சென்னை காவல்துறையின் தலைமை அலுவலகத்தின் ஒரு அறையில், அந்த விசேஷக் குழு விவாதித்துக் கொண்டிருந்தது. அந்த கம்பீர அதிகாரி பேசுவதை சதுர மேஜையைச் சுற்றி அறையினுள் மெளனமாய் அங்கீகரித்தவாறு கேட்டு கொண்டிருந்தார்கள்.
இருந்தவர்களில் பாதி பேர் சாதாரண உடையிலிருந்தாலும் அளவு மீசை, கழுகுக்கண் சின்னங்கள் அவர்களுக்குள் ஒளிந்திருந்த போலீஸ் அதிகாரிகளை அடையாளம் காட்டியது. சுவரில் பிரதமர், முதல்வர் படங்கள் மற்றும் சம்பிரதாய காவல் துறையின் விசேஷ முத்திரைகள் அலங்கரிக்க, ஒரு பக்கத்திலிருந்த பலகையில் அவர்களின் குற்ற
விசாரணைப் பகுதியின் படம் வரைந்து முக்கிய புள்ளிகள் கவனம் ஈர்த்தன.
உயரதிகாரி மாதவன் முந்தைய வாரத்து வெடிகுண்டு, டிசம்பர் ஆறு கலவர பயம், அடுத்த வார உள்துறை அமைச்சர் வருகையின் பாதுகாப்பு ஏற்பாடு என்று ஏகப்பட்ட கவலைகளை மூசைக்குள் ஒளித்துவைத்துவிட்டு, நிதானமாய் அத்தனை நேர விவாதத்தைக் கேட்டு விட்டு “ஏதாவது தகவல் கிடைச்சதா?” என்றார்
“தாமாதரன்னு ஒரு வைர வியாபரி, துபாய், குவைத் இங்கெல்லாம் ஏற்றுமதி பண்றவரு. பிரீஷியஸ் ஜெம்ஸ் னு காதர் நவாஸ் கான் ரோட்டில ஆபீஸ் இருக்கு. இன்னும் ஒண்ணு ரெண்டு பெரிய புள்ளிகள் இதுல சம்மந்தப்பட்டிருக்கலாம்னு தெரியுது சார். ”
“இதுல எவ்வளயா பணம் பண்ணப்போறாங்க”
“ரெண்டு மூணு கோடி வரை பணம் புறளரதாத் தெரியுது சார். அரவிந்துக்கும், ஷெட்டிக்கும் இதுல ஒரு பெரிய பங்குன்னு கேள்வி”
“அரவிந்தா? நம்ப முடியலயே… ஐஞ்சு வருஷம் முன்னால சின்னப் பையன் மாதிரி பால் வடியற முகத்தோட இருந்தான்”
“ஆரம்பிக்கும்போது எல்லாருக்கும் பால் வடியுது சார்”
“கேஷ்ல வாங்கித் தள்ளியிருக்காங்க. பங்களூர்ல ஒரு வீடு, பாம்பேல ஒண்ணு, பினாமி பேர்ல. ஹவாலா மூலமா நெறைய பணம் உள்ள வருது. ”
“என்ன ஏற்பாடுகள் சொல்லுங்க”
“20 பேர், சின்ன சின்ன பிரிவா ஆளுக்கொரு விஷயம் கவனிக்கறாங்க”
“ஜாஸ்தி பாண்டியன்”
“அனுமதி வேணும் சார். இந்த முறை அவர்களை நிச்சயம் பிடிச்சிடலாம் ”
“எங்க தங்கராங்க”
“பெனின்சுலா ஹோட்டல். கருணாகரன் தலைமைல ஒரு குழு கண்காணிக்குது”
“அந்த ஹோட்டலின் தொலைபேசித் தொடர்பைக் கண்காணிக்கறோம் சார். அவங்க தங்கற அறையின் தொலைபேசி உரையாடல்கள் எல்லாத்தையும் பதிவு பண்ண ஏற்பாடு செஞ்சிருக்கோம்”
“ஹோட்டல் தொலைபேசியை உபயோகப்படுத்தலைன்னா?”
“அந்த இடத்தைச் சுத்தி எல்லா செல் போன் உரையாடல்களையும் கால் டிரேசர்…மூலமா டிரேஸ் பண்றோம் சார். இந்த தடவை நம்ம கிட்ட மாட்டியாகணும்”
“வெளிய தெரிஞ்சா விவகாரம் . ஜாக்கிரதை” என்றார் மாதவன்
“தெரியாது சார். நான் பாத்துக்கறேன்”
“இவ்வளவு கலாட்டா பண்ணி ஒண்ணும் பிடிபடலைன்னா கமிஷனர் பந்தாடிடுவார். சி.பி.ஐ கிட்ட விட்டுடலாமே பாண்டியன். அவங்க பாத்துகட்டுமே”
“இல்ல சார் நம்ம டீம் போதும். அந்த அயோக்கியங்களை இந்த தடவை
மாட்டவைக்கிறேன்”
“என்னைக்கு ?. எங்க வச்சி செய்யப்போறீங்க?”
“வர சனிக்கிழமை. எம்.எல்.ஏ ஹாஸ்டல் பக்கத்துல ஒரு இடம் இருக்கு. எல்லா ஏற்பாடும் பண்ணிடலாம் ”
“சரி. வெற்றிகரமா முடிங்க”
ஒரு வாரம் துப்பறிந்து உழைத்ததில் சில தடயங்கள் கிடைத்து மாதவனின் குழு தயாராய் இருந்தது. சனிக்கிழமை அந்த கண்ட்ரோல் அறை முழுவதும் போலீஸ்காரர்கள் ஆங்காங்கே சிதறி வெவ்வேறு பணி செய்துகொண்டிருக்க, குளிர்சாதனக் கருவியின் மெளனமான இரைச்சலின் இடையே சன்னமாய் பேசிக்கொண்டு காத்திருந்தார்கள்,
இன்னொரு அறையில் இருவர் சன்னக் குரல் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்க, குழப்ப தொலை தொடர்பு சாதனங்களுக்கு இடையே மாதவன் கொஞ்சம் எதிர்ப்பார்போடு காத்திருந்தார். கடிகாரத்தைப் பார்த்து பத்து ஆனதும். வலது பக்க அறையின் தொலைக்காட்சியைப் பார்த்து விட்டு ” ஓ.கே ஜெண்டில் மென். ரெடி”
என்றார்.
கையில் மட்டை சுழற்றியபடி அரவிந்தனும், சக வீரரும் சேப்பாக்கம் மைதானத்தில் நுழைய.. நாற்பதாயிரம் மக்கள் ஹோ என்று ஆர்ப்பரித்தார்கள். மேட்ச் பிக்சிங் செய்யும் சந்தேகத்துக்குரிய ஆட்களைப் பிடிக்க போலீஸ் ஆவலாய் எதிர்பார்த்திருந்த இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடக்கும் அந்த இறுதி ஒரு நாள் பந்தய கிரிக்கெட் போட்டி ஆரம்பித்தது.