கோபுரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: August 10, 2021
பார்வையிட்டோர்: 37,305 
 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த நால்வரும், அந்த வீட்டில் உள்ளவர்களை மிருகங்களைப் போலக் கட்டிப் போட்டிருந்தார்கள். குடிசை வாசிகளுக்கு பங்களாவாகவும் பங்களாக்காரர்களுக்கு அவுட் ஹவுஸாகவும் தோன்றும் அந்த வீட்டின் பின்கதவின் அருகே போடப்பட்டிருந்த இரும்புக் கட்டிலோடு சேர்த்து கோமதி கட்டப்பட்டிருந்தாள். அவள் வாயில் தரையைத் துடைப்ப தற்காகப் பயன்படுத்தும் அழுக்குத் துணி அப்பிக் கிடந்தது. இரண்டு கைகளையும் எடுத்துக் கட்டில் கால்களில் கட்டிப் போட்டிருந்தார்கள். கண்களில் நீரூற்றாகி , கன்னங்களில் அருவி போல் பொழிந்த நீர், தரையில் துளித் துளியாய் விழுந்து கொண்டிருந்தது. வாயில் துணி இருந்ததால் மஞ்சள் பூத்த அவள் முகம் வாயற்ற வடிவமாய் வதங்கிக் கிடந்தது.

அந்தப் பின்னறையின் ஒரு மூலையில் தள்ளாத வயது மூதாட்டி காமாட்சியின் இரண்டு கைகளும் கால்களோடு சேர்த்துக் கட்டப்பட்டிருந்தன. முட்டிக்கால்களே வாய்க்கு அடைப்பாக , அவள் குறுக்கப்பட்டிருந்தாள். பேத்தியையும் பேரனையும் பிரிக்கக் கூடாது என்று பெரிய மனது வைத்தது போல் அவளருகே அதே மாதிரி பதினைந்து வயது பையன் ரவி, ஒயர் கயிறால் முடக்கப்பட்டுக் கிடந்தான். கோமதிக்கு முன்னால் ஒருவன் கசாப்புக் கத்தியோடு நின்றான். இன்னொருத்தன் பாட்டியின் பக்கம். மூன்றாமவன் அங்கு மிங்குமாக நோட்டமிட்டுக் கொண்டிருந்தான். நான்காவது ஆசாமி முன்னறையில் மீனாவைச் சுவரோடு சுவராக நிறுத்தி, அவள் கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டிருந் தான். அவள் தொண்டையில் லேசாக ரத்தக் கோடு தெரிந்தது. அவர்கள் கையிலிருந்த கத்திகள் அவர்கள் கண்களையே கூச வைத்தன.

எல்லாம் ஏழெட்டு நிமிடங்களில், சினிமாவில் நடப்பதை விட , படு வேகமாக நடந்துவிட்டது. மணி இரவு எட்டுத்தான் இருக்கும். ஆனால் பலத்த மழை. ஒவ்வொரு மழைக்கோடும் வெள்ளிக் குச்சியாய் பூமியை விளாசிக் கொண்டிருந்த நேரம். மின்னல்கள் இடி இடியாய் இடித்துக் கொண்டிருந்த வேளை. வழக்கம்போல் கார்ப்பரேஷன் தெரு விளக்குகள் கண் பார்க்க வில்லை.

