்றுண்டிச்சாலையில் அவனைப் பார்க்க வந்தான். அவன் கையில் ஒரு பென்சில் பொக்ஸ் இருந்தது.
‘இதை வைத்துக்கொள்’
விக்னேஷ் விழித்தான்.
‘தெரிந்தோ தெரியாமலோ எனது வட்டத்திற்குள் வந்துவிட்டாய், எந்நேரமும் உனக்கு ஆபத்து வரலாம். வராமலும் போகலாம். இனி, நீ மிகவும் கவனமாக இருக்கவேண்டும். தைரியமாக இரு. எதையும் எதிர்த்துப் போராட துணிவுடன் இரு, ஏதும் பிரச்சனனா புலேந்திரனிடம் கூறு’
வீட்டிற்கு வந்துதான் அந்தப் பென்சில் பொக்ஸைத் திறந்து பார்த்தான். அதனுள் ஹீரோ ஃபௌன்டன் பேனாவும் அதனுடன் தினசரி பேப்பரால் சுற்றப்பட்ட ஒரு பேனா கத்தியும் இருந்தது. கூடவே ஒரு வாசகமும் இருந்தது. இதில் எது உனக்கு முதலில் பயன்படுகிறதோ அதில்தான் உனது வாழ்க்கை அடங்கியிருக்கிறது.
ரௌத்திரம் பழகு
ஒரு மாலை சாயும் பொழுதில் சிங்க நடன இணைப்பாட வகுப்பு முடிந்து வரும்பொழுது புளோக் கீழே கூட்டமாக இருந்தது. அருகே ஆம்புலன்ஸ் வண்டியும் போலீஸ் ரோந்து வண்டியும் சைரன்ஸ் ஒளியைச் சுழலவிட்ட வண்ணம் நின்றுகொண்டிருந்தன. விக்னேஷ் அருகில் சென்று பார்த்தான். அதிர்ச்சியில் உறைந்துபோனான். புளோக்கின் அருகில் இருந்த கால்வாயில் புலேந்திரனின் உடல் பல வெட்டுக்காயங்களுடன் கிடந்தது.
‘இப்பத்தான் யாரோ ஒரு நாலைந்து பேர் அவனைக் கீழே தள்ளி, பாராங்கத்தியால தாக்கிட்டு, இதுல தள்ளிட்டு ஓடிட்டானுங்க’
‘உயிரிருக்கா’
‘ஆம்புலன்ஸ் வந்தவுடனேயே செக் பண்ணிட்டாங்க. உடம்புல உயிர் இல்லனு சொல்லிட்டாங்க. அப்புறந்தான் அவங்க தகவல் சொல்லி போலீஸ் வந்திருக்கு. போலீஸோட ஃபோமலட்டிலா முடிஞ்ச பிறகுதான் எடுப்பாங்க போலிருக்கு’
அதற்குள் அருகில் இருந்தவர்கள் கொடுத்த பழைய பேப்பர்களால் புலேந்திரனின் உடலை ஒரு போலீஸ்காரர் மூடிக்கொண்டிருந்தார். சற்றுத் தள்ளி புலேந்திரனின் அப்பா கதறியழும் அவனின் அம்மாவைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். பிள்ளையை இழந்த ஒரு தாயின் வலி அங்குள்ளவர்களைக் கலங்க வைத்தது. வலியின் கடத்தல் சொற்களின் வாயிலாகச் சொல்லப்படாமல் கதறலால் காற்று வெளியெங்கும் வியாபித்து அனைவருக்குள்ளும் இறங்கிக்கொண்டிருக்கவேண்டும். அனைவரின் முகத்திலும் ஒரே சாயலாய் அது ஒட்டிக்கொண்டிருந்தது. அண்டை வீட்டுக்காரர்களான மாலீக்கின் குடும்பத்தினரும் சானின் குடும்பத்தினரும் அவர்களுக்கு ஆதரவாக ஆறுதலாக நின்றுகொண்டிருந்தனர். அவர்களுக்குப் பக்கத்தில் தூன் ஹாய் நின்றுகொண்டிருந்தான். அவன் கண்கள் நீர்த்திட்டுகளுடன் சிவந்திருந்தன. அதனுள் ஒரு வெறியின் ஒளிப்படலம் ஒளிர்ந்துகொண்டிருந்ததை விக்னேஷ் கவனிக்கத் தவறவில்லை. இதற்குக் காரணமானவர்களைப் போட்டு விட வேண்டும் என்ற ஒரு தீர்க்கமான வெறி அவன் கண்களிலிருந்து தெறித்துச் சிதறி விழுந்துகொண்டிருந்தது. அவன் அருகில் போய் நின்றுகொண்டான். தூன் ஹாய் அவன் தோளில் கை வைத்து அவனைச் சமாதானப்படுத்தினான்.