மழையைப் பார்த்த உடனேயே மயிலாகிறவள் மீனா. வீட்டின் வராந்தாவில் மூங்கில் நாற்காலியில் உட்கார்ந்தபடி பூமி கிரகித்த மேக வெள்ளத்தையும், அந்த வெள்ள அருவி யின் சங்கீத நர்த்தனத்தையும் தவளைகளின் மிருதங்கச் சத்தத்தோடு ரசித்துக் கொண்டிருந்தவள், மின்னல் வெடிப்பு களுக்குப் பயந்து போய், நாற்காலியைக் கூட எடுக்க மறந்து போய் , உள்ளே போய் கதவை மூடிக் கொண்டாள். சமைய லறைக்கு அடுத்த அறையில் ஒரு ஜன்னல் கதவைத் திறந்து வைத்து, மழையை ரசித்துக் கொண்டு தண்ணீரைத் தரை யில் விட வைத்த தம்பி சிவாவை, ஓர் அதட்டுப் போட்டு , அவனையே அந்த ஜன்னலை மூடும்படி செய்தாள். பின் பக்கம் உள்ள தாழ்வார் அறையில் காமாட்சிப் பாட்டி இருமிக் கொண்டிருந்தாள். அவளுக்கு மழை வாடையே ஆகாது. ஆகையால், மூக்கு மழை பொழிய வாய் இடிகளாக, அந்த முதியவள் தானே ஒரு தனி மழை என்று காட்டிக் கொண்டிருந்தாள்.

சமையலறையில் கோமதி, பாத்திரங்களைக் குடையும் சத்தம் மழைச் சத்தத்தில் அதிகமாகக் கேட்கவில்லை. ஆனாலும், ஒவ்வொரு பாத்திரக் கழுவலுக்கும் ஒரு தடவை ‘அவரைக் காணமே, இந்த மழையிலே எங்க நிக்கறாரோ’ என்று தன் பாட்டுக்குப் புலம்பிக் கொண்டாள். பிறகு அவர் வருகிறாரா என்று பார்ப்பதற்கு ஜன்னல் கதவு ஒன்றின் கொக்கியை அகற்றிய போது, அந்தக் கண்ணாடி ஜன்னல் பட்பட்டென்று அந்த வீட்டிற்கு மாரடிப்பதுபோல் அடித்தது. பின் பக்கம் கிடந்த பாட்டியம்மாள் ‘சீனி வரலியா, சீனி வரலியா’ என்று இருமல்களுக்கு இடையே கேட்டாள். உடனே மருமகள்காரி, மகள் இருந்த அறைப் பக்கம் போய் “அப்பாவைக் காணுமே’ என்றாள். ‘வந்துடுவாரும்மா’ என்று மகள் சொல்வதை கேட்க வேண்டும் என்று ஒரு ஆறுதல். அந்த மகளோ, வந்துடுவார்’ என்று ஒற்றை வரியில் பதில் சொல்லிவிட்டு முகத்தைப் பின்பக்கமாகத் திருப்பி , பாட்டி…. பாட்டி ஸ்விட்சை தொட்டு வச்சுடாதே… நல்ல நாளுலேயே ஷாக் அடிக்கும். மழை சமயத்துல கேட்க வேண்டாம்” என்று சொன்னாள். பிறகு தம்பியைப் பார்த்து ‘அப்பாவைப் போய் பார்த்து விட்டு வாயேண்டா தடியா’ என்றாள். அவன் அவள் மீது தடிப்பார்வையைப் போட்டு விட்டுப் புறப்படப் போனபோது, அக்காக்காரி அவனை இழுத்துப் பிடித்துக் கொண்டாள். எல்லோரும் அவரைக் காணுமே என்று கவலைப்பட்ட நேரம். அதே சமயம் மழைக்கு எங்கேயாவது ஒதுங்கியிருக்கலாம்.

இந்தச் சமயத்தில் தான் காலிங்பெல் சப்தம் கேட்டது. பையில் வைத்திருக்கும் டிரான்ஸிஸ்டர் ரேடியோ செட் மாதிரி கதவின் மேல்புறச் சுவரில் பொருத்தி வைக்கப்பட்டி ருந்த ஒரு சின்ன செவ்வகப் பெட்டியின் அடிவாரம் தீப்பிடித்தது போல் எரிந்தது. அதற்கு மேலே இருந்த ஒரு பறவை பொம்மை இடைவிடாது ஒலித்தது. வீடு கட்டிய கையோடு, இந்த காலிங் பெல்லை சீனிவாசன் வாங்கி வந்த போது, கோமதி சப்தம்’ போட்டாள். ‘என்ன இப்படி அப சகுனமா? தீனிக்கு அலையுற பருந்துப் படம். அதே மாதிரி ‘சத்தமும்’ என்றாள். உடனே அவர், ‘இப்போ நீ பேசறது தான் அபசகுனம்’ என்றார். அவள் கோபப்படப் போன போது சிரித்தார். இப்படித்தான் …. அசாதாரண விஷ யத்தை சாதாரணமாகச் சொல்லிவிட்டு, பிறகு ஒரு சிரிப்புச் சிரிப்பார். அவரோடு சேர்ந்து கோபப்படுகிறவர்களும் சிரிப்பார்கள். அப்படிப்பட்ட அழுத்தமான நிர்மலமான முகம்.

காலிங் பெல் குரலிட்டுக் கொண்டே இருந்தது. சீனி வாசன் , அந்த யந்திரப் பறவையை ஓரிரு தடவைதான் குரலிட வைப்பார். இப்போதோ அது ஓயாமல் ஒலித்தது. இந்த வித்தியாசம் புரியாமல் தாயும் மகளும் போட்டி போட்டுக்கொண்டு பேய் மழையில் வாசல் படியோடு , ஒட்டிக் கொண்ட கதவைப் பிய்த்தெடுப்பது போல் பாதி திறந்த போது –

நான்கு பேர் உள்ளே ஒட்டு மொத்தமாக வந்தார்கள். ஒருவன் தாயையும் மகளையும் கதவு இடுக்கில் தள்ளிவிட் டான். இன்னொருத்தன் , அந்தக் கதவை அவர்கள் மேல் கொண்டு வந்து வாய் பேச முடியாமல் அழுத்தினான். இரு வரும் செயலற்று நின்றபோது ; ஒருவன் ஒரு கத்தியை எடுத்து அவர்களின் கழுத்துக்களில் சாத்தி வைத்து, பிடியை மட்டும் பிடித்துக் கொண்டான். நாலாவது ஆசாமி கதவை ஓசைப் படாமல் மூடினான் அந்தப் பெண்கள் மேல் கத்தி வைத் திருந்தவன் , கோமதி கழுத்திலிருந்த கத்தியை விடுவித்த போது இன்னொருத்தன் அவள் முடியை மூன்பக்கமாகக் கொண்டு வந்து முறுக்கி , கையில் வைத்துக்கொண்டு கசாப் புக் கத்தி போல் இடுப்பில் இருந்த ஒன்றை எடுத்து அவள் பிடறியில் வைத்துக்கொண்டு பின்னறைக்குள் இழுத்துச் சென்றான். இன்னொருத்தன் சிவா இருந்த அறைக்குள் போய் , அவன் கரங்களைப் பின்புறமாக வளைத்து நகர்த்திக் கொண்டிருந்தான். ஒரே ஒருத்தன் மட்டும் அந்த வீடு முழு வதையும் நோட்டம் போட்டுக்கொண்டிருந்தான். காமாட்சிப் பாட்டி கத்தப் போகிற சத்தம் கேட்டது. பிடிபடும் கோழி ஆடி அடங்குவது போல் அவள் சத்தமும் அடங்கியது. தள்ளிக்கொண்டு வரப்பட்ட, கோமதி இரும்பு மேஜையுடன் கட்டி வைக்கப்பட்டாள். வீட்டை நோட்டம் போட்டவன், எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு, ஒரு ஜீரோ வாட் சிவப்பு விளக்கை மட்டும் எரிய விட்டான்.