‘என்னாலயா’
‘இல்ல, இது ரொம்ப நாளா இருந்தது’
‘அப்ப எப்படி இப்படி தனியா விட்ட’
‘இப்பத்தான் என்கிட்ட பேசிட்டு வந்தான்’
‘அப்புறம் எப்படி இப்படி’
‘ஒளிஞ்சிருந்து பாத்து பின்னாலேயே வந்து, நா இல்லாதப்ப போட்டுட்டானுங்க’
‘என்ன செய்ய போற’
‘நா பாத்துக்கறேன்’
‘நானும் இருப்பேன்’
‘வேண்டாம். நீ நல்லா படிக்கிறவன். படிக்கற வேலய மட்டும் பாரு’
‘அவன் என்னோட நண்பன். எனக்கு கஷ்டம்னவுடன் உதவி செஞ்சவன், நா அவனுக்காக ஏதாவது செஞ்சாகனும்’
தூன் ஹாய் கொஞ்ச நேரம் அமைதி காத்தான்.
‘சரி. கொஞ்ச நாள் ஆவட்டும். பாத்துக்கலாம்’
அந்தக் கொஞ்ச காலத்திற்குப் பிறகு, தூன் ஹாயிற்கு நிகராக வளர்ந்து விட்டான் விக்னேஷ் ‘விக்டர் விக்கி’யாக. பள்ளி, கல்லூரி என முத்தலீப் குண்டர் கும்பலுக்கு நிகராக தூன் ஹாயின் கும்பலின் சாம்ராஜ்யத்தை உருவாக்கினான். முத்தலீப் கும்பல் மாணவர்களிடையே போதைப்பொருட்களை விநியோகிக்கவும் பாலியல் சேவைக்காகவும் மாணவிகளைப் பயன்படுத்திய வேளையில், விக்டர் விக்கி தூன் ஹாயின் துணையோடு அவர்களை எதிர்க்கத் துணிந்தான். மாணவர்களை முத்தலீப் குழுவின் பிடியிலிருந்து மீட்டு அவர்களுக்குப் பாதுகாப்பு அரணாக நின்றான். முத்தலீப் கும்பலின் பின்புறத் தாக்குதலால் தூன் ஹாயின் இறப்பிற்குப் பிறகு, அக்கும்பலின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டான் விக்டர் விக்கி. புலேந்திரனின் மறைவுக்குப் பிறகு அவர்களுடன் இணைந்த அவனின் தம்பி குணா, விக்டர் விக்கிக்கு வலதுகரமானான் ‘டேரிங் குணாவாக’.
குண்டர் கும்பலில் ஈடுபடுத்திக்கொண்ட பல மாணவர்களை அவர்களின் வழக்கமான வாழ்க்கைக்குக் கொண்டு செல்ல அதிக நேரத்தையும் உழைப்பையும் கொடுத்தான். ‘சிண்டா’ என்ற இந்தியர் அமைப்பின் உதவியோடு அப்படித் தனிக்கவனம் செலுத்தும் மாணவர்களிடம் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டதையும் அவன் கண்டான். பலர் குண்டர் கும்பல்களிலிருந்து மீண்டு பள்ளிப்பாடங்களிலும் இணைப்பாட நடவடிக்கைகளிலும் நல்ல மதிப்பெண்களைப் பெற்றனர். கடவுள் இவ்வுலகிற்குத் தன்னைத் தந்ததற்கான காரணத்தை அவன் தெளிவாகத் தெரிந்துகொண்டு அதற்கேற்பத் தன் செயல்நடவடிக்கைகளை மாற்றிக்கொண்டு வாழத் தொடங்கினான்.
சேர்க்கை அழியேல்
ஜூரோங் நகராண்மைக் கழகம் உருவாக்கிய முதல் வீடமைப்புப் பேட்டைதான் தாமான் ஜூரோங். இதற்குப் பிறகே, பூன்லே கார்டன், தேபான் கார்டன், பாண்டான் கார்டன் என அடுத்ததடுத்த வீடமைப்புப் பேட்டைகள் உருவாக்கப்பட்டன. தாமான் ஜூரோங்கில் உள்ள யூங் ஷெங் சாலை, கோர்பரேஷன் சாலை சந்திப்பில் பழைய தாமான் ஜூரோங் திரையரங்கு இருந்தது. மேற்குப் பகுதிகளின் முதல் திரையங்கம் எனக் கூறப்பட்டாலும், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஜோ டேவிட் என்பவர் திறந்தவெளி சினிமாவை இப்பகுதியில் உள்ள யுவான் சிங் சாலையில் நடத்தியுள்ளார். இந்தத் தாமான் ஜூரோங் திரையரங்கம் இருந்த இடத்தைத்தான் இப்போது எஸ்-11 என்ற உணவகம் வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறது.