கதவுப் பக்கத்துச் சுவரில் கத்தி முனையில் நிறுத்தப்பட்டிருந்த மீனாவை, காவல்’ காத்தவன், அந்தக் கத்தியை எடுத்து ஒரு கையில் கொடுங்கோலாய்த் தூக்கிக்கொண்டு, இன்னொரு கையால் அவளை அரை வட்டமாய்ச் சுற்றித் தனக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தினான். தூக்கிப் பிடித்த கத்தியை அவள் பிடறியில் வைத்துக்கொண்டு “உம்…. நட’ என்று சொல்லிவிட்டு, பிடறிப்பட்ட கத்தியை லேசாய் அழுத்தினான். கண்களில் மீன் குஞ்சுகளை, பேருக்கு ஏற்றாற்போல் நீந்த விட்டிருப்பது போல் தோற்றம் காட்டும் மீனா , இப்போது கண்களே அற்றுப் போனதுபோல் குனிந்து நடந்தாள். நிமிர்ந்தால் பிடறி அறுபடும் நிலை. பிராண வலி. முகமே கண்களுக்கு மூடியாகப் போன அவளை அம்மாவுக்கு முன்னால் நிறுத்தினான். தாயும் மகளும் விம்மினார்கள். மகளின் வாயை அவன் கைகளால் பொத்தினான். இருமலை வெளிப்படுத்த முடியாமல் திண்டாடிய பாட்டியும், அவள் பேரனும், காதுக்குச் சரியாய் கேட்காத கலவைச் சத்தங்களை எழுப்பினார்கள்.

இதற்குள் மீனாவுக்கும் கோமதிக்கும் இடையே இரண்டு பேர் வந்தார்கள். மீனா கண்களால் அம்மாவைச் சுட்டிக் காட்டி, அவர்கள் தலைவன் போலிருந்த ஒருவனைப் பார்த் துக் கையெடுத்துக் கும்பிட்டாள். அவன் கிருதா மீசைக்காரனும் அல்ல. இந்த மாதிரியான காரியங்களுக்கான உடம்பனும் இல்லை. அசல் சாதாரணம். நீலப் பாண்ட் பச்சை சட்டை. இருட்டில் டாலடித்த கடிகாரம். ஆக மொத் தத்தில் ஜென்டில்மேன் – கேடி. மீனாவிடம், சாவகாசமாகச் சொன்னான்.

“ஒங்க உயிருக்கு இவங்ககிட்டயிருந்து நான் காரண்டி கொடுக்கிறேன். ஆனா அதுக்கு நீங்க நான் சொல்றதைச் செய்யணும்.சட்டுப்புட்டுன்னு ஒங்கம்மா கழுத்துல, காதுல, கையில் கிடக்கறதைக் கழட்டு டேய் உன்னைத்தான். கிழவிகிட்ட ஏதாவது தேறுமான்னு பாருடா…”

மீனா, தயங்கினாள். அவள் தயங்கத் தயங்க, அவள் பிடறியில் கத்தி அழுத்தியது. அவள் வலி பொறுக்க முடியா மல் சிணுங்கினாள். உடம்பை நெளித்தாள். அந்த அவஸ் தையைப் பார்த்த அம்மா, மகளைத் தன் பக்கம் வந்து ஆக வேண்டியதைச் செய்யும்படி தலையசைத்தாள். இதற்குள் ஒருத்தன் அவள் ஆட்டிய தலையை இரும்புச் சட்டத்தில் அசைவற்று வைத்து அழுத்தினான். இப்போது, அம்மாவின் அவஸ்தையைப் பார்க்க முடியாதது போல் மனா யந்திரகதி யில் செயல்பட்டாள். அம்மாவின் மூக்குத்தியையும், கை வளையல்களையும் கழுத்துச் செயினையும், வேக வேகமாகக் கழற்றி ஜென்டில்மேன் – கேடியிடம் கொடுத்தாள்.

அடுத்து, மீனா பீரோ இருந்த அறைக்குக் கொண்டு வரப்பட்டாள். இப்போது அவள் கத்தியின் உந்துதல் இல் லாமல் தானாகவே நடந்தாள். குடும்பத்தினரின் கட்டுக்கள் சீக்கிரம் அறுபட வேண்டும் என்று ஒரு ஆவேசம். பீரோவின் அலமாரிக்குள் இருந்த கல் அட்டியல், எட்டுப் பவுன் உருட் டுச் செயின், நான்கு தங்க வளையல்கள் ஆகியவற்றைப் பாராமுகமாக எடுத்து ‘ஜென்டில்மேன் – கேடியிடம்’ கொடுத் தாள். அவன் அவற்றை வலது கையில் வைத்துக் குலுக்கிக் கொண்டே ‘கவரிங்கா, தங்கமா?’ என்று கேட்டுச் சிரித்தான்.