இத்தகைய சரித்திரம் வாய்ந்த அந்த இடத்தில்தான் ஒரு நாள் இரவு அந்தச் சந்திப்பு நடத்தப்பட்டது. பெரும்பாலும் ‘டேபள் டோக்’ எனச் சொல்லப்படும் ஒருவகை பேச்சு வார்த்தை நடக்கக்கூடிய சந்திப்பு அது. சில சமயங்களில் நட்பார்ந்ததாகவும் அடிதடிகளிலும் இதுபோன்ற சந்திப்புகள் முடிவடைவதுண்டு. டேரிங் குணா சொன்னபடியே அங்கு வந்து சேர்ந்துவிட்டான். அவன் வந்த சிறிது நேரத்திற்குப் பிறகு, பயங்கரமான சத்தத்துடன் நாலைந்து பெரிய பெரிய மோட்டார் சைக்கிள்கள் வந்து நின்றன. முத்தலீப்பைத் தொடர்ந்து மற்றவரும் டேரிங் குணாவை நெருங்கி வந்தனர். சமரச அறிமுகத்திற்குப் பிறகு, அனைவரும் ஏற்கனவே அவர்களுக்காக முன்பதிவு செய்யப்பட்ட ஒரு பெரிய மேசையில் உட்கார்ந்துகொண்டனர். மேசையின்மேல் சின்ன சின்ன வாளிகளில் ஜஸ்கட்டிகள் நிரப்பப்பட்டு மதுப்பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தன. சிகரெட் துகள்களைத் தட்டுவதற்காகப் பழைய பால்டின்களினால் வடிவமைக்கப்பட்டுப் பாதி தண்ணீர் நிரப்பப்பட்ட இரண்டு எஸ்திரேய்களும் அங்கு இருந்தன. அதற்குள் எப்பவோ எரிந்துபோன சிகரெட்டுகளின் துகள்கள் மிதந்துகொண்டிருந்தன.
‘மைக், இன்னும் எவ்வளவு நாளைக்குதான் அவனுக்கு கீழ இருக்கப்போற, நாம இருக்கோம். துணிஞ்சி இறங்கு. தூரூன் கொடுத்துருவோம்’
‘ஆமா, மைக். உன்னோட அண்ணனுக்கு அப்புறம் உன்னதான மைக் தலயா ஆக்கியிரிருக்கனும். எங்கள பாத்து பயந்து ஓடுனவ கிட்ட நீ இருக்கக்கூடாதுலா மைக்’
‘என்ன மைக், டியாமா இருக்கீங்க. மக்கள்ஸ் நம்பள நம்பல போல’
‘ஆமா அவங்க அண்ணன நம்பதான போட்டோம்னு நம்ப மேல கோவம் இருக்காதா’
‘மைக், அது பழசு. அதுக்குத்தாலா இப்ப கூப்புட்டு பேசுறோம்’
‘இந்த லைன்ல நிரந்தர நண்பனும் இல்ல. நிரந்தர எதிரியும் இல்ல’
‘நாங்க சொல்றபடி செய் மைக். அதுக்கப்புறம் நீதான் தல. ஸ்கூல்லயும் ஐடியில்லயும் பொட்டலத்த நீ ஓட்டு மைக்’
‘எவ்வளவு நாளைக்குதான் மைக் அவனுக்கு கீழய இருப்ப. நீயும் வாழ்க்கயில செட்டல் ஆவனும் மைக். லோபாங் கிடைக்கிறப்ப சம்பாதிச்சரனும் மைக்’
‘இப்பவே சொல்லனும்னு இல்ல மைக். யோசிச்சிட்டு சொல்லு.’
முதல் ஷியஸுடன் கிளாஸ்கள் ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டன நட்பாக. இரண்டு நாட்களுக்குப் பிறகு, டேரிங் குணா முத்தலீப்பை அழைத்துப் பேசினான். அவன் சொன்னபடியே டேரீங் குணா,
‘அண்ண, ஒரு ஸ்கூல் புள்ளய கடத்திட்டாங்கண்ண. லிம் சூ காங் சீன சுடுகாட்டு பக்கமா ஒரு வேன்ல வச்சி கைமாத்தப்போறாங்க. உடனே வந்தா காப்பாத்திடலாம்ணா’
லிம் சூ காங் சீன சுடுகாட்டுக்கு விரைந்த விக்டர் விக்கி அங்கே நின்றுகொண்டிருந்த ஒரு வேன் அருகே செல்லவும் திமுதிமுவென்று அந்த வேனிலிருந்து இறங்கிய நாலைந்து பேர் பாராங்கத்தியால் அவனைத் தாக்கினர். எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்து சிதைந்துபோனான்.
வௌவுதல் நீக்கு
விடியற்காலை மணி 2.20.
கேலாங்கின் லோரோங் பத்தில் உள்ள ஸேர்ரி லோப்ட் மூன்று நட்சத்திரத் தங்கும் விடுதியில் இருந்த சீனப் பெண் அதிர்வு நிலையில் துடித்த தன் கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள்.
‘இரண்டு கத்தி முத்திரையிட்டு, கதவைத் திற’ என்றிருந்தது.
டேரீங் குணா இன்னமும் புகை வெளிகளில் விரல்களில் சிகரெட்டோடு ஜன்னலோரம் நின்று, மஞ்சள் ஒளி வீச்சில் மயங்கிக் கிடந்த சாலையைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
பின் குறிப்புகள்:
தூரூன் (மலாய்) கொடுத்துருவோம் – கூட இருக்கிறோம்
டியாமா (மலாய்) – அமைதியாக
ஐடிஈ – தொழில்நுட்பக் கல்லூரி
பொட்டலத்த ஓட்டு – போதைப்பொருள் விநியோகித்தல்
லோபாங் (மலாய்) – வாய்ப்பு