எல்லாம் முடிந்து விட்டது. அவர்களுக்குத் திருப்தி. மீனாவை வாயோடு சேர்த்து உடம்பையும் கட்டிப் போட்டு விட்டு வெளியே கதவை சாத்தி விட்டுப் போக வேண்டியது தான் பாக்கி. திடீரென்று காலிங் பெல் சப்தம். தலைவன், கதவைத் திறக்காமல் முன்னறைக்குள் போய் ஒரு ஜன்னலை லேசாய்த் திறந்து ஊடுருவிப் பார்த்தான். ஒற்றை ஆள் தான். அதுவும் புல் தடுக்கி மாதிரி.

தலைவன், கதவுப் பக்கம் போனான். அதன் தாழ்ப் பாளை மெல்ல விலக்கி ஒரு ஆள் நுழையும் அளவுக்கு ஒடுக்க மாக வைத்துக் கொண்டான். உள்ளே வந்தவரின் கையைப் பிடித்திழுத்து அப்படியே அவரைத் தரையில் மல்லாக்காகக் கிடத்தினான். ஈரம்பட்ட துணியால் தரையையும் ஈரமரக்கி யவரை அவன் தூக்கி நிறுத்தியபோது, ஒருவன் கதவைப் பூட்டிவிட்டு சீனிவாசன் கழுத்தைச் சுற்றிக் கத்தியை வளைத் தான். பிறகு அந்தக் கத்தியை நேராக்கிவிட்டு அவர் நெஞ் சில் நேராக அதன் முனையைக் குத்தவிட்டபடி நின்றான். சீனிவாசன் மோவாயைத் தடவினார். கண்ணெதிரில் தன் னைப் பார்த்துத் துடித்துக் கொண்டிருந்த கோமதியை துடிப் போடு பார்த்தார். அப்பா’ என்று கேவிக் கொண்டு அவர் பக்கம் போகப் போன மகள் மீனாவின் வாய் கத்தியின் பின் புறத்தால் அடைபட , இன்னொருத்தன் அவளைச் சிறை யெடுத்தது போல், தோளையும் வாயையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.

சீனிவாசன் , அடிதடிக்கு உரிய உடம்புக்காரர் அல்ல. பூஞ்சை என்று சொல்ல முடியா விட்டாலும் ஒல்லி என்று சொல்லலாம். ஆனால், உடம்பை ஈடுகட்டுவது போல் கூர்மையான பார்வை. நாற்பத்தெட்டு வயதிருக்கலாம்.

மனைவி கட்டப்பட்டிருக்கும் திசையை அவர் மேல் நோக்கிப் பார்த்தபோது, கோபுரம் போல் தோன்றிய படங்கள் அவர் கண்களில் தென்பட்டன. குறுக்காய் அடிக்கப்பட்ட வரி வரி யான இடைவெளிகளுக்கு இடைவெளி விட்ட சட்டங்கள். அடியில் ஒரு பக்கம் மீசை முறுக்கோடு பாரதி. இன்னொரு பக்கம் நறுக்கு மீசை பாரதிதாசன். அதற்கு மேல் கையை மடக்கி வைத்துக் கொண்டு வீறாப்பாய் நிற்கும் விவேகா னந்தர். இந்த மூன்று படங்களுக்கும் மேல் இரட்டைப்படம்… ஒரு பக்கம் சுபாஷ் சந்திரபோஸ். மறுபக்கம் பகத்சிங். இந்த இரண்டு படங்களுக்கும் மேல் ஒரு சின்னப்படம். ஒரு பொக்கை வாய்க் கிழவனின் படம்…

சீனிவாசன், அந்தப் படங்களையே பார்த்தார். ‘அச்ச மில்லை அச்சமில்லை’ என்று மீசைக்காரன் பாடுவது காதில் ஒலித்தது. ‘கொலை வாளினை எடுடா’ என்று நறுக்கு மீசைக்காரன் அவரை உற்றுப் பார்த்தான். ‘எழுமின், விழி மின்’ என்றார் விவேகானந்தர். ‘ஒரு நாட்டுச் சுதந்திரத் தைப் போல் வீட்டுச் சுதந்திரமும் அது பறிபோகும் போது மௌனிப்பவன் கோழை’ என்றார் சுபாஷ். அந்த பொக்கை வாய்க் கிழமோ, ‘செய் அல்லது செத்து மடி” என்றார். வெள்ளையனே வெளியேறு என்பது ‘கொள்ளையனே வெளி யேறு’ என்பது போல் கேட்டது.

சீனிவாசன் யோசிக்கவில்லை, கழுத்தில் பட்ட கத்தியை தன் பங்குக்கும் தடவிக்கொண்டே அவர்களைப் பார்த்து அமைதியாகப் பேசினார்.

“நல்லாக் கேளுங்களப்பா நான் உங்களைப் போகவிடா விட்டால் நீங்க என்னைக் கொல்ல வேண்டியது வரும். என் குடும்பத்தையும் சின்னாபின்னமாகச் சிதைக்க முடியும். இதைத் தெரிந்து தான் சொல்றேன். எனக்கு ஆபீஸ் உத்தியோகம் மாதிரி – உங்களுக்கும் இது ஒரு உத்தியோகம். நீங்க கொள்ளையடிச்சுட்டு போனதா, நாளைக்கு போலீஸ்ல புகார் கொடுப்போம் என்கிறதும் உங்களுக்குத் தெரியும். அதனால நாய்தான் வருமே தவிர நகை வராதுன்னு உங்களுக்குத் தெரிஞ்சது மாதிரியே எனக்கும் தெரியும். போலீஸ்காரன் உங்களுக்குக் கூட்டாளியா இல்லாவிட்டாலும், பகையாளியா இல்லை என்பதும் எனக்குத் தெரியும். இன்னும் ஒங்களுக்குத் தெரிஞ்ச ஒண்ணே ஒண்ணையும் சொல்லிடறேன்…களவுன்னு வந்தா கவலைப்படாத போலீசும், இந்தத் தெருவும், கொலைன்னு வந்தா உங்களை கூண்டுல ஏத்தாம விடாது. பத்திரிகைக்காரங்க சும்மா இருக்க மாட்டாங்க….உங்களுக்குத் தூக்குத் தண்டனை இல்லாவிட்டாலும் ஆயுள் தண்டனை வராமப் போகாது. சும்மா இந்த மாதிரி கத்தியை வச்சு மிரட்டாதே உன்னால ஆனதைப் பாரு… எனக்கு நீங்க நகையை எடுத்துப் போறது பெரிசில்லேடா…ஆனா, நீங்க எந்த வீட்ல வந்து வேணுமுன்னாலும் வந்து அங்க இருக்கறவங்களை எப்படி வேணுமுன்னாலும் செய்து அட்டூழியம் பண்ணலாமுனு உங்ககிட்ட ஒரு அகங்காரம் இருக்கு பாருங்க…அதுக்குத்தாண்டா நான் கோபப்படறேன்….அறிலேயும் சாவு. நூறிலேயும் சாவு. லட்சக்கணக்குல வந்த மாமூல்களை உதறிட்டு என் மகளுக்காக வேர்வை சிந்தி கிராம் கிராமாச் சேர்த்த நகைகளை உங்களுக்குக் கொடுக்கறதைவிட என் உயிரைக் கொடுக்கத் துணிஞ்சிட்டேன். உம்…ஏண்டா சும்மா நிக்கறீங்க…ஆனதைப் பாருங்கடா…”

அந்தக் கொள்ளையர்கள் அசந்து போய் விட்டார்கள். அவர் முகத்தை சுவரோடு வைத்து இடிக்கப் போன ஒரு தடியனை ஜென்டில்மேன் – கேடி தடுத்து விட்டான். கையைக் குறுக்கும் நெடுக்குமாக வைத்துக்கொண்டு அங்குமிங்குமாக உலாத்தினான். அவர் சொல்வது அவனுக்கு நன்றாகவே பட்டது. ஒரு கொலையைச் செய்தால் நகைக்கு நகையும் போய் தூக்குக்கு தூக்கும் கிடைக்கும் என்பதைத் தெரிந்து வைத்திருந்தவன் போல் தலையை அங்குமிங்கும் வட்டமடித் தான். அவன் முடிவையே பிறர் ஆவலோடு எதிர்பார்த்தார்கள். மீனா பிடறியில் பட்டிருந்த கத்திகூட கால் அங்குல இடைவெளி விட்டு நின்றது. ஆனால் கட்டிப்போட்ட கோமதி முண்டியடித்தாள்.

சீனிவாசன், மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. கைகளை அந்த விவேகானந்தர் மாதிரி கட்டிக் கொண்டார். பார்வையை அந்த பாரதி விட்டுக் கொண்டார். மனைவி அப்படி கட்டுப்பட்டுக் கிடப்பதைக் கூட சாதாரணமாகப் பார்ப்பது போல் பார்த்தார். ஒருத்தனின் பிடிக்குள் திமிறிய மகளை அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்பது மாதிரியும் எதிர்பார்த்த விஷயம் என்பது மாதிரியும் பார்த்தார். பார்வைக்கிடையே, “நீ பாரத மாதாடி….அழக்கூடாது” என்றார் கம்பீரமாக.

கேடிகளுக்குப் புரிந்துவிட்டது. ஒரு கொலையைச் செய்யாமல் அங்கிருந்து போக முடியாது. இப்போது எதையோ பறிகொடுத்தவர்கள் போல் அவர்களே தவித்தார்கள். இறுதியில் ஜென்டில்மேன் கேடி அவன் முன்னால் வந்து மரியாதையோடு கேட்டான்.

“நகைகளைத் திருப்பிக் கொடுத்துடறோம். உங்களையும் உயிரோடு விட்டுடறோம். நாங்க கதவைத் திறந்து வெளில போகும் போது சும்மா இருப்பீங்களா?”

“என் வீட்டுக்கு அத்துமீறி வந்தவங்களை வெளியேத்தறது மட்டும் தான் என் வேலை…”

சீனிவாசன் அவர்களைத் திரும்பிப் பார்க்காமல் நின்ற போது, அந்த நால்வரும் ஓரளவு தைரியப்பட்டு அவரைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே கதவைத் திறந்தார்கள். ஓடாமலே நடந்தார்கள். சீனிவாசனுக்கு அந்த கோபுரப் படங்கள் மீது எவ்வளவு நம்பிக்கையோ, அவ்வளவு நம்பிக்கை இந்த சீனிவாசன் மீது அந்தத் திருடர்களுக்கு.

– பூநாகம் (சிறுகதைகள் தொகுப்பு), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1993, கங்கை புத்தக நிலையம், சென்னை.

சு. சமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம், திப்பனம்பட்டியில் 1941-ம் ஆண்டு பிறந்தார். இள வயதிலேயே தந்தையை இழந்தார். கடையத்தில் ஆரம்பக்கல்வியை முடித்து பாளையங்கோட்டையில் கல்லூரிப் படிப்பை முடித்தார். சு. சமுத்திரம் செங்கல்பட்டு அருகிலுள்ள காட்டுக்கரணை என்ற கிராமத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராக அலுவலக வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழக அரசில் கூட்டுறவுத் துறை ஆய்வாளர், ஊராட்சி வளர்ச்சி அதிகாரி ஆகிய பதவிகளை ஏற்றுப் பணியாற்றினார். ஸ்ரீபெரும்புதூரில் பணியாற்றுகையில் அதிகாரிகளுடன் முரண்பாடு ஏற்படவே பணியைத்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *